Google+ Followers

Friday, April 15, 2005

ஒரு பேப்பர் - 20 (April1-14,2005)


கற்பகதரு பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அப்படித்தான் இப்போ ஒரு பேப்பரும். அது தன் உச்சப் பயன்பாடு வரை சென்றிருக்கிறது. பொரித்த மீனை வைக்கவும், மாவரிக்கவும் கூட அது உதவுகிறது. நீங்களும் தாராளமாகப் பயன் படுத்தலாம். அச்சடிக்கப் பட்ட மை பொரித்த மீனிலோ மாவிலோ ஒட்டிக் கொண்டு உங்களுக்குத் தெரியாமலே உங்கள் உடலுக்குள் நச்சுத் தன்மை காவப் பட்டால்.. அதற்கு நான் பொறுப்பல்ல.


சரி இனி விடயத்துக்குள் வருகிறேன்.
வழமையான விடயங்கள்தான். அவற்றுள் சிலவற்றைத் தொட்டுள்ளேன்.

மெல்லத் தமிழ் இனிச் சாகும்.
எல்லாளன் சபித்திருக்கிறாரா..! அல்லது சாபமிட்டிருக்கிறாரா...! புரியவில்லை.

நான் ஜேர்மனியில் ஒரு ரெனிஸ் ஆட்டத்தைப் பார்க்கிறேன் என்று வைப்போம். அங்கு ஒரு அமெரிக்கரும் ஒரு ஜேர்மனியரும் போட்டியிடுகிறார்கள் என்றால் நான் ஜேர்மனியர் வெல்ல வேண்டுமென்றுதான் நினைப்பேன். ஏனெனில் நான் ஜேர்மனியில் வாழ்கிறேன். அது எனக்குத் தஞ்சம் தந்த நாடு. என்னவானாலும் ஜேர்மனிக்கு அடுத்தபடிதான் அமெரிக்கா. அதனால் ஜேர்மனியர்தான் வெல்ல வேண்டும். மனசு ஜேர்மனியரையே சப்போர்ட் பண்ணிக் கொண்டு இருக்கும்.

இதே ஜேர்மனியருடன் ஒரு இந்தியர் விளையாடுகிறார் என்று வைப்போம். என்ன இருந்தாலும் இந்தியர் ஒரு ஆசியன் அல்லவா. நானும் ஆசியன்தானே. இத்தனை வசதி படைத்த ஜேர்மனிக்கு வந்து எனது ஆசிய இனத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர் தோற்பதா? ம்கும்.. ஒரு நாளும் கூடாது. இப்போ எனது மனம் முற்று முழுதாகச் சப்போர்ட் பண்ணுவது அந்த இந்தியருக்குத்தான்.

இதே இந்தியரும் ஒரு இலங்கையரும் விளையாடுகிறார்கள் என வைப்போம். இப்போ எனது மனம் கண்டிப்பாக இலங்கையருக்குத்தான். எனது நாட்டவரல்லவா...! சும்மா இருக்குமா மனம். அவர் வெல்ல வேண்டும் என்பதற்காக தன்னையறியாமலே பிரார்த்தனை கூடச் செய்யும்.

இதே இலங்கையர் கொழும்பைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு யாழ்ப்பாணத்தவரோடு விளையாடினால் எனது மனம் யாருக்கு என்பதை நான் சொல்லத் தேவையில்லை. கண்டிப்பாக யாழ்ப்பாணத்தவருக்குத்தான்.

அதே யாழ்ப்பாணத்தவர் எனது ஊரான பருத்தித்துறையோடு விளையாடினால்... அப்போது சிறிதேனும் சந்தேகமின்றி என் மனம் பருத்தித்துறையோடுதான்.

இதே பருத்தித்துறை ஆள் எனது வீட்டுக்குள் உள்ள எனது உறவு ஒன்றோடு விளையாடினால்... சொல்ல வேண்டுமா என் மனம் பற்றி.

