Wednesday, March 22, 2006
எச்சரிக்கை - வைரஸ்
தோழியர்களிடமிருந்து Invitation, Talk to you soon! என்ற பெயர்களில்
Hey! Check out this great promotion! We can both get the cool new iPod nano for free!
என்றொரு மின்னஞ்சல் வந்து கொண்டிருக்கிறது. அதிலுள்ள இணைப்பில் வைரஸ் இருக்கிறது.
Thursday, March 16, 2006
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
ஒருவர் தான் செய்ததை திரும்ப அனுபவித்தே தீருவார் என்ற தத்துவம் உண்மையானதா?
நம்பும் படியாகப் பல விடயங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த விஞ்ஞான யுகத்திலும் அதை நீங்கள் நம்புகிறீர்களா?
பலதடவைகள் இது பற்றிச் சிந்தித்திருக்கிறேன். டிசேயின் பதிவு (தனிப்பட்டவளவில் எதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு.) மீண்டும் என்னைச் சிந்திக்க வைத்தது. உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன்.
Tuesday, March 14, 2006
ஆண்கள்...?
வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீடு திரும்புகையில் வீதியில் பனி உறைந்திருந்தது. பாதை வழுக்கியது. காரை ஓட்டும் போது சற்றுப் பயமாக இருந்தது. பக்கத்திலிருந்த ஜேர்மனிய நண்பியிடம் "கனநாள் காரை ஓட்டவில்லை. இன்றைக்கு இந்த வழுக்கலில், அதுவும் இந்த இரவின் இருளில், எதிர் வரும் வாகனங்களின் ஒளிபாய்ச்சல்களுக்கு ஈடு கொடுத்து ஓட்டப் பயமாயிருக்கிறது" என்றேன்.
அவள் "உனக்கென்ன பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். அவர்களை கூட்டிக்கொண்டு போகவும், வரவும் என்று அடிக்கடி இரவில் வாகனத்தை ஓட்ட வேண்டிய தேவை வராது. நானோ தினமும் ஓட்டுகிறேன்." என்றாள்.
"ம்.. தொடங்கி விட்டாயா நீயும்! எனது பிள்ளைகள் என்ன இந்த வயதுக்குப் பாய்ந்து வந்தார்களா? அவர்களும் உனது பிள்ளைகளின் வயதுகளையும் கடந்துதானே வந்தார்கள். அந்த நேரத்தில் நானும் உன்னைப் போலத்தான் இரவு, பகல் என்று பாராது விளையாட்டு, பாடசாலை, சங்கீதவகுப்பு... என்று அவர்களோடு அலைந்தேன். சரி அதை விடு. பிள்ளைகள் வளர்ந்து விட்டால் எமக்கென ஒரு தேவையும் இல்லையா? இரவில் போக வேண்டிய தேவைகள் எனக்கும் வந்ததுதான். ஆனால் எனது கணவரும் கூடவே வந்ததால் அவரையே ஓட விட்டேன்." என்றேன்.
அவள் சிரித்து விட்டு "நானும் அப்படித்தான். எனது கணவன் என்னோடு கூட வந்தால் அவனையே ஓட விட்டு விடுவேன். இங்கை பார்... அவனோடு கார் ஓட்ட முடியாது. பக்கத்தில் இருந்து கொண்டு ஸ்ரியரிங்கைத் திருப்பு, ஹியரைப் போடு.. மெதுவா ஓடு, வேகமா ஓடு.. என்று பிய்ச்சு வாங்கிப் போடுவான். அதுதான் அவன் கூட வந்தான் என்றால், அவனையே ஓட விட்டிடுவேன். என்னால் அவன் தரும் அந்தத் தலையிடியைத் தாங்க முடியாது" என்றாள்.
"ம்.. எலிசபெத்துக்கு(எங்களோடு வேலை செய்பவள்) நடந்தது தெரியுந்தானே. அவள் லைசென்ஸ்சை எடுத்திட்டு புருசனோடை ஓடிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறாள். அவன் கொடுத்த கரைச்சலாலை கார் ஓடறதையே விட்டிட்டாளாம். இப்ப இருபது வருசமாச்சாம். லைசென்ஸ் சும்மா இருக்குதாம். இந்தப் பிரச்சனை உனது கணவனால் உனக்கும், எனது கணவனால் எனக்கும் மட்டுமென்றில்லை. இது ஆண்களோடு கூடப் பிறந்தகுணம்(instinct) என்றேன். அவள் சிரித்துக் கொண்டே அவள் வீடு வர இறங்கிப் போய் விட்டாள்.
அடுத்தநாள் சனிக்கிழமை நானும் எனது கணவரும் கடைக்கு போக ஆயத்தமானோம். வழமைக்கு மாறாக எனது கணவர் "நீயே இண்டைக்கு டிரைவிங்கைச் செய்." என்றார்.
சரி என்று நான் தொடங்கினேன். பனிமழை தூறிக் கொண்டிருந்தது.
இடைவிட்டு வேலை செய்யும் விதமாக வைப்பரைப் போட்டேன். இரண்டு நிமிடங்கள் கூடப் போயிராது. கணவர் சொன்னார் "வைப்பரை நிற்பாட்டு. சிலோவா ஓடு...." எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. நேற்று கோர்ணியுடன் நடந்த சம்பாஷணையைச் சொன்னேன். எனது கணவருக்கு வந்ததே கோபம்.
"இந்த மூக்குநுனிக் கோபம் கூட ஆண்களோடு கூடப்பிறந்த குணமோ?" என்று கேட்பது அந்த நேரத்தில் புத்திசாலித்தனமான கேள்வியாகப் படவில்லை. அதனால் அவர் பொரிந்து தள்ள முன்னம், ஸ்ரியரிங்கோடு சேர்த்துக் கதையையும் வேறு பக்கத்துக்குத் திருப்பினேன்.
சந்திரவதனா
14.3.2006
படித்ததில் பிடித்தது+பாதித்தது
- மதுரன் -
வீரக்காய் ஆயயிலே
வீழாத வீரம் பேசி
என்னையும் ஆய்ந்தவனே
நாவல் காய் ஆயயிலே
நல்ல நண்பி நீ எனக்கு
என நா பிறழாது உரைத்தவனே!
காரை முள் குத்தி கடுப்பில்
நான் அழுது துடிக்கையிலே
உன் நெஞ்சு தச்சதைபோல்
உருகி அழுதவனே!
கார்த்திகை பூ பறிக்கையிலே
காதோரம் வந்து சொன்னேன்,
பேதை என் மனதில் காதல்
பூத்ததென்று.
பூ போன்ற மென்மையான உன் மனதோ
பூகம்பம் நிகழ்ந்ததை போல
ஈச்சம் பழம் ஆயயிலே
இரும்பைப்போல் உரத்துச் சொன்னது.
ஈழத்தை காதலிக்கும் காளை உன் மனதில்
ஒருத்திக்கும் இடமில்லை என்று.
இயம்பிய வார்த்தைக்கு ஒப்ப
களமாடி நின்றாய்.
ஆனால் இன்று
வீரம்பழம் பழுத்திருக்கு
நாவல் பழம் நிறைந்திருக்கு
கார்த்திகையும் படர்ந்திருக்கு.
நீ மட்டும் கார்த்திகைப்பூ
அலங்கரிக்க கல்லறையில்
உறங்குகின்றாய்.
காவியனே எங்களின்
சந்ததிக்காய், களமாடும்
மங்கை என நானுமிங்கே...
- மதுரன் -
நன்றி - யாழ்.கொம்
Monday, March 13, 2006
கண்டு கொள்ளப் படாத பாடல்
ஓரிரு வாரங்களுக்கு முன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் மகாநதி திரைப்படம் ஒளிபரப்பானது. ஏற்கெனவே பார்த்த படம்தான். ஆனாலும் பிடித்த படமென்பதால் மீண்டும் ஒரு முறை பார்த்தேன். முன்னர் பார்த்த போதிருந்த தாக்கம் தற்போது ஏற்படவில்லையாயினும் நீண்ட நாட்களின் பின் நித்திரை கொள்ளாமல் இருந்து, ஒரு திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து முடித்தேன்.
இப்படத்திலே வரும் பாட்டுக்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்திருந்தன. ஆனாலும் இப்பாடலை யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
துவக்கம் எங்கே
இது வரை சரிவரப் புரியவில்லை
துவக்கம் எங்கே
இது வரை சரிவரப் புரியவில்லை
துவங்கியதை
தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை
புதிர்களும் புதுக்கவி புனைந்திட
நெருங்கிட என் மனம் மருகிட
மயங்குதே கலங்குதே
சொல்லின்றியே தயங்குதே
அலைகள் எழுந்து
கரைகள் கடந்து....
குற்றம் செய்யாமலே ஜெயிலுக்குச் சென்று விட்ட கமலகாசனை சுகன்யா சந்திக்கும் காட்சி இது. கமலகாசன் ஜெயிலுக்குள்ளும் சுகன்யா வெளியில் பார்வையாளருமாக...
எதுகை மோனையுடன் அழகான வார்த்தைக் கோர்ப்புகளும், இதமான சந்தமும் கூடிய பாடல். ஆனால் இப்பாடலைப் பலருக்குத் தெரியாது. எந்த வானொலியிலும் இப்பாடலை விருப்பப்பாடலாக யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. படத்தில் வரும் மற்றைய பாடல்களில் சில, பலரது கவனத்துக்கு உள்ளானதால் இது கவனத்தில் இருந்து தவறி விட்டதோ?
படம் - மகாநதி(1994)
பாடியவர்கள் - S.P.பாலசுப்பரமணியம்+ ஜானகி
துவக்கம் எங்கே
இது வரை சரிவரப் புரியவில்லை
துவங்கியதை
தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை
புதிர்களும் புதுக்கவி புனைந்திட
நெருங்கிட இரு மனம் மருகிட
மயங்குதே கலங்குதே
சொல்லின்றியே தயங்குதே
அலைகள் எழுந்து
கரைகள் கடந்து....
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன
எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புதுயுகம் அரும்புமோ
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
காவல் வைத்தாலும் உன்மீது
ஆவல் கொண்டாடும் உள்ளம் உள்ளம்
காலம் கைகூடும் என்றெண்ணி
காதல் கொண்டாடும் எண்ணம் எண்ணம்
கூண்டில் என் வாசம் என்றாலும்
மீண்டும் நான் வந்தால் அந்நேரம்
வேண்டும் நான் வாழ உந்தன் நெஞ்சம்
வானம் நின்றாலும் சாய்ந்தாலும்
வையம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பாவை பெண்பாவை உந்தன் தஞ்சம்
ஜீவன் வெவ்வேறு ஆகாமல்
ஜென்மம் வீணாகிப் போகாமல்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புதுயுகம் அரும்புமோ
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன
நாட்கள் ஒவ்வொன்றும் துன்பம்
தூக்கம் இல்லாமல் செல்லும் செல்லும்
வீசும் பூந்தென்றல் உன்பாட்டை
நாளும் என் காதில் சொல்லும் சொல்லும்
பாரம் நெஞ்சோரம் என்றாலும்
ஈரம் கண்ணோரம் என்றாலும்
உள்ளம் உன் பேரைப் பாடும் பாடும்
நேசம் எந்நாளும் பொய்க்காமல்
நெஞ்சைத் துன்பங்கள் தைக்காமல்
நாளை பொற்காலம் கூடும் கூடும்.
நெஞ்சில் எப்போதும் உன் எண்ணம்
கண்ணில் எந்நாளும் உன் வண்ணம்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன
எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன
சந்திரவதனா
Saturday, March 11, 2006
படித்ததில் - பாதித்தது
பதிவுகளில் புதியமாதவியின் புதிய ஆரம்பங்கள் சிறுகதையைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.
இது ஒரு சிறுகதையானாலும் இன்னும் பஞ்சாப் மாநிலத்தின் மன்சாம் மால்வா பகுதிகளில் நடக்கும் உண்மைகளைக் கருவாகக் கொண்டே இது எழுதப் பட்டுள்ளது.
..யோசிச்சுப் பார். எங்கள் அண்ணன் தம்பிக்கே இதிலே ஒன்னும் சங்கடமில்லைன்னா உனக்கென்ன வந்தது.. நானா இருந்தா என்னா என் தம்பிமாரா இருந்தா என்ன சொல்லு. திரெளபதி இருக்கலையா ஐந்து பேருக்கூட..' அவன் சொல்லிக்கொண்டே இருந்தான். அவள் அழுதுக்கொண்டிருந்தாள். மறுநாள் அவன் லாரியை எடுத்துக்கொண்டு லோடு ஏற்றிக்கொண்டு பீகார் போய்விட்டான். அவள் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் அன்றிரவை எண்ணிப் பயந்து கொண்டிருந்தாள்.
இந்த 21ம் நூற்றாண்டிலும் திரௌபதிகள் போன்று பெண்கள் வாழுகிறார்கள் என்ற போது மனதை என்னவோ செய்கிறது.
Wednesday, March 08, 2006
பெண்ணே!

நெருப்பாயும் வேண்டாம்
செருப்பாயும் வேண்டாம்
உனது இருப்பு
உனது விருப்போடு
உனதாய் இருக்கட்டும்
சந்திரவதனா
8.3.02
சில புல்லுருவிகள்
அவளுக்கு 35வயது. ஜேர்மனியப் பெண். ஏறக்குறைய மூன்று வருடங்களின் முன் ஒரு நாள். வேலைக்கு வந்தவள் சாதாரணமாக இருக்கவில்லை. பைத்தியம் பிடித்தவள் போல் நடந்து கொண்டாள். ஏதோ ஒரு துயரம் அவளை வாட்டுவதை அறிந்து கொண்டு அவளை நெருங்கினேன். மிகுந்த சோகமாகத் தெரிந்த அவளின் மனதைத் திறப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. நீண்ட பிரயத்தனங்களின் பின் சோகம் அணை உடைத்துக் கண்ணீராய்ப் பாய அவள் சொல்லத் தொடங்கினாள்.
நேற்று நான் வேலை முடிந்து வீட்டுக்குப் போன போது வீட்டு வாசலில் பொலிஸ் கார்கள் நின்றன. என்னவோ ஏதோ என்று மனசு படபடக்க அவசரமாய் உள்ளே நுழைந்தேன்.
உள்ளே எனது கணவர் ஒரு குற்றவாளி போல நிற்க அவரிடம் இருந்து சில வாக்குறுதிகளைப் பொலிசார் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் இரண்டு பெண்களும் அங்கு நின்றார்கள். எனது ஏழு வயதுப் பிள்ளை மிகைலாவும், ஐந்து வயதுப் பிள்ளை தன்யாவும் அழுத விழிகளுடன் இருந்தார்கள். பயம் அவர்கள் முகங்களில் அப்பியிருந்தது. எனக்கு அங்கு என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை. எனது மூத்த மகள் ஓடி வந்து "மம்மா மம்மா" என்ற படி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அங்கு நின்ற இரு பெண்களும் என்னை மிகவும் அநுதாபமாகப் பார்த்தார்கள்.
நான் என் மகளை அணைத்த படி மெதுமெதுவாக அவர்களை நெருங்கினேன். "என்ன இங்கே நடக்கிறது?" என்று கேட்டேன்.
அவர்கள் என் கைகளைப் பிடித்து மெதுவாக இருக்க வைத்தார்கள். பின்னர் "நீ ஒன்றுக்கும் பயப்படாதை. எல்லாம் நல்ல படியா நடக்கும். உனது கணவன் உனது பிள்ளைகளுடன் தவறான முறையில் நடந்துள்ளதாகச் சந்தேகிக்கிறோம். அதனால் இன்று உன் பிள்ளைகளை எம்முடன் அழைத்துச் செல்கிறோம். விசாரணைகள் முடிந்ததும் பிள்ளைகளைத் திருப்பித் தந்து விடுவோம்." என்றார்கள்.
நான் அதற்குச் சம்மதிக்க மறுத்தேன். "பிள்ளைகள் இல்லாமல் என்னால் தூங்க முடியாது" என்று கதறினேன். அவர்கள் என்னை ஆறுதல் படுத்திச் சென்றார்கள்.
ஆனால் என்னால் ஆறுதல் பட முடியவில்லை. அவர்கள் போன பின் "என்ன நடந்தது?" என்று கேட்டு எனது கணவனைக் கரைச்சல் படுத்தினேன்.
"பிள்ளைகள் மிகவும் கரைச்சல் தந்தார்கள். அதனால் அவர்களை அடித்து விட்டேன். பிள்ளைகள் கத்திய சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுக் காரர் ரெலிபோன் பண்ணி பொலீசைக் கூப்பிட்டு விட்டார்கள்" என்று எனது கணவன் கூறி "நீ இப்போ அமைதியாகப் படு" என்றார். என்னால் தூங்க முடியா விட்டாலும் நான் எனது கணவனின் கூற்றை நம்பினேன்.
இன்று அதிகாலையே எழுந்து பொலிஸ்ஸ்டேசனுக்குப் போகத் தயாரானேன். "இப்ப என்னத்துக்குப் பொலிஸ் ஸ்டேசனுக்குப் போகோணும். பேசாமல் வீட்டிலை இரு" என்று சொல்லி என் கணவர் என்னை மூர்க்கத் தனமாகத் தடுத்தார். எனக்கு அடித்தார். அவரது செயல் எனக்கு சற்று வித்தியாசமாகவே பட்டது.
நான் அவரை எதிர்த்துக் கொண்டு போய் விட்டேன். பொலிஸ் ஸ்டேசனிலிருந்து என்னை குழந்தைகள் நலன் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் சொன்ன செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது.
அவர்கள் "உனது கணவன், அதாவது உனது குழந்தைகளின் தந்தை தனதும் உனதுமான பிள்ளைகளைப் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உட் படுத்தியிருக்கிறான். தினமும் நீ வேலைக்குச் சென்ற பின் உனது பிள்ளைகள் அவலமாகக் கத்துவதை பக்கத்து வீட்டார் அவதானித்துள்ளார்கள். நேற்றும் அது நடந்திருக்கிறது. உடனடியாகப் பக்கத்து வீட்டவர்கள் எம்மை அழைத்து விட்டார்கள். பிள்ளைகள் இருவரையும் நேற்றிரவே மருத்துவப் பரிசோதனைக்கு உட் படுத்தினோம். அவர்கள் சிதைக்கப் பட்டிருப்பது நிரூபணமாகியுள்ளது" என்றார்கள். அவர்கள் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.
"பொய்" என்று கத்தினேன். "எந்தத் தகப்பனும் தன் சொந்தப் பிள்ளைகளுடன் இப்படி நடந்து கொள்ள மாட்டான்" என வாதிட்டேன். "என் பிள்ளைகளை என்னிடம் திருப்பித் தந்து விடுங்கள்" என்று கதறினேன்.
அவர்கள் "உன் பிள்ளைகள் தற்சமயம் உடலால் மட்டுமல்ல. மனதாலும்
சிதைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களை எக் காரணம் கொண்டும் தற்சமயம் உன்னிடம் தரமுடியாது. முதலில் அவர்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டும். அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குணமடைய வேண்டும். அடுத்து உன் கணவனால் உனது குழந்தைகளுக்கு ஆபத்து. ஆதலால் நீ உன் கணவனை விட்டுத் தனிய இருக்கும் பட்சத்தில் மட்டுமே
உனது குழந்தைகள் உன்னிடம் தரப்படுவார்கள்" என்று திட்டவட்டமாகச் சொன்னார்கள்.
மேலும் அவர்கள் சொன்னவற்றையெல்லாம் பார்த்த போது என் கணவன் தவறு செய்திருப்பது நிரூபணமாகியுள்ளது. எனது கணவன் லோயரை நாடியிருப்பதால் அவர்களால் எனது கணவனை உடனடியாகத் தண்டனைக்கு உட்படுத்த முடியவில்லை.
என்னால் எதையும் நம்ப முடியவில்லை. ஒரு தந்தை தனது பிள்ளைகளுடன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வானா? இந்த சம்பவத்தின் பின் தான் நான் வீட்டில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களையும் அசை போட்டுப் பார்த்தேன். எனக்குத் தெரியாமலே என் வீட்டில் சதி நடந்திருக்கிறது. எத்தனையோ கதைகளில் வாசித்திருக்கிறேன். படங்களில் பார்த்திருக்கிறேன். அதுவே என் வீட்டுக்குள் என்ற போது நான் ஆடிப் போய் விட்டேன். அதுவும் என் கணவன், என் அன்புக்கும் ஆசைக்கும் உரியவன் இப்படியொரு செயலைச் செய்தானென்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. நான் என் கணவனை விட்டுப் பிரிவதென்பது உறுதியாகி விட்டது.
ஆனால் என் கணவனால் எனக்குக் கிடைத்த இந்த அதிர்ச்சி என்னை விட்டுப் பிரியும் என்று நான் நினைக்கவில்லை.
அவள் சொன்ன விடயங்கள் என்னையும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. அவள் மனதைத் திறந்து பார்த்ததற்காக மிகவும் வருந்தினேன். என்னாலேயே அவளின் ஏமாற்றத்தைத் தாங்க முடியாதிருந்தது.
அப்போது இவைகளெல்லாம் ஐரோப்பிய சமூகங்களில்தான் நடைபெற முடியும் என நினைத்துக் கொண்டேன். எமது சமூகத்தில் நடந்த இந்த சம்பவத்தைச் சந்திக்கும் வரை.
Tuesday, March 07, 2006
பெண்களும் தற்கொலைகளும்
தற்கொலை, மனஅழுத்தம் இவைகளுக்கிடையில் நிறைந்த தொடர்புகள் இருப்பதால், வெளிநாடுகளில் தமிழர்களிடையே நடைபெறும் அனேகமான தற்கொலைகளுக்கு மனஅழுத்தம் என்ற ஒன்று காரணமாக்கப் பட்டு மற்றவைகள் எல்லாம் மறைக்கப் பட்டு விடுகின்றன.
தற்போது கனடாவில் நடந்த சம்பவம் பலரது மனதையும் உலுக்குவதாய் உள்ளது. ஒரு இளம்பெண் தனது இரு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் அமுக்கிக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.
குழந்தை பெற்றவுடன் சில தாய்மாருக்கு வரும் postpartum depression தான் அவரது அந்த முடிவுக்குக் காரணம் என அனேகமான எல்லோரும் நம்பி விட்டார்கள். உண்மை அதுவாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அந்தப் பெண் அப்படியொரு கொடுமையான முடிவை ஏன் எடுத்தார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றே. வீட்டில் என்ன பிரச்சனை நடந்ததோ? என்ன இம்சைப் பட்டாளோ? இதெல்லாம் postpartum depression க்குள் மறைக்கப் பட்டு விட்டன.
இது இந்த மரணத்தில் மட்டுந்தான் என்றில்லை. புலத்தில் நடக்கும் அனேகமான தற்கொலை மரணங்களுக்கு மிகச் சாதாரணமாக இப்படியான ஏதாவது காரணங்கள் கூறப்பட்டு, அதனால் வந்த மனஅழுத்தம் என்று நிரூபிக்கப் பட்டு உண்மை மறைக்கப் பட்டு விடுகிறது.
இங்கு ஜேர்மனியில் சில வருடங்களுக்கு முன் ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் இரண்டாவது மாடியின் ஜன்னலில் துணியைக் கட்டித் தொங்கி தற்கொலை செய்து கொண்டாள். தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதைத் தாங்க மாட்டாமலே அவள் அதைச் செய்தாள். ஆற்றாமையில் பல தடவைகள் அந்த வீட்டில் கீழே இருந்த தமிழ்க் குடும்பத்திடம் கணவனின் செய்கை பற்றிக் கூறி அழுதிருக்கிறாள். அவர்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவளது தாய் தந்தையர் சகோதரரும் ஊரில். தாங்க முடியாத ஒரு பொழுதில் அந்த முடிவை எடுத்து விட்டாள்.
அதன் பின் அந்தக் கணவன் தேவதாஸ் வேடம் போட்டுக் கொண்டு எல்லோருக்கும் சொன்னது "அவ பாருங்கோ சரியான நல்லவ. ஆனால் வெளிநாடுகளிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்..... "
எல்லோரும் நம்பி விட்டார்கள்.
சந்திரவதனா
7.3.2006
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
▼
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )