Tuesday, September 27, 2016
Gluecksfeder (Zamioculcas zamiifolia) ம் பூக்கும்
Gluecksfeder (Zamioculcas zamiifolia) ம் பூக்கும் என்பது இப்போதுதான் எனக்குத் தெரியும்.
வருடங்களாக என் வீட்டில் ஒரு கரையில் தன்பாட்டில் இருக்கிறது. கனக்க மினைக்கெடவும் தேவையில்லை. வெயில் பட்டால் இலைகள் மெல்லியபச்சை நிறமாகும். வெயில் இல்லையென்றால் கடும்பச்சையாகும். அவ்வளவுதான் இது பற்றி எனக்குத் தெரிந்தது.
இத்தனை வருடங்கள் கழித்து திடீரென்று ஒரு பூப் பூத்துள்ளது. முதலில் பூ என்று கூட எனக்குத் தெரியவில்லை.
இணையத்தில் தேடிய போதுதான் தெரிந்தது
மிக அபூர்வமாக, வசதியாகவும், நன்றாகவும் உணரும் பட்சத்தில் மட்டுமே இது பூக்கும் என்பது.
அதுவும் மற்றைய தாவரங்கள் போலல்லாது தாவரத்தின் அடியிலேயே பூக்கும்.
சந்திரவதனா
27.09.2016
Wednesday, September 21, 2016
ழகரம் - 5
ழகரம் - 5 இதழ் கிடைத்திருக்கிறது.
ழகரம் இதழ், கனடாவிலிருந்து 1997 இல் ஆனி, ஆடி, ஆவணி/புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் வெளிவந்து நான்கு இதழ்களுடன் நின்று போயிருந்தது. இப்பொழுது மீண்டும் 5வது இதழாக ஆனி 2016 இல் வெளிவந்துள்ளது.
தமிழ்நதி, கிரிதரன், பொ. கருணாகரமூர்த்தி... இன்னும் பலர் எழுதியுள்ளார்கள். அவைகளைப் படிப்பதற்கு முன் இதழை அனுப்பி வைத்த கருணாகரமூர்த்திக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு நூலையோ, இதழையோ அஞ்சலில் அனுப்பி வைப்பதில் உள்ள, அதற்கான ஆயத்தங்கள், நேரம்... என சிரமங்களை நான் அறிவேன். ஆனாலும் பலநூல்கள் என்னைச் சேருவதற்கு கருணாகரமூர்த்தி ஏதுவாக இருந்திருக்கிறார்.
மிக்க நன்றி கருணாகரமூர்த்தி!
சந்திரவதனா
21.09.2016
Wednesday, September 14, 2016
நூலை ஆராதித்தல்
நேற்று ஒரு நூல் என் கரம் கிட்டியது. பெரிய்ய்ய்ய நூல்.
452 க்கு மேற்பட்ட பக்கங்கள்.
வழமையில் பத்மநாபஐயர் யார் யாரினதோ நூல்கள் எல்லாம் கொடுத்தனுப்பி
எம்மை மகிழ்ச்சிப் படுத்துவார். இம்முறை அவரது நூல்.
இந்நூல் பத்துவருட முயற்சியில் வெளிவந்தது என்று எங்கோ வாசித்த
ஞாபகம். ஆனாலும் இப்படியொரு நூல் வரப்போகிறதென்பது நூல் வெளிவரும் வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
நேற்று மாலை வேலையால் வந்துதான் நூலை அவசரமாக நுனிப்புல் மேய்ந்தேன்.
பத்மநாபஐயரின் பவளவிழாவை என்னத்தைச் சொல்லி கவலைக்குரியதாக்கினார்களோ, அந்த சர்ச்சைக்குரிய
`ஐயர்´ என்ற
சொல் நூல் முழுவதும் இறைந்து கிடக்கிறது.
நிறையப் பேர் எழுதியுள்ளார்கள். எல்லோருமே பத்மநாபஐயரை அழகாக
ஆராதித்துள்ளார்கள். கண்ணில் பட்ட வசனங்கள் பலதில், பத்மநாபஐயரின் இலக்கியச் செயற்பாடுகள்
குறித்தான செய்திகள் வியக்க வைத்தன. பத்மநாபஐயர் மேல் இன்னும் அதிகமான மதிப்பை உருவாக்கின.
பத்மநாபஐயரின் குடும்பப் புகைப்படங்கள், இலக்கியப் புகைப்படங்கள்,
மூனாவின் ஒவியங்கள்.. என்று இன்னும் பல உள்ளன.
நுனிப்புல் மேய்ந்து விட்டு அதிகம் எழுத முடியாது. முழுவதையும்
முதலில் படிக்க விளைகிறேன்.
சந்திரவதனா
14.09.2016
Labels:
2016
,
நூலை ஆராதித்தல்
,
பத்மனாப ஐயர்
,
பவளவிழா
Sunday, September 11, 2016
ஜடாயு - ஜெயரூபன் (மைக்கல்)
இரண்டு நாட்களுக்கு முன் மருந்துக்கடைக்குப் போனபோது இந்தக்
காலாண்டுக்கான மருத்துவசஞ்சிகையையும் இலவசமாகத் தந்து விட்டார்கள். இம்முறை ஹோமியோபதி
சம்பந்தமான செய்திகளும், மருத்துவக் குறிப்புகளும் விரவிக் கிடந்தன.
அவற்றில், „வாசிப்பது
மனதின் அழுத்தங்களைக் (Stress) குறைக்கும்“ என்ற
தலைப்பிலும் ஒன்று இருந்தது. நரம்பியல் உளவியலாளர் டேவிட் லெவிஸ் சொல்கிறார் „மனதுக்குப்
பிடித்த ஒரு புத்தகத்தை ஆறு நிமிடங்கள் வாசிக்கும் போதே, மனம் உலகை மறந்து, மனதின்
அழுத்தம் மிகவும் குறைந்து விடுகிறது“ என்று.
மனதின் அழுத்தம் நடப்பதினால் (walk) 42% குறைகிறது என்றும்,
வாசிப்பதனால் 68% குறைகிறது என்றும் வாசிப்பது திகில் கதையோ அன்றில் காதல் சமூக, அறிவியல்
கதையோ என்பது பிரச்சனையே இல்லையென்றும் உதிரியாக இன்னொரு தகவலையும் தந்துள்ளார்.
அதை நாமும் எமது வாசிப்பின் போது உணர்கிறோம்.
மனஅழுத்தம் குறைகிறதோ இல்லையோ நான் வாசிக்கும் போது உலகையே
மறந்து விடுகிறேன். என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். சமயங்களில்
வீட்டில் வாழைப்பழம் தீர்ந்து விட்டது, தோடம்பழம் தீர்ந்து விட்டது போன்றதான விடயங்களைக்
கூட கவனிக்க மறந்து போய் விடுகிறேன்.
***************************

ஜெயரூபனின் (மைக்கல்) எழுத்துக்கள் வசீகரமானவை. கதை சொல்லும் உத்தியும் வித்தியாசமானது. புனைவுகள் இன்றிய நியங்களின் வடிவங்களான இவரது கதைகளை வாசிக்கும் போது கதைப்புலம் ஒரு படம் போல மனதுள் விரியும். கதை மாந்தர்கள் அங்கு நடமாடிக் கொண்டிருப்பார்கள். கதைகளை தன்னிலையிலும் சொல்லியிருப்பார். படர்க்கையிலும் சொல்லியிருப்பார். அவை பெரும்பாலும் எம் வாழ்வோடு நெருங்கிய விடயங்களைப் பேசுவனவாகவும், எமக்கு நெருக்கமாகவும், எம்முள் தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவும் அமைந்திருக்கும். நாம் நெகிழ்ந்து, கசிந்து, நெக்குருகி வாசித்துக் கொண்டிருப்போம். நினைவுகள் கிளறப்பட்டு, எம் வாழ்வில் நிகழந்த ஏதோ ஒரு துயரமானதோ அல்லது சந்தோசமானதோ சம்பவத்தை அந்தக் கதையோடு பொருத்திப் பார்த்து, அந்தக் காலத்துக்கே சென்று அந்தப் பொழுதுகளில் கரைவோம்.
அவரது கதைகளில் `ஜடாயு` என்ற சிறுகதையை கடைசியாக வாசித்தேன். மனசு கனமானது. நினைவுகளில் இருந்து அகற்ற முடியாமல் காலைகளின் விழிப்பில் கூட மனக்கண்ணுள் ஒரு சிறுவனும், அவனது தந்தையும் ஒரு கடற்கரையில் நடக்கும் காட்சி தெரிந்தது. அன்பால் பின்னப்பட்ட ஒரு குடில் தெரிந்தது. அச்சிறுவன் வளர்ந்து கொண்டிருக்கும் போது அந்தத் தந்தையின் கனவிலும், கற்பனையிலும் எத்தனையெல்லாம் இருந்திருக்கும் என்ற சிந்தனை தவிர்க்க முடியாமல் எழுந்து கொண்டே இருந்தது.
மகன் கூட வே வளர்வான், உறுதுணையாக இருப்பான், படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தைத் தாங்குவான், தோள் கொடுப்பான்... என்று எல்லா யாழ்ப்பாணத் தந்தையர்க்கும் இருந்த கனவு அந்தத் தந்தையிடமும் கண்டிப்பாக இருந்திருக்கும். அந்த அம்மா, அக்கா...
இவையெல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஓடும் தைரியம் எங்கள் நாட்டில் எத்தனையோ ஆயிரம் இளைஞர்களிடம் வந்தது. பாடசாலைக்குப் போன பிள்ளைகள் பசியோடு திரும்புவார்கள் என்று அன்போடும், அவதியோடும் சமைத்து வைத்து விட்டுக் காத்திருந்த அம்மாமாரையெல்லாம் சைக்கிளையும், புத்தகப் பையையும் யாரோ ஒருவனிடம் கொடுத்தனுப்பி ஏமாற்றிய தைரியம் அது. அக்காமாருடனும், தங்கைமாருடனும் சண்டை பிடித்து, அடம் பிடித்து, அன்பைப் பொழிந்து… வாழ்ந்து விட்டு ஒரு பொழுதில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்ட பயங்கரத் தைரியம் அது.
`ஜடாயு´ மீன்பிடித் தொழிலை சீவனமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. அம்மாவையும், அப்பாவையும், அக்காவையும் விட்டு விட்டு அவர்களது அன்புத் தம்பி போராடப் போய் விடுகிறான். பாடசாலைக்குப் போனவனின் சைக்கிளும், புத்தகப்பையும்தான் வீட்டுக்கு வந்தன. அது தந்த ஏமாற்றத்திலும், ஏக்கத்திலும் மனதாலும், உடலாலும் சாய்ந்து போன ஒரு தந்தையின் கதை அது.
ஈழத்தில் எத்தனையோ ஆயிரம் குடும்பங்களில் இது நடந்திருக்கிறது. அது வலியாக, தாள முடியாத சோகத்தின் சுமையாக ஒட்டுமொத்தக் குடும்பத்தையே ஆட்டிப் படைத்திருக்கிறது. வருத்தியிருக்கிறது. பெரும்பாலும் அந்த வலியை, அந்தக் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர்தான் எங்களுக்குச் சொல்லியிருப்பார். இக்கதையில் குடும்பத்தை விட்டுச் சென்ற அந்த மகனே, தான் போனபின்னான தனது குடும்பத்தின் வலியை தன் பார்வையில் இருந்து சொல்கிறார். கதையை வாசிக்கும் போது நான் அங்கே அந்தக் கடற்கரை வீட்டுக்கே போய் விட்டேன்.
வாசித்து முடித்த பின், அந்தத் தந்தை, எனது தந்தை... இன்னும் எத்தனையோ தந்தையர் என் நினைவுகளில் மிதந்தார்கள். இன்றைய பொழுதில் எதுவுமே இல்லையென்று ஆனபின்னும் அந்த வலிகளுடனேயே மடிந்து போன அவர்களை நினைத்து ஆதங்கப் படுவததைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.
ஜடாயு கதையையும் மறக்க முடியவில்லை.
அதன் முடிவை எழுதும் போது ஜெயரூபன் என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது. எனக்குள் தோன்றுவது 'எங்கள் பிள்ளைகள் நாட்டின் பிள்ளைகள் ஆன போது, ஊர்ப்பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளானார்கள்' என்பதே.
ஜெயரூபனின் (மைக்கல்) `ஏழாவது சொர்கம்´ நாவல் பற்றி பதிவுகளிலும், வேறு தளங்களிலும் பலர் சிலாகித்துள்ளார்கள். புலம்பெயர் நாவல்கள் பற்றிய ஆங்காங்கு காணப்படும் கட்டுரைகளிலும் கூட மறக்காமல் இந்த `ஏழாவது சொர்க்கம்` குறிப்பிடப் பட்டுள்ளது. அதையும் கிரிதரனின் பதிவுகள் தளத்தில் தேடி எடுத்து வாசித்தேன்.
அதை வாசிக்கத் தொடங்கிய பின் நிறுத்த முடியாத அளவுக்கு அந்நாவல் என்னை ஈர்த்திருந்தது. ஜடாயு சிறுகதையை வாசிக்கும் வரை அந்த உலகிலிருந்து மீள முடியாதிருந்தேன்.
அதை இன்னொரு தரம் வாசித்து விட்டு அது பற்றி ஏதும் எழுத முடிந்தால் எழுதுகிறேன்.
சந்திரவதனா
11.09.2016
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
▼
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
- ▼ September 2016 ( 4 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )