Monday, September 22, 2003

இவனின் வாழ்வு ஏன் இவ்வழி திரும்பியது?

வேலை நேரம் ஏதோ அலுவலாக வெளியில் வந்த போது அவன் பணம் எடுக்க என்று வந்திருந்தான். கார்ட்டைப் போட்டு இரகசிய இலக்கங்களை அழுத்தி விட்டுத் திரும்பிக் குழந்தைத் தனமாய் சிரித்தான். சந்தோசமாக இருந்தது. தமிழன்.

சில நாட்களுக்கு முன் அவனை பேருந்தினுள் சந்தித்த ஞாபகம். அன்று அவன் வேலை முடிந்து சென்று கொண்டிருந்ததால் தலை கலைந்து உடைகள் கசங்கி
களைப்பாகத் தெரிந்தான். இன்று குளித்து... குளிர்ச்சியாகத் தெரிந்தான். எமது நகரத்துக்குப் புதியவன்.

சின்னதான குசல விசாரிப்பின் பின் சற்று ஆழமாக அவன் பற்றி விசாரித்தேன்.
குழந்தைத் தனமாகச் சிரிக்கும் அவனுக்கு விரைவில் குழந்தை கிடைக்கப் போகிறதாம். ஆனாலும் விழியில் மெலிதான சோகம். பதினாறு வயதிலேயே யேர்மனிக்கு வந்து விட்டானாம். படித்திருக்கலாம். அம்மா அப்பாவுடன் வரவில்லை. அதனால் படிப்பை விட அம்மா அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய பணம் முக்கியமாகத் தெரிய வேலை செய்யத் தொடங்கி விட்டான். இப்போது 23 வயதில் இயந்திரங்கள் நடுவே இயந்திரமாகி விட்டான்.

விசாவுக்காக.. பேசிக் கதைத்து யேர்மனியில் வதிவிட அனுமதி கிடைத்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளான். மனசை விட விசாதான் இந்தத் திருமணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதனால் மனைவியும் அருகில் இல்லை. வேறு நகரிலாம்...

அவன் போய் வெகு நேரமாகி விட்டது.

இவனின் வாழ்வு ஏன் இவ்வழி திரும்பியது? மனசு கேட்கிறது.

சந்திரவதனா - யேர்மனி - 22.9.2003

Tuesday, September 16, 2003

அவன்

 அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் Organic Chemistry தொடங்கியது. பதினோராம் வகுப்புக்கான மாஸ்டர் வரவில்லையென்பதால் அந்த வகுப்பு மாணவர்களையும் எமது 12ம் வகுப்புக்குள் விட்டார்கள்.

பெப்பே தான் அவசரமாக வாங்கில் மேசைகளை ஒழுங்கு படுத்தி விட்டது. அது யார் பெப்பே...! என்ற யோசனை உங்களுக்கு வரலாம். அது பாவம். நாங்கள் பெண்கள் எல்லோருமாகச் சேர்ந்து அதுக்கு வைத்த பெயர்தான் பெப்பெ. அதென்ன அஃறிணையில்... என்று நெற்றியைச் சுருக்குகிறீர்களா? அவனெண்டு சொல்ல முடியவில்லை. வயதில் மூத்தது. அவர் என்று சொல்ல முடியாத படி பெப்பே. நாங்கள் ரியூற்றறிக்குள் நுழையும் போது கதவைத் திறந்து விடுவதிலிருந்து கரும்பலகையைச் சுத்தமாக்கி... என்று எல்லாவற்றையும் செய்து வைப்பதுதான் பெப்பேயின் வேலை.

யாரோ நாங்கள் பெப்பே என்று சொல்வதை அதுக்குச் சொல்லி, ஒரு நாள் இடைவேளை நேரம் அது வந்து அதன் அர்த்தம் என்ன? ஏன் தனக்கு அப்பிடிப் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்க எங்களுக்குப் பாவமாகி விட்டது. பெயர் வைப்பதில் மும்முரமாக நின்ற சந்திரப்பிறேமா மட்டும் நைஸாக நழுவி விட்டாள்.
மனசுக்குள் கனவுகளை வளர்த்துக் கொண்டு மன்மத நினைப்பில் பெண்களுக்கு நடுவில் வேலை செய்து கொண்டிருந்த பெப்பே இப்போதெல்லாம் எங்களைக் கண்டால் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

சில 11ம் வகுப்பு மாணவர்கள் உதவி செய்ய, பெப்பே முகத்தைத் தொங்கப் போட்ட படி வாங்கில்களை அடுக்கிக் கொண்டிருக்கவே ஆண்மாணவர்கள் சிலர் தடால் புடால் என்று ஓடிவந்து அமரத் தொடங்கினார்கள். இடங் காணததால் பக்கப் பாடாகவும் வாங்கில்கள் போடப் பட்டன.

வகுப்பு தொடங்கி விட்டது. பெப்பே அவசரமாய்ப் புதுச் சோக்குகளை கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு வெளியேறி விட்டது.

மணியம் மாஸ்டர் வழக்கம் போல Organic Chemistry யை இரட்டை அர்த்தம் தொனிக்க விளக்கிக் கொண்டிருந்தார். சிரிப்பலைகளின் நடுவே அவசரமாய் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று என் காலில் ஏதோ தட்டுப் பட்டது. திடுக்கிட்டுக் குனிந்து பார்த்தேன். ஒரு கால் நீண்டிருந்தது. அது பக்கப் பாடாக எனக்கு வலது பக்கமாக வைக்கப் பட்டிருந்த வாங்கிலில் இருந்த அவனின் கால். நிமிர்ந்து பார்த்தேன். அவன் குனிந்த தலை நிமிராமல் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.

என்னை விட இளையவன். 11ம் வகுப்பு மாணவன். எனக்குப் பிரயோககணிதம் படிப்பிக்கும் மாஸ்டரின் மகன். அந்த மாஸ்டர் கடமையே கண்ணானவர். அவர் வகுப்புக்குள் நுழைந்து விட்டால் ஆர்முடுகல், அமர்முடுகல், வேகம், நேரம், கரும்பலகை, சோக், டஸ்ரர்,... இவைகள் தவிர வேறெதுவும் எம் சிந்தனையில் செல்லாது. Chemistry யில் மாதிரி பிரயோககணித வகுப்பில் நிறையப் பெண்களும் இருக்க மாட்டார்கள். ஏதோ பெண்கள் கணிதம் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்பது போல டொக்டர், ரீச்சர் கனவுகளோடு உயிரியலும், தாவரவியலும் படிக்கச் சென்று விடுவார்கள். நானும் கீதாவும் இன்பியும்தான் கணிதம் படிப்போம். மிச்ச எல்லாம் பெடியன்கள்தான். எங்களுக்குத்தான் சின்னதாகக் கூடப் பெண்களின் பக்கமாகச் சிரிக்காமல் சீரியஸாகப் படிப்பிக்கும் அந்த மாஸ்டரின் ஆசிரியத் தன்மையும், திறமையும் தெரியும். அதனால் நாங்கள் மூவரும் அவர் மகனான அவனை மற்றைய மாணவர்கள் போல சாதாரணமாக எண்ணாது சற்று எட்டவே வைத்திருந்தோம்.

இதென்னடா...? வாங்கிலுக்குக் கீழே தவறுதலாக ஒரு கால் பட்டதுக்கு இத்தனை ஆரவாரமா என உங்களுக்கு ஒரு சிரிப்பான யோசனை வரலாம். அந்தக் காலம் என்ன உதட்டோடு உதடுரசிக் ´ஹலோ´ சொல்லும் இன்றைய காலமா.? ஒன்றாகப் படிக்கும் மாணவனுடன் கூட ஒரு வார்த்தை பேசாது, ஆண் பெண் என்று பிறித்து, பிரித்து வைத்து.. கண்கள் சந்தித்துக் கொண்டாலே பாவம் என்பது போல தலைகுனிந்து திரியும் இற்றைக்கு 28 வருடங்கள் முந்திய காலமல்லவா அது..!

பார்வையே தொடக் கூடாது. புன்னகை.. அது தெரியாமல் கூட ஆண் மாணவர்கள் முன் பெண் மாணவர்களுக்குப் பூக்கக் கூடாது. இந்த நிலையில் ஒரு ஆண் மாணவனின் கால் பெண் மாணவியின் காலில் படுவதென்பது சும்மாவா..?

அவன்  தலை கவிண்ட படியே எழுதிக் கொண்டிருந்தான். யாராவது அவதானித்திருப்பார்களா என்று அறிந்து கொள்ள மெதுவாகப் பார்வையைச் சுழற்றினேன். எல்லோரும் நோட்ஸ் எடுப்பதிலேயே கவனமாக இருந்தார்கள். யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதில் எனக்குப் பெரும்நிம்மதி. இருந்தாலும் ஏதோ அவமானப் பட்டுப் போன மாதிரியான ஒரு உணர்வு. முன் வாங்கிலில்தான் நான் இருந்தேன். எனக்கு நேரெதிரே கரும்பலகைக்கு முன் நின்று படிப்பித்துக் கொண்டிருக்கும் மணியம் மாஸ்டர் கண்டிருப்பாரோ என்று மனசுக்குள் ஒரு சின்ன உறுத்தல்.

அவன்  தலையை நிமிர்த்தியதை நான் காணவில்லை. அவன் நோட்ஸ் எடுக்கும் விதத்தைப் பார்த்தால் அவன் என் காலில் தட்டுப் பட்டதையே உணராதவன் போலத் தெரிந்தான். தெரியாமல்தான் நடந்திருக்கும். அவன் நல்ல பெடியன். என் மனசுக்கு நான் கூறிக் கொண்டேன்.

வகுப்பு முடிந்து வெளியில் வந்த போதும் யாரும் இது பற்றி எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. எனக்கு இப்போ துணிச்சலான நிம்மதி. யாரும் காணவில்லை.

அடுத்த வாரம் பாடசாலைக்குச் சென்ற போது எனது நிம்மதி பாடசாலை மதில்களில் கரிக்கட்டியால் குலைக்கப் பட்டிருந்தது. அவனது பெயரை  எழுதி பக்கத்தில் கூட்டல் அடையாளம் போட்டு எனது பெயரும் எழுதப் பட்டிருந்தது. என்னையும் அவனையும் இணைத்தும், நான் அவனின் காலைத் தட்டினேன் என்றும் அரசல் புரசலான கதைகள் பாடசாலைச் சுவர்களில் எதிரொலித்தன.

எனது கால் மாஸ்டரை நோக்கித்தான் நீள முடியுமே தவிர எனக்கு வலது பக்கமாக இருந்த அவனின் பக்கமாக நீள முடியாது. அவனாக வேண்டுமென்று என் பக்கம் நீட்டினானா..? அல்லது தவறுதலாக நடந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதை ஒரு தவறான கதையாக ஊருக்குள் உலாவ விட்டு விட்டான்.

´ஏன்ரா இப்படி ஒரு கதையை உருவாக்கினாய்` என்று அன்று அவனிடம் சென்று கேட்க ஆண் பெண்ணுக்கிடையில் அன்றிருந்த இடைவெளி இடம் தரவில்லை. அதனால் இன்றுவரை அவன்  ஏன் அப்படி நடந்து கொண்டான்..? என்ற கேள்விவிக்கு எனக்குப் பதில் கிடைக்கவும் இல்லை.

சந்திரவதனா - யேர்மனி - 15.9.03

Monday, September 15, 2003

புயலடித்துச் சாய்ந்த மரம்

காற்றே!
உனக்கும் இரண்டு முகமா..?

தென்றல் என்றுதானே
என்னைத் தந்தேன்
இளமையின மதாளிப்புடன் நான்
பசுமையாய் செழித்திருக்கையில்
அல்லும் பகலும்
தழுவலும் வருடலுமாய்
அருகிருந்து
என் இளமையைச் சுகித்து விட்டு
எனதிந்த தள்ளாத வயதில்
உன் சுயத்தைக் காட்டி விட்டாயே!

கனிதரும் காலம் போய்விட்டாலும்
நீ களைப்பாக வரும்போதெல்லாம்
இளைப்பாற இடம் தந்திருப்பேனே!
வேரோடு சாய்த்து விட்டாயே!

வீழ்ந்ததில் வேதனை இல்லை
உன் நியமான
புயல்முகம் கண்டதில்தான்
பலமான அதிர்ச்சி.
வேரறுந்ததில் சோகமில்லை
நீயறுத்தாயே
அதைத்தான் ஏற்காமல்
மனதுக்குள் வெகுட்சி.

சந்திரவதனா - 21.4.2002

Sunday, September 14, 2003

சந்தோசிக்க வைத்தார்கள்

சுபாவைக் கண்டு பிடித்தேனோ இல்லையோ, சுபாவைத் தேடும் போது சில அன்பு உள்ளங்களின் அக்கறையான செயற்பாட்டைக் கண்டு கொள்ள முடிந்தது. அவர்கள் தாமாகவே தமக்குத் தெரிந்த சுபா பற்றிய தகவல்களை எனக்கு அனுப்பி வைத்து என்னை சந்தோசிக்க வைத்தார்கள்.

இத்தனை அவசரமான உலகில் இது போன்ற உறவுகளின் தொடர்பாடல்கள் இருப்பதால்தானோ என்னவோ நாம் இன்னும் வாழ்தலை நேசிக்கிறோம்.

Friday, September 05, 2003

இவர் அவராக இருப்பாரோ...?

இந்த சுபா யாராக இருக்கும் என்று நான் பல தடவைகள் ஆராய்ச்சி செய்து விட்டேன். பலரையும் கேட்டுப் பார்த்து விட்டேன். பலன் என்னவோ பூச்சியம்தான். சுபாவைத் தெரிந்த யாரையுமே நான் இன்னும் சந்திக்கவில்லை.

சுபா ஆணா பெண்ணா என்ற ஆராய்ச்சியில் கூட நான் தோற்றுத்தான் போனேன். சுபா பெண்தான் என நான் எனக்குள்ளே தீர்மானித்து கண்டு பிடித்து விட்டேன் என்று இறுமாப்புடன் இருந்தால் சுபா அடுத்த வாரம் தனது சிறுகதையை ஒரு ஆணாக இருந்து எழுதியிருப்பார்.

ஈழமுரசில் வரும் சிறுகதைகளுக்குள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறு சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சமூகப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாகவும் அமைந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பது இவரின் கதைகள். கதையை நகர்த்தும் விதம் மிக நன்றாக இருக்கும்.

இவரைப் போல இன்னும் எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இருக்கும் போது நான் ஏன் இவரைக் குறிப்பாகத் தேடினேன் என நீங்கள் யோசிக்கலாம். இவர் கதையிலே ஸ்ருட்கார்ட்டில் இருக்கும் பிருந்தா சில்க் கவுஸ் சொப்பிங் பாக் பற்றி வந்தது. அதுதான் என்னை அளவுக்கதிகமாக ஆர்வத்துடன் அவரைத் தேட வைத்தது. எனக்கு அண்மையில் இப்படி ஒரு எழுத்தாளர். சத்தமில்லாமல் தனது முழுப்பெயரைக் கூடக் குறிப்பிடாமல் சுபா என்று எழுதிக் கொண்டிருக்கிறார். இடையிடையே இவர் கதைகளில் ஸ்ருட்கார்ட்டில் வசிக்கும் தமிழ் குடும்ப அங்கத்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அவரது படைப்புக்களின் பரம ரசிகை நான்.

ஆணா பெண்ணா என்று கூட அனுமானிக்க முடியாமல்...
என் மனத் தராசு பெண்தான் என்று ஊகம் கொண்டு அந்தப் பக்கம் தாழும் போது அவரது கதையை வாசித்த இன்னொருத்தி சொல்லுவாள் சீ.. அது ஆண். என்று. ஈழமுரசுக்குக் கூட எழுதிக் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் மூச்சுக் காட்டவில்லை.

இப்படியே சில வருடங்களாக மனதுக்குள் கேள்விக் குறியாக சுபாவைக் கொண்டு திரிகையில்தான் எனக்கு இந்த Blog இன் அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது நேரம் கிடைக்கும் நேரங்களில் ஒவ்வொருவரினதும் Blog ஆக திறந்து வாசித்துப் பார்த்த போதுதான் ஒரு Blog இனூடே சுபாஒன்லைன் அறிமுகமானது. அவரது பக்கங்களை வாசித்துக் கொண்டு போகும் போது அவர் யேர்மனியில் எஸ்லிங்கன் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. உடனேயே எனக்குள் ஒரு சந்தோசம்.

இவர் அவராக இருப்பாரோ...? சந்தேகத்தை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதனால் உடனடியாக அவர் தளத்துக்குள் அவர் மின்னஞ்சல் முகவரியைத் தேடி எடுத்து, எனது தேடல் பற்றி மிகச் சுருக்கமாக எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்ன..? அனுப்பிய வேகத்தில் மின்னஞ்சல் என்னிடமே திரும்பி விட்டது.
இன்னும் தெரியவில்லை. யார் அந்த சுபா என்று..!

Wednesday, September 03, 2003

தாய்மனமும் சேய்மனமும்

சிறகிருக்கிறது
என்னைப் பறக்க விடு
என்பது பிள்ளை மனம்.

சிறு பிள்ளை நீ
என் இறகுக்குள் ஒளிந்து கொள்
என்பது பெற்ற மனம்.

புரியாமல் பறந்தோடும்
பிள்ளை மனம்
புரியும் போது
அதுவும் பெற்ற மனம்.

சந்திரவதனா - யேர்மனி - 11.6.1999

Sunday, August 24, 2003

மேடைப்பேச்சு

அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன்.. வாய் குளறி... தடுமாறியிருக்கிறேன். அப்படியான சமயங்களில் எழுத்தின் ஆங்காரம், பேச்சில் ஓங்கவில்லையே எனப் பலர் என்னிடம் ஆச்சரியப் பட்டுள்ளார்கள். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒத்திகை பார்ப்பு என்பது எனக்குள்ளே அரங்கேறி அசை மீட்கும்.

அவர் மீது எனக்கு நல்ல மதிப்பு. அதனால்தான் இன்று இத்தனை தரமாய் ஒத்திகை பார்ப்பு. மேடைகளிலும், வானொலிகளிலும் வாய் திறந்தாலே அருவியாகக் கொட்டும் அவர் தமிழில் நான் மெய் மறந்து போயிருக்கிறேன். வார்த்தைகளில் அழகு மட்டுமா? வயதான அவரிடமிருந்து வெளிப்படும் முற்போக்குச் சிந்தனையுடனான, புதுமை நிறைந்த, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் என்ன ஒரு தெளிவு. அடித்து வைத்துச் சொல்லும் கருத்துக்களிலுள்ள நியாயம். உண்மையிலேயே நான் வியந்து போவேன்.

கடந்த வாரமும் ஐரோப்பிய வானொலி ஒன்றில் கிட்டத்தட்ட 40 நிமிட நேரங்கள் அவரது வீச்சான உரை ஒலிபரப்பானது. எடுத்துக் கொண்ட விடயம் ஐரோப்பியாவில் நடைபெறும் ஆடம்பரமான சாமத்தியச்சடங்குகள் அவசியமானதுதானா..? என்றதாக இருந்தது. இன்றைய எமது கணினி உலகப் பெண்களே சாமத்தியச்சடங்கு அவசியந்தான் என்று எண்ணி தமது பெண் குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையில் அவர் அது அவசியமே இல்லை.. என்று வாதிட்டு, வானொலி அறிவிப்பாளருக்கு இடையிடையே எழுந்த அது சம்பந்தமான சந்தேகங்களுக்கும்; தங்கு தடையின்றிப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஐம்பதைத் தொட்ட ஒருவர் இப்படி முற்போக்கு நிறைந்த ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்ததில் எனக்கு மெய்சிலிர்த்தது. அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

அந்த எனது நினைப்பை இன்று எப்படியாவது செயலாக்க வேண்டும் என்ற முனைப்பில், மீண்டும் ஒரு முறை மனசுக்குள் எப்படி அவருடன் பேசுவது என ஒத்திகை பார்த்து விட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.

வழமைக்கு மாறாக எனக்கும் இன்று தங்கு தடையின்றிப் பேச வந்தது. பாராட்டினேன். அவரை நியமாகவே மனசாரப் பாராட்டினேன். அவரின் தமிழ்ப்புலமையை, பேசுந்திறனை, பொருள் கொண்ட கருத்துக்களை, அதைச் சபையோர்க்குத் தரும் விதத்தை ... என்று பாராட்டினேன். பேச்சு அலுக்கவில்லை. இருந்தாலும் பின்பொருமுறை பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பைத் துண்டிக்க முனைந்தேன்.

அவர் பல தடவைகள் நன்றி சொன்னார்.
இண்டைக்கெண்ட படியால் என்னைப் பிடிச்சிங்கள். இனி இரண்டு கிழமைக்கு எனக்கு ஒண்டுக்கும் நேரமிராது. என்றார்.

ஏன் நாட்டுக்குப் போறிங்களோ..?
இன்றைய இப்போதைய நிலையில் புலத்தில் இதுதானே சகயம் என்பதால் உடனேயே எந்த சிந்தனையுமின்றிக் கேட்டு விட்டேன்.

இல்லையில்லை... மகள் பெரியபிள்ளையாகி ஒரு மாசமாச்சு. வாற சனிக்குத்தான் ஹோல் கிடைச்சுது. அதுதான் அந்த வேலையளோடை ஓடித் திரியிறன். எல்லாருக்கும் கார்ட் குடுத்திட்டன்... அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நான் தொலைபேசியை வைத்து விட்டேன்.

சந்திரவதனா - 21.8.2003
பிரசுரம் - வடலி-லண்டன்(செப்டெம்பர்-2003)

Wednesday, August 20, 2003

இதற்கு என்ன பெயர்..???

ஈமெயில் பார்த்து
இதயச் சுவர்கள் வேர்த்து
முகம் தெரியா உனக்காய்
முழுமதியாய் சிரித்து..!

இதற்கு என்ன பெயர்..!
இதுவும் காதலா..?

சந்திரவதனா - 1999

Monday, August 18, 2003

எம்மவர் மட்டும் எங்கே...?

பனியின்றி குளிரின்றி
இந்த வருடத்தின் முதல் சிரிப்பு

இயற்கையின் சிரிப்பில்
துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..!
மலர்வது மலர் மட்டுந்தானா..!
மனிதர்களுந்தான்..!

நகரமே சிரித்தது
யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது
சிரித்துக் களித்தது
இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க
மலராய்த் தெரிந்தது

குட்டைப் பாவாடைகளும்
கட்டை ரீசேர்ட்டுகளும்
தலை காட்டா விட்டாலும்
சிட்டுக் குருவிகளாய் இளசுகள்
உதட்டோடு உதடுரசி
மூக்கோடு மூக்குரசி
கெஞ்சலும் கொஞ்சலுமாய்.....

வட்ட மேசைகளைச் சுற்றி
வட்ட மிட்ட கதிரைகளில்
பெரிசுகளும் சிறிசுகளும்
கண் பார்த்துக் கதை பேசி
மெல்லுதட்டில் தமை மறந்து
ஐஸ் சுவைத்து......
கை கோர்த்து நடக்கையிலும்
காதலுடன் இடை தழுவி
உடல் உரசி
மனம் சிலிர்க்க மலர் பரிமாறி....

இயற்கையோடு இயற்கையாக
சிரித்து... சிலிர்த்து...
ஊரே களித்திருக்கையில்
இந்நகரில் வாழும் இருபது தமிழரில்
ஒருவரையும் காணோமே...!

வன்னியும் வாகரையும்
மனத் திரையில் ஓட
எங்கேயும்
பிற்சேரியாவிலும் ரெஸ்ரோறண்டிலும்
கனவுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார்களோ.....???

சந்திரவதனா செல்வகுமாரன்
3.4.1999

Thursday, August 14, 2003

நட்பென்றுதானே நம்பினேன்.....!

போரிலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனிமை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது.

நட்பென்றுதானே நம்பினேன்
கை கோர்க்க எண்ணி
விரல் நீட்டினேன்

என் விரலை
சிறை வைத்து
பின் முறித்தெறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் கூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்......?

சந்திரவதனா 12.12.2001

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite