தமிழ்பிரவாகம் நடாத்திய இலக்கியப் போட்டியில்(2008) இரண்டாவது பரிசைப் பெற்றது
ஹட்டன் நாஷனல் வங்கியிலிருந்து பணத்துடன் வெளியே வந்த கனகர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வலது பக்கமாகத் திரும்பி ரவுணை நோக்கி சைக்கிளை மிதித்தார். ரவுணுக்குள் நுழைய முடியாது போல இராணுவத்தினர் ரவுணை மொய்த்திருந்தனர்.
கனகருக்கு இன்று கொஞ்சம் களைப்பாக இருந்தது. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார். வீட்டுக்குச் சற்றுத் தள்ளியுள்ள கடைகளிலேயே வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கியிருப்பார். ஓய்வூதியப் பணத்தை எடுக்க வங்கி வரை வர வேண்டியிருந்தது. அதுதான் இவ்வளவு தூரம் வந்தவர். ´அப்பிடியே ரவுணுக்குள்ளும் எட்டிப் பார்த்து விட்டுப் போவம்´ என்று நினைத்தார்.
வெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். யாராவது வங்கிக்குப் பணம் அனுப்பியிருப்பார்கள் என்ற நப்பாசையில் சிவபாலனைக் கேட்டார் "ஏதும் காசு கீசு வந்திருக்கோ..?" என்று. கணினியைத் தட்டிப் பார்த்த சிவபாலன் "இல்லை" என்ற போது மனசுக்குள் தோன்றிய ஏமாற்றத்தை முகத்தில் தெரிய விடாமல் மறைத்து விட்டு வந்தாலும் கனகரின் மனசு இன்னும் ஏமாற்றத்தில் துவண்டிருந்தது.
நினைவுகளைச் சிதற விட்டதில் ரவுணை நெருங்கும் போதுதான் செக்கிங் நடப்பதை உணர்ந்து கொண்டார். சைக்கிளால் இறங்கி வரிசையில் நின்றார். உச்சிவெயில் மண்டையில் சுள்ளிட்டது. வரிசை நத்தையாக நகர்ந்தது.
அவர் முறை வந்த போது அவரது ஒரு மாதப்பாஸை வேண்டிப் பார்த்த இராணுவம் அவரைப் போகச் சொன்னது. ´அப்பாடா´ என்று மனசு ஆசுவாசப்பட சைக்கிளை உருட்டிக் கொண்டு இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவனை நோக்கி நடந்தார். பத்து ரூபாவைக் கொடுத்து அவன் வெட்டிக் கொடுத்த இனிப்பான தண்ணென்ற இளநீரைக் குடித்த போது வெயிலின் அகோரம் தணிந்தது போல இருந்தது. அந்த உஷாருடன் பொருட்களை வாங்கிக் கொண்டு ரவுணை விட்டு வெளியேற முனைந்தவர் மீண்டும் ரவுணை விட்டு வெளியேறும் வரிசையில் கட்டாயமாக நிறுத்தப் பட்டார். சந்தேகத்தின் பெயரில் சிலர் கொடிய வெயிலில் மறித்து நிற்பாட்டி வைக்கப் பட்டிருந்தனர். பரிதாபமாக விழிக்கும் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்த படியே மீண்டும் நத்தை ஊர்வலத்தில் நகர்ந்து பாஸ் காட்டி வெளியேறி வீட்டை நோக்கிச் சைக்கிளை மிதித்தார்.
ரவுணுக்குள் மனிதங்கள் கொளுத்தும் வெயிலில் தடுத்து நிறுத்திச் சோதனை செய்யப் படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் ஸ்ரேசன் றோட் சைக்கிள்கள், ஓட்டோக்கள், மனிதர்கள்... என நிரம்பி வழமையான அவசரத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. இராணுவம், ஷெல், செக்கிங் இவையெல்லாம் வவுனியா மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாகி விட்டன.
அதி வேகமாக, முரட்டுத்தனமாக வந்த ஓட்டோ (முச்சக்கரவண்டி) ஒன்றில் மோதி விடாமல் கனகர் அவசரமாக ஒதுங்கிக் கொண்டார். துப்பாக்கியும், ஷெல்லும் இல்லாமலே ஓட்டோச் சில்லுக்குள் சிதைந்து போகும் அவலங்களும் இங்கு நிகழும். நாற்பது ரூபாவுக்காக பேயோட்டம் ஓடும் ஓட்டோ சாரதி நாய் போல நாதியற்று நடுத்தெருவில் கவுண்டு போன ஓட்டோவின் கீழ் சிதைந்து கிடப்பதும் இங்கு நிகழும். ´ஏன்தான் இப்பிடி நாயாய், பேயாய் ஓடுதுகளோ! ஒரு நிதானம் வேண்டாம். சாவதற்கு இத்தனை அவசரமோ!´ கனகர் தனக்குள்ளே நினைத்துக் கொண்டார்.
ஹட்டன் நாஷனல் வங்கிக்கு முன்னால் இருந்த பெரிய மரத்தின் கீழ் அழகிய செருப்புக்களைப் பரப்பி ஒருவன் விற்றுக் கொண்டிருக்க ஒரு சில பெண்கள் செருப்புக்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்து விலைபேசி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
வவுனியா கனகருக்கொன்றும் புதிதில்லை. ஏற்கெனவே இருதடவைகள் அவர் வவுனியா அரச அலுவலகத்தில் வேலை பார்த்தவர்தான். ஆனால் அப்போதைய வவுனியாவுக்கும் இப்போதைய வவுனியாவுக்கும் நிறையவே வித்தியாசம். அந்த நாட்களை நினைத்தாலே அவரை ஏக்கம் பற்றிக் கொள்ளும். ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் பிள்ளைகளையும், மனைவி செல்லத்தையும் அழைத்துக் கொண்டு வந்து அவருக்குக் கொடுக்கப் பட்ட குவார்ட்டர்ஸ்சில் அவர்களுடன் விடுமுறையைக் கழித்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை. இந்த வீதியில் பிள்ளைகளின் கையைப் பிடித்துக் கொண்டு... எத்தனை ஆனந்தமான நாட்கள் அவை.
அவரின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்தாலும், மனம் அலைந்து அலைந்து தொலைந்து போன இனிமையான நாட்களைத் தொட்டுத் தொட்டு சிலிர்ப்பதுவும், ஏங்குவதுமாய் இருந்தது. ஆதிசக்தி விநாயகர் கோயிலடிக்கு வந்ததும்தான் நியத்துக்கு மீண்டார். சைக்கிளால் இறங்கி, சில நிமிடங்கள் தன்னை மறந்து, பக்தியில் நனைந்து பிள்ளையாரைப் பிரார்த்தித்தவர் மீண்டும் சைக்கிளில் ஏறி உழக்கினார். அப்போதுதான் தனக்கு தலைசுற்றுவதை உணர்ந்தார். அவருக்குக் கண்களை மறைப்பது போலிருந்தது.
'ஆதிசக்தி விநாயகரே...!'
அவ்வளவு அவசரமாக விநாயகரை அழைத்தும் விதி முந்திக் கொண்டதில் கீழே வீழ்ந்து விட்டார். தொடையில் சைக்கிள் கான்டில் பலமாகக் குத்தியதில் வலித்தது. அதைவிட வீதியில் இப்படி வீழ்ந்ததில் அவருக்கு சங்கடமாகவும், வெட்கமாகவும் இருந்தது.
'ரோட்டிலை எத்தினை கண்கள் என்னைப் பாக்குதுகள். நினைத்தவாறே எழும்ப முயன்றவரை வேதாரணியம் ஐயா ஓடி வந்து 'கனகண்ணை, எழும்புங்கோ' என்று தூக்கிய போது அவர் கூசிப் போனார். 'எனக்கென்ன வயசாகிட்டுதே? 63வயதுதானே! மனசுக்குள் ஆதங்கப் பட்டார்.
மூன்று மாதங்கள் ஓடியும் இந்த சம்பவத்தை மறக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைத்து நினைத்து கனகர் உடம்போடு சேர்த்து மனசையும் குறுக்கிக் குறுக்கிக் கொண்டு கட்டிலிலேயே படுத்துக் கிடந்தார்.
அது போதாதென்று ´இவள் செல்லம் ஊரிலை என்னமாய் வாழ்ந்தவள். பருத்தித்துறையிலை மாளிகை மாதிரியான அந்தப் பெரிய வீட்டிலை பிள்ளையளும், பேரப்பிள்ளையளும் புடைசூழ ஒரு சந்தோச சாம்ராஜ்ஜியத்தையே கட்டியாண்டவள் இண்டைக்கு இந்தக் குச்சியறைக்குள்ளை குடித்தனம் நடத்துறாளே! அங்கை அவளின்ரை குசினி மட்டுமே இந்தக் குச்சியறையைப் போல நாலுமடங்கு பெரிசாயிருக்குமே. பிள்ளையளாவது பக்கத்திலை இருக்குதுகளே! எட்டுப் பிள்ளையளைப் பெத்தவள். ஒன்று கூடப் பக்கத்திலை இல்லாமல் நாட்டுக்காய் மடிந்தும், நாடு நாடாய் சிதறியும்....! நானெண்டாலும் அவளுக்கு ஆறுதலாய் இருக்கிறனே! கக்கூசுக்குப் போகக்கூட கைத்தடியாய் அவளைத் தேடுகிற கையாலாகதவானாகப் போயிட்டனே!´ என்று மனைவி செல்லத்தை நினைத்துக் கரைவதும், தனது கையாலாகாத் தனத்தை நினைத்துப் புலம்புவதுமாயே இருந்தார்.
மூன்று மாதங்களின் முன் வவுனியாவின் ஸ்டேசன் ரோட்டில், ஆதிசக்தி விநாயகர் கோவிலின் முன் வீழ்ந்த போது கனகர் வெட்கத்தில் மட்டுந்தான் கூசிப் போனார். ஓட்டோவில் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டதும் செல்லம்தான் நன்றாகப் பதறிப் போனாள். உடனேயே மருத்துவமனைக்குக் கொண்டோடினாள். எல்லாம் சோதித்துப் பார்த்த மருத்துவர் "விரைவில் குணமாகி விடும்" என்று சொல்லி மருந்தும் கொடுத்து விட்டார்.
´மருந்தெடுக்க குணப்பட்டு விடுவேன்` என்ற முழுமையான நம்பிக்கையுடன்தான் கனகரும் இருந்தார். ஆனால் அவர் நம்பிக்கை தோற்றுப் போகும் படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் படுக்கையிலே போய் விட்டார். பிறகுதான் புதிதாய் வந்த மருத்துவர் ஒருவர் அவரது இதயத்தில் கோளாறு இருப்பதைக் கண்டு பிடித்தார். தாமதாமன கண்டுபிடிப்பாலும், சரியான வைத்தியம் இன்மையாலும் அவரின் உடலின் சில பாகங்கள் செயலற்றுப் போனது அதிர்ச்சியான உண்மையானது. மருத்துவர் "இனிச் செய்ய எதுவுமில்லை" என்று கையை விரித்தது மேலும் அதிர்ச்சியானது. நோயின் வேதனையைக் குறைக்க குளிகைகளும், ஊசிகளுமே கை கொடுத்தன.
மருத்துவமனை வரை போய்வரக் கூட இயலாத அளவுக்கு நோயின் தீவிரம் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பின் கனகருக்கு இந்தக் கட்டிலே தஞ்சமாகி விட்டது. மருத்துவர் தினமும் வந்து பார்த்து, ஊசி போட்டுச் சென்றார். நோயின் வேதனையும், எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையும் கனகரின் தன்மான மனசை நன்றாகவே பாதித்திருந்தன. செல்லத்தின் அன்புதான் அவரை அவ்வப்போது ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தது.
செல்லம் தன்னந்தனியாக பிள்ளைகளின் உதவிகள் கூட இல்லாமல் தன்னைப் பராமரிப்பதையும், நோயின் வேதனை தாங்காது "செல்..ல...ம்..." என்று அலறும் போதெல்லாம் ஓடிவந்து அருகிருந்து ஆதரவுடன் கவனிப்பதையும் பார்த்து ´பாவப்பட்டவள், கரைச்சல் குடுக்கக் கூடாதெண்டுதான் நினைக்கிறனான். ஆனாலும் முடியேல்லையே. வலி கொல்லுதே!´ என்று மனதுக்குள் மிகவும் வேதனைப் படுவார்.
மீண்டும் "செல்...ல...ம்..! எனக்கு ஏலாதாம். இஞ்சை ஓடி வாரும். அந்தக் குளிசையளை எடுத்துத் தாரும்" இயன்றளவு தன் குரலை உயர்த்திக் கூப்பிடுவார். செல்லமும் தான் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அவைகளை அப்படி அப்படியே போட்டு விட்டு ஓடிவந்து 'என்னப்பா, வலியா இருக்குதே, நோகுதே..?' என்று கேட்ட படி ஒவ்வொரு போத்தலாய் திறந்து குளிசைகளை எடுத்து கை நிறையக் கொடுத்து தண்ணீரையும் கொடுப்பாள்.
'எவ்வளவு பொறுமை இவளுக்கு' என்று நினைத்தபடி அவைகளை அவர் சோறு போல முழுங்குவார்.
வழமையில் குளிகைகள் உள்ளே போனதும் வலியை மறந்து தூங்கிப் போகும் அவர் இப்போதெல்லாம் நோய் வலிமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கி இருந்ததால் கோழித்தூக்கம் தூங்கி, வலியில் விழிக்கத் தொடங்கியிருந்தார்.
முதல்நாள் இரவு ஊசி போட வந்த மருத்துவர், செல்லத்தை அறைக்கு வெளியில் கூட்டிக் கொண்டு போய் "இனி அவருக்கு மருந்தில்லை. விரும்பினதைக் குடுங்கோ. பிள்ளையள் ஆராவது வெளிநாட்டிலை இருந்து வந்து பார்த்திட்டுப் போறதெண்டால் பார்க்கட்டும். எந்த நேரத்திலையும் அவர் இதயம் துடிக்க மறந்து போகலாம்." என்று குசுகுசுத்துச் சொன்னது கனகருக்கும் கேட்டது.
செல்லம் அதைப் பற்றி ஒன்றுமே கனகரிடம் சொல்லாமல் தனக்குள்ளே அழுது அழுது முந்தானையில் மூக்கைச் சீறிக் கொண்டு திரிந்ததைப் பார்த்து அவர் தனக்குள்ளே அழுது கொண்டிருந்தார். அவருக்கும் வாழ்க்கை ஆசை அற்றுப் போயிருந்தது. நோயின் வேதனையிலிருந்து விடுதலைதான் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனாலும் ´பிள்ளைகளை ஒருக்காலாவது பார்க்கோணும்´ என்ற ஆசை அவருக்குள் தோன்றி அவரை வதைத்தது.
'என்ரை பிள்ளையள் என்னை வந்து பார்க்குங்களே?' கனகரின் நினைவுகள் ஆசையில் வெந்தன. நொந்தன. பிள்ளைகளின் நினைவில் ஏங்கின.
´நான் செத்துப் போயிட்டனெண்டால் அதுகள் எப்பிடி வேதனைப் படுங்கள். புலம்புங்கள்.´ தனக்குள்ள வேதனையை விட பிள்ளைகளின் வேதனைகளை நினைத்துக் கண் கலங்கினார்.
"செல்லம்.., ஜேர்மனிக்கு ஒருக்கால் ரெலிபோன் எடுத்து பிள்ளையளுக்குச் சொல்லுமன். நான் சாகிறேக்கிடையிலை வரச்சொல்லி... மூத்தவளுக்கு சிற்றிசெனாம். அவளாவது வரமாட்டாளே!" நாட்டு நிலைமைகள் தெரிந்தாலும் கனகரின் மனம் பேதலித்தது.
"அவள் வந்தாளெண்டால் அவளையாவது ஆசை தீரப் பார்த்திட்டுச் செத்திடுவன்" வாய் முணுமுணுத்தது.
மனசு நிறையப் பிள்ளைகளின் பாசம் பொங்கி வழிந்து அவரைப் படுத்திக் கொண்டிருந்த அந்த நேரத்திலேயே அவரது நெஞ்சுக்குள்ளும் மீண்டும் வலி தொடங்கியது.
´ஆறு மணியாகுது. வழக்கத்திலையெண்டால் அஞ்சு மணிக்கு கிளினிக் முடிச்சிட்டுப் போற பொழுதே டொக்டர் வந்து ஊசி போட்டிட்டுப் போடுவார். இண்டைக்கென்ன இன்னும் காணேல்லை. ஏதும் அவசரத்திலை வராமல் போடுவாரோ?´ ஒரு யோசனை கனகரைப் பயப்படுத்த "செல்லம்... செல்லம், டொக்டர் வராமல் போனாலும் போடுவார். எனக்கிண்டைக்கு தாங்கேலாமல் நோகுது. ஒருக்கால் ரெலிபோனிலை கூப்பிட்டு, கட்டாயம் வரச் சொல்லிச் சொல்லும்." என்றார்.
செல்லம் ரெலிக்கொமினிக்கேசன் பூட்டப் போகின்றது என்ற அவசரத்தில் குருமன் காட்டுச்சந்தி ரெலிக்கொமினிக்கேசனை நோக்கி விரைந்தாள். சந்தியில் நிற்கும் இராணுவக் கூட்டத்தைக் கண்டதும் 'பாழ் பட்டுப் போவாங்கள். எப்பிடியெல்லாம் எங்களை வதைக்கிறாங்கள்.' என்று மனசுக்குள் திட்டினாள்.
வரசக்திப் பிள்ளையார் கோவிலைக் கடக்கையில் 'என்ரை மனுசனை நீதான் காப்பாத்து.' என்று மானசீகமாக ஒரு வேண்டுகோளை பிள்ளையாரிடம் விடுத்தாள்.
ரெலிக்கொமினிக்கேசனுக்குள் நுழைந்து மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து கனகரின் நிலையை விவரித்தாள். "இன்னும் ஒரு பேசன்ட் தான் அம்மா இருக்கிறார். அவரையும் பார்த்திட்டு அரைமணித்தியாலத்திலை வந்திடுவன். தைரியமா நீங்கள் வீட்டை போங்கோ" மருத்துவர் வாக்குறுதி கொடுத்தார்.
நிம்மதியோடு வீட்டுக்கு ஓடி வந்தாள் செல்லம். கனகர் வேதனையில் உழன்று கொண்டிருந்தார். செல்லம் எதுவும் செய்ய மனசில்லாமல் அவர் அருகிலேயே இருந்து அவரது நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள்.
அரைமணி ஒரு மணியாகியும் மருத்துவர் வரவில்லை. கனகர் வேதனையின் உச்சத்தில் பிள்ளைகளின் பெயர்களோடு, டொக்டர், செல்லம்... என்றெல்லாம் அரற்றிக் கொண்டிருந்தார்.
வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் றோட் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. அடுத்தநாள் மாவீரர்நாள் என்பதால் `விடுதலைப்புலிகள் தமக்கு ஏதும் செய்து விடுவார்களோ!என்று கிலி கொண்ட இராணுவத்தினர் ரவுண் வீதிகளில் கண்ட எல்லா அப்பாவித் தமிழர்களையும் தடுத்து நிறுத்தி வீதிகளில் இருத்திக் கொண்டிருந்தார்கள்.
கடமை முடித்து வந்த அந்த மருத்துவரையும் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி, ரவுணுக்குள் இருத்தி வைத்திருப்பது தெரியாமல் பதைபதைக்கும் நெஞ்சுடன் செல்லம் கேற்றுக்கும், கட்டிலுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தாள்.
கனகரின் அரற்றல் அவர் மூச்சோடு மெதுமெதுவாக முடங்கத் தொடங்கியது. அவர் திணறிக் கொண்டிருந்தார்
சந்திரவதனா
ஜோமனி
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
▼
2008
(
38
)
- ▼ August 2008 ( 4 )
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
5 comments :
இலங்கையில் நடக்கும் யுத்தத்தால் பாதிக்கப்படுகின்ற ஒரு தனிமனிதனின்
வாழ்க்கையை பிரதிபலிக்கின்ற கதை. இந்தக் கதையை படித்தபின்னர் இரண்டு நாட்களாய் மனதில் நீள்கிறது வலியின் நீட்சி.
வெள்ளைக்கொடி என்று பறக்குமோ...??
இலங்கைத் தமிழால் உயர்ந்து நிற்கிறது
ரசிகவ் ஞானியார்
நாட்டின் நிலமை, பிள்ளைகளின் பிரிவு, பாசம் என்பன யதார்த்தமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளது.
செல்வி மாதுமை சிவசுபிரமணியம்
படிக்கும் போது அழுதுகொண்டு படித்தன்... என் அப்பாவை நினைச்சு..... என் அப்பாவுக்கு வருத்தம் வந்து 1கிழமை ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார்.... ஒவ்வெரு நாளும் நாங்க கால் பன்னுவம்... சில நேரம் அங்க மொபைல் வேலை செய்யாது பாதுகாப்பு கருத்தி நிறுத்தப் பட்டிருக்கும்... அம்மாதான் கதைப்பா அப்பா எங்கன்னு கேட்டா அப்பா படுத்திட்டார்... நாலைக்கு கதையுங்கன்னு சொல்லுவா... அப்பாவுக்கு என்னில ரெம்ப பாசம்.. அடிக்கடி செல்லுவார் நீதான் எங்களை கடைசிகாலம் பாக்கனும் எண்டு. அடிக்கடி சொல்லுவார்.. இப்ப நாடுயிருக்கிர நிலையில் சொன்னால் நாங்க ஊருக்கு வந்திடுவம் எண்டு சொல்லவில்லை... வீட்டுக்கு வந்த பிரகுதான் எங்களுக்கு சொன்னவர்... அப்பாதானாம் அம்மாவுக்கு சொன்னவர் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் எண்டு...
ரஞ்சன்
அருமையானக் கதை வாழ்த்துக்கள் அன்பு சநதிரவதனா
vishalam raman
அன்பின் சந்திரவதனா,
நாட்டு நடப்போடு , அந்திம காலத்தில் பிள்ளைகளற்ற நிலையை அழகாக எடுத்துரைக்கிறது உங்கள் ஆழமான கதை.
வாழ்த்துக்கள் சகோதரி.
தொடர்ந்து எழுதுங்கள்..!
Post a Comment