இப்போது இதையேன் சொன்னேன் என்றால்...
இந்த மனம் இருக்கிறதே அதைப் போலச் சுதந்திரவாதி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அதே அளவுக்கு சுயநலவாதியும் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அது அப்படித்தான் நினைக்கும். தன் சார்ந்துதான் எதையும் சிந்திக்கும்.

அப்படியிருக்க கொஞ்சம் யோசியுங்க.. என்று சொல்லி எல்லாளன் எழுதியிருக்கும் "எமது பூநகரி மொட்டைக் கருப்பன் அரிசிக்கு ஒரு இந்திய நடிகையை வைத்துத்தான் விளம்பரம் செய்ய வேண்டுமா..?" என்ற கேள்வி சரிதான். அவரது அந்தக் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். அந்த விளம்பரத்தை பூநகரிப் பெண்ணையே வைத்தோ, அல்லது புலம் பெயர்ந்த இலங்கைப் பெண்ணையே வைத்தோ செய்திருக்கலாம்.

அதுக்காக "அமெரிக்க நடிகர் Tom Cruise ஐ அமெரிக்கர் என்பதால் தள்ளி வைத்து, சாருகான் இந்திய நடிகர் என்பதால் தலையில் தூக்கி வைப்பது ஏன்...?" என்று கேட்கிறார். இதில் எந்த சூட்சுமமும் இல்லை. மேலே குறிப்பிட்ட ரெனிஸ் தத்துவம்தான் இதற்கும் பதிலாய் அமையும்.

ஊடகங்கள் இந்தியப் படைப்புக்களுக்கும், இந்திய நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் திறமைகள் காட்டில் எறித்த நிலவாய் வீணாகிப் போவதை மறுப்பதற்கில்லை. TTNஇல் போகும் படலைக்குப் படலை போன்ற யதார்த்தமான நிகழ்ச்சிகளை எம்மவர்களால் தர முடியும். இருந்தும் ஊடகங்கள் பெண்களை அடிமைப் படுத்தும் விதமாகவும், பெண்களை கேவலப் படுத்தும் விதமாகவும் தயாரிக்கப் படும் இந்தியத் தொடர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவைகள் எம்மவருக்கான வாய்ப்புக்களை எந்தளவுக்குப் பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதையும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்.

அதற்காக எல்லாளன் கொடுத்த உதாரணங்களும் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற வாய்ப்பாடும் ஏற்புடையதாய் இல்லை.

இங்கு ஊடகங்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. எங்கள் புலம் பெயர்ந்த பெண்களும் இவைகளை விழுந்து விழுந்து பார்க்கிறார்களே... அவர்களை என்ன சொல்ல...!

ஆன்மீகம்
செல்வநாயகியின் எது ஆன்மீகம் என்றொரு கட்டுரை தொடராக வருகிறது. ஆன்மீகம் என்றால் மற்றப் பக்கமாய் ஓடுபவர்களை இழுத்து நிறுத்தி, இதுதான் ஆன்மீகம் என்று சொல்லும் விதம் அருமை. கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுபவன்தான் ஆன்மீகவாதி என்றில்லை... அன்பால்... என்ற கருத்துப் பட எழுதப் படும் அக்கட்டுரை உண்மையிலேயே என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஒளியின் பதிவுகள் பற்றிய கமரா பயனுள்ள கட்டுரையாகத் தொடரும் என்றே நம்புகிறேன்.

பெற்ற(து) சுமை.
நல்லதொரு கதை. கனடாவிலிருந்து தம்பிதாசன் எழுதியிருக்கிறார்.
புலம்பெயர்ந்த நாமல்ல. எம்மைப் பெற்று வளர்த்து, தாலாட்டிச் சீராட்டித் தலைநிமிர வைத்தவர்கள். அவர்கள் புலம்பெயர்ந்த மண்ணில் படும் அவலங்கள். எவனோ ஒருவனின் துப்பாக்கிக்கு இரையாகியிருந்தால் கூட அவர்களின் மனங்கள் இத்தனை துயரைச் சுமந்திருக்க மாட்டா. பெற்றவர்களிடமே சுமை போலான நிலையில்.. நல்ல கருவொன்றைக் கதையாக்கியிருக்கிறார் தம்பிதாசன்.

அறுவைப்பக்கத்தில்
யாருக்காவது தலையில் குட்டு வேண்ட ஆசையென்றால் தலையைச்சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாக அல்வாசிட்டி விஜய் இடம் போங்கள்.

கொதிகிழப்பல்
இலங்கை வானொலியின் பாரபட்சமனா தன்மையில் வன்னியன் கொதிப்படைந்திருக்கிறார்.

இன்னும் பல......

19 comments :

selvanayaki said...

அன்பு சந்திரா,

இப்போதுதான் உங்களின் இந்தப் பதிவைப் படித்தேன். "ஒரு பேப்பர்" அறிமுகத்திற்கு நன்றி. எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? அந்தப் பத்திரிக்கையின் தொடர்பு முகவரி இருந்தால் தருவீர்களா? ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தால் இன்னும் நல்லது. எனக்கே தெரியாமல் என் தொடர் ஒன்று அந்தப் பத்திரிக்கையில் வருவது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

"எது ஆன்மீகம்" என்ற தலைப்பில் நான் "மரத்தடி" யில் சில செய்திகளை ஒரு தொடராக எழுதிக்கொண்டிருந்தேன். அவர்கள் அதைத்தான் எடுத்துப் போட்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன். இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கிற நம் மற்ற நண்பர்களின் படைப்புகளும் அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டதா? இல்லை அப்படி எழுதியவரிடம் கேட்காமலே இணையத்திலிருந்து அச்சுக்கு எடுத்துக் கொள்வது நடைமுறையில் உள்ளதா? நான்தான் அறியவில்லையா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறேன் சந்திரா.

Chandravathanaa said...

வணக்கம் செல்வநாயகி
ஒரு பேப்பரில் எழுதப் பட்ட அந்தக் கட்டுரைக்குரிய செல்வநாயகி நீங்கள்தான் என்று தெரியாமலேதான் நான் எனது கருத்தை எழுதினேன். அது நீங்கள் என்று தெரிந்த போது அந்தக் கட்டுரை எழுதிய தன்மை என்னைப் பாதித்ததில் வியப்பொன்றும் இல்லையே என நினைத்துக் கொண்டேன்.

ஒரு பேப்பரின் முகவரி இதுதான். இங்கே நீங்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரியைப் பெற்றுக் கொள்ளலாம் என நம்புகிறேன்.

நிற்க இணையங்களிலிருந்து எது வித அனுமதியுமின்றி ஆக்கங்களை அச்சுக்கு எடுப்பது தற்போது சர்வசாதாரணம். இது சட்டப்படி சரியானதா பிழையானதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்கிருந்து எடுக்கப் பட்டது என்பதைக் குறிப்பிடும் பட்சத்தில் அதில் பிரச்சனைகள் இல்லையென்றே நான் நினைக்கிறேன்.

வன்னியன் said...

என்னுடைய பதிவும் அங்கு வந்திருந்தது சந்திரவதானா அக்கா இங்கே எழுதித்தான் எனக்கும் தெரியும். ஆனால் என் பெயரைப் போடாமல் வேறு யாருடையதோ பெயரைப்போட்டு வந்திருந்தது கவலையளித்தது. மற்றும்படி பெயர் குறிப்பிட்டு என்னுடையதைப் போடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை.

selvanayaki said...

உங்கள் உதவிக்கு நன்றி சந்திரா. நான் "ஒரு பேப்பர்" இணையத் தளத்தைப் பார்வையிட்டேன். என் கட்டுரைகளையும் படித்தேன். எவ்விதக் குறிப்புக்களுமின்றி (குறைந்தபட்சம் அது எடுக்கப்பட்ட மரத்தடிக்கு நன்றி சொல்லியும்கூட) , அவர்கள் என்னிடம் நேரடியாக வாங்கிப் போட்டதுபோல் உள்ளது அதன் தொனி. நல்லதுதான் செய்கிறார்கள் என்றாலும் ஒருவார்த்தை எழுதியவரைக் கேட்டுவிட்டுச் செய்யலாம் என்று தோன்றுகிறது. நான் இன்னும் இணைய எழுத்துக்களின் "காப்புரிமை" பற்றியும் கொஞ்சம் ஆழமாகப் படித்துவிட்டு அதன் ஆசிரியருக்கு ஒரு மடல் எழுதி என் கருத்தைச் சொல்ல எண்ணிக் கொண்டிருக்கிறேன். நன்றி சந்திரா, நீங்கள் இதை இங்கு எழுதியிருக்காவிட்டால் இப்படி ஒன்று நடந்ததே தெரியாமல் போயிருக்கும்.

வன்னியன், உங்கள் பெயர்கூடப் போடாமல் உங்கல் படைப்பை அவர்கள் பிரசுரித்தது உண்மையில் எனக்கு வருத்ததைத் தருகிறது. நீங்கள் அனுமதித்தால் நான் என் படைப்புப் பற்றிப் பேசும்போது உங்களுக்காகவும் எழுதுகிறேன். எந்தப் படைப்பு என்பதை நீங்கள் கொஞ்சம், ஒரு பேப்பர் இணையத்தளத்திலிருந்து எடுத்து எனக்கு லிங்க் அனுப்புங்கள், என் மின்னஞ்சல் snayaki@yahoo.com

எல்லாளன் said...

ரொம்குருஸா சாரூக்கானா என்றால் நீங்கள் சொல்லும் கருத்தினை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் என்று வைப்போம். ஆனால் என்னுடைய பிரச்சனை என்னவெனில் சாதாரணமாக தங்களை அடையாளப் படுத்தும் நடிகர்களாக இவர்களை நினைப்பதுதான் தவறு என்கிறேன். ஒரு திருமண வீட்டில் ஒரு குழு பேசிக்கொண்டு இருக்கிறது. சாரூக்கான் சல்மான்கான் என்று பேச்சுப் போகிறது சரி குறைந்த பட்சம் கமலகாசனாவது பேசப்படுவாரா என்றால் ம்.................... (நீங்கள் வாலிபப் பருவத்தினைக் கடந்த பின்னரே இங்கு வந்து இருப்பீர்கள் அதனால் நீங்கள் அப்படிச் சிந்திக்கிறீர்கள்) ஆனால் இவர்களுக்கு?


தமிழைச் சபிக்க நான் யார்? நான் சபிக்கவில்லை!

'மெல்லத்தமிழ் இனிச்சாகும்" என்று இரண்டு கருத்துள்ள ஒரு வசனத்தினை எழுதினேன் அவ்வளவுதான்.

தமிழ்வாணன் said...

//இதே இந்தியரும் ஒரு இலங்கையரும் விளையாடுகிறார்கள் என வைப்போம். இப்போ எனது மனம் கண்டிப்பாக இலங்கையருக்குத்தான். எனது நாட்டவரல்லவா...! சும்மா இருக்குமா மனம். அவர் வெல்ல வேண்டும் என்பதற்காக தன்னையறியாமலே பிரார்த்தனை கூடச் செய்யும்.//

இதே இந்தியா - சிறிலங்கா கிறிக்கற் தொடர்களின்போது 1987 க்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கைத்தமிழர்கள் யார் பக்கம் நின்றார்கள் என்பதையும் நினைவு மீட்டிப்பார்த்தல் இங்கு பொருத்தமாக இருக்கும்.

வன்னியன் said...

வேண்டாம் செல்வநாயகி. இதைப் பெரிசாக்க வேண்டாம்.

selvanayaki said...

வன்னியன்,

நான் அவர்களிடம் இதை வைத்துக்கொண்டு சண்டைக்குப் போய் எதையும் பெரிதாக்கப் போவதில்லை. நியாயமாய்ப் படும் கருத்துக்களை மட்டும் சொல்லத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு விருப்பமில்லையென்றால் உங்கள் படைப்புக்கு நான் எதுவும் செய்யவில்லை. நீங்கள் உங்கள் பெயர் போடாதது கவலையாயிருக்கிறதென்றதால் கேட்டேன், வேறொன்றுமில்லை. நான் உங்களை வற்புறுத்தியது மாதிரியான தொனி அதிலிருந்தால் மன்னிக்கவும்.

Chandravathanaa said...

எல்லாளன்
உங்கள் கவலை புரிகிறது. தமிழ் வாழ வேண்டும்.
எங்கள் அடையாளங்களும் இருக்க வேண்டும்.
இதுதான் பெரும்பாலோனோரின் விருப்பும்.
உங்கள் வரவுக்கும் விளக்கத்துக்கும் நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

Anonymous said...

//ஆனால் என் பெயரைப் போடாமல் வேறு யாருடையதோ பெயரைப்போட்டு வந்திருந்தது கவலையளித்தது. மற்றும்படி பெயர் குறிப்பிட்டு என்னுடையதைப் போடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை.

# posted by வன்னியன் : 12:18 PM //

20 வது இதழில் கொதி கிழப்பல் என்ற ஆக்கம் வன்னியன் உங்களது பெயரில் தானே வந்திருக்கிறது. வன்னியன் என்று குறிப்பிட்டுத்தானே சந்திரவதனா எழுதினார். பிறகெப்படி உங்களது பெயரில் வரவில்லையென சொல்வீர்கள்.. ?

Chandravathanaa said...

வன்னியன்
நானும் கேட்க நினைத்தேன்.
முன்னர் எப்பொதாவது நடந்திருக்லாம்.
ஆனால் தற்போது உங்கள் பெயருடன்தான் வருகிறது.
நான் குறிப்பிட்ட கொதிகிழப்பலும் உங்கள் பெயரில்தான் வந்துள்ளது.

Chandravathanaa said...

தமிழ்வாணன்
நீங்கள குறிப்பிட்ட
///இதே இந்தியா - சிறிலங்கா கிறிக்கற் தொடர்களின்போது 1987 க்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கைத்தமிழர்கள் யார் பக்கம் நின்றார்கள் என்பதையும் நினைவு மீட்டிப்பார்த்தல் இங்கு பொருத்தமாக இருக்கும். ///இந்த விடயம் பற்றி எனக்குத் தெரியாது. விளக்கமாகச் சொன்னீர்களானால் உதவியாக இருக்கும்.

Chandravathanaa said...

வணக்கம் செல்வநாயகி
வன்னியனுக்கான உங்கள் பதில்- அதாவது ///நான் அவர்களிடம் இதை வைத்துக்கொண்டு சண்டைக்குப் போய் எதையும் பெரிதாக்கப் போவதில்லை. நியாயமாய்ப் படும் கருத்துக்களை மட்டும் சொல்லத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு விதத்தில் நிம்மதியைத் தருகிறது.

ஒரு பேப்பர் இலாப நோக்கற்ற ஒரு பேப்பர். எல்லோருமே இலவசமாகவே அதைப் பெற்றுக் கொள்கிறார்கள். எனக்குக் கூட அது இலவசமாகவே கிடைக்கிறது. இலவசம் என்பதற்காக மட்டுமல்லாமல் வாசிப்பதற்கு சுவையான பத்திரிகையாகவும் அது இருப்பதில் அது என் வீடு தேடி வரும் ஒவ்வொரு பொழுதிலும் என் மனம் சந்தோசிக்கத் தவறுவதில்லை. அதனால்தான் அது பற்றிய எனது கருத்துக்களை முழுவதுமாக இல்லாவிட்டாலும் கொஞ்சமேனும் இங்கு பதிக்கிறேன்.
எனது சந்தோசமும் அதனாலான பதிவும் ஒரு பேப்பர் நிர்வாகிகளுக்கு இடர் ஏற்படுத்தி விட்டதோ எனச் சில நாட்களாக மனக்கிலேசம் அடைந்திருந்தேன். அதற்காக நீங்கள் குறிப்பிட்ட அவர்களது தவறை கண்டு கொள்ளாதிருக்கும் படி உங்களிடம் கேட்கும் மனத்துணிவும் எனக்கு வரவில்லை. தவறுகள் சுட்டிக் காட்டப் பட வேண்டியது கட்டாயம். அதனால் பாரதூரமாக எதுவும் ஏற்படாதவரை பொறுமையாக இருக்க முடிவு செய்தேன். உங்கள் மேல் எனக்கு நல்லபிமானமும் ஏதோவொரு நம்பிக்கையும் இருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. நீங்கள் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களோடு இது பற்றிப் பேசுவதாகக் குறிப்பிட்டதில் எனக்கு மிகுந்த நிம்மதியும் சந்தோசமும்.

அவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா? என்ன நடந்தது? என்பவைகளை முடிந்தால் தெரியப் படுத்துங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

அல்வாசிட்டி.விஜய் said...

நான் இந்த பிரச்சனையை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும் நானும் இதைப்போல் தான் உங்கள் பதிவில் வருத்தம் தெரிவித்தேன்.மின்னஞ்சல் முகவரி கிடைத்ததும் ஒரு பேப்பர் நண்பர்கள் ரொம்ப நல்ல விதமாக பேசி நட்பை தெரிவித்தார்கள்.அவர்கள் என் பதிவிலிருந்து எதை வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை கொடுத்திருக்கிறேன். லாப நோக்கமில்லாமல் தமிழ் சேவை நடத்தும் அவர்களை எந்த விதத்திலும் பாதிக்க வைக்கக் கூடாது என்பது என் கருத்து. சில நேரங்களில் பதிவை பயன்படுத்தி விட்டு உங்களை தொடர்பு கொள்ள மின்னஞ்சலில் முயலலாம். அது வெளிப்படையாக பதிவில் எங்கும் மின்னஞ்சல் முகவரி இல்லாததால் பதிவு ஆசிரியரை தொடர்புக் கொள்ள் முடியவில்லை என்கிறார்கள்.

Chandravathanaa said...

விஜய்
ஒரு பேப்பர் உறவுகள் மிகவும் நட்பானவர்கள்தான்.
கலகலப்பானவர்களும் கூட.

selvanayaki said...

அன்பு சந்திரா,

நீங்கள் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும், நல்லபிமானத்திற்கும் மிக்க நன்றி. இன்றுதான் அவர்களுக்கு எழுத எண்ணிக்கொண்டு கணினிக்கு வந்தேன். நீங்களும் அதுகுறித்து என்னைக் கேட்டிருக்கிறீர்கள். நான் வழக்கறிஞராகப் பணியாற்றியது மிகக் குறைந்த காலம்தான். அதில் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று பிரச்சினைகளை முடிந்தவரை சுமூகமாகத் தீர்வு காண முயலவேண்டும். அப்படி முடியாதபோதுதான் அடுத்த வழியைத் தேட வேண்டும் என்பது. (சொல்லிக் கொடுத்த சீனியர் அப்படி) அந்த வகையில்தான் இதுகுறித்து ஒருபேப்பருக்கும் எழுதியுள்ளேன். பார்க்கலாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று.

உங்களுக்கும் நான் எழுதிய மடலின் நகல் ஒன்று அனுப்பியுள்ளேன்.

Chandravathanaa said...

மிகவும் நன்றி செல்வநாயகி.

வசந்தன்(Vasanthan) said...

நன்றி சந்திரவதனா மற்றும் செல்வநாயகி!
நான் சொன்னது "அப்பா துவக்குச் செய்வார்" என்ற பதிவைப்பற்றி.

Chandravathanaa said...

வசந்தன்
இப்போ எல்லாவற்றிற்கும் யார் எழுதியது என்பதைக் குறிப்பிடுகிறார்கள்.
சில படைப்புகள் எங்கே இருந்து எடுக்ப்பட்டன என்பதும் குறிப்பிடப் பட்டுள்ளன.

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite