நெருங்கிய உறவொன்றின் மரணம் பெரும் சுமையாக, ஆற்ற முடியாத துயராக, விடை கிடைக்காத கேள்வியாக என்னை அழுத்திக் கொண்டேயிருந்தது. வாழ்பவர்கள் அத்தனை பேரும் இறந்துதான் ஆக வேண்டும் என்ற நியதி மனதுக்கு ஒவ்வாததாக இருந்தது. ஏன் என்ற கேள்வி அடிக்கடி என்னைக் குடைந்தது. மரணம் ஏன் என்பதை விட இந்த வாழ்வும், அதனோடு இணைந்த இன்ப துன்பங்களும், பிரிவுகளும் எதனால்? எதற்காக? மரணத்தின் பின்னே என்ன இருக்கிறது? மூச்சடங்கி, இரத்த ஓட்டங்கள் அஸ்தமித்து, உடல் வெறும் வெற்றுக் கூடாகி, சாம்பலாகி... இதுவே நியதியாய்... ஏன்? மனதின் அலைவுகளைத் தவிர்க்க முடியாமலே இருந்தது.
ஒவ்வொரு மரணமும் அது சார்ந்த நெருங்கிய உறவுகளை அடித்துப் புரட்டிப் போட்டு விடுகிறது. சிலரை மனதளவில் அதள பாதாளத்தில் கூட வீழ்த்தி விடுகிறது. அதற்காக ஆதவன் தொடங்கி அத்தனை இயற்கைகளும் அசமந்து இருந்து விடுவதில்லை. உலகம் தன்பாட்டில் இயங்கிக் கொண்டேயிருக்கும். சம்பந்தப் பட்டவர்களும் அவரவர் மனங்களுக்கு ஏற்ப ஸ்தம்பித்து, உறைந்து, கண்ணீரில் கரைந்து மீண்டும் மெதுமெதுவாக எல்லாவற்றுடனும் இணைவார்கள்.
நானும் மெதுமெதுவாக என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வெளியோடு இணைய முயன்றேன். ஆதவனின் இருப்பு அதீதமாகவே தெரிந்தது. வெளியின் வெளிச்சம் மனதிலும் சிறிய புத்துணர்வைத் தந்தது. வசந்தம் வந்து விட்டதாம். கடந்த சில நாட்களில் கொட்டி விட்ட பனியின் சுவடே தெரியாமல் புற்கள் பசுமை காட்டின. இலைகள் துளிர்க்க முன்னமே சில மரங்கள் மொட்டவிழ்த்திருந்தன. வீதிகளின் ஓரங்களிலும், வீடுகளின் முன்றல்களிலும் சிவப்பு, மஞ்சள், நீலம்... என்று பல வர்ணங்களிலும் பூக்களைத் தாங்கியபடி செடிகள் அசைந்தாடின. மௌனித்திருந்த வீதிகள் மனிதர்களினால் ஆராவாரப் பட்டன. இத்தனை கோலாகலங்களிலும் கலந்து கொள்ளாமல் சில மரங்கள் இன்னும் நிர்வாணமாகவே நின்றன.
வெயில் சிரித்தாலும் கொஞ்சமாய் குளிரும் உறைத்தது. கடும் குளிருக்கான தடித்த உடைகளும், சப்பாத்துகளும் தவிர்க்கப் பட்டதால் வேகமாக நடக்க முடிந்தது. இப்படியான பொழுதுகளில் பேரூந்தை விடுத்து நடந்தே வேலைக்குப் போய் விடுவது என் வழக்கம். மூளையில் பதியப் பட்டிருக்கும் சில நாளாந்த விடயங்கள் அதிக சிந்தனைகளுக்கு இடமின்றி தன்பாட்டில் நடந்து விடுவது போல நானும் பேருந்துத் தரிப்பிடத்தைத் தாண்டி மலைக்குன்றிலிருந்து கீழிறங்கும் படிக்குத் தாவினேன்.
வாகனங்களின் இரைச்சல்களிலும், புகைகளிலும் தவித்துத் தத்தளித்துக் கொண்டிருக்கும் பெருஞ்சாலைகளை விட மரங்களும், செடிகளும் இருமருங்கிலும் அசைந்தாடும் சிற்றொழுங்கைகளிலும், சிறு வீதிகளிலும் நடக்கும் போது ஒரு தனியான சுகம் கிடைக்கும். அனேகமான பொழுதுகளில் வேலைக்குச் செல்வதற்கு நான் தேர்ந்தெடுக்கும் பாதை ஆலனில் தொடங்கி எனது ஸ்வெபிஸ்ஹால் நகரை ஊடறுத்து நகர்ந்து கொண்டிருக்கும் நதியை ஒட்டிய கரைப் பாதையாகவே இருக்கும். அந்தப் பாதையில் நதியைப் பார்த்துக் கொண்டே, அதன் சலசலப்பைக் கேட்டுக் கொண்டே எத்தனை மணித்தியாலங்கள் வேண்டுமானாலும் நடந்து விடலாம்.
இன்பத்திலும் சரி, துன்பத்திலும் சரி என்னைத் தழுவி, என்னோடு கலந்து எனது உணர்வுகளுக்கு வலுவும், உயிர்ப்பும் சேர்க்கும் இசை போல நதியின் சலசலப்பும் என் செவிகளினூடு புகுந்து மூளையின் ஒவ்வொரு உணர்வு நரம்புகளையும் சிலிர்க்க வைத்தது. தவழ்ந்து கொண்டிருந்த தென்றல் முடியோடு சல்லாபித்தது. கன்னங்களை வருடியது. நெளிந்து வளைந்து நகர்ந்து கொண்டிருந்த நதியின் மேற்பரப்பில் பட்டுத் தெறிந்த சூரியஒளியில் கண்கள் பனித்தன. மரணம் பற்றிய கேள்விகள் தற்காலிகமாக என்னிடமிருந்து விடைபெற்றன. கவலைகளும், நினைவுகளும் என் மனதுக்குள் முட்டியிருந்தாலும் இயற்கையின் தழுவலில் ஒருவித கிறக்கம் என்னை ஆட்கொள்ள நான் விரைந்து கொண்டிருந்தேன்.
இன்று திருவாளர் சுறொத்துடன் ரெஷறியில் வேலை செய்ய வேண்டுமென கடந்த வாரமே அறியத் தந்திருந்தார்கள். சுறொத்துடன் வேலை செய்வது என்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். சுறொத் இனிமையானவர். மென்மையானவர். சந்தோசமாகப் பழகக் கூடியவர்.
சுறொத்தை முதன் முதலாக சந்தித்த நாள் இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. நான் வங்கியில் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களில் ஒரு நாள் ´திருமதி.சூமாகர் சுகவீன விடுமுறையில் போய் விட்டார்´ என்ற செய்தியைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு என்னைப் போகும் படி பணித்தார்கள். நான் செய்யும் வேலைக்கும், அந்த வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாயினும் அது ரெஷறி என்பதால் நம்பிக்கையான ஆட்களை மட்டுமே அதனுள் அனுமதிக்கலாம் என்ற அடிப்படையில் என்னை அழைத்திருந்தார்கள். என்னோடு பல ஜேர்மனியப் பெண்களே வேலை பார்க்கும் போது அவர்களை விடுத்து என்னைத் தேர்ந்ததில் அவர்களிடம் சற்றுப் பொறாமை தெரிந்தது. ஆனால் எனக்கோ பழகிய வேலையையும், பழகிய வேலைத் தோழிகளையும் விட்டு அந்த செக்சனுக்குப் போவதில் அரைமனதான சம்மதமே இருந்தது. மறுக்க முடியாத நிலையில் போனேன்.
தடித்த சுவர்களும், இரும்புக் கதவும் கொண்ட அந்த நிலக்கீழ் அறைக்குள் நுழையும் போது ஏதோ சிறைச்சாலைக்குள் செல்வது போன்ற உணர்வே மேலோங்கி என்னைப் பயமுறுத்தியது. உள்ளே நுழைந்து விட்ட மாத்திரத்தில் வேறு உலகத்துக்குள் வந்து விட்டது போன்ற உணர்வு தோன்றியது. அப்படியொரு அழகான பெரிய அறை. சுவர்களில் இயற்கைக் காட்சிகளுடன் அமைந்த அழகான பெரிய பெரிய புகைப்படங்கள். ஒவ்வொரு புகைப்டத்திலும் திரு.சுறொத் அவர்கள் இளமைக்கோலத்துடன் அவர் மனைவியை அணைத்த படியும், மனைவியுடன் பனிச்சறுக்கல் செய்த படியும், மலைகளில் கயிறுகளில் தொங்கிய படியும், ஏறிய படியும் என்று மிக மிக அழகான புகைப்படங்கள் தொங்கின.
சுறொத் மெல்லிய புன்சிரிப்புடன் கைகுலுக்கி என்னை வரவேற்றார். அவரைப் பார்த்ததுமே எனது அப்பாவின் நினைப்புத்தான் எனக்கு வந்தது. எனது அப்பா போல வாட்டசாட்டமான உடலமைப்பு இல்லாவிட்டாலும் அந்தப் புன்சிரிப்பிலும், கண்களை ஊடுருவிய அந்தப் பார்வையிலும் ஒரு கனிவும், மிகுந்த நட்பும் தெரிந்தது. அழகு என்பது தோற்றத்தில் மட்டுமல்ல, புன்சிரிப்பிலும், பார்வையிலும், பழகுதலிலும் கூட இருக்கிறது என்பதை நட்போடும், பண்போடும் பழகக் கூடிய அவரோடு வேலை செய்யத் தொடங்கிய பின்தான் புரிந்து கொண்டேன்.
அந்தப் பாதுகாப்பான அறையினூடு இன்னொரு அறைக்குள் செல்லலாம். முதன் முதலாக அந்த அறைக்குள் நுழைந்த பொழுது என்னுள் ஒரு அதிர்வு ஏற்பட்டது. சுற்றி வர அறைச் சுவரெல்லாம் அலுமாரிகள் பொருத்தப் பட்டிருந்தன. அலுமாரிகளின் ஒவ்வொரு தட்டிலும் கட்டுக் கட்டாகப் பணங்கள். பணத்தாள்கள். வெறுமே படங்களிலோ, புத்தகங்களிலோ பார்ப்பது போலல்லாமல் நியமான பணக்கட்டுகள். தலை கிறுகிறுத்தது. இரண்டு கைகளாலும் தலையின் இருபக்கங்களையும் அழுத்தியவாறு அப்படியே பேச மறந்து நின்று விட்டேன்.
'என்ன திகைத்து விட்டாயா? இன்றுதானே முதன் முதலாகப் பார்க்கிறாய். சில காலம் போக இதெல்லாம் வெறும் தாள்கள் என்பதான உணர்வைத்தான் இவைகள் உனக்குத் தரும். என்னைப் பொறுத்த வரையில் இதெல்லாம் வெற்றுத் தாள்களே' என்றார் சுறொத்.
அன்றைய பொழுதில் என்னை விட சுறொத்தான் அதிகம் கதைத்தார். கதைத்த படியே பார்ப்பதற்கு ஒரு சாதாரண ரைப்ரைட்டர் அளவில் இருக்கும் இயந்திரம் ஒன்றினுள் தட்டுக்களை வைத்து விட்டு மேலுள்ள துவாரத்தினுள் நாணயங்களைப் போட்டு சுவிச்சை அழுத்தினார். உள்ளே மளமளவென்று நாணயங்கள் கொட்டுப்படும் சத்தம் கேட்டது. சத்தம் நின்று பச்சைநிறத்தில் ஒரு பொத்தான் மின்னியதும் அந்தத் தட்டுகளை ஒவ்வொன்றாக வெளியில் இழுத்து எடுத்தார். ஒவ்வொரு தட்டிலும் அதனதன் பெறுமதிக்கு ஏற்ப பிரிபட்ட படி நாணயங்கள் அடுக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு தட்டிலும் எத்தனை நாணயங்கள் அடங்கும் என்பது முற்கூட்டியே தெரிந்திருப்பதால் அது எவ்வளவு பணம் என்பதை சுலபமாகக் குறித்து விட முடிந்தது. ஒவ்வொரு முறையும் தட்டுக்களை வெளியில் எடுத்த கையோடு அதனதன் பெறுமதிகளை பேப்பரிலும் எழுதி, கணினியிலும் குறித்தார்.
தட்டுக்கள் எல்லாம் நிறைந்ததும் சற்றுப் பெரிதாக மறு பக்கத்தில் இருந்த இன்னுமொரு விதமான இயந்திரத்தை அணுகினார். அந்த இயந்திரத்தின் முன்பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றுவதற்கு நாம் ஊரில் பாவிக்கும் புனல் போன்ற வடிவம் கொண்ட ஒரு இரும்புக் கொள்கலன் இருந்தது. அதற்குள் பிரித்த நாணயங்களின் ஒரு யூரோ பெறுமதியுள்ள நாணயங்களைக் கொட்டி விட்டு, மறு பக்கத்தில் இருந்த ஒரு தட்டில் நாணயங்களைச் சுற்றுவதற்கான அளவான தாள்களை அடுக்கி விட்டு சுவிச்சை அழுத்தினார். நாணயங்கள் முழுவதுமாகப் பேப்பரால் சுற்றப்பட்டு சிறு சிறு உருளைகளாக வந்து விழுந்தன.
இப்போது எண்ணுவதும், கணக்கெடுப்பதும் சுலபமாக இருந்தது. 10நாணயங்கள் கொண்ட ஒரு யூரோ உருளைகள் எத்தனை என எண்ணி எழுதிக் குறித்து விட்டு சற்று அமர்ந்தார்.
மறுபக்கத்து மேசையில், திருமதி.பிராங்கே பணத்தாள்களை எண்ணி எண்ணி, நீல ஒளி பாய்ச்சும் இயந்திரம் ஒன்றினுள் அடுக்கி அவை நியமான பணத்தாள்கள்தானா என்பதை உறுதிப் படுத்திய பின், அதற்குரிய மெல்லிய தாளால் நடுவில் சுற்றி ஒட்டிக் கொண்டிருந்தார். இளம்பெண்ணான சபினே ஒட்டிய பணத்தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து, சரிபார்த்து தொகையைக் குறித்துக் கொண்டிருந்தாள்.
நான் ஒவ்வொன்றையும் வியப்புடன் பார்ப்பதை அவதானித்த சுறொத் மெலிதான சிரிப்புடன் 'இப்போது சில வருடங்களாகத்தான் இந்த வசதியெல்லாம். நான் பதினேழு வயதில் இந்த வேலையில் சேர்ந்த போது ஒவ்வொரு நாணயமாகப் பிரித்து, ஒவ்வொன்றாக அடுக்கி... இந்த இயந்திரங்கள் சில நிமிடங்களுக்குள் செய்த இந்த வேலைகளை மணித்தியாலக் கணக்கில் இருந்து செய்திருக்கிறேன்.' என்றார்.
'17வயதிலிருந்தே இந்த வேலையா?'
'ம்.. ம்.. அப்போது இந்த அறையில் 15பேர் வேலை செய்தோம். இப்போது இந்த இயந்திரங்கள் 15பேர் ஒரு நாள் முழுக்கச் செய்யும் வேலைகளை ஓரிரு மணித்தியாலங்களில் முடித்து விடுகின்றன. அதனால் அவர்கள் வேறு செக்ஷனுக்கு மாற்றப்பட்டு விட்டார்கள்' என்றார்.
கதைத்த படியே எழுந்து ஒரு அலுமாரியைத் திறந்தார். அதனுள்ளேயும் பணக்கட்டுகள் இருக்குமென நினைத்தேன். மாறாக தண்ணீர் பைப், சிங் இவைகளோடு ஒரு கோப்பி மெசின் என்று ஒரு குசினி மிகச் சிறிய அளவில் அமைக்கப் பட்டு அந்த அலுமாரிக்குள் ஒளிந்திருந்தது. அழகாக, நேர்த்தியாக குடிக்கும், சாப்பிடும் கோப்பைகளும் கிளாசுகளும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கோப்பி இயந்திரத்தில் இருந்து துளித்துளியாக கோப்பி சிந்திக் கொண்டிருந்தது. கோப்பி வாசனை நன்றாக இருந்தது.
'நீயும் குடிக்கிறாய்தானே' என்ற படி ஒரு கோப்பையை எடுத்து அதற்குள் கோப்பியை ஊற்றினார்.
'நன்றி. நான் கோப்பி குடிப்பதில்லை. தேநீர் மட்டுந்தான்' என்றேன்.
அந்த அலுமாரிக்குள் இருந்த இன்னொரு சிறிய அலுமாரியைத் திறந்தார். பலவிதமான தேயிலைகளைக் கொண்ட பைகள் நிரம்பிய பெட்டிகள். 'விரும்பியதை எடு' என்றார். நான் செம்பருத்திப் பூவில் செய்த தேயிலை நிரம்பிய பை ஒன்றை எடுத்து தேநீர் தயாரித்துக் கொண்டு போய் இருந்தேன்.
முன் சுவரில் அவரது படங்கள். அழகிய மனைவியுடன். ஒரு புகைப்படத்தில் ஆல்ப்ஸ் மலையைப் பின்புலமாகக் கொண்ட போடன்சேயில் இருவரும் வள்ளத்தில் போய்க் கொண்டிருந்தார்கள். இன்னொன்றில் மலையில் ஏறிக் கொண்டிருந்தார்கள். இன்னொன்றில் மயோக்கா கடற்கரையில் ஒருவரோடு ஒருவர் சாய்ந்து ஒய்யாரமாக வெயில் குளித்தார்கள். இன்னுமொன்றில் எகிப்தின் பிரமிட்டுகளை ஆவல் ததும்பும் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் அந்நியோன்யமான தம்பதிகளாய், வாழ்க்கையை அனுபவிக்கும் ஆர்வம் உள்ளவர்களாய், பார்ப்பவர்கள மனதில் சந்தோசம் ஊட்டுபவர்களாய் தெரிந்தார்கள்.
நான் ஒவ்வொரு படத்தையும் ஆர்வத்துடன் பார்ப்பதைப் பார்த்த அவர் வேலைகளின் மத்தியில் கிடைக்கும் அவ்வப்போதான இடைவெளிகளில் ஒவ்வொரு படமும் எங்கே எடுக்கப் பட்டது, எந்தச் சந்தர்ப்பத்தில்... அன்றைய நாளில் என்ன காலநிலை இருந்தது... என்றெல்லாம் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
எந்த நிலையிலும், எந்தக் கதையிலும் அவர் வேலையிலான நிதானத்தை இழக்காமல் மிகுந்த கவனமாகச் செயற்பட்டார். சுறொத்தின் வேகத்துக்கு அங்கு யாரும் ஈடு கொடுக்க மாட்டார்கள். அத்தனை வேகமாக நாணயங்களை இயந்திரத்தில் கொட்டி வெளிவரும் உருளைகளை பெட்டிகளில் அடுக்கி கணக்குகளைக் குறித்துக் கொண்டிருந்தார். இந்தளவு வேலைகளையும் கைகள் செய்து கொண்டிருந்தாலும் எப்பொழுதும் புன்னகை மாறாத முகத்தோடு ஒவ்வொருவரையும் எதிர் கொண்டார்.
மேலே வங்கிக்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம் திருமதி.சிமித்தோ அன்றி திருவாளர்.வாக்னரோ இந்த அறைக்குத்தான் வருவார்கள். சுறொத்தான் அவர்களிடம் பணத்தைக் கொடுத்து, குறித்துக் கொள்வார்.
மதியம் 12மணி என்றதும் எல்லோரும் கன்ரீனுக்கோ, அன்றி வெளிக் கடைகளுக்கோ சாப்பிடப் போவார்கள். சுறொத் மட்டும் வீட்டுக்கு ஓடி விடுவார். மீண்டும் 2மணிக்கு வந்து வேலை தொடங்கி 5 மணியானதும் ஒரு நிமிடம் கூடத் தாமதியாது போய் விடுவார்.
சுறொத்துடன் வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கும் என்றில்லை. இங்கு வேலை செய்பவர்களில் யாராவது விடுப்பில் போக வேண்டும். அந்த நாட்களில்தான் எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்கும். நான் இந்த வங்கியுடன் இணைந்து விட்ட 17வருடங்களில் ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாகச் சில வாரங்களேனும் சுறொத்துடன் இந்த ரெஷறியில் வேலை செய்வேன். ஒவ்வொரு சந்தர்ப்பமுமே மகிழ்வான பொழுதுகளாகவே கழிந்தன.
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எமது கதைகள் உலகத்தைச் சுற்றி வரத் தவறுவதில்லை.
நீண்ட மாதங்களின் பின் இந்த வருடத்திற்கான முதல் அழைப்பு இது. இப்போதெல்லாம் அந்தப் பணக்கட்டுக்களைப் பார்க்கும் போது எனக்கு எந்தத் திகைப்பும் ஏற்படுவதும் இல்லை. நெஞ்சு படபடப்பதும் இல்லை. எல்லாம் வெற்றுத்தாள்கள் போலவே.
உள்ளே போன போது சுறொத் கைகுலுக்கி வரவேற்றார். முதல்முதல் கண்ட சுறொத் 45வயதில் இருந்தார். இன்று அவர் 62வயதில்.
தனது கோப்பியோடு எனக்கு ஸ்ரோபெரி தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து மேசையில் வைத்தார். மேசையில் செரிப்பழங்கள் சேர்க்கப் பட்ட ´டொனாவெலே கேக்´ கும் இருந்தது. 'சாப்பிடுகிறாய்தானே..!' என்ற படி அதில் ஒரு துண்டு வெட்டி ஒரு சோஷரில் வைத்து, கரண்டியும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தார். 'மனைவி முதல்நாள் 62வது பிறந்தநாளைக் கொண்டாடினாள்' என்றார்.
கோப்பியில் இரண்டு மூன்று மிடறுகளை உறிஞ்சி விட்டு எழுந்து சென்று பத்து சென்ற் களை இயந்திரத்துள் கொட்டி பொத்தானை அழுத்தினார். பத்து சென்ற் உருளைகளைத் தொடர்ந்து, நெளிந்து வளைந்து கிறுக்குப் பட்ட படி சில வேற்று நாட்டு நாணயங்களும் வந்து வீழ்ந்தன.
சில சமயங்களில் சிலர் வேற்று நாட்டு நாணயங்களையும் போட்டு ஏமாற்றியிருப்பார்கள். கூடுதலாக வெளியில் நாட்டப் பட்டிருக்கும் சிகரெட் மெசின்கள், வாகனத் தரிப்பிடங்களிலுள்ள தரிப்புக்கான கட்டண மெசின்கள் போன்றவன்றில் போடப்படும் நாணயங்களில் இப்படியானவையும் வருவதுண்டு. மனிதர்களின் கண்களை விட இந்த இயந்திரங்களின் பார்வை கூர்மையும், அவதானமும் மிக்கவை. வேற்று நாட்டு நாணயங்களை ஒரு புரட்டுப் புரட்டி தனியாகக் கக்கி விடுகின்றன. சுறொத் அவைகளை நிரம்பி வழிந்து கொண்டேயிருக்கும் அதற்கான பெட்டிகளுக்குள் கொட்டினார். அந்த நாணயங்கள் எப்போதாவது உதவி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்;.
அன்றைய கதைகளில் சுறொத், தான் ஓய்வில் போய் விடப் போவதாகச் சொன்னார். 'ஏன் இத்தனை அவசரம், ஊருலா மோகமா?' ஆச்சரியத்துடன் கேட்டேன். 67வயது வரை வேலை செய்தால்தான் முழு ஓய்வூதியமும் கிடைக்கும். இவர் 62இலேயே போவதால் ஓய்வூதியத் தொகை குறையும்.
'இல்லையில்லை. 20வருடங்களாக நாம் ஊருலா செய்வதில்லை. 20வருடங்களுக்கு முன் திடீரென்று ஏற்பட்ட ஒரு சுகவீனத்தில் எனது மனைவியின் உடலின் சில பகுதிகள் இயக்கத்தை இழந்து விட்டன. இதுவரை வேலை தவிர்ந்த சில மணிகளை மட்டுமே அவளுக்காகச் செலவழிக்க முடிந்தது. இனி அவளருகில் இருந்து அவளைக் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்.' என்றார். இன்றுதான் அவர் முகத்தில் சோகத்தின் இழைகளையே பார்த்தேன். எல்லாம் சில விநாடிகள்தான். சட்டென்று கவலையைக் களைந்து விட்டு சிரித்த படியே நாணயங்களை இயந்திரத்தினுள் கொட்டத் தொடங்கினார்..
சந்திரவதனா
3.5.2008
பிரசுரம் - யூன் யுகமாயினி
Tuesday, July 01, 2008
சில பக்கங்கள்
Labels:
சந்திரவதனா
,
சில பக்கங்கள்
,
பத்தி
,
யுகமாயினி
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
▼
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
2 comments :
mihavum alahaka vadiththa kavthai poll arumaiyaha eluthi irrikindreerhal. parattukkal
nithy
கடைசியில் கலங்க வைத்து விட்டீர்கள் சகோதரி.
Post a Comment