Friday, June 04, 2004

வலைவலம் - 04-06-04


ஈழநாதனின் கிறுக்கல்களில் பதியப்பட்ட ஈன்ற பொழுதில்.... கவிதையை வாசித்த போது என்னையறியாமலே கண்கள் பனித்து விட்டது.
மனம் எங்கோ சென்று விட்டது. இந்த சோகம் ஈழத்தில் எத்தனையோ பேருக்கு ஏற்பட்டது. எங்கள் வீடும் அதற்கு விதிவிலக்கல்ல.

1987-1988-1989 காலப் பகுதிகளில் தம்பி மொறிஸை இந்திய இராணுவம் தேடிக் கொண்டிருந்தது.
தம்பியைப் பிடிக்க முடியாத நிலையில்...
எரிச்சல் வரும் போதெல்லாம் இந்திய இராணுவம் கும்பலாய் எங்கள் வீட்டுக்கு வந்து
எனது பெற்றோரை சகோதரரை என்று கொடுமைப் படுத்திக் கொண்டே இருந்தது.
தாங்க முடியாத ஒரு கட்டத்தில் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் புலம் பெயர்ந்து விட்டார்கள்.
அப்போது எனது அப்பா யாழ் புகையிரதநிலையத்தில் கடமையில் இருந்ததால் அவருக்கென கொடுக்கப் பட்ட யாழ் புகையிரதநிலைய தண்டவாளங்களோடு ஒட்டியிருந்த குவார்ட்டர்ஸ்சிலேயே இவர்களும் தங்கி விட்டார்கள்.

ஆனால் ஸ்ரான்லி ரோட்டில் இருந்த இந்த வீட்டின் பின்புறமாக ரெயில்வே குவார்டர்ஸ்சோடு சேர்ந்தே இந்திய இராணுவம் தமது முகாமை அமைத்திருந்தது. இடையில் எட்டிப் பார்க்கக் கூடிய அளவில் ஒரு வேலிதான். எந்த நேரமும் அவர்கள் எமது வீட்டுக்குள் நுழையக் கூடிய வகையில் பின் படலை திறந்தே இருக்க வேண்டும். இது அவர்கள் எனது குடும்பத்துக்கு இட்ட கட்டளை.

அப்பா அவர்களுக்கு பச்சைப் பொய் சொல்லி வைத்திருந்தார். தனக்கு ஒரேயொரு ஆண்பிள்ளைதான் என்றும். அவரும் சவுதியில் என்றும். அவர்களுக்கு புகையிரத நிலைய தலைமை அதிபரான அப்பாவில் நல்ல நம்பிக்கையும் மதிப்பும். அதனால் அப்பாவின் அவசரகால அவசியப் பொய்யை நம்பி விட்டார்கள்.

உள்ளுக்குள் பயத்தைச் சுமந்து கொண்டு வெளிக்கு அவர்களோடு நட்பாகப் பழகிய எமது குடும்பத்துக்கும் அந்த நாள் வந்தது.

தம்பி மொறிஸ் 1.5.1989 அன்று வீரமரணம் எய்தி விட்டான். செய்தியை உறவினர் வல்லைவெளியினூடாகக் கொண்டு வந்திருந்தனர்.

அந்தப் பொழுதில் ஊர்கூட்டி அழவோ, மார்தட்டிப் புலம்பவோ, மனம் ஆறும் படி கதறவோ முடியாது சோகத்தை நெஞ்சுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு எனது அம்மாவும் அப்பாவும் சகோதரிகளும் பட்ட வேதனைகள் கொஞ்சமல்ல. இதை எனது சகோதரி சந்திரா ரவீந்திரன் "முறியாதபனை" என்ற தலைப்பில் ஒரு கதைபோல எழுதினார். பத்மனாபஐயரின் யுகம்மாறும் தொகுப்பில் இடம் பெற்றது.

இத் துயரச் சம்பவத்தின் போது நான் அவர்கள் அருகில் இருக்க முடியாத படி யேர்மனியில் இருந்தேன். இப்போது போல தொலைபேசவோ, உடனுக்குடன் கடிதங்களை அனுப்பவோ, மின்னஞ்சல் எழுதவோ முடியாத வதையான காலமது.

ஈழநாதனின் இன்றைய ஈன்ற பொழுதில்.... கவிதை என்னை மீண்டும் ஒரு தரம் உலுக்கி விட்டிருக்கிறது.

வலைவலம் - 04-06-04


நான்கைந்து நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து விட்டு
என்ன எழுதுவது என்று தெரியவில்லை. யாராவது சொல்லுங்களேன். என்று அப்பாவியாய் கேட்டிருந்தார் பார்வை - சுரேன் நடேசன்.
இன்று போய்ப் பார்த்தால் பலவிதமான விடயங்களை எம்மோடு பகிர்ந்துள்ளார்.

இயல்பிலேயே மற்றவர்களின் ஆக்கங்களை எல்லாம் அலுக்காது சலிக்காது வாசித்து, அதை மற்றவரோடும் பகிர்ந்து கொள்ளும் தன்மை கொண்டவர் சுரேன்.
இவர் நிட்சயமாக எமக்கெட்டாத விடயங்களையெல்லாம் இங்கு பதிந்து எம்மைத் தன் வலைப்பதிவின்பால் ஈர்ப்பார் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.

Thursday, June 03, 2004

கண்ணாடி

இப்படியும் மனிதர்கள் ஏமாற்ற முனைவார்களா?



செல்வராஜா கண்கள் சொல்லும் கதை சொல்கிறார். நானும் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட கதை.

1991 இல் Car லைசென்ஸ் எடுக்கும் போது கண்களைச் சோதித்துப் பார்த்து கண்ணாடி போட வேண்டுமென்று சொன்னார்கள். அத்தோடு விட்டு விடாமல் எனது லைசென்ஸ் இல் கண்ணாடியோடுதான் Car ஓட்ட வேண்டுமென்ற முத்திரையும் குத்தி விட்டார்கள்.

சின்ன வயதில் சாதுவாக இருந்த ஆசை பெரிய வயதில் நிறைவேறிய போதுதான் கண்ணாடி அணிவது எத்துணை அசௌகரியமானது என்பது விளங்கியது. ஒரு சின்னத்தூசி கண்ணாடியில் இருந்தாலே போதும். ஒரு பெரிய தலையிடிக்கு அது காரணமாகிவிடும். எப்படித்தான் துடைத்துத் துடைத்துப் பாவித்தாலும் ஏதாவது வந்து விடும். எதுவோ மறைப்பது போலச் சினம் கொடுக்கும்.

இத்தனைக்கும் மேலால் எனக்கு கண்ணாடி போடுவதற்கும் போடாமல் இருப்பதற்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரியவுமில்லை. அதனால் கொஞ்சக் காலத்தில் வேண்டாமப்பா இந்தத் தலையிடி என்று நினைத்துக் கண்ணாடியைக் கழற்றியும் வைத்து விட்டேன்.

எனது லைசென்ஸில் கண்ணாடியின் அவசியம் வலியுறுத்தப் பட்டிருப்பதால் ஏதாவது சோதனைகளின் போது மாட்டி, கண்ணாடி அணியாமல் Car ஓடியதற்கான தண்டனையைப் பெறாதிருப்பதற்காக எனது கண்ணாடி எப்போதும் எனது காரினுள்ளேயே இருக்கும். 1991 கார்த்திகை மாதத்துக்குப் பின் அதை நான் எப்போதுமே அணிந்ததில்லை.

இப்படியிருக்க கடந்த மாதம் நான் வேலை பார்க்கும் வங்கியில் முழுமையான மருத்துவச் சோதனை செய்வதற்காக எம்மை அழைத்திருந்தார்கள். விரும்பியவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் போய்ச் செய்யலாம். முழுக்க முழுக்க இலவசம். ஏன் விடுவான்..! என்ற எண்ணம் தோன்ற நானும் சென்றேன். ஒவ்வொரு கொம்பனியிலிருந்தும் வந்து கண் தெரிகிறதா..!, காது கேட்கிறதா..! என்பதிலிருந்து இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம்... என்று சகலதையும் சோதித்து இறுதியில் முதுகு, தோள்மூட்டு என்று நல்லதொரு Massage ம் செய்து விட்டார்கள். வீடு திரும்பும் போது எனக்கு வலு சந்தோசமாக இருந்தது.

கண்ணைச் சோதிக்கும் போது என்னைச் சோதித்தவர்
"என்ன நீ கண்ணாடி போடாமல் இருக்கிறாயா? உனது கண் எவ்வளவு பார்வைக் குறைபாட்டுடன் இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? இந்த நிலையில் நீ கார் ஓட்டவே கூடாது......... "
என்று ஒரு பிரசங்கமே வைத்தார்.
இறுதியாக எனது கண்பார்வையின் குறைபாட்டு அளவுகளை எழுதி ஒரு துண்டு தந்தார். எனது கடைக்கு வந்தாயானால் 20வீதம் கழிவுடன் கண்ணாடி தருவேன் என்றும் சொல்லி விட்டார்.

நான் மனசுக்குள் எனது வங்கிக்கு நன்றி சொன்னேன். இப்படியொரு இலவச வசதியை அவர்கள் செய்து தராது விட்டிருந்தால் நான் இப்போது கூட எனது பார்வைக் குறைபாட்டைக் கவனித்திருக்க மாட்டேன் என நினைத்துக் கொண்டேன்.

ஒரு வாரம் கழித்து குறிப்பிட்ட கடை எங்கிருக்கும் என்று தேடியபோது அது எனது வீட்டில் இருந்து மிகுந்த தூரத்தில் இருப்பதை அறிய முடிந்தது. பெற்றோலைச் செலவழித்து அங்கு போவதை விடுத்து எனது நகரில் எனக்கு அருகாமையில் இருக்கும் கண்ணாடிக் கடைகளை நோட்டம் விட்டேன். "மருத்துவரிடம் சென்று 10யூரோவைச் செலவழிக்காதீர்கள். எங்களிடம் வாருங்கள். நாங்கள் இலவசமாக உங்கள் கண்களைப் பரிசோதிக்கிறோம்"
என்ற வாசகங்கள் சில கடைகளில் பொறிக்கப் பட்டிருந்தன.

இந்த வருடத்திலிருந்து யேர்மனியில் அமுலாக்கப் பட்டிருக்கும் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு காலாண்டுக்கும் மருத்துவரிடம் செல்லும் போது 10யூரோக்கள் செலுத்த வேண்டும். அந்த 10யூரோவை மிச்சம் பிடிப்போம் என்ற எண்ணத்துடன் ஒரு கண்ணாடிக் கடைக்குள் புகுந்து வங்கியில் கிடைத்த துண்டையும் கொடுத்து என்னைப் பரிசோதிக்கச் சொன்னேன். அங்கு ஒரு பெண் என்னைப் பரிசோதித்து "கண்ணாடி இல்லாமல் எப்படி நடக்கிறாய்...?" என்பது போன்ற பாணியில் என்னோடு பேசினாள்.

வேறு வழியில்லை என்ற நிலையில் நான் கோயில் மாடு போலத் தலையாட்ட அவர்கள் எனக்கான கண்ணாடியைத் தெரிவு செய்து எனக்குப் பிடித்த ஐயும் எடுத்துக் காட்டினார்கள். நான் எனது தகுதிக்கு ஏற்ற விலையில் என் முகத்துக்கும் ஓரளவு பொருந்தக் கூடிய வடிவத்தில் Frame ஐத் தெரிவு செய்திருந்தேன். எல்லாம் முடியத்தான் தெரிந்தது இந்த வருடத்திலிருந்து Frame க்கு மட்டுமல்ல கண்ணாடிக்கான பணத்தையும் நானேதான் கொடுக்க வேண்டுமென்பது. இதுவரை காலமும் எமது மருத்துவக் காப்புறுதி இச் செலவை ஏற்றுக் கொண்டிருந்தது.

ம்... எனக்கு அவ்வளவு பணம் கொட்டி கண்ணாடியைப் பெற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. உடனேயே "எனது கண்ணாடிக்கான வேலைகளைத் தொடராதீர்கள். நான் வீட்டுக்குப் போய் தொலைபேசியில் எனது முடிவைச் சொல்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டேன்.

மனசுக்குள் குழப்பம். இவ்வளவு பணத்தை செலவழிக்கத்தான் வேணுமா? அப்படிச் செலவழிப்பதாயின் 10யூரோ செலவழித்து டொக்டரிடம் காட்டி மிகச் சரியான கண்ணாடியைப் பெற்றுக் கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றியது. டொக்டரிடம் நாள் குறித்து விட்டுச் சென்றேன். ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பரவாயில்லை. அங்கிருந்த Magazins ஐ வாசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவாறு Doctor என்னை அழைத்து மிகவும் சிரத்தையோடு கண்களைப் பரிசோதித்தார். இறுதியில் ஒரு சிரிப்போடு
"யார் உன்னைக் கண்ணாடி அணியச் சொன்னார்கள்"
என்று வினவினார். யாரென்று சொன்னேன்.
அவர் மீண்டும் சிரித்து விட்டு
"உனது கண்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவே இருக்கின்றன. உனக்கு கண்ணாடியே தேவையில்லை."
என்றார்.

நல்லவேளை தப்பித்துக் கொண்டேன். என்ற உணர்வோடு Doctorக்கு நன்றி சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்.

Wednesday, June 02, 2004

மனநோயாளி




நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி.....!

உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.

திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்.....
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு....... நான்

அவை
வெடித்துச் சிதறி....
- மனநோயாளி - என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா...?
நடிப்புடனா...?

சந்திரவதனா-யேர்மனி
24.3.2002
(கணவனால் கைவிடப்பட்ட நண்பிக்காக)

Monday, May 31, 2004

வலைவலம் - 31.5.2004

வாராவாரம் மின்னஞ்சலில் வந்து சேரும் வெங்கடேஷின் இவ்வார மின்னிதழில் வந்த அவரது என் எழுத்து: சில எண்ணங்கள் சுவையாக இருக்கிறது.
அதில் வரும் கதை எழுதுவதை விட, அதை யோசிப்பது ஒருவிதப் பரவசம் தரும் அநுபவம். சொல்லப்போனால், இதைத்தான் நான் அதிகம் செய்துகொண்டிருக்கிறேன். காலாற நடந்து போகும் எல்லா சமயங்களிலும் ஏதேனும் ஒரு கதை என்னுள் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. இந்த பரவசம் அவருக்கு மட்டுமல்ல. பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

தன் சொந்த அனுபவம் போன்ற பிரமைப்பாட்டுடன்
சுவையான கதைகளை ரசனை கலந்து தரும் சத்யராஜ்குமாரின்
என்னை எழுதியவர்கள் தொடர் ஒன்று தமிழ்ஓவியத்தில் ஆரம்பித்திருக்கிறது.
அவரது சுயஅனுபவம் என்றாலும் அவருக்கேயுரிய பாணியில் சுவையோடு ஆரம்பித்திருக்கிறார். நிட்சயம் அது எமக்கு நல்ல விருந்தாகும் என்ற நம்பிக்கை எனக்கு.

168 பின்னூட்டங்கள் வந்த சுந்தரவடிவேலின் வலைப்பதிவைப் பார்த்தேன். இவ்வார வலைப்பூ ஆசிரியர் ராஜா அறிமுகப் படுத்தியிருந்தார். ரமணீதரன், மெய்யப்பன், கார்த்திரமாஸ், ஈழநாதன், செல்வராஜ் எல்லோரும் பின்னூட்டங்களிலேயே ஒரு கவியரங்கம் நடத்தியிருக்கிறார்கள்.

Sunday, May 30, 2004

Der Grosse Russische Staatscircus


துமிலனின் கமாராவுக்குள் சிக்கிய Circus Photos இல் சில


கோளத்துள் மேற் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களும்,
கீழ்ப்பகுதியில் 1 மோட்டார் சைக்கிளும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
படத்தைப் பெரிதாகப் பார்க்க


ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல்ய விகடர் Oleg Popov
படத்தைப் பெரிதாகப் பார்க்க


படத்தைப் பெரிதாகப் பார்க்க

Friday, May 28, 2004

Circus


நேற்று எமது நகரில் ரஷ்யக் குழுவினரது Circus நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. ஆர்வம் அதிகம் இல்லாவிடினும் இலவச அனுமதிச்சீட்டு கிடைத்திருந்ததால் நானும் எனது கணவரும் சென்றிருந்தோம். காரை நிறுத்துவதற்கு சரியான இடம் கிடைப்பதே பெரும்பாடாக எம்மை அலைக்கழிக்க.. நேரத்தைத் தொலைத்து, தூரத்தில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு நடந்தோம். நடப்பது பிடித்தமான விடயம் என்றாலும் அப்படி நடக்கும் போது.. இடையிடையே தேவைதானா..? என்ற கேள்வி எழுந்தது.

வீட்டில் தொலைக்காட்சியில் எத்தனை விதமான Circus நிகழ்சிகளைக் காணக் கிடைக்கும். அப்போதெல்லாம் எனது கணவரும், குழந்தைகளும் அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க நான் மெதுவாக அவ்விடத்திலிருந்து நழுவி வேறேதாவது எனக்குப் பிடித்தமானதைச் செய்து கொள்வேன். இருந்தாலும் நேரில் பார்ப்பது வித்தியாசமான உணர்வைத் தரலாம் என்ற நம்பிக்கையோடு உள் நுழைந்தேன்.

எனது மகன்தான் இந் நகரத்துக்குரிய பத்திரிகை நிரூபராக வந்திருந்தான். தோளில் பாரமான ஒரு பெரிய கமராவைக் கொழுவிக் கொண்டு இன்னொரு சிறிய டிஜிற்றல் கமராவால் கிளிக் செய்து கொண்டு திரிந்த அவனை எனக்குத் தெரிந்தது. அவனால் எம்மைக் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு ,இன்று ஒரு வேலைநாள் என்பதையும் பொருட்படுத்தாது எமது ஸ்வெபிஸ்ஹால் நகரமே கூடியது போல சனம் நிறைந்து வழிந்தது.

Circus நன்றாகத்தான் இருந்தது. வீட்டிலே தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், மண்டபத்தினுள்ளே இருந்து நிகழ்ச்சியை நேரே பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம்தான். வீட்டில் போல காலைத் தூக்கி மேசை மேலே போட்டுக் கொண்டு ஒய்யாரமாகச் சோபாவில் சாய்ந்திருந்து பார்க்கும் வசதி மண்டபத்தினுள் இல்லையாயினும், சில - நேரடி - என்பதற்கான சுவாரஸ்யங்கள் இல்லாமல் இல்லை.

அனேகமான எல்லாமே வழமையான Circus காட்சிகளில் வரும் நிகழ்வுகள்தான். Charlie Chaplin, Heinz Ruehmann போன்றவர்களை எடுத்துக் காட்டாகக் கொண்டு அவர்கள் பாணியில் கோமாளித்தனம் செய்யும் ரஷ்சியரான பிரசித்தி பெற்ற Oleg Popov வின் கோமாளிச் சேஷ்டைகள் அங்கு வந்திருந்த குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களைக் கூட வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தது.

ஒரு கோளத்தினுள் 3 மோட்டார் சைக்கிள்கள் தலைகீழாக என்று ஓடிக்கொண்டிருக்க அதற்குள் ஒரு பெண் நிற்பதும் அதே கோளத்தினுள் 4 மோட்டார்சைக்கிள்கள் ஓடிக் கொண்டிருக்க கோளம் மேலும் கீழும் துண்டுகளாகப் பிளவு படுவதும், தொடர்ந்தும் மோட்டார் சைக்கிள்கள் ஓடிக் கொண்டே இருப்பதும் எல்லோரையும் நன்கு கவர்ந்தது.

இருந்தாலும் சின்ன வயதில் கொழும்பு வீதிகளில் அம்மா அப்பாவுடன் கைகோர்த்து நடந்து சென்று, ஒவ்வொரு Circus கொட்டகையினுள்ளும் புகுந்து Circus பார்க்கும் போதிருந்த அதீத பரவசம் நேற்றைய பொழுதில் எனக்கு வரவில்லை. பறக்கும்பாவை படத்தில் வந்த Circus காட்சிகள் கூட என்னை அப்போது மிகவும் சந்தோசப் படுத்தியிருக்கின்றன.

Thursday, May 27, 2004

வலைவலம் - 27.5.2004

சுந்தரவடிவேலின் அறிவியல் கூட்டு வலைப்பதிவு மிகவும் பயனானது. அழகாக அந்தப் பக்கத்தைத் தயாரித்திருக்கிறார்.
இன்று அவரது பதிவில் அரோராவை முடக்கினால் புற்று நோய் குறைகிறது
என்றொரு கட்டுரை போட்டிருக்கிறார்.

கண்ணன் நாணயங்கள், தபால்தலைகள்,
நளபாகம்.. என்று பல்வேறுபட்ட விடயங்ளைத் தொட்டிருக்கிறார்.
நாணயங்கள், தபால்தலைகள் சேர்ப்பதிலும் அவை பற்றி அறிவதிலும் எனக்கும் ஆர்வம் இருப்பதால் அவர் பக்கம் எனக்குப் பிடிக்கிறது.

அப்பாவின் அன்பு பேசப் படுவதில்லை என்பது பற்றி நான் சில வாரங்களுக்கு முன் பேசினேன். அதே போன்ற கருத்துப் பட என்மூக்கு பசுபதி சுந்தரும் அப்பா என்ற தலைப்பில் ஒரு விடயத்தைக் குறித்துள்ளார். பாலாவும் அப்பாவுக்கு என்ன தெரியும் என்ற தலைப்பில் தான் படித்த ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். முன்னரே ஒர தடவை உதயா உருக்கமாக ஒரு கவிதை தோழியர் பகுதியில் எழுதியிருந்தார். அப்பாவின் அருமை உணர்ந்து கொள்ளப் படுவதில் சந்தோசமான திருப்தி.

Tuesday, May 25, 2004

வலைவலம் - 25.5.2004


விமர்சனம், பாராட்டு என்பன எத்தனை தூரம் மற்றவர்களை அசைக்கின்றன என்பதை சில நாட்களாக சில வலைப்பதிவுகளை வாசிக்கும் போது உணர்ந்தேன். அதனால் இனி நேரம் ஒத்துழைக்கும் பட்சத்தில் நான் தரிசிக்கும் வலைப்பதிவுகளில் என்னைக் கவர்ந்த சிலவற்றைப் பற்றி ஓரிரு வார்த்தையாவது எழுதலாமென நினைக்கிறேன்.

முன்னரைப் போலல்ல. தற்போது நூற்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகள். அதனால் தினமும் அனைத்தையும் வலம் வர முடிவதில்லை. ஒரு கணக்கு வைத்தும் போக முடிவதில்லை. அன்றன்றைக்கு எனக்கிருக்கும் நேரத்தைப் பொறுத்து சிலதைத்தான் வலம் வர முடிகிறது. முடிந்ததை எழுத முயற்சிக்கிறேன்.

இந்த வருடம் பங்குனி, சித்திரை காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பபட்டு ஈழத்து இலக்கியத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் ஈழநாதனின் http://www.kavithai.yarl.net/ ம் http://www.eelanatham.yarl.net/ ம் மிகவும் பயனுள்ள ஆவணப் படுத்தி வைக்க வேண்டிய பதிவுகள்.

கொஞ்சம் நிஜம், கொஞ்சம் கதை என்று நிஜம் கலந்து நீட்டி முழக்காமல், சின்னதாக சத்தியராஜ்குமார் தரும் துகள்கள், மிகவும் சுவாரஸ்யமானவை.

யேர்மனி, மலேசியா என்று நிறைய விடயங்களைத் தந்து கொண்டிருந்த சுபாவை தை மாதத்துக்குப் பிறகு காணவில்லை.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite