மனிதநேய வெளிப்பாடுகளில் வெண்புறாவின் செயற்பாடு
ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செயற்கைக் கால் செய்வதென்பது மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது. பயனாளிகள் ஒவ்வொருவரதும் பாதிப்புக்குள்ளான கால்களை துல்லியமாக அளவெடுத்து, அதற்கான வடிவத்தை அச்சில் (plaster of paris) வார்த்தெடுத்து, பின்னர் அந்த அச்சின் வடிவத்தைக் கொண்டே செயற்கைக் கால் பைபர்கிளாஸில் (Fiber glass) செய்யப் படுகிறது.
அதனால்தான் மூன்று தகரக் கால்களை இரண்டு மணித்தியாலத்துக்குள் செய்து முடிப்பது போல வேகமாக Fiber glass கால்களைச் செய்து முடிக்க முடியவில்லை.
ஒரு தகரத்தாலான செயற்கைக் காலினைத் தயாரித்து, ஒரு பயனாளியை ஒரு கிழமை வெண்புறா நிறுவனத்தில் தங்க வைத்து, பயிற்சி கொடுத்து, உணவும் கொடுத்து அனுப்பி வைக்க வெண்புறா நிறுவனத்துக்கு ஏற்படும் செலவு ரூபா12000 (150 யூரோ) தான்.
ஆனால் தகரக்கால்கள் என்ற ஒரே காரணத்தால் 1994 முதல் 2001 மார்கழி வரை வெண்புறா நிறுவனத்தால் பொருத்தப் பட்ட 1197 பேரினது செயற்கைக் கால்களுக்கான திருத்த வேலைகள் மட்டும் 9893 தடவைகள் மீண்டும் மீண்டுமாய் செய்ய வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதே நேரம் ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால்களுக்கான செலவும் நேரமும் சற்று அதிகமாக இருந்தாலும் ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால் பல முன்னேற்றமான நன்மைகளைக் கொண்டுள்ளது.
அதாவது ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால்,
1. தகரத்தால் செய்யப்பட்ட கால்கள் போலத் துருப்பிடிக்காது.
2. அணிபவருக்கு இலகுவானது. (பாரம் குறைவு)
3. வார்த்தெடுக்கப்பட்ட அச்சில் செய்யப்படுவதால், காலுடன் பொருந்தக்கூடியது. எனவே செயற்கை உறுப்பை பொருத்துவதற்கு எந்தவிதமான பட்டிகளும் தேவையில்லை
4. தகரத்தில் உருவாக்கப்படும் செயற்கைக்காலில் ஏற்படும்
திருத்த வேலைகள் இந்த வகையில் உருவாகும் கால்களுக்கு மிகமிக அரிது.
5. கால்களின் அளவும் முழங்கால் சில்லின் அளவும் மிகத் துல்லியமாக அளந்து
எடுக்கப்படுவதால், முதுகெலும்பு வளைவதற்கான சாத்தியங்கள் இல்லை.
6. பாதிப்புக்குள்ளான காலின் பகுதி மெலிந்து போவதற்கான காரணிகள் குறைகின்றன.
7. பாதிக்கப்பட்ட காலின் பகுதிக்கும் செயற்கை உறுப்புக்கும் இடையில் உள்ள இறப்பரினால் ஆன பகுதி காலில் ஏற்படும் வீணாண எரிச்சல் உபாதைகளைத் தடுக்கிறது.
8. காலினை இலகுவாக மடித்து நீட்டக்கூடியதாக இருக்கும்.
9. இலகுவாகக் கழற்றி வைக்கக்கூடியது.
இதுவரை காலமும் செய்யப் பட்ட தகரத்தாலான செயற்கைக் கால்களையும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும், யேர்மனியில் செயற்கை உறுப்புகளை உருவாக்கும் தொழில் நுட்பத்துடன் ஒப்பீடு செய்தே நவீன முறையிலான ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செயற்கை கால்கள் செய்வதில் உள்ள இந்த நன்மைகள் அறியப் பட்டன.
அறியப் பட்டதுடன் மட்டும் நின்று விடாமல் அதைச் செயற்படுத்தும் திட்டம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யேர்மனியக் கிளையினால் கிளிநொச்சியில் அமர்ந்திருக்கும் வெண்புறா நிறுவனத்தின் செயற்கை உறுப்புச் செய்யும் பட்டறைக்குள் வெற்றிகரமாக செயலாக்கம் பெறத் தொடங்கியது.
எடுத்ததைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமையானவர்கள் அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த போதும் மின்சாரத்தினதும், நவீன தொழில் நுட்பத்துக்கான கருவிகளினதும், பற்றாக்குறைகள் வேலை நேரத்தை நீட்டிக் கொண்டிருந்தன.
அஸ்பெஸ்டோஸ் கூரையைப் பிய்த்துக் கொண்டு வெயிலின் வெப்பம் எம்மை வதக்கியது. பொறுப்பாளர் அன்ரனியின் கட்டளைகளுக்கமைய அடிக்கடி Fanta, Spreit என்று சுகுணனும், கண்ணனும் கொண்டு வந்து தந்து கொண்டிருந்தாலும் அவைகளில் எதையும் நான் தொட்டும் பார்ப்பதில்லை. தாகத்தைத் தீர்த்து, வரண்டு போன தொண்டைக்கு இதம் தந்தது அவர்கள் அன்போடு வெட்டித் தந்த இளநீரும், பின் காணிகளுக்குள் எழுந்து நின்ற பனைகளில் ஏறி மயூரன் பிடுங்கித் தந்த நுங்கும்தான்.
மதியம் ஒரு மணித்தியாலம் இடைவேளை. அன்றே கிளிநொச்சிச் சந்தையில் வாங்கப் பட்ட கரவலையால் இறக்கப்பட்ட புதிய இறாலில் பொரியலும், மீனில் குளம்பும்... என்று நாக்குச் சப்புக் கொட்டியது. மனசு சமையல் பணியில் இருக்கும் படையப்பா எனச் செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படும் தேவசுந்தரத்துக்கும், அங்கிள் என அழைக்கப் படும் நசாருக்கும், பாரைக்குட்டி என அழைக்கப்படும் சந்திரன் தம்பிக்கும் மானசீகமாக நன்றி சொன்னது. சாப்பாட்டுக்கு மேல் பலாப்பழமும், மாம்பழமும் தித்தித்தன.
ஆனாலும் என்னால் இன்று அவை எல்லாவற்றையும் முற்றாகச் சுகிக்க முடியவில்லை. கால் வேலைகளை முடித்து விட்டு பருத்தித்துறையில் இருக்கும் அழகிய சிறிய கிராமமான ஆத்தியடியில் இருக்கும் நான் தவழ்ந்த எனது வீட்டுக்குப் போய் ஒரு கிழமையாவது நின்று வருவதாக நாம் போட்ட திட்டம் நிறைவேறாது போலத் தெரிந்தது. வேலை முடியாமல் எனது கணவரையோ, ஹொல்கெரையோ அங்கிருந்து கூட்டிப் போக முடியாது. அதுதான் மனசு சங்கடப் பட்டது.
ஆத்தியடியையும் எனது வீட்டையும் நினைக்கும் போதெல்லாம் மனசு தழுதழுத்தது. போகவேண்டும் என்று பரிதவித்தது. இருக்கும் ஒரே ஒரு வழி நான் தனியப் போய் வருவதுதான். தனியான பயணம் எந்தளவு சிக்கலாக இருக்கும் என்பது தெரியவில்லை. புலிகளின் கட்டுப்பாடற்ற பகுதிக்குள் குன்றும் குழியுமான வீதிகளில் சில மணித்தியாலங்களுக்குப் பேரூந்தில் பயணிக்க வேண்டும். வன்னியிலிருந்து புறப்படும் அல்லது வன்னிக்கு வந்து கொண்டிருக்கும் வாகனங்களைப் பார்த்திருக்கிறேன். சனங்களைப் பட்டியில் அடைப்பது போலத் திணித்துக் கொண்டு..., நினைக்கவே பயமாக இருந்தது. ஆனாலும் நான் தவழ்ந்த, தத்தி நடை பயின்ற... என் பிரிய உறவுகளுடன் கைகோர்த்துத் திரிந்த... நான் வாழ்ந்த எனது வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை பயத்தைத் துரத்தியடித்தது.
திடீரென, உடனேயே எனது கிராமத்துக்குப் போய் விடவேண்டுமென்ற ஒரு வேகம் எனக்குள் எழுந்தது. எனது கணவருக்கு எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அடுத்தநாள் காலையே புறப்பட்டு விடத் தீர்மானித்துக் கொண்டேன்.
மற்றவர்களிடம் விசாரித்த போது, "அப்படி நினைக்கிற போலை நாளைக்கே போகேலாது. பாஸ் எடுக்கோணும். பஸ் புக் பண்ணோணும். இப்படிக் கனக்கச் சிக்கல்கள் இருக்குது அக்கா....! அதோடை பஸ்சுக்கை நீங்கள் இருக்க மாட்டிங்கள் அக்கா. நெரிச்சுத் தள்ளிப் போடுவாங்கள். சிலநேரம் நிண்டு கொண்டுதான் போகவேண்டி வரும்" என்றார்கள்.
எனக்குத் தாமதிக்க இஸ்டமில்லை. எல்லாவற்றையும் தாங்கி நான் பயணிக்கத் தயார். அதனால் "எப்படியாவது நான் போகோணும்" என்று வெண்புறா உறவுகளிடம் சொன்னேன். அவர்கள் நல்லவர்கள். என்னைத் தனியே அனுப்ப அவர்களுக்கு மனம் இல்லாவிட்டாலும் என் விருப்பத்தை நிறைவேற்ற உடனேயே எனக்கு உதவ முன்வந்தார்கள். நாளை காலை அவர்களில் ஒருவருடன் நந்தவனத்துக்குப் போய் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான பாஸ் எடுக்க ஏற்பாடாகியது.
வெண்புறாவின் பொறுப்பாளர் அன்ரனி மோட்டார்சைக்கிள் சாரதி நிச்சுதனிடம் "நாளைக்கு அக்கா பாஸ் எடுத்த உடனை அக்காவை முகமாலை வரை கொண்டு போய் விட்டு விடு. இங்கை இருந்து பஸ்சிலை அக்கா போகமாட்டா" என்றார். எனக்கு மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பழக்கமில்லை.
பின்னேரம் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென செஞ்சோலை ஐனனி வந்தாள். விடயத்தைச் சொன்ன போது "நான் பழக்கிறன்" என்று சொல்லி போரின் அனர்த்தங்களில் குழி விழுந்து போயிருந்த ஏ-ஒன்பது வீதியில் என்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு திரிந்தாள். மெதுவாக ஓடி, நிறையக் கதைத்து... அவள் வேகமாக ஓடத் தொடங்கிய போது பயம் குறைந்திருந்தது.
அன்றைய இரவு ஐனனியுடன் கதைத்து, சாப்பிட்டு, படுக்க வெகுநேரமாகி விட்டது. ஊர் செல்லும் நினைவுகளில் தூக்கம் வரமறுத்தது. கூடவே ஏதோ விதமாக நுளம்பு வலைக்குள் புகுந்து கொண்ட நுளம்பு ஒன்று என்னைத் தூங்க விடாமல் மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது.
சந்திரவதனா
யேர்மனி
2002
- தொடரும் -
தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4
No comments :
Post a Comment