பத்தி – 7
கோடை அவரசரமாக ஓடி விட்டது போலிருந்தது. குளிர் நகரமெங்கும் பரவிக் கிடந்தது. மரங்கள் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. மனிதர்கள் வழமை போலவே நடமாடிக் கொண்டிருந்தார்கள். கனடாவின் தேசியச்சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த மேப்பிள் இலைகள் குவியல் குவியலாய் வீதியோரங்களில் ஒதுங்கியும், சப்பாத்துக் கால்களுக்குள் மிதிபட்டும், காற்றோடு அலைந்து கொண்டும் திரிந்தன.
நானும், கணவரும் அன்றைய சனிக்கிழமை வழமைக்கு மாறாக எனது பகுதி நேர வேலைகளில் ஒன்றின் அதிகாரியான திருமதி சீக்கிளர் வீட்டை நோக்கிப் பயணித்தோம். திருமதி சீக்கிளர் என்னிடம் ஒரு உதவி கேட்டிருந்தாள். எனது கணவர் அவளது கணவருக்கு கணினியில் ஒரு டிஷைன் போட்டுக் கொடுக்க வேண்டும். எனது கணவர் வரைவதில் நிறைய ஆர்வம் உள்ளவரும், கணினியில் இந்த வழியில் நிறைய அறிந்து வைத்திருப்பவரும் என்பது அவளுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததாலேயே இந்த உதவியைக் கேட்டிருந்தாள்.
நாமும் மறுக்கவில்லை. ஜேர்மனியருக்கு இப்படியான உதவிகள் செய்வதில் தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் பெரிதாக இல்லை. நேரம் இருக்கும் பட்சத்தில் செய்யலாம். உதவி செய்த நேரத்தையும், செய்த உதவியின் கனத்தையும் கணக்கிட்டு அதற்குரிய பணத்தை தந்து விடுவது அவர்களது நல்ல பழக்கங்களில் ஒன்று.
எங்கள் வீட்டிலிருந்து எட்டுக் கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருக்கும் அந்த வீட்டைக் கண்டு பிடிப்பதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை. முதல்நாள் இரவே கணினியில் அந்த வீட்டு முகவரியைக் கொடுத்து பாதையைப் பிறின்ற் பண்ணி எடுத்திருந்தோம்.
ஐந்து மாடிகளைக் கொண்ட அந்த வீடு நாம் வாழும் ஸ்வெபிஸ்ஹால் நகரையொட்டிய உன்ரர்முன்கைம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்திருந்தது. அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் ஆஹோர்ன் (மேப்பிள்), பியர்க்கே (அரசு)... போன்ற பெரிய பெரிய விருட்சங்கள் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன.
வீட்டின் வாசற்கதவில் அனேகமான எல்லா ஜேர்மனிய வீடுகளும் போலவே மேப்பிள் இலைகளோடு வேறும் சில குறிப்பிட்ட இலைகளும், வாடா மல்லி போன்ற பூக்களும் கலந்து செய்யப்பட்ட மலர் வளையம் தொங்கியது. எமது நாட்டில் பேயைக்கலைக்க வேப்பிலையைப் பயன் படுத்தியது போல ஜேர்மனியில் மேப்பிள் இலைகளைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். வீட்டு வாசலில் மேப்பிள் இலைகள் தொங்கினால் பேய் வீட்டை நெருங்காது என்பது ஜேர்மனியர்களின் நெடுங்கால நம்பிக்கை. ஆனாலும் ஏன் அதைக் கொழுவுகிறோம் என்று தெரியாமல் வெறுமனே அழகுக்காகக் கொழுவுவர்கள்தான் இன்று அதிகமானோர்.
நாம் அழைப்புமணியை அழுத்த முன்னரே திருவாளர் சீக்கிளர் கதவைத் திறந்து கைகுலுக்கி எம்மை வரவேற்றார். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஓரிரு தடவைகள்தான் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஜேர்மனிய மொழியில் பிரசுரமான புத்தகங்களில் நல்ல படைப்புகள் அடங்கிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளை ஒலி வடிவத்துக்கு மாற்றுவதே அந்த அலுவலகத்தின் வேலை. ஆனால் அது திருமதி சீக்கிளருக்குச் சொந்தமான அலுவலகம். திருவாளர் சீக்கிளர் விளம்பர சம்பந்தமான இன்னொரு அலுவலகத்தை வேறு இடத்தில் சொந்தமாக நடாத்துகிறார். கோர்ட், சூட் அணிந்து அதிகாரி என்ற பிரதிபலிப்போடு மட்டுமே எனக்குத் தெரிந்த அவர் வீட்டிலே கட்டைக் காற்சட்டையுடன் ரீ சேர்ட் மட்டும் அணிந்து மிகவும் சாதாரணமாகக் காட்சியளித்தார். சிரிப்பு மட்டும் எப்போதும் போல் அப்பாவித்தனமாக ஆனால் அழகாக இருந்தது.
வீடு வெப்பமூட்டப்பட்டு மிகுந்த கதகதப்பாக இருந்தது. வரவேற்பறை அமெரிக்க ஸ்ரைலில் சமையலறைக்கும், சாப்பாட்டு அறைக்கும், விருந்தினர் அறைக்கும் இடைகளில் சுவர்களோ, மறிப்புகளோ இல்லாமல் பெரிதாக அமைந்திருந்தது. தளபாடங்களிலும், மேசை விரிப்புகளிலும், திரைச்சீலைகளிலும், அழகை விட அதிகமாகப் பணம் மிளிர்ந்தது. மெத்தென்ற பெரிய சோபாவில் அமர்ந்த போது நேரெதிரே இருந்த பிளாஸ்மா தொலைக்காட்சி எங்கள் ஊர் திரையரங்குகளை ஞாபகப் படுத்தியது. அவரும் எம்மோடு அமர்ந்து கதைக்கத் தொடங்கினார்.
"எங்கே திருமதி சீக்கிளர்?" கேட்டேன்.
"அவளுக்குக் கொஞ்சம்; தலையிடி. சரியான அலுப்பு. இன்னும் படுக்கையில் இருக்கிறாள்!" என்றவர் "உங்களுக்காக சைலோன்(சிலோன்) தேயிலை வாங்கி வைத்திருக்கிறேன். தேநீர் அருந்துகிறீர்களா?" என்று கேட்டார்.
"இல்லையில்லை. இப்போதுதான் காலையுணவை எடுத்தோம். திருமதி சீக்கிளரும் எழுந்த பின் அருந்தலாம். இப்போது வேலையைத் தொடங்கலாம்" என்றோம்.
"நல்லது" என்ற படி எழுந்த அவர் சாப்பாட்டு மேசைக்கு லப்ரொப் பைக் கொண்டு வந்தார். எனது கணவர் தனது வேலையைத் தொடங்கினார். நான் சோபாவில் அமர்ந்த படியே புத்தகக் கூடைக்குள் அடுக்கப்பட்டிருந்த சஞ்சிகைகளில் இருந்து ஒரு ஜேர்மனிய சஞ்சிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். மனம் சஞ்சிகையில் முழுவதுமாக லயிக்காமல் கவனங்கள் சிதறிக் கொண்டே இருந்தன.
திருவாளர். சீக்கிளர் கோப்பிக்கொட்டைகளை கோப்பி மெஷினுக்குள் கொட்டி உரிய பொத்தானை அழுத்தினார். கோப்பிக் கொட்டைகள் அரைபடும் சத்தத்தைத் தொடர்ந்து கோப்பி சிந்தத் தொடங்கியது. தண்ணீரைக் கொதிக்க வைத்து தேநீரும் தயாரித்தார். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பட்டரை வெளியில் எடுத்தார். பாணை மெஷினில் மெல்லிய துண்டுகளாக வெட்டி பட்டரைப் பூசினார். ஒரு தட்டு (Tray) எடுத்து கோப்பிக்குவளை, தேநீர்க்குவளை, பாண் வைக்கப் பட்டிருந்த கோப்பை, குடிகோப்பை, சீனி, பால், கரண்டி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு வரவேற்பறை வாசலோடு ஒட்டியிருந்த படிகளில் ஏறி மேலே கொண்டு சென்றார்.
மேலேதான் படுக்கையறை இருக்கிறது என்று முதலே சொல்லியிருந்தார். தனது மனைவிக்குத்தான் காலையுணவை எடுத்துச் செல்கிறார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. பல் துலக்காமலே கட்டிலில் அமர்ந்த படியே, காலையுணவை உண்பது இவர்களின் வழக்கங்களில் ஒன்று. எம்மைப் போல முதலில் தேநீர் அருந்தி பின்னர் காலையுணவு என்பது இவர்களிடம் இல்லை. தேநீர், கோப்பி, காலையுணவு எல்லாமே ஒன்றாகத்தான் நடக்கும். மேலே அவர்கள் மிகமிக மெதுவாகக் கதைதக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் அவர் கீழே வந்து எம்மோடு சில கதைகளும் வீட்டின் வேலைகளும் என்று செய்து கொண்டிருந்தார். துடைத்தார். அடுக்கினார். குப்பை நிரம்பிய பையை எடுத்துச் சென்று வெளியில் இருக்கும் அதற்குரிய வாளிக்குள் போட்டு விட்டு வந்தார்.
பெரிய அதிகாரி என்ற தோரணையோ, தான் ஆண் என்ற மிடுக்கோ இன்றி வீட்டு வேலைகளெல்லாம் தனக்கே உரியவை என்பது போன்ற அவரது செயற்பாடு எனக்குள் வியப்பை ஏற்படுத்தியது. இதையெல்லாம் எனது கணவரும் கவனிக்கிறார் என்பதில் எனக்கு சந்தோசமாகக் கூட இருந்தது.
அரை மணித்தியாலத்தின் பின் மீண்டும் மேலே சென்ற திருவாளர் சீக்கிளர் தட்டை ஏந்தியபடி கீழே வந்தார். திருமதி சீக்கிளர் காலையுணவை முடித்திருந்தாள். கழுவ வேண்டிய குவளைகளையும், கோப்பைகளையும் டிஸ்வோஷருக்குள் அடுக்கி விட்டு மீண்டும் "ஏதாவது குடிக்கிறீர்களா, சாப்பிடுகிறீர்களா?" என்றார் எம்மை நோக்கி.
இம்முறை "ஏதாவது குடிக்கிறோம்" என்றோம். அப்பிள் ஜூசும், ஒறேஞ் ஜூசும், வெள்ளைச் சோடாவும் கொணர்ந்து மேசையில் வைத்து கிளாசுகளையும் வைத்தார். மீண்டும் மேலே போய் வந்தார்.
ஒரு மணி நேரத்துக்குப் பின் மிக மெதுவாக திருமதி சீக்கிளர் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள். அந்த இடைவெளியில் அவள் தலைமயிரைக்கழுவி, குளித்திருப்பது தெரிந்தது. மிக மெல்லிய சிறிய உருவம். சற்றுப் பிசகினாலும் ஒரு சூனியக் கிழவியின் தோற்றத்தை நினைவு படுத்தக் கூடிய முகம். அந்த முகத்தில் எப்போதும் போல ஒட்டி வைத்த ஒரு புன்னகை. திருவாளர் சீக்கிளரின் இயல்பான, அப்பாவித்தனமான சிரிப்போடு ஒட்டாத செயற்கை கலந்த புன்னகை. 50வயது என்று சொல்ல முடியாத விதமாக முக அலங்காரம். கூடவே இளமை தெளிக்கும் ஆடைத் தேர்வு.
திருவாளர் சீக்கிளர் விரைந்து சென்று படிகளிலேயே அவளின் உதட்டோடு தன் உதட்டை அழுத்தி, "அன்பானவளே எப்படி இருக்கிறாய், நலம்தானே?" என்று கேடடார். திருமதி சீக்கிளர் அளந்து விட்டது போல "ஆம்" என்ற படி நேராக என்னிடம் வந்து நட்போடு கைகுலுக்கினாள். தாமதமாக எழுந்து வந்ததற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டாள். எனது கணவரிடமும் சென்று கைலுகுலுக்கி நான்கு வார்த்தைகள் பேசி விட்டு மீண்டும் வந்து என்னோடு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
"எனது இனிமையானவளே, என்ன குடிக்கப் போகிறாய்?" திருவாளர் சீக்கிளர் அவளிடம் கேட்டார். "சூடாக ஸ்ரோபெரி தேநீர்" என்றாள். மீண்டும் தண்ணீர் கொதிக்க வைத்து ஸ்ரோபெரி தேநீர் தயாரித்து வந்து கொடுத்தார். கொடுக்கும் போது மீண்டும் அவளது உதடுகளோடு தனது உதட்டை அழுத்தி, கண்ணுக்குள் கண்கள் பார்த்து "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்றார். அவளும் பதிலாக "நானும் உன்னை மிகவும் காதலிக்கிறேன்" என்றாள்.
திரும்பிச் சென்றவர் எங்களுக்கும் இலங்கைத் தேயிலையில் தேநீர் தயாரித்து ஒரு குவளை நிறைய தேநீரும், தனித்தனியாக பால், சீனியும் கொண்டு வந்து மேசையில் வைத்தார். கூடவே பட்டரும், கிரான்பெரி ஜாமும் தடவிய சில ரோஸ் பண்ணிய பாண்துண்டுகளும், சீஸ் சீவல்களும், கேக் துண்டுகளும், பிஸ்கிற்றுகளும் வைத்து சாப்பிடும் படி சொன்னார். எனது கணவரும் வந்திருந்து நால்வருமாக தேநீர் அருந்தி, சிறிதளவு அவைகளைச் சாப்பிட்டு, நிறையவே கதைத்தோம். இலங்கையைப் பற்றி மிகுந்த ஆர்வத்தோடு நிறையக் கேட்டார்கள். ஆறு வருடங்களின் முன் தாம் அங்கு கண்டிப் பகுதிக்குச் சுற்றுலா போய் வந்ததாகச் சொன்னார்கள்.
ஒரு மணி நேரம் கதைகளிலேயே கரைந்தது. முடிவில் தமது ஐந்து மாடி வீட்டின் ஒவ்வொரு மாடியையும் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்கள். குளியலறைகளும், படுக்கையறைகளும், விருந்தினருக்கான அறைகளும் என்று அது ஒரு அரண்மனை போலக் காட்சியளித்தது. இருவருக்கு மிக அதிகம் அந்த வீடு. வீட்டின் கீழே உள்ள நிலக்கீழ் அறைகளைக் கூட ஒரு அலுவலகமாக அழகாக உருவாக்கி வைத்திருந்தார்கள். கூடவே sauna, solarium என்று வீட்டுக்குள் வசதிகள் நிறைந்திருந்தன.
மீண்டும் கணவர் வேலையைத் தொடங்கி விட்டார். நானும் சஞ்சிகையில் மூழ்கி ஏதோ ஒரு அரவத்தில் நிமிர்ந்த போது சமையலறையின் மூலையில் உதடுகள் பொருத்தி மிகத் தீவிரமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த ஐம்பது வயதுத் தம்பதிகள். சட்டென்று தலையைத் தாழ்த்திக் கொண்டேன். இது ஐரோப்பியாவில் சாதாரணம் என்றாலும் எனது மேலதிகாரிகளை அந்தத் தோற்றத்தில் பார்ப்பது சற்றுச் சங்கடமாகவே இருந்தது.
தொடர்ந்த ஒவ்வொரு பொழுதுகளிலும் திருவாளர் சீக்கிளர் திருமதி சீக்கிளருக்குத் தேவையான உதவிகள் மட்டும் என்றில்லாமல் தேவைக்கு மீறியவைகளைக் கூடச் செய்து கொண்டிருந்தார். எனது கணவரும் திருவாளர் சீக்கிளருக்குப் பிடித்த மாதிரி டிஷைன் போட்டு முடித்தார்.
தம்பதிகள் இருவருமாக எமக்கு பெரிய நன்றி சொல்லி உரிய பணத்தையும் கையில் தந்தார்கள். விடை பெற்ற போது `ஆண்கள் இப்படியும் இருக்கலாம்` என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து கொண்ட திருவாளர் சீக்கிளரின் செயற்பாடுகளை எனது கணவரும் கவனித்தார் என்பதில்தான் எனக்குள் அதிக திருப்தியும், மகிழ்ச்சியும் ஊஞ்சலாடியது.
எல்லாம் கார் கதவைத் திறக்கும் வரைதான். காருக்குள் இன்னும் நான் சரியாகக் கூட ஏறி இருக்கவில்லை. எனது கணவர் "உவன் என்ன சரியான விடுபேயனா இருக்கிறான். பொம்பிளையாப் பிறக்க வேண்டியவன்." என்றார்.
சந்திரவதனா
12.11.2008
Saturday, November 15, 2008
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
▼
2008
(
38
)
- ▼ November 2008 ( 5 )
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
No comments :
Post a Comment