நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.
தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப் பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லமும், அதைச்சுற்றி வைக்கப் பட்டிருந்த மலர்களும், ஒலித்துக் கொண்டிருந்த மாவீரர் கானமும்... யேர்மனியின் வர்த்தகநகரான டோட்மூண்ட் (Dortmund) நகரின் மத்தியில் அமைந்துள்ள அந்த மண்டபத்தின் உள்ளே நுழைந்த போதே எனக்குள்ளே ஒரு பயபக்தியை ஏற்படுத்தி விட்டது.
நான் வேறொரு உலகத்தினுள் வந்து நிற்பது போலவே உணர்ந்தேன். யேர்மனியின் நெரிசல் நிறைந்த சாலைகளும் அழுத்தம் நிறைந்த வாழ்வும் எனக்கு மறந்து விட்டது.
பண்போடும் மரியாதையோடும் எம்மை வரவேற்ற சகோதர அன்பர்கள் தமது வேலைகளை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் கவனிப்பது மட்டுமல்லாது அவ்வப்போது வந்து எமக்கு ரோஜாப் பூக்களையும் தந்து சென்றார்கள்.
புனிதமான உலகத்தினுள் இருப்பது போன்ற உணர்வில் என் மனது நெகிழ்ந்து போயிருந்தது.
திடீரென்று "தாயகத்தை உயிரிலும் மேலாக நேசித்து, அந்த உன்னத இலட்சியத்துக்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் சுதந்திர வீரர்களை நெஞ்சங்களிலே சுமந்து, அந்த உத்தமர்களுக்கு வணக்கம் செலுத்த நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.
அன்பார்ந்த தமிழீழ நெஞ்சங்களே! விலைமதிக்க முடியாத தம் இன்னுயிரை ஈகம் செய்து, தமிழீழ தேசத்தின் அத்திவாரக் கற்களாக கல்லறைகளில் துயில் கொள்ளும் மாவீரர்களுக்கும், அந்நியர்களால் அநியாயமாக உயிர் பறிக்கப்பட்டு அநியாயமாக மண்ணோடு கலந்து விட்ட பொது மக்களுக்கும் எழுந்து நின்று அகவணக்கம் செய்வோம். "
ஒலிபெருக்கி முழங்கியது.
பேரிரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்த கிசுகிசுச் சத்தம் அப்படியே அடங்கிப் போக மண்டபத்தினுள் அமர்ந்திருந்த அத்தனை தமிழீழ நெஞ்சங்களும் அந்த ஒரு நிமிட அஞ்சலிக்காய் எழுந்து, மனதுக்குள் பேசிய படி மௌனம் காத்தன.
இரண்டு நிமிடங்களில் மௌனத்தைக் கலைத்த படி மீண்டும் ஒலிபெருக்கி, "அன்பார்ந்த தமிழீழ நெஞசங்களே அகவணக்கத்தை அடுத்து தொடர்வது தேசியக் கொடிவணக்கம்.
எமது தமிழீழத் தேசியக் கொடியினை 19.10.1997 இல் புல்மோட்டைக் கடற்பரப்பில் நடந்த தாக்குதலின் போது வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட மாவீரன் கடற்கரும்புலி மேயர் சிறீ திருமாறன் கணேசபிள்ளை ரவிச்சந்திரன் அவர்களின் தாயார் திருமதி கணேசபிள்ளை அவர்கள் ஏற்றி வைப்பார்கள்." முழங்கியது.
தாய்நாட்டைக் காக்க தன் இன்னுயிரை ஈந்த மாவீரனின் தாய் நான் என்ற நினைவில் ஈன்ற பொழுதையும் விட நெஞ்சு பெருமை கொள்ள அந்தத் தாய்
கொடியை ஏற்றினார்.
தமிழ் ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி ஏறுகையில் நெஞ்செல்லாம் புல்லரித்தது.
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே சீற, நான்கு நிமிடங்களில் கொடி ஏறிப் பறக்க மனசு பரபரத்தது.
எத்தனை எத்தனை வேங்கைகள் இரத்தத்தில் ஏறிய கொடியிது புதுவைரத்தின துரையின் வரிகளின் யதார்த்தத்தில் கண்கள் பனித்தன.
மீண்டும் ஒலிபெருக்கி,
"தொடரும் மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வுகளில், அடுத்து, 1.5.89 அன்று இந்திய இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் வீரமரணமடைந்த மாவீரன் கப்டன் மொறிஸ்-பரதராஜன்.தியாகராஜா அவர்களின் தாயாரும், 11.11.93 அன்று தவளைப் பாய்ச்சல் தாக்குதலின் போது வீரமரணமடைந்த மேஜர் மயூரன் - பாலசபாபதி.தியாகராஜா அவர்களின் தாயாருமான திருமதி.தியாகராஜா அவர்கள் முதலில் ஈகைச்சுடரை ஏற்றி வைப்பார்கள் என்று முழங்கியது.
தாய் நாட்டில் ஒளி வீசுவதற்காய் தம்மை அணைத்துக் கொண்ட அந்த வீரர்களின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றினார். திரையிலே ஈழத்தில் நடைபெற்ற உணர்வு பொங்கும் ஈகைச் சுடரேற்றல் ஓடிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் என்னை நிலைகுலைய வைத்த அந்தப் பாடல்
ஒலிக்கத் தொடங்கியது.
தாயகக் கனவுடன்
சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே
இங்கு கூவிடும் எங்கள்
குரல்மொழி கேட்குதா
ஒளியினில் வாழ்பவரே...
என்மனதும் பாடலுடன் சேர்ந்து கூவத் தொடங்கியது.
...உங்களைப் பெற்றவர்
உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம.
எங்கே எங்கே
ஒரு தரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின்
திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்...
மனசுஓலமிட, கண்களில் நீர் திரையிட்டது. மண்டபத்தினுள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. மனத்திரை விசாலமாக விரிய அங்கு எத்தனை முகங்கள். மண்ணுக்கு வித்தான பல முகங்கள். "அக்கா அக்கா..." என்று என் முன்னே சிரித்து விட்டு, அடுத்த கணமே களத்தில் காவியமாகி கல்லறையில் துயில் கொள்ளும் உயிர்ப்பூக்கள். அங்கு அவனும் வந்தான்.
அன்று தம்பி வந்து நின்றதில் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாய் இருந்தது. நானும் தங்கைமாருமாக அவனுடன் கதை கதையென்று கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் சந்தோஷத்தைப் பார்த்து அம்மாவும் சந்தோஷத்தோடு, தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தா.
தம்பி அப்போது அனேகமான பொழுதுகளில் ´சென்றி´க்கு நின்று ஆமியை உள்ளே வராமல் பார்க்கும் பணியில் இருந்தான். அத்தோடு புலிகளின் நியாய விலைக் கடையையும் பொறுப்பாக நின்று நடாத்திக் கொண்டிருந்தான். அவன் வீட்டில் இருக்கும் போது படுக்க ஒரு தலையணி காணாதென்று சண்டை பிடித்து, காலுக்கு, கையுக்கு, தலைக்கு என்றெல்லாம் தலையணி வைத்துப் படுப்பான். கிணற்றில் தண்ணீர் அள்ளும் வேலையைத் தவிர வேறொரு வேலையும் செய்ய மாட்டான். பெரிய ஸ்ரைல் பார்ப்பான். கண்ணாடிக்கு முன்னால் மணிக்கணக்காய் நின்று தலைமயிரை அழகு படுத்துவான். நல்ல உடுப்புகள் மட்டுந்தான் போடுவான்.
இப்போ அவன் சைக்கிளில் பின்னுக்குக் கரியர் பூட்டி, கரியரில் ஒரு பக்கீஸ் பெட்டி கட்டி, அதனுள் நியாய விலைக்கடைச் சாமான்களைக் கொண்டு போவதைப் பார்த்து எங்களுக்கு ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் கவலையும் வரும்.
இப்போதும் அதையெல்லாம் சொல்லி அவனைப் பகிடிபண்ணிக் கொண்டிருந்தோம். அவன் அதற்கு மேலால் வேறு பகிடிகள் சொல்லி எங்களைச் சீண்டிக் கொண்டிருந்தான்.
எங்கள் கதைகள் திசைமாறித் திசைமாறி எங்கெங்கோ சென்று திரும்பின.
"டேய்... நீ... உந்தக் கிரனைட் பாக்கை (bag) யெல்லாம் கொண்டு போய் காம்பிலை குடுத்திட்டு வந்து போசாமல் படி." நான் சொன்னேன்.
தங்கையும் என் ஆலோசனை நல்லதென்பது போலப் பக்கப் பாட்டுப் பாடினாள்.
"பேசாமல் வாறதோ! என்ன சொல்லுறிங்கள்?" சற்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
"ஓமடா, எத்தினை பெடியள் போராட இருக்கிறாங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு வந்து முதல்லை படிச்சு முடி. அம்மா உன்னை நினைச்சு எவ்வளவு அழுறவ தெரியுமே!"
இப்போ அவன் சற்று ஆக்ரோசத்துடன் "அக்கா...! நீங்கள் படிச்சனிங்கள் தானே. நீங்களே இப்பிடிச் சொன்னால்...! உங்கடை தம்பி மட்டும் படிக்கோணும். மற்றவங்கள் படிக்கத் தேவையில்லையோ?
அவங்களுக்கும் அக்காமாரும் அம்மாமாரும் இருக்கினம் தானே!
ஒவ்வொரு அம்மாமாரும் அழுது தடுத்தால் போராட ஆர் வருவினம்?"
"..................."
"அக்கா, நீங்கள் என்னை மனசோடை துணிவோடை அனுப்போணும்." என்றான்.
அதுக்கு மேல் என்னால் பேச முடியவில்லை. மீண்டும் எங்கள் பேச்சு இயல்புக்கு மாறி நாங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போது "அக்கா என்ரை கறுத்த ரவுசரை அயர்ண் பண்ணி வையுங்கோ. நாளைக்கு போட்டோ (Photo) எடுக்கிறதாம்." என்றான்.
"ஏன் போட்டோ?" நானும் தங்கைமாரும் கோரஸாகக் கேட்டோம்.
"நான் செத்தால் நோட்டீசிலை போடுறதுக்கு." அவன் மிகவும் சாதாரணமாகச் சொன்னான். அப்படியே எங்கள் சிரிப்பு அடங்க நாம் மௌனமாகி விட்டோம். மனசு மட்டும் திக்கிட்டது. ஏதோ ஒரு பயப் பந்து நெஞ்சுக்குள் உருள்வது போலிருந்தது.
அன்று அவன் அப்போது போய்விட்டான். இரவு வந்து நியாய விலைக் கடைக் காசை எண்ணி என்னிடம் தந்தான். "ஏன் எண்ணித் தாறாய்? என்னிலை உனக்கு நம்பிக்கையில்லையோ?" செல்லமாகக் கேட்டேன்.
"அக்கா எனக்கும் உங்களுக்குமிடையிலை அன்பைத் தவிர வேறையொண்டுமே இல்லை. அது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் காசிருக்கே. இது என்ரையில்லை. இது எங்கடை நாட்டின்ரை காசு. அதை நான் உங்களிட்டைத் தரக்கிளையும் சரி, வாங்கக்கிளையும் சரி எண்ணிறதுதான் நல்லது." மூச்சு விடாமல் சொன்னான்.
என்னை விடப் பத்து வயது குறைந்தவனின் பொறுப்பான பேச்சில் ஆச்சரியமும் பெருமையும் என்னை ஆட்கொள்ள, எண்ணிய காசைப் பையில் போட்டு எனது அறையினுள் வைத்து விட்டு சாப்பிடன் என்றேன்.
"குளிச்சிட்டு வாறன்" என்றான்.
குசினிக்குள் போனேன். அடுப்பில் தணல் இருந்தது. குழம்புச் சட்டியை அடுப்பில் வைத்து விட்டு, பிரட்டலை குக்கரில் வைத்து குக்கரைப் பத்த வைத்தேன். மண்(ணெண்)ணெய் மணம் பக் கென்று வந்து போனது.
"அக்கா...!" கூப்பிட்டான்.
"என்னடா? "
"என்ரை முதுகைத் தேய்ச்சு விடுங்கோ."
"சாமம் பன்ரெண்டு மணிக்கு கிணத்தடியிலை நிண்டு, உனக்கு முதுகு தேய்க்கோணுமோ?!"
"என்ரை அக்கா இல்லே..!"
லக்ஸ் சோப்பைப் போட்டுத் தேய்த்து விட்டேன். கிணற்றில் அள்ளி அள்ளி ஊற்றி ஊற்றிக் குளித்தான்.
"இஞ்சபார்! கெதிலை குளிச்சு முடி. ´ஷெல்´ வந்து கிணத்தடியிலை விழுந்தால் எல்லாம் சரியாப்போடும்."
பருத்தித்துறைக் கடலில் இருந்து ஓயாது பறந்து கொண்டிருந்த ´ஷெல்´ தந்த பயத்தில் நான் அவனை அவசரப் படுத்தினேன். சாப்பாட்டைக் கொடுக்க அவன் ஆசை ஆசையாக அள்ளிச் சாப்பிட்ட போது எனது கண்கள் பனித்தன.
போகும் போது "படுத்து நல்ல நித்திரை கொள்ளோணும் போலை இருக்குதக்கா" என்றான்.
"அப்ப கொஞ்சம் படன்."
"இல்லை நான் போய் சென்றிக்கு நிண்டு கொண்டு வெள்ளையை விடோணும்."
"நித்திரை தூங்கிப் போடுவாய்."
"படுத்தாத்தானே நித்திரை கொள்ளுறது."
"இண்டைக்கு எந்தப் பக்கம்?"
"ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு அங்காலை இருக்கிற பனங்காணிக்குள்ளை, பனைக்குப் பின்னாலை நிற்பன்." அதை மட்டும் மிகவும் குசுகுசுப்பாக என் காதுக்குள் சொன்னான்.
தொடர்ந்து "நித்திரை வராது. பகலெண்டால் ஆராவது தேத்தண்ணி கொண்டு வந்து தருவினம்." என்றான்.
"கால் நோகாதே?" அக்கறையோடு கேட்டேன்.
"கால் நோகுமெண்டு சொல்லி நாங்கள் நிக்காட்டி ஆமி உள்ளை பூந்திடுவான் இல்லே. உங்களைப் போல எத்தினை அக்காமார் எங்களை நம்பி வீடுகள்ளை இருக்கினம்." என்றான். உடனே, சில மாதங்களின் முன் ஆலடி வீடுகளுக்குள் புகுந்த ஆமி ஒரே நாளில் எழுபது பெண்களை மானபங்கப் படுத்திய வெறித்தனம் என் நினைவில் வந்து என் உடல் ஒரு தரம் நடுங்கியது.
"அக்கா என்ன யோசிக்கிறீங்கள்? நான் வெளிக்கிடப் போறன். நாளைக்கு வருவன். அந்தக் கறுத்த ரவுசரை எடுத்து ரெடியா வையுங்கோ. நல்ல சேர்ட்டும் வையுங்கோ. நோட்டீசிலை படம் வடிவா வரோணும்." என் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்த்தபடி சொன்னான்.
பிறகு என்னைக் கனிவாகப் பார்த்தபடி "அக்கா நான் ஏன் இப்பிடிச் சொல்லுறன் தெரியுமே! ஒண்டும் சொல்லாமல் நான் செத்துப் போட்டன் எண்டால் உங்களாலை தாங்கேலாது. சாவு என்னை எந்தக் கணத்திலும் தழுவலாம். அதைத் தாங்க நீங்கள் இப்ப இருந்தே உங்களைத் தயார் படுத்தி வைச்சிருக்கோணும். அம்மாவையும் நீங்கள்தான் தயார் படுத்தி வைச்சிருக்கோணும். என் சாவு உங்களை வருத்தக் கூடாது. அக்கா! உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக்கூடாது. அதுதான் என்ரை ஆசை." சொல்லிக் கொண்டே சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.
அடுத்த நாள் காலை வந்து அழகாக வெளிக்கிட்டுக் கொண்டு, நியாயவிலைக் கடைக் காசுடன் புறப்பட்டான். போகும் போது "ரவியையும் இண்டைக்கு போட்டோ எடுக்கினம். போட்டோ எடுத்து முடிய அவனோடை வருவன். ரவிக்கு வடை விருப்பம். ஏலுமெண்டால் சுட்டு வையுங்கோ." என்று சொல்லிக் கொண்டே போனான்.
அவன் போய் சில மணி நேரங்களில் கிரனைட்டுகளும், ஷெல்களும் துப்பாக்கி வேட்டுக்களுமாய் ஒரே சத்தம்.
"அந்தக் குறுக்கால போவார் வெளிக்கிட்டிட்டாங்கள் போலை கிடக்கு." அப்பாச்சி தன் ஆத்திரத்தையும் எரிச்சலையும் வார்த்தையில் காட்டினா.
பருத்தித்துறையே அல்லோலகல்லோலப் பட்டது. ´சென்றி´க்கு நிற்கும் பிள்ளைகளின் வீடுகளிலெல்லாம் அன்று உலை கொதிக்கவில்லை. மனம் பதைக்க பெற்றவரும், உற்றவரும் பிள்ளைகளின் வரவுக்காய் வாசலில் காத்திருந்தார்கள்.
நீண்ட காத்திருப்பின் பின் எம் நெஞ்சம் குளிர தம்பி வந்தான். மீண்டும் உயிர் வந்தது போல் நாம் பெருமூச்சு விட்டோம். ஆனால் அவன் சோர்ந்து போயிருந்தான். எதையோ பறி கொடுத்தவன் போல் வெறித்துப் பார்த்தான்.
"என்னடா...?" தங்கைதான் கேட்டாள்.
"ரவி பேயிட்டான்." வார்த்தைகளோடு உணர்வும் வெடித்துச் சிதற குலுங்கியழுதான். களத்தில் புலியாகப் பாய்பவனின் இளகிய மனம் கண்டு நாமும் அழுதோம்.
..........
"அக்கா உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக் கூடாது." என் பிரிய தம்பியின் வார்த்தையை மீறி என் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் ஓடியது.
தீடீரென்று ஒளிப்பிரவாகம். ஒலி பெருக்கி முழங்கியது. "தொடர்ந்து, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஈகைச்சுடரேற்றி மாவீரருக்கு அஞ்சலி செய்வார்கள்."
நான் 1985 இலிருந்து 2000 இற்கு மீண்டு ஈகைச்சுடரேற்றும் வரிசையில் ரோஜா மலருடன் நகர்ந்தேன்.
மாவீரர்களின் மத்தியில் என் தம்பியும் அழகாய்...! அவன் கண்கள் என்னையே ஊடுருவிப் பார்த்து "அழாதையுங்கோ அக்கா" என்று சொல்வது போல்...!
சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
Thursday, November 20, 2003
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
▼
2003
(
36
)
- ▼ November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
1 comment :
:(
Post a Comment