கொக்கான் வெட்டுதல்

மார்பிளை
இரண்டு தரம் தரையில் மோத விட்டாலோ,
நிலத்தில் சுட்டு விரல் படா விட்டாலோ,
மார்பிளை பிடிக்காமல் விட்டாலோ,
பிடிக்கும் போது கைகளுக்குள் உள்ள கற்களில் ஒன்று கீழே விழுந்து விட்டாலோ ஆள் அவுட்.
எந்தக் கட்டத்திலும் மார்பிள் இருதரம் தரையைத் தொடக் கூடாது.
இரண்டாவதாக,
மார்பிளை மேலெறிந்து விட்டு கற்களைக் கீழே நிலத்தில் போட வேண்டும். மார்பிள் நிலத்தில் வீழ்ந்து மேலெழுந்ததும் இரண்டு கற்களை எடுத்து விட்டு மார்பிளை ஏந்த வேண்டும். இரண்டு கற்களை எடுக்கும் போது மற்றைய இரண்டு கற்களிலும் விரல்கள் பட்டு விடக் கூடாது. மீண்டும் மார்பிளை மேலெறிந்து... மற்றைய இரண்டு கற்களையும் அதே முறையில் எடுக்க வேண்டும்.
மூன்றாவதாக,
இரண்டாவது முறை போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் எடுக்கும் போது ஒவ்வொரு கல்லாக இரண்டு கற்களை எடுக்க வேண்டும். மீண்டும் அதே போல மற்றைய இரண்டு கற்களையும் எடுக்க வேண்டும். கற்களை எடுக்கும் கையாலேயே மார்பிளையும் ஏந்த வேண்டும். ஏந்தும் போது மார்பிள் கற்களில் பட்டு நிலத்தில் வீழ்ந்து விட்டாலோ கற்களில் ஏதாவது வீழ்ந்து விட்டாலோ ஆள் அவுட்.
நான்காவதாக,
இரண்டாவது மூன்றாவதைப் போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் கற்களை எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும்.(இதன் போது கற்களைச் சிதற விடாமல் ஒன்றாக நிலத்தில் போடுவது நல்லது.)
ஐந்தாவதாக,
கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மார்பிளை ஏந்த வேண்டும். இதன் போது கொஞ்சம் விரைவு காட்டா விட்டால் மார்பிளை விட்டு விடுவீர்கள்.
ஆறாவதாக,
நான்காவது முறையைப் போல நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். கற்களை எடுக்கும் போதும் நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும். ஆனால் கற்களைப் போடும் போதோ, அள்ளி எடுக்கும் போது மார்பிளை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.
ஏழாவதாக,
ஐந்தாவது முறையைப் போல கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும்.
ஆனால் ஆறாவதைப் போல, கற்களைப் போடும் போதோ, சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்கும் போதோ மார்பிளை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.
எட்டாவது, (பழம்)
கற்களையும் மார்பிளையும் ஒன்றாக மேலெறிந்து புறங்கையில் ஏந்த வேண்டும். ஐந்தையும் ஏந்தி விட்டால் மீண்டும் அந்த ஐந்தையும் ஒன்றாக மேலெறிந்து உள்ளங்கையில் ஏந்த வேண்டும். பிடித்து விட்டால் ஐந்து புள்ளிகள். புறங்கையிலும் ஏந்தி, ஒன்றிரண்டு தரையிலும் வீழ்ந்து விட்டால் புறங்கையில் ஏந்தியதை மீண்டும் மேலெறிந்து அது கீழே வருவதற்கு இடையில் தரையில் வீழ்ந்ததையும் எடுத்துக் கொண்டு மேலெறிந்ததையும் ஏந்தி விட வேண்டும். புறங்கையில் எத்தனை கற்கள் வந்ததோ அத்தனை புள்ளிகள். எறிந்து ஏந்தும் போது ஒன்று தவறி வீழ்ந்தாலும் ஆள் அவுட்.
ஒவ்வொரு முறையும் ஒருவர் அவுட்டானால் அடுத்தவர் தான் அவுட்டான இடத்திலிருந்து தொடர வேண்டும்.
இது எமது கிராமத்திலும் பாடசாலையிலுமாக விளையாடப்பட்ட முறை.
சந்திரவதனா
9.4.2006
6 comments :
சந்திரவதனா, இப்பொழுது நீங்கள் விக்கிபீடியா உறுப்பினர்களாக இருக்கிறீர்கள்.
இத்தகைய விடயங்களை அங்கேயும் பகிர்ந்துகொல்ளலாமே?
இவ்வாறான கட்டுரைகள் விக்கிபீடியாவுக்கு நிறைய தேவைப்படுகிறது.
நன்றி மயூரன்! போடும் எண்ணம் இருக்கிறது.
ஏற்கெனவே ஒன்று இணைத்துள்ளேன். இவைகளையும் சரியாக ஆங்கிலச்சொல் கலப்பின்றி திருத்தி விட்டு இணைப்பதாக எண்ணம்.
கொக்கான் வெட்டுவதில் எங்கள் ஊரில் மாபிள் பாவித்த ஞாபகமில்லை. ஐந்தும் கற்களே. நீங்கள் சொல்வதுபோல் மார்பிள் ஒருமுறை நிலத்தில் பட்டு எழும்புவதென்றும் இல்லை. எறிந்தகல் கீழே வரமுதல் அனைத்தும் நடக்க வேண்டும்.
இப்பத்தான் எனக்கு ஞாபகம்.
வசந்தன் சொல்வது போலத்தான் எங்கள் பக்கமும். ஆனாலும் ஊரூருக்கு வேறுபடலாம்.
அது சரி....இந்தப் படத்தை எங்கே பிடித்தீர்கள். மிகவும் அழகாக இருக்கிறது.
யோகன்,
உங்கள் எண்ணம் சரிதான். எங்கள் பிள்ளைகள் இனி இவைகளை விளையாடுவார்கள் என்று நான் எண்ணவில்லை. நாங்களே விளையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. ஆனால் இவைகள் எங்கள் பாராம்பரிய விளையாட்டுக்கள். பதிவாக இருப்பது நல்லதே.
வசந்தன்
நீங்கள் சொல்வது போல நிலத்தில் மார்பிளை படவிடாமலும் சில சமயங்களில் விளையாடியிருக்கிறோம்.
ரகாவன்
அது மூனாவின் கைவண்ணம்.
Post a Comment