Friday, February 02, 2024

தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே!

Platform ரைல்ஸ் பெரிய பெரிய சதுரங்களாக, நீளத்துக்கும் பெட்டிகளை அடுக்கி விட்டது போல நீண்டு பரந்து இருந்தன. நான் ஒவ்வொரு பெட்டியாகக் கடந்து கொண்டிருந்தேன். அது 1968ம் ஆண்டின் ஏதோ ஒரு மாதம். அப்போது நாங்கள் பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக மாகோவுக்கும் குருநாகலுக்கும் இடையில் இருக்கும் மூன்று புகையிரத நிலையங்களில் ஒன்றான நாகொல்லகமவுக்கு வந்திருந்தோம்.

அப்பா, அப்போது அந்தப் புகையிரதநிலையத்தில்தான் புகையிரதநிலைய அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். நாங்கள் அப்பாவின் ரெயில்வே குவார்ட்டேர்ஸில் தங்கியிருந்தோம். அந்த பங்களா, Platform இன் ஒரு அந்தத்தின் முடிவில் இருந்தது. அன்று அப்பாவுக்குப் பகல் வேலை. மாலை நான்கு மணியளவில் அம்மா கடலைப் பருப்பு வடை சுட்டு, சுடுதண்ணீர்ப்போத்தலில் தேநீரும் விட்டு, அப்பாவிடம் கொண்டு போய்க் கொடுக்கும் படி சொல்லித் தந்து விட்டா.

"கவனமாகப் போ. Platform கரைக்குப் போயிடாதை. விழுந்திடுவாய். ரெயின் வந்திடும்“ என்ற அம்மாவின் அன்பு நிறைந்த கட்டளை என் மூளையின் ஆழத்தில் பதிந்திருந்து என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் நான் அந்த எச்சரிக்கையைச் சட்டை செய்யாமல் ஒரு பக்கம் கையிடையில் சுடுதண்ணீர் போத்தலை அணைத்த படியும் மறு கையில் வடைப் பார்சலை இறுகப் பிடித்த படியும், எனக்கேயுரிய துள்ளலில் நடந்து கொண்டிருந்தேன். அம்மா எங்கே பார்க்கப் போகிறா என்ற தைரியம்.

நாகொல்லகம போலவே புகையிரதநிலையமும் அழகாக இருந்தது. தண்டவாளம் தாண்டிய புல்வெளியில் சிலர் Volley Ball விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் தாண்டிய பச்சை மரங்களிடையே சிவப்பு, மஞ்சள், வெள்ளை... என்று பற்பல வர்ணங்களில் பூக்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மாங்காய்கள் போல ஏதோ காய்கள் சில மரங்களில் காய்த்துத் தொங்கின.

நீலமாய், அழகாய் வானம் இருக்க, வானவெளியில் கூட்டங் கூட்டமாய் சிறுபறவைகள் சிறகை விரித்துப் பறந்து கொண்டிருந்தன. நகரும் முகில் கூட்டங்களுக்குள் விதம் விதமான உருவங்கள் தெரிந்தன. ம்.... என்ன நடந்தது?

இயற்கையோடு சேர்ந்து நடக்கையில் ஒரு கணம் என்னை மறந்து போனேன். கீழே வீழ்ந்து விட்டேன். தண்டவாளத்தில் "டொங்" என்று இடிபட்ட சத்தத்தோடு சுடுதண்ணீர்ப்போத்தல் உருண்டது. வடைப்பார்சல் அருகில்தான் இருந்தது. உதட்டில் வலித்தது. தடவினேன். சிவப்பாக இரத்தம். உதடு வெடித்து விட்டது.

‘யாராவது பார்க்கிறார்களா‘ என்று பார்த்தேன். ஒருவரும் பார்க்கவில்லை. வலியை விட யாரும் பார்த்து விடக் கூடாது என்பதில்தான் என் முழுக்கவனமும் இருந்தது. பார்த்து விட்டால் வீழ்ந்ததிலான அவமானத்தோடு தகவல் அப்பாவுக்கும் போய் விடும்.

அவசரமாக பிளாஸ்கைத் தூக்கிக் கொண்டு Platform இல் ஏற முயற்சித்தேன். எனது அந்தரமும் அவசரமும் உடலில் திடீரென்று ஏற்பட்டு விட்ட வலியும் சேர்ந்து என்னால் Platform இன் உயரத்துக்குத் தொங்கி ஏற முடியாமல் இருந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு கணம் நெஞ்சு சில்லிட்டது. சிக்னல் வீழ்ந்து விட்டது. ஏதோ ஒரு லைனில் ரெயின் வரப் போகிறது. Platform கரையோடு நான் நின்றேன். தண்டவாளங்களைக் கடந்து மற்றப் பக்கம் ஓடலாம் என்ற யோசனை ஏனோ உடனே வரவில்லை. ஓடினாலும் ரெயின் வருமுன் தாண்டுவேனா என்பது அடுத்த விடயம்.

அப்போதுதான் புகையிரதநிலைய உதவிஅதிபரான டிக்சன் அங்கிள் Tablet உடன் வந்தார். அவர் அப்பாவின் உதவியாளர். என்னைக் கண்டதும் திடுக்கிட்ட அவர் ஓடி வந்து கையை நீட்டினார். நான் அவரது கையைப் பிடித்ததும் இழுத்து.... எறியாத குறையாய் Platform இல் என்னைப் போட்டார்.

ரெயின் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்து, Platform இன் தொடக்கத்தில் நின்ற போர்ட்டர் மார்ட்டினிடம் Tablet ஐக் கொடுத்து, டிக்சன் அங்கிளின் கையிலிருந்த Tablet ஐ வாங்கிக் கொண்டு நிற்காமலே போய் விட்டது. அதன் பின்தான் டிக்சன் அங்கிள் என்னை மிகுந்த கோபத்தோடு பார்த்தார். சிங்களத்தில் திட்டினார்.

நான் அப்பாவின் அலுவலக அறைக்குள் போய் விட்டேன். அப்பா தொலைபேசியில் அலுவலக விடயமாக யாருடனோ சிங்களத்தில் கதைத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் மெல்லிய முறுவலுடன் நோக்கியவர் உடனேயேமுகத்தில் கேள்விக்குறி தொக்க.. என்னைப் பார்த்து விட்டுக் கதையைத் தொடர்ந்தார். உடைந்திருந்த சொண்டும் அதன் வழி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இரத்தமும் அவரைக் குழப்பியிருக்க வேண்டும்.

‘நின்றால் பிழை‘ என்று வடையையும் தேநீரையும் உள் அறை மேசையில் கொண்டு போய் வைத்து, விட்டு உடனேயே ரெயில்வே குவார்ட்டர்ஸ்சுக்குத் திரும்பி விட்டேன். சொண்டை உடைத்துக் கொண்டு வந்திருந்த என்னைக் கண்ட அம்மா பதறிப் போய் "என்ன நடந்தது..?" என்று கேட்டா. அம்மாவுக்குப் பொய் சொல்ல அப்போது, அந்த எட்டு வயதில் எனக்குத் தெரியாது. பிறகென்ன அம்மாவிடம் மாட்டினேன்.

அது மட்டுமா..? அப்பாவிடமும்தான். வேலை முடிந்து அப்பா வந்த விதத்திலேயே டிக்சன் அங்கிள் எல்லாம் சொல்லி விட்டார் என்பது தெரிந்தது. கோபம் தெறிக்க வந்தவர் என்னைக் கண்டதும் சற்று ஆறி விட்டார்.

"என்ன பிள்ளை... இப்பிடியே பொறுப்பில்லாமல் நடக்கிறது..?" என்று கண்டித்து விட்டு, அம்மாவிடம் "உம்மடை மகள் இண்டைக்கு என்ன செய்தவள் தெரியுமே..? டிக்சன் மட்டும் இல்லையெண்டால் ஒரு செத்த வீடெல்லோ இப்ப கொண்டாடியிருப்பம்" என்றார்.

உண்மைதான். அன்று டிக்சன் அங்கிள் மட்டும் இல்லாதிருந்திருந்தால், இன்று நான் இதை எழுதக் கூட இங்கில்லாது போயிருப்பேன்.

(இது ஏற்கெனவே சந்திரமதி அவர்களின் ‘மரத்தடி‘யில் 2004 இல் வெளியானது. இப்போது சற்று மெருகேற்றி மீண்டும் பதிகிறேன்.)

 https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/pfbid036m3V3NAgLqQxcRmgm7iVe569FxgeSmGHsn3UV7HWwnUWuHuFE5LxXfH31xakUJASl

Thursday, January 11, 2024

முத்தம்மா

முத்தம்மா கை மாற்றிக் கை மாற்றி உலக்கையைத் தூக்கித் தூக்கிப் போட்டு அரிசியை இடித்துக் கொண்டிருந்தாள். உலக்கை ஒவ்வொரு தரமும், ஒரு சீரான வேகத்துடன் உரலுக்குள் உள்ள அரிசிக்குள் வீழ்ந்து புதையும் போது எழும் சத்தம் ஒரு தாளம் போல ஒலித்துக் கொண்டிருக்க, முத்தம்மாவின் மேற்சட்டைக்கும் இடுப்புச்சேலைக்கும் இடையில் சற்றுப் பிதுங்கி மடிந்திருந்த அவளது இடுப்புத் தசை மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது.

