Tuesday, March 23, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி -3

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!


இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!

எனது இரண்டு உள்ளங் கைகளையும் நான் ஒட்டியபடி வைத்திருக்க அதிலே மண் போட்டு ஒரு தடி குத்தப் பட்டது. கண்கள் அப்பாச்சியின் பழைய சேலை ஒன்றின் தலைப்பில் இருந்து கிழித்தெடுக்கப் பட்ட துண்டால் கட்டப் பட்டது.
சித்தப்பாதான்(பரமகுரு) மெயின். இன்னும் எனது அண்ணன் அக்கம் பக்கத்துப் பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து அப்பாச்சி வீட்டுக்கு முன்னுள்ள அந்தப் பெரிய காணியின் மூலைப் பக்கத்திலிருந்து விளையாட்டைத் தொடங்கினோம்.

அதுதான் எமது விளையாட்டுக்களுக்கான மையப்புள்ளி. அப்பாச்சி வீட்டுக்காணி போலவே அந்தக் காணியும் பென்னாம் பெரிசு. ஆனால் அப்பாச்சியின் காணியில் பூட்டப்பாவின் மூன்று பெண்களுக்குமெனக் கட்டப் பட்ட மூன்று வீடுகள் முறையே அடுக்காக அமர்ந்திருந்தன. வீடுகளுக்கிடையேயும் பின்னுக்கும் பெரிய பெரிய முற்றங்கள். வீடுகளைப் பிரிக்கும் எல்லைகளாக ஓரிரு செம்பருத்தியும் ஒரு நெல்லியும்தான். படுக்கையும் சமையலும் மட்டும் அவரவர் வீடுகளுக்குள் நடக்கும். மிச்சமெல்லாம் பனம் பூக்களைச் சொரிந்து கொண்டும், நொங்குகள் தொங்கிக் கொண்டும் ஆங்காங்கு நிமிர்ந்து நிற்கும் பனைகள் நிரவி நிற்கும் அந்த முற்றங்களில்தான்.

அப்பாச்சி வீட்டின் களைக்கு முற்றும் எதிரான தோற்றத்துடன்தான் முன் காணி. எருக்கலை பூத்திருக்கும். பிரண்டை படர்ந்திருக்கும். கற்றாழை ஆங்காங்கு துண்டுகள் வெட்டி எடுக்கப் பட்ட இதழ்களுடன் சற்று விறைப்பாக விரிந்திருக்கும். ஊமத்தை பூத்திருக்கும். சில காலங்களில் பருத்தி வெடித்துப் பஞ்சுகள் பறந்து கொண்டிருக்கும். குவித்து வைக்கப் பட்ட கற்கள் எங்கள் உழக்கல்களால் சிதறி காணி முழுவதும் பரவியிருக்கும். பின் மூலையில் ஒரு மலசலகூடம் தீண்டுவாரின்றி தனியாக இருக்கும்.

பூட்டப்பா இருக்கும் வரை அந்தக் காணியின் மதிப்பு அதிகமாயிருந்தது. அவரின் மருந்துத் தேவைகளுக்கெல்லாம் அங்கிருந்துதான் அனேகமான மூலிகைகள் எடுக்கப்படும். மூலவருத்தக் காரருக்கு கற்றாழை தெய்வம் போல. கற்றாழையின் தோலை நீக்கித் துண்டு துண்டாக வெட்டி - மணம் போவதற்கு - ஏழு தண்ணீரில் கழுவி கோப்பையில் போட்டால் மிகவும் அழகாக பளிங்குக் கற்கள் போல் பளபளக்கும். அதை மூலவருத்தக்காரர் காலை எழுந்தவுடன் வெறு வயிற்றில் சாப்பிட வேண்டும். வாய்க்குள் போட்டால் அப்படியே வழுக்கிக் கொண்டு போகுமாம். ஆனால் அதன் சுவையில் முகந்தான் அவர்களுக்குக் கோணலாகிப் போகும். என் முகமோ மணத்தில் கோணலாகி விடும்.
சொல்லி வைத்து மூன்று மாதத்தில் வருத்தம் மாறி விடுமாம். மூலவருத்தக்காரர் வந்தால் பூட்டப்பா இந்தக் கற்றாழையை சுத்தப் படுத்தி இரு கோப்பைகளில் போடுவார். ஒன்று வெறுவயிற்றில் சாப்பிடவாம். மற்றது வீட்டுக்குக் கொண்டு போய் வெங்காயமும் போட்டு நல்லெண்ணெயில் பொரித்து சோற்றுடன் மதியச் சாப்பாடாகச் சாப்பிட வேண்டுமாம். பிரண்டந்தண்டும் கற்றாழை போல ஒரு முக்கியமான மருந்துதான்.

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!

எல்லோரும் நடந்து கொண்டிருந்தோம். எனது கண்கள் மட்டும் கட்டப் பட்டிருந்தது. வாய் ஓயாது இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)
கேட்கப் படும்.

நானும் சொல்லுவேன். புளியடி புங்கடி!

இராசம்மா பாட்டி வீட்டைத் தாண்டும் போது எள்ளு வாசம் வரும். அவர்கள் எள்ளு ஆட்டி நல்லெண்ணெய் விற்பவர்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் காணிகளுக்கும் ஒவ்வொரு வாசம். எந்த வாசமுமின்றி மல்லிகைப்பூ வாசம் கூட இன்றி; சில வீடுகள் மிகவும் அமைதியாகவும் இருக்கும். எல்லோரும் சொந்தக் காரர்கள்தான். கண் கட்டியிருந்தாலும் நான் எங்கே நிற்கிறேன் என்பதை இந்த வாசங்களினூடே கண்டு பிடித்து விடுவேன்.

அரசடிச் சந்தி ஒரு முச்சந்தி. சித்தப்பா(பரமகுரு) என்னை ஒருதரம் சுழற்றி விடுவார். தலை சுத்தும். பாதை தடுமாறும். கொஞ்ச நேரம் நான் எங்கே நிற்கிறேன் என்று யோசிக்க வேண்டி இருக்கும். ஆனாலும் சிவக்கொழுந்துப் பாட்டி வீடு தாண்டும் போது எதிரேயுள்ள பனங்காணிக்குள் இருந்து வரும் பனம்பூவினதும் பனம்பழத்தினதும் வாசத்தில் இடத்தைப் பிடித்து விடுவேன். அப்படியே மல்லிகைக் கலட்டிப் பக்கம் போய் விடாமல் திரும்பி...... அடுத்த திருப்பத்திலும் பண்டாரி கோயில் பக்கம் திரும்பி விடாமல்....... நடந்தால் சுத்தியும் சுத்தியும் சுப்பற்ற கொல்லைக்குள்ளைதான். புதியாக்கணக்கனுக்கே வந்து விடுவோம்.

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி.

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புதியாக்கணக்கன்.

நான் வென்று விடுவேன்.

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வராது உள்ளிருந்தே எங்களை வழி அனுப்பி வைத்த எனது மாமிமார் என்னைத் தூக்கிக் கொஞ்சுவார்கள். கற்கண்டு அல்லது பனங்கட்டி பரிசாய்க் கிடைக்கும். பனம்பழக் காலமென்றால் பனங்காய்ப் பணியாரம் கிடைக்கும்.

எனக்கு நான்கு மாமிமார். எனது அப்பாவுக்கு ஒரு தங்கை. அவ மூத்தமாமி. அதை விட அப்பாச்சியின் மூத்த தங்கையான முரசு மோட்டை அப்பாச்சிக்கு இரண்டு மகள்கள். அவர்கள் நாகரத்தினமாமி. தங்கரத்தினமாமி. மற்றைய தங்கையான சின்னப்பாச்சிக்கு ஒரு மகள். அவ ராணிமாமி. ராணிமாமி நல்ல வடிவு. உண்மையிலேயே ராணி மாதிரித்தான்.

திடீரென்று ஒரு நாள் இந்த மாமிமார் ஓலமிட்டார்கள். முரசுமோட்டையில் தோட்டம், துறவு, வயல், விளைச்சல் என்று வாழ்ந்த அவர்களின் அப்பா இறந்து விட்டாராம். பூட்டப்பாவின் குடும்பம் ஆட்டம் காணத் தொடங்கியது. நாகரத்தினமாமியும், தங்கரத்தினமாமியும், நாதச்சீனையாவும், சண்முகக்குஞ்சையாவும் அப்பா இல்லாத பிள்ளைகளாகினார்கள்.

அடிக்கடி முரசு மோட்டைக்குப் போய் வந்த முரசுமோட்டை அப்பாச்சி புதியாக்கணக்கனிலேயே முடங்கி விட்டா. மாமிமார் இருவரதும் கண்கள் எப்போதும் குளமாகவே இருந்தன. இடையிடையே நிரம்பி கன்னங்கள் வழியே வழிந்தோடின. அடிக்கடி ஐயா ஐயா என்று அவர் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

Thursday, March 18, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி -2

(பூட்டப்பா - பரமு)

அடுத்து மஞ்சள் நிற நூல் சேலையுடன் எனது பூட்டாச்சி என் நினைவில் அடிக்கடி வலம் வருவா. அவவின் இறப்பு ஏனோ என் ஞாபகத்தில் இல்லை. ஆனால் பூட்டப்பா அவரது நினைவு சாவு எல்லாமே பளிச்சென்று இன்னும் நினைவாக இருக்கின்றன.

எனக்கு அப்போ 4 வயது இருக்கலாமென நினைக்கிறேன். பூட்டப்பா ஒரு பரியாரி. அவரிடம் எப்போதும் நோயாளிகள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அவரது மருந்துப் பொருட்கள் வைப்பதற்கென்றே ஒரு பெரிய பெட்டகமும் சிறு சிறு மருந்துப் பெட்டிகளும், ராக்கைகளும் அடங்கிய படி தனியாக இரு அறைகள். அவர் வாசம் மருந்துகளின் வாசம் நிறைந்த அந்த அறைகள்தான்.

தும்புகள் நீக்கப்பட்டு வழுவழுப்பாக்கப்பட்ட சிரட்டைக்குள் அவர் மருந்துக்குளிகைகளை உரைத்துக் நோயாளிகளுக்குக் கொடுக்கும் போது எழும் அந்த வாசம் அல்லது மணம் இன்னும் என் மூக்கினுள் இருக்கிறது. அவரை நினைத்தாலே அந்த மணம் ஓடி வந்து என் மூக்கினுள் குந்திக் கொள்ளும். அனேகமான நோயாளிகளுக்கு தாய்ப்பாலில் உரைத்துச் சாப்பிடும் படி சிறிய வட்டக் குளிகைகளைக் கொடுத்து விடுவார். சிலருக்குப் பூவரசம் இலையில் வைத்து தேனில் குழைத்துச் சாப்பிடும் படியும் சொல்லி விடுவார். சிலருக்கு ஒழுங்காக மருந்தைச் சாப்பிடவில்லை என்று நல்ல பேச்சும் கொடுப்பார். பரமுப் பரியாரி என்றால் அந்த நேரம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

அவர் வருத்தமாகப் படுக்கையில் வீழ்ந்த போது கார்த்திகேசுப் பரியாரி வந்து பார்த்துப் போனார். ஆனாலும் அவர் இறந்து விட்டார். பரியாரி வேலையைப் பரம்பரையாகத் தொடரும் படியாக ஆண்வாரிசுகள் யாரும் அவருக்கு இல்லை. மூன்று பெண்பிள்ளைகளும் பெற்றுக் கொடுத்தவர்களில் எனது அப்பாதான் மூத்த பேரன்.

பூட்டப் பிள்ளைகள் நாங்கள் தடியில் துணி கட்டி தேங்காய் எண்ணெய்யில் தோய்த்தெடுத்த நெருப்புப் பந்தங்களை அவருக்குப் பிடித்தோம். நான் சின்னப்பிள்ளை என்றும், விழுத்தி விடுவேன் என்றும் சொல்லி ஒரு பெரிய மாமா எனது கையோடு சேர்த்து எனது பந்தத்தைப் பிடித்திருந்தார்.

பூட்டப்பாவின் இறப்பு எனக்கு சோகத்தை விட பயத்தைத்தான் தந்தது. எல்லாத்துக்கும் காரணம் அப்பாவின் கடைசித் தம்பியான எனது சித்தப்பாதான். அவர் எந்த நேரமும் பேய்க்கதைகள் சொல்லுவார். அவர் இறந்தவர்கள் பேயாக அந்த வீட்டில் அலைவார்கள் என முழுவதுமாக நம்பினார் போலும். நானும் அந்த நேரத்தில் நம்பினேன். சித்தப்பா அண்ணன் நான் மூவருமே பூட்டப்பா செத்ததன் பின் பூட்டப்பாவின் அந்த இரு அறைகளுக்குள்ளும் போவதே இல்லை. ஏதாவது தேவைக்கு அதனருகில் போக வேண்டி வந்தாலும் நெஞ்சு பயத்தில் கிடு கிடுக்க ஓடி வந்து விடுவேன். பார்க்காதே பார்க்காதே என மனம் தடுத்தாலும் இரவில் அப்பாச்சியின் அறை யன்னலால் கண்கள் அந்த இரு அறைகளையும் பார்க்கும். பார்க்கும் போது எனக்குப் பயமும் நடுக்கமும் வரும்.

எட்டு முடியுமட்டும் நாங்கள் அப்பாச்சி வீட்டில்தான் தங்கினோம். இரவுகளில் கனவுகள் என்னைத் தொல்லை பண்ணும். பூட்டப்பாவின் உடலெல்லாம் ஒரு நெருப்புப் பிழம்பு போல இருக்க அவர் அறைக்குள் இருந்து மருந்தை உரைப்பது போலக் கண்ட கனவை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

எட்டு நடந்த அன்று பேய்க்குக் கழிக்க என்று குங்குமம் போட்டு நீத்துப்பூசணிக்காய் தேசிக்காய் எல்லாம் பாதியாக வெட்டப் பட்டுச் சந்தியில் இருந்தன. அதில் என் காலைப் பட விட்டு விட்டேன். அதனால் என் கால் அழுகி விடும் என்று சித்தப்பா சொன்னதால் பல மாதங்களாக காலில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா எனப் பயத்துடன் அவதானித்துக் கொண்டே இருந்தேன்.

எட்டின் அன்று சோறு கறி பலகாரங்கள் என்று படைத்து விட்டு பூட்டப்பா வந்து சாப்பிடுவார் என அவரது மூன்று பெண்பிள்ளைகளுமான எனது அப்பாச்சிமார் சொன்னார்கள்.
நான் அவர் எப்போ வருவாரென படையலையே அவதானித்துக் கொண்டிருந்தேன். படையல் அன்று முழுக்க அப்படியே திறந்த படியேதான் இருந்தது. யாரும் வந்து சாப்பிட்டதைத்தான் நான் காணவில்லை.

எட்டு முடிய பூட்டப்பாவின் உடைகளோடு சேர்ந்து அவரது மருந்துகளும் சில பெட்டிகளும் தீயில் கருக்கப் பட்ட போது ஏதோ ஒரு கவலை தெரிந்தது.

(தொடரும்)

Wednesday, March 17, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி -1

எம் வாழ்வில் நடந்து முடிந்து போன சில விடயங்களோ அல்லது நாம் சந்தித்த சில விடயங்களோ அடிக்கடி எமது நினைவுகளுக்குள் வலம் வந்து கொண்டே இருக்கும். அவை சந்தோசமான விடயங்களாக எம்மைக் குதூகலிக்க வைப்பதாகவோ அல்லது மிகத் துயரமான விடயங்களாக எம்மைப் மிகவும் பாதிப்பதாகவோ இருக்கலாம்.

இழப்புகள் எல்லோருக்கும் வருவதுதான். இதில் மனித இழப்புக்கள் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நான் மிகவும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.


இதில் நினைவு தெரிந்து நான் முதல் முதல் சந்தித்த மரணம் எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது நடந்தது. நேற்றும் அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து அது எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது நடந்ததுதான் என்பதைத் திடப் படுத்திக் கொண்டேன். எனது மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடிச் சில தினங்களின் பின் அதாவது 1962 டிசம்பரில் நடந்தததாம்.

பிறேமா மாமியை எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. எங்கள் வீட்டையும் அவர்கள் வீட்டையும் ஒரு செம்பருத்தி வேலிதான் பிரித்தது. அம்மாவின் தாய் மாமன் மகள். மச்சாள் என்ற உறவையும் விட அவர்களுக்குள் நட்புத்தான் பலமாக இருந்ததாம். அம்மாவை விட வயதில் குறைந்தவர். அப்போதுதான் அவவுக்குத் திருமணமாகிக் குழந்தை பிறந்திருந்தது. குழந்தையை எனக்கு ஞாபகமில்லை.

திடீரென அந்த வீடு அன்று ஒப்பாரிக் கோலம் கொண்டது. எல்லோருமே அழுதார்கள். பிறேமா மாமியும் கணவனும் குழுந்தையுடன் இலங்கையின் தென்பகுதிக்குப் பயணமாகிக் கொண்டிருக்கையில் காரின் பின் பக்கக் கதவு திறபட்டு அவவும் குழந்தையும் வழியிலே வீழ்ந்து விட்டார்களாம். அதை உடனே சாரதியோ முன் இருக்கையில் இருந்த அவர் கணவனோ கவனிக்க வில்லையாம். நீண்ட தூரம் போன பின்தான் ஏதோ பிசகி விட்டதை உணர்ந்து வந்த வழி திரும்பிய போது மாமியும் குழந்தையும் வீதியோரத்தில் தூக்கி எறியப் பட்டு இறந்து போயிருந்தார்களாம்.

மூன்று ஆண் பிள்ளைகளுக்கு ஒரு அக்காவாக ஒற்றைப் பெண்ணாக இருந்த அவவின் இழப்பு அந்தக் குடும்பத்தை எவ்வளவு பாதித்தது என்பதை வருடங்கள் வருடங்களாக நான் உணர்ந்தேன். ஆனால் அன்று அந்த இழப்பு என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. எனது அம்மாவும் அழுதா என்பதால் சாவின் கனமோ துயரோ தெரியாத அந்த வயதில் அம்மாவும் அழுகிறா என்பதால் எனக்கும் அழுகை வர நானும் ஒப்பாரி செய்பவர் கூட்டத்தின் அருகில் உள்ள கப்பைக் கட்டிப் பிடித்த படி அழுது கொண்டு நின்றேன்.

நேரம் காலம் எதுவுமே பார்க்காமல் மனசுக்குள் அடிக்கடி வலம் வரும் பல நினைவுகளில் இதுவும் ஒன்று.

(தொடரும்)

Monday, March 15, 2004

முகவரி மாற்றம்

பெண்களுக்கான வலைப்பூவின் முகவரி மாறியுள்ளது.
புதிய முகவரி:http://womankind.yarl.net/

Saturday, March 06, 2004

பெண்களுக்காக ஒரு தளம்

பெண்களே..........!
உங்கள் விருப்புக்கள், வெறுப்புக்கள், அபிலாசைகள், பிரச்சனைகள்...........
எதுவாயினும் மனந்திறந்து பேச.. மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள.......
ஆலோசனைகளைப் பெற.......... இங்கே ஒரு தளம். இன்றைய பெண்கள்

Monday, March 01, 2004

காலமிட்ட விலங்கையும் உடை


பொல்லெடுத்து
உனை அடித்தார்களா..!
சொல்லெடுத்து
மனம் சிதைத்தார்களா..!
மெல்லியவள் என்று சொல்லி
மெல்லவே பின்னே
தள்ளியவர் முன்னே
கல்லுடைத்து....
வாழ்வின்
வளம் பொருத்த முனையும்
பெண்ணே..!
உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை
வெல்வாய்!

சந்திரவதனா - யேர்மனி
10.3.2003

Saturday, February 14, 2004

காதல்

இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புத்தான் காதல்.

அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதும், மனைவி கணவனிடத்தே கொண்டிருப்பதும் காதல்தான்.

ஆனால் அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதை பற்று என்றும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதைப் பரிவு என்றும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதை நட்பு என்றும், கணவன் மனைவியிடத்தோ, மனைவி கணவனிடத்தோ கொண்டிருப்பதை அன்பு என்றும் நாம் வகுத்துக் கொண்டுள்ளோம்.

இந்த அன்பு, நேசம், பிரியம், பற்று, பரிவு, நட்பு எல்லாமே காதலென்ற சொல்லினுள்ளேயே அடங்குகின்றன.
இருந்தும் தற்போது காதல் என்பது ஆண் பெண் இடையேயுள்ள அன்பை மட்டும் குறிப்பதாகி விட்டது.

இந்தக் காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
காதலினாலுயிர் வாழும் - இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் - இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் - பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்........
(காதற்பாட்டு, அந்திப்பொழுது -
பாரதியார் பாடல்கள்)


ஆழமான அன்பு நிறைந்த காதல் ஒருவனுக்கு இன்பத்தையும் இனிமையையும் மட்டுமல்லாது வீரத்தையும் துணிவையும் அறிவாற்றலையும் வாழ்வில் பற்றுதலையும் கொடுக்கிறது. இதை இன்றைய ஆராய்சியாளர்களும் மருத்துவர்களும் மட்டுமல்லாது அன்றைய கவிஞர்களும் அனுபவித்து உணர்ந்து சொல்லியுள்ளார்கள்.

காதல் இல்லாத வாழ்வே இல்லையெனக் கூறலாம்.
அப்படியொரு வாழ்வு இருந்தால் அது அர்த்தம் இல்லாததாகவும், சோகம் நிறைந்ததாகவும், தனிமைப் பட்ட உணர்வைத் தருவதாகவும், தாழ்வுச் சிக்கலைத் தோற்றுவிப்பதாகவுமே இருக்கும்.

மனிதர் தோன்றிய காலத்திலிருந்தே காதலும் தோன்றி விட்டது. இதை யாரும் இல்லையென்று சொல்லி விட முடியாது. பண்டைய காலத்திலேயே காதல் ஆதரிக்கப் பட்டுள்ளது. களவியல் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இருந்தும் இடைப்பட்ட காலத்தில் காதல் என்ற வார்த்தையை உச்சரிப்பதே தவறு என்றதொரு தப்பான கருத்து எம்மவரிடையே நிலவியது. இதற்கான முக்கிய காரணம் எம்மவரிடையே தலை விரித்தாடிய சாதி மதம் அந்தஸ்து போன்ற அர்த்தமற்ற காரணங்களே.

இன்றைய போரும் அதனால் ஏற்பட்ட புலம் பெயர் வாழ்வும் எம்மவரிடையே ஆழப்பதிந்து விட்ட இப்படியான சமுதாயச் சீர்கேட்டுச் சம்பிரதாயங்களை முழுமையாக வழக்கொழிய வைக்கா விட்டாலும் ஓரளவுக்குத் திருத்தியுள்ளன.

தற்போது காதலனும் காதலியும் மற்றவர் அறியாமல் ஒருவரை யொருவர் தனியாகச் சந்தித்து மனம் விட்டுப் பேசிக் கொள்ளும் களவியலை பெற்றோர்கள் கண்டும் காணாதவர்கள் போல இருந்து அநுமதிக்கிறார்கள்.

மனம் ஒத்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து மனம் விட்டுப் பேசுவது ஆரோக்கியமானது. அவசியமானது.

மிகமிக நெருக்கமான அன்பின் ஆழ்ந்த வெளிப்பாடே உடல் இணைவு என்றாலும்
காதலர்கள் தமக்கென ஒரு வேலி போட்டு அன்பால் மட்டும் தழுவிக் கொள்வது அழகானது.

உடல்களை விடுத்து
உள்ளங்கள் பரிசிக்கும் காதல்
உன்னதமானது.


சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி

Friday, February 13, 2004

காதலர்தினம்

ரோஜாவை மட்டுமல்லாமல்
மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி..........
நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்..............
இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள்.


வலண்டைன் என்ற பாதிரியார்
கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது.

அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி.(14.270)

இந்தத் தினம்தான் காதலர்தினம்.

இது ஏன் வந்தது?
எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா?


கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி - 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள்.
அவனது மந்திரி பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை.
இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் -

திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும்
திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எழுதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து
ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக் கூடாது.
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும்.
இவ் அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும்
கைது செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள். என்ற அறிவிப்பை மக்களுக்குச்
சொல்லும் படி பணித்தான்.
அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள்.
இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது.

அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார்.

இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார்.
அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின்
கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பூத்தது.
அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள்.
இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான்.

கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான்.

வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில்
அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த அந்த
அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து
கண்ணீர்ப் ப10க்கள் சொரிந்தன.
அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்

விழி இருந்தும்
வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!

உன்னுடைய வலண்டைனிடமிருந்து!


அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரிமாறப் படும் வைரவரிகள் இவை.
இதுவே முதல் வலண்டைன் மடல்.

அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்துத் தன்னையே பலி கொடுத்த பாதிரியார் ரோம் மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார்.
ரோமானிய தேவாலயங்கள் ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம் பாகான்(மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது.
ஏறக்குறைய 200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டைன புனிதராக அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் (ளுவ.எயடநவெiசௌ னயல)
உலகம் முழுவதும் கொண்டாடத் தலைப்பட்டது.

இதுவே காதலர்தினம்.

------------------------------------
ஒருவர் இன்னொருவரால் காதலிக்கப் படும் போது
அவர் படிப்பிலோ அல்லது கலையிலோ ஏன் போராட்டத்திலான தீர்க்கமான ஈடுபாட்டிலோ இன்னும் ஒரு படி மேலே சிறந்து விளங்குகிறார் என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு.

இது அன்றைக்கே தெரிந்திருந்தால் அன்றைய ரோமானியச் சக்கரவர்த்தி வலண்டைனுக்கு இப்படியொரு கொடுமையைச் செய்திருக்க மாட்டார்.

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite