Monday, November 11, 2024

மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்

 

பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன?

பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம்.

500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதே இங்கு முதன்மையானது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது.

மூனா போன்ற ஓவியர்கள் தொடர்ச்சியாக இயங்குவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வாரம் தோறும் அன்றைய அரசியல் சூழல்களை மையப்படுத்தி யோசிக்கவும் வேண்டும், அந்த யோசனைகளை படங்களாக வெளிக்கொண்டுவரவும் வேண்டும். அவை வாசகனுக்கு புதிதாக ஒன்றை சொல்வதாகவும் இருக்கவேண்டும்.

எத்தனை நீண்ட, கடினமான பணி இது. ஆனாலும் மூனாவின் கரங்கள் ஒரு வாரம்கூட ஓய்வெடுத்ததில்லை. வாரம்தோறும் அவை எவ்வித தடங்கலுமின்றி வாசகர்களை சென்றடைந்துவிடும்.

இந்த 500 கருத்துப்படங்களும் பேசாத விடயங்களேயில்லை. சிங்கள பௌத்த மேலாண்மை மீதான கோபங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. ஈழ அரசியலின் இரட்டைப் போக்குகள் குறித்து அவை விமர்சனங்களை முன்வைத்துள்ளன, ஈழத் தமிழ் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தமிழக, உலக அரசியல் சார்ந்தும் அவை பேசியுள்ளன.

2009 ம் ஆண்டின் இறுதிப் பகுதி. பொங்குதமிழை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக அவரின் வலைப்பக்கத்தை பார்க்க நேரிட்டது. அங்கு வெளியாகியிருந்த கருத்துப் படங்களைப் பார்த்தவுடன் அவரிடமிருந்து ஒரு படமாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலுடன் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்புகொண்டேன். பதிலேதுமில்லை.

நண்பர் இரஞ்சித் இலண்டன் ஐ.பி.சியுடன் இயங்கியவர். பலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது.

‘மூனா என்பவரை தெரியுமா? அவருடன் அறிமுகம் உண்டா’ என்று பேச்சுவாக்கில் கேட்டேன்.

‘அவர் எனது நண்பர்தான், கேட்டுப் பார்க்கிறேன்’ என்று மட்டும் சொன்னார் இரஞ்சித். எனக்கு ஏனோ நம்பிக்கையில்லை.

ஆனால், நாம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னராகவே படம் வந்துசேர்ந்தது. அத்துடன் பொங்குதமிழின் அறிமுகம் குறித்து அவர் எழுதிய வாழ்த்தும் வந்து சேர்ந்தது. எமது வேண்டுதல்கள் எதுவும் இன்றியே தொடர்ந்தும் கருத்தோவியங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார். பொங்குதமிழ் கட்டியமைக்க விரும்பிய கருத்துத்தளத்திற்கு அவரின் படங்கள் பெரிதும் துணைநின்றன.

அவர் அனுப்புகின்ற படங்களில் சில வெளியாகாமலும் போனதுண்டு. ஆனாலும் அவை குறித்து அவர் எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. படைப்பொன்றை வெளியிடுவதும் தவிர்ப்பதும் பொங்குதமிழ் ஆசிரியரின் உரிமை என்ற விடயத்தில் அவர் எப்போதும் தெளிவாகவே இருந்தார்.

நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப்படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இக் கருத்துப்படங்களுடன் தொடர்பானவர்களும் மனம்கோணாத ஒரு நாகரீகமான எல்லைக்கோடு எப்பவுமே மூனாவிடம் இருந்ததுண்டு.

தவிர, மூனாவின் கருத்துப்படங்கள் ஓர் உன்னதமான சமூக நோக்கில் நின்று வரையப்பட்டவை. ஆழமான கருத்துச்செறிவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால வரலாற்றின் முழுமையான பதிவுகளாகவும் அவை கொள்ளக்கூடியவை.

அவரின் கருத்துப்படங்களை காலஒழுங்கில் பார்க்கின்ற ஒருவர், கடந்த ஐந்தாண்டு நிகழ்வுகள் தொடர்பான ஒரு மேலோட்டமான வரலாற்று ஓட்டத்தைப் பெற்றுவிட முடியும். அந்தளவிற்கு வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஆழமான பதிவுகளாகவும் அவை அமைந்துள்ளள என்பதே என் எண்ணம்.

பொங்குதமிழுக்கென அவர் வரைந்துதரும் கருத்தோவியங்களை வேறு பல இணையத்தளங்களும் பிரதிசெய்தி வெளியிட்டு வருகின்றன. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பொங்குதமிழில் வெளியாகும் அவரின் கருத்தோவியங்களை வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து மூனா வரைந்த ஒரு கருத்தோவியம் குறித்து, குமுதம் இணையத் தொலைக்காட்சியின் விவாதமொன்றில் பேசப்பட்டதையும் நானறிவேன்.

உண்மையைச் சொல்வதானால், ஓவியர் மூனாவுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமேதுமில்லை. பொங்குதமிழுடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைதானும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனாலும் 500 கருத்தோவியங்களை பொங்குதமிழில் பூர்த்திசெய்துள்ள சாதனை குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவரின் தனித்துவமான இயல்புதான் அதற்கான முதற்காரணம். தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பு அவருடையது.

மூனா என்றும் இந்த கலைஞனுக்கு ஈழத்தமிழ் சமூகம் இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரின் கருத்தோவியங்கள் நூலாக்கம் பெறவேண்டும். வரலாற்றில் அவை பதிவாகவேண்டும்.

வாழ்த்துக்களும் வணக்கமும்.


ஆதவன்
1/11/2015 4:57:21

கெளதமி காத்திருந்தாள்

போர் தொடங்கிய பின்தான் கெளதமி எங்கள் வீட்டுக்கு அருகில் குடிவந்தாள். மாம்பழம் போல ஒருவித மஞ்சள் நிறத்தில் மொழுமொழுவென்றிருந்தாள். அவள் சிரித்தால் முத்துக்களை அடுக்கி வைத்தது போன்ற சீரான அழகிய பற்கள் பளிச்சிடும். நினைத்தவுடன் சிரிக்கவும் தேவைப்படும் போதெல்லாம் கண்களைக் குளமாக்கவும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

என்னை விட இரு வயதுகள் குறைந்தவளாக இருந்தாலும் என்னோடு சிரிக்கவும் என்னோடு அழவும் அவளால் முடிந்தது.

இன்னும், அம்மா பிள்ளைகளாக படிப்பும் பாட்டும் வேலையும் என்றிருந்த என் தங்கைமாரோடு பேச முடியாத விடயங்களைக் கூட மூன்று வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருந்த அவளுடன் என்னால் பேச முடிந்தது. அவளது கணவன் யோகன் சவுதியிலும் எனது கணவர் யேர்மனியிலும் இருந்தது நாங்கள் பேசுவதற்கான பேசு பொருட்களை எங்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருந்தது.

என்ன ஒரு பாகுபாடு..! அவளுக்கு சவுதியிலிருந்து கணவன் யோகனின் கடிதங்கள் வாரத்துக்கு ஐந்து, ஆறு என்று வரும். சில சமயங்களில் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று கடிதங்களும் வருவதுண்டு. வெள்ளை நீள் சதுரத்தில் நாற்பக்க விளிம்புகளிலும், சிவப்பிலும் நீலத்திலும் வர்ணம் தீட்டப்பட்ட உறைகளை தபாற்காரன் என்னைத் தாண்டிப் போய்த்தான் அவளிடம் கொடுப்பான்.

எங்கள் வீட்டையும் அவள் குடியிருந்த வீட்டையும் ஒரு செம்பருத்தி வேலிதான் பிரித்திருந்தது. நானும் அவளும் அந்த வேலிக்குள்ளால் கதைத்த படியே தபாற்காரனுக்காய் காத்திருப்போம். சந்தியில் வரும் போதே தபாற்காரன் தனது சைக்கிள் மணியை ஒரு விதமாக அடிப்பான். அவன்தான் வருகிறான் என்பது எங்களுக்குத் தெரிந்து விடும். இருவரும் படபடப்போம். கதையை அந்தரத்தில் விட்டு விட்டு எங்களெங்கள் கேற்றடிக்கு ஓடுவோம்.

தபாற்காரன் முன்னொழுங்கையில் திரும்பி, அதற்குள் இருக்கும் நான்கைந்து வீடுகளுக்குக் கடிதங்களைக் கொடுத்து விட்டுத்தான் எங்கள் வீட்டுக்கு வருவான். பெரும்பாலான நாட்களில் அவன் எனக்கு ஒன்றுமே தரமாட்டான். அப்படியே, ஒரு முறுவலுடன் என்னைத் தாண்டிப் போய் கெளதமியிடம் கொடுப்பான். எனக்கு அழுகை வரும். அழவும் வெட்கமாக இருக்கும். ஒரு மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு கடிதங்களைத்தான் எனது கணவர் எனக்கு எழுதி அனுப்புவார். கெளதமிக்கோ கொள்ளை கொள்ளையாகக் கடிதங்கள் வரும். அவ்வப்போது சூட்கேஸ் நிறையச் சேலைகள் வரும். குடைகள் வரும். சொக்ளேற்ஸ் வரும். நான் மனசுக்குள் பொருமிக் கண்ணீர் வடிப்பேன்.

கெளதமி அடிக்கடி ரவுணுக்குப் போவாள். யோகன் அனுப்பும் காசோலையை வங்கியில் மாற்றுவதற்கு, சந்தையில் புதிய மரக்கறிகள், மீன் வாங்குவதற்கு… என்று ஏதாவது காரணங்கள் அவளுக்கு இருக்கும். ஒவ்வொரு முறை போகும் போதும் ஒவ்வொரு புதுப் புதுச் சேலையுடுத்து அதற்குப் பொருத்தமான நிறத்தில் குடையும் பிடித்துக் கொண்டு போய் வருவாள். அவளது செருப்புக் கூட அந்தச் சேலைக்குப் பொருத்தமான நிறத்திலேயே இருக்கும். பெரிதான ஒப்பனை ஒன்றும் அவளுக்குத் தேவையாக இருக்கவில்லை. அவள் பேரழகி.

ரவுணிலிருந்து வந்ததும் சமைப்பாள். அவளது குசினிக்குள்ளிருந்து களஞ்சிய அறைக்குள் போவதற்கு வெளிவிறாந்தைக்கு வந்துதான் போக வேண்டும். அவள் அப்படி ஒவ்வொரு முறை வெளியில் வரும் போதும் போகும் போதும் தனது வானொலியில் ஒலிக்கும் பாடல்களுக்கேற்ப நடனமாடிக் கொண்டும் துள்ளிக் கொண்டும் தான் போவாள்.  

அவளிருந்த வீடும் எங்கள் வீடும் டானா படக் கட்டப்பட்ட வீடுகள். இரண்டு டானாக்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருந்தன. நாங்களும் ஒருவரையொருவர் செம்பருத்தி வேலிக்குள்ளால் பார்க்கத் தவறுவதில்லை. எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையில் நடப்பதெல்லாம் அங்கு தெரியும். அதே போல் அங்கு நடப்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். அது ஒன்றும் எங்களுக்குத் தொந்தரவாகவும் இருக்கவில்லை.

கெளதமியிடம் நிறைய பாட்டு-ஒலிப்பேழைகள் இருந்தன. ரவுணுக்குப் போகும் பொழுதுகளில் அவள் தனக்குப் பிடித்த சினிமாப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டு போவாள். அதை அங்கு ரவுணுக்குள் இருக்கும் ஓடியோக் கடையில் கொடுத்து ஒலிப்பேழையில் பதிவு செய்வித்துக் கொண்டு வருவாள். அப்படிப் பாடல்களைப் பதிவிப்பது அப்போது அனேகமான எல்லோர் வீடுகளிலும் நடந்து கொண்டுதான் இருந்தது. அதையேதான் அவளும் செய்தாள்.

ஒரு நாள் வேலிக்குள்ளால் கதைக்கும் போது “இண்டைக்கு ஓடியோக்கடையிலை சரியான சனம். அங்கை வேலை செய்யிற ஒரு அண்ணா, தான் வீட்டை போகேக்கை அந்த ஒலிப்பேழையை இங்கையே கொண்டு வந்து தந்திட்டுப் போறன் எண்டு சொன்னவர்“ என்று சொன்னாள்.

அன்று மாலை ஆறுமணியளவில் அந்த அண்ணா வந்து அவள் வீட்டு வாசலில் துவிச்சக்கர வண்டியின் மணியை அடித்ததையும் அவள் ஓடிச்சென்று அந்த ஒலிப்பேழையை வாங்கியதையும் நான் முன்விறாந்தையில் நின்ற போது கண்டேன். பிறகுதான் அந்த அண்ணாவின் பெயர் இளங்கோ என்பதைத் தெரிந்து கொண்டேன்.

அந்த நாளுக்குப் பிறகு அவள் பாடல்களைப் பதிவு செய்யக் கொடுத்து விட்டுக் காத்திருந்து வாங்கி வருவதில்லை. இளங்கோவுக்காகத்தான் காத்திருப்பாள். இளங்கோ, மாலையில் கடையிலிருந்து வீட்டுக்குப் போகும் போது வழியில் இருக்கும் இவள் வீட்டடியில் ஒலிப்பேழையைக் கொண்டு வந்து கொடுப்பான். இவள் ‘நன்றி‘ சொல்லி வாங்குவாள். இளங்கோ “போட்டு வாறன்“ சொல்லிப் போவான்.

நாட்டில் போர் வளர்ந்து கொண்டிருந்தது. எப்போது குண்டுமழை பொழியும்? எப்போது பருத்தித்துறைக் கடலிலிருந்து பீரங்கி முழங்கும்? எப்போது ‘ஷெல்‘ வந்து சிதறும்? என்று தெரியாத பதட்டம் எம்மைச் சூழ்ந்து கொண்டது.

இவைகளிலிருந்து எனது மூன்று பிள்ளைகளையும் காப்பாற்றிக் கொண்டு யேர்மனிக்கு எனது கணவரிடம் ஓடி விடுவதே எனது இலக்கானது. கடவுச்சீட்டு எடுப்பதற்கான வேலைகள், விசா, ஏஜென்சி, காணிக்கந்தோர், போட்டோக்கொப்பிக் கடை, மொழிபெயர்ப்பு… என்று நான் அலையத் தொடங்கியிருந்தேன்.

‘யோகன் வருவான் வருவான்‘ என்று எதிர்பார்த்த படியே கெளதமி காத்திருந்தாள். அவனும் ‘நான் ஆடியில் வருகிறேன். ஆவணியில் வருகிறேன்‘ என்று இவளைக் கடிதங்களில் ஏமாற்றிக் கொண்டே இருந்தான். வேலை ஒப்பந்தமும் நாட்டுப் பிரச்சனைகளும் அவன் சாட்டுச் சொல்வதற்கான சாதனங்களாக அமைந்தன.

யோகன் ஊர்ப் பெரியவர் ஒருவரின் மகன். கெளதமி ஒரு சாதாரண குடும்பத்துப் பெண். அதனாலோ என்னவோ யோகனதும் கெளதமியினதும் காதலை யோகனது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவேயில்லை. அவர்களை மொத்தமுமாக எதிர்த்தே இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். யோகனின் அப்பா தனது செல்வாக்கைக் காட்டத் தவறவில்லை. சினிமாப்படங்களில் வருவது போல ஏதோ தில்லுமுல்லுச் செய்து, யோகனைச் சவுதிக்கு அனுப்பி விட்டார். அப்போது கெளதமிக்கு 19 வயது. இரண்டு மாதங்கள் மட்டுமே அவள் யோகனுடன் வாழ்ந்தாள். அந்த இரண்டு மாதங்களின் சாட்சியமாக கெளதமியின் மகன் பிரணவன் மெதுமெதுவாக வளர்ந்து கொண்டிருந்தான். அவன் தனது அப்பாவைப் புகைப்படங்களில் மட்டுந்தான் பார்த்திருக்கிறான். குரலை யோகன் அவ்வப்போது கதைத்து அனுப்பும் ஒலிப்பேழைகளில் கேட்டிருக்கிறான். கெளதமிக்கு அது பெருங்கவலை.

கெளதமி இருக்கும் அந்த வீடு ஒரு பெரிய வீடு. 1983 யூலைக் கலவரத்தோடு, அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் வெளிநாடு, வேற்றூர் என்று சென்று விட்டார்கள். ஒரு வருடத்துக்கும் மேலாகப் பூட்டியிருந்தது. இப்போது கெளதமி வாடகைக்கு வந்திருக்கிறாள். அந்தப் பெரிய வீடு அவளுக்கும் அவளது ஒற்றை மகனுக்கும் மகா பெரிது.

அவளது படுக்கையறைக்குள் ஒரு பெரிய அலுமாரி இருக்கிறது. அதற்குள் ஊருப்பட்ட சேலைகள், அதற்கேற்ப பாவாடைகள், சேலைகளுக்கான மேற்சட்டைகள், ரிபன்கள், புதிதுபுதிதான குடைகள். மறுபக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட சூட்கேசுகள். அதற்குள்ளும் சேலைகள், புதுப்புதுத் துணிகள், சட்டைகள், தலைக்கிளிப்புகள்… ஒரு நாளுமே அவள் பாவிக்காத இன்னும் பல. எல்லாமே சவுதியிலிருந்து யோகன் அனுப்பியவைதான். அதே அறைக்குள் ஒரு பெரிய கட்டில்.

இத்தனை சேலைகளும் சட்டைகளும் பணமும் இந்தப் பெரிய வீடும்… ஒரு கணவனுக்கு ஈடாகி விடுமா? யோகன் சவுதிக்குப் போய் ஐந்து வருடங்களாகின்றன. கெளதமி மனசுக்குள் வெந்து கொண்டிருந்தாள். அந்தக் கட்டிலில் படுப்பதையே வெறுத்தாள். ‘ஷெல்‘ வீச்சின் போது சனங்கள் வீட்டை விட்டு ஓடும் போது கெளதமி எங்கும் ஓட மாட்டாள். பிரணவனையும் அணைத்துக் கொண்டு அப்படியே இருப்பாள். ஓடிக்கொண்டிருக்கும் சனங்களில் யாராவது கணவன், தனது மனைவியை சைக்கிள் பாரில் இருத்தி, பிள்ளையையும் ஒரு கையில் தூக்கிக் கொண்டு சைக்கிள் பெடலை முக்கி முக்கி உழக்கிக் கொண்டு போவதைக் கண்டால் போதும். அது பற்றி மீண்டும் மீண்டுமாய் சிலாகித்துச் சொல்லுவாள். அந்தப் பாதுகாப்பு தனக்கு இல்லையே! என அங்கலாய்ப்பாள். ஏங்குவாள். கண்கலங்குவாள்.

அப்போதெல்லாம் இப்போது போல வட்ஸ்அப், வைபர், மெசெஞ்சர், பேஸ்ரைம்… என்று எதுவுமே இருக்கவில்லை. அலைபேசி என்றாலே என்னவென்று தெரியாது. சாதாரணத் தொலைபேசி கூட வீடுகளில் இருக்கவில்லை. கடிதம் ஒன்றே தொலைத்தொடர்புக்கான சாதனமாக இருந்தது. யோகனை ஊருக்கு வந்து விடும்படி கேட்டு அவள் கடிதங்களாக எழுதுவாள். பதில் கடிதங்களுக்காக, தபாற்காரனுக்காய் காத்திருப்பது போலவே காகங்களையும் பார்த்திருப்பாள்.

காகங்களை அவள் நேசித்தாள். வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து கரையும் காகங்கள் எல்லாம் தனக்கு யோகனின் கடிதங்கள் பற்றிய செய்திகளைச் சொல்கின்றன என்றே அவள் நம்பினாள். சனிக்கிழமைகள் தோறும் சிவன் கோவிலுக்குப் போய், ‘தனக்கிருக்கும் சனிதோஷம் நீங்கி, யோகன் விரைவில் வந்து விடவேண்டும்‘ என்று மன்றாடி, சனிபகவானுக்கு எள்ளுச்சட்டி எரிப்பாள். கெளதமியின் மன்றாட்டங்களுக்கு, சனிபகவான் உட்பட எந்தக் கடவுள்களுமே செவிசாய்க்கவில்லை. அவளது எந்தப் பிரார்த்தனைகளும் பலிக்கவில்லை. யோகனின் பெற்றோர், யோகனை ஊருக்கு வரவிடாது சவுதியிலேயே மறித்து வைத்திருந்தார்கள்.

ரம்பத்தில் ‘நன்றி‘, “போட்டு வாறன்“ என்றிருந்த கெளதமி இளங்கோவினது உறவும், தொடர்ந்த காலங்களில் அந்தக் கேற்வாசலில் அவன் துவிச்சக்கர வண்டியில் இருந்த படியே ஒருகாலை நிலத்தில் ஊன்றியபடி நின்று கதைப்பதுவும், இவள் வாய்விட்டுச் சிரிப்பதுவுமாக வளர்ந்து கொண்டிருந்தது. கதைக்கும் நேரமும் ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்களாகி, பதினைந்து நிமிடங்களாகி அரைமணித்தியாலத்துக்கும் மேலாய் நீண்டு கொண்டு போனது. இளங்கோ ஓரிரு தடவைகள் ‘தான் தேத்தண்ணி குடிக்க உள்ளை வரப்போறன்‘ என்று அவளைக் கேட்டிருக்கிறான். அதற்கு மட்டும் அவள் ஒரு போதும் சம்மதித்ததில்லை. கேற் வாசலுடன் அவனை திருப்பி அனுப்பி விடுவாள்.

போரும் இன்னுமின்னுமாய் வளர்ந்து கொண்டேயிருந்தது. பெடியள் இயக்கங்களில் இணைந்து கொண்டேயிருந்தார்கள். கிரனைட் பைகளுடன் திரிந்தார்கள். சென்றிக்கு நின்றார்கள். நியாயவிலைக்கடை நடாத்தினார்கள். இராணுவம் அடிக்கடி வீடுகளுக்குள் நுழைந்தது. ஆண்களைச் சுட்டு வீழ்த்தியது. அல்லது பெடியளைப் பிடிப்பதாகச் சொல்லி அப்பாவி மக்களைப் பிடித்துக் கொண்டு சென்றது. பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது. பாடசாலைப்பிள்ளைகள் இடைநடுவில் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பட்டார்கள். வாழைப்பொத்தி போன்ற ‘ஷெல்‘ கள் வீடுகளை நோக்கி வரத் தொடங்கும் போதெல்லாம் சனங்கள் வீட்டை விட்டு எங்கோ ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிக் கொண்டிருந்தவர்கள் மீது கூட ‘ஷெல்‘ கள் வீழ்ந்தன. உயிர்கள் போயின. அடிக்கடி பெடியளுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல்கள் நடந்தன. தினமும் யாராவது கொல்லப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.

ன்றும் அப்படித்தான். திடீரென்று தொடங்கியது ‘பட பட‘ வென்ற வேட்டுச் சத்தம். குண்டுகள் வெடித்தன. ரவுணுக்குள் பெடியளுக்கும் ஆமிக்கும் சண்டை. சனங்கள் கிலி கொண்டு, ரவுணை விட்டு ஓடி வந்து கொண்டிருந்தார்கள். கடைக்காரர்கள் கடைகளைப் பூட்டிக்கொண்டு தத்தம் வீடுகளுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள். வெளியில் போன பிள்ளைகளுக்காக, கணவனுக்காக, சகோதரர்களுக்காக… என்று ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் சனங்கள் மிகுந்த பதட்டத்துடன் கூடிக் கூடிக் காத்து நின்றார்கள். நாங்களும் காத்திருந்தோம். ஓடி வருபவர்கள் ஆங்காங்கு நின்று ரவுணுக்குள் நடக்கும் சண்டையைப் பற்றி தாம் கண்டவைகளுடன் சேர்த்து கை, கால், மூக்கு, வாய்… எல்லாம் வைத்து காணாதவைகளையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடையைப் பூட்டிக்கொண்டு துவிச்சக்கரவண்டியில் ஓடி வந்த இளங்கோவும் தன் வீட்டுக்குப் போகாமல் கெளதமியின் வீட்டு வாசலில் நின்று விட்டான்.

சில மணி நேரச் சண்டையின் பின் ‘எல்லாம் ஓய்ந்து விட்டன‘ என நாம் எண்ணுகையில் இராணுவம், முகாமை விட்டு வெளிக்கிட்டு ஹாட்லிக் கல்லூரி வீதிக்கு வந்து விட்டது. சண்டையின் போது இராணுவத்தரப்பிலும் இருவர் மரணித்து விட்டனர். அந்தக் கோபத்தில், இராணுவக் கவசவாகனத்துக்குள் இருந்த படியே காண்பவரையெல்லாம் தாறுமாறாகச் சுட்டது. சூட்டுச்சத்தங்கள் பீதியைக் கிளப்பின. எல்லோரும் திக்குத்திசை தெரியாமல் சிதறி ஓடினார்கள். மரங்களுக்குப் பின்னால் ஒளிந்தார்கள். காணிகளுக்குள் பாய்ந்தார்கள். வெள்ளவாய்க்காலுக்குள் வீழ்ந்து படுத்தார்கள். வீட்டுவாசல்களில் நின்றவர்கள் வீடுகளுக்குள் நுழைந்தார்கள். கெளதமியும், பிரணவனையும் இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினாள். அவளுக்குப் பின்னால் இளங்கோவும் துவிச்சக்கரவண்டியையும் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான். யாரும் யாரது அநுமதிக்காகவும் காத்திருக்கவில்லை. எங்கெல்லாம் மறைந்து கொள்ள முடியுமோ அங்கெல்லாம் மறைந்து கொண்டார்கள். உயிர் தப்புவது ஒன்றே ஒவ்வொருவர் குறிக்கோளாகவும் இருந்தது. நாங்களும் எங்கள் வீட்டு முன் கதவுகளைச் சாத்திக் கொண்டு வீட்டுக்குள்ளே ஓடினோம்.

இராணுவம் எந்தக் கணத்திலும் வீட்டுக்குள் நுழையலாம். எல்லோரையும் சுட்டு வீழ்த்தலாம். மனசு நடுங்கியது. பாடசாலைக்குப் போன பிள்ளைகள், வேலைக்குப் போன தங்கைமார், சென்றிக்கு நிற்கும் தம்பி… எல்லோரும் பத்திரமாக வந்து சேர்வார்களா? நெஞ்சு பதறியது. அம்மா செய்வதறியாது திகைத்துப் போய் நின்றா. அப்பாச்சி, லலித் அத்துலக்முதலியை ‘அச்சுலக்கை முதலி‘ என்று சொல்லித் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தா.

நான் ஒரு வித உறைநிலையோடு பெரியவிறாந்தை நுனியில் அமர்ந்தேன். கெளதமி அவளது வீட்டு விறாந்தையில் களஞ்சிய அறை வாசலோடு ஒட்டி நின்றாள். அது கொஞ்சம் உட்புறமாக இருந்ததால், கேற் வாசலில் இருந்து பார்த்தால் தெரியாத விதமாக மறைந்து கொள்ள ஏதுவாக இருந்தது. அவளோடு ஒட்டியபடி பிரணவன். அருகில் இளங்கோ.

இராணுவம் எங்கள் வீடுகளைக் கடந்து சென்றது, திகில் நிறைந்த, இறுக்கமான அந்த நிமிடங்கள் தளர்ந்தன. கெளதமி, இளங்கோவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு மெதுவாக நகர்ந்தாள். சட்டென்று இளங்கோ கெளதமியை இழுத்து அணைத்துக் கொண்டான். ஒரு கணம், அவளும் இசைந்தாள் போலிருந்தது. ஒரே ஒரு கணம்தான். தனது இருகைகளையும் இளங்கோவின் நெஞ்சில் ஊன்றி அவனைப் பலமாகத் தள்ளினாள். அவன் அதை எதிர்பார்க்கவில்லைப் போலும். அணைப்பிலிருந்து விடுபட்டு களஞ்சிய அறைக்கதவோடு பின்பக்கமாய் மோதினான். கௌதமி பிரணவனையும் கூட்டிக் கொண்டு ஓடி, எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாள்.

அவளது மாம்பழக் கன்னங்கள் சிவந்திருந்தன. கண்கள் கலங்கிக் கசிந்தன. மேனி நடுங்கியது. என் கையை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்தாள். அது பட பட வென அடித்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அவள் எதுவுமே பேசவில்லை. குற்றம் செய்து விட்டவள் போலக் குறுகினாள். திடீரென்று குலுங்கி அழுதாள். சும்மா, தொட்டாலே கற்புப் போய் விட்டதாய் கருதும் காலமது. இளங்கோ கட்டியணைத்து விட்டானல்லவா! மாபெரும் தப்பு நடந்து விட்டது போல அவள் தவித்தாள். ‘யோகனுக்குத் தெரிந்தால் என்னாகும்‘ என்று பயந்தாள்.

‘உயிருக்கே உத்தரவாதமில்லாத அந்தரமானதொரு வாழ்வைத்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது ஒன்றும் உயிர் போகுமளவுக்குப் பெரியவிடயமில்லையே!‘ என்று சொல்லி அவளை ஆற்றுப்படுத்தக் கூடிய மனப்பக்குவமோ, தேற்றக் கூடிய தைரியமோ அப்போது என்னிடம் இருக்கவில்லை.

அந்த நாளுக்குப் பின்னான நாட்கள் மிகவும் பதட்டமான, பயமான நாட்களாகவே இருந்தன. பருத்தித்துறை அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டே இருந்தது. சாவுகளும் வன்புணர்வுகளும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. மக்களின் இயல்பு நிலை வாழ்க்கை முற்றிலுமாக மாறிக் கொண்டிருந்தது. ரவுண் கடைகள் எல்லாம் உள்நோக்கி நகரத் தொடங்கின. சந்தையும் இடம் மாறியது.

கௌதமியும் மாறிப் போனாள். சோகம் அவளைப் பற்றியிருந்தது.

குசினிக்கும் களஞ்சிய அறைக்குமான நடமாட்டங்களின் போது ஆடுவது, ஓடுவது, குதிப்பது எல்லாவற்றையும் அவள் மறந்திருந்தாள். ஓடியோக் கடைப்பக்கம் போவதையும் நிறுத்தியிருந்தாள். இளங்கோவும் அதன் பின் அவளிடம் வர வில்லை. அதை அவளால் தாங்க முடியாதிருந்தது. இளங்கோ வரவேண்டும் என்றே அவள் விரும்பினாள். அவன் அப்படி வராதிருப்பது பெரும் இழப்புப் போலவே அவளுக்குத் தோன்றியது.

ஒவ்வொரு துவிச்சக்கரவண்டியின் மணிச்சத்தத்துக்கும் நெஞ்சு திக்கிட, இளங்கோவையே அவள் எதிர்பார்த்தாள். இளங்கோவின் அந்த அணைப்புக்காக அவளது மனம் ஏங்கியது. வருவான் என்ற நம்பிக்கையோடு அவள் காத்திருந்தாள்.

நானும் எனது யேர்மனியப் பயண அலுவல்கள் சரிவந்து ஊரை, உறவுகளை… எல்லாம் விட்டு விட்டு எனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணமானேன்.

பன்னிரண்டு வருடங்கள் கழித்து எனது அம்மாவும் யேர்மனிக்கு வந்து சேர்ந்தா. அப்போது ஒவ்வொருவர் பற்றியும் கேட்கும் போது  “கௌதமி எப்படியிருக்கிறாள்? யோகன் ஊருக்கு வந்தானா?“ என்றும் கேட்டேன்.

“வந்தான். ஆனால் கௌதமியிடம் வரவில்லை“ என்றா அம்மா.

“அப்ப இளங்கோ?“

“அவன் அப்போதே கனடாவுக்குப் போய் விட்டான்“ என்றா.

சந்திரவதனா
04.04.2024 

நத்தார்ச் சந்தை

பாதாம்பருப்பு சீனியில் முறுகிய வாசம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. குளிர் மூக்குநுனியையும், காதுமடல்களையும் கொஞ்சம் அதிகமாகவே சீண்டி விளையாடியது. அங்கு நின்ற அனேகமான எல்லோரும் சுவெபிசுஹால் நகரின் பிரசித்தமான மைக்கல் தேவாலயத்தின் படம் வரைந்த குடிகோப்பையை கைகளில் கொண்டு திரிந்தார்கள்.

சுமதியின் நினைவுகள் கிளர்ந்தன. யேர்மனிக்கு, சுமதி வந்த காலங்களில் அதாவது ஏறக்குறைய இற்றைக்கு 30-40 வருடங்கள் முன்னரிலிருந்து குழந்தைகளுடன் அவள் கைகோர்த்த படி நடந்து திரிந்த நத்தார்ச் சந்தைகளின் நினைவுகள் ஒரு வித கிறக்கத்தைக் கொடுப்பவை. மொழி தெரியாது. குளிர் உறைக்கும். ஆனாலும் பிள்ளைகள் குதூகலிப்பார்கள்.

சீனியில் முறுகிய பாதாம்பருப்பு இல்லாத நத்தார்ச்சந்தை கிடையாது. இரத்தினண்ணன் கடையில் சீனி சுற்றிக் கொடுப்பது போல பேப்பரில் சுற்றிக் கொடுப்பார்கள். பிள்ளைகள் கொறித்து மகிழ்வார்கள். நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக வீதியில் ஓடிக் கொண்டேயிருக்கும் கோச்சியில் ஏற்றி விட்டால் இன்னும் ஆனந்திப்பார்கள். பிள்ளைகள் வளர்ந்து, அவர்கள் அவரவர்களது நண்பர்களுடன் நத்தார்ச்சந்தைக்குப் போகத் தொடங்கிய பின் நத்தார்சந்தையின் மீதான ஆர்வம் சுமதிக்குக் குறைந்து விட்டது.

இன்றைக்கும் வந்திருக்க மாட்டாள். வேலை முடிந்து ஜக்கெற்றை அணியும்போதுதான் படபடவென யாரோ கண்ணாடிக்கதவைச் தட்டும் சத்தம் கேட்டது. பார்த்தாள். மிகைலா. ஓடிப்போய் கதவைத் திறந்த பொழுது ‘இம்முறையாவது நத்தார்சந்தைக்கு வா’ என்றாள் அவள்.

மிகைலா முன்னர் சுமதியோடு வேலை பார்த்த பெண்தான். கணவனோடு ஒத்து வரவில்லையென்று, திடீரென ஒருநாள் வேலையை விட்டுவிட்டுப் போனது போல கணவனையும் விவாகரத்துச் செய்து விட்டாள். தனியாகத்தான் வாழ்கிறாள். அவளது பழக்கவழக்கங்களும் சுமதியின் பழக்கவழக்கங்களும் பெரியளவாக ஒத்துப் போகாதவை. அதனால் சுமதி அவளிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பாள். மிகைலாதான் அவ்வப்போது அழைத்து, குசலம் விசாரிப்பாள். கடைகள், தெருக்களில் கண்டால் இழுத்து வைத்துக் கதைத்துக் கொண்டு நிற்பாள். „கோப்பி குடிக்க வா“ என்பாள். ஒவ்வொரு முறையும், சுமதி எதையாவது சொல்லித் தட்டிக் கழித்து விடுவாள்.

கடந்த வருடமும், மிகைலா வட்ஸ்அப்பில், “க்குளூவைன் குடிக்க நத்தார்ச்சந்தைக்கு வா“ என்று சுமதியைக் கேட்டிருந்தாள். ‘நேரமிருந்தால் பார்ப்போம்‘ என்று எழுதிய அளவில் சுமதி அதிலிருந்து தப்பித்து விட்டாள். இன்று மிகைலா விடாப்பிடியாக நின்றாள். „வா“ என்றாள். „க்குளூவைன் உனக்குப் பிடிக்காதென்றால் கிண்டர்புஞ் குடி“ என்றாள். கிண்டர் புஞ் அற்ககோல் குடிக்கும் வயதில்லாத குழந்தைகளுக்கான பானம். கறுவா, கராம்பு, தேசிக்காய்த்தோல், தேன் எல்லாவற்றையும் தண்ணீரில் போட்டு, பத்துநிமிடங்கள் அவித்து, அதனுள் தேசிக்காய்ச்சாறு, தோடம்பழச்சாறு, திராட்சைப்பழச்சாறு என்பன விட்டு இன்னும் பத்துநிமிடங்கள் கொதிக்க விட்டு எடுக்கப்படும் பானம். க்குளூவைனுக்கு கொத்தமல்லித்துகள்களுடன் இன்னும் சில மூலிகைகளும் சேர்த்து வைனும் கலப்பார்கள். குளிரில் துவளும் உடலுக்கு கறுவா, கராம்பு எல்லாம் சேர்ந்த சூடான இந்தப்பானம் சூட்டைக் கொடுத்து இதமாக்குமாம்.

இந்தப் பாரம்பரிய பானத்தைக் குடிக்காத யேர்மனியர்களே இல்லை என்று சொல்லலாம். இதைக் குடிப்பதற்கென்றே ஒவ்வொரு வேலைத்தளங்களில் இருந்தும் வெளியிடங்களில் இருந்தும் குழுக்கள் குழுக்களாகப் பலர் நத்தார்ச்சந்தைக்கு வந்து போய்க் கொண்டிருப்பார்கள்.

சுமதியின் வேலைத்தளத்துக்கும் நத்தார் சந்தைக்கும் இடையே 100மீற்றர் தூரந்தான் இடைவெளி. ஆனால் ஐம்பதிற்கும் மேற்பட்ட படிகளில் ஏற வேண்டியிருக்கும். அது மலைப்பிரதேசம். மேலேதான் உயர்ந்த மணிக்கூட்டுக் கோபுரத்துடனான பிரசித்தி பெற்ற அந்த மைக்கல் தேவாலயம் அமைந்துள்ளது. அதன் முன்னிலையில் உள்ள வெளியில்தான் நத்தார்ச்சந்தையின் முக்கியதளம் மையப்படுத்தப் பட்டுள்ளது. அது வருடா வருடம் இயேசுவின் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையான, நவம்பர் 27இலிருந்து டிசம்பர் மூன்றாம் நாள் வரையிலான ஒரு நாளில், கூடத் தொடங்கும். டிசம்பர் 23ந்திகதி மீண்டும் எல்லாம் கலைக்கப்பட்டு விடும்.

ஏனோ, அன்று சுமதியால் மிகைலாவைத் தவிர்க்க முடியவில்லை. அல்லது சுமதிக்கும், ‘நத்தார்ச்சந்தைக்கு மீண்டும் ஒரு தடவை போய்ப் பார்க்க வேண்டும்‘ என்ற ஒரு சின்ன ஆசை மனசினுள்ளே இருந்திருக்கலாம். போய் விட்டாள்.

ஒவ்வொரு க்குளூவைன் விற்கும் நிலைக்கடைகளிலும் மைக்கல் தேவாலயத்தின் படம் வரைந்த குடிகோப்பைகள் அடுக்கியடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதற்குள்தான் க்குளூவைனைக் குடிக்க வேண்டுமென்பதும் அவர்களின் பாரம்பரியத்தோடு சேர்ந்ததொன்று.

அங்கு க்குளூவைன் கடைகள் மட்டுமல்லாது, எங்களூர் வல்லிபுரக்கோவில், சந்நிதித் திருவிழாக்களில் போல சுற்றி வர இன்னும் பல கடைகள் இருந்தன. அவைகளிலிருந்து பல்வேறுபட்ட உணவுகளின் விதம் விதமான வாசனைகளும் மெழுகு, வாசனைத் திரவியங்கள்… போன்றவற்றின் நறுமணங்களும் வந்த வண்ணமே இருந்தன. தும்புமிட்டாசை, கண்ணுக்கு முன்னாலேயே செய்து தடியில் சுற்றி எடுத்து பிள்ளைகளிடம் நீட்டினார்கள். வெண்ணெய், பால், முட்டை… எல்லாம் கலந்து, சுடும் இனிப்புக் கோதுமைத் தோசையை ‘பான்கேக்‘ என்று சொல்லி ஜாம் அல்லது சொக்கிளேற் கிறீம் பூசி, சுடச் சுடக் கொடுத்தார்கள். மீனை நெருப்பில் வாட்டி எடுத்து பாணுக்குள் வைத்துக் கொடுத்தார்கள். இன்னும் இப்படி எத்தனையோ சாப்பாடுகள்.

சுற்றி வரப் பனி கொட்டியிருந்தது. அது ஒவ்வொருவரது கால்களுக்குள்ளும் மிதி பட்டு, மிதி பட்டுச் சிதைந்து தண்ணீராய் ஓடிக் கொண்டிருந்தது. குளிர் தாங்காமல், கைகள் அவரவர் பொக்கற்றுகளுக்குள் போவதும் வெளியில் வருவதுமாய் இருந்தன. வாய்களிலிருந்து ‘புக், புக்..‘ என்று புகை வெளிவந்து கொண்டிருந்தது. அனேகமான எல்லோரும் கம்பளிச் சால்வையால் கழுத்தைச் சுற்றிக் கொண்டு, காதுகளையும் சேர்த்து மூடக்கூடிய கம்பளித் தொப்பி அணிந்து, கம்பளிக் கையுறைகளோடு திரிந்தார்கள். அடிக்கடி மூக்கை உறிஞ்சினார்கள். பேப்பர் கைக்குட்டையால் மூக்கைத் துடைத்தார்கள். கூடவே அந்தக் குளிருக்கு இதமாக ஆவி பறக்கும் இந்த உணவுகளையும் வாங்கி வாங்கிச் சுவைத்தார்கள்.

ஒரு மூலையில் ஏதோவொரு இசைக்குழு பாடிக் கொண்டேயிருந்தது. சிலர் அந்தப் பாடல்களுக்கேற்ப ஆடிக் கொண்டேயிருந்தார்கள். இன்னொரு மூலையில் குழந்தைகளுக்கான, இளம் வயதினர்களுக்கான என்று பல் வேறு விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன. சிலர் அங்கு மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். பலர் ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கும் மிகச் சிறிய, ஆனால் உயர்ந்த வட்ட மேசைகளில் கோப்பைகளை வைத்து விட்டு அந்த மேசைகளைச் சுற்றி நின்று கதைப்பதும் சிரிப்பதுமாக நின்றார்கள். அந்த நத்தார்ச்சந்தை மிகுந்த கோலாகலமாக இருந்தது.

சுமதி மட்டும் அந்தச் சந்தோசங்களுடனோ கோலாகலங்களுடனோ ஒட்ட முடியாமல் ஒரு வித அமைதியின்மையுடன் நின்றாள். அவளது மனசு தவித்துக் கொண்டேயிருந்தது. குளிர் ஒரு புறம். வீட்டில் ஒருவன் காத்திருப்பான் என்ற நினைவு மறுபுறம். வேலை முடிந்ததும் வீட்டுக்குச் செல்லவில்லையென்றால் அவன் முகம் கோணிப் போவான். போன் பண்ணலாமென்றால் சந்தையின் இரைச்சலில் பேசமுடியவில்லை. ‘மிகைலாவுடன் நிற்கிறேன். சற்றுத் தாமதமாக வருகிறேன்‘ என்றொரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நடந்தாள்.

நத்தார்ச்சந்தை முழுக்க, மிகைலாவைத் தெரிந்தவர்கள் இருந்தார்கள். பல ஆண்கள் அவளைக் கடந்து போகும் போது கட்டியணைத்தார்கள். முத்தம் கொடுத்தார்கள். உதட்டை உரசினார்கள். சுமதி, பட்டும் படாமல் தள்ளி நின்றாள். சிலர் சுமதியிடமும் கைகளை நீட்டிக் குலுக்கிக் கொண்டார்கள்.

இவைகளுக்கு மத்தியில், வரிசையில் நின்று ஒருவாறு ஒரு க்குளூவைனும் ஒரு கிண்டர்புஞ்சும் வாங்கி வந்து இருவருமாகக் குடிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் நின்ற மேசையைச் சுற்றி இன்னும் சிலர் நிற்பதுவும் அவர்கள் போக வேறு சிலர் வந்து சேர்வதுமாக, ஆட்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். எல்லோரும் சிரிப்பும் கதையும் கும்மாளமுமாக, கவலையே இல்லாத மனிதர்கள் போல மிகச் சந்தோசமாகவே இருந்தார்கள். சுமதியால் அந்தச் சந்தோசங்களுடன் கலக்க முடியாதிருந்தது. ‘கணவன் ஏதாவது எழுதியிருப்பானோ‘ என்று அடிக்கடி அலைபேசியை எடுத்துப் பார்ப்பதுவும் வைப்பதுமாக இருந்தாள். அவன் மட்டும் ‘ஒரு பிரச்சனையுமில்லை. சந்தோசமாக நத்தார்ச்சந்தையைப் பார்த்திட்டு வா‘ என்று ஒரு பதில் எழுதியிருந்திருந்தால் அவளும் அந்தச் சந்தோசங்களில் கலந்து இலேசான மனத்துடன் அதற்குள் உலா வந்திருக்கக் கூடும். அவன்தான் எதுவுமே எழுதவில்லையே!

திடீரென்று வந்த ஒருவன் மிகைலாவின் பழைய நண்பன் என்று சொல்லிக் கதைக்கத் தொடங்கினான். மிகைலா பெருஞ்சத்தத்துடன் கெக்கட்டம் விட்டுச் சிரித்துச் சிரித்துக் கதைத்தாள். அவனைத் தொட்டுத் தொட்டுப் பேசினாள். கட்டியணைத்தாள்.

மிகைலாவின் இந்தக் குணத்தினால்தான் சுமதியின் கணவனுக்கு சுமதி மிகைலாவுடன் சேர்வது அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சுமதிக்குமே எல்லாம் அபத்தமாய் இருந்தன. பேசாமல் வீட்டுக்குப் போய் விடலாம் போலிருந்தது. “நான் வீட்டை போறன்“ என்றாள் மிகைலாவிடம். “என்ன.. வந்து ஒரு மணித்தியாலம் கூட ஆகேல்லை. அதுக்குள்ளை போப்போறன் எண்டிறாய்?“

“ஓம் வீட்டை அவன் காத்துக் கொண்டிருப்பான். போகோணும்.“

“அவனென்ன பால்குடிப் பிள்ளையே? கொஞ்சம் இருக்கட்டுமன்“ மிகைலா தடுத்துப் பார்த்தாள்.

சுமதி “இல்லை“ என்று புறப்பட்டு விட்டாள்.

“அடுத்த முறை வரக்கை, பால் கரைச்சு, போச்சிக்குள்ளை விட்டு வைச்சிட்டு வா“ பின்னால், மிகைலா நக்கலோடு கத்திச் சொன்னது சுமதியின் காதுகளில் விழவில்லை. அது நத்தார்ச்சந்தையின் பெருஞ்சத்தத்துக்குள் அமிழ்ந்து போனது. சுமதி அங்கு வீசிக் கொண்டிருந்த நறுமணம், கோதுமைத்தோசை வார்க்கும் ஓசை, பாதாம் பருப்பை வறுக்கும் கரகர ஒலி, இதமான இசை, ஒவ்வொருவரின் சின்னச்சின்னக் கதைகளும் ஒன்றாகி எழுந்து கொண்டிருந்த பேரிரைச்சல், சிரிப்பொலிகள், கெக்கட்டங்கள், கோலாகலங்கள், சந்தோசங்கள்… அத்தனையையும் விட்டு, படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்.

 ‘எது உண்மையான சந்தோசம்?‘ என்று அவளுக்குத் தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. கணவன் மட்டும் ஒரு வரி எழுதியிருந்தால்… அத்தனை பேரும் அநுபவித்துக் கொண்டிருக்கும் அந்தச் சந்தோசங்களின் ஒரு துளியையாவது அவள் நுகர்ந்து, சுகித்திருப்பாள். பாதாம் பருப்பை வாங்கி வாய்க்குள் நொருக்கியிருப்பாள். சுட்ட மீன் வைத்த பாணை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்திருப்பாள். எல்லாவற்றிற்கும் மேலால் அந்த இசையில் கண்டிப்பாக லயித்திருந்திருப்பாள். ஒன்றுமே இல்லாமல் அவள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவளால் எதிலுமே ஒன்ற முடியாதிருந்தது.  அந்த கிண்டர்புஞ்சைக் கூடக் ‘கடனே..‘ என்றுதான் குடித்து முடித்தாள். எந்தச் சுவையுமே அவளுக்குத் தெரியாதிருந்தது.

ஆனாலும் அந்தச் சந்தையிலிருந்து வெளியேறி, வீட்டை அண்மித்து விட்டதில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இன்று வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வெள்ளியும் அவளும் கணவனும் சேர்ந்து ஒரு தமிழ்த்திரைப்படம் பார்த்து விட்டுத்தான் படுப்பார்கள். ‘எப்படியும் நல்ல படமாக ஒரு படம் தேர்ந்தெடுத்து வைத்திருப்பான். போனதும் குளித்து விட்டு, ஒரு தேநீரைச் சுவைத்தபடி, ஆறுதலாக இருந்து படம் பார்க்கலாம்‘ நினைத்துக் கொண்டாள்.

வீட்டுக்குள் நுழையும் போது ‘என்ன சொல்வானோ!‘ என்ற யோசனையும் இருக்கத்தான் செய்தது. நேரத்தைப் பார்த்தாள். சரியாக ஐம்பது நிமிடங்கள் தாமதமாகியிருந்தன. அவன், இவளை நிமிர்ந்து பார்த்தான். கண்களில் அனல் பறந்தது.

“எங்கை போட்டு வாறாய்..?“ அது சாதாரண கேள்விதான். ஆனால் அவன் கேட்ட விதமும் வேகமும் குரலின் தொனியும் அவளைத் திடுக்கிட வைத்தன. நெஞ்சு ‘பட, பட‘ வென்று அடித்துக் கொண்டது.

“உங்களுக்கு எழுதினனான் தானே! மிகைலாவோடை நத்தார்ச்சந்தைக்கு…“ அவள் முடிக்கவில்லை. அவளது குரல் மெதுவாகத் தளதளத்தது.

“அந்த ஆட்டக்காரியோடையோ..? ஆம்பிளையளைக் கண்டால் போதும் ‘ஈ‘ எண்டு பல்லைக் காட்டிக் கொண்டு நிப்பாள்…“

இத்தனை கோபத்தை கணவனிடமிருந்து சுமதி எதிர்பார்க்கவில்லைத்தான். இவன் ‘எத்தனை நாள், எவ்வளவு தாமதமாக எல்லாம் வந்திருக்கிறான். வந்து “வழியில் அவனைச் சந்திச்சனான், அதுதான் நேரம் போட்டுது. வழியில் இவனைச் சந்திச்சனான். பிறகென்ன செய்யிறது. போய் அவனோடை இருந்து ஒரு கோப்பி குடிச்சிட்டு வாறன்“ என்றெல்லாம் சால்யாப்புச் சொல்லியிருக்கிறான். ஆனால், சுமதி மட்டும் தாமதமாக வந்திடக் கூடாது. அது அந்த வீட்டுக்குள் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டம்.

இருந்தாலும்.. இன்று, ‘தாமதமானது‘ பெரும் பிரச்சனையல்ல. மிகைலாவோடு போனதுதான் மாபெரும் பிரச்சனை. ‘அவளோடு இளிக்கும் ஆண்கள் சுமதியோடும் இளித்திருப்பார்களோ!‘ என்பதைத்தான் அவனால் சீரணிக்க முடியாதிருந்தது.

சுமதி ஒன்றும் பேசாமல் குளியலறைக்குள் போய் விட்டாள். சில வாரங்களுக்கு முன் இருவரும் ஒன்றாகக் கடைக்குப் போன போது ஆளாளுக்கு தேவையான பொருட்களை எடுத்தெடுத்து வண்டிலுக்குள் போட்டுக் கொண்டு போனார்கள். மரக்கறிப்பகுதிக்கு வந்ததும் சுமதி கொஞ்சம் குனிந்து, மினைக்கெட்டு நல்ல கத்தரிக்காய்களாகப் பார்த்து, எடுத்துக் கொண்டு நிமிர்ந்தாள். கணவனைக் காணவில்லை. ‘எங்கே போய் விட்டான்?‘ சுற்று முற்றும் நோட்டம் விட்டாள்.

சற்றுத் தள்ளி… ‘யாரது..?‘

‘ஓ.. மிகைலா!‘ கூடவே இவன். அதுவும் மிக நெருக்கமாக… அவளது கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்த படி, ‘ஈ…‘ என்று இளித்த படி…

சட்டென்று அந்தக் காட்சி சுமதியின் நினைவுகளில் வந்தது. கோபம் கொப்பளித்தது.

சும்மா குளித்துக் கொண்டிருந்தவள், சவரை உயர்த்தித் தலைக்குப் பிடித்தாள். அப்படியே நீண்ட நேரம் தலைக்குக் குளித்தாள். அந்தத் தலைக்குளியல் ஒருவேளை அவளது கோபத்தைத் தணித்திருக்கலாம். அல்லது ‘தணியும்‘ என்று அவள் நம்பியிருக்கலாம்.

வெளியில் வந்த போது கணவன் இவளுக்காகக் காத்திருக்கவில்லை. ஆங்கிலப்படம் ஒன்றைப் போட்டுப் பார்க்கத் தொடங்கியிருந்தான். முகத்தை இன்னும் படு கோபமாகவே வைத்திருந்தான்.

சுமதியின் மனசுக்குள் அதை விட அதிகமான கோபம் இருந்தது. ஆனாலும் கதையை வளர்க்கவோ, சண்டையை ஆரம்பிக்கவோ அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை.

பேசாமல் போய் தனது படுக்கையில் சரிந்து போர்வைக்குள் நுழைந்து கொண்டாள். உடல் அந்த இதமான கதகதப்புக்குள் அமிழ்ந்து போக, மனமோ நத்தார்ச்சந்தைக்குள் உலாவத் தொடங்கியது.

சந்திரவதனா
12.01.2024

ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது!

 

துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும்  செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Thumilan Selvakumaran

வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய   Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்தும் Ende der Aufklärung: Die offene Wunde NSU என்ற புத்தகத்தை இரு எழுத்தாளர்களுடன் இணைந்தும் யேர்மனிய மொழியில் இவர் எழுதியுள்ளார்.

Thumilan Selvakumaran (Photo: Ufuk Arslan)

2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் (Schwäbisch Hall) நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும்  பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

3335f5c9-9a34-4bff-8a34-61abbc53a9b7
Thumilan Selvakumaran

அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது.

வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில்,  நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த  தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன்  இறந்த படி, 86 வயதான Edith Lang என்ற மூதாட்டி  தரையில் கிடந்த  விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது  என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு Edith Lang இன் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன்  இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே Edith Lang என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“ஸ்வேபிஸ் ஹாலின் விதவைக் கொலைகள்” பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்,  “குருடாகப்  பறந்து கொண்டிருக்கும் காவற்துறை அரச ஊழியர்கள்” (Polizeibeamte im Blindflug) என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award  12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும்  தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட  அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது.

Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், “நான் பொலிஸ் துறையின்  மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில்,  நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லை” என்ற வருத்தத்தை விழா மேடையில் தெரிவித்தார். 

116a1350-4e04-4891-a516-53e2e4d66116

நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு, விருது குறித்து முடிவை எடுத்திருந்தது.

Stern சஞ்சிகை  இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

(துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தே ‘புதனும் புதிரும்’ என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின்  26 அகவை சுய ஆக்கங்கள்   நான் எழுதியிருந்தேன்)

-கவி அருணாசலம்
Quelle: Yarl.com

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite