Tuesday, August 23, 2016

தவறுகள் இப்படியும் நடக்க வேண்டுமா?

பழம் நழுவிப் பாலில் விழலாம்.
அலைபேசி நழுவி நிலத்தில் விழலாமா?

அதனால்தான் அலைபேசி விழும் வேகத்தையும் விட அதிவேகமாய்
விழுந்து அலைபேசியைப் பிடித்துக் கொண்டேன்.
அப்பாடா என்று எழுந்த போது ஒரு அழைப்புச் சத்தம்.

யாராவது என்னை அழைக்கிறார்களா அல்லது நான் யாரையாவது அழைக்கிறேனா என முதலில் புரியவில்லை. பார்க்கவும் ஒன்றும் தெரியவில்லை. சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. எதுவாயினும் பரவாயில்லை என்று முதலில் அலைபேசியை முழுவதுமாக நிறுத்தினேன்.

சில விநாடிகள் கழித்து கடவுச்சொல்லைக் கொடுத்து அலைபேசியைத் திறந்து பார்த்தேன்.

இப்படியும் நடக்க வேண்டுமா? மிகுந்த சங்கடமாகி விட்டது.

Facebook Messenger இனூடு அந்த அழைப்பு கனடாவுக்குப் போயிருக்கிறது.
அப்போது கனடாவில் நேரம் அதிகாலை 3,50.

எத்துணை அசௌகரியப் பட்டாரோ?

துயில் கலைந்தாரோ? தொடர்ந்து துயின்றாரோ? துயிலமுடியாது அவதிப்பட்டாரோ?

இன்னும் என்னால் மனச்சங்கடத்திலிருந்து விடுபட முடியவில்லை.

தவறுகள் இப்படியும் நடக்க வேண்டுமா?

சந்திரவதனா
23.08.2016 

Saturday, June 18, 2016

எது வெட்கம்?

வெட்கம் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். எது வெட்கம் என்பதோ அல்லது எதற்காக வெட்கப்பட வேண்டும் என்பதோ கேள்வியாக இருக்கலாம். அல்லது வேறு விதமாகவும் இருக்கலாம்.

நான் நான் நேற்றுக் காலை ஐபிசி வானொலியைக் கேட்கத் தொடங்கிய போது நிகழ்ச்சி தொடங்கிச் சிறிது நேரமாகியிருந்தது. அதனால் தலைப்பு எது என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லை.

எது எது எல்லாம் தமக்கு வெட்கமான விடயங்கள் என பல நேயர்கள் ஆமோதிக்கத் தகுந்த பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கோகுலன் நேயர்களின் தேவையில்லாத கதைகளை லாவகமாக வெட்டி, கருத்துக்களைச் செவிமடுத்து, பதிலளித்து நேர்த்தியாக நிகழ்ச்சியை நடாத்திக் கொண்டிருந்தார்.

கடைசியாக ஒரு நேயர் வந்தார். அவரது கருத்துத்தான் இதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்தது.

அந்த நேயர் சொன்னார்
"திருமணமான பெண்கள், தாம் திருமணமானவர்கள் என்பதைக் காட்டக் கூடிய விதமாக உடைகளை அணிந்து குங்குமப் பொட்டு வைத்து வரவேண்டும். ஊரில் எல்லாம் நெற்றியில் உச்சியில் என்று குங்குமம் வைத்திருப்பார்கள் அப்படி வராததால் தான் இங்கு கனக்கப் பிரச்சனைகள் நடக்கின்றன..…" என்ற கருத்துப்பட.

அப்படிச் சொல்லிய அந்த நேயர், தான் திருமணமானவர் என்று காட்டக் கூடிய வகையில் என்ன அணிந்திருப்பார் என நான் யோசித்துக் கொண்டு சமைத்துக் கொண்டிருக்கும் போது அடுத்த கருத்தைச் சொன்னார்.

"ஒவ்வொரு இடத்துக்கு என்று ஒவ்வொரு உடை இருக்கிறது. பெண்கள் கோயிலுக்கு வரும் போது ஏதோ .... போல தலையை விரித்துக் கொண்டு வருகிறார்கள்............... நேற்றும் கோவிலில் எனக்கு முன்னால் நின்ற பெண் ஈரம் சொட்டச் சொட்ட நின்றா. எனது ஜீன்ஸ் நனைந்து விட்டது" என்றார்.

(ஜீன்ஸ் அணிந்து கோவிலுக்குச் சென்ற அந்த நேயர் கதைத்ததின் சாராம்சம் மட்டுமே இது)

Monday, November 16, 2015

என்னைச் சொல்லிக் குற்றமில்லை.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று பேரூந்தில் பயணிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. இரவின் இருளிலும் வெளி அழகாக இருக்கும். ரசிப்பதாகத்தான் நினைத்துக் கொண்டு ஏறினேன். முகப்புத்தகம் முழுவதும் சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடந்தன. இதை முடித்து விட்டுப் பார்ப்போம். ஆ இதுவும் நல்லாயிருக்கு. இதையும் முடிப்போம். இப்படியே முடியாமல் என் வாசிப்பு தொடர்ந்து கொண்டிருக்கவே தரிப்பிடம் வந்து விட்டது. என்னைச் சொல்லிக் குற்றமில்லை.

சந்திரவதனா
16.11.2015

Monday, November 02, 2015

தமிழ்செல்வனுடன்


தமிழ்செல்வனுடன் அரசியல்துறை அலுவலகத்தில் 
28.05.2002
தமிழ்செல்வனுடன் அரசியல்துறை அலுவலகத்தில் 28.05.2002

 தலைவர் பிரபாகரனுக்கும் எமக்கும் இடையில் ஒரு பாலமாக எப்போதும் இருந்தவர் தமிழ்செல்வன். தமிழ்செல்வனை முதல் முதல் நான் வன்னியில் 2002 மே மாதத்தில் சந்தித்த போது அவர் அதே சிரிப்புடன், எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்தவர் போலவே என்னை எதிர் கொண்டார். அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார். அவரது அன்பும், பழகும் தன்மையும் எனக்கு ஆச்சரியமான சந்தோசத்தையே தந்தன.

நாங்கள் வன்னியில் வெண்புறாவில் நின்ற சமயத்தில் அடிக்கடி வந்து எம்மைச் சந்தித்து எமக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். எப்போது வந்தாலும் அக்கா.. என்ற படி வந்து என்னோடு பேசி விட்டுத்தான் செல்வார்.

ஒருதரம் கதையில் சொன்னார் "மொறிஸ் வடமராட்சிக்கும், நான் தென்மராட்சிக்கும் பொறுப்பாய் இருந்தோம். நான் இங்கு வந்து விட்டேன். மொறிசும் வருவதாகத்தான் இருந்தது. அதற்கிடையில் மாவீரனாகி விட்டார்" என்று.

எம்மோடு அவருக்கு 2002 இலிருந்து மின்னஞ்சல் தொடர்புகள் இருந்தன. அலெக்ஸ்சும், வசந்தனுமே அவரது மின்னஞ்சல்களை அவரது பெயரில் எனக்கு அனுப்பி வைப்பார்கள். ஒவ்வொரு மின்னஞ்சலுமே அன்புடன் அக்காவுக்கு... என்றுதான் தொடங்கியிருக்கும். அன்புடன் சகோதரன், சு.ப. தமிழ்ச்செல்வன் என்று முடித்திருப்பார்.

அலெக்சும், வசந்தனும் ஒரே நபர்களா என்ற சந்தேகம் எனக்கு இடையிடையே ஏற்பட்டதுண்டு. பின்னர் ஒரு தடவை ஜேர்மனி, ஸ்ருட்கார்ட் நகரில் அலெக்சுடன் அருகில் இருந்து கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தமிழ்செல்வன் ஜேர்மனிக்கு வரும் போதுகளில் மின்னஞ்சல் மூலம் அறிவித்து விட்டுத்தான் வந்தார். வந்து நின்ற போதும் தொலைபேசியில் அழைத்து பலதடவைகள் கதைத்தார். நாங்கள் அவரை நேரே சென்றும் சந்தித்தோம். (ஒரு தடவை சந்தித்த போது பாலா அண்ணையும் கூட இருந்தார். பாலாண்ணை எனது தம்பி மயூரனை நன்கு அறிந்து வைத்திருந்தார்)

இறந்தாலும் இறவாது
நினைவுகளில் என்னோடு வாழ்பவர்களில்
தமிழ்செல்வனும் ஒருவர்.

கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு என்பது போல
சிலர் பற்றி சொல்ல முடிவது சிறிதே. சொல்லாதவை பெரிது.

சந்திரவதனா
02.11.2015

கப்டன் மயூரன் (சபா - பாலசபாபதி)

தம்பிமார்கள் அக்காமார்களுக்குக் கிடைத்த கொடைகள்.
அவர்களிடம் பட்ட அன்புக் கடனை தீர்த்து வைக்கும் பாக்கியம்
எல்லா அக்காமாருக்கும் வாய்த்து விடுவதில்லை.
 http://captain-mayuran.blogspot.de/


Captain Majuran (Saba) 01.11.1970 . 11.11.1993

Captain Majuran (Saba) 01.11.1970 . 11.11.1993

Monday, October 26, 2015

ஞானம் 175 - ஈழத்து புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழில்

சந்தோசங்கள் எதிர்பாராமல் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. நான் 1999 இல் எழுதி சக்தி இதழில் பிரசுரமான சிறுகதை ஒன்று எனக்குத் தெரியாமலே ஞானம் 175 - ஈழத்து புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழில் பிரசுரமான போது வராத சந்தோசத்தை நேற்று அர்த்த ஜாமத்தில் ஒரு செய்தியாக வந்த இந்தப் படம் தந்தது. அன்போடு அனுப்பி வைத்த மயூரனுக்கு (Inuvaijur Mayuran) மிக்க நன்றி.

Friday, October 16, 2015

Thumilan´s Wedding on 07.08.2015

07.08.2015

ஹோமம் வளர்த்து, அக்னி சாட்சியாய், மேள தாளம், நாதஸ்வரத்துடன் மாலைமாற்றி ஒரு சம்பிரதாயக் கல்யாணம். அம்மாவுடன் மகன் துமிலனும், மருமகள் செலினாவும்.

அம்மாவின் உடல் நிலையில் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணம் செய்து வந்து, ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ந்து கல்யாணமண்டபத்தில் அம்மாவால் இருக்க முடியுமா என்ற கேள்வியும்இ பயமும் எங்கள் எல்லோரிடமும் இருந்தது. அம்மாவிடம் ஒரு தயக்கமும் இருந்தது. ஆனாலும் அம்மா வந்து கல்யாணத்தைக் கண்டு களித்து, எம்முடன் ஒன்றாக இருந்து, விருந்துண்டு மீண்டும் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணித்துச் சென்றா. அந்த ஐந்து மணித்தியாலங்களும் அம்மா அங்கு எங்களுடன் கூடி நின்றது பெரும் சந்தோசம்.

Wednesday, October 14, 2015

செல்வா




தலைவர் பிரபாகரனை முதல்முறை(30.05 2002 ) சந்தித்த பொழுது, “பிபிசி தமிழ்ச் சேவையில் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய, 14 வயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த ஒரு பெண்ணை நவம் அறிவுக்கூடம் போயும் சந்திக்க முடியாது போய் விட்டது என்று ஆதங்கப் பட்டேன்.

„நீங்கள் சொல்லுறது செல்வாவை எண்டு நினைக்கிறன். அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா” என்றார்.

„அந்தப் பிள்ளையை சந்திக்க வாய்ப்பிருக்கோ?“ கேட்டேன்.

„இப்பவே சந்திக்கலாம். பத்து நிமிசத்துக்குள்ளை ஆள் வந்திடும்” என்றார்.

அவர் சொன்ன படி பத்தாவது நிமிடத்தில் கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலக்ரோனிக் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் செல்வா அங்கே நின்றாள்.

என் விருப்பத்துக்கு அமைய வாயால் ஒரு கவிதை எழுதித் தந்தாள். வியப்பாக இருந்தது.

சந்திரவதனா
12.10.2015

Thursday, September 17, 2015

அவள் காத்து நின்றாள்

நேற்று நான் வேலைக்குச் சென்ற போது அவள் வேலைத்தளத்து வாசலில் காத்து நின்றாள்.

24 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தவள், கடைசி வருடங்களில் ஏதோ ஒரு வித அதிருப்தியினால் அவதிப்பட்டுக் கொண்டே இருந்தாள். வேலையை விட்டு விடப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். எப்போதும் எமது தலைமை அதிகாரியிலிருந்து அடிமட்டத்தில் உள்ளவர் வரை எல்லோரிலும் ஏதேதோ குறைகள் கண்டு பிடித்து எல்லோரையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது நச்சரிப்பும், எரிச்சலும்... தாங்காது அவள் வேலையை விட்டுப் போனால் காணும் என்று நினைக்கும் அளவுக்கு எல்லோருமே வந்து விட்டிருந்தார்கள். அவ்வப்போது தமக்குள் அவள் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். என்னோடு அவள் நல்ல மாதிரி நடந்து கொண்டிருந்தாலும் அவளது தொணதொணப்பைக் கேட்க முடியாமல் நான் கூட அவள் வேலையை விட்டுப் போய் விட்டால் நல்லதேன்றே ஒரு கட்டத்தில் நினைத்தேன்.

அந்த நாளும் வந்தது.

திடீரென்று வேலையின் இடையில் தலைமைப்பொறுப்பாளரின் அறைக்குச் சென்று சில பல குறைகளைச் சொல்லித் திட்டி விட்டு தான் இராஜினாமா செய்யப் போகிறேன் என்று சொல்லி விட்டாள்.

அவளது அநாகரீகமான செயல் தலைமை அதிகாரிக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர் அமைதியாக „மிகவும் சந்தோசம், போய் விடு“ என்று சொல்லி அவளை அனுப்பி விட்டார். அத்தோடு அவளுக்கும் எனக்குமான தொடர்பு மெதுமெதுவாகக் குறைந்து விட்டது. மீண்டும் மீண்டுமாய் அவள் தொலைபேசியில் அழைத்து, குறைகளே சொல்வதை என்னால் கேட்க முடியாதிருந்தது.

அவள் சென்ற பின்னான எனது வேலை நேரங்கள் அமைதியாகவே கழிந்தன. மற்றைய தோழிகள் எல்லோருமே „அப்பாடா போய் விட்டாள்“ என்று மிகுந்த ஆசுவாசத்துடன் இருந்தார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றினாலும் அவ்வப்போது அவள் இல்லாத குறை தென்படத்தான் செய்தது.

அவளைப் போல அறிவார்ந்து பேசக் கூடிய, எந்தத் பொருள் பற்றிப் பேசினாலும் அது பற்றிப் பேசவோ, தர்க்கிக்கவோ கூடிய இன்னும் சொல்லப் போனால் கதைக்க, சிரிக்க அவ்வப்போது கோபப் பட… என்று அவளைப் போல யாருமே அவள் போன இந்த ஒன்பது மாதங்களில் எனக்குக் கிடைக்கவில்லை. அவள் என் வாழ்வில் ஏதோ ஒரு சிறு பங்கு இடத்தையாவது எடுத்திருந்தாள்.

நான் அவளை என து 31 வது வயதில் முதன் முதலாகச் சந்தித்த போது உலகின் பல கூறுகளை எனக்குத் தெரியாது. ஜெர்மன் மொழியும் அவ்வளவாகத் தெரியாது. அவளுக்கு ஆங்கிலம் துளியும் தெரியாது. ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட போலந்து நாட்டுக்காரி அவள். ஆனாலும் நிறையவே பேசினோம். நிறையவே சிரித்தோம். பேசவே கூடாது என்று எனது சமுதாயம் எனக்குத் தடை விரித்திருந்த விடயங்களைக் கூடப் பேசினோம். சேர்ந்து சாப்பிட்டோம். ஐஸ்கிறீம் சுவைத்தோம். தேநீர் அருந்தினோம். வாய் விட்டுச் சிரித்தோம்.

அந்த அவளேதான் எனக்காக என் வேலைத்தள வாசலில் காத்து நின்றாள். என்னைக் கண்டதும் ஓடி வந்து இறுகக் கட்டி அணைத்தாள். எனக்குள்ளும் ஏதோ ஒரு சந்தோசம் அலை புரண்டது. கிட்டத்தட்ட பத்துநிமிடங்கள் நின்று பேசி விட்டுச் சென்றாள். மீண்டும் அதே அறிவார்ந்த பேச்சு. சிரிப்பு...

எந்தவித சிந்தனையுமின்றி, வார்த்தைகளைத் தேடிப் பொறுக்கித்தான் பேச வேண்டும் என்ற பயமின்றி இயல்பாகப் பேசக் கூடிய இப்படியான உறவுகளும் கண்டிப்பாக வேண்டுமென்பதை அதன் பின்னான என் மனதின் சந்தோசம் எனக்கு உணர்த்தியது.

சந்திரவதனா
17.9.2015

Thursday, September 03, 2015

எம்மவர்கள் எழுதுவதிலோ, புனைவதிலோ தாழ்ந்தவர்கள் அல்லர்.

உங்களை நோவதை என்னால் தவிர்க்க முடியவில்லை இரவி அருணாச்சலம்! ஜெயமோகனின் எழுத்தை நான் குறை கூறவில்லை. அது நல்லதாக இருக்கலாம். அதன் சுவை உங்களுக்கு தேவாமிர்தத்தை விட மேலாகவும் இருக்கலாம்.

அவரது படைப்பைப் போல ஒரு படைப்பை உங்களால் தர முடியாது என நீங்கள் கருதினால் அது உங்கள் மீது அதாவது உங்கள் எழுத்துக்கள் மீது உங்களுக்கு உள்ள அபிப்பிராயம் எனக் கொள்ளலாம். ஆனால் ///என் சக ஈழத்துப் படைப்பாளிகள் எவராலும் அவ்வாறான படைப்பினைத் தந்துவிட முடியாது என்பது என் திண்ணம்/// என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? இன்று மட்டுமல்ல, முன்னும்பல தடவைகள் இப்படி எழுதி விட்டீர்கள்.

உயிரை உருக்கும், நெஞ்சத்தைக் கிள்ளும்... எத்தனை படைப்புகளை (புனைவுகளும் அடக்கம்) எம்மவர்கள் (நீங்கள் குறிப்பிடும் அந்த உங்கள் சக படைப்பாளிகள் ) தந்து விட்டார்கள். அப்படியான எம்மவர்களது உயிர் தீண்டும் படைப்புகளை ஜெயமோகனால் தர முடியுமா?

ஜெயமோகனின் எழுத்துகளோ அல்லது வேறுயாரது எழுத்துக்களோ உங்களுக்குப் பிடித்திருந்தால் அவைகளையும், அவர்களையும் தாரளாமாகப் பாராட்டுங்கள். தவறேதும் இல்லை. அவர்களை உயர்த்துவதாக நினைத்து எம்மவர்களைத் தாழ்த்தாதீர்கள்.

எம்மவர்கள் எழுதுவதிலோ, புனைவதிலோ தாழ்ந்தவர்கள் அல்லர்.

என்னிலும் இரண்டு வயது இளையவரான ஜெயமோகன் தனது 30 ஆவது (1992) வயதில் 'டார்த்தீனியம்' என்ற குறுநாவலை எழுதியிருந்தார். இன்றைய நாளின் ஒரு பகுதியை அதனை வாசிப்பதற்காக ஒதுக்கி இருந்தேன். அது அவமாகக் கழியவில்லை. ஒன்றைச் சொல்வேன், உணர்க; ஒருபோதும் என்னால் அவ்வாறான படைப்பைத் தர முடியாது. என் சக ஈழத்துப் படைப்பாளிகள் எவராலும் அவ்வாறான படைப்பினைத் தந்துவிட முடியாது என்பது என் திண்ணம். (நான் தவறாக ஏதும் எழுதியிருந்தால் என்னை நோகாதீர்கள்; என் தவறை எனக்கு எடுத்துரையுங்கள்)
அதன் ஒவ்வொரு வரிகளை, ஒவ்வொரு பந்திகளை வாசித்து நிமிர்கிறபோது 'இந்த எழுத்து எப்படிச் சாத்தியம்' என்றே குமைகிறேன். 'நாங்கள்' சொந்த அனுபவத்தை அற்புதமாகப் 'புனைந்து' விடுவோமல்லோம்; 'எழுதி' விடுவோம். ஆனால் ஜெயமோகன் போன்றவர்கள் அதனைப் புனைவாக்கி படைத்து விடும் வித்தை எம்மால் கைக்கொள்ள முடியா ஓன்று. தற்சமயம் ஜெயமோகன் எழுதிய 'வெள்ளையானை' வாசித்தபடி உள்ளேன். அது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கதை. மிகக் கவனமாக அதனைச் செதுக்கி இருக்கிறார், ஜெயமோகன். அதன் சாத்தியப்பாடுகள் எப்பொழுதும் என்னைத்திகைப்பில் ஆழ்த்துகிறது.
என் எழுத்து சிலருக்கு அதிர்ச்சியாகக் கூட அமையலாம். ஆயினும் என்ன செய்வது? என் மனசைச் சொன்னேன். அதற்கப்பால் என்னால் செய்யத் தக்கது யாது உள?
Posted by Iravi Arunasalam on Wednesday, September 2, 2015

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite