Sunday, April 09, 2006

கல்லுச் சுண்டுதல்

தமிழர்கள் பாரம்பரியமாக விளையாடும் விளையாட்டுக்களில் கல்லுச்சுண்டும் விளையாட்டும் ஒன்று. இவ்விளையாட்டை வயது பேதமின்றி, ஆண் பெண் பேதமின்றி சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோருமாக ஒன்று கூடி இருந்து விளையாடுவார்கள்.

இவ்விளையாட்டுக்கு, கல்லைச் சுண்டினால் தடங்கி நின்று விடாமலோ, மேலே பறக்காமலோ, சுண்டிய வேகத்துக்கு ஏற்ப போகக் கூடிய எந்தத் தளமும் ஏதுவானது. இதை இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை பேரும் கூடி இருந்து விளையாடலாம். இதற்கு சிறிய கற்கள் (அல்லது புளியங்கொட்டைகள்) உகந்தவை. இரண்டிலிருந்து இரட்டை இலக்க எண்கள் கொண்ட எத்தனை கற்களையும் உபயோகிக்கலாம். அவை கைகளுக்குள் கொள்ளக் கூடிய அளவுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

வீடுகளிலும், பாடசாலைகளிலும் இவ்விளையாட்டை வழுக்கலான அல்லது சொரசொரப்பான சீமேந்துத் தரைகளில் விளையாடுவார்கள்.

விளையாடும் முறை மிகவும் சுலபமானதே.

முதலில், கொஞ்சக் கற்களாயின் ஒற்றை உள்ளங்கைக்குள்ளும், ஒற்றைக் கைக்குள் அடங்காதவையாயின் இரண்டு கைகளைச் சேர்த்து இரட்டை உள்ளங்கைகளுக்குள்ளும் வைத்து நிலத்தில் மெதுவாக வீசிப் போட வேண்டும். கற்கள் ஒன்றொடொன்று ஒட்டி இராமல் தள்ளித் தள்ளி இருந்தால் வெல்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.

அடுத்து, தரையில் போடப் பட்ட கற்களில் இரண்டு கற்களுக்கு நடுவே சின்ன விரலாலோ அன்றி சுட்டு விரலாலோ கோடு கீற வேண்டும். அப்படிச் செய்யும் போது கற்களில் விரல் பட்டு விடக் கூடாது.

சரியாக, கற்களில் விரல்கள் படாமால் கீறி விட்டால், கீறிய அந்தக் கையிலுள்ள ஒரு விரலால், அந்த இரண்டு கற்களில் ஒன்றைச் சுண்டி மற்றதில் பட வைக்க வேண்டும்.

சரியாகக் கோடு கீறி, குறி வைத்த கல்லையே சுண்டிய கல்லால் தொட்டு விட்டால் சுண்டியவர் அந்த இரண்டு கற்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.

இதே போல் தொடர்ந்தும் ஒவ்வொரு இரண்டு கற்களாகச் சுண்டிச் சுண்டி அதில் ஒன்றை எடுத்துச் சேர்க்க வேண்டும்.

முக்கிய நிபந்தனைகள்
கோடு கீறும் போது விரல்களோ கையின் வேறெந்தெப் பகுதியுமோ கற்களில் பட்டு விடக் கூடாது.
கோடு கீறிய விரல் உள்ள கையின் ஏதாவது ஒரு விரலால் மட்டுமே சுண்டலாம்.
சுண்டும் கல் குறி வைத்த கல்லில் கண்டிப்பகப் பட வேண்டும்.
சுண்டும் கல்லோ, குறி வைக்கப் பட்ட கல்லோ மற்றைய கற்களில் பட்டு விடக் கூடாது.
இருந்த இடத்தை விட்டு அரக்கக் கூடாது. (சற்றே பின்பக்கத்தைத் தூக்கி உன்னலாம்.)

ஒருவர் ஆட்டமிழந்தால் அவர் முழுமையாக வெளியில் போக வேண்டியதில்லை. தான் எடுத்ததை வைத்துக் கொண்டு, மற்றவர்கள் ஆட்டம் இழக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் காத்திருக்க வேண்டும். அதிர்ஸ்டம் இருந்தால் கடைசி இரண்டு கற்களாவது இவரிடம் வந்து சேரலாம்.

ஒரு வட்டம் முடிய ஒவ்வொருவரும் எத்தனை கற்கள் எடுத்திருக்கிறார்களோ அத்தனை புள்ளிகள் அவர்களுக்கு. எத்தனை வட்டங்கள் விளையாடுவது என்பதை முதலிலேயே தீர்மானித்து வைத்திருந்து அத்தனை வட்டங்களையும் விளையாடி முடித்ததும் மொத்தமாக யார் அதிக புள்ளி எடுத்தாரோ அவர் வென்றவர் ஆகிறார்.

இந்த விளையாட்டில் பெரியவர்களை விட சிறியவர்கள் வெல்வதற்கான சாத்தியம் அதிகம். ஏனெனில் சிறியவர்களது விரல் மெலிதாக இருக்கும். சிறிய இடைவெளியுடன் உள்ள கற்களுக்கு நடுவில் கூட கீறிச் சுண்டி விடுவார்கள்.

சந்திரவதனா
9.4.2006

நான் ஏற்கெனவே எழுதிய இந்தப் பதிவில் வசந்தனும், ஷ்ரேயாவும் தந்த தகவல்களையும் சேர்த்து மீளப் பதிந்துள்ளேன்.

Friday, April 07, 2006

கொக்கான் வெட்டுதல்


"கொக்கான் வெட்டுதல்" என்ற எமது கிராமிய விளையாட்டுப் பற்றி சில மாதங்களின் முன் ஒரு பதிவு போட்டிருந்தேன். அதற்கு வலையுலக நண்பர்களில் சிலர் தமது கருத்துக்களையும் ஆர்வத்துடன் தந்திருந்தார்கள். இப்போது கொக்கான் வெட்டுதல், மாங்கொட்டை போடுதல், எட்டுக் கோடு... போன்ற எமது விளையாட்டுக்கள் பற்றியும் ஒவ்வொரு கிராம நகரங்களிலும் எந்தெந்த விதிமுறைகளில் அவைகள் விளையாடப் பட்டன என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். தெரிந்தவர்கள் உங்கள் உங்கள் இடங்களில் நீங்கள் விளையாடிய விதிமுறைகளைத் தந்துதவுங்கள்.

Wednesday, April 05, 2006

கழுதை பெண்ணை விட விசுவாசமானதா?


தலைப்பே அபத்தமாக இல்லையா!
இன்றைய ஜேர்மனியப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி இது.

இந்தியாவின் இராஜஸ்தானில் பாடசாலைப் பாடப் புத்தகங்களில் "ஒரு கழுதை, ஒரு குடும்பப் பெண்ணைப் போன்றது. சரியாகச் சொல்வதானால் கழுதை, குடும்பப் பெண்ணை விட ஒரு படி உயர்ந்தது" என்று குறிப்பிடப் பட்டுள்ளதாம்.

ஏன் கழுதை ஒருபடி உயர்ந்ததெனில், ஒரு பெண் சில சமயங்களில் கணவன் மேல் குற்றம் கண்டு தனது பிறந்த வீட்டுக்குப் போய் விடுவாளாம். ஆனால் கழுதை ஒரு போதும் அப்படிப் போக மாட்டாதாம். எப்போதும் எஜமானனுக்கு விசுவாசமாக இருக்குமாம்.

இந்தப் பாடப்புத்தகத்தை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாம்.

Tuesday, April 04, 2006

நேபாளத்தில் பசுவைக் கொன்றதாக பெண்ணுக்கு சிறைத்தண்டனை


நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நீதிமன்றம் ஒன்று, பசுமாட்டினை கொன்ற குற்றத்திற்காக, பெண்மணி ஒருவருக்கு நீண்ட கால சிறைத்தண்டனையினை விதித்துள்ளது. இந்து மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நேபாளத்தில் பசுமாடுகள் புனிதமாக கருதப்பட்டு, அவற்றினை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

தலைநகர் காத்மண்டுவின் வடமேற்கு பகுதியில், சுமார் ஐந்நூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சன்குவாசபா மாவட்டத்தின் நீதிமன்றமானது, குற்றம் சாட்டப்பட்ட பெண்மணிக்கு, அதிகபட்ச தண்டனையான 12 ஆண்டு கால சிறைத்தண்டனையினை விதித்துள்ளது. கிரிபா போதேனி என்று அழைக்கபடும் இந்த பெண்மணி, பசு மாட்டினை கொன்று, உண்டு விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதினை தொடர்ந்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். ஆனால் தான் பசு மாட்டினைக் கொல்லவில்லை என அப்பெண்மணி மறுத்துள்ளார்.

Quelle-BBC 03.06.2006

Monday, April 03, 2006

படித்து ரசித்தது

தோழமைக்கு...
- மு.கந்தசாமி நாகராஜன் -

எதிர்பாராத வேளையில்
எனக்குக் கிடைத்த
உன் நட்பால்
இன்றும் உணர்கின்றேன்
அன்பின் வலிமையை!

சந்தித்து
ஆண்டுகள்
ஆன போதிலும்
இன்றும் கேட்கின்றேன்
உன்
இதயத்தின் ஒலிகளை...

உன்
மொழிகளைக் கேளாத
செவிகளும் வியக்கின்றன
என் இதயத்துள் ஒலிக்கும்
உன்
மொழிகளைக் கண்டு.

இன்னமும்
கர்ணனையே
உயர் நண்பனென்று
போற்றும்
அறிவிலிகளைக் கண்டு
மெளனமாய்
சிவந்து போகின்றன
என்
விழிகளும் இன்று.

பாலையில்
நான் காய்ந்த போது
சோலையைக் காட்டிய
நீ
சோலையில் நான்
சுகிக்கும்போது
தொலைவில்தான்
நிற்கின்றாய்

அன்பென்பதை
அறிந்திடாத
எனக்குக் கூட
அதன் ஆற்றலையும்
புரிய வைத்த
உன்னால்தான்
இன்னமும்
என்
பேனாமுனைகள்
ஈரத்தைக் கசிகின்றன.

திசை தொ¢யா
அலைகடலுள்
என்னை
மீட்டெடுத்த
தோணி
நீ!

மொழி தொ¢யா
முட்டாள் என்னை
மொழிஞனாக்கிய
சிற்பி
நீ!

கலையறியா
காட்டான்
என்னை
கலைஞனாக்கிய
கலைமகள்
நீ!

முத்து
பிறப்பது
அதிசயமில்லை
கண்டெடுப்பதுதான்.
என்னைக்
கண்டெடுத்தது
நீயேதான்!

உன்னால்
பிறந்த
என் மொழிகள்
இன்று
உனக்காகவே
அர்ப்பணம் ஆகின்றன!

என்றென்றும்
நாம்
தொடர்ந்திடத்தான்
இன்றும்
வேண்டுகின்றேன்
இறையை நான்

- மு.கந்தசாமி நாகராஜன் -
Quelle - Pathivukal

Wednesday, March 22, 2006

எச்சரிக்கை - வைரஸ்


தோழியர்களிடமிருந்து Invitation, Talk to you soon! என்ற பெயர்களில்
Hey! Check out this great promotion! We can both get the cool new iPod nano for free!
என்றொரு மின்னஞ்சல் வந்து கொண்டிருக்கிறது. அதிலுள்ள இணைப்பில் வைரஸ் இருக்கிறது.

Thursday, March 16, 2006

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


ஒருவர் தான் செய்ததை திரும்ப அனுபவித்தே தீருவார் என்ற தத்துவம் உண்மையானதா?

நம்பும் படியாகப் பல விடயங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த விஞ்ஞான யுகத்திலும் அதை நீங்கள் நம்புகிறீர்களா?

பலதடவைகள் இது பற்றிச் சிந்தித்திருக்கிறேன். டிசேயின் பதிவு (தனிப்பட்டவளவில் எதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு.) மீண்டும் என்னைச் சிந்திக்க வைத்தது. உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன்.

Tuesday, March 14, 2006

ஆண்கள்...?


வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீடு திரும்புகையில் வீதியில் பனி உறைந்திருந்தது. பாதை வழுக்கியது. காரை ஓட்டும் போது சற்றுப் பயமாக இருந்தது. பக்கத்திலிருந்த ஜேர்மனிய நண்பியிடம் "கனநாள் காரை ஓட்டவில்லை. இன்றைக்கு இந்த வழுக்கலில், அதுவும் இந்த இரவின் இருளில், எதிர் வரும் வாகனங்களின் ஒளிபாய்ச்சல்களுக்கு ஈடு கொடுத்து ஓட்டப் பயமாயிருக்கிறது" என்றேன்.

அவள் "உனக்கென்ன பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். அவர்களை கூட்டிக்கொண்டு போகவும், வரவும் என்று அடிக்கடி இரவில் வாகனத்தை ஓட்ட வேண்டிய தேவை வராது. நானோ தினமும் ஓட்டுகிறேன்." என்றாள்.

"ம்.. தொடங்கி விட்டாயா நீயும்! எனது பிள்ளைகள் என்ன இந்த வயதுக்குப் பாய்ந்து வந்தார்களா? அவர்களும் உனது பிள்ளைகளின் வயதுகளையும் கடந்துதானே வந்தார்கள். அந்த நேரத்தில் நானும் உன்னைப் போலத்தான் இரவு, பகல் என்று பாராது விளையாட்டு, பாடசாலை, சங்கீதவகுப்பு... என்று அவர்களோடு அலைந்தேன். சரி அதை விடு. பிள்ளைகள் வளர்ந்து விட்டால் எமக்கென ஒரு தேவையும் இல்லையா? இரவில் போக வேண்டிய தேவைகள் எனக்கும் வந்ததுதான். ஆனால் எனது கணவரும் கூடவே வந்ததால் அவரையே ஓட விட்டேன்." என்றேன்.

அவள் சிரித்து விட்டு "நானும் அப்படித்தான். எனது கணவன் என்னோடு கூட வந்தால் அவனையே ஓட விட்டு விடுவேன். இங்கை பார்... அவனோடு கார் ஓட்ட முடியாது. பக்கத்தில் இருந்து கொண்டு ஸ்ரியரிங்கைத் திருப்பு, ஹியரைப் போடு.. மெதுவா ஓடு, வேகமா ஓடு.. என்று பிய்ச்சு வாங்கிப் போடுவான். அதுதான் அவன் கூட வந்தான் என்றால், அவனையே ஓட விட்டிடுவேன். என்னால் அவன் தரும் அந்தத் தலையிடியைத் தாங்க முடியாது" என்றாள்.

"ம்.. எலிசபெத்துக்கு(எங்களோடு வேலை செய்பவள்) நடந்தது தெரியுந்தானே. அவள் லைசென்ஸ்சை எடுத்திட்டு புருசனோடை ஓடிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறாள். அவன் கொடுத்த கரைச்சலாலை கார் ஓடறதையே விட்டிட்டாளாம். இப்ப இருபது வருசமாச்சாம். லைசென்ஸ் சும்மா இருக்குதாம். இந்தப் பிரச்சனை உனது கணவனால் உனக்கும், எனது கணவனால் எனக்கும் மட்டுமென்றில்லை. இது ஆண்களோடு கூடப் பிறந்தகுணம்(instinct) என்றேன். அவள் சிரித்துக் கொண்டே அவள் வீடு வர இறங்கிப் போய் விட்டாள்.

அடுத்தநாள் சனிக்கிழமை நானும் எனது கணவரும் கடைக்கு போக ஆயத்தமானோம். வழமைக்கு மாறாக எனது கணவர் "நீயே இண்டைக்கு டிரைவிங்கைச் செய்." என்றார்.

சரி என்று நான் தொடங்கினேன். பனிமழை தூறிக் கொண்டிருந்தது.
இடைவிட்டு வேலை செய்யும் விதமாக வைப்பரைப் போட்டேன். இரண்டு நிமிடங்கள் கூடப் போயிராது. கணவர் சொன்னார் "வைப்பரை நிற்பாட்டு. சிலோவா ஓடு...." எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. நேற்று கோர்ணியுடன் நடந்த சம்பாஷணையைச் சொன்னேன். எனது கணவருக்கு வந்ததே கோபம்.

"இந்த மூக்குநுனிக் கோபம் கூட ஆண்களோடு கூடப்பிறந்த குணமோ?" என்று கேட்பது அந்த நேரத்தில் புத்திசாலித்தனமான கேள்வியாகப் படவில்லை. அதனால் அவர் பொரிந்து தள்ள முன்னம், ஸ்ரியரிங்கோடு சேர்த்துக் கதையையும் வேறு பக்கத்துக்குத் திருப்பினேன்.

சந்திரவதனா
14.3.2006

படித்ததில் பிடித்தது+பாதித்தது


- மதுரன் -

வீரக்காய் ஆயயிலே
வீழாத வீரம் பேசி
என்னையும் ஆய்ந்தவனே

நாவல் காய் ஆயயிலே
நல்ல நண்பி நீ எனக்கு
என நா பிறழாது உரைத்தவனே!

காரை முள் குத்தி கடுப்பில்
நான் அழுது துடிக்கையிலே
உன் நெஞ்சு தச்சதைபோல்
உருகி அழுதவனே!

கார்த்திகை பூ பறிக்கையிலே
காதோரம் வந்து சொன்னேன்,
பேதை என் மனதில் காதல்
பூத்ததென்று.

பூ போன்ற மென்மையான உன் மனதோ
பூகம்பம் நிகழ்ந்ததை போல
ஈச்சம் பழம் ஆயயிலே
இரும்பைப்போல் உரத்துச் சொன்னது.
ஈழத்தை காதலிக்கும் காளை உன் மனதில்
ஒருத்திக்கும் இடமில்லை என்று.
இயம்பிய வார்த்தைக்கு ஒப்ப
களமாடி நின்றாய்.

ஆனால் இன்று
வீரம்பழம் பழுத்திருக்கு
நாவல் பழம் நிறைந்திருக்கு
கார்த்திகையும் படர்ந்திருக்கு.

நீ மட்டும் கார்த்திகைப்பூ
அலங்கரிக்க கல்லறையில்
உறங்குகின்றாய்.

காவியனே எங்களின்
சந்ததிக்காய், களமாடும்
மங்கை என நானுமிங்கே...

- மதுரன் -
நன்றி - யாழ்.கொம்

Monday, March 13, 2006

கண்டு கொள்ளப் படாத பாடல்


ஓரிரு வாரங்களுக்கு முன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் மகாநதி திரைப்படம் ஒளிபரப்பானது. ஏற்கெனவே பார்த்த படம்தான். ஆனாலும் பிடித்த படமென்பதால் மீண்டும் ஒரு முறை பார்த்தேன். முன்னர் பார்த்த போதிருந்த தாக்கம் தற்போது ஏற்படவில்லையாயினும் நீண்ட நாட்களின் பின் நித்திரை கொள்ளாமல் இருந்து, ஒரு திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து முடித்தேன்.

இப்படத்திலே வரும் பாட்டுக்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்திருந்தன. ஆனாலும் இப்பாடலை யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

துவக்கம் எங்கே
இது வரை சரிவரப் புரியவில்லை

துவக்கம் எங்கே
இது வரை சரிவரப் புரியவில்லை
துவங்கியதை
தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை
புதிர்களும் புதுக்கவி புனைந்திட
நெருங்கிட என் மனம் மருகிட
மயங்குதே கலங்குதே
சொல்லின்றியே தயங்குதே
அலைகள் எழுந்து
கரைகள் கடந்து....


குற்றம் செய்யாமலே ஜெயிலுக்குச் சென்று விட்ட கமலகாசனை சுகன்யா சந்திக்கும் காட்சி இது. கமலகாசன் ஜெயிலுக்குள்ளும் சுகன்யா வெளியில் பார்வையாளருமாக...

எதுகை மோனையுடன் அழகான வார்த்தைக் கோர்ப்புகளும், இதமான சந்தமும் கூடிய பாடல். ஆனால் இப்பாடலைப் பலருக்குத் தெரியாது. எந்த வானொலியிலும் இப்பாடலை விருப்பப்பாடலாக யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. படத்தில் வரும் மற்றைய பாடல்களில் சில, பலரது கவனத்துக்கு உள்ளானதால் இது கவனத்தில் இருந்து தவறி விட்டதோ?

படம் - மகாநதி(1994)
பாடியவர்கள் - S.P.பாலசுப்பரமணியம்+ ஜானகி


துவக்கம் எங்கே
இது வரை சரிவரப் புரியவில்லை
துவங்கியதை
தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை
புதிர்களும் புதுக்கவி புனைந்திட
நெருங்கிட இரு மனம் மருகிட
மயங்குதே கலங்குதே
சொல்லின்றியே தயங்குதே
அலைகள் எழுந்து
கரைகள் கடந்து....

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புதுயுகம் அரும்புமோ

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன


காவல் வைத்தாலும் உன்மீது
ஆவல் கொண்டாடும் உள்ளம் உள்ளம்
காலம் கைகூடும் என்றெண்ணி
காதல் கொண்டாடும் எண்ணம் எண்ணம்

கூண்டில் என் வாசம் என்றாலும்
மீண்டும் நான் வந்தால் அந்நேரம்
வேண்டும் நான் வாழ உந்தன் நெஞ்சம்

வானம் நின்றாலும் சாய்ந்தாலும்
வையம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பாவை பெண்பாவை உந்தன் தஞ்சம்

ஜீவன் வெவ்வேறு ஆகாமல்
ஜென்மம் வீணாகிப் போகாமல்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புதுயுகம் அரும்புமோ

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

நாட்கள் ஒவ்வொன்றும் துன்பம்
தூக்கம் இல்லாமல் செல்லும் செல்லும்
வீசும் பூந்தென்றல் உன்பாட்டை
நாளும் என் காதில் சொல்லும் சொல்லும்


பாரம் நெஞ்சோரம் என்றாலும்
ஈரம் கண்ணோரம் என்றாலும்
உள்ளம் உன் பேரைப் பாடும் பாடும்

நேசம் எந்நாளும் பொய்க்காமல்
நெஞ்சைத் துன்பங்கள் தைக்காமல்
நாளை பொற்காலம் கூடும் கூடும்.

நெஞ்சில் எப்போதும் உன் எண்ணம்
கண்ணில் எந்நாளும் உன் வண்ணம்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன
எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்

சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

சந்திரவதனா

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite