Friday, September 18, 2009

பசுமை நிறைந்த பள்ளி நினைவுகள்

எனது வீடு, எனது ஊர்... எனது நாடு.. என்னும் போது தோன்றக்கூடிய பரவசநிலையைத் தரக்கூடியதே எனது பாடசாலை என்பதும். 32வருடங்களுக்கு முன் முடிந்து போய்விட்ட எனது பாடசாலை வாழ்க்கை பற்றிய நினைவுகள் இன்னும் எனக்குள்ளே புதைந்து கிடக்கின்றன. அவ்வப்போது ஒவ்வொன்றாக மனசுக்குள் மிதக்கும் அந்த நினைவுகள் வந்தி என்னை அழைத்த இந்த சில நாட்களுக்குள் இன்னும் அதிகமாகவே கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன.

மற்றவர்களைப் போல ஒரே மூச்சில் அத்தனையையும் என்னால் எழுதி முடித்து விட முடியும் போல் தெரியவில்லை. கண்டிப்பாக எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்த எனது தூயகணித ஆசிரியையோடான நினைவுகளோடு தொடங்குகிறேன். அழைத்த வந்திக்கு நன்றி.

அந்த ரீச்சரை எல்லோரும் பொல்லாத ரீச்சர் என்றுதான் சொல்வார்கள். ஒன்பதாம் வகுப்புக்கு அவதான் எங்களுக்கு வகுப்பு ரீச்சராக வந்தா.

எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்து வந்த நாம் எட்டாம் வகுப்பு பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் Arts, Science எனப் பிரிக்கப் பட்டோம். அப்போதெல்லாம் சயன்ஸ் மாணவர்களுக்குத்தான் மதிப்பு. ஆர்ட்ஸ் மாணவர்கள்தான் பிற்காலத்தில் சட்டத்தரணியாகவோ,  அன்றி இன்ன பல நல்ல வேலைகளிலோ அமரப் போகிறார்கள் என்ற சிந்தனை அந்த நேரத்தில் யாருக்கும் எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆர்ட்ஸ்க்குப் போகும் மாணவர்களைக் கொஞ்சம் மட்டமாக நினைப்பது இயல்பாக இருந்தது. இதற்கு, சயன்ஸ்க்குப் போனால்தான் ஒரு டொக்டராகவோ அன்றி என்ஜினராகவோ வரலாம் என்ற அந்தக் காலப் பெற்றோரின் கனவு காரணமாக இருக்கலாம்.

சயன்ஸ் பிரிவினருக்கான 9ம் வகுப்புக்குத்தான் அந்தப் பொல்லாத ரீச்சர் வகுப்பாசிரியையாகினா. அவ எங்களுக்கு வகுப்பாசிரியை மட்டுமல்ல தூயகணிதத்துக்கும் அவதான் ஆசிரியர் எனத் தெரிய வந்தது. இது எங்கள் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பல மூலைமுடுக்குகளிலும் பேசப்படும் ஒரு விடயமாக எல்லோரையும் கலக்கியது.

'பெரிய மாணவிகளுக்குக் கூட அடிப்பாவாம். உலுப்பி எடுத்து விடுவாவாம்...` பலரும் சொன்னார்கள்.

ஆனால் அந்த ரீச்சரைப் பார்த்த போது எனக்கு அப்படி ஒன்றும் பொல்லாத்தனமாய் தெரியவில்லை. வெள்ளையாக, அழகாக, ஆனால் என்னைப் போலக் கட்டையாக இருந்தா. சுருட்டைத் தலைமயிரை மடித்துச் சின்னதாகக் கொண்டை போட்டிருந்தா. முதல் நாள் பார்வையிலே நட்பாகச் சிரித்தா. எப்போதுமே ஒரு முறுவல் அவவின் முகத்தில் ஒட்டியிருப்பது போலத்தான் எனக்குத் தெரிந்தது.

முதல் நாளைய தூயகணிதத்தில் அல்ஜிபிராவில் பிளஸ்(+), மைனஸ்(-) என்று வந்த போது எல்லோருமே சற்றுத் தடுமாறினோம். நாம் குழம்பும் போதுதான் ரீச்சர் பொறுமையிழப்பது தெரிந்தது.

சின்ன வகுப்பிலிருந்து சாதாரணமாகப் படித்துக் கொண்டு வந்த கணிதத்தை விடுத்து எட்டாம் வகுப்பில் New Maths என்று எதையோ போட்டுக் குழப்பி விட்டு ஒன்பதாம் வகுப்புக்கு வந்த போது அங்கு PureMaths, AppliedMaths என்று வேறு வடிவங்களைக் காட்டினார்கள். எங்கள் சயன்ஸ் பிரிவிலேயே டொக்டர் கனவோடு இருந்தவர்கள் Chemistry, Physics உடன் Biologyயையும் Zoologyயையும் தமக்கான பாடங்களாக எடுக்க, நான் ஆர்க்கிரெக் கனவுடன் தூயகணிதத்தையும்(Pure Maths), பிரயோககணிதத்தையும்(Applied Maths) எனக்கான பாடங்களாகத் தேர்ந்தெடுத்திருந்தேன். பிளஸ்(+), மைனஸ்(-) கொஞ்சம் குழப்பியது..

அன்றிரவே எனது அண்ணனிடம் பிளஸ்(+), மைனஸ்(-) பற்றிய குழப்பத்தைச் சொன்னேன். பொல்லாத ரீச்சர் பற்றியும் சொன்னேன்.

அவன்
பிளஸ் + பிளஸ் = பிளஸ்
மைனஸ் + மைனஸ் = மைனஸ்
மைனஸ் x மைனஸ் = பிளஸ்
“இதை சரியான படி ஞாபகம் வைத்திரு. தூயகணிதத்தில் எந்தக் குழப்பமும் வராது” என்றான். இன்னும் சில அடிப்படை நுணுப்பங்களைச் சொல்லித் தந்தான். அந்த ஒரு நாள் அதுவும் வெறுமனே அரைமணி நேர அண்ணனின் விளக்கம் எனக்கு கணிதத்தை மிக்சுலபமாக்கி விட்டது. என்னை மிஞ்ச யாருமில்லை என்ற அளவுக்கு கணிதம் என்னோடு மிகவும் இசைந்தது. பரீட்சைகளில் தூயகணிதத்தின் Algebraவுக்கும் சரி Geomatryக்கும் சரி 100 புள்ளிகளே எப்போதும் கிடைத்தன. பிரயோககணித ஆசிரியரிடமிருந்து Computer என்ற பட்டம் கிடைத்தது.

பொல்லாத ரீச்சர் என்று மற்றவர்களால் வர்ணிக்கப்பட்ட அந்த ரீச்சர் என்னோடு மட்டும் எப்போதுமே அன்பாகவும், நட்பாகவும்  நடந்து கொண்டா.

ஒருநாள் றிலே நடக்கும் என்பதால் அன்றைய எல்லாப் பாடங்களும் ரத்து என்ற நினைப்பில் முதல் நாள் தந்து விட்ட தூயகணித homeworkஐ வகுப்பில் யாருமே செய்யவில்லை. ஆனால் தூயகணிதம் முடியத்தான் றிலே ஆரம்பமாகும் என்ற போது எல்லோரும் விழித்தோம். ஒட்டு மொத்த வகுப்பே செய்யவில்லை. ரீச்சர் ஒவ்வொருவராகப் பார்த்து கொப்பிகளைத் தூக்கி எறிந்து கொண்டும், அடித்துக் கொண்டும் வந்தா. மிகவும் மரியாதையான இன்னொரு ரீச்சரின் மகளை ஒரு உலுப்பு உலுப்பி வகுப்புக்கு வெளியில் போய் நிற்கும் படி பணித்தா. அந்த மாணவி மிகவும் கெட்டிக்காரி. எல்லோராலும் மதிக்கப்படும் மாணவி. அவளுக்கே இந்நிலை என்றால் என் நிலை என்ன? பயம் என்னைத் தின்றது. மற்றவர்கள் எல்லோரும் Homework கொப்பியாவது வைத்திருந்தார்கள். நான் கொப்பியைக் கூடக் கொண்டு செல்லவில்லை.

ரீச்சர் என்னை நெருங்க நெருங்க பயமும் அதிகரித்தது. ரீச்சர் எனக்கு முதல் பிள்ளையின் கொப்பியைப் பார்த்து விட்டு அந்தப் பிள்ளைக்கு அடித்தா. எனக்கு உடலும் மனதும் பயத்தில் பரபரத்தது. அடுத்தது நான். ´என்ன நடக்கப் போகிறது. அடிப்பாவா? கொப்பியைத் தூக்கி எறிவாவா?` கைகளைப் பிசைந்தேன். கோபாவேசத்துடன் சுழலும் ரீச்சரின் முகத்தைப் பார்த்தேன். சட்டென மாறிய அவவின் முகத்தில் சாந்தம் நிலைக்க மெல்லிய முறுவலுடன் என்னைத் தாண்டிப் போய் எனக்கு அடுத்த பிள்ளையின் கொப்பியைத் தூக்கி எறிந்து விட்டு அடுத்த லைனுக்குப் போனா.

என்னை Homework செய்தாயா? கொப்பி கொணர்ந்தாயா என்ற எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஒரு வகையில் அது நியாயமற்றதுதான். வகுப்பில் அத்தனை பேரும் தண்டனை பெறும் போது எனக்கு மட்டும் தண்டனை தராதது பிழையே. அந்த நேரத்தில் எனக்கு அது பிழையென்று தெரியவில்லை. தப்பினேன் பிழைத்தேன் என்ற நிம்மதியும், ஒரு மனதார்ந்த நன்றியுமே இருந்தது. இன்றைக்கும் அந்த ரீச்சரின் நினைவு என்னோடு இருக்கிறது.

சந்திரவதனா
17.09.2009

7 comments :

Muruganandan M.K. said...

மிகவும் சுவையாகவும், பழைய நினைவுகளைக் கிளறுவதாகவும் இருந்தது. தொடராக எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

Unknown said...

பொல்லாத ரீச்சரைப் பற்றி மெல்லவா சொல்லிப்போட்டீங்க

நல்ல நினைவுகள்,
என்னையும் உங்களோடை சேர்த்து வந்தியார் அழைச்சவர் இந்த பகிர்விற்கு,
நான் நீங்கள் இன்னும் சொல்ல இல்லைத்தானே என்று இருந்தன்,இப்ப நீங்களும் சொல்லிப்போட்டீங்க,
இப்ப எனக்கு அடிவிழப்போகுது வந்தியத்தேவரால்,
ஹீஹிஹிஹிஹி

நன்றி பசுமையான பதிவிற்கு

Chandravathanaa said...

நன்றி டொக்டர்.
தொடர்ந்தும் பல நினைவுகளை எழுதுவதாகத்தான் இருக்கிறேன்.

Chandravathanaa said...

நன்றி கரவைக்குரல்.
கண்டிப்பாக எழுதுங்கள்.

வந்தியத்தேவன் said...

மிகவும் சுவையாக இருக்கிறது. ஒரு சின்ன விடயம் மட்டும் உறுத்துகின்றது ஏன் உங்கள் ஆசிரியை அப்படிச் செய்தார் என்பதுதான். அவரின் பார்வையில் சிலவேளை நீங்கள் அந்த வீட்டுப்பாடம் செய்திருக்கலாம் மறந்துபோய் வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கலாம் என்ற எண்ணத்தால் உங்களிடம் கேட்காமல் விட்டிருக்கலாம்.

பெரும்பாலும் ஆசிரியர்கள் தான் கொடுமைக்காரர்களாக இருப்பார்கள், ஆனால் சில ஆசிரியைகளும் அடித்துப்பின்னிவிடுவார்கள். நல்ல காலம் எங்களுக்கு அவ்வளவு கொடூரமான ஆசிரியைகள் வாய்க்கவில்லை.

Chandravathanaa said...

நன்றி வந்தியத்தேவன்.

என்னிடமும் அதே கேள்வி இன்று வரை இருக்கிறது.
அந்த ஆசிரியைக்கு என் மேல் நல்ல விருப்பம் என்பது எனக்குத் தெரியும்.
அதனால் என்னைச் சங்கடப் படுத்த வேண்டாம் என்று விட்டாவா,
அல்லது என்னை அடிக்கவோ, திட்டவோ, உலுப்பவோ மனமின்றி விட்டாவா என்ற பல
கேள்விகள் எனக்குள். இதுவரை விடையில்லை.

கடைசியாக அந்த ஆசிரியையை 1978இல் வடமாராட்சி வீதியில் சந்தித்தேன்.
எனது மூத்தமகனை என்னிடமிருந்து வாங்கி, கொஞ்சி விட்டுத் தந்தா.

அப்போது அந்த முகத்தில் ஒரு நிறைந்த சந்தோசத்தைப் பார்த்தேன். அவவுக்கு குழந்தைகளும் இல்லை.
கணவரும் விட்டிட்டுப் போய்விட்டார் என்ற செய்தி பாடசாலையில் பரவலாக இருந்தது.

Anonymous said...

nalla iruku!!!

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite