இப்படியும் மனிதர்கள் ஏமாற்ற முனைவார்களா?
செல்வராஜா கண்கள் சொல்லும் கதை சொல்கிறார். நானும் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட கதை.
1991 இல் Car லைசென்ஸ் எடுக்கும் போது கண்களைச் சோதித்துப் பார்த்து கண்ணாடி போட வேண்டுமென்று சொன்னார்கள். அத்தோடு விட்டு விடாமல் எனது லைசென்ஸ் இல் கண்ணாடியோடுதான் Car ஓட்ட வேண்டுமென்ற முத்திரையும் குத்தி விட்டார்கள்.
சின்ன வயதில் சாதுவாக இருந்த ஆசை பெரிய வயதில் நிறைவேறிய போதுதான் கண்ணாடி அணிவது எத்துணை அசௌகரியமானது என்பது விளங்கியது. ஒரு சின்னத்தூசி கண்ணாடியில் இருந்தாலே போதும். ஒரு பெரிய தலையிடிக்கு அது காரணமாகிவிடும். எப்படித்தான் துடைத்துத் துடைத்துப் பாவித்தாலும் ஏதாவது வந்து விடும். எதுவோ மறைப்பது போலச் சினம் கொடுக்கும்.
இத்தனைக்கும் மேலால் எனக்கு கண்ணாடி போடுவதற்கும் போடாமல் இருப்பதற்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரியவுமில்லை. அதனால் கொஞ்சக் காலத்தில் வேண்டாமப்பா இந்தத் தலையிடி என்று நினைத்துக் கண்ணாடியைக் கழற்றியும் வைத்து விட்டேன்.
எனது லைசென்ஸில் கண்ணாடியின் அவசியம் வலியுறுத்தப் பட்டிருப்பதால் ஏதாவது சோதனைகளின் போது மாட்டி, கண்ணாடி அணியாமல் Car ஓடியதற்கான தண்டனையைப் பெறாதிருப்பதற்காக எனது கண்ணாடி எப்போதும் எனது காரினுள்ளேயே இருக்கும். 1991 கார்த்திகை மாதத்துக்குப் பின் அதை நான் எப்போதுமே அணிந்ததில்லை.
இப்படியிருக்க கடந்த மாதம் நான் வேலை பார்க்கும் வங்கியில் முழுமையான மருத்துவச் சோதனை செய்வதற்காக எம்மை அழைத்திருந்தார்கள். விரும்பியவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் போய்ச் செய்யலாம். முழுக்க முழுக்க இலவசம். ஏன் விடுவான்..! என்ற எண்ணம் தோன்ற நானும் சென்றேன். ஒவ்வொரு கொம்பனியிலிருந்தும் வந்து கண் தெரிகிறதா..!, காது கேட்கிறதா..! என்பதிலிருந்து இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம்... என்று சகலதையும் சோதித்து இறுதியில் முதுகு, தோள்மூட்டு என்று நல்லதொரு Massage ம் செய்து விட்டார்கள். வீடு திரும்பும் போது எனக்கு வலு சந்தோசமாக இருந்தது.
கண்ணைச் சோதிக்கும் போது என்னைச் சோதித்தவர்
"என்ன நீ கண்ணாடி போடாமல் இருக்கிறாயா? உனது கண் எவ்வளவு பார்வைக் குறைபாட்டுடன் இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? இந்த நிலையில் நீ கார் ஓட்டவே கூடாது......... "
என்று ஒரு பிரசங்கமே வைத்தார்.
இறுதியாக எனது கண்பார்வையின் குறைபாட்டு அளவுகளை எழுதி ஒரு துண்டு தந்தார். எனது கடைக்கு வந்தாயானால் 20வீதம் கழிவுடன் கண்ணாடி தருவேன் என்றும் சொல்லி விட்டார்.
நான் மனசுக்குள் எனது வங்கிக்கு நன்றி சொன்னேன். இப்படியொரு இலவச வசதியை அவர்கள் செய்து தராது விட்டிருந்தால் நான் இப்போது கூட எனது பார்வைக் குறைபாட்டைக் கவனித்திருக்க மாட்டேன் என நினைத்துக் கொண்டேன்.
ஒரு வாரம் கழித்து குறிப்பிட்ட கடை எங்கிருக்கும் என்று தேடியபோது அது எனது வீட்டில் இருந்து மிகுந்த தூரத்தில் இருப்பதை அறிய முடிந்தது. பெற்றோலைச் செலவழித்து அங்கு போவதை விடுத்து எனது நகரில் எனக்கு அருகாமையில் இருக்கும் கண்ணாடிக் கடைகளை நோட்டம் விட்டேன். "மருத்துவரிடம் சென்று 10யூரோவைச் செலவழிக்காதீர்கள். எங்களிடம் வாருங்கள். நாங்கள் இலவசமாக உங்கள் கண்களைப் பரிசோதிக்கிறோம்"
என்ற வாசகங்கள் சில கடைகளில் பொறிக்கப் பட்டிருந்தன.
இந்த வருடத்திலிருந்து யேர்மனியில் அமுலாக்கப் பட்டிருக்கும் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு காலாண்டுக்கும் மருத்துவரிடம் செல்லும் போது 10யூரோக்கள் செலுத்த வேண்டும். அந்த 10யூரோவை மிச்சம் பிடிப்போம் என்ற எண்ணத்துடன் ஒரு கண்ணாடிக் கடைக்குள் புகுந்து வங்கியில் கிடைத்த துண்டையும் கொடுத்து என்னைப் பரிசோதிக்கச் சொன்னேன். அங்கு ஒரு பெண் என்னைப் பரிசோதித்து "கண்ணாடி இல்லாமல் எப்படி நடக்கிறாய்...?" என்பது போன்ற பாணியில் என்னோடு பேசினாள்.
வேறு வழியில்லை என்ற நிலையில் நான் கோயில் மாடு போலத் தலையாட்ட அவர்கள் எனக்கான கண்ணாடியைத் தெரிவு செய்து எனக்குப் பிடித்த ஐயும் எடுத்துக் காட்டினார்கள். நான் எனது தகுதிக்கு ஏற்ற விலையில் என் முகத்துக்கும் ஓரளவு பொருந்தக் கூடிய வடிவத்தில் Frame ஐத் தெரிவு செய்திருந்தேன். எல்லாம் முடியத்தான் தெரிந்தது இந்த வருடத்திலிருந்து Frame க்கு மட்டுமல்ல கண்ணாடிக்கான பணத்தையும் நானேதான் கொடுக்க வேண்டுமென்பது. இதுவரை காலமும் எமது மருத்துவக் காப்புறுதி இச் செலவை ஏற்றுக் கொண்டிருந்தது.
ம்... எனக்கு அவ்வளவு பணம் கொட்டி கண்ணாடியைப் பெற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. உடனேயே "எனது கண்ணாடிக்கான வேலைகளைத் தொடராதீர்கள். நான் வீட்டுக்குப் போய் தொலைபேசியில் எனது முடிவைச் சொல்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டேன்.
மனசுக்குள் குழப்பம். இவ்வளவு பணத்தை செலவழிக்கத்தான் வேணுமா? அப்படிச் செலவழிப்பதாயின் 10யூரோ செலவழித்து டொக்டரிடம் காட்டி மிகச் சரியான கண்ணாடியைப் பெற்றுக் கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றியது. டொக்டரிடம் நாள் குறித்து விட்டுச் சென்றேன். ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பரவாயில்லை. அங்கிருந்த Magazins ஐ வாசித்துக் கொண்டிருந்தேன்.
ஒருவாறு Doctor என்னை அழைத்து மிகவும் சிரத்தையோடு கண்களைப் பரிசோதித்தார். இறுதியில் ஒரு சிரிப்போடு
"யார் உன்னைக் கண்ணாடி அணியச் சொன்னார்கள்"
என்று வினவினார். யாரென்று சொன்னேன்.
அவர் மீண்டும் சிரித்து விட்டு
"உனது கண்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவே இருக்கின்றன. உனக்கு கண்ணாடியே தேவையில்லை."
என்றார்.
நல்லவேளை தப்பித்துக் கொண்டேன். என்ற உணர்வோடு Doctorக்கு நன்றி சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்.
1 comment :
எங்கு சொன்றாலும் மனிதர்கள் மனிதர்களே!!!
John Bosco | Email | Homepage | 06.03.04 - 6:55 pm | #
--------------------------------------------------------------------------------
மேற்குலகில் ஏதாவது இலவசமாக கிடைத்தால் அதில் அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கின்றது என்று அர்த்தம். இணையத்தில் பல இடங்களில் இலவசசேவை வழங்கும்போது நமது மின்னஞ்சல் முகவரியை விளம்பரதாரருக்கு விற்றுவிடுகின்றார்கள்.
Suren | Homepage | 06.04.04 - 1:40 am | #
--------------------------------------------------------------------------------
உண்மைதான் John Bosco
எங்கு சென்றாலும் மனிதர்கள் மனிதர்களே!!!
சந்திரவதனா | Email | Homepage | 06.05.04 - 6:11 pm | #
--------------------------------------------------------------------------------
நன்றி சுரேன்
சந்திரவதனா | Email | Homepage | 06.05.04 - 6:12 pm | #
Post a Comment