Wednesday, November 03, 2004

தீயணைப்புப் பயிற்சி

ஈழநாதன் தீயணைப்பு நாடகம் என்ற தலைப்பில் சிங்கப்பூரில் நடைமுறைப் படுத்தப் படும் தீயணைப்புப் பயிற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இது விடயத்தில் நான் வாழும் யேர்மனி மிகுந்த கவனமாகவே உள்ளது.
நான் யேர்மனியை நேசிப்பதற்கு யேர்மனியில் நடைமுறையில் இருக்கும் இது போன்ற மனித நேயமான செயற்பாடுகளும் முக்கிய காரணிகளாகின்றன.

இங்குள்ள பாடசாலைகளில் அடிக்கடி இந்தத் தீயணைப்புப் பயிற்சி நடக்கும்.
பிள்ளைகள் எப்படி ஓடி, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது
மிகுந்த கவனமான முறையில் சொல்லிக் கொடுக்கப் படும்.

அதை விட டிஸ்கோ, தியேட்டர்... போன்ற பலர் நடமாடும் இடங்களிலும் இப்பயிற்சி அடிக்கடி நடக்கும். டிஸ்கோ நிலையத்தின் பாதுகாப்புத்தன்மை, அதாவது தீ என்று வரும் போது மக்கள் தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளனவா என ஆராயப் படும். அவசரகால வெளிச் செல் பாதைகள் உண்மையிலேயே, ஆபத்தான நேரங்களில் கும்பலாக ஓடும் மக்கள், வெளிச்செல்வதற்கு ஏற்ற வகையில் சரியாக அமைக்கப் பட்டுள்ளனவா என அடிக்கடி ஆராயப் படும்.

கடந்த வருடம் ஒரு டிஸ்கோ நிலையத்தில் அவசரகால வெளிச் செல் பாதையின் கதவு ஒன்று டிஸ்கோ நேரம் திறக்கப் படாமல் இருந்ததற்காக அந்த நிலையம் கோர்ட் வரை செல்ல வேண்டியிருந்தது.

கடந்த வருடம் அல்லது இவ்வருட ஆரம்பம் என நினைக்கிறேன். ஸ்பெயினில் ஒரு டிஸ்கோ தீப்பற்றி எரிந்ததில் பலர் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். அதன் பின்னான ஆராய்சியில் அங்கு சரியான அவசரகால வெளிச்செல் பாதைகள் அமைக்கப் படவில்லை என்பது கண்டு பிடிக்கப் பட்டது.

இப்படியான அநாராப்பான சம்பவங்கள் யேர்மனியில் மிகமிகக் குறைவு.
சட்டம், ஒழுங்கு, கல்வி... போன்றதான விடயங்களில் யேர்மனி மிகக் கவனமாகவே இருக்கிறது.

Thursday, October 28, 2004

நலந்தானா...? நலந்தானா...? உடலும் உள்ளமும் நலந்தானா...?


இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளே இனம் புரியாதவொரு சந்தோசமும் கூடவே மெல்லிய சோகமும் இழைந்தோடும்.காரணம் என்னுடைய அப்பா.

என்னுடைய அப்பாவுக்கு இந்த நாதஸ்வரம், தவில் எல்லாம் நிறையவே பிடிக்கும். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலும் ஊரில் ஏதாவதொரு கோயிலிலே மேளக்கச்சேரியோ, நாதஸ்வரமோ நடைபெறப் போகிறதென்று தெரிந்தால் உடனேயே விடுப்பெடுத்துக் கொண்டு வந்து விடுவார்.

வந்து எங்களையும் அழைத்துக் கொண்டு யோய், நாதஸ்வரம், தவில்... என்பவற்றை ஆழ்ந்து ரசிப்பார்.

அந்த வகையில் தில்லானாமோகனாம்பாள் திரைப்படமும் அப்பாவை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முதல்நாள் குடும்பமாய் போய்ப் பார்த்து வந்தோம். நாதஸ்வரத்தில் அப்பாவுக்கு இருந்த மோகத்தால் இரண்டாவது நாளும் என்னையும் அழைத்துக் கொண்டு போய் படத்தை ரசித்தார். நான் அந்த நேரத்தில் பரதக்கலையைக் கற்றுக் கொண்டிருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்தப் பாடல் காட்சி மிகவும் பிடித்தது.

இப்பாடல் காட்சியில் காயம்பட்ட கையிலே கட்டுப் போட்ட படி சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசிக்க, பத்மினியின் நடனம் நடைபெற்றது. ஓருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில், அவர்கள் சந்திக்கத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில்தான் மேடையில் அவர்களது கலைச் சந்திப்பு.

பத்மினியின் நடனமும், சிவாஜியின் நாதஸ்வரமும், சுசிலாவின் குரலும் சேர்ந்து மிகவும் அருமையாக இருந்தது காட்சி. கூடவே ஏ.வி.எம் ராஜன், ஏ.கருணாநிதி, கே.ஏ.தங்கவேல் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தன.
எப்போதுமே, சிவாஜியின் நடிப்பு அதீதம் என்பது போன்றதான கருத்துக்கள் பலரிடையே இருந்தன. ஆனால் அந்த வயதில், அந்த நேரத்தில் எனக்கு அப்படியெதுவுமே தோன்றவில்லை. பாடற்காட்சி மிகமிக அருமையாக இருந்தது. அதைவிட பாடல் தொடங்க முன் ஒலிக்கும் நாதஸ்வரமும், தவிலும் மிகுந்த சந்தோசமான உணர்வைத் தரக் கூடியனவாக இருந்தன. அப்போது மட்டுமல்ல இப்போது கேட்டாலும் அந்த சந்தோச உணர்வு மனதை நிறைத்துக் கொள்ளும்.

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா...?
என்று பாடும் போதே பாடல் வரிகள் உள்ளார்ந்த அன்புடன் நலம் விசாரிக்கும் உணர்வைத் தருகின்றன. ஓப்புக்கு வெறுமனே நலந்தானா என்று கேட்காமல் உடலும் உள்ளமும் நலந்தானா என்று கேட்பது மனதுள் உள்ள ஆழ்ந்த பிரியத்தைக் காட்டுவது போலான பிரமையை ஏற்படுத்தி எம்முள் இன்னொரு விதமான சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்...

என்ற வரிகளில் அணி என்னும் அழகு சேர்க்கப் பட்டதுடன், சிவாஜி புண் பட்டதால் அவர் மேல் காதல் கொண்ட பத்மினியின் மனம் படும் பாடு, மிகச் சிக்கனமான வார்த்தைகளால் அழகாகச் சொல்லப் பட்டுள்ளது.

மொத்தத்தில் பாடலும் காட்சியும் மிகவும் அருமை. சுசீலாவின் இப்பாடலை இத்தனை வருடங்கள் கழித்தும், எந்த நேரத்தில் கேட்டாலும், எனக்குள் ஒரு வித சந்தோசம் எட்டிப் பார்க்கும். கூடவே மெல்லிய சோகமும். இப்படத்தை என்னுடன் சேர்ந்து ரசித்துப் பார்த்த அப்பா தற்சமயம் என்னோடு இல்லை. ஆனாலும் அப்பாவுடனான நினைவுகள் இப்பாடலின் போதும் மீட்டப் பட்டு இனிமை சோகம் இரண்டையும் தரத் தவறுவதில்லை.

சந்திரவதனா
யேர்மனி

Thursday, October 21, 2004

குற்றம் பிடிப்பதற்கென்றே சிலர்

எமக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களின் புனிதத் தன்மை பற்றியும், அவர்களின் மகோன்னதமான செயல்கள் பற்றியும் நாங்கள் மனதுக்குள் எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று வெக்ரோன் தொலைக்காட்சியில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.

இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அத்தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒரு தமிழ் ஆசிரியர் மிகவும் விளக்கமான முறையில் தெளிவாக Maths சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேட்கவே ஆசையாக இருந்தது. வர்கங்களும்.. அடுக்குகள் வரும் போது அவைகளைத் தீர்க்கும் முறையும் என்று.. மிக மிக அருமையான தெளிவான சொல்லிக் கொடுப்பு அது.

இலண்டனில் வாழும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, ஆங்கிலத்தில் கல்வி கற்று விட்டு வரும் குழந்தைகளின், ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாத பெற்றோருக்கும் இது எவ்வளவு உதவியான விடயம் என நான் எனக்குள்ளே மகிழ்ந்து கொண்டு அப்பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்கள் கூட பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடங்களில் உதவி செய்யும் போது சற்றுத் திண்டாடுவதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்க திடீரென இன்னொரு தமிழர் வானலையில் தொலைபேசி அழைப்பில் வந்து "எனது மகன் NCG படிக்கிறான். நீங்கள் இப்படி மூன்றாம் வகுப்பு நாலாம் வகுப்புப் பிள்ளையளின்ரை கணக்கைச் சொல்லிக் கொண்டிருந்தால்... என்ற தொனியில் குற்றம் பிடித்தார்.

என்ன மனிதர்கள் இவர்கள் என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றியது.
அந்தத் தொலைக்காட்சி இவர்களுக்கு இலவசம். அதில் வரும் கணிதக் கல்வியும் இவர்களுக்கு இலவசம். அந்த ஆசிரியர் கற்பித்தது மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்புக் கணக்கல்ல. அவை மேல் வகுப்புக் கணக்குகள். அதையும் அவர் கற்பித்த விதம் உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

அப்படியிருக்க...?

உண்மையிலேயே அவருக்கு தனது மகனின் NCG வகுப்புக் கணக்கில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால், அதை அங்கு கேள்வியாகக் கேட்டிருக்கலாம். அதை விடுத்து குற்றப் பிடிப்பதற்கென்றே வந்தாரோ? இதற்கென்றே சிலரோ..?

சந்திரவதனா
யேர்மனி
21.10.2004

Wednesday, October 20, 2004

விருந்தாளிகள்

புலம்(பல்)

தொலைபேசி கிணுகிணுக்கிறது.

´ஆரது இந்த நேரம்? ஞாயிறும் அதுவுமா? நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன்.´
முணுமுணுத்தபடி தயங்கிய மனதுடன்தான் பல்கணியிலிருந்து ஓடி வந்து செண்பகக்கா தொலைபேசியை எடுத்தா.

"வணக்கம் அக்கா! அண்ணை நிற்கிறாரோ?"

இல்லை. அவர் வெளியிலை போட்டார். நீங்கள்...?"

"நான் அக்கா ரவி. அவரோடை முந்தி லாகரிலை இருந்தனான். அவருக்கு என்னைத் தெரியும்."

"எந்த லாகரிலை...?"

"அது வந்து... வங்கன் லாகர்.... தெரியுமோ அக்கா?"

´ம்.. இந்த மனுசன் சொன்னதுதான். நான் வரமுந்தி ஏதோ ஒரு.. லாகரிலை இருந்ததெண்டு. அது எந்தக் காலம்..! இப்ப அதையேன் இவன் புதுப்பிக்கிறான்..! இதைச் சாட்டிக் கொண்டு இப்ப ஏதும் கலியாணவீடு, சாமத்தியவீடு எண்டு செலவு வைக்கப் பண்ணப் போறானோ.. என்னவோ...?´

"எப்ப 1985 இலை ஒண்டா இருந்தனிங்களோ..? "

"ஓமக்கா. பியர்கேஸ் ரவி எண்டு சொல்லியிருப்பார்."

"அட நீங்கள்தான் சோசல் காசிலை பியர் வாங்கி வைச்சிட்டு 1 மார்க்குக்கு வித்த ஆளோ..? இப்ப விளங்குது."

"ஹி..ஹி...ஹி.. எல்லாம் அப்பச் சொல்லியிருக்கிறார். "

"அது சரி இப்ப என்ன விசயமா அடிச்சனிங்கள்..? என்னேம் விசேசமோ..?"

"நான் சுவிசுக்குப் போட்டு வாற வழியிலை அண்ணையையும் ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான்."

´என்னடா.. இது? 19வருசம் கழிச்சு அண்ணையின்ரை நினைவு இவனுக்கு வந்திருக்கு. இவனைக் காணேல்லையெண்டுதான் அண்ணை அழுது கொண்டிருக்கிறாராக்கும்.´

" என்னக்கா சத்தத்தைக் காணேல்லை. கண்டு கனகாலமாப் போச்சு. அதுதான் வந்தனாங்கள்."

"அதென்ன.. வந்த.. னாங்கள். கன ஆக்களோ..!"
செண்பகக்காவுக்கு சமையல் சாப்பாடு என்று நினைவில் வந்து பயமுறுத்தியது. எப்படியாவது வெட்டி விட்டிடோணும் என்று நினைத்துக் கொண்டா.

"அவர் தம்பி வீட்டிலை இல்லை. வெளியிலை போட்டார். நீங்கள் பிறகொரு நாளைக்கு வாங்கோவன்."

"பிறகெப்ப அக்கா வாறது. இவ்வளவு தூரம் வந்திட்டம்?"

´விடமாட்டான் போலையிருக்கு.´

"எவ்வளவு தூரம் வந்திருக்கிறியள்..? ஆரார் வந்திருக்கிறியள்?"

"என்னோடை இன்னும் நாலுபேர். இங்கை உங்கடை இடத்திலைதான் ஒரு பெற்றொல் ஸ்டேசனிலை நிற்கிறம்."

´அடப்பாவிகளா..?வெட்டவே ஏலாதோ..?´

"சரியப்ப வாங்கோவன்"

"அங்காலை வர வழி தெரியேல்லையக்கா. அதுதான்..!"

´தெரிஞ்சிருந்தால் வீட்டு வாசலிலையே வந்து பெல் அடிச்சிருப்பாங்கள் போலை இருக்கு.´

"உப்பிடியே நேரே வந்து இரண்டாவது திருப்பத்திலை இடது பக்கம் திரும்பினிங்கள் எண்டால் எங்கடை றோட்டுத்தான். 3ம் நம்பர் வீடு."

செண்பகக்கா அவசரமாக ரசேந்திரண்ணையின்ரை தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க.."ஆரது..? நானில்லாத நேரம் வீட்டை வரச்சொன்னனியோ..?" எண்டு ஒரு தரம் சினந்து.."ஓமப்பா அவன் என்னோடை லாகரிலை இருந்தவன்தான் வாறன்.. நான் உடனை வாறன்" என்று அவர் அமைதியாக..அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து பெல் அடிக்க சரியாக இருந்தது.

செண்பகக்காவுக்குப் பயங்கர எரிச்சல். அழையா விருந்தாளிகளை அப்போது அவ துளியும் எதிர்பார்க்கவில்லை. உடுப்புக்களை விரிச்சுப் போட்டு வந்து ஆறுதலாக இருக்க வேண்டுமென்றுதான் மனசுக்குள்ளை உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தவ. எதையும் வெளியில் காட்டாமல் சிரிச்சுக் கொண்டு"வாங்கோ. வாங்கோ" என்று வரவேற்றா.

"இருங்கோ. அவர் வெள்ளெனவே வெளியிலை போட்டார். இப்ப வந்திடுவார். என்ன குடிக்கிறிங்கள்? தேத்தண்ணி போடட்டே..?"

"வேண்டாம் வேண்டாம். குளிரா ஏதாவது குடிக்கத் தாங்கோ."

செண்பகக்கா குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து தோடம்பழ யூஸைக் கொண்டு வந்து வைத்து.. கிளாசுகளையும் கொண்டு வந்து விட..
"கோலா இல்லையோக்கா..? " பியர்கேஸ் கேட்க செண்பகக்கா கீழே கெலருக்குள் சென்று கோலா எடுத்துக் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தா.

இப்ப என்ன தேவைக்கு வந்திருக்கினம் என்ற எரிச்சல் மனதுக்குள் இருந்தாலும், சும்மா ஒப்புக்கு சுகநலம் விசாரித்துக் கொண்டிருக்க ராசேந்திரத்தாரும் வந்து விட்டார். வாயெல்லாம் பல்லாய் வந்தவர்களோடு அளக்கவும் தொடங்கி விட்டார். பியர் குடிக்க ஒரு கொம்பனி கிடைத்து விட்டதிலான புழுகம் அவர் வார்த்தைகளில் துள்ளி விளையாடின.

"என்னப்பா பெடியளுக்கு ஏதும் சாப்பிடக் குடுமன். நாலைஞ்சு றோல்ஸ் செய்தீர் எண்டால் நல்லாயிருக்கும். " செண்பகக்கா வந்தவர்களுக்குத் தெரியாமல் அவரை ஒருதரம் முறைத்து விட்டுக் குசினிக்குள் நுழைந்தா.

"என்னடாப்பா சாப்பிட்டனிங்கள்? "

"இன்னும் ஒண்டுமில்லையண்ணை. காலைமை வெளிக்கிட்டனாங்கள். "

"சொல்லிப் போட்டு வந்திருந்தியள் எண்டால் செண்பகக்கா சமைச்செல்லோ வைச்சிருப்பா. "

"ஒரு surprise ஆ இருக்கட்டுமெண்டுதான்..."

´ம்... ம்... Surprise இல்லையெண்டுதான் இங்கை அழுதனாங்களாக்கும்.´

றோல்ஸ் முடிய.. இடியப்பம்.. கறி.. சொதி.. பிரட்டல்.. எல்லாம் முடித்து அவர்கள் சாப்பிட்டுப் போன பின்னும், வேலை முடியாது.. கழுவி, அடுக்கி, துடைச்சு குசினிக்கு வெளியில் வந்த போது ஞாயிறைக் காணவில்லை. பல்கணியில் அரைகுறையில் விடப்பட்ட விரிபடாத உடைகள் வெயிலில் முறுகி குளிரில் நனைந்து போயிருந்தன. விரித்த துணிகள் மீண்டும் குளிரத் தொடங்கியிருந்தன.

´இவங்கள் எங்கையாவது ஒரு ரெஸ்ரோறண்டிலை சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்தானே!´ செண்பகக்காவின் புலம்பல் யாருக்கும் கேட்கவில்லை. அது ராசேந்திரத்தாரின் குறட்டை சத்தத்துள் அமிழ்ந்து போனது.

சந்திரவதனா
யேர்மனி
10.9.2004

Monday, October 18, 2004

பெண்ணே...!


பழைய கவிதைகளில் இன்னுமொன்று

உனக்கு விடுதலை வேண்டும்
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்.
கலாச்சாரம் பண்பாடு என்ற
கட்டுத்தளைகளிடம்
நீயே உன் மனசை அடகு வைத்து
இல்லையில்லை
உனது அம்மா
அம்மம்மா
ஆச்சி......
அவர்களைப் போலவே
நீயும்..
விட்டு விலகவோ
தப்பி ஓடவோ
வழி தெரியாது
உன்னை அண்டியுள்ள எல்லோராலும்
இறுகப் பிணைக்கப் பட்டு
மனசு நெரிக்கப் பட்டு...
இறுகப் பற்றியிருக்கும்
சமூகச் சங்கிலியை
உடைத்தெறியத் தெரியாமல்
மனசில்
வலியும் உளைவுமாய்..
பெண்ணே...!
உனக்கு விடுதலை வேண்டும்
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்.

-6.9.2002-

இலவு காத்த கிளியாக....!


(பழைய கவிதையொன்று)

பனியது பெய்யும்
அழகினைக் கண்டு
மனமது துள்ளும்

வெளியினில் சென்றால்
பனியது பெய்யும்
குளிரது அறைய
உடலது நடுங்கும்
உதிரமும் உறையும்

பனியது பெய்யும்
குளிரது அறைய
பனியது பூவாய்
மரங்களில் தெரியும்

அழகினை ரசிக்க
அவகாசமின்றி
பணமது தேடி
வேலைக்காய் கால்கள்
பனியினில் விரையும்

"குளிரிலும் பனியிலும்
பணமது தேடி..........!
இது என்ன வாழ்க்கை"
மனம் தினம் அலுக்கும்

மடியினில் சுமந்த
மகவுடன் குலாவ
மணியின்றி
மனமது துவழும்

வெயிலதன் வரவில்
பனியது ஓடும்
மரமது துளிர்க்க
மனமது மலரும்
மலர்களும் சிரிக்கும்

மாறும் மாறும் ......!
எல்லாம் மாறும்!
பணமது தேடும்
நிலையது மாறும்!
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்
ஒன்றாய் சேர்ந்து
உண்ண முடியும்
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்
குழந்தைகளுடனே
குலாவ முடியும்
குடும்பமாய் கூடி
களிக்க முடியும் ...!

முடியும் ...! முடியும்...!
பட்டியல் நீளும்!
...முடியும் ...! முடியும்..!
எல்லாம் முடியும்...!

இலவாய் நினைவுகள்
காய்த்துக் குலுங்க
கிளியாய் மனமும்
காத்து நிற்கும்.

சந்திரவதனா
யேர்மனி
1999

Thursday, October 14, 2004

என்னைக் கவர்ந்த அப்துல் ஹமீத்


அம்மா எங்களை கொஞ்ச நேரத்துக்குக் குழப்பக் கூடாது." இப்படி நாங்கள் சொன்னோமென்றால் வானலையில் எதனோடோ ஐக்கியமாகப் போகிறோம் என்பது அம்மாவுக்குத் தெரியும்.

ஓய்வு ஒழிச்சலின்றி எங்கள் வீட்டு வானொலி எட்டு வீடு எடுபடக் கத்திக் கொண்டே இருந்தாலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் சில நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு நாங்கள் வானொலியின் அருகிலேயே அமர்ந்து விடுவோம். அவைகளில் திரு.அப்துல் ஹமீத் அவர்கள் தயாரித்து வழங்கும் பாட்டுக்குப் பாட்டு, ஒரு நிமிடம், ஆம் இல்லை, தேனிசை மழை, ஏழு கேள்விகள்.. போன்ற நிகழ்ச்சிகளும் இவைகளோடு இசைக்கோலம் மீனவநண்பன்........... போன்ற தொடர்களும் முக்கிய இடத்தை வகித்தன.

அப்போதெல்லாம் பெரும்பாலான சனி ஞாயிறுகளில் நாங்கள் வானொலியை விட்டு அகலுவதேயில்லை. வானொலிக்குள் புகுந்து விடாத குறை மட்டுந்தான். மற்றும் படி வானொலியே தவம் என்று கிடப்போம். அம்மாவுக்கு நாங்கள் சொல்லும், கொஞ்ச நேரத்துக்கான அர்த்தமே அன்று வேறாக இருக்கும்.
அப்துல் ஹமீத் அவர்களின் நிகழ்ச்சிகளுடன்தான் நாங்கள் ஐக்கியமாகப் போகிறோம் என்பது அம்மாவுக்கும் தெரியுமென்பதால் அம்மாவும் நிகழ்ச்சிகள் முடியும் வரை எங்களைக் குழப்புவதில்லை.

சில அறிவிப்பாளர்களிடம் நேயர்களைக் கவரும் பிரத்தியேகத் தன்மை உண்டு. அந்த வரிசையில் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜா அவர்களும், அப்துல் ஹமீத் அவர்களும் குறிப்பிடத்தக்க தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்கள்.
நாங்கள் காலம் நேரம் பாராது இவர்களின் நிகழ்ச்சிகள் எதையும் தவற விடாது கேட்போம். அதனாலோ என்னவோ அந்தக் காலத்தில் இன்னும் முன்னோங்கி நின்ற அப்துல்ஹமீத் அவர்களும், அவரது குரலும் எம்மோடு மிகவும் ஐக்கியமாகி விட்டிருந்தன.

1981 இல் நான் கொழும்புக்குப் போயிருந்த சமயம் அப்துல்ஹமீத் அவர்களின் பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியொன்று சரஸ்வதி மண்டபத்தில் நடப்பதறிந்து அதை நேரே பார்க்கும் ஆவலில் சரஸ்வதி மண்டபத்துக்குச் சென்றிருந்தேன். மிகவும் லாவகமாக அப்துல் ஹமீத் அவர்கள் மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்.

நூற்றுக்கணக்கான அவரது அபிமான ரசிகர்களின் மத்தியில் அமர்ந்திருந்த என்னை அவர் அறிந்திருக்க மாட்டார். ஆனால் நான் அவரது லாவகமான, அழகிய அறிவிப்பில் லயித்திருந்தேன்.

நிகழ்ச்சி முடியும் தறுவாயில்தான் எதிர் பாராத ஒரு விடயத்தை அறிவித்தார்கள்.
அது ரம்ளான் நேரம். அப்துல் ஹமீத் அவர்கள் அன்று நோன்பில் இருந்தார்.

கேட்டதுமே மனதுக்கு மிகவும் கஸ்டமாகப் போய் விட்டது. நோன்பின் போது எச்சிலைக் கூட விழுங்கக் கூடாது என்பது இஸ்லாம் விதிமுறை. அப்படியிருக்க நிகழ்ச்சி நன்றாக நடைபெற வேண்டுமென்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தன் கஸ்டத்தையும் பொருட்படுத்தாது, பார்வையாளருக்கும் தன் களைப்பையோ, இயலாமையையோ தெரிய விடாது அத்தனை அழகாக நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார். அவரது அந்த - எடுத்துக் கொண்ட விடயத்தைத் தன்னதாக நினைத்து செவ்வனே நடாத்தி முடிக்கும் - தன்மை நிறைந்த, கலையோடு கூடிய கடமையுணர்வு என்னை வியக்க வைத்தது. அதன் பின் அப்துல் ஹமீத் அவர்கள் எனக்குள்ளே இன்னும் சற்று உயர்ந்திருந்தார்.

புலம் பெயர்ந்த பின் நீண்ட காலங்களாக அவரின் குரலைக் கேட்கவோ அவரது அழகிய லாவகமான அறிவிப்பில் லயிக்கவோ எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின் 26.9.1999 அன்று அவர் ஐபிசிக்கு வருகை தந்து சுமதி சுரேசனும், கணேஸ் தேவராஜாவும் இணைந்து தயாரித்து வழங்கிய காபை;பரிதி நிகழ்ச்சியினூடு குரல் தரிசனம் தந்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதை விட ஆச்சரியமான விடயம் என்னவென்றால் ஈழத்துப் பாடல்களில் இயற்கையின் ஒவ்வொரு அசைவும் கண்ணுக்கு மட்டும் அழகைத் தராமல், அதனால் எழும் ஓசைகள் சுதியும், லயமும் கலந்த இனிய இசையாகி மனங்களை எப்படி மகிழ்விக்கின்றது என்பதைச் சொல்லும் - இசையின் மழையில் நனைந்திடும் நேரம் இதயங்கள் யாவும் இணைந்தொன்று சேரும்... என்ற பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பேன். எனக்குத் தெரிந்த வரையில் இப்பாடலுக்கு பயாஸ், இரட்ணம் இருவரும் இணைந்து இசையமைக்கப் பொன் சுபாஸ் சந்திரன் அவர்கள் தனது அருமையான குரலைக் கொடுத்திருந்தார்.

பாஷை, நிறம், மதம், சாதி, உயர்வு, தாழ்வு.. என்று எல்லாமே மண்டியிட்டு அமர்ந்து விட, எந்த பேதமுமின்றி மனங்களை இணைக்கும் இப்பாடலை எழுதிய இறைதாசன் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. பாடல் வரிகளில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களை மட்டும் அடிக்கடி எண்ணிப் பார்த்திருக்கிறேன்.

இது விடயத்தில் மிகவும் தன்னடக்கமாக இருந்த இறைதாசன் என்ற கவிஞர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் எனது அபிமான அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்ஹமீத்தான் என்பதை திரு.எஸ்.கே.ராஜென் அவர்கள் ஐபிசியின் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்திய போது இப்படியொரு திறமையும் அவரிடம் உண்டா என நினைந்து உண்மையிலேயே நான் வியந்து போனேன்.

சந்திரவதனா
யேர்மனி
22.7.2004

பிரசுரம் - கலையமுதம் (31.7.2004)
(அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டுவிழா மலர்)

Wednesday, October 13, 2004

ஒரு பேப்பர் - ஒரு பார்வை


ஒரு பேப்பரின் எட்டாவது வெளியீடு என் கரம் கிட்டியது. என்னதான் இணையத்தளம் வழியே கதைகள், கவிதைகள், கட்டுரைகள், செய்திகள்.., என்று எழுத்துக்கள் குவிந்திருந்தாலும், ஒரு பேப்பரையோ, ஒரு சஞ்சிகையையோ அல்லது ஒரு புத்தகத்தையோ கையில் எடுத்துக் கொண்டு போய் பிடித்தமான ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதில் உள்ள சந்தோசமே தனிதான்.

வழமையாக குழுந்தைகளின் பார்வையோடும், சிரிப்போடும் செல்லம் கொஞ்சும் பேப்பரின் முன் பக்கம் இம்முறை புளியங்குளம் பேரூந்தோடு வந்தது. மழலைகளைப் பார்க்க யாருக்கோ கசக்குதாம். கடிதம் போட்டிருக்கிறார்கள். ஆசிரியரின் குசும்பு எனக்கு முதலில் விளங்கவில்லை. பேப்பரைப் பார்த்ததும் ஊருக்குப் போற ஆசையில் ஏறி இருந்திட்டன். அதுவும் ஓசியாம்.

ஓசிதானே என்று ஏனோதானோவாக இல்லாமல் பல்சுவை அம்சங்களோடு உள்ளே அமர்க்களமாகத்தான் இருக்கிறது.

"அடியேய் விட்டன்ரா ஒரு அறை" என்றதும்தான் கொஞ்சம் பயந்திட்டன். ஏன்..? இந்த ஆம்பிளையளுக்கு அறையிறதை விட்டால் வேறையொன்றும் தெரியாதோ என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் நல்ல விடயத்தைத்தான் போட்டிருக்கு. வீட்டு வன்முறைகளால் பாதிக்கப் படும் பெண்களோ, ஆண்களோ எவராயினும் தம்மைக் காத்துக் கொள்ள, நாட வேண்டிய இடம் வலம் பற்றி விரிவாக சுந்தரி எழுதியுள்ளார்.

அத்தோடு நாட்டு நடப்பு, வீட்டு நடப்பு, உலகநடப்பு.. என்று பல விடயங்கள் ஆங்கிலத்திலும்;, தமிழிலும் என்று.. வித்தியாசமாகத்தான் இருக்கிறது. என்றாலும் எல்லாளன் தனது மூக்கை கூடுதலாக நீட்டுகிறார் போல் இருக்கிறது. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா? எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இப்போதைய இளசுகளுடன் மல்லுக் கட்ட வேண்டுமா..?

இந்த ரெலிபோன் கார்ட் விடயத்தை நானும் பலபேருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் அவர்கள் அதை வாங்கி விட்டு "நேற்றுக் கதைச்சுப் போட்டு வைக்கக்கை 200 நிமிசம் இருந்தது. இண்டைக்கு 120 எண்டு சொல்லுது." என்று முணுமுணுப்பார்களே தவிர கார்ட்டை வாங்குவதை மட்டும் நிறுத்த மாட்டார்கள். ஒரு வேளை ஓரு பேப்பரை வாசித்தாலாவது கார்ட்டுக்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அன்பு கிடைக்குமா அன்பு? சிறுகதை கணினியின் நிலாச்சாரலில் இருந்ததுதான். வாசிக்க வேண்டும் என்று பலதடவைகள் நினைத்தேன். ஆனாலும் கணினிக்கு முன் இருக்கும் நேரங்களில் அதை வாசிக்க நேரம் போதாது போய் விட்டது. அதை கணினியின் முன் இருக்கும் போதான கதிர்வீச்சுக்களின் தொல்லைகள் எதுவும் இல்லாது, வசதியான ஒரு இடத்தில் ஒய்யாரமாக இருந்து வாசிக்க முடிந்த போது சந்தோசமாக இருந்தது. கதையை வாசித்த பின் இப்படியான குழுந்தைகளை எடுத்து எங்கள் அன்பைக் கொடுத்தால் என்ன என்ற ஒரு ஆசையும் எழுந்தது.

இன்னும் சினிமா.. அறுவை.. என்று நிறைய விடயங்கள். இருந்தாலும் 32 பக்கங்களையும் ஒரே மூச்சில் வாசித்து விட்டேன்.

"இதேன் முன் பக்கத்திலை விளம்பரம்?" என்று எனது மகன் குறை பிடித்தான்.
"அது ஓசியடா. விளம்பரம் இல்லையெண்டால் பேப்பரும் இல்லை." என்றேன்.

"அதுக்காண்டி முன் பக்கத்திலையோ..? போதாததுக்கு ஒரு பேப்பர் என்ற தலையங்கத்துக்குப் பக்கத்திலை பேப்பர் எறியிற வாளியையும் வைக்கோணுமே..? எங்கையாவது ஒரு மூலையிலை வைக்கலாம்தானே!" என்றான்.

இப்படித்தான் நாங்கள். தானமாகக் கிடைக்கிற மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கிற பழக்கம் எங்களை விட்டுப் போறது பெரிய கஷ்டமான விடயந்தான்.
ஓசி என்ற பெயரில் சமூகத்தைக் கெடுக்கும் விடயங்கள் ஏதாவது பரப்புரை செய்யப் படும் பட்சத்தில் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டியது அவசியந்தான். ஒரு பேப்பர் அப்படியல்ல. சுவையோடு சுவாரஸ்யமும் கலந்து நல்ல பேப்பராகத்தான் வருகிறது. பாராட்டத்தான் வேண்டும்.

பேரூந்தில் ஏறிய எங்களை ஏமாற்றாமல் கிளிநொச்சி மழலைகள் பூங்காவரை ஒரு பேப்பர் எங்களை அழைத்துச் சென்றிருக்கிறது.

சந்திரவதனா
யேர்மனி
13.10.2004

Saturday, October 09, 2004

கலைஞர் அஜீவன் வீட்டில் தீ

திரைப்படத்துறையில் ஆர்வமுள்ளவரும், சுவிசை வாழ்விடமாகக் கொண்டவருமான நண்பர் அஜீவனின் வீட்டில் நேற்றுத் தீ தனது நாக்குகளை நீட்டியிருக்கிறது. அவர் உயிராபத்து ஏற்படாமல் தப்பியது மட்டுமல்லாது, தான் வாழ்ந்த வீட்டில் இருந்த மற்றைய உயிர்களையும் காப்பாற்றுவதில் அந்த நிலையிலும் பெரு முயற்சி எடுத்திருக்கிறார்.

இழப்புகள் எமக்குப் புதிதல்ல. இருந்தாலும் ஒரு கலைஞனின் வீட்டுக்குள் சாம்பலாகிப் போனவை விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த இழப்புக்களை யாராலும் நிவர்த்தி செய்யவும் முடியாது. ஆனாலும் அஜீவன் என்ற கலைஞன் எம்மோடு தொடர்ந்தும் வருவார் என்ற செய்தி மிகுந்த நிம்மதியைத் தருகிறது.

அஜீவன் தீ விபத்திலிருந்து தப்பிய பின் எழுதியவைகளை யாழ்கருத்துக்களத்தில் வாசித்த போது என் கண்களிலிருந்து வழிந்தது அவர் உயிர் தப்பியதினாலான நெகிழ்ச்சியினாலான கண்ணீரா..? அல்லது அவருக்கு உதவிய அந்த நட்பு உள்ளங்கள் ஏற்படுத்திய நெகிழ்ச்சியினாலான கண்ணீரா..? என்பது எனக்குத் தெரியவில்லை.

எதுவாயினும் இந்த அதிர்ச்சியிலிருந்து அஜீவன் மீண்டு வரவேண்டும். அவரது படைப்புக்கள் தொடர வேண்டும். என மனதார விரும்புகிறேன்.

அஜீவன் எழுதியது

நான் நிலை தளர்ந்த போது என் பால் அன்பு கொண்டு எழுதிய தொலைபேசி வழி பேசிய தொடர்பு கொண்ட என்னை விழ விடாது அரவனைத்து நிற்கும் எஅயலவர்களுக்கும் நண்பர்களுக்கும் சுவிசின் போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் சுவிசின் அனைத்து ஊடகங்களுக்கும் சுவிசின் கலைத் துறையினருக்கும் இவ்வழி என் இதயத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வீட்டில் ஏற்பட்ட விபத்து பற்றி சில வரிகளில் உங்களுக்கு அறித் தருகிறேன்.

அதிகாலை 5 மணியளிவில் படுக்கையில் இருந்த என்னால் மூச்செடுக்க முடியாமல் போவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்த போது எங்கோ ஏதோ எரியும் மணம் தெரிந்தது.

நான் எங்கோ வெளியில் என்று எண்ணிய போதிலும் லைட்டை போட்டு விட்டு படுக்கை அறையிலிருந்து எழுந்து ஒளிப்பதிவு வேலைகளைச் செய்யும் முன் அறைப் பக்கம் போக முயன்ற போது அப்பக்கம் புகை நிறைந்திருப்பதை உணர்ந்தேன்.

முன்னால் என்னால் நகர முடியவில்லை. எனக்கு மூச்சுத் திணரலை உருவாக்குவது போன்ற தன்னைமையை உருவாக்கியது.

உடனே படுக்கை அறையை நோக்கி வந்த நான் வீட்டுத் தொலை பேசி வழி தீயணைப்பு படையினருக்கு தகவல் சொல்ல முயன்றால் அது வேலை செய்யவில்லை.

என் படுக்கை அறையிலிருந்த கைத் தொலை பேசி வழி 118 தீயணைப்பு படையினருக்கு டயல் செய்தேன். அவர்கள் பேசுவது எனக்கு கேட்டது என்னால் பேச முடியவில்லை. மூச்சுத் திணறியது. கதவை நோக்கி ஓடினேன். கதவை அடயாளம் காண முடியவில்லை. உடனே யன்னல் மூலம் வெளியில் பாய்ந்தேன்.

போலீசாரும் தீயணைப்பு படையினரும் காப்புறுதி நிறுவனமும் அம்புலன்சுகள் வைத்தியா தாதிகள் உற்றார்கள் நண்பர்கள் உதவியுடன் தப்பித்திருப்பதில் வலுவோடு நிற்கிறேன்.

இன்றைய சுவிசின் தொலைக் காட்சியயில் என் படைப்புகள் தொடர எனக்கு உதவுங்கள்.
இவன் எங்களோடு வாழும் ஒரு கலைஞன் என்று செய்தியறிக்கையில் வேண்டு கொள் விடுத்திருப்பது கண்டு பெச முடியாமல் நிற்கிறேன்.

நன்றிகள்
அஜீவன்

2

எனது வீட்டில் நடந்த தீ விபத்தில் நான் இரவு படுக்கைக் போகும் போது உடுத்திருந்த உடைகளான டீசேட்டும் உள்ளாடை மற்றும் பிசாமா தவிர தீயணைப்பு படையை தொடர்பு கொள்ள எடுத்துக் கொண்டு யன்னலால் பாய்ந்த hand phone தவிர எனக்கு வேறு எதையும் எடுக்க முடியவில்லை.

வெளியே பாய்ந்ததும் தீயணைப்புப் படையினருக்கு தெரிவித்தேன்.

மேல் மாடியில் இருந்தவர்களுக்கு அழைப்பு மணி மணியை அடித்து எழுப்பி வீடுகளை விட்டு வெளியேறுங்கள் என்று கத்தினேன்.

விழித்து கொண்டவர்கள் உதவி உதவி என்று கத்தத் தொடங்கினார்கள்.

பாதையில் வந்து கொண்டிருந்த அனைத்து வாகனங்களும் நின்றன.

வாகனத்தை விட்ட இறங்கியவர்கள் தீயணைப்பு படைக்கும் போலீசுக்கும் போண் பண்ணி உடன் வாருங்கள் என்று கத்துவதிலும் மேலேயுள்ளவர்களை மறு புறமாக வெளியேறுங்கள் கதவை மூடுங்கள் என்று ஒலியெழுப்புவதிலும் மும்முரமாக ஈடுபட்டார்கள்.

என் வீட்டிலிருந்து தீ அடுத்த வீட்டுக்கு பரவியது.

தொடர்பு கொண்டு 10 நிமிடங்களில் முதலாவது தீயணைப்பு சிறிய முதல் வாகனம் வந்து பாதையில் நின்ற வாகனங்களை அப்புறப் படுத்தி கதுவுகளை மூடுங்கள் படி வழிகளால் இறங்குங்கள் என்று அறிவிக்கத் தொடங்கினார்கள்.

ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குத்தார். குதித்தவர் எழுந்த போது தலையில் அடிபட்டு இரத்தம் வடிந்தது.
நான் ஓடிப் போய் தூக்கிய போது என் காதலியை காப்பாற்று என்று கத்தினான் .

காரில் வந்த ஒருவர் தற்காலிக தீயணைப்பு கருவிகளான சிலின்டர்களை எடுத்துக் கொண்டு கண்ணாடிக் கதவுகளை உடைத்து உள்ளே நுமையும் போது தீயணைப்பு படையும் போலீசும் அம்புலன்சுகளும் பாதையில் நிறைந்து விட்டன.

இரு பக்கமுமிருந்து வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

அனைவரும் தனது பணிகளில் உக்கிரமானார்கள்.

போலீசாரும் தீயணைப்பு படையின் ஒரு பிரிவும் வீட்டுக் கதவுகளை தட்டி திறக்காத கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளிட்டார்கள்.

வெளியேற முடியாதவர்களை தூக்கிக் கொண்டு இறங்கினார்கள்.

இது ஒருபுறம் இருக்க
மறுபுறம்
தீயணைப்பு படையினர் எனது வீட்டின் முன் புறமும் பின்புறமுமாக தீயை அணைப்பதில் மும்முரமானார்கள்.

உள்ளே இருந்து வந்தவர்களை
வந்திருந்த 5 அம்புலன்சுகளும் முதலுதவிகளை செய்ய முற்பட்டது.

அதற்குள் தற்காலிக முதலுதவிக் கூடாரமொன்று அடிக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது.

சுவாசிக்க முடியாதவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு சில அம்புலன்சுகளில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

நான் இம் முயற்சிகளுக்கு உதவுவதிலும்
எவரது உயிருக்கும் ஆபத்து வரக் கூடாது என்பதையுமே கருத்தில் கொண்டு போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும்
உதவிக் கொண்டிருந்தேன்.

எவருக்கும் ஆபத்தில்லை என்ற நிலை வந்த பிறகே என்னால் கீழே இருக்க முடிந்தது.

அதுவரை என்னை நான் உணராமல் இருந்திருக்கிறேன்.

என் காலில்
ஒரு செருப்புக் கூட இல்லாத நிலையை
நான் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன்.

சுமுகமான ஒரு நிலை உருவாகும் போது என் வீடு சாம்பலாகியது கூட எனக்குத் தெரியாது.

அனைத்துமே சாம்பலாகி விட்டது.

குளிரில் நடுங்கி உறைந்து போன எனக்கு
சுவிசைச் சேர்ந்த ஒருவர் தன் செருப்பை தந்ததும் ஒரு இளம் பெண் எனக்கு தனது யக்கட்டை போர்த்தி விட்டதும் கனவு போல் இருக்கிறது.

அவர்களை நான் பார்த்தது கூட இல்லை.
நான் அவர்கள் பொருட்களை கொடுக்க தேடுகிறேன்.
இறைவன் வந்து உதவுவது இப்படியான வடிவங்களிலா?

ஒரு சிலர் குடிப்பதற்கு தண்ணீரும் தேனீரும்
கொண்டு வந்து தந்தார்கள்.
என்னால் தண்ணியை மட்டுமே குடிக்க முடிந்தது.


ஊடகங்கள் நிறைந்து செய்தி சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

எமது வீட்டு பரிபாலன பெண்
எனது வீடுதான் தீயில் எரியத் தொடங்கியது என்று என்னை போலீசாருக்கு அறிமுகம் செய்தாள். அதுவரை
யாருடைய வீடு என்பது கூட அவர்களுக்கு தெரியாது.

உன்னிடம் பேசலாமா என போலீசாருக்கு பொறுப்பாக நின்ற நாடியா என்ற பெண் என்னிடம் கேட்ட போது நான் அவரோடு போலீசார் நின்ற இடத்தை நோக்கி நடந்தேன்.

ஒளிப்பதிவாளர்களும் , புகைப்படப்பிடிப்பாளர்களும் எம்மை சுற்றிக் கொண்ட போது என்னை தனது அங்கியால் அணைத்துக் கொண்டு அவர்களை
படம் பிடிக்காதவாறு தடுத்தாள்.

ஒரு ஒளிப்பதிவாளர் அவன் என் நண்பன் என்ற போது
இருக்கலாம் அவன் நிலையில் இது வேண்டாம். அவனை சுமுக நிலைக்குத் திரும்பும் வரை இருக்க விடுவதுதான் உங்கள் நட்புக்கு நீங்கள் காட்டும் நன்றிக் கடன் என்றாள்.

அவர்கள் முன்னேறாமல் நின்றார்கள்.

என்ன நடந்தது என்ற விபரத்தைக் கேட்டாள்.

விபரத்தை சொன்னேன்.

ஒருமுறை வைத்தியசாலைக்கு போய் உன் சுவாசத்தை பரிசோதித்து வரலாம் என்றாள்.

இல்லை எனக்கு பெரிதாய் ஒன்றுமில்லை என்றேன்.

அது உனது மனநிலை.

என்னுடன் வா என்று அம்புலன்சுக்குள் அழைத்துச் சென்று ஆக்சிசனை கொடுக்க வைத்து விட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விட்டாள்.

முக்கிய வைத்திசாலைகளின் அவசரப்பிரிவு நிறைந்து விட்டதால் பக்கத்தில் இருக்கும் வைத்தியசாலைக்கு நானும் இன்னும் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டோம்.

எமக்காகக் காத்திருந்த குழு எம்மை பரிசோதிக்கத் தொடங்கியது.

மற்ற இருவரது நிலையில் பாதிப்பு தெரிந்தது.

எனக்கு பெரிதாக பாதிப்பில்லை என்று சொன்ன வைத்தியர்
உங்கள் செயலால் எவருக்கும் உயிராபத்தில்லை என்றார்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

உனது பொருட்களை விட வீடுகளிலிருந்தவர்களை காப்பாற்ற முயன்றிருக்கிறாய் என்று அங்குள்ளவர்கள் போலீசாருக்கு சொல்லியிருக்கிறார்கள் என்று என் கைகளைப் பற்றிய போது என் கண்கள் குளமாயின.

உனக்கு ஒன்றுமில்லை சில மாத்திரைகளைத் தருகிறேன்.
இதை எடுங்கள் என்று தந்தார்.

உங்களை அழைத்துப் போக நண்பர்கள் வெளியில் நிற்கிறார்கள் வரச் சொல்லுகிறேன் என்றார்.

சுவிசில் உள்ள கறுப்பினத்து நண்பனொருவனும் வெள்ளைகார பெண்ணும் நுழைந்தார்கள்.

கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம் என்றார்கள்.

நான் நன்றி சொல்லிவிட்டு அவர்களோடு நடக்கும் போது உங்களுக்கு சிரம் இல்லையா என்றேன்.

இது கடமை என்றார்கள் புன் முகத்துடன்.

வீட்டுப் பகுதிக்கு வந்த போது போலீசாரும் தீயணைப்பு படையினரும் என்னை நோக்கி வந்தார்கள்.

வீட்டைப் பார்க்கலாம் வாங்கள் என்று அழைத்துச் சென்றனர்.

எல்லாம் சாம்பலாகியிருந்தது.
நான் வாயே திறக்கவில்லை.
போலீசின் தலைமை அதிகாரியான நாடியா என்னை அணைத்துக் கொண்டு சொன்னாள்
நீ உயிரோடு இருக்கிறாய்.
உன்னைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நீ எப்படிப் பட்டவன் என்று தெரிகிறது.
உனக்கு உதவ எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்றாள்.

வெளியே வந்தேன்.

ஒரு விடுதியில் தற்காலிகமாக தங்கலாம் என்றாள்.

பக்கத்தில் இருந்த அயலவர்கள் தேவையில்லை.
அஜீவன் , எங்கள் வீட்டில் இருக்கட்டும் என்றார்கள்.

நாடியா என் முகத்தைப் பார்த்தாள்.

நீ தனியாக விடுதியில் இருப்பது நல்லதாக எனக்குப்படவில்லை.
இவர்களில் யாரோடாவது இரு.
நானும் வந்து பார்க்கிறேன் என்றாள்.

நான் அமைதியானேன்.

ஒரு குடும்பம் எனக்கு மிக நெருக்கமானவர்கள்.
அவர்களோடு நிற்கிறேன் என்றேன்.

அடுத்தவர்கள் எனக்கு
வேறு உதவிகளைச் செய்வதாக சொன்னார்கள்:

இரவு நோயெல் உடைகள் மற்றும் தேவையான பொருட்கள் வாங்கி வந்து தந்து விட்டுப் போனான்.

இன்று (8.10.04)காலை காப்புறுதி நிறுவனமும் போலீசாரும் , தொலைக்காட்சி பகுதியினரும் வந்திருந்தார்கள்.

தீ டெக்னிக்கல் டிபெக்டால் ஏற்பட்டிருக்கிறது என்றார்கள்.

அத்தோடு எல்லாவற்றையும் தேடி விடலாம்
உன் படைப்புகளை எத்தனை கோடி கொடுத்தாலும் பெற முடியாது என்றார்கள்.

நாடியா (Police),
ஒரு நிறுவன உரிமையாளர் உன்னை இன்று மாலை சந்திப்பார். அவருக்கு உன் கைத்தொலைபேசி எண்ணைக் கொடுத்திருக்கிறேன் என்றார்.

மாலை என்னை சந்திக்க வந்த அந்த சுவிசின் நிறுவன உரிமையாளர்,
குடும்பத்துடன் என்னை வந்து சந்தித்தார்கள்.

என்னை அழைத்துச்
சென்று எனக்கு அளவான உடைகள் வாங்கித் தந்தார்கள்.

பின்னர் சாப்பிட ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்ற போது
என்னிடம் இன்று பெறப்பட்ட இன்டர்வியு தொலைக் காட்சியில்
அவர்களிடமிருந்த எனது குறும்படக் கிளிப்புகளுடன் போய்க் கொண்டிருந்தது.

என்னை அழைத்துச் சென்றவர்கள் உணவக உரிமையாளருக்கு என்னைப் பற்றிச் சொன்னார்கள்

ஒரு மாதம் சாப்பிட தான் ஒழுங்கு செய்வதாக உறுதிளித்தார்.

என்னை அழைத்துச் சென்ற பெரியவர் சொன்னார்.

நீ மறுபிறவி எடுத்திருக்கிறார்ய்.

உன்னைப் பற்றி நேற்றுத்தான் கேள்விப்பட்டேன்.

எவன் என்பதல்ல முக்கியம் .
எப்படிப் பட்டவன் என்பதே முக்கியம்.

உன்னைப் பற்றி சொல்பவர்கள் மூலம்
உன் நாட்டவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும் என்றார்.

நான் தற்போது இருக்கும் வீட்டுக்கு வரும் போது எனக்கு ஒரு புது வீடு தற்காலிகமாக கிடைக்க இருக்கிறது என்ற தகவல் வந்தது.

சிலர் பணமும்
சில பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

காப்புறுதி கிடைக்கும் வரையும் செலவுக்கு பணம் பெற போலீசார் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து கொஞ்சம் பணம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளதாக சொன்னார்கள்.

மனம் தளராமல் இருக்க இறைவனும் நண்பர்களும் இருக்கிறார்கள் .........

எனவே இன்னும் நிற்க முடிகிறது.

வேறு இடத்தில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் எழுத்து தவறுகள் ஏற்படலாம்.

புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.

உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் வாழ்கிறேன்.

என்னோடு தொடர் கொள்ள ஒரே ஒரு இலக்கம்:-

0041792091249

நன்றி -
யாழ் கருத்துக்களம்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite