Monday, April 04, 2005
திசைகள் மார்ச் 2005 - ஒரு பார்வை
ஏப்ரல் மாதத் திசைகள் வெளி வந்து விட்டது.
அதில் இடம் பெற்ற
மார்ச் மாதத் திசைகள் பற்றிய எனது பார்வை.
பலகாலமாகப் பெண்கள் எழுதிக் கொண்டிருந்தாலும் இதுவரை காலமும் எழுத்துலகமே ஆண்களுக்கானது போன்ற ஒருவித பிரமை எம்மிடையே உலாவி வந்துள்ளது. பழமொழிகள் என்றால் என்ன! பாடல்கள் என்றால் என்ன! கட்டுரைகள் என்றால் என்ன! எதுவானாலும் பெரும்பாலும் ஆண்களாலேயே முன்மொழியப் பட்டு, அவை பெண்களை அடக்குவதாகவும், பெண்களுக்கு "அடங்கிப் போ!" என்று புத்தி கூறுவதாகவும், பெண்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்கள் எடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடிக்கும் நாம்தான்படி அமைத்துக் கொடுக்கிறோம் என்பது போலாகவும், எழுதப் பட்டுக் கொண்டிருந்தன.
காலங்காலமான அந்த எழுத்துக்களை உடைக்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிலரால் சஞ்சிகைள், பத்திரிகைகள் என்று உருவாக்கப் பட்டு முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களுடன் அவை பெண்களின் பிரச்சனைகளைப் பேசுவதாயும், பெண்களுக்குத் தைரியமூட்டுவதாயும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதற்கான எதிர்ப்புக் குரல்கள் ஒவ்வொரு வெளியீட்டின் போதும் வெளியில் கேட்கவும் தவறுவதில்லைத்தான். இருப்பினும் இதை எப்படி வெளியில் சொல்வது? என்று தயங்கும் எத்தனையோ பெண்களுக்கு இப்படியான சஞ்சிகைகள்தான் தைரியத்தைக் கொடுத்து அவர்களின் மௌனத்தைக் கலைத்திருக்கின்றன..
இந்த நிலையில் மாலன் அவர்கள் இணையத்திலே பெண்களுக்கான ஒரு இணையச் சிறப்பிதழை, பெண்களின் ஆக்கங்களைக் கொண்டு தயாரித்தது மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. 27பெண்கள் தமது படைப்புக்களைக் கொடுத்திருக்கிறார்கள். சிந்தனைகள், உணர்வுகள், பார்வைகள், கருத்துக்கள்... என்று அவை வெவ்வேறு கோணங்களிலிருந்து வந்துள்ளன. எழுதியவர்களில் அனேகமானோர் ஓரளவுக்கேனும் தமது கருத்துக்களைத் துணிந்து வெளியில் சொல்பவர்களேயானாலும், அவர்களுக்கு மீண்டும் திசைகள் மூலம் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்த மாலன் அவர்களுக்கு நன்றி கூறிக் கொண்டு இதழினுள் நுழைகிறேன்.
அவ்வ்வ்வவ்வவ்வவ்வவ்வளவும் பெண்கள் என்ற தலைப்போடு அழகிய முகப்பு. பவித்ரா சிறீனிவாசனின் கருத்தாழமிக்க சுயம் என்ற வர்ணஓவியம் திசைகளின் முகப்புக்கு அழகோடு மெருகூட்டுகிறது.
உள்ளே படைப்பாளிகள் பற்றிய சிறு அறிமுகம் பெயரளவிலும் படைப்புகள் வாயிலாகவும் மட்டும் தெரிந்த 27பேரை ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஒவ்வொருவரையும் பற்றி வாசித்துவிட்டு இன்னும் உள்ளே போனால் எதை முதலில் வாசிப்பது என்று மனசு தடுமாறுகிறது. அனேகமான எல்லோருமே ஏதோ ஒரு வகையில் எழுத்துக்களால் எம்மைக் கவர்ந்த, எழுத்துலகினூடு எமக்கு அறிமுகமானவர்களே.
நான் முதலில் தேர்ந்தெடுத்தது அனிற்றா நாயர் எழுதிய "ஒரு தேடல் ஒரு பயணம் ஒரு அனுபவம்" - Ladies Coupe - நூலுக்கான ஜெயந்தியின் விமர்சனம். தினமும் எத்தனையோ எழுத்துக்களை வாசிக்கிறோம். அவற்றில் சில எழுத்துக்கள் எம்மனதில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில எழுத்துக்கள் அமைதியையும் வாசித்தோம் என்ற ஒரு ஆழ்ந்த திருப்தியையும் ஏற்படுத்துகின்றன. சிலது கோபத்தையும் எரிச்சலையும் கூட ஏற்படுத்துகின்றன. ஆனால் எந்த ஒரு விடயத்தையும் அழகாகவும் வாசித்த திருப்தி ஏற்படும் விதமாகவும் எழுத முடிவது எழுத்தாளனின் திறமையே. அந்த வகையில் ஜெயந்தியின் ஒரு தேடல் ஒரு பயணம் ஒரு அனுபவம் - Ladies Coupe - நூல் விமர்சனத்தை வாசித்து முடிந்ததும் மிகுந்ததொரு திருப்பதி ஏற்பட்டது. ஜெயந்தி தான் அந்த கதையை மிகவும் ரசித்து வாசித்ததோடு நின்று விடாமல் தனது உணர்வுகளை ரசனை கலந்து எங்களுக்கும் தந்துள்ளார். கதாநாயகி அகிலாவின் பிரச்சனைகளையே மையமாகக் கொண்டு கதை விரிந்திருந்தாலும்.. கதையை வாசித்த பின் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு நிறைவு மனசுக்குக் கிடைத்தது. சில நாட்களாக அக்கதையைச் சுற்றி மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜெயந்தியின் எழுத்துக்களும் சொற்பிரயோகங்களும் கூட மிகுந்த தரமாக அமைந்திருந்தது அதற்கொரு காரணமாயிருக்கலாம்.
சிறுகதைகளில் - வாசித்ததும் நிலாவின் "தகப்பன் சாமி" பிடித்துப் போனது. தமது மனைவியரை தமது உடைமைகளாக நினைக்கும் கணவன்மார்கள், தமது மகளை கணவனுடன் அனுப்பி விட்டு ஒரு அப்பாவாக நிற்கும் போதுதான் சில விடயங்களை உணர்ந்து கொள்கிறார்கள். இதில் நிலா தானே மகளாக நின்று கதையைக் கொண்டு செல்கிறார். அம்மாவை அடக்கி வைக்கும் அப்பா... அம்மாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பவே விரும்பாத அப்பா.. அதாவது கண்ணுக்குத் தெரியாத விலங்கை அம்மாவுக்கு மாட்டி, அம்மாவோடு குடித்தனம் நடத்தும் அப்பா.. அதைக் கண்டு மனசு பொறுக்காத மகளாக நின்று தனது கணவனோடு சேர்ந்து பாடம் புகட்டி வாழ்வையும் அம்மாவின் உணர்வுகளையும் கதையினூடாகப் புரிய வைக்கும் விதம் அருமை.
லதாவின் "நாளை ஒரு விடுதலை" சிங்கப்பூரில் வீட்டில் வேலை செய்பவளாக அவஸ்தைப்படும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. அந்நிய தேசத்தில் அந்நியளாய் நின்று கூசிப் போவது ஒரு புறமிருக்க, வீட்டில் முதலாளி அம்மாவிடம் வேலைக்காரியாகப் படும் அவஸ்தை மறுபுறம். இவைகளோடு பெண் என்பதால் முதலாளி ஐயாவின் சபலத்துக்கும் தப்பாத... பணத்துக்காகப் புலம் பெயர்ந்து அரேபிய நாடுகளிலும் சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் வாழ்வைத் தொலைத்த பல பெண்களின் கதைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
ஷைலஜாவின் "படிப்பு" சிறுகதையில் - பிஎஸ்ஸி படித்த ஒரு பெண் சீதனம் கொடுத்தால்தான் காதலன் கைபிடிப்பான் என்பதற்காக தனது அண்ணனின் மனதைப் பற்றிச் சிறிதேனும் சிந்திக்காமல் கொடுக்கத் தயாராகிறாள். அதே நேரம் ஒரு படிப்பறிவில்லாத பெண் அண்ணனின் நிலத்தைக் கொடுத்துத்தான் கல்யாணம் என்றால் அப்படி அண்ணனின் நிலத்துக்கு ஆசைப்படும் மாப்பிள்ளை தனக்கு வேண்டாமென மறுக்கிறாள். படிப்பினையூட்டும் ஒரு கதை. படிப்பறிவில்லாத இந்தப் பெண்ணின் தைரியமும் திடமும் எல்லாப் பெண்களுக்கும் வரவேண்டும். சீதனம் என்று வரும் போது சீதனம் கேட்பவனை மணமுடிக்க மாட்டோ ம் என்று ஒட்டு மொத்தப் பெண்களுமே ஒத்து நின்றால் இந்தச் சீதனம் இன்று வரை நிலை கொண்டு நிற்குமா..?
தொடர்ந்த மற்றைய சிறுகதைகளும் நல்ல கருப்பொருட்களையே கொண்டுள்ளன. பெற்றோர்கள் பிரிவதால் பிள்ளைகள் மனசால் தனித்துப் போவதை ரமா சங்கரனின் "புகையும் தனிமை" சொல்கிறது.
புலம் பெயர்ந்து நமக்கு நாமே என்று இருக்கும் நிலையில், பலர் அக்கரைப் பச்சை தேடி இருந்த குடும்ப உறவையும் தொலைத்து நிற்கும் சோகம் புலத்தில் அவ்வப்போ நிகழத் தவறுவதில்லை. றஞ்சியின் "அக்கரைப்பச்சை" அப்படியொரு சோகத்தைத்தான் சொல்கிறது. நல்ல எதிர்காலத்தை கனடாவில்தான் தேட முடியும் என்ற நினைப்பில் மனைவியையும் குழந்தையையும் கனடாவுக்கு அனுப்பி மனைவியையும் தனிமைப் படுத்தி சுவிஸில் தனது நிகழ்காலத்தையும் தொலைத்த ஒருவரின் கதை இது.
ஜனகாவின் "உதிரிப்பூக்கள்" மலர்க்கடையில் எஞ்சிப் போன உதிரிப்பூக்கள் போல, சொந்த பந்தமின்றிப் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளை, தான் வளர்க்க நினைக்கும் ஒரு நல்மனதின் கதை.
இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் "மேதகு வேலுப்போடி" பூசாரிகளின் தில்லுமுல்லுகளைச் சொல்கிறது.
கவிதைகள் ஏழு இடம் பிடித்துள்ளன. ஏதோ ஒரு லயமும், மெலிதான சோகமும் கவிதைகளில் படர்ந்திருக்கின்றன. கருப்பொருளில் ஜெஸிலா ரியாஸின் வேலைப்பளு என்னைக் கவர்ந்தது.
கட்டுரைகளில் அறிவியல், பொருளாதாரம், பிரச்சனை, உரிமை என்று வெவ்வேறு கோணங்களிலான நான்கு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கற்பகம் இளங்கோவின் அறிவியல் கட்டுரையோடு, பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டதுதானே என்று பேசப்படும் உலகில் உள்ள ஊனமுற்ற பெண்களின் பிரச்சனைகளை பத்மா அரவிந்தும், பணியிடத்தில் பெண்கள்
எதிர்கொள்ளும் பிரச்சனைகளை செல்வநாயகியும் தந்துள்ளார்கள். பெண்விடுதலையின் முதற்படிகளில் கல்வியும் சுயதொழிலும் முன் நிலையில் நிற்கின்றன. இந்தச் சுயதொழில் என்பது மூலை முடுக்குகளிலுள்ள எத்தனையோ பெண்களை தலை நிமிர வைத்துள்ளது. அச் சுயதொழிலுக்கான மூலதனமான நுண்கடனால், பெண்கள் எப்படி நன்மை பெற்றார்கள் என்பதையும், அது எப்படி எங்கே ஆரம்பித்தது என்பது பற்றியும் அருணா ஸ்ரீநிவாசன் தந்துள்ளார்.
குட்டி ரேவதியின் முலைகள் கவிதைத் தொகுப்பு சம்பந்தமான விவாதம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. புதியமாதவி, வைகைச்செல்வி, உஷா ராமச்சந்திரன், திலகபாமா ஆகியோர் இவ்விவாதத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். நால்வரும் சொன்ன பெரும்பாலான கருத்துக்களோடு என்னால் உடன் பட முடிகிறது. உஷா ராமச்சந்திரன் குறிப்பிட்டது போல இப்படிதான் எழுத வேண்டும் என்று யாருக்கும் சட்டதிட்டங்கள் சொல்ல முடியாது. ஆனால் படைப்பின் நோக்கம் முற்றிலும் திசைமாறிப் போவதில் அர்த்தம் இல்லை. குட்டி ரேவதியின் நோக்கம் திசைமாறியதா...? அது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் குட்டிரேவதியின் அக்கவிதைத் தொகுப்பை நான் வாசிக்கவேயில்லை. அதனால் அவர் எந்த நோக்குடன் அக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் என்றோ, என்ன நிலையில் அதனுள்ளான கவிதைகளை எழுதினார் என்றோ எதற்காக அந்தப் பெயரை வைத்தார் என்றோ என்னால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. இந்த நிலையில் அத்தொகுப்புப் பற்றிய எனது எந்தக் கருத்தையும் முன் வைக்கவும் முடியவில்லை.
ஆனால் எதையும் நாம் எழுதுவோம் யார் கேட்பது என்பது போன்றதான வீம்பும் அழகானதல்ல. ஏனெனில் பெண்விடுதலை என்பது ஆண்களோடு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கும் ஒரு விடயமே அல்ல. காலங்காலமான நடைமுறைகளில் ஆண்கள் ஆளுமைக்குரியவர்கள் என்பது போலவும் பெண்கள் அடங்கிப் போக வேண்டியவர்கள் என்பது போலவும் பிரமைப் படுத்தப்பட்டு அதனூடும் அதற்குச் சார்பாகவுமே எல்லா விடயங்களும் இசைவு பெற்று விட்டன. அந்த இசைவாக்கத்திலிருந்து ஆண்கள் விடுபடவும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து பெண்களும் மனித ஜென்மங்கள்தான் என்பதை உணர்ந்து செயற்படவும் ஏற்ற வகையில் அவர்களுக்குப் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நாங்கள் இதற்குத்தான் லாயக்கானவர்கள் எனத் தம்மைத் தாமே தாழ்த்தி நினைக்கும் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுத்து, உன்னால் முடியாதது எதுவுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். இவைகள்தான் பெண்விடுதலையின் அத்திவாரங்களாக அடியெடுக்கின்றன. அதைப் பெண்கள் மறந்து போய் விடக் கூடாது.
சந்திரவதனா
யேர்மனி
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
▼
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ▼ April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
2 comments :
Off-topic: Sorry for this response which is off-topic.
சந்திரவதனா, என்னுடைய பழைய பதிவொன்றில் நீங்கள் கேட்டிருந்ததற்கான பதில்.
"இன்று தான் சோதித்து பார்த்தேன். வலைப்பதிவின் தலைப்பு சரியாகத் தெரிகிறது. ஆனால் இரண்டான் நிலை தலைப்புகள் (ஒவ்வொரு பதிவிற்குமான தலைப்பு) சரியாக இல்லை."
பார்க்க: http://tamil.navakrish.com/images/manaosai.png
நவன்
இப்படியொரு பிரச்சனை இருப்பது எனக்குத் தெரியாமலே இருந்தது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
இப்போது சரி செய்துள்ளேன். முடிந்தால் பார்த்து இப்போது சரியாக உள்ளதா எனச் சொல்லுங்கள்.
நட்புடன்
சந்திரவதனா
Post a Comment