உள்ளே சாய்மனைக் கதிரையில் சாய்ந்த படி அன்றைய புதினப்பத்திரிகையை மேய்ந்து கொண்டிருந்த கதிரேசரின் கண்கள் இப்போது பத்திரிகையை விடுத்து முத்தம்மாவை மேயத் தொடங்கின.

முத்தம்மா அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, கதிரேசரிடம் மட்டுமல்ல, பெரியவர், சிறியவர் என்ற பேதமின்றி அங்குள்ள பல ஆண்களிடமும் இப்படியான சபலங்கள் எட்டிப் பார்க்கத்தான் செய்தன. இளசுகள் சில அவளைத் தூரத்தில் கண்டாலே “ஏண்டி முத்தம்மா..! ஏது புன்னைகை, என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ, வெட்கத்தினால் அதை மறைத்தாயோ..?“ என்று அப்போதுதான் புதிதாக வெளிவந்த சினிமாப்பாடலை சத்தமெடுத்துப் பாடத் தொடங்கினார்கள்.

அவளுக்கு நாற்பது நாற்பந்தைந்து வயதிருக்கலாம். அவளது நிறம் சாதாரணமான ஊர்ப்பெண்களின் மாநிறத்தை விடச் சற்று வித்தியாசமாக, மஞ்சள் பேர்ந்த வெண்மை நிறம் கொண்டதாக இருந்தது. அவள் பேரழகி என்று இல்லாவிட்டாலும் அழகி. அந்த அழகி, திடீரென அந்த ஊருக்குள் தன்னந் தனியாக வந்திருக்கிறாள்.

யாரிவள், யாரிவள்? என்று அங்கலாய்ப்புடன் தேடியவர்களுக்கு, அரசல் புரசலாகக் கிடைத்த தகவல்கள், அவளுக்குத் திருமணமாகிப் பல வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் அவளது கணவன் அவளை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் போய் விட்டான். அவமானம் ஒரு புறமும் பணமின்மை மறுபுறமுமாய்த் தாக்க அந்த ஊரில் மேற்கொண்டு வாழ முடியாத நிலையில் இங்கு வந்து விட்டாள்.

முத்தம்மா நூற்சேலைதான் கட்டியிருப்பாள். கழுத்தில் ஒரு கறுத்தமாலை. அது கழுத்தோடு ஒட்டியபடி இருக்க, அதில் குண்டுமணியை விடச் சற்றுப்  பெரியதான ஒரு முத்து. பொட்டு வைக்க மாட்டாள். நெற்றி வெறுமையாகத்தான் இருக்கும். காதடியிலும் கழுத்துப் பகுதியிலும் சுருண்டும் நெளிந்தும் தூங்கும் அவளது சுருண்ட கேசம். கண்களுக்குள் மட்டும் கொட்டி விட முடியாத சோகம் நிறைந்திருக்கும்.

அந்தச் சோகம் யார் கண்களுக்குமே தெரிவதில்லை. அல்லது யாரும் அதைக் கண்டு கொள்வதில்லை. அவளது அழகு, தனிமை, இளமை... இவைதான் பலரது கண்களையும் உறுத்திக் கொண்டிருந்தன.

எல்லோரும் தள்ளி நின்றுதான் அவளைச் சபலத்துடன் பார்த்தார்கள், ரசித்தார்கள், பாடல்களால் சீண்டினார்கள், சீட்டியடித்தார்கள்... கிட்ட நெருங்க மட்டும் தயங்கினார்கள். காரணம் அவள் பஞ்சமர் சமூகத்தில் இருந்து வந்தவளாம். வெளிப்படையாகத் தொட்டாலோ, பட்டாலோ ஏதாவது ஒட்டி விடும் என்ற பயம் அவர்களுக்கு.

பஞ்சமர், கோயிலுக்குள் வரக்கூடாது. கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளக் கூடாது. ஏன்... வீட்டுப்படிகளில் கூட இருந்து விடக் கூடாது... என்று மிகக் கடுமையான சட்ட திட்டங்களுடனும் கட்டுப்பாடுகளுடனும் வாழ்ந்து கொண்டிருந்த ஊர் அது. அந்தக் கட்டுப்பாடுகளை பகலில் மீறத் துளியும் துணிவின்றிய ஊரவர்கள் அவர்கள்.

அந்த ஊர்ப்பெண்பிள்ளை ஒன்றுக்கு, அந்தச் சமூகத்தில் ஒருவனோடு காதல் வந்தததால், அது பெரும் பிரச்சனையாகி ஒரு நாள் அவள் அவளது வீட்டு மாரிக்கிணற்றுக்குள் இறந்து மிதந்த சம்பவம் அந்த ஊரில், அதே 1970களின் இறுதிப்பகுதியில் தான் நடந்தது. அத்தனை ஆச்சாரம் பார்க்கும் ஊர் அது.

அந்த ஊருக்குள் தான் முத்தம்மா வந்திருக்கிறாள். அதுவும் தன்னந்தனியாக வந்திருக்கிறாள். தற்போதைக்கு ஊரை அண்டிய ஒரு பகுதியில் இருக்கும் பஞ்சமர் குடும்பங்களில் ஒன்றோடு ஒண்டிக் கொண்டிருக்கிறாளாம்.

பிழைப்புக்கு ஏதாவது வழி வேணுமே! அதுதான் இந்த ஆச்சார சீலர்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து, ஒவ்வொரு வீடு வீடாய்ச் சென்று, கேட்டு, அரிசி இடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தொடங்கினாள்.

எல்லா வீடுகளிலும், அரிசி இடிக்கும் வேலைக்கு விண்ணப்பம் வைத்த போது அவள் கையாண்ட உத்தி, வழமையான சம்பளத்தை விட ‘கிலோவுக்கு ஐந்த சதம் குறைத்து இடித்துத் தருகிறேன்‘ என்பதுதான்.

‘நன்றாக, வேகமாக, அரிசி இடிக்கிறாள்‘ என்பதில் பல பெண்களுக்கு அவளைப் பிடித்தும் போயிற்று.

ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வீட்டில் என்று நாட்குறித்து இடிக்கத் தொடங்கினாள். ஒரு கிலோ அரிசி இடிப்பதற்கு இருபது சதம். அனேகமான ஒவ்வொரு வீட்டிலும் பத்துப் பதினைந்து கிலோ அரிசி இடிப்பிப்பார்கள். இரண்டு ரூபா காசும் மதியச்சாப்பாடும் அவ்வப்போது தேநீரும் கிடைக்கும். எல்லா வீடுகளிலும் காலை, மாலை இரண்டு நேரமும் அரிசிமாப் பிட்டு, அரிசிமா இடியப்பம்... என்று அரிசி மாவிலேயே சாப்பாடுகள் என்பதால், ஒரு சுற்று ஒரிரு கிழமைகளில் முடிய மீண்டும் புதுச் சுற்றுப் போல முதல் இடித்த வீட்டிலிருந்து அடுத்த சுற்றைத் தொடங்குவாள்.

அவள் பஞ்சமர் சமூகத்தில் இருந்து வந்தவளென்பதால் சில குடும்பங்கள் அவளைக் கொண்டு இடிப்பிப்பதில்லை. அதற்கென்று இருக்கும் சிலரது வீடுகளுக்கு அரிசியைக் கொண்டு போய்க் கொடுத்து இடிப்பிப்பார்கள். சிலர் மில்லிலும் கொடுப்பார்கள். மில்லில், மெசினில் அரைப்பது கைக்குத்து மாப்போல உருசியாக இருப்பதில்லை.

அதனால் செல்லம் ஒரு நாளும் மில்லில் கொடுப்பதில்லை. அரிசியைக் காவிக்கொண்டு போய் வள்ளிப்பிள்ளை வீட்டில் கொடுத்துத்தான் இதுவரை இடிப்பித்தாள். இப்போ முத்தம்மா வந்த பின், இது செல்லத்துக்கு இன்னும் வசதியாக இருந்தது. அரிசியைக் காவிக் கொண்டு போய்க் கொடுக்கும் வேலையும் இல்லை. வள்ளிப்பிள்ளையை விட கிலோவுக்கு ஐந்து சதமும் குறைவு. கண்ணுக்கு முன்னாலேயே இடிக்கிறாள். ஒரு பிடி மாவையோ, ஒரு பேணி மாவையோ எடுத்து வைக்கும் களவும் இல்லை. என்ன, அவளை அரிசியின் மேலோ, அரிசி மாவின் மேலோ கை பட விடாமல் பாதுகாத்தால் சரி.

இரண்டு கிழமைக்கொருக்கால் முத்தம்மா வருவாள். முதல் நாள் இரவே செல்லம் தீட்டல் பச்சையரிசியை சுளகில் போட்டு தவிடு பறக்கப் பிடைத்து தண்ணீருக்குள் ஊறப்போட்டு விடுவாள். தவிட்டை அள்ளி கழுநீரில் கலந்து ஆட்டுக்குத் தீனியாக்கி விடுவாள். பிறகு அதிகாலையில் எழுந்து அரிசியைக் கிளைந்து, தண்ணீரை வார வைத்து விட்டு, வேளைக்கே மத்தியானச் சமையலையும் முடித்து விட்டு முத்தம்மாவின் வருகைக்காகக் காத்திருப்பாள்.

இந்த இடைவெளிக்குள் கதிரேசரைக் கொண்டு உரலையும் உலக்கையையும் எடுப்பித்து வெளியில், முற்றத்தில் வைப்பித்து விடுவாள். அந்த நாட்களில் எல்லாம் கதிரேசர் மிகுந்த குதூகலமாக இருப்பார். நீண்ட நேரம் நேரே வெளி விறாந்தையில் இருக்கும் சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்து புதினப்பத்திரிகை படிப்பார்.

கதிரேசர் வேலைக்குப் போகும் காலங்களிலும் சரி இப்போ ஓய்வெடுத்த பின்னும் சரி வீட்டு வேலைகளில் பெரிதான ஆர்வம் காட்டுவதில்லை. செல்லம்தான் பரபரப்பாய் ஓடியோடி எல்லாவற்றையும் செய்வாள். முத்தம்மா வந்ததும் குசலம் விசாரித்து விட்டு ஒரு தரத்துக்கு அளவான அரிசியைத் தானே கைகளால் அள்ளி உரலுக்குள் போடுவாள். முத்தம்மாவின் கை அரிசியில் பட்டு விடக் கூடாது என்பதில் வலு கவனமாய் இருப்பாள்.

கதிரேசர் மிகுந்த ஆச்சாரமானவர். கோயில், குளம் என்று திரிபவர். பஞ்சமரை மிக எட்டத்திலேயே வைத்திருப்பவர். அதனாலேயே செல்லம் எல்லாவற்றிலும் இன்னும் அதிகப்படியான கவனம் செலுத்துவாள்.

இடித்து முடிந்ததும், செல்லம் தானே உரலுக்குள் இருக்கும் மாவைக் கைகளால் எடுத்து சருவச்சட்டிக்குள் போட்டு விட்டு, புது அரிசியை உரலுக்குள் போடுவாள். முத்தம்மா இடிக்கும் போது சருவச்சட்டிக்குள் போட்ட மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பின்னறைக்குள் போட்டுப் போட்டு மாப்பெட்டிக்குள் அரித்து எடுப்பாள். வரும் கட்டையை அடுத்த தர அரிசியோடு சேர்த்து உரலுக்குள் போடுவாள். முத்தம்மா தாள லயம் தப்பாமல் இடித்துக் கொண்டே இருப்பாள். கதிரேசரின் கைகள் புதினப்பத்திரிகையைப் பிடித்தபடி இருக்க, கண்கள் முத்தம்மாவையே மேய்ந்து கொண்டிருக்கும்.

‘ஒண்டுக்கும் கூப்பிட்டுக் கீப்பிட்டு கரைச்சல் படுத்தாமல் இந்த மனுசன் பொறுமையாப் பேப்பர் வாசிச்சுக் கொண்டிருக்குது‘ என்று செல்லம் மனசுக்குள் திருப்திப் பட்டுக் கொள்ளுவாள்.

இடையில் ஓரிரு தடவைகள் எழுந்து போய் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து “இந்தாருங்கோப்பா... தேத்தண்ணி... குடியுங்கோ...“ என்று சொல்லி சுடு தேநீர் நிறைந்த எவர்சில்வர் ரம்ளரை கதிரேசரிடம் நீட்டுவாள்.

முத்தம்மா, தானே கொண்டு வந்த ஒரு குடிகோப்பையை நீட்டுவாள். அதற்குள், செல்லம் தேநீரை ஊற்றி விடுவாள். முத்தம்மா அந்த முற்றத்திலேயே செல்லம் கொடுத்த சாக்கில் குந்தியிருந்த படி ஊதி ஊதிக் குடிப்பாள்.

எல்லா அரிசியும் இடித்து முடிந்ததும் முத்தம்மா கிணற்றடிக்குப் போவாள். செல்லம் ஒரு வாளி தண்ணீர் கிணற்றில் மொண்டு அவளின் கைகளில் ஊற்ற அவள் கிணற்றடியோடு அண்டிய முற்றத்தில் நின்ற படியே குனிந்து அந்தத் தண்ணீரைக் கைகளில் ஏந்திக் கைகளையும் முகத்தையும் கழுவி தனது சேலைத்தலைப்பாலேயே துடைத்துக் கொள்வாள்.

பின்னர் செல்லம் பின் வளவுக்கு ஓடிப்போய் வாழை இலை ஒன்று வெட்டிக் கொண்டு வந்து அதைப் பழைய புதினப்பத்திரிகைக்கு மேல் வைத்து சோறுகறியெல்லாம் போட்டு முத்தம்மாவிடம் கொடுப்பாள்.

முத்தம்மா வெளிமுற்றத்தில் சாக்கின் மேல் குந்தியிருந்த படியே அதைச் சாப்பிடுவாள். ஒரு சோடாப்போத்தலில் தண்ணீர் வாங்கிக் குடிப்பாள். மீதச் சாப்பாடை அப்படியே சுற்றிக் கொண்டு போவாள். இரவுக்கு அதைச் சாப்பிடுவாளோ என்னவோ!

முத்தம்மா போனதும், முதல் வேலையாகச் செல்லம் உலக்கையை மஞ்சள் தண்ணீர் தெளித்து கழுவித் துடைத்து வைத்து விடுவாள். முத்தம்மா இருப்பதற்குக் கொடுத்த சாக்கையும் கொண்டு போய் ஆட்டுக் கொட்டிலோடு சேர்த்து இறக்கியிருக்கும் பத்தி மூலைக்குள் வைத்து விடுவாள்.

அதன் பின் தான், இடித்த மாவை தாச்சியில் போட்டு வறுத்து, அரித்து, மாவை மாப்பானைகளில் போட்டுப் பத்திரப்படுத்துவாள். பிரித்தெடுத்த மாக்கட்டைக்கு கொதி தண்ணீர் ஊற்றி வைத்து, மாப்பூத்ததும் அதை அன்றைய இரவுச் சாப்பாட்டுக்குப் பிட்டாக்குவாள்.

சில நாட்களில் இடித்த பச்சைமாவை எடுத்து வைத்துக் கரைத்து அடுத்த நாளைக்கு அப்பமும் சுடுவாள். அந்த நாட்களில் முத்தம்மாவை ‘அடுத்த நாள் வரும் படியும், இரண்டு அப்பம் தருகிறேன்‘ என்றும் சொல்லி விடுவாள்.

காலப்போக்கில் அப்பம் சுட்டால், தோசை சுட்டால் மட்டுமல்லாது வேறு வேறு வேலைகளுக்காகவும் முத்தம்மா அடிக்கடி அங்கு வரத் தொடங்கி விட்டாள். தென்னோலை பின்னுவது, ஆட்டுக் கொட்டில் கூட்டுவது, ஊமல் கொட்டையைப் பிளப்பது, பொச்சுமட்டையைப் பிரிப்பது... என்று பல வேலைகள் அங்கு அவளுக்குக் கிடைத்திருந்தன. எல்லாம் வீட்டுக்கு வெளியில் முற்றத்தில் இருந்தும் நின்றும் செய்யும் வேலைகள்தான். அது அவளுக்கு ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. வேலை செய்யும் நாட்களிலெல்லாம் உணவும் பணமும் அவளுக்குக் கிடைத்தன. அவ்வப்போது அவள் விரும்பியோ, விரும்பாமலோ அதற்கு மேலேயும் கிடைத்தன.

அவள் அப்படி அடிக்கடி வருவது ஆச்சாரசீலர் கதிரேசருக்கு நல்ல வசதியாக இருந்தது. அவளின் இடையையும் நடையையும் கண்களால் மட்டும் மேய்ந்து கொண்டிருந்தவர், இப்போதெல்லாம் கைகளாலும் மேயத் தொடங்கியிருந்தார். செல்லம் அங்கே இங்கே என்று எங்காவது போகும் போது கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்கள் ஒன்றையும் தவற விட்டுவிடாது தனக்குச் சாதகமாக்கி, அதற்கு மேலேயும் சென்றார். இரவுகளில் செல்லத்தையும் அதே கைகளால் தொட்டார்.

எதையும் அறியாத செல்லம் ஒவ்வொரு முறையும் முத்தம்மா அரிசி இடித்த பின், உலக்கையை மஞ்சள் தெளித்துக் கழுவி வைப்பதுவும் முத்தம்மா இருந்த சாக்கை ஆட்டுக் கொட்டிலோடு சேர்த்து இறக்கியிருக்கும் பத்தி மூலைக்குள் கொண்டு போய் வைப்பதுமாக இருந்தாள்.

சந்திரவதனா
யேர்மனி
18.11.2023

Quelle: Thaiveedu
Pdf வடிவில்: https://thaiveedu.com/january-2024/
ஒலி வடிவில்: https://youtu.be/VPWKhRCLBYE?si=gGMEr2pFypy2FIYk

Saturday, November 25, 2023

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...

 

அன்று 1985ம் ஆண்டு மார்ச் மாதம் 7ந் திகதி. தாயகத்தில் அமைதியாக இருந்த குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டு விட்ட காலம் அது.

எங்கள் வீடும் அப்போது கல்லெறியப்பட்ட குளமாய்த்தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் குட்டித் தங்கை பாமாவின் 13 ஆவது பிறந்த நாளை அதாவது ரீன்ஏஜ் இல் காலடி எடுத்து வைக்கும் அவளின் பிறந்தநாளைக் கொண்டாடாமல் இருக்க அக்காமாரான எங்களுக்கு மனம் இடந் தரவில்லை. பெரிய கேக் ஒன்று அடித்து, நண்பி இந்துமதியிடம் கொடுத்து பேக் பண்ணினோம். எங்களிடம் அப்போது மின்சாரச்சூளை இருக்கவில்லை.

அந்தக் கேக்குடன் அம்மா செய்த வடை, முறுக்கு, இதர சிற்றுண்டிகளையும் வழக்கமான சாப்பாட்டு மேசையை விடுத்து வரவேற்பறையில் இருக்கும் மேசையில் வைத்து விட்டு அந்த மேசையைச் சுற்றி இருந்தோம்.

ஆனால் யாருமே எதையுமே சாப்பிடவில்லை. என் சின்னக் குழந்தைகள் கூட எதற்குமாய் அடம் பிடிக்கவில்லை. என்னையும் என் தங்கைமாரையும் போலவே அவர்களும் யாரையோ எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள்.

அந்த எதிர்பார்ப்புக்குரியவர் வேறு யாருமல்ல. எங்கள் தம்பி மொறிஸ்தான் அது. தம்பி மயூரனுக்கும்(சபா) தங்கை பாமாவுக்கும் மட்டும் அவன் அண்ணா. என் பிள்ளைகளுக்கோ குறும்பு நிறைந்த ஆசை மாமா.

காத்திருந்த கணங்கள் யுகங்களாக நீண்டிருக்க, மணிகள் சில கடந்து அவன் வந்தான். தோளிலே துணிப்பை கிரனைட்டுகளுடன் பருமனாகத் தொங்க, கையிலே இன்னொரு கிரனைட்டைப் பொத்தியபடி, முகத்திலே மட்டும் என்றுமே மாறாத புன்னகையுடன் வந்த அவனது வாய் ஒரு பாடலை முணுமுணுத்தது.

அவன் எங்களை நெருங்க நெருங்க “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி. பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி...“ என்ற பாடல்வரிகள் தெளிவாக எம் காதுகளையும் வந்தடைந்தன.

எமது காத்திருப்புக்குத்தான் ஏதோ சொல்ல வருகிறான் என நாம் நினைத்தோம். ஆனால் அவனோ “அக்கா.. அத்தான் யேர்மனியிலை இருந்து உங்களையே நினைச்சு நினைச்சு ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...‘ எண்டு பாடிக் கொண்டிருக்கிறார்“ என்றான். அப்போது எனது கணவர் யேர்மனிக்குப் பயணித்து சில மாதங்கள்தான் ஓடியிருந்தன.

“ம்..ம்..ம்... உனக்கு இஞ்சை மட்டும் அவர் பாடுறது கேட்குதாக்கும். சும்மா போடா..! நான் அவனைச் செல்லமாகக் கடிந்து கொண்டேன்.

“எனக்குத் தெரியாதே?“ என்ற படி தொடர்ந்து பாடலைப் பாடிக் கொண்டே அவன் என் பிள்ளைகளை நோக்கினான்.

என் மகள் தீபா ஓடிப்போய் “பரதன் மாமா..“ என்ற படி அவனைக் கட்டிப் பிடித்தாள். கிரனைட் பொத்திய கைகளுடன் அவன் அவளை அணைத்தான்.

“ஐயோ.. அவளை விடடா. முதல்லை உதெல்லாத்தையும் அங்காலை கொண்டு போய் வைச்சிட்டு வந்து பிள்ளையளைக் கொஞ்சு“ மனசு பதை பதைக்க அவனைக் கடிந்தேன்.

“அக்கா, உங்களுக்கு எப்பவும் பயம்தான்“ என்ற படி தள்ளிப் போனவன், “இந்தக் கிரனைட் கிளிப் உடைஞ்சிட்டுது. தலைக்குக் குத்துற கிளிப் ஒண்டு தாங்கோ. இதைச் சரிப்படுத்த...“ என்றான்.

உடனே தங்கை சந்திரா “உனக்கு இப்ப என்ன கிளிப் தானே வேணும். இஞ்சை வா. நான் தாறன்“ என்று கூறி விறாந்தைகள் கடந்து குசினிக்குப் பக்கத்திலுள்ள ஸ்டோர் றூமுக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

அது ஒரு இரட்டை அறை. ஒரு அறைக்குள் போனால் சேர்ந்திருக்கும் இன்னொரு அறைக்குள்ளும் போகலாம். அந்த இன்னொரு அறைக்குள் மா, சீனி, அரிசி, புளி, ஒடியல், ஊறுகாய்... என்று மூட்டைகளும், பானைகளும், சாடிகளும் நிறைந்திருக்க முன் அறையில் அம்மா அவ்வப்போது சமையற் தேவைக்கு எடுக்கக் கூடிய வகையில் சிறிய சாடிகளிலும் போத்தல்களிலும் உணவுப் பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கூடவே சாப்பாட்டுக் கோப்பைகள் குடிகோப்பைகள் ரம்ளர்களுடனான ஒரு அலுமாரியும் ஒரு பெரிய மேசையும் இருந்தன.

சந்திரா, அந்த மேசைக்குத்தான் மொறிஸைக் கூட்டிச் சென்றாள். நானும் அவர்களின் பின்னாலே போய்ப் பார்த்து “கெதியா கிளிப்பைப் போட்டிட்டு வாங்கோ. இனியாவது பிறந்தநாளைக் கொண்டாடுவம்“ என்று சொல்லி விட்டு வரவேற்பறைக்கு வந்து காத்திருந்தேன்.

ஐந்து நிமிடங்கள் தான் அசைந்து போயிருக்கும். ஒரு மாபெரும் சத்தம். வீடு அதிர்ந்தது. எனக்கு நெஞ்சே வெடித்தது போலிருந்தது. என் பிள்ளைகள் விழிகள் பிதுங்க விறைத்து நின்றார்கள்.

நல்ல வேளையாக அம்மா அந்த நேரம் வீட்டில் நிற்கவில்லை. நின்றிருந்தால் கதிகலங்கிப் போயிருப்பா. நானும் மற்றைய தங்கை பிரபாவும் பாமாவும் ஸ்டோர் றூம் வாசலையே பார்த்தபடி நின்றோம். ஸ்டோர்றூமுக்குள்ளிருந்து புகை வந்து கொண்டிருந்தது. ஸ்டோர்றூம் வாசல் புகை மண்டலமாயிருந்தது. வாசலிலிருந்து நீளத்துக்கு விறாந்தையிலிருந்து முற்றம் வரை துகள்களாய் சிவப்பாய், கறுப்பாய் பலநிறங்களில் ஏதேதோ வந்து விழுந்தன. வேறு எந்தச் சத்தமும் இல்லை.

உள்ளே, தம்பி மொறிசும் தங்கை சந்திராவும் என்ன ஆனார்கள்? சிதறி விட்டார்களா? ஒரு கணம் இதயம் துடிக்க மறந்து செயலிழந்து நின்றேன். அடுத்த கணம் எப்படி வரப்போகிறது என்று தெரியாத அந்தக் கணத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. வாழ்க்கையில் மறக்கவே முடியாத கணங்களில் ஒரு கணம் அது.

தங்கை சந்திராவும் தம்பி மொறிசும் உயிரோடு வெளியே வந்தார்கள். அப்போதும் அவன் „காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி...“ என்று பாடிக் கொண்டே வந்தான். முகத்தில் எப்போதும் போலப் புன்னகை பூத்திருந்தது.

தங்கைதான் வெலவெலத்துப் போயிருந்தாள். “அக்கா எனக்குக் காது கேட்கேல்லை. செவிடாகீட்டன் போலை இருக்கு“ என்றாள். எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.

ஆனால் அதற்கு மேல் எம்மால் அந்தப் பிறந்தநாளைச் சாதாரணமாகக் கொண்டாடவே முடி,யவில்லை. பயம், பதட்டம், சந்தோஷம்... என்று எல்லாம் கலந்த இனம் புரியாத உணர்ச்சிக் கலவை எம்மை ஆட்கொள்ள நாம் சில நிமிடங்கள் வாய் விட்டுச் சிரித்தோம். பின்னர் அழுதோம். தம்பி மொறிஸைக் கட்டித் தழுவினோம். அதன் பின்னர்தான் ‘உள்ளே என்ன நடந்தது?‘ என்பதை அறிந்து கொண்டோம்.

நடந்தது இதுதான். கிளிப் போடும் போது, மொறிஸின் கை நழுவி கிரனைட் வெடித்து விட்டது. கிரனைட் வெடிக்கப் போவதைக் கணத்தில் உணர்ந்து கொண்டவன், தங்கையையும் இழுத்துக் கொண்டு ஓடிப்போய் மற்ற அறையின் அரிசி மூட்டைகளின் பின் படுத்து விட்டான். அந்த அரிசி மூட்டைகள்தான் அன்று அவர்கள் இருவரையும் காத்தன.

அதன் பின் அதற்கான தண்டனையாக, மொறிஸ், ஆயிரம் தோப்புக்கரணம் போட்டது இன்னுமொரு கதை.

சந்திரவதனா

12.10.2001

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite