Friday, August 11, 2006

நினைவுப் பதிவு

தன்னோடு கைகோர்த்து வந்த ஒரு குழந்தை தன் முன்னாலேயே குருதி வடிய
சுருண்டு வீழ்ந்ததைப் பார்க்கும் ஒரு ஆறு வயதுக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்?
அது ஷெல், குண்டு, சூடு என்று அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் 1985ம் ஆண்டுக் காலம். நான் ஜேர்மனிக்குப் புறப்படுவதற்கான ஆயத்தங்களில் இருந்தேன். பாஸ்போர்ட் எடுப்பதற்கு சில ஆவணங்களைப் போட்டோக் கொப்பி எடுக்க வேண்டி இருந்தது. மூத்த இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு கடைசி மகனை அம்மாவுடன் விட்டு விட்டு ஒழுங்கைகள் கடந்து மருதடியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அங்குதான் எங்கோ ஒரு இடத்தில் போட்டோ கொப்பி மெசின் இருக்கிறது என்ற தகவல் எனக்குக் கிடைத்திருந்தது. தம்பிமாரை அனுப்பக் கூடிய இடமல்ல அது. அதனால்தான் நானே சென்றேன்.

ஐயனார் கலட்டி ஒழுங்கைகளைக் கடந்து கொண்டிருக்கும் போது பருத்தித்துறைக் கடலில் இருந்து வந்து கொண்டிருந்த ஷெல்களின் ஆக்ரோசம் கூடியிருந்தது. கூடவே சீனவெடிப் பாணியில் சூட்டுச் சத்தமும் கூடிக் கொண்டே போனது.

"வெளிக்கிட்டனான். வேலையை முடிச்சிடோணும்" என்ற வைராக்கியத்தோடு நான் நடந்து கொண்டிருந்தேன். பிரதான வீதியில் ஏறுவதற்கு இன்னும் 100மீற்றர்தான் இருக்கும் போது சனங்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடத் தொடங்கியிருந்தார்கள். என்ன ஏது என்று யோசிக்க முன்னம் சைக்கிள்கள் சுழன்று அடித்துக் கொண்டு திரும்பின. இளம்பெடியள் பாய்ந்து விழுந்து ஓடினார்கள்.

"பள்ளிக்கூடப் பிள்ளையளுக்குச் சூடு விழுந்திட்டுதாம். வடமாராட்சிப் பள்ளிக்கூடப் பிள்ளையள்." ஓடுபவர்களின் வாய்களில் இருந்து உதிர்ந்தன வார்த்தைகள். எனக்குள் பதட்டம். எனது இரண்டு பிள்ளைகளும் வடமாராட்சிப் பாடசாலையில்தானே.

தொடர்ந்து போவோரின் வாய்களிலிருந்து தீபா, சாந்தி என்ற வார்த்தைகளும் வந்து விழுந்தன. எனக்குப் பகீரென்றது. ஓரிருவரை இடை மறித்து "என்ன நடந்தது? யாருக்குச் சூடு விழுந்தது?" கேட்டேன். "தீபாவுக்கும் சாந்திக்கும் சூடு" என்றார்கள். அந்தக் கணத்தில் நான் என்னை மறந்து விட்டேன். ஒரு பைத்தியக்காரி போல வடமராட்சிப் பாடசாலையை நோக்கி பிரதான வீதியில் ஓடத் தொடங்கினேன்.

"அக்கா, அங்கை போகாதைங்கோ, நில்லுங்கோ, இஞ்சை பாற்றா, மொறிசின்ரை அக்கா..." என்று பல குரல்கள் கனவில் போல என் காதுகளில் வீழ்ந்தன. தடக்கும் சேலையின் கொசுவத்தை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு நான் ஓடிக் கொண்டிருந்தேன். சிலர் என்னை வந்து தடுத்தார்கள். போக வேண்டாம் என்று மன்றாடினார்கள். ஒரு கட்டத்தில் என்னை மேற் கொண்டு நகர விடாமல் முழுவதுமாக மறித்து விட்டார்கள்.

"நீங்கள் திரும்பி வீட்டை போங்கோ அக்கா." சூடு விழுந்த பிள்ளையளை உடனையே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டினம். ஒண்டும் நடக்காது. நீங்கள் போங்கோ. வடிவா விசாரிச்சுப் போட்டு, வீட்டை வந்து எல்லா விபரத்தையும் சொல்லுறம்" என்றார்கள்.

வேறுவழியின்றி நான் வீட்டுக்குத் திரும்பி நடக்கத் தொடங்கினேன். உலகம் இருண்டு விட்டது போலிருந்தது. மனசு "ஆண்டவா என்ரை பிள்ளையை என்னிடம் உயிரோடு தந்து விடு" என்று மன்றாடியது.

வழியெல்லாம் பதட்டத்துடன் மக்கள். நான் வீட்டடிக்குப் போனபோது அப்பாச்சி, அம்மா இருவருமே வீட்டு வாசலில் திகைத்துப் போய் நின்றார்கள். நான் உள்ளே போக மனமின்றி கேற்வாசலில் அப்படியே இருந்து விட்டேன்.

பிரமை பிடித்தவள் போல எவ்வளவு நேரம் அதிலேயே இருந்திருப்பேனோ எனக்குத் தெரியாது. ஒரு சைக்கிள் வருகிறது. ஒரு போராளிதான் ஓட்டி வந்தான். யார் முன்னுக்கு என்று பார்த்தேன். என் கண்களையே நம்ப முடியவில்லை. தீபாவேதான் வருகிறாள். முகத்தில் ஒரு மருட்சி. சிரிக்க மறந்த தன்மை. ஆனாலும் உயிரோடு என் மகள். அப்போதுதான் நான் அடக்க முடியாமல் அழத் தொடங்கினேன்.

---------------------------------

சிங்கள இராணுவத்தின் அட்டகாசம் அன்று அதிகமாயிருந்ததால் வடமராட்சிப் பாடசாலைப் பிள்ளைகளை, ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். பிள்ளைகள் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள். இராணுவம் பருத்தித்துறைக் கடலோடு சேர்ந்த முகாம்களிலிருந்து சுட்டுக் கொண்டு இருந்திருக்கிறது. தீபாவும் சாந்தியும் கைகோர்த்த படி பாடசாலை வீதியில் விநாயகமுதலியார் வீதியடியைக் கடக்கும் போது ஒரு ரவை சாந்தியின் கழுத்தில் பாய்ந்து விட்டது.

தன்னோடு கைகோர்த்து வந்த ஒரு குழந்தை தன் முன்னாலேயே குருதி வடிய சுருண்டு வீழ்ந்ததைப் பார்க்கும் ஒரு ஆறு வயதுக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? சாந்தி உடனேயே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டு விட்டாள். தீபா என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப் பட்டாள்.

சாந்தி நான் ஜேர்மனிக்கு வரும் வரை பேசும் சக்தியை இழந்த நிலையிலேயே இருந்தாள். தீபா பல நாட்கள் ஒரு அதிர்ச்சி அடைந்த நிலையிலேயே இருந்தாள். அதிகம் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். நித்திரையில் சாந்தி.. சாந்தி.. என்று ஏதேதோ புலம்பினாள். ஷெல் சத்தம் கேட்டால் உடனேயே ஒரு பதட்டத்துடன் ஓடிச் சென்று பக்கத்தில் நிற்கும் யாரையாவது இறுகக் கட்டிப் பிடிப்பாள். யாரும் பக்கத்தில் இல்லை என்றால் அறைக்குள் ஓடிப்போய் கட்டிலுக்குக் கீழ் புகுந்து கொள்வாள். ஜேர்மனிக்கு வந்த பின்னும் சில வருடங்களாக இடி இடிக்கும் சத்தம் கேட்டால் ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிப்பாள்.

சந்திரவதனா
11.7.2006

3 comments :

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

கொடுமை!!
இப்படியான நிகழ்வுகள் உளவியல் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவத்திற்கான இன்றியமையாத தேவையை மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இங்கு கள்வன் வீட்டுக்குள் நுழைந்து களவெடுப்பதைப் பார்த்த பெண்ணிற்குக் கவுன்சிலிங் கிடைத்தது அறிவேன்.. மரணத்தைப் பார்க்கும் எம்மவர்க்கு? :O(

enRenRum-anbudan.BALA said...

சந்திரவதனா,

வாசிக்கும்போது நெஞ்சு கனத்துப் போனது. தீபா இப்போது எப்படியிருக்கிறார் ? சாந்தி பேசும் திறன் திரும்பப் பெற்றாரா ?

என்றென்றும் அன்புடன்
பாலா

Chandravathanaa said...

ஷ்ரேயா,
பல வழிகளிலான நியாயங்கள் மறுக்கப் பட்டவர்கள் நாங்கள்.
எங்களது உளவியல் பிரச்சனைகளைப் பற்றி யாரும் அக்கறை கொள்வார்களா?

பாலா
நன்றி. தீபா ஓகேயாக இருக்கிறார். ஆனாலும் எமது நாட்டின் போரின் தாக்கங்கள் இப்போதும்
எனது மூன்று பிள்ளைகளிலும் இருப்பதை நான் உணர்கிறேன்.

சாந்தி நான் அறிந்தவரை பேசும் சக்தியைப் பெறவில்லை. இப்போது சில வருடங்களாகத்
தொடர்புகள் அற்றுப் போய் விட்டன. நிலைமைகளில் மாற்றங்கள் வந்தனவா இல்லையா என்பது தெரியவில்லை.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite