Saturday, September 03, 2005
இரண்டு வருடங்கள் ஓடி விட்டன
திகதி, தேதி எது சரி?
இவைகள் தமிழ் சொற்கள்தானா?
Thursday, August 25, 2005
உள்வீட்டு வன்முறைகளால் வருடாந்தம்
7000 இந்தியப் பெண்கள் கொல்லப்படுகிறார்கள்
பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியாவில் புதிய சட்டம்
இந்தியப் பெண்கள் தமது குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க இந்திய நாடாளுமன்றம் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
பெண்கள் மீது அவதூறான வார்த்தைகளை கூறி துன்புறுத்தல், அடித்து துன்புறுத்துதல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகிய குற்றங்களைப் புரியும் குடும்பத்தினருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனையை இந்தச் சட்டம் வழங்குகிறது.
பெண்களிடம் அல்லது அவர்களது உறவினர்களிடன் சட்டவிரோதமாக வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்தில் பெண்கள் மீது வன்முறை பயன்படுத்தப்படல் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுவதாக மனித உரிமை இயக்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
சொந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் வருடாந்தம் சுமார் 7000 பெண்கள் வரதட்சினை பற்றிய தகறாறுகளால் கொலை செய்யப்படுவதாக அனைத்துலக அபய நிறுவனம் கூறுகிறது.
thagaval-bbctamil
Wednesday, August 24, 2005
புத்தகம் பேசுது இதழுக்கு பாமாவின் பேட்டி-3
புத்தகம் பேசுது இதழுக்கு பாமா அளித்த பேட்டி - 1
புத்தகம் பேசுது இதழுக்கு பாமா அளித்த பேட்டி - 2
பேட்டியின் இறுதிப் பகுதி
கருக்கு போலவே சங்கதியிலேயும் அதே மாதியான மொழிநடை வாழ்க்கைச் சூழலைக் கொண்டு வந்திக்கீங்களே?
இது வேணுமினே பண்ணதுதான் மொழிநடையில் கருக்கு அதுவா அமைஞ்சது. சங்கதி வேணுமின்னே பண்ணது. சங்கதி புத்தகமா வெளியிடணும்கிற திட்டத்தோடயே எழுதின நாவல் நான் சந்தித்த நான் பார்த்த நான் கேள்விப்பட்ட தலித் பெண்கள் பற்றி எழுதப்பட்டது. 2 நாவல்களிலேயும் மொழிநடையை மட்டும் தான் ஒன்னுன்னு சொல்லலாம்.கருக்கிலே இருக்கிற விசயங்கள் வேற சங்கதியிலே இருக்கிற விசயங்கள் வேற கருக்கிலே ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் நான் போய்கிட்டே இருப்பேன். என்னோட வாழ்க்கை நூலிழை மாதிரி போய்கிட்டே இருக்கும் அதைச் சுத்தி மற்ற கதாபாத்திரங்களை பின்னி இருப்பேன். ஆனா சங்கதி அப்படி இல்லை. அதிலே மூணு தலைமுறை வரும். குழந்தைப்பருவம,; அடலசண்ட் பருவம், தற்காலத்தில் நான் என்கிற மாதிரி இருக்கும்.
சங்கதி நாவலின் முன்னுரையில் இதனைப் படிக்கும் தலித்பெண்கள் வீறுகொண்டு எழுந்து வெற்றிநடைபோட்டு புதியதொரு சமுதாயம் உருவாக்கும் முன்னோடிகளாக புரட்சியைத் தொடங்கித் தொடர வேண்டும் என்ற ஆசையில் நம்பிக்கையில் எழுதியிருப்பதாக கூறியிருக்கிறீர்கள்;. உங்கள் ஆசை எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கு?
நான் புரட்சின்னு சொல்ல வந்தது. இயக்கரீதியான புரட்சி இல்லை பண்பாட்டுரீதியான புரட்சி. அப்படியான புரட்சி நடந்தது. நடந்துகிட்டிருக்கு. சங்கதியில் வர்ற கேரக்டர்களை பார்த்தீங்கன்னா அவங்க வாழ்க்கையிலே புரட்சி நடந்திருக்கு அவங்க விடுதலை பெற்ற பெண்மணிகளா அவங்க வாழ்க்கையிலே இருக்காங்க. அதுக்காக அவங்க சராசரி பெண்ணோட வாழ்க்கையிலேருந்து முற்றிலுமா வேறுபட்டாங்கன்னு சொல்ல வரலே. அன்றாடம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதிலேயும் அந்தப் பண்பாட்டுப் புரட்சியிலே ஒரு சுதந்திரமான ஜீவிதத்தை கண்டு பிடிக்கிறாங்க. திருமணம், குடும்பம் என்பது நம்மை தடைப்படுத்தக் கூடிய விசயம் என்பதை பல பெண்கள் புரிஞ்சிகிட்டு என்னை ஒரு மாடலா வைச்சுகிட்டு இருக்காங்க.
உங்கள் வன்மம் நாவலில் பள்ளர் பறையர்களுக்கிடையேயான பிரச்சனைகளை எழுதியிருக்கீங்க. தலித் ஒற்றுமை அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதை வலியுறுத்தி இருக்கீங்க தலித் ஒற்றுமையின் மூலமா மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்னு நம்புறீங்களா?
வன்மத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற முக்கிய விசயம் வேறு தலித் உட்பிரிவுகளுக்கும் சரியான புரிதல் இல்லாத இளைஞர்கள் வளர்ந்து வரும் தலைமுறை எவ்வாறு பாதிக்கப்படுகிறது. என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன் உட்பிரிவுகள் ஒற்றுமையோடு சேர்ந்து நிற்கும் போது அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்பதைச் சொல்கிறேன். வன்மம் பழங்கதை கிடையாது. சமகாலப்பிரச்சினை கண்ணாம் பட்டி என்கிற கிராமத்துக்குள்ளே மட்டும் அடங்கிப்போன விசயம் ஒரு வீட்டுக்குள்ளே ரெண்டு பேருக்கு இடையிலே நடக்கிற பிரச்சினை மாதிரி. என்னுடைய ஆதங்கம் என்னன்னா இந்தக் கலவரங்களாலே வளருகின்ற தலைமுறை ஒரு பகைமை உணர்வோடு வன்மத்தோடு வளர்ந்துகிட்டு வருது. இதனால் அவர்களை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை அழித்துக்கொண்டே வருகிறோமே என்பதைச் சொல்வது தான் வன்மம்.
தலித் இயக்கங்கள் இப்போது தான் வளர ஆரம்பிச்சிருக்கு அதுக்கு முன்னாடி தலித்துகளுக்காக போராடின பொதுவுடைமை இயக்கங்கள் திராவிட இயக்கங்கள் பற்றிய எந்த பதிவும் உங்கள் படைப்புகளிலே காணோமே?
பொதுவுடமை இயக்கம,; திராவிட இயக்கம் இரணடும் வண்மம் கதை நடந்த அந்த ஊரில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. போதுவுடமை இயக்கத்தில் தலித் மக்கள் அதிகமாக இருக்காங்க. பொதுவுடமை இயக்கங்கள் இப்போதான் சாதியைப்பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆனாலும் வர்க்கத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம் சாதியத்துக்கு கொடுக்கிறதில்லே. வர்க்கம் ஒழிந்தால் சாதி தானாக ஒழியும்கிறாங்க. அதில எனக்கு நம்பிக்கை இல்லே. என்னதான் வசதியிருந்தாலும் கோடீஸ்வரனாக இருந்தாலும் சாதிய முத்திரைப் போகல. சில பேரு நகர்புறங்களில் சாதிய உணர்வு இல்லைங்கிறாங்க. அப்படியெல்லாம் நிச்சயமா கெடையாது. நகர்புறத்துக்கும் வடிவங்கள்தான் மாறி இருக்கிறதே தவிர மற்றப்படி சாதிய அடையாளம் என்பது செத்து மணண்ணுக்குள்ளே போகிற வரைக்கும் இருக்கத்தான் செய்யுது. அதிலே எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லே. வர்க்;கரீதியாக விடுதலையாகிட்டீங்கன்னா யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. என்பது தான் உண்மை. ஆனால் வர்க்கப்ப் போராட்டத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு சாதி ஒழிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தாகணும் தலித் பெண்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டால் அனைவருக்குமே விடுதலை கிடைத்துவிடும்.
உங்க தலித் மொழியை மற்ற மொழிகளுக்கு எந்த அளவுக்கு நுட்பமா கொண்டு போக முடிஞ்சிருக்கு?
தமிழிலேருந்து தெலுங்குக்கும், மலையாளத்துக்கு பண்ணும் போது மொழிநடையை ஓரளவுக்கு மெய்ன்டன் பண்ணமுடியுது. ஆங்கிலம் என்று போகும் போது கொஞ்சம் அடிபடத்தான் செய்யுது. அதுக்காக மொழி பெயர்க்காமலும் இருக்க முடியாது. மோழிபெயர்ப்பின் மூலமாத்தான் தமிழ்நாட்டு தலித் பிரச்சனையை இந்திய அளவிலே சர்வதேச அளவிலே பேசமுடியுது.
லட்சியம்னு ஏதாவது வைச்சிருக்கீங்களா?
எழுதுவது எனக்கு தொழில் கிடையாது. இப்படியான பிரபலம் நான் எதிர்பார்க்காதது. அது பாதிக்காததாலே தான் இன்னமும் எழுதமுடியுது. நான் இங்கே ஒரு சாதாரண ஆசிரியை சாதாரணமா இங்கே குடியிருக்கேன் நான் ஒரு தலித் என்பதாலே தலித் மக்களுக்கு உதவி செய்யணும்கிற எண்ணம் இயல்பாகவே இருக்கு என் ஸ்கூல் பிள்ளைகளுக்கு என் வாழ்க்கையைத்தான் முன் மாதிரியா சொல்றது. நானும் உங்களை மாதிரி கிராமத்திலிருந்து வந்தேன் கல்வியினாலே நாம் விழிப்புணர்வு அடையலாம் இயற்கையிலே இருக்கிற போராட்ட குணத்தை இன்னும் கூர்மைப்படுத்தலாம். போராடி வாழலாம் என்கிற மாதிரியான தன்னம்பிக்கையை ஊட்டுறேன். இங்கே யாருக்கும் நான் எழுத்தாளரா தெரியாது. அப்படி பெரிய எழுத்தாளரா நான் காட்டிக்கிறதும் கிடையாது. மளிகைக்டைக்காரர், முட்டைக்கடைக்காரர் பேப்பரிலே என் போட்டோவைப் பார்த்துட்டு நீங்க கதை எழுதுகிறவங்களான்னு கேட்பாங்க. அவ்வளவுதான் மக்கள் பிரச்சினையை எழுதணும் வெளிப்படுத்தணும் என்பது தான் முக்கியம் என்னைப் பாதிக்கிற விசயங்களை எழுதுவேன். விமர்சனங்களுக்காக நான் என்னை மாற்றிக்கிட்டு சமரசம் பண்ணிக்க மாட்டேன். விருதுக்காகவோ, அங்கீகாரத்துக்காகவோ எழுதமாட்டேன். விமர்சிப்பது அவர்கள் சுதந்திரம் எழுதுவது என்கடமை.
மகளிர்தினம் பற்றி?
மகளிர்க்கான பிரச்சினைகளை அந்த ஒரு நாளிலாவது எல்லோரும் யோசிக்க வேண்டிய கடப்பாடு இருக்கு. கூட்டங்கள் பேரணிகள் நடக்கும். பெண்களிடமிருந்து புதிய படைப்புக்கள் வரும். அந்த நாளில் மட்டுமில்லாமல் தொடர்ந்து விழிப்புணர்வு வேணும். பெண்களை இழிவுபடுத்துகிற மாஸ்மீடியா மதங்கள் குடும்ப அமைப்புகள் இவற்றில் மாற்றம் ஏற்பட இந்த தினம் பயன்படணும்.
நன்றி - ஊடறு பெண்கள் இதழ்
Tuesday, August 23, 2005
புத்தகம் பேசுது இதழுக்கு பாமாவின் பேட்டி-2
திண்ணியத்திலே மலத்தை வாயிலே திணிக்கல்லையா? இதைவிட காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்கு.. இப்படி கேவலமான விசயம் ஏராளம் நடந்துகிட்டுதான் இருக்கு வெண்மணிச்சம்பவம் நடக்கலியா? இப்படி நடக்குமான்னு கேட்கும்போது எனக்கு எரிச்சல் தான் வருது?
உங்க கருக்கு நாவல் தமிழின் முதல் தலித் தன் வரலாற்று நாவலா கருதப்படுது. அதுக்கு தமிழ் இலக்கிய வட்டாரத்திலே பிரமாதமான வரவேற்பும் கிடைச்சிருக்கு அந்த நாவலை நீங்க எந்தச் சூழல்ல எழுதுனீங்க.?
1990ல் கருக்கு வந்தது. அதை நாவல்னோ சுயசரிதைன்னோ நான் எழுதல. என் மன ஆறுதலுக்காக எழுதினது. 1985ல் ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சரா வேலை பார்த்துக்கிட்டிருந்த நான் கிறிஸ்துவ மடத்திலே சிஸ்டரா போனா தலித் பிள்ளைகளுக்கு உந்துசக்தியா இருக்கலாம் சுதந்திரமா செயல்படலாம்னு நெனைச்சு அதில சேர்ந்தேன். மூணுவருசம் சிஸ்டர் ஆகுறதுக்கான பயிற்சி. சிஸ்டரான பிறகு நாலுவருசும் அங்கு ஆசிரியராக வேலை பார்த்தேன். நான் எந்த நோக்கத்துக்காக போனேனோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சாத்தியமே அங்கு இல்லே. பணக்காரங்க பிள்ளைங்க படிக்கிற ஸ்கூலுக்கு ஆசிரியராத்தான் இருக்க முடிஞ்சுது. மேல்மட்டத்து ஆட்களை மேலும் மேலும் தூக்கிவிடுகிற காரியத்தைத் தான் அவங்க செஞ்சுகிட்டிருந்தாங்க. என்னைப் போன்ற கஷ்டப்படும் தலித் மக்களுக்கு என்னால எந்தப் பிரயோஜனமும் இல்லங்கிறது ரொம்ப வேதனையா இருந்தது. என்னோட தலித் கலாச்சாரத்துக்கும் அங்குள்ள கான்வென்ட் கலாச்சாரத்துக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகல எங்களோடது வெள்ளத்தியான கலாச்சாரம். அவங்களது அப்படி கெடையாது. பூடகமா வேஷம் போடுகிற மாதிரிதான் எனக்குப் புரிஞ்சுது. என்னால அப்படி வேஷம் போட்டுகிட்டு இருக்க முடியல எனக்குப் பொருத்தமில்லாத இடம்னு என் மனசுல பட்டது. அங்கிருந்து 1992லே வந்தேன்.
வெளியே வரும் போது வேற வேலை இல்ல. சேமிப்போ சொத்து சொகமோ எதுவும் கிடையாது. வெறுமனே வெறுங் கையோட வெளியே வர்றேன். ஏழுவருசம் உள்ளேயே கிடந்துட்டேன்ல சாதராண மனிதர்களோட உறவு கொள்ளவோ சமுதாயரீதியான வாழ்க்கைக்கோ தகுதி இல்லாத மாதிரியான உணர்வு எனக்கு இருந்தது. அது தான் எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு எதிர்காலம் பத்தின கனவு இல்லன்னாலும் அந்த நிகழ்காலத்துல வாழ்றதுக்கு கூட வழிவகை ஒண்ணும் தெரியல. அப்படிப்பட்ட இக்கட்டான சூழல். என்ன பண்றதுன்ட்டு சின்னதா ஒரு வேலை பார்த்துகிட்டு ஜீவிதம் பண்ணிக்கிட்டிருந்தேன். என் கிராமத்து சந்தோசமான கலகலப்பான சூழல் எல்லாமே இழந்து போய் இன்னிக்கு இப்படி உட்காந்து இருக்கோமே என்கிற ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டுச்சு. மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு ஏங்குகிற மாதிரியான சூழல் .எங்க குடும்ப நண்பர் மாற்குவிடம் என் சூழ்நிலையைச் சொன்னேன் வாழ்க்கையிலே ஒருபிடிமானமே இல்லாம அந்தரத்திலே இருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்லி அழுதேன். அப்போதான் "இதையெல்லாம் ஒரு நோட்டுல எழுதி வை, மனசுக்கு ஆறுதலா இருக்கும்"னு மாற்கு சொன்னார். ஓரு ஆறு மாசம் மனசுக்கு என்ன என்ன பட்டதோ அதையெல்லாம் ஒரு நோட்டுல எழுதினேன். பிறகு வாசிச்சபோது எனக்கு நல்லா இருந்தது. அதை புத்தகமா போடலாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அதிலே உடன்பாடு இல்ல. என் விசயம் மட்டுமல்ல அது ஊர்மக்கள் பலரோட விசயங்களும் கலந்து ஒரு கலவையா வந்திருந்தது. அது தலித்மொழி, பொதுமொழி என ரெண்டு மொழியிலேயும் கலந்து எழுதியிருந்தேன். ரெண்டு மூணு நண்பர்களும் வாசிச்சிட்டு இந்த தலித் மொழிநடை புதுசா இருக்கு மொத்தத்தையும் இதே மொழிநடையிலேயே கொண்டு வந்துட்டா நல்லா இருக்கும் என சொன்னாங்க. மறுபடியும் வந்துட்டா. எழுதி எடிட் பண்ணி கொடுத்தேன். புத்தகமா அவங்களே போட்டாங்க அப்படி வந்தது தான் கருக்கு. - மிகுதி
Friday, August 19, 2005
புத்தகம் பேசுது இதழுக்கு பாமா அளித்த பேட்டி
தமிழ் தலித் இலக்கியப் படைப்பாளிகளுள் மிக முக்கியமானவர் பாமா. இவரது முதல் படைப்பான கருக்கு மூலமாக பரந்த தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். தன் வாழ்க்கையையே சாட்சியாய் வைத்து தலித் மக்களின் அவல வாழ்க்கையை பாசாங்கின்றி பதிவு செய்தவர் அதுவரை பேசப்படாதிருந்த சகலவிதமான சமூக மௌனங்களையும் தனது தனித்துவமான தலித்மொழியினால் கலைக்க முயற்சித்தவர்.
புத்தகம் பேசுது என்னும் இதழுக்கு பாமா அளித்த பேட்டியின் ஒரு பகுதி
தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்
நீங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை (வசவு) எழுதுறதா விமர்சன வட்டாரத்திலே ஒரு முணுமுணுப்பு இருக்கே...?
பாமா படிச்ச பொண்ணுதானே நிறைய கெட்ட வார்த்தைகளை எழுதியிருக்கேன்னு சொல்றாங்க. தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் தான் ஆயதம் எங்களாலே கத்தி வச்சுகிட்டு சண்டை போடமுடியாது. தற்காப்புக்கும் கெட்ட வார்த்தைகள் தான். அடிக்கிறவன் வேணுமானா நல்ல வார்த்தையா பேசலாம் அடிபட்டவன் என்ன வார்த்தையை பேசுவான்? அப்படித்தான் பேசமுடியும். நீங்க எப்படி எங்ககிட்டேருந்து நல்ல வார்த்தையை எதிர்பார்க்கிறீங்க காலம் முழக்க சாதியைச் சொல்லி அடிக்கிறே, பெண்ணுன்னு சொல்லி ஒதுக்குறே, பொருளாதார ரீதியா ஒடுக்குறே, கலாச்சார ரீதியா இழிவுபடுத்துறே இவ்வளவுவையும் தாங்கிகிட்டு நாங்க நல்ல வார்த்தை தான் பேசணும்னா சாத்தியம் இல்லே அப்படி எழுதினா அது உண்மைக்குப் புறம்பா எழுதுற விசயம் தான்.
இப்போது நிறைய பெண் கவிஞர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் பெண்மொழி சமூகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியாதா இருக்கு. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
நிறைய பெண் கவிஞர்கள் பெண் உடல் சார்ந்து, பெண் பிரச்சினைகள், பெண்பாலியல் சார்ந்து நிறைய கவிதைகள் எழுதுறாங்க. அதை நான் குறைச்சு மதிப்பிடல. அதே சமயத்துல பெண்களுக்கு வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் இருக்குதில்லே.. பிரசவம், குழந்தைப்பேறு பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது, வயசுக்கு வருவது இந்த மாதிரி விசயங்கள் இவையெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு தலித் பெண்ணுக்கு பிரச்னைகளே இல்லை. இதைவிட பயங்கரமான பிரச்னைகளெல்லாம் இருக்கு. நிறைமாச கர்ப்பத்தோட வயல்ல குனிஞ்சு நட்டுகிட்டு வர்ற பெண்களை பார்த்திருக்கேன். மரத்திலே தொட்டி கட்டி போட்டு குழந்தை பசியோட கத்திக்கிட்டே கிடக்கும் வேலையை முடிச்சிட்டுதான் பாலுட்டவே முடியும். இப்படியெல்லாம் பிரச்னை இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு இவங்க எழுதுறாங்களேன்னு. ஒருகனமில்லத விசயமாத்தான் எனக்குப்படுது அதனால இதையெல்லாம் சிலாகிச்சு என்னால பாராட்ட முடியல.
உங்கள் தலித் மொழிநடைக்கு நிறைய விமர்சனங்கள் வந்ததில்லையா..? - மிகுதி
Tuesday, August 09, 2005
ஷ்ரேயாவின் குறுக்கெழுத்துப் போட்டி

ஷ்ரேயா
சில தரவுகளில் தப்போ அல்லது நான் குழம்பி விட்டேனோ தெரியவில்லை.
நாளை வந்து சரி பார்த்து மிகுதியை எழுதுகிறேன்.
Tuesday, August 02, 2005
உராய்வு - நூல் வெளியீடு
அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று
27 ஓகஸ்ட் 2005
கண்காட்சி [நாணயங்கள், முத்திரைகள்] [15:30 மணி]
நூல் வெளியீடு [உராய்வு: கவிதைத் தொகுப்பு][16:30 மணி]
குறும்படம் [புகலிடத் தமிழர் தயாரிப்பு] [19:00 மணி]
கலை இலக்கிய ஆய்வாளர்கள், படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.
நேரம்:
சனிக்கிழமை, மாலை 15:30 - 20:30 மணிவரை
இடம்:
ஈலிங் கனகதுர்க்கை அம்மன்கோவில் மண்டபம்
5. CHAPAL ROAD, EALING, LONDON W13 9AE
தொடர்பு:
தொலைபேசி:- எஸ்.கே. இராஜன் - 00 44 79 62 26 19 20
காலம்:
July 28th, 2005
விபரங்களுக்கு - அப்பால் தமிழ்
அத்திக்காயும் சித்தப்பாவும்
நான் A/L (கபொத உயர்தரம்) படித்துக் கொண்டிருந்த காலம்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்கிகளை வானொலியில் ஒலிக்கவிட்டு அந்த இசை பின்னணியில் ஒலிக்க நான் படித்துக் கொண்டிருந்தேன்.
பாடல்கள் பின்னணியில் ஒலிக்க அதை ரசித்தவாறே படிப்பது அதாவது Pure Maths, Applied Maths செய்வதில் எனக்கு அலாதி பிரியம். நேரம் போவதே தெரியாமல் செய்து கொண்டே இருப்பேன்.
அப்படியொரு இதமான மாலை நேரத்தில்தான் அன்று சித்தப்பா வந்தார்.
சித்தப்பா, அப்பாவின் ஒன்று விட்ட தம்பி என்பதால் நாங்கள் அவரை சித்தப்பா என்று கூப்பிட்டாலும் அவர் எங்களுக்கு ஒரு அண்ணன் போலத்தான். அம்மாவுக்கோ அவர் ஒரு பிள்ளை போல.
எங்கள் வீட்டில் எல்லா வேலைகளிலும் அவர் கை பட்டிருக்கும். எங்களுடன் சேர்ந்து எங்கள் புத்தகங்கள் கொப்பிகளுக்கு கவர் போடுவதிலிருந்து, பூமரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவது வரை வீட்டிலுள்ள அத்தனை வேலைகளிலும் அவரது வாசமும் வீசும்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சித்தப்பாவின் சினேகமான உறவையும், உதவி செய்யும் மனப்பான்மையையும் பார்த்துக் கொண்டே, உணர்ந்து கொண்டே நான் வளர்ந்தேன். அவரது வேலையின் நேர்த்தி என்னை அதிசயிக்க வைக்கும். செய்வன திருந்தச் செய் என்பதை அவர் செய்தே காட்டினார்.
அம்மாமேல் அவர் வைத்திருக்கும் பாசத்தில் அப்பாச்சி பொறாமைப் படுவா. எனது மாமிமார் சொல்லுவார்கள் "சின்னண்ணாவுக்கு அண்ணிதான் அம்மா" என்று.
அந்த நேசமான சித்தப்பா வந்ததும் நான் படிப்பை இடைநிறுத்தி விட்டு அவருடன் கதையளக்க எழும்பி விட்டேன். அவருடன் கதையளந்த படியே எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையில் உள்ள கதிரைகள் வரை சென்று நான் அமர, அவர் இன்னொரு கதிரையில் அமர எங்களுடன் எனது தம்பிமார், தங்கைமாரும் சேர்ந்து கொள்ள மிகவும் சுவையாகக் கதை போய்க் கொண்டிருந்தது.
அம்மா மட்டும் குசினிக்குள் அடுத்த நாளுக்கு அடுத்தநாள் வரப்போகும்
தைப்பொங்கலுக்காக ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தா. இடையிலே நாங்கள் கொறிப்பதற்கு பொரிவிளங்காய், வடை, முறுக்கு... என்று பலகாரங்களும் கொண்டு வந்து தந்து விட்டுப் போனா.
நாங்கள் அவைகளைச் சுவைத்த படியே யார் யாருக்கு என்னென்ன பாடல்கள் பிடிக்கும் என்பதையும், அவை பிடித்ததற்கான காரணங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்தோம்.
தங்கை "எனக்கு, சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்றல் காற்று... என்ற பாட்டுப் பிடிக்கும். அதிலை காற்று இல்லை காத்து எண்டு வருதே அது நல்லாயிருக்கு" என்றாள்.
தம்பி "எனக்கு ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக்கிளியே அழகிய ராதா... என்ற பாட்டுப் பிடிக்கும்." என்றான்.
எனக்குத் தெரியும், அவனுக்கு ஏன் அந்தப் பாட்டுப் பிடிக்கும் என்று. அவனுக்கு அவனோடு படிக்கும் ராஜகுமாரியில் ஒரு விருப்பம் அதுதான்.
நான் அவனை அர்த்தத்தோடு பார்த்துச் சிரித்துக் கொண்டேன்.
இப்படியே வயதின் படி ஒவ்வொருவரும் பாடல்களையும் விளக்கங்களையும் சொல்லிப் பாடியும் காட்டினோம். இறுதியாக எங்களுக்குள் வயது கூடிய சித்தப்பாவின் முறை வந்தது.
அவர் "எனக்கு, அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே... அந்தப் பாடல் பிடிக்கும்" என்றார். பாடலில் உள்ள மடக்குஅணியின் அழகு பற்றி அழகாக விளக்கினார். விளக்கிய பின் மிக அழகாகப் பாடியும் காட்டினார்.
அன்றுதான் எனக்கு அந்தப் பாடலின் அருமையே தெரிந்தது. சித்தப்பா பாடியதில் எங்களுக்கு மிகவும் சந்தோசமாகவும் இருந்தது. "சித்தப்பா இன்னொருக்கால் பாடுங்கோ" கோரசாய் கேட்டோம். எங்கள் வேண்டுதலுக்காய் அவர் இன்னொருதரம் பாடினார்.
அதன் பின் அம்மா தந்த தேநீரைக் குடித்து விட்டு, "பொழுது பட்டிட்டுது. நான் போகோணும். இண்டைக்கு நைற்டியூட்டி." என்று சொல்லியபடி எழும்பியவர் அம்மாவிடம் எட்டி "அண்ணி மில்லிலை திரிக்க வேண்டிய பயறு, உழுந்து, மிளகாய் எல்லாத்தையும் ரெடியாக எடுத்து வையுங்கோ. நான் நாளைக்கு 11 மணிக்கு வாறன்." என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார்.
அத்திக்காய் பாடலின் அழகும் இனிமையும் இன்னும் நெஞ்சுக்குள் தித்தித்திருக்க அவர் போய்விட்டார். அடுத்த நாள் 13ந் திகதி. 10 மணிக்கே அம்மா, வறுத்த பயறு, உழுந்து, மிளகாய்.... எல்லாவற்றையும் பைகளில் (Bags) போட்டு ஆயத்தமாக வைத்துவிட்டு சித்தப்பாவின் வரவுக்காய் காத்திருந்தா.
11 மணிக்குச் சித்தப்பா வரவில்லை. சொன்ன நேரம் தப்பாதவர் சித்தப்பா. இன்று 11.10 க்கும் வரவில்லை.
நாங்கள் எங்களெங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் எங்கள் மனசுகள் மட்டும் சித்தப்பாவை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தன.
வழமை போல அம்மா, அப்பாவின் மற்றைய சகோதரர்களுக்காக எடுத்து வைத்த தைப்பொங்கல் உடுப்புகளுடன் சித்தப்பாவின் உடுப்பும் அவருக்காகக் காத்திருந்தது.
பொங்கலுக்காக லீவெடுத்துக் கொண்டு வந்திருந்த அப்பா தம்பிக்கு பட்டம் கட்டிக் கொண்டிருந்தார்.
11.15 ஆகியது. யாரோ கேற் திறக்கும் சத்தம் கேட்டது. சித்தப்பாதான் என்று என் மனது சொல்லியது.
ஆனால் வந்ததோ வேறொருவர்.
எதிர் பார்த்த எம்மனதுக்கு விருந்தாக எதுவும் கொண்டு வராமல், இடி விழுத்த வந்தது போல, கரண்ட் அடித்து சித்தப்பா கருகி விட்ட செய்தியைத்தான் அவர் காவி வந்திருந்தார்.
அன்றிலிருந்து சித்தப்பாவும் இப்பாடலும் என்னுடன் பின்னிப்பிணைந்து என் நினைவுக்குள் அமர்ந்து விட்டன.
இப்பாடலைக் கேட்கும் போது எல்லோரும் பாடலின் அழகிலும் சிலேடையிலும் மயங்கிப் பாடலை ரசிப்பார்கள். நானோ சித்தப்பாவின் நினைவுகளில் மூழ்கி விடுவேன்.
சந்திரவதனா
யேர்மனி
2001
Thursday, July 28, 2005
நீரும் 32 பல்லையும் காட்டும்

திடீரென யாரோ பின்னால் நிற்பது போன்ற உணர்வு. சட்டென்று திரும்பினேன். நந்தகுமார் மாஸ்டர் எனது கணவரின் தோள்களைத் தட்டினார். ரியூட்டரியில் கணித மாஸ்டர் வராத வேளைகளில் அவருக்குப் பதிலாக வரும் மாஸ்டர். நண்பி திலகத்தின் முறை மச்சான். அவர்களுக்குள் காதலும் கூட. அதனால் எங்கள் சீண்டல்களுக்கும் சில சமயம் ஆளாபவர். எனது கணவரின் நண்பர். ஐந்து வருடங்களின் பின் சந்திக்கிறேன். திலகத்துக்கும் அவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் இருப்பதாக ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன்.
எனது கணவரோடு இரண்டு கதை கதைத்து விட்டு என் பக்கம் திரும்பி "சந்திரவதனா...! றேடியோவிலை உங்கடை பெயர் வராத நாட்களே இல்லை. ஒரு நாளைக்கு மூன்று தரத்துக்குக் குறையாமல் உங்கடை ஏதாவது ஆக்கங்கள் போகுது. இண்டைக்கும் அந்தக் கவிதை நல்லாயிருந்தது." பாராட்டி விட்டு மீண்டும் கணவரோடு கதைக்கத் தொடங்கி விட்டார்.
அந்த வயசில் எனக்குக் கிடைத்த அந்தப் பாராட்டில், உச்சி குளிர்ந்ததில் சந்தோசத்தை அடக்க முடியாமல் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தேன்.
படம் முடிந்து சைக்கிளில் வீடு திரும்பும் போது கணவர் ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனமாய் சைக்கிளை உழக்கினார். "ஏன்...?" என்ற கேள்வியை வீட்டில் வந்து இறங்கும் போதுதான் கேட்டேன்.
சடாரென்று சூடாக வீழ்ந்தன வார்த்தைகள் "சும்மா அவனவன் வந்து, கவிதை நல்லாயிருக்கு, கட்டுரை நல்லாயிருக்கு எண்டுவான். நீரும் 32 பல்லையும் காட்டும்."
எனக்கு ஒருதரம் சப்தநாடியும் அடங்கி ஒடுங்கின.
சந்திரவதனா
28.7.2005
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )