
பல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு.
சமையலறையில் கணவனும் மனைவியும் சேர்ந்து சமைப்பது என்பது உண்மையிலேயே ஒரு மகிழ்வான விடயந்தான். தனியே எப்போதும் சமையலறையில் மாயும் மனைவியுடன் சேர்ந்து கணவனும் சமைக்கும் போது அந்தச் சமையலறைக்கே ஒரு தனிக் கலகலப்பு வந்து விடும். சமையலிலும் தனிச்சுவை தெரியும்.
எனது அப்பா, விடுமுறையில் வீட்டுக்கு வந்து நிற்கும் போதெல்லாம் வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் அம்மாவுடன் இணைந்து விடுவார். அரிசியில் கல்லுப் பொறுக்குவதிலிருந்து கிணற்றடியில் அம்மாவுடன் இருந்து உடுப்புகளுக்குச் சவர்க்காரம் தேய்த்து, உடுப்புகளை அலசிப் பிழிந்து, கொடியில் காய விடுவது வரை வீட்டின் எல்லா வேலைகளிலுமே அவர் கைகளும் பட்டிருக்கும். இதில் சமையல் பக்கம் என்பது அவர் இன்னும் அதிசுவாரஸ்யத்துடன் ஈடுபடும் விடயமாக இருக்கும். தானே சைக்கிளில் போய் சந்தையில் மரக்கறிகள், மீன்… என்று வாங்கி வந்து, தானே அவைகளைச் சுத்தப் படுத்தி… அம்மாவுடன் சேர்ந்து சமைக்கத் தொடங்குவார்.
இப்படித்தான் அப்பாவின் 43வது பிறந்தநாள் அன்றும் சமையல் அமர்க்களமாய் நடந்து கொண்டிருந்தது. அன்று கணவாய்ப்பிரட்டல், கணவாய்க் குழம்பு, கணவாய்ப் பொரியல், மரக்கறிகள்… என்று அடுப்புகள் நெருப்பும், கொதிப்புமாய் தளதளத்துக் கொண்டிருந்தன. அப்பா டெயிலிமிரறில் வந்த ஏதோ ஒரு செய்தி பற்றி அம்மாவுக்கு விவரித்துக் கொண்டு அடுப்புக்கும் வெளிக்குமாய் நடந்து கொண்டிருந்தார். இடையிடையே புளுக்கொடியலின் தும்பிழுத்து, தேங்காய்ச்சொட்டையும் ‘நறுக்‘ கென்று கடித்துச் சுவைத்துக் கொண்டும் இருந்தார். நட்டு, நொறுக்கு இல்லாமல் அப்பா இருக்க மாட்டார். பிள்ளைகள் எங்களோடு சேர்ந்து மாங்காய்ச்சொட்டும் உப்பு-மிளகாய்த்தூளும், பனங்கிழங்கும் மிளகுதூளும், புளுக்கொடியல், மணிலாக்கொட்டை… என்று எப்போதும் எதையாது கொறித்துக் கொண்டே இருப்பார்.
அது ஒரு சனிக்கிழமையாகவோ அல்லது ஞாயிற்றுக்கிழமையாகவோ இருந்திருக்க வேண்டும். பிள்ளைகள் நாம் பாடாசாலைக்குச் செல்லாமல் வீட்டில் நின்றோம். சமையல், ஏலமும் கறுவாவும் கராம்பும் தேங்காய்ப்பாலும் கறிவேப்பிலையும்… என்று வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கமகமத்தது. ஏன், வீட்டுக்கு வெளியே வீதியிலும் கூட வாசம் வீசியது. எங்களுக்கு அந்த வாசமே பெரும் பசியாக உருவெடுக்க நாங்கள் குளித்து, உடைமாற்றி சாப்பிடுவதற்குத் தயாரானோம்.
குசினிக்குள், அப்பா வாய் ஓயாது அம்மாவுக்குக் கதைகளும் பகிடிகளும் சொல்லிக் கொண்டே இருந்தார். கறி கொதிக்கும் சத்தத்தை விடப் பெரிதாகச் சிரிப்பும் சந்தோசமும் அங்கு களை கட்டி இருந்தன.
திடீரென அப்பா “சிவா, இந்தக் கறியைப் பாரும்” என்றார். அம்மா அகப்பையில் சிறிது கறி எடுத்து, ஊதி, அதில் கொஞ்சத்தைக் கையில் ஊற்றிச் சுவைத்தா. ம்… உப்பு. ஒரு பெரிய சட்டி நிறைந்த கணவாய்க்குழம்பு உப்பாய்க் கரித்தது.
கதையும் சிரிப்பும் கலந்த சந்தோசக் களிப்பில்… இருவருமே ஆளுக்கொருதரம் என்று கறிக்கு இரு தரம் உப்பைப் போட்டு விட்டார்கள். என்ன செய்வது, அவ்வளவு மினைக்கெட்டு சமைத்ததைக் கொட்ட முடியுமா? அப்பா அவசரமாக இன்னொரு தேங்காய் உடைத்துத் துருவினார். அம்மா பாலைப் பிழிந்து, முதற்பாலையும் இரண்டாம் பாலையும் அப்படியே கறிக்குள் விட்டா.
இன்னும் கொஞ்சம் வெங்காயம்… இன்னும் என்னென்ன எல்லாம் உப்பைக் குறைப்பதற்கான பரிகாரமாக அமையுமே அவையெல்லாம் கறிக்குள் போடப் பட்டன. உப்புக் கரிப்பு கொஞ்சம் குறைந்தாலும், ‘உப்புக்கறி’ என்பதை மறுக்க முடியவில்லை.
“சரி, உப்புக்கணவாய் சாப்பிட்ட அப்பாவின் 43வது பிறந்தநாளை என்றைக்குமே மறக்க மாட்டோம்“ என்று சொல்லி நாமெல்லோரும் அந்தக் கறியைச் சாப்பிட்டு முடித்தோம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வந்த கவலை நாம் சாப்பிட்டு முடித்ததில் கொஞ்சம் ஆறி விட்டது.
இப்போது நான் கணவாய் சாப்பிடுவதில்லை. இருந்தாலும் அப்பாவின் அந்த 43வது பிறந்தநாள் என் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை. அவ்வப்போது ஞாபகத்தில் வந்து எட்டிப் பார்க்கிறது. அப்போதெல்லாம் அந்தச் சமையலின் வாசமும் ஓடி வந்து மூக்கினுள் ஒட்டிக் கொள்கிறது.
பொன்ஸ் இன் புத்தக விமர்சனம் இன்று என்னை எழுதத் தூண்டியது.
சந்திரவதனா
28.03.2007