Thursday, December 09, 2004

KG பேனா

அப்போதெல்லாம் ஊற்றெழுத்துப் பேனாக்களில் ஒன்றான Ciel பேனாவைத்தான் பாடசாலைகளில் பாவிக்கத் தொடங்குவோம். அதுவும் ஆறாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான். அதுவரை பென்சில்தான். தற்போது நாங்கள் பாவிக்கும் குமிழ்முனைப் பேனாவைத் தொடவே விடமாட்டார்கள்.

Ciel பேனாதான் உறுப்பெழுத்துக்கு நல்லது என அந்த நேரத்தில் எல்லோருமாகத் தீர்மானித்திருந்தார்கள். அதற்கு முன்னர் அதாவது எங்கள் அப்பா, அம்மா படித்த காலங்களில் தொட்டெழுதும் பேனாவைத்தான் பாவித்தார்களாம். அதனால் எழுதும்போது எழுத்து இன்னும் உறுப்பாக அமையும் என ஆசிரியர்கள் கருதியதால் தமிழ்வகுப்பில் உறுப்பெழுத்துப் பாடம் வரும் போது தொட்டெழுதும் பேனாவையும் பாவிக்க நிர்ப்பந்தப் படுத்தப் பட்டோம்.

Ciel பேனா மிகவும் மலிவானதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை. வேண்டி ஒரு வாரத்துக்குள்ளேயே அதன் கழுத்து வெடித்து மை கசியத் தொடங்கி விடும். இதனால் பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் மூன்றிலுமே மை பிரண்டு விடும். அசிரத்தையாக இருந்தால் அது வெள்ளைச் சட்டையிலும் பட்டு விடும். எல்லோரும் மை பூசிக் கொண்டு திரிவதைப் பார்த்து விட்டு ஒரு நாள் எங்கள் தமிழ்ரீச்சர் சொன்னா "KG பேனை நல்லது" என்று.

KG பேனையின் விலை 6 ரூபா. Ciel என்றால் 2ரூபாதான். இதனால் தமிழ்ரீச்சரின் ஆலோசனையை அவ்வளவாக ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் வீட்டில் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன்.

பின்னொருநாள் ரீச்சர் KG பேனா ஒன்றைக் கொண்டு வந்து எழுதிப் பார்க்கத் தந்தா. உண்மையிலேயே அதன் வடிவமும் எழுத்தும் எனக்குப் பிடித்திருந்தது. வாங்கி விட வேண்டுமென்ற ஆசையும் என்னுள் எழுந்தது.

எனது அப்பா அப்போது(1970) கொடிகாமம் புகையிரதநிலையத்தில் கடமையில் இருந்தார். அதனால் தினமும் வேலை முடிய பேரூந்திலோ, துவிச்சக்கர வண்டியிலோ வீட்டுக்கு வந்து விடுவார். அன்றும் இரவு வேலை முடித்து அதிகாலையிலும் சில மணித்தியாலங்குள் Overtime செய்து, வரும் வழியில் நெல்லியடிச் சந்தையில் சாமான்களும் வாங்கிக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் வீடு வந்து சேர்ந்தார்.

அப்போது பாடசாலையின் மதிய இடைவேளைப் பொழுது. நான் வந்து மதிய உணவையும் முடித்திருந்தேன். ஏற்கெனவே அப்பாவிடம் இந்தக் KG பற்றிச் சொல்லியிருந்ததால், மீண்டும் சுலபமாக அது பற்றிச் சொல்லி வாங்கி விட வேண்டுமென்ற ஆசையையும் சொன்னேன். அன்று மதியம் உறுப்பெழுத்து வகுப்பு இருப்பது பற்றியும் சொன்னேன்.

அப்பா வேலை முடிந்து, சந்தைக்கு அலைந்து வந்த களைப்போடு, என்னைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ரவுணை நோக்கிச் சைக்கிளை உழக்கினார். அப்போது எனக்கு அப்பாவின் கஷ்டம் பற்றிய எந்த சிந்தனையும் எழவில்லை. காலை எழும்பியதும் அடுப்புச் சாம்பலை அள்ளிக் கொட்டுவது எப்படி அம்மாவின் நித்திய வேலையாக உள்ளதோ அது போல வேலைக்குப் போய் வருவது அப்பாவின் நித்திய வேலை என்பதே எனது மூளையில் பதிந்திருக்க வேண்டும். அதனாலான களைப்பு, அலுப்பு போன்றவை பற்றிய பிரக்ஞைகள் எதுவும் என்னிடம் அவ்வளவாக இல்லை.

அப்பா எனக்குக் கரும்பச்சை நிறத்தில் KG பேனா வாங்கித் தந்தார். Ciel பேனாவுக்கு மைவிடுவதாயின் அதன் நிப்பை மைப்போத்தலுக்குள் விட்டு அதன் கழுத்துப் பகுதியோடு சேர்ந்த ரீயுப்பை அழுத்த மை வந்து விடும். KG பேனாவுக்கு அப்படியில்லை. கழுத்தைக் கழற்றி விட்டு இன்னொரு ரியூப்பால் மையை உறிஞ்சி கீழ் உடம்பினுள் விட வேண்டும். எனக்குப் பாடசாலைக்கு நேரமாகி விட்டதால் அப்பா கடையிலேயே கேட்டு மையை விடுவித்துத் தந்தார்.

எனக்கு சந்தோசமும் பெருமையும். அன்றைய உறுப்பெழுத்து வகுப்பில் ரீச்சர் எனது பேனையையும், எனது எழுத்தையும் மற்றப் பிள்ளைகளுக்கும் காட்டியது எனக்கு இன்னும் அதிகப் படியான பெருமையைச் சேர்த்தது.

எனக்குப் பேனா கிடைத்து மூன்று நாளுக்குள் நான் நிறையவே எழுதி விட்டேன். எனது டயறியின் பக்கங்களை நிரப்பினேன். வெளியிடங்களில் இருக்கும் மாமாமார், சித்தப்பாமார் என்று எல்லோருக்கும் கடிதங்களாக எழுதி அனுப்பினேன். முடிந்தவரைக்கும் எழுதிக் கொண்டே இருந்தேன். அந்தளவுக்கு அந்தப் பேனா எனக்குப் பிடித்திருந்தது.

மூன்றாம் நாள் ஸ்போர்ட்ஸ் வகுப்பு. புத்தகங்கள் கொப்பிகள் என்று எல்லாவற்றையும் வகுப்பிலேயே வைத்து விட்டு விளையாட்டு மைதானம் வரை சென்று 45நிமிட வகுப்பை முடித்துத் திரும்பிய போது எனது கொம்பாஸ் சரியாக மூடப் படாமல் மெலிதாகத் திறந்திருந்தது. அவசரமாகத் திறந்து பார்த்தேன். பேனையைக் காணவில்லை. வகுப்பில் உள்ள எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன். ஒருவரும் தமக்குத் தெரியாது என்று விட்டார்கள். விளையாட்டுப் பாடம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு மாணவி தனக்கு தண்ணீர் விடாய்க்குது என்று சொல்லி தண்ணீர்ப் போத்தலை எடுக்க வகுப்புக்கு வந்தது எனக்குத் தெரியும். ஆனால் அவளும் கண்கள் கலங்க தான் எடுக்கவில்லையென்று மறுத்து விட்டாள்.

என் பேனா களவு போய் விட்டது. அப்போதுதான் அப்பா வேலையால் வந்து களைப்போடு கொளுத்தும் வெயிலில் சைக்கிளை உழக்கிச் சென்று பேனாவை வாங்கித் தந்தார் என்பது உறைத்தது. அதனால் பேனா தொலைந்த விடயத்தை அப்பாவிடம் சொல்ல எனக்கு மனம் ஒப்பவில்லை. பழையபடி கையில் மையைப் பிரட்டிக் கொண்டு Ciel பேனாவால் எழுதிக் கொண்டிருந்தேன்.

அப்பாவுக்கு அந்தப் பேனா தொலைந்த விடயம் இன்றைவரைக்கும் தெரியாது. இனித் தெரியவும் மாட்டாது. ஆனால் இந்த நிகழ்வு எனக்குள் அவ்வப்போது தோன்றி நான் கேட்டதும் களைப்பையும் பொருட்படுத்தாது, என்னையும் அழைத்துச் சென்று, பேனா வாங்கித் தந்த அப்பாவின் அன்பை நினைக்க வைத்து ஒருவித நெகிழ்வை ஏற்படுத்தும்.

1 comment :

Anonymous said...

நல்லதொரு பதிவு,நன்றி.
ஈழநாதன் | Email | Homepage | 12.09.04 - 2:19 pm | #

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite