Sunday, May 30, 2004

Der Grosse Russische Staatscircus


துமிலனின் கமாராவுக்குள் சிக்கிய Circus Photos இல் சில


கோளத்துள் மேற் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களும்,
கீழ்ப்பகுதியில் 1 மோட்டார் சைக்கிளும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
படத்தைப் பெரிதாகப் பார்க்க


ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல்ய விகடர் Oleg Popov
படத்தைப் பெரிதாகப் பார்க்க


படத்தைப் பெரிதாகப் பார்க்க

Friday, May 28, 2004

Circus


நேற்று எமது நகரில் ரஷ்யக் குழுவினரது Circus நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. ஆர்வம் அதிகம் இல்லாவிடினும் இலவச அனுமதிச்சீட்டு கிடைத்திருந்ததால் நானும் எனது கணவரும் சென்றிருந்தோம். காரை நிறுத்துவதற்கு சரியான இடம் கிடைப்பதே பெரும்பாடாக எம்மை அலைக்கழிக்க.. நேரத்தைத் தொலைத்து, தூரத்தில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு நடந்தோம். நடப்பது பிடித்தமான விடயம் என்றாலும் அப்படி நடக்கும் போது.. இடையிடையே தேவைதானா..? என்ற கேள்வி எழுந்தது.

வீட்டில் தொலைக்காட்சியில் எத்தனை விதமான Circus நிகழ்சிகளைக் காணக் கிடைக்கும். அப்போதெல்லாம் எனது கணவரும், குழந்தைகளும் அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க நான் மெதுவாக அவ்விடத்திலிருந்து நழுவி வேறேதாவது எனக்குப் பிடித்தமானதைச் செய்து கொள்வேன். இருந்தாலும் நேரில் பார்ப்பது வித்தியாசமான உணர்வைத் தரலாம் என்ற நம்பிக்கையோடு உள் நுழைந்தேன்.

எனது மகன்தான் இந் நகரத்துக்குரிய பத்திரிகை நிரூபராக வந்திருந்தான். தோளில் பாரமான ஒரு பெரிய கமராவைக் கொழுவிக் கொண்டு இன்னொரு சிறிய டிஜிற்றல் கமராவால் கிளிக் செய்து கொண்டு திரிந்த அவனை எனக்குத் தெரிந்தது. அவனால் எம்மைக் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு ,இன்று ஒரு வேலைநாள் என்பதையும் பொருட்படுத்தாது எமது ஸ்வெபிஸ்ஹால் நகரமே கூடியது போல சனம் நிறைந்து வழிந்தது.

Circus நன்றாகத்தான் இருந்தது. வீட்டிலே தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், மண்டபத்தினுள்ளே இருந்து நிகழ்ச்சியை நேரே பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம்தான். வீட்டில் போல காலைத் தூக்கி மேசை மேலே போட்டுக் கொண்டு ஒய்யாரமாகச் சோபாவில் சாய்ந்திருந்து பார்க்கும் வசதி மண்டபத்தினுள் இல்லையாயினும், சில - நேரடி - என்பதற்கான சுவாரஸ்யங்கள் இல்லாமல் இல்லை.

அனேகமான எல்லாமே வழமையான Circus காட்சிகளில் வரும் நிகழ்வுகள்தான். Charlie Chaplin, Heinz Ruehmann போன்றவர்களை எடுத்துக் காட்டாகக் கொண்டு அவர்கள் பாணியில் கோமாளித்தனம் செய்யும் ரஷ்சியரான பிரசித்தி பெற்ற Oleg Popov வின் கோமாளிச் சேஷ்டைகள் அங்கு வந்திருந்த குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களைக் கூட வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தது.

ஒரு கோளத்தினுள் 3 மோட்டார் சைக்கிள்கள் தலைகீழாக என்று ஓடிக்கொண்டிருக்க அதற்குள் ஒரு பெண் நிற்பதும் அதே கோளத்தினுள் 4 மோட்டார்சைக்கிள்கள் ஓடிக் கொண்டிருக்க கோளம் மேலும் கீழும் துண்டுகளாகப் பிளவு படுவதும், தொடர்ந்தும் மோட்டார் சைக்கிள்கள் ஓடிக் கொண்டே இருப்பதும் எல்லோரையும் நன்கு கவர்ந்தது.

இருந்தாலும் சின்ன வயதில் கொழும்பு வீதிகளில் அம்மா அப்பாவுடன் கைகோர்த்து நடந்து சென்று, ஒவ்வொரு Circus கொட்டகையினுள்ளும் புகுந்து Circus பார்க்கும் போதிருந்த அதீத பரவசம் நேற்றைய பொழுதில் எனக்கு வரவில்லை. பறக்கும்பாவை படத்தில் வந்த Circus காட்சிகள் கூட என்னை அப்போது மிகவும் சந்தோசப் படுத்தியிருக்கின்றன.

Thursday, May 27, 2004

வலைவலம் - 27.5.2004

சுந்தரவடிவேலின் அறிவியல் கூட்டு வலைப்பதிவு மிகவும் பயனானது. அழகாக அந்தப் பக்கத்தைத் தயாரித்திருக்கிறார்.
இன்று அவரது பதிவில் அரோராவை முடக்கினால் புற்று நோய் குறைகிறது
என்றொரு கட்டுரை போட்டிருக்கிறார்.

கண்ணன் நாணயங்கள், தபால்தலைகள்,
நளபாகம்.. என்று பல்வேறுபட்ட விடயங்ளைத் தொட்டிருக்கிறார்.
நாணயங்கள், தபால்தலைகள் சேர்ப்பதிலும் அவை பற்றி அறிவதிலும் எனக்கும் ஆர்வம் இருப்பதால் அவர் பக்கம் எனக்குப் பிடிக்கிறது.

அப்பாவின் அன்பு பேசப் படுவதில்லை என்பது பற்றி நான் சில வாரங்களுக்கு முன் பேசினேன். அதே போன்ற கருத்துப் பட என்மூக்கு பசுபதி சுந்தரும் அப்பா என்ற தலைப்பில் ஒரு விடயத்தைக் குறித்துள்ளார். பாலாவும் அப்பாவுக்கு என்ன தெரியும் என்ற தலைப்பில் தான் படித்த ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். முன்னரே ஒர தடவை உதயா உருக்கமாக ஒரு கவிதை தோழியர் பகுதியில் எழுதியிருந்தார். அப்பாவின் அருமை உணர்ந்து கொள்ளப் படுவதில் சந்தோசமான திருப்தி.

Tuesday, May 25, 2004

வலைவலம் - 25.5.2004


விமர்சனம், பாராட்டு என்பன எத்தனை தூரம் மற்றவர்களை அசைக்கின்றன என்பதை சில நாட்களாக சில வலைப்பதிவுகளை வாசிக்கும் போது உணர்ந்தேன். அதனால் இனி நேரம் ஒத்துழைக்கும் பட்சத்தில் நான் தரிசிக்கும் வலைப்பதிவுகளில் என்னைக் கவர்ந்த சிலவற்றைப் பற்றி ஓரிரு வார்த்தையாவது எழுதலாமென நினைக்கிறேன்.

முன்னரைப் போலல்ல. தற்போது நூற்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகள். அதனால் தினமும் அனைத்தையும் வலம் வர முடிவதில்லை. ஒரு கணக்கு வைத்தும் போக முடிவதில்லை. அன்றன்றைக்கு எனக்கிருக்கும் நேரத்தைப் பொறுத்து சிலதைத்தான் வலம் வர முடிகிறது. முடிந்ததை எழுத முயற்சிக்கிறேன்.

இந்த வருடம் பங்குனி, சித்திரை காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பபட்டு ஈழத்து இலக்கியத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் ஈழநாதனின் http://www.kavithai.yarl.net/ ம் http://www.eelanatham.yarl.net/ ம் மிகவும் பயனுள்ள ஆவணப் படுத்தி வைக்க வேண்டிய பதிவுகள்.

கொஞ்சம் நிஜம், கொஞ்சம் கதை என்று நிஜம் கலந்து நீட்டி முழக்காமல், சின்னதாக சத்தியராஜ்குமார் தரும் துகள்கள், மிகவும் சுவாரஸ்யமானவை.

யேர்மனி, மலேசியா என்று நிறைய விடயங்களைத் தந்து கொண்டிருந்த சுபாவை தை மாதத்துக்குப் பிறகு காணவில்லை.

Monday, May 24, 2004

நினைவுநதியில் மனதின் ஜதி -6


வருசம் பிறந்த அந்த நாளில் இரவு கோயிலுக்குப் போவது மிகவும் சந்தோசமான விடயம். எங்களது பக்கத்துக் கோயிலான ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலுக்குத்தான் நாங்கள் முதலில் போவோம்.

ஆலும் அரசும் தெற்கு வீதியை நிறைத்து நிற்க அலரிகளால் எல்லை போட்டு அளவாகவும் அழகாகவும் வீற்றிருக்கிறது ஆத்தியடிப் பிள்ளையார் கோயில். அத்தி மரத்தில் பிள்ளையார் தோன்றி, கல்லிலே கற்பூரம் கொழுத்தி வழிபடப் பட்ட அந்த இடந்தான் இப்போ ஊர் கூடி உணர்வோடு வழிபடுமிடமாகியதாகவும், அத்திமரப் பிள்ளையாரினால் அந்த இடம் அத்தியடியாகி கால ஓட்டத்தில் திரிபு பட்டு ஆத்தியடி என்ற ஊரானதாகவும் அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.

கோயில் கிணற்றில் கால் கழுவித்தான் உள்ளே நுழைவோம். கற்பூரம் சாம்பிராணி என்று வாசனை கமகமக்கும். சனங்கள் நிரம்பி வழிவார்கள். காவடி ஆடுபவர்களுக்கெல்லாம் செடில், அலகு... என்று குத்தப்பட்டுக் கொண்டிருக்கும். பால் செம்பு எடுக்கும் பெண்களும் அதற்கேற்ப ஆயத்தங்களுடன் யாருடனும் அவ்வளவாகப் பேசாமல் அமைதியாகத் தியானித்துக் கொண்டிருப்பார்கள். சுவாமி இருக்கும் இடம் திரைச்சீலையால் மறைக்கப் பட்டிருக்கும்.

நான் பட்டுப் பாவடை கசங்கி விடுமே என்று அந்தரப் பட்டு, யோசித்து... ஒரு மாதிரி அமர்ந்து கொள்வேன். ஏதோ ஒரு சந்தோசமான உணர்வு மனதை நிறைத்திருக்கும். எனது வயதையொத்த பெண் பிள்ளைகளும் என்னோடு வந்து அமர்ந்து கொள்வார்கள். அம்மா, அப்பா.. தொடங்கி எல்லோரும் மிகுந்த பக்தியுடன் தரிசனம் செய்து கொண்டிருப்பார்கள்.

ஐந்து மணியானதும் பூசை தொடங்கும். அதற்கிடையில் காண்டாமணி மூன்று தரமாக அடிக்கப் பட்டு.... கோயில் ஒளியும் ஓசையுமாய் மங்களகரமாய் கலகலக்கும். விழுந்து கும்பிட்டு சுவாமியுடன் கோயில் உள்வீதியைச் சுற்றிக் கும்பிடுவோம்.

வெளிவீதி சுற்றுவது மிகவும் ஆர்வமானதாக இருக்கும். ஆல், அரசு, சீனிப்புளி;, வேம்பு, செவ்வரளி, பொன்னலரி,........ என்று அடுக்கியிருக்கும் தெற்கு வீதியில் நடப்பதே ஒரு சுகம். மெல்லிய தென்றல் தழுவ, நீண்டு, புரண்டு பின்னிப் பிணைந்து கிடக்கும் அரசின் வேர்களில் பட்டுப் பாவாடை காலில் தடக்கி விடாது பிடித்துக் கொண்டு ஏறி ஓடுவதும் கெந்துவதுமாய் நடப்பது மிக மிக இன்பமானது.

வடக்கு வீதியில் கோயிலை ஒட்டிய பூங்காவனம். அது என்றும் நறுமணம் வீசும் நந்தவனம். திருவிழா இல்லாத காலங்களில் ஆத்தியடி இளைஞர்களின் விளையாட்டு மைதானமும் அந்த வடக்கு வீதிதான். கால் பந்தென்றால் என்ன கைப்பந்தென்றால் என்ன அவர்கள் கூடிக் குதூகலிக்கும் இடம் அது. திருவிழாக் காலங்களில் சப்பரம் என்றால் என்ன? தேர் என்றால் என்ன? சூரன் போர் என்றால் என்ன? அந்தப் பெரிய வடக்கு வீதியிலே சில மணித்தியாலங்கள் தரித்து மேளக்கச்சேரியும், நாதஸ்வரமுமாய் நெஞ்சை நிறைக்கும்.

வெளிவீதி சுற்றி காவடி வெளிக்கிட எப்படியும் ஏழுமணியாகி விடும். காவடி மயில் இறகுகளுடன் அழகாக இருந்தாலும் காவடி ஆடுபவர்களைப் பார்க்கச் சகிக்காது. அவர்களின் முதுகில் செடில் குத்தப் பட்டிருக்கும். அதிலிருந்து நீளும் கயிற்றை யாராவது பிடித்துக் கொண்டு நிற்பார்கள். நடக்கும் போதெல்லாம் அவர்கள் முதுகுத் தோல் இழுபட்டுக் கொண்டே இருக்கும். எதற்காக இது..? என்று மனசு சங்கடப் படும். சிலர் வாயில் அலகு குத்தியிருப்பார்கள். அது வாயின் ஒரு பக்கத்தில் குத்தி மற்றப் பக்கத்தால் எடுக்கப் பட்டிருக்கும். அலகு குத்தியிருக்கும் போது குத்தியிருப்பவர் பேசவோ வாய் திறக்கவோ முடியாது. அவரவர் நேர்த்திக்கு ஏற்ப நேர்த்திக்கடன் என்ற பெயரில் இந்த ஆரவாரம் நடக்கும். கடவுள் இத்தனை தூரம் கஸ்டப் படும் படி மனிதர்களைக் கேட்டாரா என மனசு எண்ணும். சிலர் அலகை நாக்கில் கூடக் குத்திக் கொள்வார்கள்.

மெதுவாக வீதியில் இறங்கும் காவடிகள் சிறிது நேரத்திலேயே பலத்த ஆட்டங்களுடன் எங்கள் வீடு தாண்டும். புதியாக்கணக்கன் ஊடாக அப்பாச்சி வீடு தாண்டி பண்டாரி அம்மன் கோயிலுக்குப் பயணிக்க நாங்களும் பின் தொடர்வோம். காவடி ஆடுபவர்களின் மேல் வீடுகளுக்குள் இருந்து வாளியுடன் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவார்கள். காவடி எடுப்பவர்களின் உருத்துறவுப் பெண்கள் பாற்செம்புடன் பின் செல்வார்கள்.

மாயக்கைப் பிள்ளையார் கோயில் காவடியும் பண்டாரி அம்மன் கோவிலுக்கு வந்து சேரும். இவைகளுக்குள் வேறு வேறு கோவில்களிலிருந்து கரகாட்டக் காரர்களும் வந்து சேருவார்கள்.

24.5.2004

(தொடரும்)

Sunday, May 23, 2004

பயம்

- தொடர்ச்சி -

அது 1984ம் ஆண்டு புரட்டாதி மாதம் 1ந் திகதி.(1.9.1984)

அப்போது எனது கணவர் தவிர்ந்த மற்றைய எல்லாப் பிள்ளைகளும் வெளிநாடு சென்று விட, மாமி தனியேதான் இருந்தா. அதனால் நாங்களும் எங்களது ஆத்தியடி(புலோலி மேற்கு) வீட்டை விடுத்து மாமிக்குத் துணையாக மாமியுடன் காக்கியவளவு(புலோலி கிழக்கு) வீட்டில் தங்கியிருந்தோம்.

அன்று வழக்கம் போல் நானும் எனது கணவரும் எங்களது மூன்று குழந்தைகளும் எங்களுக்கான அறையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம். எங்களது வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

இந்த அர்த்தஜாமத்தில் மாங்காய்ப்பூட்டுப் போட்டு பூட்டப் பட்டிருக்கும் கேற்றைத் தாண்டி வந்து உள் வீட்டுக் கதவைத் தட்டக் கூடியவர்கள் வேறு யாராக இருக்க முடியும். இலங்கை இராணுவத்தினர்தான். கணப்பொழுதில் கோர்வையாக்கப் பட்ட எண்ண ஓட்டத்தில் திடமாக முடிவெடுத்துக் கொண்டேன். பயத்தில் நெஞ்சு படபடத்தது.

அது இலங்கை இராணுவத்தினர் வீடுவீடாகப் புகுந்து ஆண்களை இழுத்துச் செல்லும் காலம். எமது ஆத்தியடி வீட்டை விட இந்த வீடு பாதுகாப்பாக இருக்கும் என்ற சின்னதான நம்பிக்கையும் தளர்ந்து போக எனக்கு உடம்பு வெடவெடத்தது.

பேய் பிசாசு என்று எதுவுமே இல்லை என்று எனக்குள்ளே நான் ஒரு தீர்வுக்கு வந்திருந்தாலும் மாமி வீட்டின் பின் வளவுக்குள் அசுரத்தனமாய் குடை விரித்திருக்கும் புளியமரங்களின் அசைவுகள் இரவின் இருட்டில் என்னை மருட்டும். அதனால் முடிந்தவரை இரவு 9மணிக்கு மேல் அந்தப் பக்கம் போகவே மாட்டேன். இப்போது இராணுவ வடிவில் மனிதப் பேய்கள் என் வீட்டு வாசலில்...
எனது கணவரை - பின் கதவால் - அந்தப் புளியமரங்களினூடே இழுத்துக் கொண்டு எங்காவது ஓடி விட நான் தயார்.

கதவு மீண்டும் தட்டப் பட்டது. எனது கணவரில் கூட ஒரு தடுமாற்றம். ஆனாலும் கதவைத் திறக்க முன்னேறினார். நான் அவசரமாய் அவரை மறித்து திறக்க விடாது தடுத்தேன். அறையின் பின் கதவைச் சுட்டிக் காட்டி அந்த வழியால் ஓடும் படி சைகை காட்டினேன். வாய் திறந்து பேசவோ பலத்து மூச்சு விடவோ முடியாத பயம். பின் கதவைத் திறந்தால் அது Binding அறை. அதைத் திறந்தால் நாற்சார முற்றம். அதனூடு பின் கதவு வழியாக ஓடினால் புளியம்மரங்களைத் தாண்டி.. அடுத்த காணிக்குள் குதித்து ஓடலாம். ஆனாலும் எனது கணவர் ஒரு வித தடுமாற்றத்துடன் முன் கதவைத் திறக்க முனைந்தார்.

இப்போ என்ன நடக்கப் போகிறது? எனக்கு நடுங்கியது. எல்லா வீடுகளிலும் போல் எனது கணவர் எனக்கு முன்னாலேயே சுடப் படுவாரா..?
அல்லது இழுத்துச் செல்லப் பட்டு எங்காவது நிறுத்தி வைக்கப் பட்டு மற்றவர்களுடன் வரிசையில் நிறுத்திச் சுடப் படுவாரா..? அல்லது பிடித்துக் கொண்டு போய் திரும்பி வராதவர்கள் பட்டியலில் சேர்க்கப் படுவாரா..? நெஞ்சு திக் திக் கென்று கொண்டே இருந்தது. பயம் நெஞ்சை அடைக்கப் பின் தொடர்ந்தேன். ஆனால் வெளியிலே இராணுவம் இல்லை. எனது தம்பிதான் வெளிறிய முகத்துடன் நின்றான்.

போன உயிர் திரும்ப வந்தது போன்ற ஒரு பெரு நிம்மதி. ஆனாலும் ஏன் இந்த நேரம் வந்தான் என்ற கேள்வி மனதுள் அவசரமாய் எழுந்தது. அவன் சத்தமாகக் கதைக்கத் திராணியற்றவனாய் எனது கணவரை வெளியில் அழைத்துச் சென்று மேலே காட்டினான். ரவுண் பக்கமாக வான் நோக்கிய தீச்சுவாலையும் அதனோடு போட்டி போட்டுக் கொண்டு கரிய புகையும்................

தம்பியின் கிசுகிசுப்பில் எல்லாம் விளங்கி விட்டது. இராணுவம் தன் கைவரிசையைக் காட்டி விட்டது. New Market எரிகிறது. கூடவே எனது கணவரின் புத்தகக்கடையும்.

சில லட்சங்களை விழுங்கிக் கொண்டிருக்கும் வானளாவிய தீச்சுவாலையை அந்த அர்த்தஜாமத்தில் புளியமரங்களுக்கு அருகில் நின்று பார்த்துக் கொண்டு நின்றேன். புளியம்மரங்களின் அசைவுகள் எனக்கு எந்தப் பயத்தையும் தரவில்லை.

22.5.2004

Thursday, May 20, 2004

பயம்

பயம் இது கூட காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப மாறி விடும் என்பதை வான்கெல்சிங் பார்த்த பின்தான் உணர்ந்தேன்.

வான்கெல்சிங் பார்க்கப் போனாயா? உனக்கு வேறை வேலை இல்லையா..?
இப்பிடித்தான் எனது வேலையிடத்துத் தோழி கேட்டாள்.
உண்மையைச் சொன்னால் வான்கெல்சிங்கை விட ஒரு சலங்கை ஒலியோ, அல்லது ஒரு தில்லானா மோகனாம்பாளோ.. அல்லது ஒரு பாரதியோ பார்த்திருந்தால் அவை எனது ரசனைக்குப் பெரிய விருந்தாகியிருந்திருக்கும்.

அதற்காக வான்கெல்சிங் எல்லாம் பார்க்கக் கூடாதென்றில்லைத்தானே!
ஊரில் இருந்த போது சின்ன வயதில் எனது அண்ணன் முதல் முதலாக றெகுலா படம் பார்த்து விட்டு வந்து கண்களை உருட்டி உருட்டிக் கதை சொன்ன போது வந்த பயம் இந்தப் படத்தைப் பார்த்த போது வரவில்லைத்தான்.

அண்ணன் அவன் கதை சொல்வதில் விண்ணன். அவன் படக்கதை சொன்னால் சிலகாலம் கழித்து அந்தப் படத்தை நான் பார்த்தேனா அல்லது அண்ணன் கதை சொன்னானா என்று தடுமாறுமளவுக்கு காட்சியை மனதில் பதித்து விடுவான். அப்படித்தான் ரெகுலா படங்கள் இரண்டை எனக்குள் பதித்திருந்தான். எப்படி ரெகுலா இரத்தம் குடிக்கும் என்பதைக் கூட சொல்லித் தந்திருந்தான். சின்ன வயதில் அது பல தடவைகள் என்னை இரவுகளில் பின் வளவில் இருந்து குடல் தெறிக்க ஓட வைத்திருக்கிறது.

அப்படியான பயங்கரமான படங்களை நானே பார்ப்பதற்கான வாய்ப்புகள் என்னவோ யேர்மனிக்கு வந்த பின்தான் எனக்குக் கிடைத்தன. எனது கணவரோடு எனது வீட்டிலிருந்து (தொலைக்காட்சியில்) பார்த்ததாலோ என்னவோ அப்படங்கள் கூட என்னை அவ்வளவாகப் பயமுறுத்தவில்லை.

ஆனாலும் ஒரு தரம் ஒரு படத்தில் குளியல் அறை பேசினுக்குள் தண்ணீர் துளித்துளியாய் சிந்தும் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு இரவின் கதை அது. ஒரு வீட்டில் வாழும் குடும்பத்தை விடை கண்டு பிடிக்க முடியாத ஒரு தொந்தரவாய் ஒரு இரவு முழுக்க பேய்கள் தொந்தரவு செய்வதும் குருதி சிந்தியிருப்பதும் எனறமைந்த படம். அந்தச் சத்தம் அதாவது துளித்துளியாய் தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்கும் போதெல்லாம் அந்தக் குளியலறை பேசினுக்குள் ஒரு வயதான பெண்ணின் சடலம் இருக்கும்.

அப்படத்தைப் பார்த்த பின் சில காலங்களாக எனது வீட்டில் சமையலறையில் பைப் சரியாகப் பூட்டப் படாது தண்ணீர் சிந்தினால் அப்போது எழும் சத்தம் எனக்கு அந்தப் படத்தில் இறந்து கிடந்த பெண்ணை ஞாபகப் படுத்தி ஒரு வித அசௌகரியத்தையே ஏற்படுத்தியது. அதனால் ஓடிப்போய் பைப்பை நிற்பாட்டி விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன்.

ஆனாலும் பெரிதான பயங்கள் என்பது சின்ன வயதில் போல் தாக்கியது குறைவுதான். இதற்கான காரணம் எமது நாட்டுப் பிரச்சனைகளும் அதனாலான பாரிய உயிர் இழப்புகளுமாகக் கூட இருக்கலாமோ என நான் நினைப்பதுண்டு.

19.5.2004

Tuesday, May 18, 2004

சினிமாப் பாடல்கள் - 11


தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழ்நீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாலம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை.


தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா


விரக்தி சொட்டும் இப்பாடலைக் கேட்கும் போது கூடிய பங்கு சோகம்தான் தெரிகிறது. ஆனால் படத்திலோ பாடற்காட்சி விரக்தி, சோகம், சென்ரிமென்ரல் எனபதோடு அழகும் கலந்து சுவைக்கிறது. காரணம் கமலஹாசன் மது அருந்தி விட்டு கிணற்றுக்கட்டில் நின்று பாடிப்பாடி பரதநாட்டியத்துடன் தள்ளாடுகிறார்.

ஓம் நமச்சிவாய
தங்கநிலாவினை அணிந்தவா
பாடுகிறேன்..........
பஞ்சபூதங்களும் முகவடிவாகும்.
ஆறு காலங்களும் ஆடைகளாகும்.......
என்ற பாடலுக்கு சைலஜா நடனமாடும் போது
பஞ்சபூதங்களும் முகவடிவாகும்.........

என்ற வரிகளுக்கேற்ப சைலஜாவின் முகபாவம் சரியாக அமையவில்லை. வெறும் கை தட்டலுக்கும் பாராட்டுக்களுக்குமாகவே சைலஜா நடனமாடினார் என்று பாலகிருஸ்ணனாக வந்த கமலஹாசன் எழுதிய விமர்சனத்துடன் ஆரம்பிக்கிறது சைலஜாவுக்கும் கமலுக்குமிடையில் சண்டையும் சலங்கைஒலி படமும்.

கமலஹாசனின் படங்கள் தோல்வி காண்பது குறைவு. அதிலும் சலங்கை ஒலி அருமையாக அமைந்து விட்ட படங்களில் ஒன்று. படம் முழுவதிலுமே நர்த்தனம்.

கதையின் படி
சைலஜா வேறு யாருமல்ல. ஏழ்மை நிலையிலிருந்த கமல் நாட்டிய உலகில் முன்னுக்கு வர உதவிய, கமலின் காதலுக்குப் பாத்திரமாகிய ஜெயப்பிரதாவின் மகள்தான் அவள். ஜெயப்பிரதாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி சீதனப் பிரச்சனையால் திருமணத்தன்றே கணவனால் கைவிடப்பட்டவள்.
கமலுக்கும் அவளுக்குமிடையில் காதல் அரும்பி கல்யாணம் பற்றிச் சிந்திக்கும் வேளையில் அவளைக் கைவிட்ட கணவன் தன் பிழை உணர்ந்து, திரும்பி வந்து அவளை அழைத்துச் சென்று விடுகிறான். அதிலிருந்து கமல் குடிகாரனாகி விடுகிறான்.

அந்த விரக்தி இந்த வரிகளில் இயைபு கலந்து அழகாகச் சொல்லப் பட்டுள்ளன.
பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாலம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை.


அடுத்து
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

என்று அழகாக மடக்கு அணியில் ஒலிக்கும் இவ்வரிகள் பாடல் எடுப்பாக அமைந்ததற்கான முக்கிய காரணிகளில் ஒன்று என்றே எனக்குத் தோன்றுகிறது.

பல வருடங்கள் கழித்து கமல் வாழும் இடத்தில் சைலஜாவின் நாட்டிய நிகழ்ச்சி நடை பெறுகிறது. அங்குதான் கமல் அவளது நாட்டியத்தைப் பற்றி பத்திரிகையில் விமர்சிக்க, கமலின் விமர்சனத்தால் எரிச்சலடைந்த சைலஜா ஊர் சென்றதும் தனது தாயிடம் அந்த விமர்சனத்தைக் காட்டி சினக்கிறாள். குடிகாரன் என்று சொல்லித் திட்டுகிறாள்.

விமர்சனம் எழுதியவர் பாலகிருஸ்ணன்(கமலஹாசன்) என்பவர் என்னும் போது ஜெயப்பிரதாவுக்கு அது தனது பாலகிருணஸ்ணன்தான் என்ற உண்மை விளங்கி விடுகிறது. அவர் குடிகாரனாக இருப்பது அவளுக்குக் குழப்பத்தையும் வேதனையையும் கொடுக்க.. நிலைமையை அறியும் விருப்புடனும், பரிகாரம் தேடும் முனைப்புடனும் அந்தப் பாலகிருஸ்ணனிடமே நடனம் பயில சைலஜாவை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறாள்.
ஆனால் ஜெயப்பிரதாவின் கணவர் ஏதோ ஒரு விபத்தில் ஏற்கெனவே இறந்து விடுகிறார். ஜெயப்பிரதா நல்லாக வாழ்கிறாள் என்ற நம்பிக்கையோடே வாழ்ந்து கொண்டிருக்கும் கமலுக்கு அவள் கணவனில்லாத தனிமரமாய் வாழ்கிறாள் என்பது தெரிந்து விடக்கூடாது என்பதில் கமலின் நண்பனும், ஏற்கெனவே ஜெயப்பிரதாவுக்குப் பரிச்சயமுமான சரத்பாபு அக்கறை கொண்டதால் ஜெயப்பிரதா தன்னைக் காட்டிக் கொள்ளாமல் தனது மகள் சைலஜாவை கமலிடம் நடனம் பயில வைக்கிறாள்.

இந்தக் கட்டத்தின் ஒரு பொழுதில்தான் கமல் நன்றாக மது அருந்தி விட்டு மழை கொட்டும் ஒரு இரவில் கிணற்றுக்கட்டின் மேல் நின்று இந்த நடனத்தை ஆடுவதாகக் காட்சி.

குடிபோதையில் தள்ளாடியபடி கிணற்றுக்கட்டில் ஆடும் போது நடனம் அழகாயும், கிணற்றுக்குள் விழுந்து விடக் கூடும் என்ற நிலை நகைச்சுவை கலந்த தத்தளிப்பாகவும் இருந்தாலும் பாடல் வரிகள் விரக்தியோடு தத்துவார்த்தமும் கலந்து ஒரு விதமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.

கமல் குடிபோதையுடன் இந்த நடனத்தை ஆடுவதைப் பார்த்து மனம் பதைத்து ஜெயப்பிரதா அவரைக் காப்பாற்ற விளையும் போது
பொட்டில்லையே நெற்றியில் என்பது உறுத்த கணவனை இழந்திருந்த போதும் கமலைக் கவலைப் படுத்தக் கூடாது என்பதற்காக அவசர முடிவாக குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு போகிறாள். இது தமிழ்ப்படத்தில் ஒரு புரட்சி.

கமல் ஜெயப்பிரதாவைக் கண்டு அதிர்ந்து மகிழ்ந்து அவள் பொட்டு மழையில் நனைகிறதே அழிகிறதே என்று பதைத்து அவசரமாய் தன் கைகளால் மழைத்துளிகள் அவள் நெற்றியில் விழாதவாறு தடுத்து........ இது சென்ரிமென்ரல்.

ஆனாலும் பாடல் இளையராயாவின் இசையில் பாலசுப்ரமணியத்தின் குழைவான குரலில் எதுகை, மோனை, இயைபு, உவமானம், உவமேயம், மடக்கு என்று எல்லாம் கலந்து மனதை விட்டகலாத ஒரு பாடலாகவே அமைந்து விட்டது.

சந்திரவதனா
யேர்மனி

Monday, May 17, 2004

Van Helsing


நேற்று முன்தினம் Stephen Sommers இன் Van Helsing பார்க்க முடிந்தது.



Set in the late 19th century, monster hunter Dr. Gabriel Van Helsing (Jackman) is summoned to a mysterious land in East Europe to vanquish evil forces... evil forces with names like Count Dracula (Roxburgh), the Wolf Man (Kemp), and Frankenstein's Monster (Hensley). Assisting him once he gets there is Anna (Beckinsale), the heir of a long-running family committed to hunting down and destroying Dracula



நன்றாக எடுத்திருந்தார்கள்.
திகில் நிறைந்த படமென்பதால் திரையரங்கு பயத்தில் உறைந்து கிடக்கும் என்றுதான் நினைத்தேன். மாறாக நகைச்சுவை கலந்து சிரிப்பால் நிறைந்தது.

Photos - Spiegel

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite