தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
ரோச்சைப் பிடித்து நேரத்தைப் பார்த்தேன். 3.30 மணி. இங்கு வந்த பின் இப்படித்தான். வேளைக்கே விழிப்பு வந்து விடுகிறது. இன்று இன்னும் வேளைக்கு. இயற்கையின் சலசலப்புகள்தான் என்னை அருட்டினவோ!
மெதுவாக எழுந்து மெத்தை இல்லாத மரக்கட்டிலில் முட்டுக்காலில் இருந்த படியே மரச்சட்டங்களினூடே வெளியில் பார்த்தேன். விடியலுக்கான அறிகுறியாய் இருள் விலகியும் விலகாமலும் மங்கிய பொழுது. வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனம் அமைதியாக உறங்கிக் கிடந்தது.
எனது அறைக்கு முன்னால் கேற்வாசல் மூலையோடு நிற்கும் பருத்த பெரிய ஒற்றை ஆண்பனை ஆடாமல் அசையாமல் அழகாய் கம்பீரமாய் எழுந்து நின்றது.
போரின் அனர்த்தங்களால் பொலிவிழந்து ஆங்காங்கு குழி விழுந்து வாடிப் போயிருக்கும் ஏ9 வீதியில் கடாமுடா என ஏறி இறங்கிச் செல்லும் வாகனங்கள் வீசிச் செல்லும் ஒளி வெள்ளத்தில், கேற்றுக்கு வெளியே மதிலோடு ஏ9 பாதையின் ஓரமாக நிமிர்ந்து நின்ற அறிவிப்புப் பலகையில் உள்ள வெண்புறாச் சின்னமும், வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனம், கிளிநொச்சி பிராந்தியச் செயலகம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த வாசகங்களும் மின்னி மின்னி மறைந்தன.
நேற்று வரை மூடிய படியே கிடந்த பாழடைந்த எதிர் வீட்டில் இன்று ஒரு வகை உயிர்ப்புத் தெரிந்தது. மோட்டார் சைக்கிள் ஒன்று வாசலில் நின்றது. திறந்த கதவினூடே ஒரு பெண்ணின் அசைவுகள் தெரிந்தன. இடம் பெயர்ந்து போன வீட்டுச் சொந்தக்காரர் மீண்டுள்ளனர் என்பது புரிந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு ஒரு கடை முளைத்திருக்கும். நான் வந்த சில நாட்களுக்குள் இந்த வீதிகளில் முளைக்கும் புதிய புதிய கடைகள் என்னை அப்படித்தான் எண்ண வைத்தன.
பக்கத்துக் கோயிலில் வேர் பரப்பி, விழுது விட்டு, குடை விரித்திருக்கும் அழகிய அரச மரத்தின் கிளைகள் எனது அறையின் தகரக் கூரையில் உரசும் சத்தத்தை விட, அதிகாலையிலேயே குதித்துக் கொண்டும், இறகைச் சிலுப்பிக் கொண்டும் மற்றவர்களைத் தொந்தரவு பண்ணுகிறோமே..! என்ற எந்தப் பிரக்ஞையுமின்றி தமக்கு மட்டுந்தான் இந்தப் பிரபஞ்சம் சொந்தம் என்பது போல கரைந்து கொண்டிருந்த காகங்களின் சத்தம் அதிகமாகவே இருந்தது.
இவையெல்லாவற்றையும் மீறி எங்கிருந்தோ விட்டு விட்டு ஒலித்த அந்தச் சத்தம் என்னைத் தன்பால் ஈர்த்தது. "அது வானொலியா...!" "இந்த நேரத்தில் எந்த வானொலி...!" எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடும் முனைப்பில்... கேட்கும் திறனையெல்லாம் ஒன்று கூட்டி, ஒரு நிலைப் படுத்தி கூர்ந்து கவனித்தேன். அது வானொலியல்ல. ஒலி பெருக்கி.
எங்கோ தொலைவிலிருந்து காற்று அள்ளி வந்த அந்தத் துண்டுத் துண்டு வாக்கியங்களைக் கோர்த்துப் பார்த்ததில், சிறார்களைப் பள்ளிக்கு அழைப்பது தெரிந்தது. அழியாத செல்வமாம் கல்வியைப் பற்றி குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் விளக்கும் அவசரம் தெரிந்தது. கல்வியின் மகத்துவம் விளக்கப் பட்டது. எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வராமல் இருந்து விடக் கூடாது என்ற கரிசனம் தெரிந்தது. தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் UNICEF நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிராமிய கல்வி பொருளாதார நிறுவனம் நடைமுறைப் படுத்தும் அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது பயன் படுத்தி விட வேண்டுமென்ற அக்கறை தெரிந்தது.
இந்த அக்கறை, மனிதம் மீதான இந்தக் கரிசனம் வன்னிக்குள் எங்கும் ஒட்டியிருந்தது. சிதைக்கப் பட்ட ஒரு பூமியில் நம்பிக்கை விதை நல்லெண்ணத்தோடு விதைக்கப் பட்டு செழிப்போடு வளர்ந்திருந்தது. அந்த நிர்வாகத்திறன் என்னை வியக்க வைத்தது.
கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி வன்னிமண் செப்பனிடப் பட்டிருந்தது. நான் நினைக்கிறேன் இலங்கையிலேயே கூடுதலான அங்கவீனர்கள் வன்னியில்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால் வன்னி அவர்களை வீதியில் வீசி எறியாமல் தன்னோடு அணைத்து வைத்திருந்தது. ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்தது.
இந்த மனிதத்தனம், இந்த மனிதநேயம், மக்களோடான இந்த நட்பு, மக்களின் எதிர் காலத்தின் மீதான இந்த அக்கறை இவைதான் என்னுள் சந்தோசப் பிரவாகத்தையும் அளவிலாப் பிரமிப்பையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தன. போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பது தெரிந்தது.
தாயக விடுதலைக்காய் தோள் கொடுத்த, கால் கொடுத்த, கை கொடுத்த... போராளிப் பிள்ளைகளைச் சந்திக்கும் போதெல்லாம் வன்னியின் இப்படியான நடப்புக்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஆச்சரியம் பற்றிப் பேசினேன். அதனால் ஏற்பட்டிருக்கும் இன்பத் திணறல் பற்றிப் பேசினேன். இவையெல்லாவற்றையும் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன் மிக்க அண்ணனைப் பற்றிப் பேசினேன்.
"அண்ணன்" அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.
வாய்க்கு வாய் "அண்ணை" என்றும் "அண்ணன்" என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளை விட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து தளிர்த்து சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. "நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்கு உரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்." எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.
நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், அது எனது ஆசை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளாதபடி, பொதுவாகக் கேட்பது போல் "அண்ணனை யாருக்காவது சந்திக்கும் வாய்ப்பிருக்கா..?" என்று கேட்டுப் பார்த்தேன்.
எல்லோரிடமிருந்தும் "அண்ணன் இப்ப பிஸியாக இருக்கிறார். முடியாது." என்ற பதில்கள்தான் வந்தன. "எத்தனையோ பேர் வந்து காத்திருந்து விட்டுப் போய் விட்டார்கள்." என்றும் சொன்னார்கள். அந்தப் பதில்களில் நான் சற்று ஏமாற்றத்தை அடைந்தாலும் எனக்குள் விசுவரூபம் எடுத்த அந்த ஆசையை என்னால் வீசி எறிய முடியவில்லை.
என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காக தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு பேச வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.
"என்ன...! வெளியிலை ஆரும் நிக்கினமே...? விடிஞ்சிட்டே..? "
அருகில் ஆழ்ந்து தூங்கியிருந்த எனது கணவரின் விழிப்போடு வந்த கேள்வியில் நான் நினைவுச் சிறகுகள் அறுபட்டு தொப்பென்று மீண்டும் மரக்கட்டிலில் வீழ்ந்தேன்.
"இல்லை. ஒருத்தரும் இல்லை. எனக்கு மூண்டு மணிக்கே நித்திரை போட்டு."
சொல்லி விட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு நித்திரை வரவில்லை. மனசு இறக்கை கட்டிக் கொண்டு சிலிர்ப்பு, தவிப்பு, துடிப்பு... என்று பல்வேறு உணர்வுகளுடன் எங்கெல்லாமோ அலைந்தது. இடையிடையே "அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்! அவர் என்னைச் சந்திக்கச் சம்மதிப்பாரா..?" என்ற கேள்விகளுடன் வெண்புறாவுக்குள் வந்து மரக்கட்டிலில் விழுந்தது.
சந்திரவதனா
யேர்மனி.
- தொடரும் -
No comments :
Post a Comment