Tuesday, August 10, 2004

ஈழத்தில் இந்திய இராணுவக் காலம்


நினைத்தாலே மனசு குருதி வடிக்கும் விதமாக அமைதி காக்க என்று சொல்லி வந்திறங்கிய இந்திய இராணுவம் எம் மண்ணில் ஆடி விட்டுச் சென்ற அகோரத் தாண்டவம் பற்றியும், செய்து விட்டுச் சென்ற அநியாயங்களினாலான ஆறாத வடுக்கள் பற்றியும்,எழுதி முடிக்க முடியாது.

செய்ததையும் செய்து விட்டு தாம் எதற்காகப் போனோம் என்பதையோ, அதன் அரசியல் காரணங்களையோ, போன வேலையை இராணுவம் செய்ததா, இல்லையா, ஏன் இல்லை என்பதையோ சொல்லாமல், மாறாக எப்படி அவ்வூரிலிருந்த ஒரு பெண்ணை படிப்படியாக மயக்கிப் படுக்கை வரை அழைத்துச் சென்றனர் என்பது பற்றி வீரப்பிரதாபம் செய்திருக்கிறார்கள் என்பதை சுந்தரவடிவேலின் பதிவின் மூலம் அறிந்த போது இன்னும் மனசு கொதிக்கிறது.

இன்னும் இவர்களது வெறியாட்டம் பற்றி கரிகாலனும், ஈழநாதனும்
பதிந்துள்ளார்கள்.

Sunday, August 08, 2004

வலைவலம் - 8.8.2004


திருட்டுத்தனமா ஒரு கணவன் மனைவியின் டயறியைக் குறிப்பைப் படிச்சுப் பார்த்திருக்கிறார் ராசாதிராசா.செய்யிறதைத்தான் செய்தார். தவறுக்குத் துணையாக வள்ளுவரையும் அல்லவா அழைத்திருக்கிறார்

Nuernberg - Germany


30.4.2004

Saturday, August 07, 2004

Troya


இவ்வார வலைப்பூ ஆசிரியர் கார்த்திகேயன் சரித்திரங்களைத் தொட்டிருந்தார். சுவையாக இருந்தது. அவர் Troya படம் பார்த்து விட்டு அது பற்றி தனது பதிவில் எழுதியுள்ளார்.Troya படத்தை நானும் பார்த்தேன். எனக்கு நல்லாகப் பிடித்திருந்தது. எனது நாட்டிலும் போர் சூழ்ந்திருப்பதாலோ என்னவோ அப்படம் என்னை வெகுவாகப் பாதித்தது என்றே சொல்லலாம். அரச குடும்பம் என்கிறோம். அவர்களும் மனிதர்கள்தான். போர் என்ற ஒன்றால் அவர்கள் படும் துயர்.. பிரிவு.. எல்லாமே என்னைப் பாதித்தன. கதை வசனங்கள்.. அருமை. தமிழ்படங்களில் போல நீட்டி முழக்காது, நறுக்கென்று அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தைக்கு ஓராயிரம் பெறுமதி. தமிழ்ப்படங்களும் இப்படி எடுக்கப் படவேண்டும்.

கார்த்திகேயன் இரு கேள்விகள் கேட்டு விட்டு பதில் தராது போய் விட்டார்.

கேள்விகள்-
* 1960-களில் சைனா நம் மீது படை எடுத்தது. ஆனால் அதுக்கு முன்னாடியே ஒரு இந்திய மன்னர் சைனா மீது படை எடுத்திருக்கிறார். யார் அவர்?

* 1500-களில் உலகின் மிகப்பெரிய நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை வகித்தது ஒரு இந்திய நகரம். அது எது?

Friday, August 06, 2004

வலைவலம் 6.8.2004


நான் சற்றுத் தாமதம். நேற்றுத்தான் சத்யராஜ்குமாரின் என்னை எழுதியவர்கள் 10வது அங்கம் வந்தது பற்றி எழுதினேன். இன்று தமிழ்ஓவியம் பக்கமாகப் போனால் 11வது அங்கமும் வந்து விட்டது. அதில் அவருக்குப் பரிசு கிடைத்த அந்நிய துக்கம் பற்றியும் குறிப்பிட்டுள்ள்ளார். கூடவே பராவின் பக்கமும் அழைத்துச் செல்கிறார். பாரா நாவல் எழுத.. சில ரிப்ஸ் தருகிறார்.

Thursday, August 05, 2004

வலைவலம் 5.8.2004


துகள்கள் சத்யராஜ்குமாரின் பிழைப்பு (கொஞ்சம் நியம் கொஞ்சம் கதை) சூரியன்.கொம் மிலும் பதியப் பட்டுள்ளது. இவரது என்னை எழுதியவர்கள் 10வது அங்கம் தமிழ்ஓவியத்தில் வந்து விட்டது.

ஜெயந்தியின் ஆக்கங்களையும் பல இடங்களில் காணக் கூடியதாகவுள்ளது. தமிழ் ஓவியத்தில் இவரது சுயம் சிறுகதை வந்துள்ளது. இம்மாத திசைகளும் வெளிவந்து விட்டது. அதில வந்திருக்கம் ஜெயந்தியின் ஈரம் கதை எனக்குப் பிடித்திருக்கிறது.
சிங்கப்பூரின் சட்டங்களையும் ஒழுங்குகளையும் பார்த்து வியந்த கதாநாயகி ஒரு தரம் சட்டத்தால் தண்டிக்கப் பட்ட போது தான் மதித்த சட்டமும், ஒழுங்கும் மனிதநேயமற்றதாக இருப்பதைக் கண்டு மனமுடைந்து போகிறாள். இது கதையின் கரு. அதை சிங்கப்பூர் வாழ்வோடு கலந்து சொல்வது நன்றாக இருக்கிறது.

ஐரோப்பாவில் 2 தாலி அணியும் கலாச்சாரமும் இருக்கிறதே.
வீட்டில் ஒரு தாலியும் வெளி இடங்களுக்கு போகும் போது அணிந்து கொண்டு தங்கள் அந்தஸ்தை காட்டுவதற்காக 100 அல்லது 150 பவுணில் இன்னொரு தாலியும் வைத்திருக்கின்றார்களே. இது தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதிக்கவில்லையா? திவாகரன் கேட்கிறார் பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Wednesday, August 04, 2004

மூன்று முடிச்சு


மூக்குத்திப் பிரச்சனை ஒரு புறம் இருக்க இப்போ தாலியின் - மூன்று முடிச்சு பற்றிய காரணம் கேள்வியாய் எழுந்துள்ளது. நிர்வியாவின் நண்பி சொன்ன "அலைபாயுதே" படத்தில் வரும்
மூன்று முடிச்சுக்கான காரணம்
உரிமைக்காக முதல் முடிச்சு
உறவிக்காக இரண்டாம் முடிச்சு
ஊருக்காக மூன்றாம் முடிச்சு


இந்தப் பதிலில் திவாகரனுக்குத் திருப்தியில்லை.

நான் அறிந்த மூன்று முடிச்சுக்கான காரணங்களில் ஒன்றைக் கீழே தருகிறேன். இதுவும் எவ்வளவு தூரம் திரிபடைந்துள்ளது என்பது எனக்குத் தெரியாது.

மூன்றுமுடிச்சு


முதல் முடிச்சைக் கணவனும்
மற்றைய இரு முடிச்சுக்களையும் கணவனின் சகோதரி(கள்)யும் போடுவார்கள்.

முதல் முடிச்சு
பெண்ணே..! நான் பிழை விட்டாலும் நீ பிழை விடக் கூடாது.
என்று கணவன் சொல்லிப் போடுவது.

மறு இரண்டு முடிச்சுக்களும்
நான் பெண்ணாகப் பிறந்தேன்
நீ மாட்டுப் பெண்ணாக வந்தாய்
நான் மகளாகப் பிறந்தேன்
நீ மருமகளாக வந்தாய்
மகளாகவும் மருமகளாகவும் இருவரும் உள்ளோம்.
ஆனால் என் பெற்றோர் வயோதிபர்கள் ஆகும் போது நான் இன்னொரு வீட்டுக்கு மாட்டுப் பெண்ணாகப் போய் விடுவேன். அப்போது நீதான் மகளாக இருந்து அவர்களை அன்போடும் பாசத்தோடும் கவனிக்க வேண்டும். அன்பு எல்லோரிடமும் வரும். ஆனால் பாசம் இரத்த உருத்து உள்ளவர்களிடம் மட்டுந்தான் வரும்.

ஆனால் நீ அன்பாகவும் (இதற்கு ஒரு முடிச்சு)
பாசமாகவும்(இதற்கு இன்னொரு முடிச்சு)

அவர்களிடம் நடக்க வேண்டும், என்று கணவனின் சகோதரி(கள்) சொல்லிப் போடுவது.

Tuesday, August 03, 2004

மொய்


சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாகப் பார்த்து தொலைபேசி அலறுகிறது.

"இந்தச் சனங்களுக்கு வேறை வேலையில்லை. சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாப் பார்த்துத்தான் ரெலிபோன் பண்ணுங்கள். நேற்றும் வெங்காயம் எரிஞ்சு போட்டுது."
புறுபுறுத்த படி சமையலறையிலிருந்து வெளியில் வந்த செண்பகக்காவின் மனசு ஏதும் தொல்லைபேசியாக இருக்குமோ என்று தயக்கம் காட்டினாலும், கால்கள் விரைய கைகள் தொலைபேசியைத் தூக்க...

"வணக்கம் அக்கா. நான் சாந்தன் கதைக்கிறன்."

"எந்தச் சாந்தன்..? கறுத்தச் சாந்தனோ..?"

"இல்லையக்கா"

"அப்ப... எரிமலை சாந்தனோ..?

"இல்லை...யக்கா. நான் அண்டைக்கு.. மைக்டொனால்ட்ஸ் சிறீயின்ரை கலியாணவீட்டிலை உங்களோடை கதைச்சன்.."

"அட நீங்களே..? சொல்லுங்கோ தம்பி என்ன விசயம்..?"

"உங்கடை வீட்டுக்கு எப்பிடியக்கா வாறது? ஒருக்கால் வழியைச் சொல்லுவிங்களோ..?"

இவன் ஏன் இப்ப இங்கை...! சொந்தமும் இல்லை. நட்பும் இல்லை. எப்பவோ ஏதோ ஒரு கலியாண வீட்டிலை சந்திச்சது. அவ்வளவுதான். என்ரை கணவரை முந்தியே இடைக்கிடை றோட்டு வழியே கண்டு கதைச்சிருக்கிறானாம். அண்டைக்கும் கலியாண வீட்டிலை மொய் எழுதிற வரிசையிலை நிண்டு மைக்கை விழுங்கினவன் மாதிரி பெரிய சத்தமாகக் கதைச்சுக் கொண்டு நிண்டவன். எங்கடை இடத்திலையிருந்து 150கி.மீற் தள்ளியிருக்கிறான்.

"தம்பி..! என்ன விசயம்? இவ்வளவு தூரம் எங்களைத் தேடி வர..?"

"அது வந்து... மகள் சாமத்தியப் பட்டிட்டா. வாற சனிக்குத் தண்ணி வார்க்கிறம். அதுதான் கார்ட்டைக் கொண்டு வந்து நேரேயே தந்திட்டுப் போவமெண்டு....."

உந்தக் கார்ட் தாறதுக்கு பெற்றோல் செலவழிச்சு 150கி.மீற் கார் ஓடி வரப் போறிங்களே..? ஏன் தம்பி உங்களுக்கு வீண் அலைச்சல்? தபாலிலை அனுப்பி விடுங்கோ.
செண்பகக்கா ஏதோ அவன் அலைஞ்சு கஸ்டப்படுறதைப் பார்க்க தனக்கு விருப்பமில்லை என்பது போலக் கதைத்தாலும், உள்ளுக்குள் 150கி.மீற் தூரத்திலையிருந்து வாறவனைச் சும்மா அனுப்பேலுமே! சமைச்சுமெல்லோ கொடுக்கோணும்.. என்ற பயம்தான் இருந்தது.

"பிறகு நீங்கள் குறை பிடிக்க மாட்டிங்களே..?"

"இதிலை குறை பிடிக்க என்ன தம்பி இருக்குது? நான் ஒண்டும் குறை நினைக்க மாட்டன். நீங்கள் தபாலிலை அனுப்புங்கோ.

ம்.........
திரும்ப இண்டைக்கும்.. அடுப்பிலை வெங்காயம் எரிஞ்சு போட்டுது. நேற்றும் இந்த மனிசன் முகத்தைக் கோணி வைச்சுக் கொண்டு சாப்பிட்டது.

சனத்துக்கு வேறை வேலையில்லை. மகள் சாமத்தியப் பட்டிட்டுதாம். மகளையே நான் ஒரு நாளும் கண்ணாலை காணேல்லை. இப்ப உதுக்குப் போய் மொய் எழுதோணுமே! சா... யேர்மனியை விட்டிட்டு பேசாமல் செட்டி நாட்டிலை போய் இருக்கலாம் போலை இருக்கு. செட்டி நாட்டிலை கலியாணத்துக்கே மொய் 25பைசாதானாம்.

சந்திரவதனா
3.8.2004

Monday, August 02, 2004

வலைவலம் - 2.8.2004


வாலிப வயதும் பாலியலும்


பிள்ளைகள் ரீன்ஏஜ்ஜைத் தொட்டு விட்டாலே போதும்.
பருவவயதுக்கேயுரிய தவறுகளிலிருந்து அவர்களை எப்படிக் காப்பற்றலாம் என்று பெற்றொர்களின் மனதில் தோன்றும் பெருங்கவலையில் - பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதித்து சும்மா இருக்கும் பிள்ளைகளிடம் கூட
விசனத்தை ஏற்படுத்துமளவுக்கு நடந்து கொள்கிறார்கள்.

நான் இப்ப அவனை வெளியிலையே விடுறதில்லை. தெரியும்தானே... யேர்மன் பெடியள் எப்பிடியெண்டு. அதுகளோடை சேர்ந்து இவனும் சிகரெட் குடிக்கப் பழகினால் என்ன செய்யிறது.?"
12 வயது மகனை பாடசாலை தவிர வேறெங்கும் செல்ல அனுமதியாது.. விளையாடக் கூட விடாது தடுத்து வைத்திருக்கும் ஒரு தாய் இவர். இந்தக் கட்டுப்பாடு இந்த 12 வயதுப் பையனை எந்தளவுக்கு மனமுடைய வைத்து குரோதமான பிழைகளைச் செய்ய வைக்குமென அந்தப் பெண்ணுக்குப் புரிய வைக்க முடியவில்லை.

"எனக்குப் பாருங்கோ. இப்ப எல்லாம் காலைமை எழும்பினால் வீட்டிலை ஒரே சண்டைதான். இவன் என்னடா எண்டால் தலைக்கு Gel பூசுறான். ரவுசரை தொழதொழா எண்டு போடுறான். பார்க்கச் சகிக்கேல்லை. இந்த ரவுசராலேயே எனக்கும் அவனுக்கும் சதா சண்டை. தலையிடி தாங்க முடியேல்லை."
இது பாடசாலையில் மிகுந்த கெட்டிக்காரனாக இருக்கும் 20 வயது மகனின் தாயார். ஊரிலே தலைக்கு எண்ணெய் பூசித் தலையைப் படிய வைக்கவில்லையா?
பெல்பொட்டம் வந்த காலத்தில் எம்மவர்கள் எல்லாம் பெல்பொட்டம் போடவில்லையா.
அது போலத்தான் இதுவும் ஒரு ஸ்ரைல். இது விடயங்களில் அளவுக்கதிகமான கட்டுப்பாடு அவசியம் இல்லை என்பதை அவளுக்குப் புரிய வைப்பது கஸ்டமாகத்தான் இருக்கிறது.

இதே போலத்தான் பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள், கேள்விகள், விளக்கங்களிலும் அனேகமான பெற்றோர் புரிந்துணர்வின்றி பிள்ளைகளுடன் நடந்து கொள்கிறார்கள்.

எடுத்ததற்கெல்லாம் அடி.. பிடி.. என்று அதிகாரமாக நடந்து கொண்டால் பிள்ளைகள் மனதில் ஒரு வெறுப்புணர்வே தோன்றும். இதைப் பெற்றோர்கள் கருத்தில் கொண்டு பிள்ளைகளுடன் ஆற அமர இருந்து நட்போடு பேச வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளுக்கு பெற்றோரின் மேல் இது சம்பந்தமாகப் பேசுதற்குரிய நம்பிக்கை பிறக்கும்.

இது வியடமாக இர.அருள் குமரன் சொல்கிறார்
பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணுக்கு, அந்நிய ஆண் வழிமறித்து சாதாரணமாக பேசத்துவங்கினாலே அநியாயத்துக்கு நடுக்கம் வருகிறது, அவளின் பயம் அவனுக்கு ஊக்கம் தருகிறது. இயல்பாக பதிலளித்து சென்றால் அவனே அவளின் நண்பனாக மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதும், அவனுடைய நோக்கம் சரியானதல்ல என்றால் அவனிடமிருந்து எப்படி தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவளுக்கு தெரிவதில்லை
இர.அருள் குமரன் இது விடயமாக இன்னும் பலவற்றை வாலிப வயதும் பாலியலும் என்ற தலைப்பில் தனது பதிவில் விளக்கமாகவும் அழகாகவும் பதித்துள்ளார். பெற்றோர்கள் கண்டிப்பாக வாசித்துப் பயன் பெறுங்கள்.

Thursday, July 29, 2004

சினிமாப் பாடல்கள் - 12




தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

பாடியவர்கள் - இளையராஜா ஜானகி
இசை - இளையராஜா
படம் - அவதாரம்


கண் இல்லாமல் காதலே இல்லையென்பது இன்னும் பல பேரின் வாதமாயுள்ளது.
ஆனால் தினமும் கண்களால் எத்தனையோ பேரைக் காண்கிறோம். எத்தனையோ கண்களை நேருக்கு நேர் சந்திக்கிறோம். அத்தனை கண்களும் காதல் வயப் பட்டு விடுகின்றனவா? இல்லையே! காரணம் அங்கு மனங்கள் இணையவில்லை.

மனங்கள் இணையும் போதுதான் அங்கு நியமான காதல் மலர்கிறது. பார்த்த மாத்திரத்தில் சிலரின் அழகில் மயங்கிப் போவதுண்டுதான். ஆனால் அது வெறும் அழகின் கவர்ச்சி. பழகும் போது மனம் இணையவில்லையானால் அந்த அழகின் கவர்ச்சி மெதுமெதுவாகக் குறைந்து விடும்.

அத்தோடு கண்களின் கலப்பில் மட்டுந்தான் காதல் மலரும் என்றால் இந்த உலகில் அழகில்லாத எவருமே காதலைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.
சேர்ந்து பழகும் போது மனங்களின் சங்கமிப்பில் அழகில்லாதவர்கள் கூட அழகாகத்தான் தெரிவார்கள். எல்லாமே மனங்களில்தான் தங்கியிருக்கிறது.

அதைத்தான் இப்பாடலும் சொல்கிறது.

இப்பாடல் இடம் பெற்ற அவதாரம் படத்தை நினைத்தாலே ரேவதியினதும் நாசரினதும் அருமையான நடிப்புத்தான் நினைவில் வருகிறது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் மிக நல்ல திரைப்படங்களில் இவ் அவதாரம் படமும் ஒன்றாக உள்ளது.

இதில் கண்பார்வையற்ற ரேவதிக்கும், நாசருக்கும் இடையில் ஒருவர் மீதொருவர் காதல் வருகிறது. இந்தக் காதல் கூட மனங்களின் இணைவில்தான் வருகிறது.

ரேவதிக்கு வெளியுலகம் எப்படியிருக்கும், வர்ணங்கள் எப்படியிருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம். எல்லாம் மனம்தான். மனங்களின் எண்ணம்தான் வண்ணம் என்பதை நாசர் பாடலினாலேயே சொல்லி, ரேவதியை ஆறுதல் படுத்துவது அருமையாக உள்ளது.

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா


உண்மையிலேயே எப்படித்தான் வண்ணம் வண்ணமாக எங்கள் முன் எல்லாம் கொட்டிக் கிடந்தாலும், எமது மனதுக்குள் சந்தோசம் இல்லையென்றால், எந்த வண்ணமும் எங்களை அவ்வளவாகக் கவராது. அதே நேரம் எமது மனது சுத்தமாய், சந்தோசமாய் இருக்கும் போது எல்லாமே அழகாய் வண்ணம் வண்ணமாய்த் தெரியும்.

தென்றல் வந்து தீண்டுவதைக் கண்களால் பார்க்க முடியாது. திங்களின் குளிர்ச்சியையும் கூடப் பார்க்க முடியாது. இவைகளை உணரத்தான் முடியும்.
உணர்தலின் போது மனசுக்குள் தோன்றும் உவகைக்கு இணையாக உலகில் வேறெந்த சந்தோசங்களும் இருக்க முடியாது. எங்கள் எண்ணங்கள்தான், எங்கள் மனசின் பார்வையில் தோன்றுபவைதான் நியமான சந்தோசங்கள். அந்த சந்தோசங்களின் வர்ணங்களை தீட்ட முடியாது.

அதைக் கவிஞர் அழகாகச் சொல்லியுள்ளார். இளையராஜாவினதும், ஜானகியினதும் குரல்கள் பொருத்தமாக இணைய, ரேவதியும் நாசரும் காட்சியுடன் கலந்து நடிக்க, இசையுடன் இணைந்து இனிமையாகிவிட்ட அருமையான பாடல்.

பாடலைக் கேட்கும் போதும், வர்ணம் வர்ணமாய் ஊற்றிய படியுள்ள அந்தப் பாடல் காட்சியில் ரேவதியையும் நாசரையும் பார்க்கும் போதும் மனதுக்குள் ஏற்படும் அந்த சிலிர்ப்பான உணர்வை வார்த்தையில் வடிக்க முடியவில்லை.
வார்த்தையில் வடிக்க முடியாத ஏதோ ஒன்று மனசுக்குள் ஒரு நியத்தை உணர்த்துவதை மட்டும் நன்கு உணர முடிகிறது.

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை


3.9.1999

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite