எழுதியவர்: நீச்சல்காரன்

திருக்குறள் பற்றிய குறிப்பு வரைக என்று பள்ளிகளில் கேட்கும் போது கை
தானாக விக்கிப்பீடியாவைத் தேடிச் செல்லும். இயற்பியலில் கடினமான ஒரு
தேற்றத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள வேண்டியபோது மூளை விக்கிப்பீடியா
பக்கத்திற்கே செல்லும். விலையேறிக் கொண்டிருக்கும் வெங்காயத்தின்
வரலாற்றைப் பார்க்க வேண்டும் என்றாலும் விக்கிப்பீடியாவே துணை. காவியத்
தலைவர்கள் முதல் கட்சித் தலைவர்கள் வரை மற்றும் அமெரிக்க வால்ஸ்ட்ரீட்
முதல் கோயம்புத்தூர் வால்பாறை வரை எல்லா விசயங்களையும் உள்ளடக்கிய கலைக்
களஞ்சியமே விக்கிப்பீடியா ஆகும். இந்த அற்புத வசதியைத் தமிழுக்கும்
விக்கிமீடியா நிறுவனம் இலவசமாக வழங்கிவருகிறது. அதில் தகவற்களஞ்சியமாக
விக்கிப்பீடியாவும், சொற்களஞ்சியமாக விக்சனரியும், நூல் களஞ்சியமாக
விக்கிநூல்களும் மேலும் பல களஞ்சியங்களும் இருந்து வருகிறன. எந்தவொரு
கட்டுப்பாடின்றி யாரும் இதன் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
என்பதாலேயே இதனைக் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று கூறிக்கொள்கிறோம்.
உலகமெல்லாம் கணினித் திரைகளுக்குத் தமிழ்க் காட்சி தந்த தமிழ்
விக்கிப்பீடியா, தற்போது தனது பத்தாண்டுகால நிறைவை அடைந்துள்ளது. இதுவரை
55800 கட்டுரைகளைக் கடந்து, சுமார் 4600 தமிழ்ப் பங்களிப்பாளர்களையும்
தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இது எப்படிச் சாத்தியமானகிறது? கப்பலோட்டிய தமிழனின் வரலாற்று ஆவணத்தை
மா. போ. சிவஞானம் அவர்கள் தொகுத்து வ.உ.சிதரம்பரனார் பற்றிய அறிய தகவல்களை
அடுத்தத் தலைமுறையினருக்குச் சேர்த்தார். பன்மொழி ஆய்வு செய்து தமிழின்
வேர்ச்சொற்களையும் கலைச் சொற்களையும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
தொகுத்தளித்து இன்று பெருகிவரும் தொழிற்நுட்பச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்
சொற்களைத் அன்றே தந்துதவினார். சிதறிக்கிடந்த தமிழ் நூல்களை எல்லாம் அன்று
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் தொகுத்து அச்சில் ஏற்றி உலகச்
செம்மொழிகளுக்கு நிகராகச் சங்க இலக்கியங்களை வைத்து வரலாறு எழுதச்
செய்தார். இப்படிக் காலம்தோறும் தொகுத்துத் தொகுத்து பாதுகாக்கப்பட்டு
வந்ததே நமது மொழிச் சொத்து. அந்தப் பரம்பரையின் கணினியுக வாரிசுகளான
நம்மைப் போன்றவர்களால் தொகுக்கப்பட்டுச் செதுக்கப்படும் தேரே
விக்கிப்பீடியா.
விக்கி தொழிற்நுட்பமும், இணையம் என்கிற வசதியும் இருந்தால் உலகில் உள்ள
எல்லா அறிவுச் செல்வத்தையும் தமிழில் அனைவருக்கும் கிடைக்கச் செய்யலாம்.
மேலும் காலத்தால் அழியாத முறையில் பாதுகாக்கவும் முடியும். ஆனால் எப்படி
செய்வது? ஒன்றாம் வகுப்பில் சுழியம் வாங்கிய நாங்களும், கல்லூரியில் பட்டம்
வாங்கிய நீங்களும், படிப்பு முடித்த பக்கத்து வீட்டுக்காரரும், எட்டிப்
பார்க்கும் எதிர் வீட்டுக்காரரும் என யாரும் செய்யலாம். விக்கிப்பிடியாவொரு
கலைக்களஞ்சியம். எந்தவொரு பயனுள்ள விசயத்தைப் பற்றியும் இதில் கட்டுரை
எழுதலாம். அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கட்டுரையைத் திருத்தியும்
மேம்படுத்தலாம். அதெல்லாம் விருப்பமில்லை என்றால் படமெடுக்கும் கருவிகளைக்
கொண்டு முக்கிய இடங்கள், பொருட்கள் என படம் எடுத்தும் படக் களஞ்சியத்திற்கு
உதவலாம். பதினொரு வயது முதல் எழுபத்தியேழு வயது கொண்டோரும் இதில்
பங்களித்து வருகிறார்கள் என்கிற செய்தியே இதற்கான எந்த வயதுத் தடையுமில்லை
என்று உரைக்கும். தனித்தனியாக இணையத்தில் தகவல் பதிந்து ஏற்றுவதைவிட ஒரே
இடத்தில் எல்லாவிதத் தகவலையும் தொகுக்கும் பயனே தனிதான்.
கல்வி ஒரு வணிக சாதனமாக மாறிவரும் வேளையிலும், பெருமுதலாளிகளின்
கைக்குள் மட்டும் அறிவுச் செல்வங்கள் முடங்கும் வேளையிலும் அடிப்படை
உரிமையாகக் கல்வியை அனைவருக்கும் விலையில்லாமல் வழங்கும் ஒரு தேவையை
விக்கிமீடியா பூர்த்திச் செய்கிறது. அதில் ஒன்று கட்டற்ற (கட்டுப்பாடுகள்
இல்லாமல் இலவசமாகப் பயன்படுத்தும்) கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா என்ற
சேவை. கல்விக்காக விலையுயர்ந்த புத்தகங்களைச் சார்ந்திருந்த காலத்தை இணையம்
உடைத்தது உண்மைதான் ஆனால் கலைச்செல்வங்கள் எல்லாம் திறன்படுத்தப்பட்ட
ஒழுங்கில் இணையத்தில் கிடைப்பதில்லை. அதனைச் சமன் செய்ய உதவும் சமவெளிப்
பகுதியே விக்கிப்பீடியாவும் அதன் இதர திட்டங்களும் ஆகும். எப்படி உப்புச்
சத்தியா கிரகத்தின் போது மக்கள் உணவு, நீர் உறைவிடம், போராட்டம் எனத்
தங்களால் இயன்றதைக் கொடுத்து உதவினார்களோ அதுபோல விக்கிப்பீடியாவிலும்
உங்களால் இயன்ற அறிவுச் செல்வங்களைக் கொடுத்து சமுதாயத்தின் ஞானவொளிக்கு
மெருகூட்டுங்கள். கல்விக்கு விலைவைக்கும் சமுகத்திற்கு எதிராகக் கட்டற்ற
களஞ்சியங்களை விளையுங்கள்.
விக்கிப்பீடியா ஒரு மக்களாட்சித் தத்துவத்தில் பயணிக்கக் கூடியது,
அதாவது மக்களால் மக்களுக்கு வழங்கப்படுவது. அதனால் தனி மனிதனோ தனிக் குழுவோ
அதனைச் சொந்தம் கொண்டாடுவதில்லை. அனைவரும் வகுத்த கொள்கையின் படி
நீங்களும் ஆசிரியர், நீங்களும் வாசகர். அனைவருக்கும் புரியவேண்டும் என்கிற
அடிப்படையில் உங்களால் சொல்லப்பட்ட சில எளிய விதிமுறைகள் உண்டு அதனைப்
பின்பற்றிக் கட்டுரைகளோ, சொற்பொருளோ, நூலோ உருவாக்கி தமிழ் வளர்க்கலாம்.
எழுத்தாற்றலும், அறிவாற்றலும் இதில் பங்களிப்பதன் மூலம் வளப்படுத்தலாம்.
விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பான தமிழ் விக்கிப்பீடியா 2013
செப்டம்பருடன் தனது பத்தாண்டு பயணத்தை அடைகிறது. அதனைக் கொண்டாடும்
பொருட்டும், மேலும் இச்சேவை பலரைச் சென்றடையவும் செப்டம்பர் 29ம் நாள்
சென்னை, கிண்டி பொறியியற் கல்லூரியில் கூடல் ஒன்றை நிகழ்த்தவுள்ளது. தமிழ்
விக்கிப்பீடியர்கள் உட்படப் பிற மொழி விக்கிப்பீடியர்கள், தமிழ்
ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூடவுள்ளனர். நீங்களும் கலந்து கொண்டு
கொண்டாடுங்கள், விக்கிப்பீடியாவுடன் இணைந்து இச்சமூகம் பயன்பட வடம்
பிடியுங்கள். உங்ககளுக்காக ஒரு தேர் காத்திருக்கிறது.
கூடல் பற்றி மேலும் அறிய:
https://ta.wikipedia.org/s/36sk