
நேற்றுத்தான் போலிருக்கிறது. நீ ஜேர்மனிக்கு வந்தது. நான்கு வருடங்களின் முன் வந்திருந்தாய். பார்த்துப் பேசும் பாக்கியம்தான் எனக்கில்லாமற் போய் விட்டது. பார்க்காமலே இருந்து விடுவோம் என்றாய். பால்ய காலத்து முகங்களையே மனங்களில் வார்த்திருப்போம் என்றாய்.
இன்றைக்கு ஏன் இதெல்லாம் என் நினைவில் வருகின்றதென்றே எனக்குத் தெரியவில்லை. இரவின் நிசப்தங்களைக் குலைக்கும் ஒவ்வொரு சப்தங்களும் எனக்குக் கேட்கின்றன. ஆழ்ந்து உறங்கிப் போகும் நான் ஏன் இப்படி அர்த்த ராத்தரியில் அர்த்தமற்று விழித்திருக்கிறேன் என்று புரியவில்லை. மனசு குழம்புகிறது. எதையோ இழந்தது போலத் தவிக்கிறது.
´எனக்குப் பிரியமான யாருக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ..?´ இருட்டுக்குள் நடந்து வரும் போது தூரத்தே தெரியும் வேப்பமரத்தில் ´பேய் இருக்குமோ!´ என்ற நினைவு வந்தவுடன் குடல் தெறிக்க ஓடும் சின்னப்பிள்ளை போல, கேள்வி தோன்றிய மாத்திரத்தில் மனசு சில்லிடுகிறது. ´வேண்டாம், எந்த அசம்பாவிதங்களும் வேண்டாம். இதற்கு மேல் யாரையும் இழக்கவோ, யாரும் எதையாவது இழந்து விட்டார்கள் என்று கேட்கவோ இந்த மனசுக்குத் திராணியில்லை.´ நினைவுகளிலிருந்து விலகி ஓடுகிறேன். வேப்பமரத்துக்குப் பயந்து ஓட, வளைவில் தெரியும் முடக்குக் காணிக்குள் விருட்சமாய் விரிந்திருக்கும் புளியமரம் மீண்டும் பேயை நினைவு படுத்துவது போல் எனக்குள்ளும் வேண்டாத நினைவுகள் வந்து என்னைப் பயமுறுத்துகின்றன. குடல் தெறிக்க ஓடுகிறேன்.
´இல்லை, யாருக்கும் ஒன்று நடந்து விடாது. எனக்கு நித்திரை வராததற்கான காரணம் வேறாக இருக்க வேண்டும்.´ இரவிலே உடற்பயிற்சி செய்வது அவ்வளவு நல்லதல்ல, என்று ராகினி பலதடவைகள் சொல்லியிருக்கிறாள். இருந்தும் வேலை முடிந்த பின் ரெட்மில்லரில் 45நிமிடங்கள் ஓடிவிட்டுத்தான் வீட்டுக்கு வந்தேன். அதனால்தான் நித்திரை கொள்ள முடியவில்லைப் போலும்.
என்னதான் சமாதானம் செய்தாலும், ஏனோ சில நாட்களாகவே மனம் குழம்பித்தான் இருக்கிறது. இன்று கொஞ்சம் அதிகப் படியாக. என்னவென்று புரியாத உணர்த்தல்கள். அடிக்கடி விழிப்பு. படுத்ததும் தூங்கி விடும் என் இயல்பு நிலையில் இருந்து விலகியிருக்கிறேன். ஏதோ ஒரு யோசனை என்னை அழுத்துகிறது. ஏன் இந்த உணர்வுகள் என்ற கேள்வி இந்தச் சில நாட்களுக்குள் பலதடவைகள் எனக்குள் எழுந்து விட்டது. ஆனாலும் ஐரோப்பிய அவசரங்களினூடு என் நாட்களும் விரைகின்றன.
ம்.. மீண்டும் நீ… ஏன் என் நினைவுகளில் வருகிறாய். மனத்திரையில் வலம் வரும் பலநூறு முகங்களுக்கு இடையில் நீ கொஞ்சம் அதிகமாகவே வருகிறாய் போலிருக்கிறது. அடிக்கடி வருகிறாய். இந்தச் சில நாட்களுக்குள் உன்னை இன்னும் அதிகமாக நினைக்கிறேன் போல இருக்கிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஏதோ ஒரு உந்துதலில் உனது மகளுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். உனதும், உன் மனைவியினதும் புகைப்படம் ஒன்று எனக்கு அனுப்பும் படி. அவள் பதிலுக்காக இன்னும் என் மனம் காத்திருக்கிறது.
ஏனோ, உன்னைப் பார்க்க வேண்டும் போல மனதுள் ஆவல் எழுகிறது. மனங்களின் தொடுகைகளைத் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லாத தூரத்தில் நீ. உறவினன் என்பதையும் தாண்டிய ஏதோ ஒரு பிரியம் உன் மேல். எனக்கு உன் மேல் இருக்கும் பிரியத்தை விட உனக்கு என் மேல் இருக்கும் பிரியம் அதிகம் என்பதை நான்கு வருடங்களின் முன் நீ ஜேர்மனிக்கு வந்த போது தொலைபேசியில் பேசிய போதுதான் உணர்ந்தேன். அப்போதும் கூட நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. தொலைபேசி என்ற ஒரு சாதனம் இருந்ததால் பேசிக் கொண்டோம்.
அன்று மிகச் சாதாரணப் பெண்கள் போலவே நூறில் ஒன்றாய், இல்லையில்லை ஆயிரத்தில் ஒன்றாய், அதை விடப் பொருத்தமாய் உலகத்தில் ஒன்றாய்… சமையல் முடித்து, சாப்பாடு முடித்து, கொஞ்சம் முன்னேற்றமாய், மினுக்கிக் கழுவி மினைக்கெடாமல் பாத்திரங்களை டிஸ்வோசரில் போட்டு விட்டு, துடைப்பத்துக்குப் பதிலாக வக்கும் கிளீனரை எடுத்த போதுதான் உனது தொலைபேசி என்னை அழைத்தது. யாராவது தொல்லை பேசுபவர்கள்தான் அழைக்கிறார்களோ என்ற யோசனையில் மனசுக்குள் சலனித்து விட்டுத்தான் எடுத்தேன்.
என்னை முழுமையாகச் சலனப்பட வைக்க என்றே கனடாவில் இருந்து வந்தாயோ! என்னமாய் பேசி விட்டாய். மீண்டும் மீண்டுமாய் எனக்குள்ளே அவை ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. நினைவுகளில் மிதக்கின்றன.
அதுக்காக காதல், கத்தரிக்காய் என்று விபரீதமாய் ஏதும் கற்பிதம் பண்ணி விடாதே. நான் இன்னொருத்தன் மனைவி. நீ இன்னொருத்தியின் கணவன். சத்தியமாய் உன் மேல் எனக்குக் காதலில்லை. ஆனாலும் என்னைச் சலனப் படுத்துகிறாய். சற்று சஞ்சலப் படுத்துகிறாய். ஒரு வேளை உன் காதலை அன்றே நீ சொல்லியிருந்தால் நானும் உன்னைக் காதலித்திருப்பேனோ, என்னவோ..!
எனக்கென்ன தெரியும்? நீ என்னைக் காதலித்தாய் என்று நான் எங்கு கண்டேன்? பனங்கூடல் தாண்டி, அப்பாவோடு நான் உன் வீட்டுக்கு வரும் போதெல்லாம், மச்சான் நீ என்றும், உன்னை மணப்பது நான் என்றும் அப்பாச்சி சொல்லும் போதெல்லாம் எனக்கேதோ மரப்பாச்சி விளையாட்டுப் போலத்தான் இருக்கும்.
திருமணத்தின் அர்த்தமோ, காதலின் சந்தமோ தெரியாத அந்த வயதில் அரைக்
காற்சட்டைக்கு வெளியே அரைநாண் கயிறு எட்டிப் பார்க்க விளையாடிக் கொண்டிருக்கும் உன் மீது எனக்கு எந்த ஈடுபாடுமே வரவில்லை. காதல் மட்டும் எப்படி வரும்? அப்படியிருக்க அப்பாச்சியின் வார்த்தைகள் உன்னுள் ஆழப் பதிந்து போனதையும், நான் உனக்குத்தான் என்ற ஆசை உன்னுள் வேரூன்றி வளர்ந்து விட்டதையும் நான் எப்படி அறிவேன். ஒரு தரமாவது… நான் வளர்ந்த பின்னாவது நீ எனக்குச் சொல்லியிருக்கலாமே.
நான் பள்ளிக்கூடத்துக்குப் போகும் நேரங்களில் நீ சந்திக் கடையின் முன் ஒற்றைக்காலைத் தரையில் ஊன்றிய படி, மற்றக்கால் தொங்கிக் கொண்டு நிற்க சைக்கிளில் தவமிருந்தது எனக்காகத்தான் என்று நான் நினைக்கவேயில்லை. நீ சொன்ன போதுதான் நீ சந்தியில் நின்றதைப் பற்றியே நினைத்துப் பார்க்கிறேன்.
நீ கப்பலில் போய் விட்டாய் என்ற போது மாமியின் கஸ்டங்கள் தீர்ந்து விடும் என்று மனம் மகிழ்ந்தேனே தவிர வேறெந்த உணர்வும் எனக்கு வரவில்லை. நீ மட்டும் எப்படி உனக்குள் அப்படியொரு கனவை வளர்த்துக் கொண்டு திரும்பி வந்தாய். அங்கிருந்தாவது உன் விருப்பத்தை, ஆசையை, காதலைச் சொல்லி ஒரு கடிதம் எழுதியிருந்திருக்கலாமே!
ம்;.. அதற்கு நான்தான் அவகாசம் தரவில்லையோ!
சில வருடங்கள் கழித்து, நீ கப்பலில் இருந்து திரும்பி வந்த அன்றே என்னைப் பார்க்க என்று ஒடி வந்ததாய் சொன்னாயே! அப்போது கூட "மாமி..." என்றுதானே கூப்பிட்டுக் கொண்டு வந்தாய். அம்மா மீது உனக்கு அத்தனை பாசம் என்றுதான் நினைத்தேனே தவிர, உன் வரவு எனக்குள் எந்த சந்தத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் என்பாட்டில் என் குழந்தையை மடியில் வைத்து பால் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்தக் காட்சியில் உன் மனம் நொருங்கிப் போனதைக் கூட நீ யாருக்கும் அன்று சொல்லவில்லையே!
இத்தனை வருடங்கள் கழித்து, நான் பேரப்பிள்ளையையும் கண்ட பின் இதையெல்லாம் நீ என்னிடம் சொன்ன போது எனக்கு ஏதோ சினிமாப் படத்துக்கான கதையொன்றைக் கேட்பது போன்ற பிரமைதான் வந்தது. என்ன..? ஒரு வித்தியாசம். வழமையான கதைகளில் நான் வாசகியாய் அல்லது ரசிகையாய் இருப்பேன். இந்தக் கதையில் நானே கதாயநாயகியாய்…
நீ ஜேர்மனிக்கு வந்திருந்த போதும், நான் வர முடியாது போன அந்தக் குடும்பச் சந்திப்பில் ஒவ்வொரு அழைப்பு மணியின் போதும் நான்தான் வருகிறேன் என்று எதிர்பார்த்து ஏமாந்தாயாமே! அங்கு வந்திருந்த உறவுகளில் சிலர் என்னிடம் பின்னர் சொன்ன போது நியமாகவே நான் வருந்தினேன். வந்திருக்கலாமே என்று மனசுக்குள் ஆதங்கப் பட்டேன். ஆனாலும் பார்க்காமலே இருந்து விடுவோம் என்றும், பால்ய காலத்து முகங்களையே மனதில் வார்த்திருப்போம் என்றும் நீ சொல்லிச் சென்றதை நினைத்து மனத்தை ஆற்றிக் கொண்டேன்.
எனது 18வயதுக்குப் பிறகு உன்னைச் சந்தித்துக் கொண்டதாய் எனக்கு ஞாபகம் இல்லை. எனது அந்த வயது முகத்தைத்தான் உனக்குத் தெரியும். அதே போல நான் கடைசியாகச் சந்தித்த உனது அந்த 23வயது முகத்தைத்தான் எனக்கும் தெரியும்…
இப்போதும் கூட உன் மனைவி வேலைக்கும், மகள் பாடசாலைக்கும் சென்ற பின்னான தனிமைப் பொழுதுகளில் நீ என்னைப் பற்றிய நினைவுகளில் மூழ்குவாய் என்று சொன்னாயே! அது அவ்வப்போதான தனிமைப் பொழுதுகளில் என் நினைவுகளைச் சீண்டுவதை நான் உணர்கிறேன். அதற்காக எனக்கு உன்மேல் காதல் இருக்கிறது என்று மட்டும் நினைத்து விடாதே. இப்போதும் சொல்கிறேன், சத்தியமாக உன் மேல் எனக்குக் காதல் இல்லை.
ஆனாலும் வாழ்க்கை பற்றிய விடை கிடைக்காத சில பல கேள்விகள் என்னுள் எழுகின்றன. பெரியவர்கள் போட்ட புள்ளிகள் உன் மனதில் மட்டும் கனவுக் கோலமானது ஏன்? என்னை நீ நினைத்ததையும், என்னை நீ காதலித்ததையும் உணராமலேயே நான் வேறொருவனைக்: காதலித்து, கல்யாணம் செய்து… என்பாட்டில் வாழ்ந்திருக்கிறேனே! சின்ன உணர்த்தல்கள் கூட என்னிடம் இல்லாமற் போனது எப்படி?
மீண்டும் மீண்டுமாய் இந்த உன் பற்றிய நினைவுகள் ஏன் வருகின்றன என்று தெரியாமலே நான் தூங்கி விட்டேன் போலிருக்கிறது.
விடிந்த பொழுதிலும் மனசு குழம்பித்தான் இருக்கிறது. எனக்குப் பிரியமான யாருக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ? நினைக்கும் போதே வாயில் வைக்கக் கொண்டு போன உணவு நழுவி விழுந்து விடுகிறது. என் மேல் பிரியமான யாருக்காவது...? கேள்விகள் தோன்றுவதும் வழமை போலவே எனக்குள்ளேயே அமுங்கிப் போவதுமாய் பொழுது அவசரத்தோடு விரைகிறது.
வேலையிலும் மனதில் அமைதியில்லை. வேளைக்கே வீட்டுக்கு வந்து விட வேண்டும் போல மனசு அந்தரிக்கிறது. வந்து விட்டேன். அப்போதுதான் அந்த அழைப்பு… நீ;; ஒரு மருத்துவமனையில் கடுமையான நோயில் வீழ்ந்திருக்கிறாய் என்ற செய்தியோடு.
ஒரு கணம் திக்குமுக்காடி விட்டேன். எப்படியாவது உன்னோடு பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது. நன்றாகக் கதைத்துக் கொண்டுதான் இருக்கிறாய் என்றும் மருத்துவமனை என்பதால் இரவு பேச முடியாது என்றும் காலையில் பேசும் படியும் சொல்கிறார்கள். சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கான தொலைபேசி இலக்கத்தைத் தருகிறோம் என்கிறார்கள்.
மனசுக்குள் அலை புரள்கிறது. விழிகளில் நீர் திரள்கிறது. ஆனாலும் உன்னோடு பேசலாம் என்ற நம்பிக்கை என்னுள் பலமாக இருக்கிறது. அதிகம் காத்திருக்க வைக்காமல் தொலைபேசி அழைக்கிறது. எடுத்த போது, எனது நம்பிக்கைகள் தவிடு பொடியாகின்றன. நீ போய் விட்டாயாம். அப்போதுதான், அந்தச் சில நிமிடங்களுக்குள்தான்… என்னோடு பேசாமலே போய் விட்டாயாம்.
சொன்னது போலவே பார்க்காமலே போய் விட்டாய்.
ஒப்பாரி வைத்து அழுகின்ற அளவுக்கு நான் இல்லை. ஆனாலும் அவ்வப்போதான தேற்றுவார் இன்றிய தனிமைகளில் ஆற்றாமையில் கொட்டி விடுகிறது கண்ணீர்.
சந்திரவதனா
9.10.2007
18 comments :
மனம் ஆறுதல் அடையுங்கள் அம்மா
அம்மா,
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?
வைரமுத்து.
enna solvadendre puriyavillai..oomai uravugal pala murai nammai badhitthu vidu gindrana..manadhai thethikondu aandavanai prarthanai seyvaduthan ore vazhi
CU
சந்திரவதனா,
மனதை கனக்க வைக்கும் பதிவு. தான் நேசித்தவளை ஒரு போதும் சிரமப்படுத்தாமல் வாழ்ந்து காட்டிய மனிதராக தான் எனக்கு தோன்றுகிறார். தான் பக்குவப்பட்டதாக நினைத்தோரோ அல்லது நீங்கள் பக்குவப்பட்டதாக நினைத்தாரோ தெரியாது, நீங்கள் பேர்த்திகளை கண்ட பின் தான் தன் மனக்கிடக்கையை கொட்டியிருக்கின்றார். மற்றவரின் மன நிலையில் இருந்து சிந்திக்கும் மனித நேயம் உள்ள ஆற்றல் உங்களுக்கு இருந்ததால் தான் அவரின் வலிகள் உங்களின் வரிகளில் தெரிகின்றது.
உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கு ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கும் என்று நம்பி,
நட்புடன்,
காரூரன
mmmmmhhhmmm.....
enna parkkireerkal ithu kathayo allathu verum urainadayo.. ethuvakairunthalum ean anubavamakakkoda irunthalum aarambiththathu muthal mudivu varai niruththamal padiththen athanalthan intha unarvum peru moochchum...meendum antha nadkalukkul poi vantha oru unarvu... athu eppadi thodarnthu eluthikkonde irukkireerkal Vathana athuvum vara vara tharam uyarnthukonde selkirathu... (nalla ninaivukalai meedka vaiththathatku nanri)
enakku ethvum solla mudiyatha nilayilthan muthal kurippai eluthinen sirithu asuvasappaduththikkondu ithanai eluthukiren innum eththanai kurippu eluthuveno thriyathu... nijamaha ithu ungal anubavam enral aluthu therrththu vidungal Vathana... nan seithukondiruppathum athuthan..
எப்போதும் பிரியங்களின் கனங்களைக் காவித்திரிதல் கடினமானதுதான். அதிலும் பகிரப்படமுடியாத பிரியங்கள் நினைவுகளின் மீது எஃகுவாகி எக்காலமும் கனக்கும் போலும்.
இது கதையாய் இருந்திருந்தால் உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும், எனது மகிழ்ச்சியையும் மனமுவந்து சொல்லி இருப்பேன். ஆனால் உங்கள் சொந்த வாழ்க்கையின் சோகப் பகுதி இது. காலம் கடந்த ஆட்டோகிராஃப் இது. ஆனாலும் மொத்தமாய் போகும்போது உங்களை அவர் காதலிக்க வைத்து விட்டு போய்விட்டார், நீங்கள் பாட்டியான பின்பு...
சலசலப்பில்லாத தெளிந்த நீரோடையாய்
படிக்கப்படிக்க மன ஆழத்தில் எதுவோ!
நன்றி நன்றி நன்றி நீங்கள் ஆத்தியடியா? நானும் பருத்தித்துறைதான
"Manaosai" சந்திரவதனா...அக்கா..
என்னிய ரொம்ப பீல் பண்ண வச்சிட்டிங்கல்ல...
கொஞ்சம் தவறினாலும் தப்பர்த்தம் தரக்கூடிய ,ஒரு விஷயத்தை மிக ஜாக்கிரதையா..ஆனா..வீரியம் குறையாம தந்துருக்கிங்க...
பல சமயங்களுல நானும்,மத்தவங்கள புரிஞ்சிக்காம போயிட்டோமின்னு ,காலங்கடந்து உணர்ந்ததுண்டு.
தான் காதலிக்காத ,ஒருவன் தன்னை காதலித்ததை அறியும் போது "சே.. அவன நல்லவனு தான நெனச்சேன்." ன்னு, தன்னை(போய்) காதலித்ததன் மூலம் ,மன்னிக்க முடியாத கடுங் குற்றம் செஞ்ச போல கமன்ட் அடிச்சி , அந்த காதலுக்கு உண்மையிலேயே தான் அறுகதையில்லைன்னு நிருபிக்கும் பெண்கள் மத்தியில,காதல ஏத்துக்க முடியாத சூழ் நிலையில்யும் ,ஆனா அந்த அன்பை ஏத்துக்க மனசிருப்பது great.
அதானே?.. உன்மையான அன்பு செலுத்த அளில்லாத இந்த உலகத்துல,நம்மை நேசிக்கும் ஒருத்தரோட வாழ முடியாட்டாலும் ," அன்பை மாத்திரம் " பகிர்ந்துகிரது தப்பில்லைன்னு தோனுது.நம்ம நேசிக்கும் குழந்தைக் கிட்ட நாம அன்பு செலுத்துறதில்லயா?,.
காதலிக்கத் தெரிந்த அவர்,அவரோட துனைவியையும் காதலிச்சி நிறை வாழ்வு வாழ்ந்திருப்பார்ங்கரது நிச்சயம்."வெயில்ல இருந்தவனுக்கு,அருகாமை நிழலின் அருமை பற்றி நிச்சயம் புரியும்".
உங்க பக்குவம் என்னிய வியக்க வைக்குது .நானாயிருந்தாக்கா... "என்னையும் அறியாமல் எனக்குள் ஒன்று"ன்னு குழம்பிப் போயிருப்பேன்.வாழ்த்துக்கள் [வாழ்த்துரதுக்கு வயசெதுக்கு]
உணர்ச்சிகள் நியுராங்களில் ஹார்மோங்களின் நடனம் ங்கரத புரிஞ்சிகிட்டு யதர்த்தத்துல ஆறுதலடையருத தவர வேற வழியில்ல...
அன்புடன் ரசிகன்...
A very sensitive post..
Chitra
A GOOD JOB.
Congratulations!
Most of the readers think that this is your own experience.
Hey ........People
Let Chandravathana to work further.
Garunyan
அக்கா
மனதை நெருடிய ஒரு பதிவு. இந்த நிலை ப்லருக்கு ஏற்பட்டிருக்கிறது ஆனால் ஒரு சிலரோதான் வெளியில் பகிர்ந்துகொள்வார்கள்.
Don't ever gamble with life,you'll be left the tears and unreturnable times.
ஓசை செல்லா வி ன் பதிவில் இருந்து தான் இங்கே வந்தேன். இந்த கதை சொல்லிய பாங்கு என்னை பிரமிக்க வைத்தது. பலரும் இங்கு இது உங்கள் சொந்த வாழ்க்கை என்ற எண்ணத்தில் எழுதி இருப்பதை பார்த்தேன். என்னால் கதை என்று உணர முடிந்தது. ஆனால் நிஜம் போன்ற ஒரு உணர்வைய் ஏற்படுத்திய எழுத்துக்கள்.
வாழ்த்துக்கள்.
அன்பின் சந்திரவதனா,
தக்க சமயத்தில் சொல்லாத காதலைச் சுமந்தலைந்த ஒரு ஆணின் துயரம்...
தக்க சமயத்தில் உணரமுடியாக் காதலை
உணர்ந்த போது பருவங்கள் தாண்டித் தனித்துத் துயருரும் பெண்ணின் மனது...
இரு புறமும் மனம் கனக்கச் செய்யும் கதையிது.
காலங்கள் காயங்கள் ஆற்றும்.
இருப்பினும் ஒரு உயிரின் இழப்பு,மற்ற உயிரின் மனதில் மாறா உறுத்தலைப் பதித்துச் சென்றதன் வெளிப்பாடுதான் கண்ணீரா சகோதரி?
''புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வதாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரியவில்லை''
ஆரம்பத்திலே மனதைத் தொட்டு விட்டீர்கள். கொஞ்சம் கற்பனை கலந்த நிஜம். புலம் பெயர்ந்தும் எமது தமிழ் வாழுகின்றது என்பதற்கு இவ் வசன நடையை விட வேறு என்ன சான்று?????
Post a Comment