இன்று அப்பாவின் நினைவு நாள்.
அப்பாவின் நினைவுகளையும் சுமந்த கதை ஒன்றை மீள் பதிவு செய்கிறேன்.
"சோ" வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும் செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன.
சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து இலைகளில் இருந்து சொட்டும் மழை நீரைப் பார்த்து ரசித்த படி விறாந்தை நுனியில் நிற்பதைப் பார்த்த கதிரேசருக்குச் சந்தோஷமாக இருந்தது.
கதிரேசர் இன்று என்றுமில்லாத சந்தோஷத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னே என்ன இருக்காதா? மகள் சங்கவி யேர்மனியில் இருந்து வந்திருக்கிறாள். அதுவும் பன்னிரண்டு வருடங்களின் பின்.
கதிரேசர் இப்படிக் கதிரைக்குள்ளும் கட்டிலிலுமாய் முடங்கிப் போய் இருக்கக் கூடிய ஆள் அல்ல. மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு வாட்ட சாட்டமான கட்டுடலுடன் அவர் ராஜநடை போடும் அழகே தனி அழகுதான். எப்போதும் சந்தோசமாக இருக்க விரும்பும் அவர் விடுமுறையிலே வீட்டுக்கு வந்தாலே வீடு அசாதாரண கலகலப்பில் மிதந்து அவர் அன்பில் திளைத்திருக்கும். மனைவி செல்லமும் பெரிய குங்குமப் பொட்டுடன் வளையல்கள் குலுங்க வீட்டுக்குள் வளைய வரும் காட்சி மங்களகரமாகவே இருக்கும்.
பின்னேரம் என்றாலே கதிரேசர் வீட்டுக்குள்ளே இருக்க மாட்டார். பிள்ளைகளையும் செல்லத்தையும் அழைத்துக் கொண்டு Beach, Park, படம் என்று சுற்றித் திரிவார்.
பருத்தித்துறைத் தோசை என்றாலே அவருக்குக் கொள்ளை பிரியம். அதற்காகவே மகள் சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஓடக்கரைக்குப் போவார். பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து "கள்" விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசைமாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத் துளைக்கும்.
கதிரேசர் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு ஒவ்வொரு தட்டியாகத் தாண்டும் போது சங்கவி "ஏனப்பா போறிங்கள்? இங்கையே வேண்டுங்கோவன்." பொறுமையிழந்து கேட்பாள்.
கதிரேசர் "இவளட்டைத் தோசை சரியில்லை. இவளின்ரை பச்சைச் சம்பல் சரியில்லை." என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டி குறிப்பிட்ட தட்டியடியில் குனிந்து மூடு பெட்டியைக் கொடுத்து "முப்பது தோசை சுட்டு வையணை." என்கிற போது "என்ரை ராசா வந்திட்டியே." என்பாள் தோசை சுடும் பெண்.
ஏதோ அவளும் கதிரேசரும் நெருங்கிய உறவினர்கள் போல இருக்கும் அவளின் கதை. தோசை வாங்கி வாங்கியே பரிச்சயமான உறவு. "நல்லா நிறையச் சம்பல் போட்டு வையணை. பத்துப் பாலப்பமும் புறிம்பாச் சுட்டு வையணை. " கதிரேசர் சொல்லி விட்டு, சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, ரவுணுக்குள் போய் இன்னும் தேவையான வீட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டு, திரும்பி வந்து தோசை பாலப்பத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.
வவுனியாவில் நிற்கும் சங்கவியின் நினைவலைகள் பருத்தித்துறையை வலம் வந்தன. பிறந்த மண்ணையும் அப்பா, அம்மா, சகோதரர்களுடனான அந்த வாழ்க்கையையும் நினைக்கும் போதெல்லாம் வீணையின் நரம்பை மீட்டும் போதெழுகின்ற மெல்லிய நாதத்தின் இனிமை தரும் சிலிர்ப்பு அவளுள் ஏற்படும்.
"என்ன சங்கவி ஆமியைக் கண்டு பயந்து போட்டியே? இஞ்ச வா. வந்து பக்கத்திலை இரு." மிகவும் ஆதரவாகவும் ஆசையாகவும் கதிரேசர் சங்கவியை அழைத்தார். நினைவுகள் தந்த சிலிர்ப்புடன் சங்கவி வந்து அவர் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்து இடது கையால் அவர் முதுகைத் தடவி அணைத்துக் கொண்டு வீதியை நோக்கினாள்.
சற்று நேரத்துக்கு முன் சிங்கள இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபட்டுக் கிடந்த வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன்ரோட், சைக்கிள்களும், ஓட்டோக்களும், மனிதர்களுமாய் மீண்டும் உயிர்ப்புடன் தெரிந்தது.
பக்கத்தில் அமர்ந்திருந்த அப்பா கதிரேசரைப் பார்க்கப் பார்க்க சங்கவிக்கு ஒரே கவலையாக இருந்தது. அவரது அகன்ற தோள்கள் ஒடுங்கி மார்பகங்கள் வலுவிழந்து, கைகளும் கால்களும் சோர்ந்து... உடலுக்குள் நெளிந்து திரியும் நோயின் கொடிய வேதனையைக் கொன்று விடும் அளவு கொடிய வேதனை பிள்ளைகள் நாடு நாடாகச் சிதறியதால் ஏற்பட்ட தனிமையில் கண்ணுக்குள் தெரிய துவண்டு போயிருந்தார்.
அவர் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையாகிப் போனதை "மேற்கொண்டு வைத்தியம் செய்ய முடியாது எல்லாம் கை நழுவி விட்டது." என்று டொக்டரே கை விரித்த பின்தான் செல்லம் யேர்மனிக்கு ரெலிபோன் பண்ணி சங்கவியிடம் சொன்னாள். சங்கவியை ஒரு தரமாவது பார்த்து விடவேண்டுமென்ற ஆசைத் துடிப்பிலேயே அவர் இன்னும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்றும் சொன்னாள்.
உயிருக்கு உத்தரவாதமில்லாத தாயகத்தில் தனக்கொன்று ஆகி விட்டால் ஜேர்மனியில் விட்டு வரும் குழந்தைகள் சிறகிழந்து போவார்களே என்ற பயம் சங்கவியின் மனதைக் குழம்ப வைத்தாலும் அப்பாவின் பாசம் வலிந்திழுக்க போராடும் மனதுடன்தான் புறப்பட்டாள்.
தாயகத்தில் கால் வைத்த போது மனதுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத சந்தோசத்தையும் துள்ளலையும் முண்டித் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்து நின்றது பய உணர்ச்சிதான்.
"பொட்டை அழித்து விடு." பின்னுக்கு நின்ற சிங்களப் பெண் ஆங்கிலத்தில் கிசுகிசுத்த போது, பன்னிரண்டு வருடங்களாக ஜேர்மனியிலேயே தவிர்க்காத பொட்டைத் தவிர்த்து, பாழடைந்த நெற்றியுடன், கால்கள் பின்னித் தடுமாற, படபடக்கும் நெஞ்சுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்ததை நினைக்க சங்கவிக்கு மனசு கூசியது. "ஏன் இப்படி முகம் இழக்கப் பண்ணப் படுகிறோம்." என்று குமுறலாகக் கூட இருந்தது.
விமான நிலையத்தில் மாமாவை இனங் கண்டு, செக்கிங் பொயின்ற்ஸ் தாண்டி, வெள்ளவத்தை வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுத்து, வவுனியா புறப்படுவதற்கிடையில் சங்கவி நிறையத் தரம் எரிச்சல் பட்டு விட்டாள்.
"அந்நிய நாட்டில் எமக்கிருக்கும் சுதந்திரம் கூட எமது நாட்டில் எமக்கு இல்லையே" என்று மாமாவிடம் குமுறினாள்.
"வவுனியாவிலை ரெயின் நிண்டதும் ஓடிப் போய் லைன்ல நில். இல்லாட்டி பாஸ் எடுத்து வீட்டை போய்ச் சேர மத்தியானம் ஆகீடும்." மாமா ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் சங்கவி ஓடவில்லை.
அதன் பலனாக வவுனியா ரெயில்வே ஸ்ரேசனை நிறைத்து நின்ற சிங்கள இராணுவப் படைகளுக்கு நடுவில் நீண்டு, வளைந்து, நெளிந்து நின்ற மூன்று மனித வரிசைகளின் மிக நீண்ட வரிசையில் இறுதி ஆளாக அவள் நின்றாள். இறுதிக்கு முதல் ஆளாக அவளது மாமா நின்றார்.
அலுப்பு, களைப்பு, பயம், சலிப்பு, எல்லாவற்றையும் மீறிய ஆர்வத்துடன் அவள் முன்னுக்கு எட்டிப் பார்த்தாள். மூன்று வரிசைகளும் ஆரம்பிக்கும் இடங்களில் ஐந்து ஐந்து பேராகச் சிங்களப் பெண்கள் Uniform உடன் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். மேசைகளில் பெரிய பெரிய கொப்பிகள் இருந்தன. வரிசையில் முன்னுக்கு நிற்பவரை ஒரு பெண் எதுவோ கேட்டு எழுத, அடுத்த பெண் ஒரு கொப்பியைப் புரட்டி எதுவோ தேட, மற்றைய இரு பெண்களும் எழுதுவதும் பொலிஸ் ரிப்போர்ட்டையோ அல்லது வேறு எதையோ அக்கு வேறு ஆணி வேறாய் அலசிப் பார்த்து முடிப்பதுமாய் தொடர இறுதிப் பெண் ஒரு சின்ன ரோஸ் கலர் துண்டைக் கொடுக்க மனித வரிசை ஒவ்வொருவராக ஆறுதலாகக் கலைந்து கொண்டிருந்தது.
6.30 க்கு ரெயினால் இறங்கிய சங்கவியும் மாமாவும் சிங்களப் பெண்கள் இருந்த மேசையடிக்கு வரும் போது நேரம் எட்டு மணியைத் தாண்டியிருந்தது. மற்றைய இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே முடிந்து, அந்த வரிசைகளுக்குப் பொறுப்பாக இருந்த சிங்களப் பெண்கள் எழுந்து நின்று கைகளை மேலே உயர்த்தி உளைவு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே வவுனியாவில் இருந்து கொழும்பு வரை போய் வருபவர்களுக்காம். இந்த வரிசை சங்கவி போல் புதியவர்களுக்காம்.
அப்பா கதிரேசர் வவுனியாவில் ஸ்ரேசன் மாஸ்டராகப் பணி புரிந்த காலங்களில் அவரோடு கைகோர்த்துக் கொண்டு துள்ளித் திரிந்த Flattform இன்று சிங்கள இராணுவங்களால் நிறைந்திருக்கும் காட்சியை ஜீரணிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த சங்கவியை அந்தச் சிங்களப் பெண்கள் கேள்விகளாய்க் கேட்டு கோபப் படுத்தினார்கள்.
சங்கவிக்கு சிங்களம் விளங்குகிறதோ இல்லையோ என்பது பற்றியே அக்கறைப் படாத சிங்களப் பெண்கள் அவளின் கோபத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்கள் கேள்விகளால் குடைந்து ஜேர்மனியப் பாஸ்போர்ட், ஐசி பார்த்து பொலிஸ் ரிப்போர்ட்டை ஆராய்ந்து பாடசாலை வரவுப் பதிவேடு போன்ற கொப்பியில் பெயர் விலாசம் எல்லாம் பதிந்து கடைசியாக முத்திரை போன்ற சைஸில் ஒரு ரோஸ் கலர் துண்டை நீட்டிய போது "அப்பாடா" என்ற உணர்வுடன் அதை வாங்கிப் பார்த்தாள்.
எல்லாம் சிங்களத்தில் எழுதப் பட்டிருந்தன. ஒன்றுமே புரியவில்லை.
சிங்கள இராணுவத்தின் விறைப்புகளையும், முறைப்புகளையும் தாண்டி செக்கிங்கில் கிளறப்பட்ட சூட்கேஸை அமத்திப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்த போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.
"மாமா...! என்ன இது? எல்லாம் சிங்களத்திலை எழுதியிருக்கு. ஒண்டுமே விளங்கேல்லை. இதுதான் பாஸோ..?" ரோஸ் துண்டை நீட்டிய படி சங்கவி மாமாவை நோக்கினாள்.
"ஓமோம். இதுதான் பாஸ். கவனமா வைச்சிரு. துலைச்சியோ....! உன்ரை சரித்திரம் அவ்வளவுதான். இது ஒரு நாள் பாஸ்தான். நாளைக்குக் காலைமை வந்துதான் ஒரு கிழமைப் பாஸ் எடுக்கோணும்."
மாமா சொன்ன பின் சங்கவிக்கு அந்த மெல்லிய ரோஸ் கலர் பேப்பர் துண்டு மகா கனமாக இருந்தது. Handbag க்குள் வைத்து விட்டு அடிக்கடி திறந்து திறந்து அது பத்திரமாக இருக்கிறதா..! எனப் பார்த்துக் கொண்டாள்.
"ஏன் ஒருநாள் பாஸ்தான் தந்தவையள்? ஒரேயடியா ஒரு கிழமைக்குத் தந்தால் என்ன?" திருப்தியின்மையுடன் கேட்டாள்.
"உடனை அப்பிடித் தரமாட்டினம்."
"அப்ப நாளைக்கு இன்னொரு தரம் இங்கை வந்து தூங்கிக் கொண்டு நிக்கோணுமோ? ஏன் இந்தளவு கெடுபிடி? இதிலை இவையளுக்கு என்ன லாபமிருக்கு?"
"எல்லாம் தங்கடை கட்டுப் பாட்டுக்கை வைச்சிருக்கத்தான். பெடியளை(புலிகளை)உள்ளை நுழைய விடாமலிருக்கத்தான்."
"அப்ப இங்கை பெடியளே இல்லையோ..?"
"இருக்கிறதுக்கான சந்தர்ப்பம் இல்லை. இது ஆமியின்ரை கட்டுப் பாட்டுக்குள்ளை இருக்கிற இடம்."
சங்கவிக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.
"என்ன பிள்ளை.. ஒரே யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய். பிள்ளையளை நினைச்சுக் கவலைப் படுறியோ?" கதிரேசர் கேட்டதும்தான் சங்கவி மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள்.
"இல்லையப்பா... இவங்கள் காலைமை ரெயில்வே ஸ்டேசனிலை மணித்தியாலக் கணக்கிலை என்னையும் மாமாவையும் மறிச்சு வைச்சு கணக்கெடுப்பும், பதிவும் செய்ததை நினைக்க நினைக்க எனக்குக் கோபம் கோபமாய் வருது. அப்பிடியெண்டால்... இந்தப் பெடியள்(விடுதலைப்புலிகள்) இதுக்குள்ளை வரேலாதோ..? "
இப்பக் கதிரேசர் குனிந்து இரகசியமாக.. அவள் காதுக்குள்.. "எங்கடை பெடியளை இவங்களாலை என்ன செய்யேலும்..?" என்றார். சொல்லும் போதே நோயில் வாடிப் போயிருந்த அவர் கண்கள் பிரகாசித்ததை சங்கவி கவனிக்கத் தவறவில்லை. இரண்டு மாவீரர்களைப் பெற்றெடுத்த கதிரேசரிடம் தேசப்பற்றும் தமிழ்த்தாகமும் மரணத்தின் வாசலில் நிற்கும் இந்த நேரத்திலும் குறையாமல் இருந்தன.
சங்கவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரேசர் "என்ன பிள்ளை அப்பிடிப் பார்க்கிறாய்? உன்னைப் பார்த்திட்டன். இனி நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்." என்றார்.
"இல்லையப்பா அப்பிடியொண்டும் நடக்காது..." சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் ஒன்று வந்து கேற் வாசலில் நிற்க, அழகிய இளைஞனொருவன் இறங்கி உள்ளே வந்தான். பக்கத்து அறைகளில் குடியிருப்பவர்களிடம்தான் அவன் வருகிறான் என சங்கவி நினைத்த போது "வா விமலன் வா." கதிரேசரும் செல்லமும் அவனைக் கோரசாக வரவேற்றார்கள்.
மாவீரனான தம்பி மொறிஸ் இப்போ உயிரோடு இருந்தால் இவன் வயதில்தான் இருப்பான். சங்கவி தனக்குள் நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
நடக்கவே கஸ்டப் படுகிற கதிரேசர் முக்கித்தக்கி கதிரைக்குள்ளால் எழுந்து சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுமெதுவாய் நடந்து அவரது அந்தக் குச்சி அறைக்குள் நுழைய விமலன் அவர் பின்னால் அறைக்குள் நுழைந்தான். செல்லமும் பின் தொடர சங்கவியும் உள்ளே போனாள்.
யார் வந்தாலும் வெளி விறாந்தையில் இருத்திக் கதைக்கும் அம்மாவும் அப்பாவும் நடந்த விதம் அவளுக்குச் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது.
கதிரேசர் கட்டிலில் அமர உதவி செய்த விமலன் தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான். "எப்பிடியப்பு இருக்கிறாய்..?" செல்லம் ஆதரவாய்க் கேட்டாள்.
"யார் இவன்..?" சங்கவிக்குள் ஆர்வம் கேள்வியாய் எழுந்தது.
"நீங்கள்..?" சங்கவி அவனை நோக்கினாள்.
"அக்கா..! நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தனனான். உங்கடை தம்பி மொறிசின்ரை நண்பன்தான் நான்."
தம்பி மாவீரனாகி வருடங்கள் பல ஓடிய பின் தம்பியின் நண்பனாக வந்தவனை வியப்புடன் பார்த்து "நான் வந்தது எப்பிடித் தெரியும்..?" என்றாள்.
"எல்லாம் தெரியும்." என்றான் அர்த்தத்துடன்.
இப்போ செல்லம் கிசுகிசுத்தாள். " விமல் வெளியாக்களுக்குத்தான் எங்கடை மருமகன். ஆனால் உள்ளுக்கு..."
செல்லம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமலன் சேர்ட்டை மேலே உயர்த்தி, இடுப்பிலே சொருகியிருந்த கடிதமொன்றை எடுத்து செல்லத்திடம் கொடுத்தான்.
அப்போதுதான் சங்கவி அதிர்ந்தாள். தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்ததை உணர்ந்தாள். விமலனின் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு Pistole கள்.
"எப்படி..? எப்படி இது சாத்தியம்? இத்தனை தடைகளை மீறி...?"
இத்தனை தடைகளை மீறி எப்படி இவன் வைரவர் புளியங்குளத்துக்குள் நுழைந்தான்? குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவத்தின் கண்களுக்குள் நிற்கும் இந்த வீட்டுக்குள் எப்படி நுழைந்தான்..?
"எப்படி விமலன்..? எப்படி இதெல்லாம் சாத்தியமாயிற்று..? உங்களட்டைப் பாஸ் இருக்கோ..?" கேள்விகளை அடுக்கினாள்.
"இல்லை அக்கா. என்னட்டைப் பாஸ் இல்லை."
"அப்ப... பிடிபட்டால்...?" சங்கவி நியமான பயத்துடன் கேட்டாள்.
விமலன் கழுத்து மாலையை இழுத்துக் காட்டினான். குப்பி தொங்கியது. வாயைக் கூட்டி உமிழ்வது போலச் செய்தான். இரண்டு குப்பிகள் கடைவாயின் இரண்டு பக்கங்களிலும் வந்து நின்றன. மீண்டும் அவைகளை உள்ளிழுத்து கொடுப்புக்குள் அடக்கி விட்டு இயல்பாகச் சிரித்தான். செல்லம் கொடுத்த தேநீரைக் குடித்தான். சங்கவிக்கு வியப்பும் படபடப்பும் அடங்க முன்னமே சைக்கிளில் ஏறிப் போய் விட்டான்.
சங்கவிக்கு தான் காலையில் ரெயில்வே ஸ்டேசனில் பார்த்த பதிவுக் கொப்பிகள் நினைவில் வர தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.
நிகழ்வு-21.11.1997
சந்திரவதனா
யேர்மனி
1999
Friday, December 01, 2006
பதியப்படாத பதிவுகள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
▼
2006
(
137
)
- ▼ December 2006 ( 5 )
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
4 comments :
//பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து "கள்" விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசைமாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத் துளைக்கும்.//
சந்திரவதனா!
இத்தகைய கடைகள் திருகோணமலையிலும் இருந்தன. அவற்றில் இடியப்பமும், தோசையும், வாங்கலாம்.
கதையின் இறுதியில் சுட்டியிருக்கும் உறுதிதான் எமது விடுதலைப் போரின் மிகப்பெரிய ஆயுதம்.
உங்களது அப்பாவின் நினைவுகளில் இணைந்துகொள்கின்றேன்.
நன்றி!
ஹ்ம்ம்ம்...நல்ல பதிவு.. அப்பாவின் நினைவுகள் எனக்கும் அதிகமாகவே இருக்கிறது... அப்பாவின் நினைவுகள் பற்றிய பதிவை வெகு விரைவில் வளையேற்றப்போகிறேன்... சில உளவியல் விஷயங்களுடன்...ஹ்ம்ம்ம்.
நன்றி
படித்தேன், நெகிழ்ந்தேன், வியந்தேன்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
மலைநாடான், மங்கை, முரளிதரன், lfc fan
உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.
கதையின் இறுதியில் சுட்டியிருக்கும் உறுதிதான் எமது விடுதலைப் போரின் மிகப்பெரிய ஆயுதம்.
உண்மை மலைநாடன்
மங்கை
கண்டிப்பாக எழுதுங்கள்
Post a Comment