Thursday, May 13, 2004

முகவரி தேடும் மனவரிகள்



தீட்சண்யன்

இதயத்தின் ஓரத்தில் ஆறாத சோகம்
விழிகளின் ஈரத்தில் வடியாத ஏக்கம்
உறக்கத்தில் கூட உறங்காத நினைவு
இதையெல்லாம் தந்து நீ எங்கு சென்றாய்...?


அண்ணா..!
இப்போ நான் மிகவும் பலவீனமானவளாகி விட்டேன்.
அடிக்கடி அழுவதும், அர்த்தமின்றிக் கோபப் படுவதும்
நீண்ட இரவுகளிலும் சோர்ந்த பொழுதுகளிலும்
நீயில்லா நினைவுகளில் வீழ்ந்து போய்க் கிடப்பதுவும்
என் வாழ்க்கையாகி விட்டது.

எனக்குள்ளே ஒளிந்திருக்கும் அழுகை அருவியாகக் கொட்ட இன்ன இன்னதுதான் காரணமென்றில்லாமல், சிறு துரும்பு அசைவில் கூட துயர் என்னைத் தாக்க நிலை குலைந்து போகிறேன்.

இன்றைய இப்போதைய அணை உடைத்துப் பாயும் என் அழுகைக்குக் காரணம், உன் மகளின் பிறந்தநாள் புகைப்படம்.

உனக்கு நான் எழுதவென்று, எனக்குள் நான் எழுதி வைத்தவைகளை உனக்கு அனுப்ப முடியாத படி, உன் முகவரியைக் கூடத் தராது நீ எனை விட்டுப் போன ஒரு சோகமான பொழுதில்தான் அப் புகைப்படங்கள் என்னை வந்தடைந்தன.

கடித உறையில் கூட நீதான் உன் கைப்பட விலாசமெழுதியிருந்தாய். எப்படி என் நெஞ்சு படபடத்தது தெரியுமா..? உறை கசங்காமல் அவசரமாய்ப் பிரித்து, உள்ளிருந்த படங்களுக்குள் மனங் கலங்கியபடி உன் முகம் தேடினேன்.

ஒரு படத்தில் ஷெல்லிலே தொலைந்து போன உன் கால் பற்றி யாருமே காணாத படி எப்படியோ மறைத்து உன் பிள்ளைகளுக்கு நடுவில் அழகாக நீ அமர்ந்திருந்தாய். வாரி விடப்பட்ட நெளிந்த சுருண்ட உன் கேசமும், புன்முறுவல் பூத்த உன் முகமும் எப்போதும் போல் அழகாய்...........! அதுதான் உன் இறுதிப் புகைப்படம் என நினைக்கிறேன்.

அந்தப் புகைப்படங்களைத்தான் மீண்டும் இன்றெடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்தேன். ஒரு படத்தில் உன் மகள் அழகாக பரதநாட்டிய முத்திரைகளுடன் அபிநயித்த படி....! புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் போதுதான் அதைக் கண்டேன். ஒரு ஓரமாக உன் பாதம் நீண்ட படி...... பெருவிரல் இல்லாது..! ஓ.......வென்று அழுது விட்டேன். உன் கால் படத்தில் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நீ ஓரமாய் உட்கார்ந்திருந்திருப்பாய். உன் மகளைப் படம் பிடித்தவனும் சரியாகப் பார்க்கவில்லை. நான் பார்த்து விட்டேன்.

இப்படித்தான் அடிக்கடி ஏதவாது காரணங்கள், துயரத்துக்கு நான் போட்டு வைத்திருக்கும் அணையை உடைக்க வரும். அழுகை வெள்ளமாய்ப் பாயும்.
அழுகை ஓய்ந்த சில பொழுதுகளில் மூக்கை உறிஞ்சிய படியோ, சமைத்து முடிந்த பொழுதுகளில் கழுவிய கைகளைத் துடைத்த படியோ, வேலையால் வந்ததும் உடைகளை மாற்றிய படியோ, படுக்கைக்குப் போன பின்னும் தூக்கம் வராத பொழுதுகளிலோ நான் உன் புகைப் படங்களை எடுத்துப் பார்ப்பேன். துக்கம் நெஞ்சை அடைக்கும். பக்கம் பக்கமாக நீ எனக்குப் பிரியமாக எழுதிய கடிதங்களை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அழுகை வரும்.

இன்றும் மூக்கை உறிஞ்சிய படி உனது ஒரு கடிதத்தை எடுத்தேன். அழுகை ஓய்ந்திருந்தாலும் விம்மலும் பெருமூச்சும் இன்னும் ஓயாதிருந்தன. கன்னத்தில் எச்சமாய்க் கண்ணீர் அரை குறையாகக் காய்ந்தபடி இருந்தது.

நான் வாசிக்கத் தொடங்கினேன்.


157/1 OLR Lane
Hospital Road
Jaffna
Srilanka
29.6.1991


பிரிய தங்கைக்கு,
உனது தொகுதி தொகுதியான கடிதம் இன்று - இப்போ கிடைத்தது. ஆற்றாமையினாலும், விரக்தியினாலும் இறுகிப் போயிருந்த என்னுள் எரிமலை வெடித்தது போன்ற கொந்தளிப்பு உருவாகி கண்ணீராய்ச் சொரிகிறேன்.
என்னையே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவேசம் வரும் கட்டங்களில் இப்படியான அன்புப் பிரவாகங்கள் தாக்கி - என்னுள் இருக்குமெல்லாம் பீறிட்டு வெளியேறுவதால் ஒரு விதமான களைப்பும் ஓய்வும் ஏற்படுகிறது.

20.12.90 அன்று எனது பாடசாலை ஆசிரியர்களுக்குரிய சம்பளப் பணத்தை எடுப்பதற்காக கொழும்பு சென்றேன். அவ்வேளை எமது தம்பி பார்த்திபன் யேர்மனி பயணமாகத் தயாராக நின்றான். சந்தோசமாக அவனை பயணமனுப்பினேன். வவுனியாவில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததால் கொழும்பில் 29ந் திகதி வரை நின்றேன். அங்கு நின்ற ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக எனது பிள்ளைகளுக்குத் தேவையான சில கல்வி உபகரணங்கள் உடைகள் போன்றவற்றை வாங்கினேன்.

29.12.90 அன்று வவுனியா வந்தும் - சீனி, சவர்க்காரம் போன்றவற்றிற்கு ஊரில் தட்டுப்பாடு என்பதால் - 30.12.90 வரை தங்கி நின்று அப்பொருட்களை வாங்கினேன். இதற்கிடையில் எத்தனையோ இராணுவத் தடைகளில் பார்த்திபன் பயணிக்கும் போது தந்து விட்ட மின்சார உபகரணங்களைப் பறிகொடுத்தேன்.

காலையில் ஒரு சூட்கேசுடனும், மூன்று பைகளுடனும் சைக்கிளில் கடைசித் தடையையும் தாண்டினேன். மிதிவெடி நிறைந்த வயல்களினூடு - தொடை வரை சேறு புரள சைக்கிளை முக்கி முக்கித் தள்ளினேன். இனியென்ன..! என்ற பூரிப்பில் முந்தி முந்தி வந்தேன். பூந்தோட்ட கிரவல் பாதையில் ஏறும் போது 100 யாருக்கப்பால் - எனது வலது புறமாக ஒரு பவல் Armoured car ம் இரண்டு Trucks ம் வருவதைக் கண்டேன். சனங்கள் இடது புறமாக ஓடினர். நானும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.

Firing தொடங்கி விட்டது. பல சைக்கிள்கள் விழுந்தன. பெரிய காயங்களில்லை. நானும் சைக்கிளை ஒரு மரத்துடன் சாத்தி விட்டு, பெரிய மரமொன்றின் பின்னால் படுத்தேன். தொடர்ந்து Firing. எனக்குப் பக்கத்தால் எல் 222....222 என்று குண்டுகள் பாய்ந்தன. ஓய்ந்தன. - பின் பாய்ந்தன. பின்னர் Armoured car இலிருந்து Canonshell முழங்கியது. பாரிய பயங்கரச் சத்தம். என்னருகில் ஒருவன் நின்றான். Canon தொடங்க - பாய்ந்து கிடங்கில் வீழ்ந்து ஓடி விட்டான். என்னால் அசைய முடியவில்லை. பயம் - எதுவும் நடக்காதென்ற நம்பிக்கை. படுத்திருந்தேன்.

மிகப் பாரிய ஓசையில் Canon குண்டுகள் பட்டுக் கொப்புகள் முறிந்தன. திடீரென மின்வெட்டும் அதிர்ச்சி. தலை நிமிர்த்தி என் உடலைப் பார்த்தேன்.
(மல்லாக்காகப் படுத்திருந்தேன்.) என் முழங்கால் இருந்த இடத்தில் கொழுப்பும், இரத்தமும், சதையுமாக ஒரு பள்ளம். வெள்ளையாக எலும்புகள். காலை அசைத்தேன். இரண்டு எலும்புகள் உரசி....... ஐயோ..... அம்மா.....! என்று என்னால் முடிந்தளவு பலமாகக் கத்தினேன். கண்ணீர் வந்தது. பதிலாக படபடவென குண்டுச் சத்தம் வந்தது.

எனது மற்றைய கால் பெருவிரல் போனதோ, கை முறிந்ததோ அந்தக் கணத்தில் எனக்குத் தெரியாது. நான் இப்படியே இருந்தால் செத்து விடுவேன் எனத் தெரிந்தேன். குருதி அருவியாகப் புல்லில் ஓடிக் கொண்டிருந்தது. நான் மயக்கமாவதை உணர்ந்தேன்.

கூடாது.... இது ஆபத்து...... என என்னறிவு உணர்த்தியது. திரும்பிப் பார்த்தேன். சைக்கிள் நிற்கிறது. எனது சக்தியெல்லாவற்றையும் கூட்டி - அண்ணை என்னைத் தூக்குங்கோ...! - என்று கத்தினேன். மீண்டும் புலன்கள் குறைகிறது. யாரோ ஒருவர்(நாட்டாண்மை) வந்து என்னைப் பார்த்தார். - ஐ..யே..யே - என்றார்.
- பொறுங்கோ வாறன். - என்றார்.

எங்கோ எப்படியோ போய் நால்வர் வந்தனர். என்னைத் தூக்கினார்கள். தொடர்ந்து A.K.47 Firing. - அண்ணை என்ரை சாமான்களும் சைக்கிளும். - என்றேன். - ஆளே முடியப் போகுது. சைக்கிளாம். - என்றார்கள்.

கால் புல்லில் தேய, குருதி ஆறாய் ஓட தூக்கி வந்து சாக்கில் கிடத்தி (இயக்கம் அல்ல) Tractor இல் ஏற்றினார்கள். ரக்ரர் பெட்டி முழுக்க இரத்தம். பெடியளின் சென்றிக்கு வர சனம் குவிந்தது புதினம் பார்க்க. எனக்குத் தெரிந்த பெடியள் யாரும் இல்லை.

ரக்றர் ஓட்டி மேற்கொண்டு பயணிக்க மறுத்தான். மினிவான்கள் ஏராளம் நின்றன. யாவரும் மறுத்தனர். என்னைக் கிட்டிய மருத்துவமனையான கிளிநொச்சிக்குக் கொண்டு போகக் கூட மறுத்தனர். - நான் செத்து விடுவேன். - என்று நம்பினர்.
யாரோ.... எனது மனைவியின் தூரத்து உறவினர் என்னுடன் வர ஒப்புக் கொண்டார். எனக்கு அவரைத் தெரியாது. அவருக்கு என்னைத் தெரியுமாம்.

- எனது சைக்கிளையும், சூட்கேசையும் எடுத்து வையுங்கோ. - என ஒரு அன்பரிடம் சொன்னேன். பத்திரிகை நிருபர்கள் முகவரி கேட்டனர். சொன்னேன். செஞ்சிலுவைச் சங்க வாகனம் வந்தது. உதவும் படி ஆங்கிலத்தில் கேட்டேன்.
அவன் எனது இடுப்புப் பட்டியை உருவி, ஒரு தடி முறித்து முறுக்கிக் கட்டினான்.(இரத்தம் போகாதிருக்க). ஒரு கோப்பை தேநீர் தந்தான். தான் அநுராதபுரம் போவதாயும் என்னை யாழ்ப்பாணம் போகும் படியும் சொன்னான். நல்லவன்.

இறுதியில் மினிவான்காரன் ஒருவன் கிளிநொச்சி போக 5000ரூபா கேட்டான். ஒப்புக் கொண்டேன். வழி வழியே வாகனத்தின் படிகளினூடு குருதி வடிந்ததாம். நான் ஏதேதோ கதைத்தேனாம். - மயங்கினேனாம். அது பெரிய கதை. பின் கிளிநொச்சி மருத்துவமனையில் டெக்ஸ்ற்றோஸ் ஏற்றினார்கள். இன்னும் பத்து நிமிடம் தாமதமானால் இறந்திருப்பேன் என்றார்களாம். (இறந்திருக்கலாமென இப்போதெல்லாம் நினைக்கிறேன்.)

மீண்டும் அங்கிருந்து பூநகரி ஜெற்றிக்கு வர செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்புலன்சுக்கு டீசலுக்குப் பணம் கேட்டார்கள். 3200ரூபா கொடுத்தேன். பின்னர் ஜெற்றியிலிருந்து யாழ்ப்பாணம் வர 1300ரூபா கேட்டார்கள். கொடுத்தேன்.

நடுநிசியில் யாழ் மருத்துவமனையில் வைத்தியர்கள் சொன்னார்கள் - நீரெண்ட படியால் வந்திருக்கிறீர். உமக்கு மனோதிடம் கூட.....! - என்று. (என் மனோ திடத்திற்காக வருந்துகிறேன்.)

ஆறுமாத காலமாக ஒரு கால் இல்லாமல், ஒரு கை இயங்காத நிலையிலிருக்கிறேன். போன சனிக்கிழமை எக்ஸ் றே எடுத்தேன். கை எலும்பு பொருந்தவில்லை. அதை மீள வெட்ட வைத்தியர்கள் விரும்ப வில்லை. முன்னைய மருத்துவ வசதிகள் இப்போ இங்கில்லை. கால் போட்டாலாவது ஏதாவது செய்யலாம். ஜெயப்பூர் கொம்பனியில் கால் இல்லை. கூட்டுப் படைத் தலைமையகம் கால் கொண்டு வர மறுக்கிறது...

எனது வீட்டுக் கேற்றைத் தாண்ட முடியாத நிலையில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்த படி, யாரோ சொன்ன தகவல்களைக் கேட்ட படி முடங்கியிருந்த எனக்கு இப்போ ஆறுதல் தரும் ஒரு விடயம் பொட்டம்மான் அவர்களிடம் கடமையாற்றுவது ஒன்றுதான். அவர்களில் ஒருவர் காலையில் வந்து என்னை மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்று மாலையில் எனது கடமை முடிந்ததும் என்னை வீட்டில் கொணர்ந்து விடுவார். அங்கு கடமையாற்றும் பொழுதுகளில் நான் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறேன்.

இது ஒரு துன்பியல் கடிதமாக அமையக் கூடாது என்பதற்காகப் பலவற்றைத் தவிர்த்துள்ளேன். என்னால் தாளமுடியவில்லையம்மா. எப்படியிருந்த நான் எப்படிக் கூட்டுப் பறவையாய்ப் போனேன். நீ வருந்தாதே.

உன் பிரிய
அண்ணன்.


இப்போது நான் அழவில்லை. மனசு பாரமாக இருக்கிறது. கடிதத்தை மூடி வைத்த பின்னும் படம் போல நினைவுகள். நீயும் நானும் எமது ஆத்தியடி வீட்டில் - விறாந்தை நுனியில் குந்தியிருந்து, பிச்சிப் பூப்பாத்திக்குள் காகிதக் கப்பல் விட்டதிலிருந்து..... எத்தனையோ நினைவுகள்..! எப்படி வாழ்ந்தோம் எமது பருத்தித்துறை மண்ணில்..! ஏன் இன்று இப்படியானோம்..?

பத்து வருடங்களாக ஒற்றைக் காலுடன் துயர்களைச் சுமந்த நீ.....
உனது ஒவ்வொரு நிலை பற்றியும் எனக்கு எழுதிக் கொண்டிருந்த நீ....
இப்போது மட்டுமேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

போவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட
- டொக்டர் என்னைக் கெதியாச் சுகப் படுத்தி விடுங்கோ. நான் புலிகளின் குரல் வானொலிக்குக் கவிதை எழுதோணும். - என்று சொன்னாயாமே...!
- தங்கைச்சி யேர்மனியிலையிருந்து ரெலிபோன் பண்ணினவளோ..? - என்று கேட்டு, டொக்டர் ஓமென்றதும் கண்களில் ஏதோ மின்னத் திருப்திப் பட்டாயாமே..!
பிறகேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

முகவரியைக் கூடத் தராது சென்று விட்டாயே..! உனக்கு எழுத என்று நான் எனக்குள் எழுதி வைத்தவைகளை எங்கே அனுப்ப........?

13.5.2000 அன்று (தனது 42வது வயதிலேயே) காலமாகி விட்ட
எனது அண்ணன் கவிஞர் தீட்சண்யனின் - நினைவாக....


சந்திரவதனா
யேர்மனி
9.7.2000

Monday, May 10, 2004

Film

டுபுக்கு கமராவுக்கு பிலிம் வேண்டாமல் பிறந்தநாள் கொண்டாடினதை வாசிக்க எனக்கும் ஒரு ஞாபகம் வந்தது.
அது 78ம் ஆண்டு. எனது கணவரின் சகோதரிக்கு திருக்கேதீஸ்வரத்தில் திருமணம்.
மிக நெருங்கிய உறவினர்களுடன் தாலி கூறை பலகாரங்களும் கொண்டு இரண்டு மூன்று கார்களில் பயணமானோம்.அங்கு தங்கி பாலாவியாற்றில் குளித்து தாலி கட்டி......... மிகவும் சந்தோசமாகப் பொழுதுகள் கழிந்தன. எல்லாச் சந்தோசங்களையும் எனது கணவர், மைத்துனர் என்று கமராவுக்குள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

திருமணம் முடிந்து திரும்பிய போது எனது கணவரே இரண்டு Films ஐயும் கழுவக் கொடுப்பதாகத் தீர்மானித்துஅவை எனது சூட்கேசுடன் எனது வீட்டுக்கு வந்து விட்டன. வீட்டுக்கு வந்ததும் சூட்கேசைத் திறந்து ஏதோ எடுத்து விட்டு நான் திரும்ப முன்
எனது மகன் (1வயதுதான்)மின்னல் வேகத்தில் Film சுருளின் நுனியைப் பிடித்து இழுத்து விட்டான்.நான் விக்கித்து அதைக் கையில் எடுக்கவும் மற்றையதையும் அவன் இழுத்து நிலத்தில் போடவும் சரியாக இருந்தது.

எனது கவலைக்கு மேலால் குறை கேட்க வேண்டியதாயிற்று.
இன்று வரை எனது கணவரின் சகோதரியின் திருமணத்துக்குச் சான்றாக எந்தப் புகைப்படமும் இல்லை.

Monday, May 03, 2004

சினிமாப் பாடல்கள் - 9


அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே


படம் - பூமகள் ஊர்வலம்
பாடியவர் - உன்னி கிருஷ்ணன்
இசை - சிவா


தாய் தந்தையருக்கு இணையாக இந்த உலகில் வேறெதுவுமே இல்லை.
அந்தப் பாசதீபங்கள் இல்லையென்றால் நாமும் இல்லை. ஆனாலும் நாமெல்லோரும் தாய் தந்தையரின் அருகில் இருக்கும் போது அவர்களின் அன்பையும் அருமையையும் புரிந்து கொள்வதில்லை. அன்பைப் புரிந்தாலும் அவர்களின் தியாகங்களைப் புரிந்து கொள்வதில்லை.

வெயிலின் அகோரத்தில்தான் நிழலின் அருமையைப் புரிந்து கொள்கிறோம். அதே போலத்தான் தாய், தந்தையரைப் பிரிந்த ஒரு தனிமையான காலத்திலோ அல்லது அவர்களை இழந்த ஒரு கொடுமையான தனிமையிலோதான் அந்தப் பாசதீபங்களின் அன்பையும், ஆதரவையும், தியாகத்தையும் உணர்ந்து கொள்கிறோம். அந்த அன்பு நிறைந்த அணைப்புக்காக ஏங்குகிறோம்.

ஒரு தாயின் அன்புக்கு இணையாக ஒரு தந்தையால் ஈடு கொடுக்க முடியாதென்றாலும் எமது வாழ்க்கையில் வளர்ச்சியில் தந்தையின் பங்கும் அளப்பரியதே. தாயின் அன்பை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு தந்தையின் அன்பைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. தூணாக நின்று தாங்கிய அந்தத் தோள்கள் தந்த பலமான ஆதாரத்தைக் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்வதில்லையென்று சொல்வதை விட கவனத்தில் கொள்வதில்லை என்று சொல்லலாம். அதையெல்லாம் கவனத்தில் கொள்ளும் போது அனேகமாகக் காலம் கடந்திருக்கும். திரையுலகம் கூட இந்த விடயத்தில் கொஞ்சம் பாரபட்சமாகவே இருந்திருக்கிறது. தாயின் அன்பை எமது மனசை உருக்கக் கூடிய வகையில் எத்தனையோ விதமாகப் பாடி வைத்த திரையுலகம் தந்தையின் அன்பை அவ்வளவாகப் பாடவில்லை.

எனக்குத் தெரிந்த வரையில் தேவர்பிலிம்ஸ்ஸின் முதற் படமான தாய்க்குப் பின் தாரம் படத்தில் தந்தை இறந்திருக்கும் போதான காட்சிக்காக TMS ஆல் பாடப் பெற்ற
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவனென்றால்
விந்தை உண்டோ


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஒளவையின் பொன்மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அநுபவமே இதுதானா

உண்ணாமல் உறங்காமல்
உயிரோடி மன்றாடி
என் வாழ்வின் இன்பமே
எதிர் பார்த்த தந்தை எங்கே?
என் தந்தை எங்கே?
கண்ணிமை போலே எனை வளர்த்தாரே
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே ----- பாழான சிதையில்
கனலானார் விதிதானோ...!

என்ற பாடல் தவிர்ந்த வேறு எந்தப் பாடலும் தந்தையின் அன்பு, பாசம், அவசியம் பற்றி அவ்வளவாகப் பேசவில்லை. வழமையாக எம.ஜி.ஆர் படங்களில் தாயை முன்னிறுத்தியே பாடல்கள் அமைந்திருக்கும். இப்படத்தில் சற்று வித்தியாசமாக தந்தையை முன்னிறுத்தி இப் பாடல் அமைந்துள்ளது. ஆனாலும் இப் பாடல் ஏனோ பெரியளவில் பேசப் படவில்லை. நல்ல வரிகள், நல்ல இசை, நல்ல குரல்வளம் இருந்தும் இந்தப் பாடல் பிரபல்யமாகாததால்தானோ என்னவோ பிற்காலத்தில் யாரும் தந்தையைப் பற்றிப் பாடாமலே விட்டு விட்டார்கள். அவ்வப்போ ஓரிரு பாடல்கள் திரைப்பங்களுக்காகப் பாடப் பட்டிருந்தாலும் அவைகள் கூட ஏதோ சாட்டுக்கு தந்தை என்ற சொல்லை பிரயோகித்தனவே தவிர தாயின் அன்பை வெளிப்படுத்திய பாடல்கள் போல் தந்தையின் அன்பை வெளிப்படுத்திய பாடல்களாக அமையவில்லை.

இது பலபேரின் மனதில் ஒரு குறையாகவே இருந்து கொண்டுதான் இருந்தது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் திரையுலகம் எமக்குத் தந்த இப்பாடல் எம் எல்லோரையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

கடும் கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை
ஒரு ஏழைத்தாய் போல்
உலகில் தெய்வம் இல்லை.

தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.


தாயோடு தந்தையையும் சேர்த்து 1999 இல் வெளியான பூமகள் ஊர்வலம் திரைப்படத்துக்காகப் பாடப் பட்ட அருமையான இப் பாடலின் வரிகளில்
தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

என்ற வரிகள்தான் சற்று அதிருப்தியை வரவழைக்கின்றன. தாயின் அன்பு ஈடிணை இல்லாததுதான். அதனால் அன்புக்கு ஆதாரமாய் அவளைச் சொல்வது சாலப் பொருத்தமே. ஆனால் அறிவுக்கு ஆதாரமாய் தந்தையை மட்டும் சொல்வது பொருத்தமாக இல்லை. ஆண்களே பெரும்பாலும் பாடல் ஆசிரியர்களாய் இருப்தால் ஏற்படும் தவறு இது.

இருந்தாலும் உன்னி கிருஷ்ணனின் குரல் சிவாவின் இசையோடு இணைந்து பாடல் மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது.

சந்திரவதனா
யேர்மனி
28.4.2004

எனது ரசனைகளிலிருந்து.....



Schwaebisch Hall to Stuttgart - Germany - 24.4.2004

Tuesday, April 27, 2004

சிந்து




சிந்து வந்திருக்கிறாள்.
ஒரு கிழமைக்கு இங்கு எழுத முடியாது போகலாம்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite