Sunday, May 13, 2007

ஆற்றாமைப் பொழுதுகள்

ஒவ்வொரு பொழுதிலான கண்ணீர் துளிகளுக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். என்னைச் சுற்றி எத்தனையோ சந்தோசங்கள், துக்கங்கள், இணைவுகள், பிரிவுகள்... என்று வாழ்க்கையில் பலதைக் கடந்து வந்து சிலதில் சங்கமித்து நிற்கிறேன். வாழ்க்கையின் நியதிப்படி பிறக்கும் போதும், வளரும் போதும்.. என்று எனது ஆரம்ப வாழ்க்கையில் என்னோடு இணைந்து இருந்தவர்களிலிருந்து சற்று விலகி, எனக்கென்றொரு குடும்பம் அமைத்து எனது கணவர், எனது குழந்தைகள், எனது பேரப்பிள்ளைகள் என்ற ஒரு அன்பு வட்டத்துக்குள் நான் அடைபட்டு விட்டாலும், என்னைப் பெற்றவர்கள், என்னோடு கூடப் பிறந்தவர்கள்... என்ற அந்த ஆரம்ப உறவுகளிலிருந்து என்றைக்குமே மனதால் விலகி நிற்க முடியவில்லை.

அண்ணனும் அப்படித்தான். கூடப் பிறந்தவன். என்னோடு மிகவும் பிரியமாக இருந்தவன். இனி அவன் இல்லை என்று ஆன பின்னும் நினைவுகளோடு எனக்குள்ளே வாழ்பவன். இன்று அவனின் நினைவு நாள். இன்றைய பொழுதில் அதையே சொல்லிச் சொல்லியோ அல்லது எண்ணி எண்ணியோ கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் நிலை இல்லை. இருந்தாலும் இன்று கிடைத்து விட்ட ஒரு சிறிய தனிமைப் பொழுதில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டி விட்டது.

அந்தத் துளிகளில் பிரிய உறவொன்று இந்த உலகத்திலேயே இல்லாமல் எங்கோ உறைந்து விட்ட சோகம் நிறைந்திருந்தது. சாவின் வலி ஒட்டியிருந்தது. எத்தனை தரந்தான் கண்ணீராகக் கொட்டி விட்டாலும், விட்டுப் போகாமல் மனதின் ஒரு ஓரமாக ஒட்டியிருக்கும் சோகத்தின் வலி அது. அதற்காக எனது எல்லா செயற்பாடுகளையும் விட்டு விட்டு இன்றைய பொழுதை நான் அழுத படியே கழிக்கவில்லை. எனது நித்திய வேலைகள் வழமை போலவே தொடர்கின்றன. காலம் சிலவற்றை ஆற்றித்தான் விடுகிறது. மரணித்த செய்தியை தாங்க முடியாது மனம் புரண்டு அழுத பொழுதுகள் மெதுமெதுவாக நகர்ந்து, பின்னர் வேகமாகவே ஏழு வருடங்களைத் தாண்டி விட்டன.

இன்று, இந்த உலகத்தின் எந்த அந்தந்திலும் அவன் இல்லை என்ற உண்மை ஒரு வலியாக, விவரிக்க முடியாத வேதனையாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அதை ஒரு போதும் தூக்கி எறிந்து விட முடியாது. இறந்து விட்டான். போய் விட்டான். இனிக் கிடைக்க மாட்டான்… என்ற பல ஏமாற்றங்களையும் தாண்டி அவனோடான நினைவுகள் மீண்டும் மீண்டுமாய் மனதுள் விரிந்து கொண்டிருக்கின்றன. இன்று மட்டும் என்றில்லை. இந்த ஏழு வருடங்களில் பல பொழுதுகளில் அவனுடனான சின்னச் சின்ன சம்பவங்கள் கூட மனசுக்குள் எட்டிப் பார்த்து கண் சிமிட்டியிருக்கின்றன. சில சிறியதாகத் தொடங்கி பெரிய படமாக விரிந்தும் இருக்கின்றன. அவைகளில் சில சுகமானதாகவும், சில தாங்க முடியாத சோகத்தின் கனமானதாகவும் முடிந்திருக்கின்றன. இன்றும் அப்படித்தான் அவன் பற்றிய ஏதேதோ நினைவுகள் எனக்குள் விரிந்து, கண்ணீர் பொல பொலவென்று கொட்டி விட்டது.

அன்று போல் இன்று நான் சோகத்தின் விளிம்பில் நின்று இதை எழுதவில்லையாயினும், இன்றைய இந்தக் கண்ணீர் கனமானது. ஒரு மரணத்தின் ஆற்றாமைப் பொழுதுகளை மறக்க முடியாது தவிப்பது. அந்த ஆற்றாமைப் பொழுதுகளில் அண்ணனின் நினைவாக எழுதிய ஒரு பதிவை இன்று மீள்பதிவு செய்கிறேன்.


முகவரி தேடும் மனவரிகள்



தீட்சண்யன்

இதயத்தின் ஓரத்தில் ஆறாத சோகம்
விழிகளின் ஈரத்தில் வடியாத ஏக்கம்
உறக்கத்தில் கூட உறங்காத நினைவு
இதையெல்லாம் தந்து நீ எங்கு சென்றாய்..?


அண்ணா..!
இப்போ நான் மிகவும் பலவீனமானவளாகி விட்டேன்.
அடிக்கடி அழுவதும், அர்த்தமின்றிக் கோபப் படுவதும்
நீண்ட இரவுகளிலும் சோர்ந்த பொழுதுகளிலும்
நீயில்லா நினைவுகளில் வீழ்ந்து போய்க் கிடப்பதுவும்
என் வாழ்க்கையாகி விட்டது.

எனக்குள்ளே ஒளிந்திருக்கும் அழுகை அருவியாகக் கொட்ட இன்ன இன்னதுதான் காரணமென்றில்லாமல், சிறு துரும்பு அசைவில் கூட துயர் என்னைத் தாக்க நிலை குலைந்து போகிறேன்.

இன்றைய இப்போதைய அணை உடைத்துப் பாயும் என் அழுகைக்குக் காரணம், உன் மகளின் பிறந்தநாள் புகைப்படம்.

உனக்கு நான் எழுதவென்று, எனக்குள் நான் எழுதி வைத்தவைகளை உனக்கு அனுப்ப முடியாத படி, உன் முகவரியைக் கூடத் தராது நீ எனை விட்டுப் போன ஒரு சோகமான பொழுதில்தான் அப் புகைப்படங்கள் என்னை வந்தடைந்தன.

கடித உறையில் கூட நீதான் உன் கைப்பட விலாசமெழுதியிருந்தாய். எப்படி என் நெஞ்சு படபடத்தது தெரியுமா..? உறை கசங்காமல் அவசரமாய்ப் பிரித்து, உள்ளிருந்த படங்களுக்குள் மனங் கலங்கியபடி உன் முகம் தேடினேன்.

ஒரு படத்தில் ஷெல்லிலே தொலைந்து போன உன் கால் பற்றி யாருமே காணாத படி எப்படியோ மறைத்து உன் பிள்ளைகளுக்கு நடுவில் அழகாக நீ அமர்ந்திருந்தாய். வாரி விடப்பட்ட நெளிந்த சுருண்ட உன் கேசமும், புன்முறுவல் பூத்த உன் முகமும் எப்போதும் போல் அழகாய்..! அதுதான் உன் இறுதிப் புகைப்படம் என நினைக்கிறேன்.

அந்தப் புகைப்படங்களைத்தான் மீண்டும் இன்றெடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்தேன். ஒரு படத்தில் உன் மகள் அழகாக பரதநாட்டிய முத்திரைகளுடன் அபிநயித்த படி....! புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் போதுதான் அதைக் கண்டேன். ஒரு ஓரமாக உன் பாதம் நீண்ட படி... பெருவிரல் இல்லாது..! ஓ... வென்று அழுது விட்டேன். உன் கால் படத்தில் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நீ ஓரமாய் உட்கார்ந்திருந்திருப்பாய். உன் மகளைப் படம் பிடித்தவனும் சரியாகப் பார்க்கவில்லை. நான் பார்த்து விட்டேன்.

இப்படித்தான் அடிக்கடி ஏதவாது காரணங்கள், துயரத்துக்கு நான் போட்டு வைத்திருக்கும் அணையை உடைக்க வரும். அழுகை வெள்ளமாய்ப் பாயும்.
அழுகை ஓய்ந்த சில பொழுதுகளில் மூக்கை உறிஞ்சிய படியோ, சமைத்து முடிந்த பொழுதுகளில் கழுவிய கைகளைத் துடைத்த படியோ, வேலையால் வந்ததும் உடைகளை மாற்றிய படியோ, படுக்கைக்குப் போன பின்னும் தூக்கம் வராத பொழுதுகளிலோ நான் உன் புகைப் படங்களை எடுத்துப் பார்ப்பேன். துக்கம் நெஞ்சை அடைக்கும். பக்கம் பக்கமாக நீ எனக்குப் பிரியமாக எழுதிய கடிதங்களை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அழுகை வரும்.

இன்றும் மூக்கை உறிஞ்சிய படி உனது ஒரு கடிதத்தை எடுத்தேன். அழுகை ஓய்ந்திருந்தாலும் விம்மலும் பெருமூச்சும் இன்னும் ஓயாதிருந்தன. கன்னத்தில் எச்சமாய்க் கண்ணீர் அரை குறையாகக் காய்ந்தபடி இருந்தது.

நான் வாசிக்கத் தொடங்கினேன்.


157/1 OLR Lane
Hospital Road
Jaffna
Srilanka
29.6.1991


பிரிய தங்கைக்கு,
உனது தொகுதி தொகுதியான கடிதம் இன்று - இப்போ கிடைத்தது. ஆற்றாமையினாலும், விரக்தியினாலும் இறுகிப் போயிருந்த என்னுள் எரிமலை வெடித்தது போன்ற கொந்தளிப்பு உருவாகி கண்ணீராய்ச் சொரிகிறேன்.


என்னையே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவேசம் வரும் கட்டங்களில் இப்படியான அன்புப் பிரவாகங்கள் தாக்கி - என்னுள் இருக்குமெல்லாம் பீறிட்டு வெளியேறுவதால் ஒரு விதமான களைப்பும் ஓய்வும் ஏற்படுகிறது.

20.12.90 அன்று எனது பாடசாலை ஆசிரியர்களுக்குரிய சம்பளப் பணத்தை எடுப்பதற்காக கொழும்பு சென்றேன். அவ்வேளை எமது தம்பி பார்த்திபன் யேர்மனி பயணமாகத் தயாராக நின்றான். சந்தோசமாக அவனை பயணம் அனுப்பினேன். வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால் கொழும்பில் 29ந் திகதி வரை நின்றேன். அங்கு நின்ற ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக எனது பிள்ளைகளுக்குத் தேவையான சில கல்வி உபகரணங்கள் உடைகள் போன்றவற்றை வாங்கினேன்.

29.12.90 அன்று வவுனியா வந்தும், சீனி, சவர்க்காரம் போன்றவற்றிற்கு ஊரில் தட்டுப்பாடு என்பதால், 30.12.90 வரை தங்கி நின்று அப்பொருட்களை வாங்கினேன். இதற்கிடையில் எத்தனையோ இராணுவத் தடைகளில் பார்த்திபன் பயணிக்கும் போது தந்து விட்ட மின்சார உபகரணங்களைப் பறிகொடுத்தேன்.

காலையில் ஒரு சூட்கேசுடனும், மூன்று பைகளுடனும் சைக்கிளில் கடைசித் தடையையும் தாண்டினேன். மிதிவெடி நிறைந்த வயல்களினூடு, தொடை வரை சேறு புரள சைக்கிளை முக்கி முக்கித் தள்ளினேன். இனியென்ன..! என்ற பூரிப்பில் முந்தி முந்தி வந்தேன். பூந்தோட்ட கிரவல் பாதையில் ஏறும் போது 100 யாருக்கப்பால், எனது வலது புறமாக ஒரு பவல் Armoured car ம் இரண்டு Trucks ம் வருவதைக் கண்டேன். சனங்கள் இடது புறமாக ஓடினர். நானும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.

Firing தொடங்கி விட்டது. பல சைக்கிள்கள் விழுந்தன. பெரிய காயங்களில்லை. நானும் சைக்கிளை ஒரு மரத்துடன் சாத்தி விட்டு, பெரிய மரமொன்றின் பின்னால் படுத்தேன். தொடர்ந்து Firing. எனக்குப் பக்கத்தால் எல் 222....222 என்று குண்டுகள் பாய்ந்தன. ஓய்ந்தன. பின் பாய்ந்தன. பின்னர் Armoured car இலிருந்து Canonshell முழங்கியது. பாரிய பயங்கரச் சத்தம். என்னருகில் ஒருவன் நின்றான். Canon தொடங்க, பாய்ந்து கிடங்கில் வீழ்ந்து ஓடி விட்டான். என்னால் அசைய முடியவில்லை. பயம். எதுவும் நடக்காதென்ற நம்பிக்கை. படுத்திருந்தேன்.

மிகப் பாரிய ஓசையில் Canon குண்டுகள் பட்டுக் கொப்புகள் முறிந்தன. திடீரென மின்வெட்டும் அதிர்ச்சி. தலை நிமிர்த்தி என் உடலைப் பார்த்தேன்.
(மல்லாக்காகப் படுத்திருந்தேன்.) என் முழங்கால் இருந்த இடத்தில் கொழுப்பும், இரத்தமும், சதையுமாக ஒரு பள்ளம். வெள்ளையாக எலும்புகள். காலை அசைத்தேன். இரண்டு எலும்புகள் உரசி "ஐயோ... அம்மா..!" என்று என்னால் முடிந்தளவு பலமாகக் கத்தினேன். கண்ணீர் வந்தது. பதிலாக படபடவென குண்டுச் சத்தம் வந்தது.

எனது மற்றைய கால் பெருவிரல் போனதோ, கை முறிந்ததோ அந்தக் கணத்தில் எனக்குத் தெரியாது. நான் இப்படியே இருந்தால் செத்து விடுவேன் எனத் தெரிந்தேன். குருதி அருவியாகப் புல்லில் ஓடிக் கொண்டிருந்தது. நான் மயக்கமாவதை உணர்ந்தேன்.

கூடாது. இது ஆபத்து. என என்னறிவு உணர்த்தியது. திரும்பிப் பார்த்தேன். சைக்கிள் நிற்கிறது. எனது சக்தியெல்லாவற்றையும் கூட்டி "அண்ணை என்னைத் தூக்குங்கோ...! " என்று கத்தினேன். மீண்டும் புலன்கள் குறைகிறது. யாரோ ஒருவர்(நாட்டாண்மை) வந்து என்னைப் பார்த்தார். "ஐ..யே..யே" என்றார். "பொறுங்கோ வாறன்" என்றார்.

எங்கோ எப்படியோ போய் நால்வர் வந்தனர். என்னைத் தூக்கினார்கள். தொடர்ந்து A.K.47 Firing. "அண்ணை என்ரை சாமான்களும் சைக்கிளும்." என்றேன். "ஆளே முடியப் போகுது. சைக்கிளாம்." என்றார்கள்.

கால் புல்லில் தேய, குருதி ஆறாய் ஓட தூக்கி வந்து சாக்கில் கிடத்தி (இயக்கம் அல்ல) Tractor இல் ஏற்றினார்கள். ரக்ரர் பெட்டி முழுக்க இரத்தம். பெடியளின் சென்றிக்கு வர சனம் குவிந்தது புதினம் பார்க்க, எனக்குத் தெரிந்த பெடியள் யாரும் இல்லை.

ரக்றர் ஓட்டி மேற்கொண்டு பயணிக்க மறுத்தான். மினிவான்கள் ஏராளம் நின்றன. யாவரும் மறுத்தனர். என்னைக் கிட்டிய மருத்துவமனையான கிளிநொச்சிக்குக் கொண்டு போகக் கூட மறுத்தனர். நான் செத்து விடுவேன், என்று நம்பினர். யாரோ.... எனது மனைவியின் தூரத்து உறவினர் என்னுடன் வர ஒப்புக் கொண்டார். எனக்கு அவரைத் தெரியாது. அவருக்கு என்னைத் தெரியுமாம்.

"எனது சைக்கிளையும், சூட்கேசையும் எடுத்து வையுங்கோ." என ஒரு அன்பரிடம் சொன்னேன். பத்திரிகை நிருபர்கள் முகவரி கேட்டனர். சொன்னேன். செஞ்சிலுவைச் சங்க வாகனம் வந்தது. உதவும் படி ஆங்கிலத்தில் கேட்டேன்.

அவன் எனது இடுப்புப் பட்டியை உருவி, ஒரு தடி முறித்து முறுக்கிக் கட்டினான்.(இரத்தம் போகாதிருக்க). ஒரு கோப்பை தேநீர் தந்தான். தான் அநுராதபுரம் போவதாயும் என்னை யாழ்ப்பாணம் போகும் படியும் சொன்னான். நல்லவன்.

இறுதியில் மினிவான்காரன் ஒருவன் கிளிநொச்சி போக 5000ரூபா கேட்டான். ஒப்புக் கொண்டேன். வழி வழியே வாகனத்தின் படிகளினூடு குருதி வடிந்ததாம். நான் ஏதேதோ கதைத்தேனாம். மயங்கினேனாம். அது பெரிய கதை. பின் கிளிநொச்சி மருத்துவமனையில் டெக்ஸ்ற்றோஸ் ஏற்றினார்கள். இன்னும் பத்து நிமிடம் தாமதமானால் இறந்திருப்பேன் என்றார்களாம். (இறந்திருக்கலாமென இப்போதெல்லாம் நினைக்கிறேன்.)

மீண்டும் அங்கிருந்து பூநகரி ஜெற்றிக்கு வர செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்புலன்சுக்கு டீசலுக்குப் பணம் கேட்டார்கள். 3200ரூபா கொடுத்தேன். பின்னர் ஜெற்றியிலிருந்து யாழ்ப்பாணம் வர 1300ரூபா கேட்டார்கள். கொடுத்தேன்.

நடுநிசியில் யாழ் மருத்துவமனையில் வைத்தியர்கள் சொன்னார்கள் "நீர் எண்ட படியால் வந்திருக்கிறீர். உமக்கு மனோதிடம் கூட" என்று. (என் மனோ திடத்திற்காக வருந்துகிறேன்.)

ஆறுமாத காலமாக ஒரு கால் இல்லாமல், ஒரு கை இயங்காத நிலையில் இருக்கிறேன். போன சனிக்கிழமை எக்ஸ்றே எடுத்தேன். கை எலும்பு பொருந்தவில்லை. அதை மீள வெட்ட வைத்தியர்கள் விரும்பவில்லை. முன்னைய மருத்துவ வசதிகள் இப்போ இங்கில்லை. கால் போட்டாலாவது ஏதாவது செய்யலாம். ஜெயப்பூர் கொம்பனியில் கால் இல்லை. கூட்டுப் படைத் தலைமையகம் கால் கொண்டு வர மறுக்கிறது.

எனது வீட்டுக் கேற்றைத் தாண்ட முடியாத நிலையில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்த படி, யாரோ சொன்ன தகவல்களைக் கேட்ட படி முடங்கியிருந்த எனக்கு இப்போ ஆறுதல் தரும் ஒரு விடயம் பொட்டம்மான் அவர்களிடம் கடமையாற்றுவது ஒன்றுதான். அவர்களில் ஒருவர் காலையில் வந்து என்னை மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்று மாலையில் எனது கடமை முடிந்ததும் என்னை வீட்டில் கொணர்ந்து விடுவார். அங்கு கடமையாற்றும் பொழுதுகளில் நான் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறேன்.

இது ஒரு துன்பியல் கடிதமாக அமையக் கூடாது என்பதற்காகப் பலவற்றைத் தவிர்த்துள்ளேன். என்னால் தாளமுடியவில்லையம்மா. எப்படியிருந்த நான் எப்படிக் கூட்டுப் பறவையாய்ப் போனேன். நீ வருந்தாதே.

உன் பிரிய
அண்ணன்.


இப்போது நான் அழவில்லை. மனசு பாரமாக இருக்கிறது. கடிதத்தை மூடி வைத்த பின்னும் படம் போல நினைவுகள். நீயும் நானும் எமது ஆத்தியடி வீட்டில், விறாந்தை நுனியில் குந்தியிருந்து, பிச்சிப் பூப்பாத்திக்குள் காகிதக் கப்பல் விட்டதிலிருந்து, எத்தனையோ நினைவுகள். எப்படி வாழ்ந்தோம் எமது பருத்தித்துறை மண்ணில். ஏன் இன்று இப்படியானோம்?

பத்து வருடங்களாக ஒற்றைக் காலுடன் துயர்களைச் சுமந்த நீ...
உனது ஒவ்வொரு நிலை பற்றியும் எனக்கு எழுதிக் கொண்டிருந்த நீ...
இப்போது மட்டுமேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

போவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட "டொக்டர் என்னைக் கெதியாச் சுகப் படுத்தி விடுங்கோ. நான் புலிகளின் குரல் வானொலிக்குக் கவிதை எழுதோணும்" என்று சொன்னாயாமே! "தங்கைச்சி யேர்மனியிலையிருந்து ரெலிபோன் பண்ணினவளோ..?" என்று கேட்டு, டொக்டர் ஓமென்றதும் கண்களில் ஏதோ மின்னத் திருப்திப் பட்டாயாமே..! பிறகேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

முகவரியைக் கூடத் தராது சென்று விட்டாயே..! உனக்கு எழுத என்று நான் எனக்குள் எழுதி வைத்தவைகளை எங்கே அனுப்ப..?

13.5.2000 அன்று (தனது 42வது வயதிலேயே) காலமாகி விட்ட
எனது அண்ணன் கவிஞர் தீட்சண்யனின் - நினைவாக....


சந்திரவதனா
யேர்மனி
9.7.2000

18 comments :

பத்மா அர்விந்த் said...

அன்பு சந்திரவதனா
இனி எப்போது இந்த நாள் வந்தாலும் உங்கள் நினைவும் வரும். நீங்கள் சொன்னதை புரிந்து கொள்ள முடிகிறது. நினைவுகளில் இருப்பவரின் அந்த நினைவுகளே ஆறுதலாகும்.

வெற்றி said...

சந்திரவதனா அக்கா,
மனதைக் கனக்க வைத்த பதிவு.
உங்களின் வலிகள் புரிகிறது. என்ன செய்வது! இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எமக்குப் பிரியமானவர்களை இழக்க நேரிடும் என்பது இயற்கை. இயற்கையின் நியதியை நாம் மாற்ற முடியுமா?

Anonymous said...

This post really touched my heart. I feel for you. I am sorry you lost your brother. HE IS WITH GOD. HE IS IN HEAVEN WATCHING YOU.

Take care.

Rumya

Anonymous said...

emmathu thessam unkaal kudumbathai ennrumm maravathuu

மஞ்சூர் ராசா said...

தாங்க முடியாத வலியை வார்த்தைகளில் வடிக்கையில் அந்த எழுத்துக்களும் கண்ணீர் விடுமோ என உங்களின் இந்த ஆறாத நினைவுகளை படிக்கையில் தோன்றியது.

Anonymous said...

உங்களின் வலி புரிகின்றது.

Pahirnthu Kolla naangalum Irukkirom.

Kaalm ungal kavalaikala maatrattum.

Anpudan,
Thabotharan,
Uppsala, Sweden.

Pandian R said...

நமக்கென்று உள்ள சொந்தங்களில் பெற்றோர்களூம் உடன் பிறந்தோர்களும் சொந்தங்கள் அல்ல. அது ஒரு தைரியம், ஆதரவு. அண்ணன் அவர்களின் நினைவுகள் சோகமானதுதான். என்றாலும் அந்த சோகம்தான் உங்கள் பாசத்தின் அடையாளம். எனவே மனம் வருந்தாதீர்கள்.

Anonymous said...

சிறு வயது குதியாட்டங்களை எண்ணி எண்ணி ஏங்குவதே முதுமையின் முக்கிய பணி. அதிலும் முக்கியமானவர்களை இழந்து விட்டிருந்தால் மனம் வெறுமை சூழ வெம்பி தவிக்கும்... பிறரிடம் குறிப்பாக குழந்தைகளிடம் மனம் செலுத்தி வெறுமையை இட்டு நிரப்புங்கள்.

நந்தா said...

மனசை என்னமோ பண்ணிருச்சீங்க.

//அதற்காக எனது எல்லா செயற்பாடுகளையும் விட்டு விட்டு இன்றைய பொழுதை நான் அழுத படியே கழிக்கவில்லை. எனது நித்திய வேலைகள் வழமை போலவே தொடர்கின்றன. காலம் சிலவற்றை ஆற்றித்தான் விடுகிறது. //

சாதாரண வார்த்தைகளாக எனக்குத் தோன்ற வில்லை. உள்ளுக்குள்ள ஒரு வெறுமை படருது. ஒரு இனம் புரியா சோகம். விட்டா நானும் அழுதிருப்பேன். ஆஃபிஸ்ங்கறதால என்னைக் கட்டுப் படுத்திக்கிட்டேன்.....

காட்டாறு said...

அன்புள்ள சந்திரவதனா அவர்களுக்கு, உங்கள் பதிவுகளை தவறாமல் வாசிப்பவள் நான். பதில் கூறமுடியாமல் சென்ற காலங்களும் உண்டு. இந்த பதிவு என் நெஞ்சைப் பிழிந்து விட்டது. ஆறுதல் கூற வார்த்தை ஏதுமின்றி தவித்தேன். என் சிறு பதிலே போதுமானதென்று எழுத ஆரம்பித்தேன். உங்கள் வலிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. காலம் மனப் புண்ணை ஆற்றும் என நம்பிக்கையோடு இருப்போம்.

காரூரன் said...

சந்திரவதனா அக்கா,
மனதை உருக்கும் பதிவு. எனக்கும் ஒரு சகோதரர் வலது கையை விபத்தில் இழந்து பொய்க்கை பாவித்து கனடாவில் வாழ்கிறார். ஒவ்வொருவரின் மனநிலையில் நின்று பார்த்தால் தான் அதனுடைய வலி தெரியும். இந்த வலைப்பதிவில் நம் மன கனத்தையும் பகிர்ந்து கொள்ள நல்ல இதயங்கள் இருக்கின்றது என்று ஆறுதல் பட்டு கொள்ளுங்கள்.

உங்கள் வலைப்பதிவுக்கு எனது முதல் வருகை,
கணா

Anonymous said...

நெஞ்சைத் தொட்ட பதீவு

காவியன்

Anonymous said...

I wish to share your feelings. Death is not the ultimate: is only a change of morphology. Pray for the beloved soul.
Jega

Anonymous said...

Chandrawathana:
Your creations are really fantastic.Keep writing more.
Uma

Chandravathanaa said...

மரணம் தரும் வலியைப் புரிந்து கொண்டு ஆறுதல் வார்த்தைகளால் என்னை நெகிழ வைத்த அனைவருக்கும் நன்றி.

வவ்வால் said...

படிக்கும் போது இது கதையாக இருக்க வேண்டும் என மனம் விரும்பியது , ஆனால் உண்மையாக இருக்கிறது(இப்படி சில உண்மை பதிவுகளைப்படித்து ஏன் இப்படி என நினைப்பதால்) வார்த்தைகளில் சொல்ல எதுவும் இல்லை. சீரணிக்க கடினமான உண்மைகள்!

Chandravathanaa said...

வவ்வால்,
ஒவ்வொரு மரணச் செய்தியின் பின்பும் ´இது பொய்யாக இருக்காதா?
இது கனவாக இருக்கக் கூடடாதா?
என்றெல்லாம் ஏங்கிய பொழுதுகள் உண்டு.

அண்ணனின் கால் போன செய்தி வந்த போதும் கூட ´பொய்யாக இருக்கு வேண்டும் என்று மனசுக்குள் மன்றாடியிருக்கிறேன்.

ஆனால் எதுவும் பொய்யாகவில்லை. நடக்கக் கூடாதென நினத்தவைகளும் நடக்காது என நினைத்தவைகளும் நடந்துதான் முடிந்தன.

+Ve அந்தோணி முத்து said...

அக்கா,
உங்களை நான் அக்கா என்று அழைக்கட்டுமா?

அண்ணனின் கடிதம் படிக்கையில் இழப்பின் வேதனையில் அவர் எப்படியெல்லாம் துடித்திருப்பார், அவரது இழப்பின் துயரம்,
உங்களை எந்த அளவு கொன்று போட்டிருக்கும், என அனுபவபூர்வமாக என்னால் உணர முடிந்தது.


//எனது வீட்டுக் கேற்றைத் தாண்ட முடியாத நிலையில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்த படி, யாரோ சொன்ன தகவல்களைக் கேட்ட படி...//

அண்ணனுடைய இவ்வார்த்தைகள் எத்தனை சத்தியம்.

சுமார் 25 வருடங்களாக நானும் இதே துயரை அனுபவிப்பதால்,
மனக் காயங்களின் வலியின், கொடூரத்தை முழுமையாகஉணர முடிகிறது.

அண்ணனுடைய உடலுக்கு ஏற்பட்ட இழப்பைவிட மனதின் வலியே அவர், மரணத்துக்கு காரணமாயிருந்திருக்கும்.

அப்பாவின் மரணத்துக்குப் பிறகு,
நான் வாய் விட்டுக் கதறி அழுதது,
இந்தப் பதிவைப் படித்த பிறகுதான்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite