அலுமாரிக்குள் இருந்த அழகிய சிலைகளை பல தடவைகள் மாற்றி மாற்றி வைத்து விட்டேன். யன்னல் சேலைகள் சரியாகச் சுருக்கு மாறாது இருக்கின்றனவா எனவும் பல தடவைகள் பார்த்து விட்டேன். பூச்செடிகள், புத்தக அலுமாரி, மேசை விரிப்பு, சோபாவின் தலையணைகள்.. என்று ஒவ்வொன்றையும் பலதடவைகள் சரி பார்த்து விட்டேன்.
குசினியிலிருந்து வீட்டின் எந்த மூலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மீண்டுமாய் அலுமாரிச் சிலைகளை ஒரு சென்ரிமீற்றர் அரக்கி வைத்தால் நன்றாக இருக்கும் போலவும், யன்னல் சேலையின் சுருக்குகள் சற்று ஒழுங்கற்று இருப்பது போலவும், புத்தக அலுமாரியில் புத்தகங்களை இன்னும் நேராக்கி விடலாம் போலவும்.. தோன்றிக் கொண்டே இருந்தன.
அவள் வரப்போகிறாள் என்பதில் எனக்குள் மிகுந்த பரபரப்பாகவே இருந்தது. 23வருடங்களின் பின் சந்திக்கப் போகிறேன். என்னைப் போல எடை போட்டிருப்பாளா? அல்லது அப்போது போலவே அழகாக இருப்பாளா? மனசு கற்பனை பாதியும், கேள்விகள் பாதியுமாக அவளின் வரவுக்காகக் காத்திருந்தது.
எத்தனை தடவைகள் புகைப்படங்கள் அனுப்பும் படி கேட்டிருப்பேன். "ம்.. கூம். நான் வருகிறேன் பார்" என்று சொல்லிச் சொல்லியே இத்தனை வருடங்களை இழுத்து விட்டாள்.
ஒரே வகுப்பில் ஒன்றாகத்தான் படிக்கத் தொடங்கினோம். ஒரே வகுப்பு என்பதையும் விட ஒரே ஊர் என்பது எங்களுக்குள் இன்னும் ஒட்டுதலை ஏற்படுத்தியிருந்தது. என் வீட்டில் போல அவள் வீட்டில் அதீதமான கட்டுப்பாடுகள் இல்லை. எனக்கு மாலைவேளைகளில் யார் வீட்டுக்கும் போய் விளையாடுவதற்கு அனுமதி கிடைப்பதில்லை. அவள்தான் என் வீட்டுக்கு வருவாள். ஓடிப்பிடித்து, ஒளித்துப்பிடித்து, கெந்திப்பிடித்து, கல்லுச்சுண்டி, கொக்கான்வெட்டி, கரம் விளையாடி.... எங்கள் பொழுதுகள் சிரிப்பும், கும்மாளமாகவுமே கரையும். என் தம்பி, தங்கைமாரும் எமது விளையாட்டுக்களில் வந்து இணைவார்கள். சில சமயங்களில் சூரியகுமாரியும் எங்களுடன் இணைந்து கொள்வாள். யாருக்கும் தெரியாத இரகசியங்களும் எங்களுக்குள் இருக்கும்.
எட்டாம் வகுப்பில் பாடசாலையில் பிரிக்கும் போது அவள் ஆர்ட்ஸ்க்கும், நான் சயன்ஸ்க்கும் என்று பிரிந்து விட்டோம். இடைவேளையில் ஓடிவந்து என்னுடன் கதைத்து விட்டுப் போவாள். இடையிடையே கிளித்தட்டு விளையாடும் போது அவள் வகுப்பும் எமது வகுப்பும் இணைந்து விளையாடுவோம். நெற்போல் (கூடைப்பந்து) என்றால் சொல்லவே தேவையில்லை. நேரம் போவதே எமக்குத் தெரிவதில்லை. மாலைவேளைகளில் தொடர்ந்தும் எமது வீட்டுக்கு வருவாள்.
நான் அவசரத் திருமணம் செய்து கொண்ட போதும், எனக்குக் குழந்தை பிறந்த போதும் ஓடி வந்து வியந்து வியந்து பார்த்தாள். நான் ஜேர்மனிக்குப் புறப்படும் வரை அவள் கல்யாணம் செய்து கொள்ளவே இல்லை.
சில வருடங்களில் அவள் திருமணமாகி கனடா சென்று விட்டதாக அம்மா எழுதியிருந்தாள். அங்கிருந்து எப்படியோ எனது தொலைபேசி இலக்கத்தைத் தேடிப்பிடித்து அழைத்துக் கதைத்தாள். அவளுக்குக் குழந்தைகள் பிறக்கும் வரை அடிக்கடி தொலைபேசியில் உரையாடினோம். குழந்தைகள் வளர வளர நாங்கள் பேசும் இடைவெளியும் வளர்ந்தது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் "நான் உன்னிடம் வருகிறேன்" என்பாள். இன்றிரவு கணவர் குழந்தைகளுடன் வரப் போகிறாள். மனசு இன்னும் பரபரத்துக் கொண்டே இருந்தது.
மீண்டும் மீண்டுமாய் வீடு அழகாக இருக்கிறதா எனச் சரி பார்த்துக் கொண்டேன். அவளுக்குத் தோசை பிடிக்கும் என்பதால், அடுத்தநாள் தோசை சுடலாம் என்ற நினைப்பில் உழுந்தை ஊறப் போட்டேன். சில கிலோமீற்றர்கள் தள்ளியிருக்கும் ஆசியாக் கடைக்கு முதல்நாளே சென்று, வாங்கி வந்த தேங்காயை சுத்தியலால் அடித்து, உடைத்து சம்பலுக்காகத் துருவி எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன். தோசைக்கு கத்தரிக்காய் வதக்கல் நல்லாயிருக்கும் என்று இன்னொரு கடைக்குச் சென்று வாங்கிய கத்தரிக்காயையும் வெட்டிப் பொரித்து எடுத்தேன். இரவுச் சாப்பாட்டுக்கு இடியப்பம் அவித்து, கோழி நெஞ்சுஇறைச்சியில் பிரட்டல் கறி, பொரியல், வெந்தயச் சொதி..., என்று செய்து முடித்தேன்.
உள்ளியும், வெங்காயமும், பொரிந்த எண்ணெயும்... என்று கலந்த சமையல் மணம் வெளியில் போய் விடும் படியாக யன்னல்களையும், பல்கணிக் கதவையும் திறந்து வைத்தேன்.
எங்கள் படுக்கையறையைத்தான் ஒரு வாரத்துக்கும் அவர்களுக்குக் கொடுக்க இருப்பதால் படுக்கை விரிப்புகளை மாற்றினேன். அந்த ஒரு வாரத்துக்கும் எமக்குத் தேவையான எமது உடுப்புகளையும், மற்றைய அத்தியாவசியப் பொருட்களையும் மற்றைய சிறிய அறைக்குள் கொண்டு போய் வைத்தேன்.
இப்படியே தொட்டுத் தொட்டு வேலைகள் நீண்டு கொண்டே போயின. கால்கள் ஆறுதல் தேடின. மனம் எதையாவது கண்டு பிடித்துப் பிடித்து வேலை தந்து கொண்டே இருந்தது.
மாலையில் கொறிப்பதற்கென முதல்வாரமே கணவரின் உதவியோடு தட்டை வடை செய்து வைத்திருந்தேன். அத்தோடு இன்னும் ஏதாவது பலகாரங்கள் செய்து வைத்தால் ஒரு கிழமையும் சுவையாகப் போகும் என்ற எண்ணம். அவளது பிள்ளைகளுக்கென சிப்ஸ், சொக்கிளேற்ஸ், பிஸ்கிட்ஸ் எல்லாம் வாங்கி அடுக்கி வைத்தேன்.
சூரியகுமாரியும் கனடாவில்தான் இருக்கிறாளாம். அவளைப் பற்றியும் நிறையக் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இன்னும் என்னோடு அரிவரியிலிருந்து கபொத உயர்தரம் வரை படித்த பல மாணவிகள் கனடாவில்தானாம். ´வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் சந்திப்பு´ என்று சொல்லிச் சந்திப்பார்களாம். நெற்போல் விளையாடுவார்களாம்.
நெற்போல் என்றதுமே எனக்குள் சட்டென்று ஒரு ஆசை அலை மோதியது. ஜேர்மனியில் அனேகமாக எல்லாத் தமிழர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தள்ளித தள்ளித்தான் இருக்கிறோம். சேர்ந்து வருபவர்களில் ஒருவரேனும் என்னோடு படித்தவர்களாயோ, அல்லது எனது ஊரவர்களாயோ இருப்பதில்லை. இந்த நிலையில் ´வடமராட்சி மாணவர்கள் சந்திப்பு´ என்பதைக் கனவில் கூட இங்கு நினைத்துப் பார்க்க முடிவதில்லை. எங்காவது சிறுவர் விளையாட்டு மைதானங்களில் நெற்போலுக்கான கூடையையும், பந்தையும் சேர்த்துக் கண்டால் போதும். பாடசாலை நினைவுகள் மனதில் நர்த்தனமிட நானும் ஒரு சிறுபிள்ளை போல ஓடிச் சென்று பந்தை கூடைக்குள் திரும்பத் திரும்பவாகப் போடுவேன். படிக்கும் காலங்களில் நெற்போல் என்றால் எவ்வளவு பைத்தியமாக இருந்திருக்கிறேன். ஏதாவதொரு பாடத்துக்கு ஆசிரியர் வரவில்லை என்றால் போதும். நான் பந்துடன் மைதானத்துக்குச் சென்று விடுவேன்.
அவள் வந்த பின கண்டிப்பாக எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் சிறுவர் விளையாட்டு மைதானத்துக்குப் போய் அவளோடு நெற்போல் விளையாட வேண்டும் எனவும் நினைத்துக் கொண்டேன்.
இப்படியே மனம் நினைவுகளுடனும், கைகள் வேலைகளுடனும் என்று 90சதுர மீற்றர் வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டே இருந்தேன். எல்லாவற்றையும் முடித்து விட்டேன் என்றால் அவள் வந்து நிற்கும் ஒரு வாரமும் அவளுடன் கதைத்து, அவளோடு வெளியில் போய்.. என்று கூடிய நேரங்களை அவளுடனேயே களித்துக் கழிக்கலாம் என்ற பேராசை எனக்கு. அதற்காகவே ஒரு வாரம் வேலைக்கு விடுப்பும் எடுத்திருந்தேன்.
இரவும் வந்தது. அவளும் வந்தாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா..?இனம்புரியாத மகிழ்வலைகளில் திக்கு முக்காடினோம். காலங்களும், குடும்ப பாரங்களும் அவளிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. என்னை விட அதிக குண்டாக இருந்தாள். என் கற்பனைக்குத் துளியும் எட்டாத தூரத்தில் அவள் கணவன். கனேடிய ஸ்ரைலும், தமிழர் என்ற அடையாளங்களும் கலந்து அனேகமான எல்லா வெளிநாட்டுத் தமிழ்க் குழந்தைகள் போலவும் அவளது குழந்தைகள்.
கனடாவில் இருந்து வெளிக்கிட்டு இலண்டனில் இரண்டு வாரம், ஸ்பெயினில் ஒரு வாரம்... என்று நின்று நின்று வந்ததில் கொஞ்சம் களைத்தும் இருந்தார்கள். ஆனாலும் கலகலத்தார்கள். சாப்பிட்டு, நிறையக் கதைத்து நித்திரைக்குச் செல்ல சாமமாகி விட்டது.
அடுத்த நாள் ஆறுதலாகவே அவர்களுக்கு விடிந்தது. கதையும், சிரிப்புமாய் இருந்து விட்டு மதிய உணவை தயார் செய்யத் தொடங்கினேன்.
அவள் தனது சூடகேஸைத் திறந்து பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்பட்ட இரு பெரிய பார்சல்களை வெளியில் எடுத்தாள். ஏதோ அன்பளிப்புக் கொண்டு வந்திருக்கிறாள் என்ற நினைப்பில் மெலிதான ஆவல் என்னுள் தோன்றப் பார்த்துக் கொண்டு நின்றேன். பைகளைப் பிரித்து இருபதுக்கும் மேலான வீடியோ கசட்டுகளை வெளியில் எடுத்து வைத்தாள்.
"என்னது?" ஆவல் ததும்பக் கேட்டேன்.
"இது இவ்வளவும் ´சித்தி´, இதுகள் ´அரசி´, இதுகள் ´கோலம்´, இதுகள் ´செல்லமடி நீ எனக்கு´, இது ... இது ..." என்று சொல்லிச் சொல்லி கசட்டுகளைப் பிரித்துப் பிரித்து வைத்தாள்.
"என்ன படமா?"
"என்ன நீ, யூரோப்பிலை இருந்து கொண்டு இது கூட உனக்குத் தெரியாதே?" என்றாள்.
பின்னர்தான் விளங்கியது அத்தனையும் தொலைக்காட்சித் தொடர்கள் என்பது. பயண அலுவல்களால் கனடாவில் நின்ற கடைசி சில வாரங்கள் அவளால் தொடர்களைப் பார்க்க முடியாது போய் விட்டதாம். எல்லாவற்றையும் ரெக்கோர்ட் பண்ணிக் கொண்டு வந்து விட்டாளாம். இலண்டனில் கொஞ்சத்தைப் பார்த்து முடித்தாளாம். மிகுதியை இங்கு தொடரப் போகிறாளாம்.
நான் சமைத்து முடித்து மேசையில் சாப்பாடுகளை வைத்த போதும் சரி, தொடர்ந்த நாட்களிலும் சரி அவள் கண்களைத் துடைத்தும், மூக்கை உறிஞ்சியும் தொடர்களோடு கலங்குவதும், களிப்பதுமாய் இருந்தாள். கிடைக்கும் இடைவெளிகளிலும், சாப்பிடும் போதும் தொடர்களில் வரும் கதைகளையும், கதாபாத்திரங்களையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.
ஒரு வாரம் முடிந்து அவளும் அவள் குடும்பமும் போன பின் சூரியகுமாரியும், கூடைப்பந்தும் இன்னும் பலவும் வழக்கம் போலவே நினைவுகளாயும், நிராசைகளாயும் எனக்குள்ளே மிதந்து கொண்டிருந்தன.
சந்திரவதனா
18.7.2008
பிரசுரம்: ஓகஸ்ட் யுகமாயினி
Monday, September 01, 2008
அவள் வருகிறாள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
▼
2008
(
38
)
- ▼ September 2008 ( 2 )
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
2 comments :
மறக்காத நட்பை வார்த்தையில் வார்த்திருக்கின்றீர்கள். நண்பி கொடுத்து வைத்தவள்.
waste of time.
Post a Comment