Monday, June 06, 2005
காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததா - 2
அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது. எனது எதிர்பர்ர்ப்பு மாமாவின் பிள்ளைகளுடனான சந்திப்பும் அதன் பின் தொடரப் போகும் பம்பலைப் பற்றியுமென்றால், அப்பாவின் கோபமோ தான் சொல்லச் சொல்லக் கேளாமல், தன் தங்கையைக் கொழும்புக்குக் கூட்டிப் போன மாமாவின் மேல் இருந்தது.
"எத்தினை தரம் சொன்னனான். கொழும்பு வாழ்க்கை வேண்டாம். நீ போய் வேலையைச் செய்திட்டு லீவுக்கு வா. தங்கச்சியும் பிள்ளையளும் இங்கை இருக்கட்டும் எண்டு. கேட்டவனே?! 58 இலை வேண்டின அடி அவனுக்குக் காணாது. இப்ப என்ரை தங்கச்சியையும் அவதிப்பட வைச்சிட்டான்." இன்று முழுக்க அப்பாவின் புறுபுறுப்பு இப்படித்தான் தொடர்கிறது.
அம்மாவுக்குக் கூட ஆத்தியடிச் சனம் எல்லாம் கொழும்பில் ஒரு வீடு, இங்கை ஆத்தியடியில் ஒரு வீடு என்று வைத்துக் கொண்டு, கொழும்பில் போய் இருந்து பிள்ளைகளை கொழும்புப் பாடசாலைகளில் படிக்க வைப்பதைப் பார்த்து நாங்களும் அப்பிடிச் செய்தாலென்ன என்ற நப்பாசை இடைக்கிடை வரும். அப்பாவோ "இஞ்சை பாரும் உந்த ஆசையை மட்டும் விட்டுத் தள்ளும். எங்கடை இடம் இதுதான். கொழும்பிலை இருக்கிற ஆக்கள் பாரும், ஒரு நாளைக்கு நல்லா வேண்டிக் கட்டிக் கொண்டு ஓடி வருவினம்." என்று ஒரேயடியாச் சொல்லிவிடுவார். தான் கொழும்பில் வேலையாய் இருக்கும் காலங்களிலும் பாடசாலை விடுமுறைக்கு மட்டும் எங்களை அங்கு கூட்டிப் போவாரே தவிர எந்தக் கட்டத்திலும் எங்களை அங்கு நிரந்தரமாக இருக்க விடமாட்டார்.
இப்படியிருக்கையில் தான் யாழ்ப்பாண அரச மருத்துவமனையில் கடமையிலிருந்த மாமாவுக்கு 1971 இல் தெகிவளை மருத்துவமனைக்கு மாற்றலாகியது. மாமா தனியப் போக விரும்பாது மாமி பிள்ளைகளையும் தன்னோடு அழைத்துப் போய் விடத் தீர்மானித்த போதுதான் அப்பா எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார். மாமா கேட்க வில்லை. வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு தெகிவளைக்கு மாமி பிள்ளைகளுடன் போய் விட்டார்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து அல்லும் பகலும் பழகி வளர்ந்த மச்சாள் சுகி, மச்சான் பாபு எல்லோரும் போய் விட்டதில் எனக்கும் கவலைதான். அவர்கள் இன்று வரப்போகிறார்கள். சும்மா இல்லை. அடி வேண்டிக் கொண்டு வருகிறார்கள். சிங்களக் காடையர்கள், இவர்களை அடித்தது மட்டுமில்லாமல் வீட்டிலும் எல்லாவற்றையும் உடைத்துத் தள்ளிப் போட்டார்களாம். எழுபத்தி ஏழுக் கலவரம் தெரியும்தானே! அவதிப் பட்டு, அவலப் பட்டு எங்கேயோ ஒழித்து இருந்து தப்பிப் பிழைத்து வருகிறார்கள்.
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. பல தடவைகள் மதிலால் எட்டிப் பார்த்து விட்டேன். ஆத்தியடிச் சந்தியில் யாராவது பயணத்தால் வருவது தெரிகிறதா என்று.
கடைசியாக அவர்கள் ஒரு பாடசாலை லீவுக்கு வந்து போய் ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. அவர்கள் நின்ற அந்த ஒரு மாதமும் நல்ல பம்பல். விளையாட்டு, சிரிப்பு, கேலி, பந்தயம் என்று ஒரே கும்மாளம். அவர்கள் போறதுக்கு முதல் நாள் அவர்களுக்குக் கொடுத்து விட என்று அம்மா குசினிக்குள் பலகாரங்கள் செய்து கொண்டிருந்தா. அம்மம்மாவும் மாமியும், அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்க அப்பாவும், மாமாவும் கூட இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
பெரியவர்கள் குசினிக்குள் கலகலக்க, நாங்கள் பிள்ளைகள் வீட்டின் முன் பக்கம் மல்லிகைப் பந்தலின் கீழிருந்து விளையாடிக் கொண்டிருந்தோம். எங்கள் விளையாட்டுக்கள் லூடோ, கரம் என்று துவங்கி அது அலுக்க கெந்திப் பிடித்து விளையாடி, அதுவும் களைக்க ஆளாளாக படிகளிலும் விறாந்தை நுனிகளிலுமாகக் குந்தி விட்டோம். வேர்த்து ஊத்தி சட்டைகள் தெப்பமாக நனைந்திருக்க ஆளாளுக்கு ஏதேதோவெல்லாம் கதைத்தோம். எங்கள் கதைகள் எங்கெல்லாமோ சுற்றி கடைசியில் கடவுள் நம்பிக்கை பற்றிய கதையில் வந்து நின்றது. கடவுள் இருக்கிறார் என்றும், இல்லை என்றும் பல விதமாக வாதம் பண்ணினோம்.
மாமாவின் மகன் பாபு அடிச்சு வைச்சுச் சொல்லி விட்டான். "கடவுளும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நான் உதுகளை ஒரு நாளும் நம்பவே மாட்டன்." என்று.
என்னுடைய தம்பி பாலுவால் அவனுடைய நாஸ்திகத் தனத்தை ஆமோதிக்க முடியவில்லை. "என்ன நீ இப்பிடிச் சொல்லுறாய். எங்கடை ஆத்தியடிப் பிள்ளையாரிலை கூட உனக்கு நம்பிக்கையில்லையோ?!" ஆச்சரியமாகக் கேட்டான்.
பாபு "இல்லை" என்று திடமாகப் பதிலளித்தான்.
"உனக்கு உள்ளுக்கை நம்பிக்கை இருக்கு . வெளீலை சும்மா லெவலுக்கு கடவுள் இல்லை எண்டுறாய்." என்று மறுதலித்தான் பாலு.
"எனக்கு நம்பிக்கை இல்லையெண்டுறன். கடவுளே இல்லாத போது ஏன் நான் நம்போணும்?." பாபு அறுத்துறுத்துச் சொன்னான்.
இப்படியே பாலுவுக்கும், பாபுவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டு பந்தயம் வரை வந்து விட்டது. பாபு தனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லை என்பதை நிரூபிக்க, ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்குப் போய் பிள்ளையாரின் மேல் துப்பிவிட்டு வருவதாகத் தீர்மானிக்கப் பட்டு, எங்கள் சம்பாஷணை இடை நிறுத்தப்பட்டுது.
அவர்கள் பிள்ளையார் கோவில் வரை போக ஆயத்தமானார்கள். எனக்கும் போக ஆசைதான். நான் வளர்ந்த பெண் பிள்ளை என்பதால் பாடசாலை தவிர்ந்த நேரத்தில் அம்மாவைக் கேளாது வெளியில் போகத் துணிவு வரவில்லை. எனது சின்னத் தம்பிமாரும், தங்கைமாரும் மட்டும் அவர்களுடன் சேர்ந்து போனார்கள். நான் கேற் வாசலில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
எனது அரை மணி நேரக் காத்திருப்பின் பின் அவர்கள் திரும்பி வந்தார்கள். என்னுடைய முழு நம்பிக்கையும் பாபு சும்மா சொல்லியிருப்பான். ஆனால் கடைசி மட்டும் பிள்ளையாரின் மேல் துப்பியிருக்க மாட்டான் என்பதே.
அந்த நம்பிக்கையுடன் சிரித்த படி "என்ன பாலு...! பந்தயத்திலை பாபுப்பிள்ளை தோத்திட்டாரே?" கேட்டேன்.
"இல்லை நான் தான் தோத்திட்டன்." பாலுவின் குரலில் பந்தயக் காசு கொடுக்க வேண்டுமே என்ற கவலை தெரிந்தது.
"உண்மையா பிள்ளையாருக்கு மேலை துப்பினவனே?" நம்ப முடியாததால் சந்தேகத்துடன் மீண்டும் நான் கேட்டேன்.
"ம்..கும்.. கதவு பூட்டியிருந்தது. அதாலை பிள்ளையாருக்கு நேரே இருக்கிற தலை வாசல் கதவை காலாலை உதைஞ்சு போட்டு, பிறகு கதவிலை துப்பியும் போட்டு வந்தவன்." பாலு கொஞ்சம் அசாதாரணமாகத்தான் சொன்னான்.
"நான் நம்பமாட்டன். எந்தக் காலாலை உதைஞ்சவன்?" என்னிடம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற தீர்க்கமான எந்த முடிவும் இல்லையென்றாலும், கடவுள் இல்லையென்று சொல்லி எங்கள் ஊர் பிள்ளையாரை அவமதிக்க ஒரு போதும் சம்மதமில்லை. அதனால்தானோ என்னவோ என் குரலும் அசாதாராணமாகவே ஒலித்தது.
பாபு வலது காலைத்தூக்கி எங்கள் மதிலை உதைந்து காட்டி, "இப்பிடித்தான் இந்தக் காலாலைதான் உதைஞ்சனான் மச்சாள்." என்றான்.
எனக்கு நம்ப முடியவில்லை. தம்பி பாலு பந்தயக்காசு கொடுக்க வேண்டுமென்று அம்மாவிடம் ஒரு ரூபாவுக்குக் கெஞ்சிய போது கூட இரண்டு பேரும் நடிக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்.
"உண்மையா உதைஞ்சவன் அக்கா." தம்பி என்ரை கையில் அடித்து சத்தியம் பண்ணிய போது தான் நம்பினேன். அதற்குப் பிறகு அன்றைய பொழுது எனக்கு என்னவோ போலவே இருந்தது.
அடுத்த நாள் மாமா குடும்பம் பயணமாகி விட்டது. வழமை போல் அவர்கள் பயணமான அன்றைய நாள், எங்கள் வீடு வெறிச்சோடிப் போனது போல் அமைதியாக இருந்தது. அடுத்த நாள் மீண்டும் நானும் தம்பியும் தனியாக கரம், அது, இது... என்று விளையாடத் தொடங்கி விட்டோம். ஆனால் பாபு செய்த வேலையை மட்டும் மறக்காமல் அடிக்கடி நினைத்தோம் அவன் அப்பிடிச் செய்திருக்கக் கூடாது என்று பலமுறை கதைத்தோம்.
இன்றும் அந்த நினைவு என் மனத்திரையில் பல முறை முகம் காட்டி விட்டது. பாபுவின் பிடிவாதமான முகத்தை நினைத்த படியே மீண்டும் மதிலால் எட்டிப் பார்த்தேன்.
"வாவ்...!" மக்கள் வெள்ளம். எனக்குள் சந்தோஷம் மின்னலிட்டது. அப்பாவின் முகத்திலும் சந்தோஷம். ஆனால் அது ஒரு இனம்புரியாத கோபமும் சோகமும் கலந்த சந்தோஷம்.
நான் ஓடிப்போய் கேற்றைத் திறந்து, மனித வெள்ளத்தை முழுமையாகப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் களைப்பு. நடைகளில் தளர்வு. எல்லோரும் எமது ஊர்க்காரர்கள்தான். அப்பா விழுந்து விழுந்து எல்லோரையும் விசாரித்தார்.
"அநுராதபுரம் மாதிரி கொழும்பிலை அடி விழேல்லைத் தம்பி. சில சில இடங்களிலைதான் சிங்களக் காடையங்கள் இருக்கிறாங்களே. அவங்கள் தங்கடை வேலையைக் காட்டிப் போட்டாங்கள். எனக்குத்தான் காங்கேசன் துறையிலை வந்து இறங்கு மட்டும் ஒரே சத்தி. எனக்கு இந்தக் கப்பல் பயணம் ஒத்து வராது தம்பி." சுந்தரிப்பாட்டி இழுத்து இழுத்து சொல்லிக் கொண்டு போனா.
"அப்ப தங்கச்சியவையளும் உங்கடை கப்பலிலேயே வந்தவை?"
அப்பா அவசரமாய் கேட்டார்.
"ஓமடா தம்பி. அங்கை பின்னுக்குப் பார். வந்து கொண்டிருப்பினம்."
சுந்தரிப்பாட்டி சொல்லி வாய் மூடவில்லை. தூரத்தில் வரும் மாமா என் கண்களுக்குள் அகப்பட்டு விட்டார். பக்கத்தில் கொஞ்சம் பின்னால் மாமி மிக மெதுவாக நடந்து கொண்டு வந்தா.
அது யார் நொண்டியபடி, காலை இழுத்து இழுத்து...? வடிவாகப் பார்த்தேன்.
அட அது பாபு. ஏன் இவன் நொண்டுறான்? ஏதும் விழுந்து கிழுந்து போட்டானோ? நான் யோசித்துக் கொண்டிருக்க, அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.
அப்பா நிம்மதிப் பெருமூச்சோடு அவர்களை உள்ளே அழைத்தபடி "இவன் பாபு ஏன் கிழவங்கள் மாதிரி காலை இழுத்திழுத்து நடக்கிறான். என்ன நடந்தது இவனுக்கு?" மாமியைக் கேட்டார்.
"அதையேன் அண்ணை கேக்கிறிங்கள்? பள்ளிக்கூடத்திலை புற்போல்(Football) விளையாடக்கை முழங்காலுக்கை முறிஞ்சு போட்டுதாம். உடனையே பிரின்சிப்பல்(Principle) ரெலிபோன் பண்ணிக் கூப்பிட்டவர். இவர் போய் ரக்ஸி(Taxi) பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவர். எல்லாம் உடனையே கவனிச்சு ஒப்பிரேசன் எல்லாம் செய்தும் போட்டாங்கள். பிறகுதான் கண்டு பிடிச்சாங்கள். எலும்பு சரியாப் பொருந்தேல்லையெண்டு. திருப்ப ஒப்பிரேசன் செய்யிறதுக்கெண்டு நாளெல்லாம் குறிச்சிருக்கக்கைதான் இந்தப் பிரச்சனையெல்லாம் வந்திட்டுது. டொக்டேர்ஸ்(Doctors) எல்லாரும் ஸ்றைக்(strike) பண்ணீட்டினம். ஒண்டும் செய்யேலாமல் போட்டுது. எல்லாரும் இவற்றை ப்ரெண்ட்ஸ்(Friends) தான். இவருக்காண்டியாவது வந்து செய்யிறம் எண்டு சிலர் சொன்னவைதான். ஆனால் ஸ்றைக்(Strike) எண்ட படியால் ஆஸ்பத்திரியிலை ஒப்பரேசன் செய்யக் கூடிய நிலைமையளும் இருக்கேல்லை. இதைப் பாத்துக் கொண்டு நிண்டு உயிரையே குடுக்க வேண்டி வந்திடும் எண்டு வெளிக்கிட்டிட்டம். அவனுக்குத்தான் எங்களிலை கோவம். நிண்டு ஒப்பிரேசனை முடிச்சிட்டு வெளிக்கிட்டிருக்கலாம் எண்டு வழியெல்லாம் ஒரே புறுபுறுப்பு."
மாமி சொல்லி முடித்ததும், "அப்ப இனி என்ன நடக்கும்?" அப்பா அக்கறையுடன் வினவினார்.
"என்ன... எலும்பை பொருத்திறதெண்டு சொல்லி ஒரு எலும்புக்கு மேலை ஒரு எலும்பை வைச்சு தங்கடை வேலையை முடிச்சிட்டாங்கள். இப்ப எனக்கு இந்த வலது கால் இடது காலை விட நீளத்திலை ஒரு இஞ்சி குறைஞ்சிட்டுது. ஒப்பரேசன் செய்யிறதெண்டால் உடனையே செய்யோணுமாம். நாள் போனால் ஒண்டுமே செய்யேலாதாம். அம்மாக்கும் அப்பாக்கும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தன். கேட்கேல்லை. என்னை இங்கை இழுத்துக் கொண்டு வந்திட்டினம். இனி என்ன? இப்பிடியே வாழ்நாள் பூரா கிழவன்கள் மாதிரி நான் காலை இழுத்து இழுத்து நடக்க வேண்டியதுதான்.
கப்பலுக்குள்ளை கூட சாப்பாடு குடுத்த ஆக்கள் என்னைப் பின் பக்கமாப் பார்த்திட்டு, ஒரு சின்னப் பெடியனைக் கூப்பிட்டு, "அந்தக் கிழவனுக்கு இந்தப் பாணைக்குடு" எண்டு சொன்னாங்கள். "நானொண்டும் கிழவனில்லை. எனக்கு இப்பதான் பதின்னாலு வயசு எண்டு கத்தோணும் போலை இருந்திச்சு." பாபு மிகவும் சலிப்பும் வேதனையும் இழைந்தோடச் சொன்னான். எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
பாலு என்ன நினைத்தானோ, விரைந்து பாபுவின் அருகில் சென்று "நீ பிள்ளையாருக்கு உதைஞ்சதுக்குப் பாத்தியோ கிடைச்சிட்டு." என்றான்.
"காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை சொல்லாதை." பாபு, அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்பதை வலியுறுத்தினான்.
நான் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் பாபு இன்று வரை வலது காலை விட ஒரு இஞ்சி நீண்ட இடது காலை மெதுவாக இழுத்து இழுத்துத்தான் நடக்கிறான்?
அது எதனால்? எனக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம் - பூவரசு (செப்டெம்பர்-ஒக்டோபர்-2002)
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
▼
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
3 comments :
சந்திரவதனா,
நல்ல கதை.
//அது எதனால்? எனக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.//
அட அதுதான் கால்பந்து விளையாடேக்க முறிஞ்சது எண்டு சொன்னாரே?:)
நன்றி முத்து.
வசந்தன்
அது ஏன் சரியாகப் பொருந்தவில்லை.
பொருந்தியிருக்கலாம்தானே!
Post a Comment