Google+ Followers

Thursday, December 15, 2005

அந்தக் காலத்து யாழ்ப்பாணம்


அந்தக் காலத்து யாழ்ப்பாணம் 2005 தைமாதம் அவுஸ்திரேலியா Mellbournஇல் வெளியிட்டு வைக்கப் பட்டது

- மூனா -


"புத்தக வெளியீட்டு விழாவொன்றுக்குப் போறன். நீயும் வரப்போறியோ?" அண்ணன் கேட்டார்.

"என்ன புத்தகம்?"

"அந்தக் காலத்து யாழ்ப்பாணம்" புத்தகத்தின் தலைப்பே புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை இழுத்தது.

புத்தக வெளியீட்டு விழாவிற்கே நான் வந்திருந்தேன். ஆனால் பார்வைக்கு அது பொங்கல் விழாவாக இருந்தது. அதுவும் முதியவர்கள் இணைந்து வழங்கிய பொங்கல் விழா. இருக்கைகளில் ஆறஅமர இருந்தவர்கள், அங்குமிங்கும் ஓடித் திரிந்தவர்கள், வந்தவர்களுக்கு பொங்கல், வடை, பாயசம் வழங்கியவர்கள் என்று எல்லோருமே முதியவர்கள். கண்ணுக்குப் பட்ட இடமெல்லாம் முதிய அலைகளே. மேடையில் நிகழ்ச்சிகளை மட்டும் இளையவர்களே தந்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த பெரிசுகளில் சிலரது பேரப்பிள்ளைகளாக இருக்க வேண்டும்.

புத்தக வெளியீடு என்று அண்ணன் சொன்னார் இது பொங்கல் விழாவாக இருக்கிறதே. ஓருவேளை நிகழ்ச்சியை மாற்றி விட்டார்களா? இல்லை நாங்கள்தான் மண்டபம் மாறி வந்து விட்டோமா? சந்தேகத்துடன் அண்ணனைப் பார்த்தேன். பார்வையிலேயே என் சந்தேகத்தைப் புரிந்து கொண்டார்.

"இது முதியோர் நடத்தும் விழாதான். புத்தகம் எழுதியவருக்கு வயது 83. பொங்கல் விழா முடிய புத்தகம் வெளியிடுவினம்." அண்ணனிடம் இருந்து வந்த பதில் சந்தேகத்தைத் தீர்த்தது. முதியோர்கள் நடாத்தும் ஒரு விழாவில் ஒரு முதியவர் தனது அந்தக் காலத்து நினைவுகளை அசைபோட்டு அரங்கேற்றுவது முற்றிலும் பொருத்தம்தான்.

பொங்கல் விழா முடிந்தவுடன் புத்தக வெளியீட்டுக்கான ஆயத்தங்கள் நடந்தன. மேசைகள், நாற்காலிகள் எல்லாம் மேடைக்கு அருகே போடப்பட்டன. முதியோர்கள் மேடையேறி இறங்க சிரமப் படுவார்கள் என்ற எண்ணத்திலா அல்லது வந்திருந்தவர்களுடன் நெருக்கமாக நின்று புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற காரணத்திலா தெரியவில்லை. நானும் அண்ணனை கேள்வி கேட்டு சிரமப் படுத்த விரும்பவில்லை.

புத்தக வெளியீட்டு விழாவிற்கு சட்டத்தரணி சிறிஸ்கந்தராஜா தலைமை வகித்தார். தனக்கும் தன் மாமன் மகளுக்கும் ஏன் திருமணம் நடைபெறாமல் போயிற்று என்று தனது அந்தக்காலத்து நினைவுகளில் அதிகம் மூழ்கியதால், வெளியிடப்படும் புத்தகத்தைப் பற்றி அதிகம் கதைத்ததாகத் தெரியவில்லை. திடீரென அவர் தனது அந்தக்கால நினைவை விட்டு நிகழ்காலத்திற்கு வந்து புத்தகத்தில் உள்ளதைத் தொட்டுச் சென்றதுடன் சரி.

தமிழில் நன்றாகப் பேச வராது என்பதால் ஆங்கிலத்திலும் ஆய்வு நடந்தது. இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆங்கிலம் பேசும் இளைய தமிழ்ச் சமுதாயமும் அன்றைய எமது வாழ்க்கையை தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என சிலர் கேட்டுக் கொண்டனர். இன்னும் ஒருபடி மேலே போய் இதை இலங்கையில் பாட நூல் ஆக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப் பட்டது.

எழுத்தாளர் முருகபூபதி சிறப்புரை வழங்கினார். முதற் கூட்டத்தில் அவரிடம் கேட்ட ஒரு அரசியற் கேள்விக்கு புத்தக வெளியீட்டு விழாவில் வைத்து பதில் தந்தார். கேள்வி கேட்டவர் தற்சமயம் இந்த மண்டபத்தில் இல்லை ஆனாலும் நான் பதில் அளிக்க வேண்டியவனாக இருக்கிறேன் என்று அவர் கூறியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அப்படியாயின் யாருக்கு அந்தப் பதில்? யாராவது கேட்டுவிட்டு அந்த அன்பரிடம் போய் சொல்வார்கள் என்ற எண்ணத்திலா?

அப்படி இப்படி என்று அந்தக் காலத்து யாழ்ப்பாணம் என்ற அந்த நூலின் ஆய்வு முடிந்து அதன் எழுத்தாளர் சிசு. நாகேந்திரன் தனது உரையில் எல்லோருக்கும் நன்றி சொல்லி, அந்த நூலின் விற்பனை கடற்கோள் அனர்த்தத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான புனரமைப்புக்கு வழங்கப்படும் என அறிவித்த போது அந்த 83 வயது இளைஞனின் பெரிய மனது தெரிந்தது. அந்த இனிய நினைவோடு புத்தகத்தைப் புரட்டிய போது அந்தக்கால யாழ்ப்பாணம் அப்படியே கண்ணில் தெரிந்தது.


நூலை மெதுவாகப் புரட்டிப் பார்த்தபோது உள்ளேயிருந்த ஓவியங்கள் நூலை வாசிக்கும் ஆவலை மேலும் தூண்டின.

சிசு. நாகேந்திரன் அவர்கள் எடுத்த எடுப்பிலேயே குடும்ப உறவுகள் பற்றியே எழுத ஆரம்பிக்கின்றார். குடும்பத்தில் ஆணின் பலம் அன்று எப்படி இருந்தது என்பதை அழுத்திச் சொல்கிறார். இன்று இல்லையென்கிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மாமியார் எப்படி மருமகளிடம் இருந்து குடும்பப் பொறுப்பைக் கைப்பற்றி பேரப் பிள்ளைகளையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வருகிறார் என்ற சூட்சுமத்தையும் சொல்லாமல் சொல்கிறார். ஒரு பட்டியலைப் போட்டு அந்தக் காலத்து சத்துணவு வகைகளை பற்றிச் சொல்லி மனதுக்கு வலுவேற்றுகிறார். உடைகள் என்று வரும்போது, கோவணத்தை எப்படிக் கட்டுவது என்பதை விலாவாரியாகச் சொல்கிறார். நல்லவேளை படம் போட்டு விளக்கத் தலைப்படவில்லை.

அந்தக் காலத்துப் பெண்கள் தலைமயிரை அழுத்தமாக வாரி ஒற்றைப் பின்னல் அல்லது இரட்டைப் பின்னல் போட்டுக் கொள்வார்கள். தலைமயிரை விரித்து விட்டபடி ஒருவரும் திரியமாட்டார்கள். அப்படித் திரிபவர்கள் அநேகமாகப் பைத்தியக்காரிகளாக இருப்பார்கள் என்கிறார். யாரைச் சாடுகிறார்? இன்றைய நாகரீகத்தையா? அல்லது பெண்களையா? ஆசிரியர் துணிச்சல் பேர்வழிதான்.

நான்கு பேர் ஒரு துவிச்சக்கர வண்டியில் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அந்தக் காலத்துக் குறைவான போக்குவரத்து வசதிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது. கதிர்காம யாத்திரிகர்களின் துணிச்சலான யாத்திரைகள், அவர்களை வழியனுப்பும் உறவினர்கள், திரும்பி வருவாரா எனக் காத்திருக்கும் பெண்கள் என பல காட்சிகளை மனதில் பதியவைக்கிறார்.

வெற்றிலையைப் போட்டுவிட்டு எந்த இடமென்று பாராமல் எல்லா இடமும் துப்புபவர்களைக் கண்டு அருவருத்தும், கையில் மீதமான சுண்ணாம்பை கண்ட இடமெல்லாம் பூசுபவர்களை கண்டித்தும் சொல்கிறார். குளியல் பொருட்களைப் பற்றிச் சொல்லும் போது சீகைக்காய், சவர்க்காரங்களுடன் நிறுத்தியிருக்கலாம். இன்றைய குளியலறைப் பொருட்களைப் பற்றிச் பட்டியலிட்டு என்னத்தைச் சொல்ல வருகிறார் என்பதை புரியமுடியவில்லை.
"எடிபிள்ளை! இங்கை வந்து பார்! உன்ரை மோன் என்ன வடிவாய் முத்தத்திலை சித்திரம் வரைஞ்சு வைச்சிருக்கிறான் எண்டு பார்" என்று அந்தக் காலப் பாட்டிமார் பேசிய வார்த்தைகளை மனதில் பதிந்து வைத்து இப்பொழுது எங்களுக்கு எழுதிக் காட்டியிருக்கின்றார்.

வெள்ளைக்காரன் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எங்களவர்கள் பெரிய படிப்புக்கள் படிக்காமல் இருக்க என்னென்ன செய்தான் என்பதைச் சொல்கிறார். 40ரூபா மாதச் சம்பளத்தில் ஒரு குடும்பத் தலைவி 15ரூபா மிச்சம் பிடித்து தனது மகளுக்கு சீதனம் சேர்த்த கெட்டித்தனத்தை மெதுவாகச் சொல்கிறார். தனது தங்கையின் திருமணம் முடியுமட்டும் மணம் செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்த ஆணின் பரிதாப வாழ்க்கை இனி வேண்டாம் என்று கேட்டிருக்கின்றார். குடிமக்கள், சாதிகள், கடன்கழிப்பு ஆகியனவற்றைச் சொல்லி அந்தக்கால மேட்டுக்குடிகளின் வாழ்க்கையை மனநிலையைச் சொல்லிவைக்கிறார். அதேநேரம் மேட்டுக்குடிகளும் சூத்திரர்தான் என்பதையும் சொல்லியிருக்கின்றார்.

சதிர்க் கச்சேரிதான் சின்னமேளமென்று அழைக்கப்பட்டது என்கிறார். நிகழ்ச்சிக்கு நடனமாட இந்தியாவில் இருந்துதான் பெண்கள் வந்தார்கள் என்று குறிப்பிடுகின்றார். வந்தவர்களில் பலர் இங்கேயே தங்கிவிட்டார்கள் என்றும் அதற்கு சாட்சியாக புகழ்பெற்ற நாடக நடிகை கன்னிகா பரமேஸ்வரியைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆட்டைக் கொழுக்க வைத்தால் நல்ல விலைக்கு விற்கலாம் என்ற நினைப்பே தவிர அது தெய்வத்திற்கு நேர்ந்து விட்ட ஆடு என்ற படியால் அல்ல என்று சொல்லி பலி கொடுப்பதைப் பற்றி ஒருபிடி பிடித்திருக்கின்றார். அதே போல் வலது பக்கத்தால் சுவாசம் போய் வந்தால் வெற்றி. இடது பக்கத்தால் சுவாசம் போய் வந்தால் தோல்வி என்ற மூக்குச் சாத்திரத்தின் இரகசியத்தைப் போட்டு உடைத்திருக்கின்றார். மந்திரவாதிகளின் தந்திரங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை.

பெண்கள் ஒடுக்கப் பட்டதை வேதனையுடன் சொல்லியிருக்கின்றார். அதேநேரம் கிடுகு வேலித் துவாரம் தெருப்படலை போன்றவிடயங்களை மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கின்றார். இவரது குடும்பத்தில் பலர் ஆயுர்வேத வைத்தியத் துறையில் சம்பந்தப் பட்டிருப்பதால் அதைப்பற்றி மிகவும் விபரமாகச் சொல்லியிருக்கின்றார். ஒப்பாரிப் பாடலை பாடி வைத்திருக்கிறார். லண்டனில் அன்று இவர் பாடிய ஒப்பாரிப் பாடலுக்கான வரவேற்பையும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார்.

காதுக்கின்னாத கடும் சொற்களுக்கு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறர். அதற்காக 63 திட்டுக்களையும் எழுதி வைத்திருக்கின்றார். காதுக்கினிய சொற்களை அந்தக் காலத்தில் பேசவில்லையா என்ன? "என்ரை குஞ்செல்லே! அடுத்தமுறை எழுதக்கை காதுக்கினிய சொற்களையும் எழுதிவையுங்கோ அப்பு."

தமிழரிடம் அந்தக் காலத்தில் போட்டியும் பொறாமையும் இருந்தது என்கிறார். இதில் என்ன புதுமை? எந்தக் காலத்தில் அது தமிழனிடம் இல்லாமலிருந்தது? மொட்டைக் கடுதாசி போடுவது மட்டுமல்ல காட்டிக் கொடுப்புக்களும் இன்றும் தொடரத்தானே செய்கிறது. சில இடங்களில் அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் ஒப்பீடு செய்து பார்க்கின்றார். அந்த ஒப்பீட்டிற்கு பெண்களேயே அதிகமாக இழுத்திருக்கின்றார். அதன்மூலம் ஓ.. இவரும் அந்தக் காலத்து ஆள்தானே என்று நினைக்க வைக்கிறார்.

சிசு. நாகேந்திரனது எழுத்துக்களில் நகைச்சுவை உணர்வு அதிகம் தெரிகிறது. அது இவரது எழுத்து நடைக்கு மெருகூட்டுகிறது. கலைவளன் சிசு. நாகேந்திரனது அந்தக் கால யாழ்ப்பாணம் நல்லதொரு பதிவாக வந்திருக்கிறது. இவரிடம் இன்னும் பல விசயங்கள் இருப்பதும் புரிகிறது. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும்.

செல்வகுமாரன்(மூனா)

10 comments :

Anonymous said...

முதலாவது படத்திலை பொம்பிளை சிலை உடுத்திருக்கிற விதத்திலை ஒரு விசயம் உதைக்குது. சீலையை முந்தானையைப் போட்டிருக்கும் தோள் வலதோ இடதோ சரி? உங்கை கீறியிருக்கிறது வலது தோட்புறமாய் சிங்களப்பொம்பிளையள் சீலையுடுத்துறது மாதிரியா எல்லோ இருக்குது.

வசந்தன்(Vasanthan) said...

என்னிடமும் அந்தப் புத்தகம் இருக்கிறது. முழுவதும் படிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொட்டுத்தொட்டுப் பார்த்ததுதான். ஆறுதலாகத்தான் வாசிக்கவேணும்.

Chandravathanaa said...

வசந்தன்
வரவுக்கு நன்றி.
புத்தகத்தை வாசித்து விட்டு உங்கள் கருத்தையும் எழுதலாமே?

வணக்கம் Anonym
கருத்தெழுதும் போது பெயரையும் எழுதினால் என்ன? உண்மையான முகத்தோடு கருத்தெழுதப் பயமா?


நிற்க, நீங்கள் குறிப்பிட்ட அந்த சேலை விடயம் பற்றி நானும் யோசித்தேன். புத்தகத்தில் அப்படித்தான் படம் உள்ளது. ஆனாலும் முந்தானை வலது தோளில் போடப்பட்டுள்ளதே தவிர அது சிங்களப் பெண்களின் சேலைக்கட்டு அல்ல.

G.Ragavan said...

அருமையான புத்தக விமர்சனம் சந்திரவதனா. படிக்கும் பொழுதே எழுத்தர் சொல்ல வருவது புரிகின்றது.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

/வணக்கம் Anonym
கருத்தெழுதும் போது பெயரையும் எழுதினால் என்ன? உண்மையான முகத்தோடு கருத்தெழுதப் பயமா?/

ஓமோம். பயங்கரமான பயம் ;-)
இனி எழுதமாட்டேன் --- கருத்து ;-))

அதில்லை; இதையொரு முக்கிய கேள்வியென்று கேட்டுவிட்டோமேயென்று யாராவது நக்கல் அடிக்கக்கூடாது பாருங்கோ. அதுதான் anon கருத்து. ஒரு கேள்வியை நான் கேட்க, அதை வைத்து வேறொரு பதிவிலே ஆராவதொரு பாணிப்பினாட்டு நக்கலடிக்க, அதுக்கு நான் பதிலுக்கு நக்கலடிக்க, சும்மா நாள் வீணெல்லோ? அவ்வளவுதான். அந்தளவுக்கு கடுமெழுத்திலை கேள்வி கேட்குமளவுக்கு அனோன் கொமண்ட் இருந்திருக்குமெண்டு நான் நினைக்கவில்லை.

சரி anonymous comment போடுவதற்கான வசதியைப் பதிவிலே தந்திருக்கிறாரே பாண்டியனின் தீராத சீலைக்கட்டுச்சந்தேகத்தை சபையிலே ஆராவது தீர்த்து வைப்பினமோ எண்டு கேட்டுப்போட்டன்; இனி அந்த அனோனி கொமன்ற் வசதியை நீங்கள் எடுக்காமல் விட்டாலுங்கூட, கொமென்ற் போடமாட்டன். ;-)))

நான் சொன்னது சிங்களப்பெண்களின் சீலைக்கட்டு குறித்து அல்ல, முந்தானையைத் தோளிலே போட்டிருக்கும் பக்கம் குறித்தே. (இலங்கைத்)தமிழ்ப்பெண்கள் வழக்கமாக வலதுதோட்புறமாகப் போடுவதில்லை என்று பட்டது.

வசந்தன்(Vasanthan) said...

ஆகா,
பெயரிலி இன்னும் உலாத்திக்கொண்டு தான் இருக்கிறார்.

Chandravathanaa said...

ராகவன்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

Chandravathanaa said...

பெயரிலி நீங்களா...!

anonymous comment வசதியை விட்டு வைத்திருப்பது என் தவறுதான். விரைவில் எடுத்து விடுகிறேன்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

Chandravathanaa said...

வசந்தன்
நீங்கள் அவுஸ்திரேலியாவின் எந்தப் பகுதியில் இருக்கிறீங்கள்?

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite