Wednesday, June 30, 2004
வலை வலம் 30.6.2004 - பாடல்களோடு
இவ் வார வலைப்பூ ஆசிரியர் பாலாஜி தினம் ஒரு பாடல் என்று...
460 பாடல்களுக்கு மேல் பதிந்து வைத்திருக்கிறார்.
பாடல்கள் பற்றிய விளக்கங்களும் தந்துள்ளார்.
கிடைத்தற்கரிய பல பாடல்கள்
BBC தமிழோசையை இது வரை கேட்டு வந்தோம்.
இப்போது வாசிக்கவும் ஒரு தளத்தை ஆரம்பித்துள்ளர்கள்.
இன்றைய சுவாரஸ்யமான செய்தி - கர்நாடகஇசை பாடும் ஆப்பிரிக்க குயில்
இங்கே சினிமாப்பாடல்கள் எனது பார்வையில் - வரி வடிவத்தில்
இங்கே தாயக.. மெல்லிசை.. பாடல்கள் சில - வரி வடிவத்தில்
Tuesday, June 29, 2004
முத்தம்
அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட
அழகான முத்திரை
ஆழ்ந்த அன்பைக் கூறும்
அழகான சொல்
காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்
அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த
இனிய மது
ஆயிரமாயிரம் தரம் எழுதியோ
சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஷை.
சந்திரவதனா
யேர்மனி
21.7.99
Sunday, June 27, 2004
துண்டுப் பேப்பருக்காய்..
புலம் பெயர்ந்த பின் நிர்வியாவும் என்னைப் போல அவதிப் பட்டுள்ளார்.
நான் யேர்மனிக்கு வந்த காலங்களில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளி வந்தாலும் என் கைக்கு அவை கிடைப்பதில்லை. அந்தச் சமயங்களில் எனக்கு வாசிப்புத்தாகத்துக்கு தீனியாக யேர்மனியப் பத்திரிகைகளே கிடைத்தன. விளங்குதோ விளங்கவில்லையோ வாசித்துத் தள்ளுவேன்.
சிலசமயங்களில் அகராதியைத் தலைகீழாகப் புரட்டியும் வாசித்த விடயத்தின் பொருள் விளங்காது தலையைப் பிய்த்துக் கொள்வேன்.
அந்த நேரத்தில் எங்காவது ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலே எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்போது கூட எனது யேர்மனிய நண்பிகள் அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.
ஆனாலும் தமிழில் எதுவும் கிடைக்காதது பெரும் குறையாகவே இருந்தது.
அது கிடைக்க கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
வலைவலம் 27.6.2004
ஈழநாதன் தன்பணியை செவ்வனே தொடர்கிறார்.
நான் தினம் தரிசிக்கும் பதிவுகளில் இதுவும்
(ஈழத்து இலக்கியங்களின் வரலாற்றுப் பதிவு ) ஒன்று.
Saturday, June 26, 2004
வலைவலம் 26.6.2004
எழுத்து ஒரு தனி உலகம். தினமும் கொஞ்ச நேரம் அந்த உலகத்துக்குள் எட்டிப் பார்த்து விட்டு வருவதை பழக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். எதை எழுத வேண்டும் என்பதை விட, எதை எழுதக் கூடாது என்பதே எழுத்தாளன் ஆக விரும்புபவன் முக்கியமாய்த் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அநாவசியமாய்க் கதையில் ஒரு வரி கூட வைக்க வேண்டாம். அப்புறம் கதையை வெட்டி விட்டார்கள், சிதைத்து விட்டார்கள் என்று புலம்புவதில் அர்த்தமில்லை. ஒரு வார்த்தையை நீக்கினாலும் கதை கெட்டு விடும் என்கிற மாதிரி நறுக்கென்று எழுதிப் பழக வேண்டும்.
இதை நான் சொல்லவில்லை.
இது ராஜேஸ்குமாரிடம் இருந்து சத்யராஜ்குமார் கற்றுக் கொண்டது.
என்னை எழுதியவர்கள் என்று சத்யராஜ்குமார் தமிழ்ஓவியத்தில் தரும் சுயசரிதமே ஒரு சுவையான கதையாகத் தொடர்கிறது.
Friday, June 25, 2004
வலைவலம் 25.6.2004
என் மூக்கினூடாக பாலாஜி இணைப்புக் கொடுத்திருக்கும் அண்ணா கண்ணனின் வலைப்பதிவில் பெண் கவிஞர்கள் சிலர் பற்றிய பதிவுகளைப் பார்க்க முடிந்தது.
இப்போது பல தளங்களில் சர்ச்சைக்குரிய விடயமாகக் பேசப்படும் மாலதி மைத்ரி, திலகபாமா.......... போன்றோரின் படைப்புகள் பற்றிய பார்வைகள் இங்குள்ளன.
இப்போது பல தளங்களில் சர்ச்சைக்குரிய விடயமாகக் பேசப்படும் மாலதி மைத்ரி, திலகபாமா.......... போன்றோரின் படைப்புகள் பற்றிய பார்வைகள் இங்குள்ளன.
Thursday, June 24, 2004
வலைவலம் 24.6.2004
எனது எழுத்துக்கள் கதை, கட்டுரை, கவிதை... இலக்கியம் என்ற கோட்பாடுகளுக்குள் அடங்குகின்றனவோ இல்லையோ.... அது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், எதுவானாலும் என் மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதுவேன்.
அதை ரசிக்கக் கூட ஒரு சிலர் இருக்கிறார்கள் என்னும் போது உண்மையிலேயே
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. புதிதாக வலைப்பதிய ஆரம்பித்திருக்கும் நிர்வியா எனது எழுத்துக்குத் தான் அடிமையாம். அதைத் தனது வலைப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். அதைப் பார்க்க நேர்ந்த போது மனசு ஒரு தரம் சந்தோசத்தில் ஜில்லிட்டது. நன்றி நிர்வியா.
இதே கருத்துப்படத்தான் ஒரு தரம் திவாகரனும் தனது பதிவில் எழுதினார்.
அவரை ஏனோ நீண்ட நாட்களாகக் காணவில்லை.
அவர் முற்றத்தில் நிலா அநாதரவாய்க் காய்கிறது.
விவசாயம் பார்க்க என்று போன நாட்டாண்மை போனது போனதுதான்.
திரும்பி வரக் காணோம்.
வலைப்பூக்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரியர் என்று வருவதில்
ஒவ்வொரு வாரமும் அதன் சாராம்சம் வேவ்வேறு விதமாக அமைகிறது.
இம்முறை கொள்ளிடம் வாசன்பிள்ளை தன் கோணத்திலான தனது ரசனையுடனும் ஆர்வத்துடனும் கூடிய விடயங்களைத் தந்து கொண்டிருக்கிறார். வாசித்துப் பாருங்கள். interesting.
கல்கியில் வெளியாகி, இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற ஒரு விநாடியும் ஒரு யுகமும் கதையை துகள்கள் சத்யராஜ்குமார் கொஞ்சம் கொஞ்சமாகத் தர உள்ளார். வாசித்துப் பாருங்கள்.
Tuesday, June 22, 2004
சுகமான நினைவு
செங்கொண்டைச் சேவல்
குரலெடுத்துக் கூவ
செம் மஞ்சட் கதிர்களை
கதிரவன் வீச
பறவையினம் சிறகடிக்க
வண்டினங்கள் ரீங்கரிக்க
குயிலினங்கள் இசைபாட
மெல்லென விடிந்தது
அங்கெனது காலை
மாட்டு வண்டி கடகடக்க
மாடு இரண்டும் விரைந்தோட
சலங்கைகள் கிலுகிலுக்க
பால் காரன் மணியோசை
வீதிகளில் ஒலித்து நிற்க
கோயில் மணி ஓசையிலே
கலகலத்தது அக்காலை
சூரியக் கதிர் பட்டு
கிணற்று நீர் பளபளக்க
துலாபதித்து நீர் மொண்டு,
சிரித்து நிற்கும்
செம்பருத்தி வேலி
மறைத்து நிற்க
மனங்குளிரக் குளிக்கையிலே
சிலிர்த்து நின்றது
அங்கெனது காலை
ஆர்ப்பரிக்கும் கடலோசை
காற்றலையோடு தவழ்ந்து வர
அரசு உதிர்த்த இலைகள்
சரசரக்கக் கால் பதித்து-எனது
ஆத்தியடி வீதியிலே நடந்து
நெடிதுயர்ந்த பனையுதிர்க்கும்
பனம் பூவை நுகர்ந்த படி
பனங் கூடல் வழியேகி
காணிக் கந்தோர்
கறுத்தக் கொழும்பானும்
வேலாயுதன் காணி
புளியங்காயும்
களவாய்ப் பிடுங்கி
பள்ளியைத் தொடுகையிலே
கலகலத்த மாணவரின்
கள்ள மற்ற சிரிப்பினிலே
மகிழ்ந்திருந்தது அக்காலை
பாணி ஊற்றி பக்குவமாய்
பாட்டி செய்த பனாட்டும்
கொடியினிலே அரைகுறையாய்
காய்ந்திருந்த பனங்கிழங்கும்
நினைவினிலே வந்து
பசி கிளப்ப
பள்ளிக் கூட மணியும்
பார்த்து ஒலிக்க
துள்ளியெழுந்து ஓடுகையிலும்
வைரவர் கோயில்
இலந்தைக் காய்க்காய்
வழியினிலே மெனக்கெட்டு
முனி யென்று ஒருத்தி கத்த
குடல் தெறிக்க ஓடி
சுடச் சுட அம்மா வடித்த
சுடு சாதமும்
பொரியலும் வறுவலும்
தொட்டுக் கொள்ள
துவையலுமாய்
சுவையும் மணமுமாய்
ஆறுசுவையாய் நகர்ந்தது
அங்கெனது மதியம்
நகரும் மதியத்தை விட்டு
நகரா மனமோ
நொட்டு நொறுக்குக்காய்
சட்டிகளையும் சாடிகளையும்
தட்டியும் தடவியும்
தொட்டுத் தேடியும்
கிண்டிக் கிளறியும்
அதை நோண்டி
இதை நோண்டி
அரை குறையாய்
ஒவ்வொன்றிலும்
அணில் கோதல் கோதியும்
அடங்காது,
வேலிகளில்
அண்ணா முண்ணா
பூவும் தேடி----!
மாலையானதும் மாங்கொட்டையும்
கூடி இருந்து
கொக்கானும் வெட்டி
அம்மா திட்ட
விட்டுச் செல்ல மனமின்றி
கால் முகம் கழுவி
படிப்பதாய் சொல்லி
தங்கைமாருடன்
பலகதை பேசி
இரவு உணவுக்காய்
அம்மா அழைக்க
இதுதான் சமயமென்று
புத்தகத்தை மூடி
இரவுப் படுக்கையின் முன்
மணக்கும்
மல்லிகைப் பந்தலின் கீழ்
நிலவின் ஒளியில்
ஒய்யாரமாய் அமர்ந்து
உடன் பிறப்புகளுடன்
ஓராயிரம் அளந்து---
நினைவே சுகமாகும்
இந்த நினைவே நனவானால் ..
நிறைகிறது மனது
மீண்டும்
நிஜமாகுமென்ற கனவில்..!
சந்திரவதனா
யேர்மனி
2000
Thursday, June 17, 2004
முதல்முறையா...?
எங்கு பார்த்தாலும் செல்போன் வைரஸ் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
குழப்பமாக இருக்கிறது.
ஏனெனில் இது எனக்கு ஏற்கெனவே அறிமுகமான ஒன்று.
சித்திரை மாதம் இறுதிப் பகுதியில் எனது மகள் லண்டனிலிருந்து வந்திருந்தாள்.
அவள் தனது கைத்தொலைபேசியில் இருந்து சில புகைப்படங்களை எனது
கணினிக்குத் தரவிறக்கம் செய்தாள்.
செய்து முடிந்த உடனேயே எனது கணினி அந்தப் புகைப்படங்களில்
ஒன்றில் வைரஸ் இருப்பதைக் காட்டியது.
எனக்கு அன்றுதான் கைத்தொலைபேசியையும் வைரஸ் தாக்கலாம் என்ற
விடயமே தெரிய வந்தது.
ஆனால் இப்போ வெங்கட் போன்றவர்கள் பேசுவதைப் பார்த்தால்
இது இப்போதுதான் வந்தது போலல்லவா உள்ளது.
இது சற்று வித்தியாசமானது என்றாலும் எனக்குக் குழப்பம்தான்.
Wednesday, June 16, 2004
கனவுகள்
"சும்மா கொஞ்சம் என்னைப் படுக்க விடு."
"நீ இப்ப வேலைக்கெல்லோ போகோணும்.... சமைச்சுப் போட்டம். எழும்பிச் சாப்பிட்டிட்டு வெளிக்கிடு."
சந்திரனும் அலெக்சுமாக பாலாவை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பாலா உணவுவிடுதியில் வேலையை முடிச்சிட்டு சாமம் இரண்டு மணிக்குத்தான் வந்தவன். வந்தவன் உடனை படுத்திருக்கலாம். அதில்லை. காதலுக்குமரியாதை படத்தை ஆறாவது தடவையாகப் போட்டுப் பார்த்திட்டுத்தான் படுத்தவன்.
அவனுக்குச் சாலினி மாதிரி மனைவி வேணுமாம். அவனுக்குள்ளை இருக்கிற நிறையக் கனவுகளுக்கை இதுவும் ஒன்று.
ஏன் சந்திரனுக்கும் அலெக்சுக்கும் இல்லையே..! அவையளுக்கும்தான். பத்து வருசத்துக்கு முந்தி யேர்மனிக்கு வந்த புதுசிலை ரோகிணி, அமலா, குஸ்பு.. என்று கனவுகள் இருந்தது.
சந்திரன் ஒவ்வொருநாளும் உணவுவிடுதியிலை சலாட் கழுவுற பொழுது தன்ரை கனவுகளையும் சேர்த்துக் கழுவிக் கொண்டிருப்பான்.
அலெக்ஸ் சுப்பர்மார்க்கெட்டிலை நிலத்தைக் கூட்டிக் கழுவுகிற பொழுது தன்ரை கனவுகளையும் கூட்டிச் சேர்த்து கற்பனையில் பறந்து மகிழ்ந்து பின் கழுவித் துடைப்பான். நிலம் பளிச்செண்டு துலங்கும். இவன் மனசோ வெறுமையாகித் துக்கத்தில் துவண்டு ஏக்கத்தால் நிரம்பும்.
"எழும்படா.."
"இவங்கள் இரண்டு பேரின்ரையும் ஆய்க்கினை தாங்கேலாமல் கிடக்குது."
முணுமுணுத்தபடி பாலா எழும்பினான்.
கட்டிலில் இருந்த படியே....
"என்னைத் தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்கத் தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ..."
பாடத் தொடங்கினான்.
பாடி முடியும் வரை பொறுத்திருந்த அலெக்சும், சந்திரனும்
"சரி.. சரி.. சாலினியைப் பிறகு பார்ப்பம். இப்பப் போய் பல்லைத் தீட்டிப் போட்டு வா... சாப்பிடுவம்..." என்றார்கள் ஒரு வித நெகிழ்ச்சியோடு.
யேர்மனிக்கு வந்து பத்து வருசமாச்சு. இந்தப் பழக்கங்களை மட்டும் நீங்கள் விடேல்லை. சொல்லிய படி குளியலறைக்குள் நுழைந்தான் பாலா.
தண்ணீர்ச் சத்தத்தையும் மீறி
"தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ?
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ?
கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே...
லல லாலால்ல லலலால...
எனது இரவு அவள் கூந்தலில்..
எனது பகல்கள் அவள் பார்வையில்..
காலம் எல்லாம் அவள் காதலில்..
கனவு கலையவில்லை கண்களில்..
இதயம் துடிக்குது ஆசையில்..
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்..
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்..
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்..
நாளைக்கு நான் காண வருவாளோ..
பானைக்கு நீர் ஊற்றிப் போவாளோ..
வழியோரம் விழி வைக்கிறேன்......
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா?
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா?
கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே.."
பாலாவின் குரல் தன்னை மறந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
வெளியே மேசையில் பணம் கேட்டு வந்த ஊர்க்கடிதம் காத்திருப்பது தெரியாமல்....
சந்திரவதனா
12.8.1999
பாடல் வரிகள் - பழனிபாரதி
Tuesday, June 15, 2004
கவிஞர் சல்மா
ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கவிஞர் சல்மாவின் பேட்டியொன்று வாசிக்கக் கிடைத்த போது........
அது என்னுள் பெரும் வியப்பையும், இன்னும் பல உணர்வுகளையும் தோற்றுவித்தது.
எங்கோ ஒரு மூலையில் யாரும் அவ்வளவாகப் பார்க்காத இடத்தில்
அதாவது குறிப்பிட்ட ஒரு இணையத் தளத்தில் மட்டும் அப்பேட்டி இருந்து
என்றைக்கோ ஒரு நாள் அதிலிருந்தும் எடுபட்டு
குறிப்பிட்ட சிலரைத் தாண்டாமல்............. போய் விடுமோ
என்றொரு கவலை எனக்குள் எழுந்தது.
இதைக் கண்டிப்பாக மற்றவர்களது பார்வைக்கும் கொண்டு வரவேண்டுமென்ற ஆவலில் எனது
சாதனைப்பெண்கள்(முக்கியப் பெண்கள்) பகுதியிலும், தோழியரின் வலைப்பதிவிலும் இட்டேன்.
எந்தத் தளத்தில் இருந்து வாசித்தேன் என்பதைத்தான் மறந்து விட்டேன்.
எழுத்தை சுரதாவின் செயலியில் மாற்றி எழுத்துப் பிழைகளைத் திருத்தி நேர் சீராக பதிவதற்கு எனக்கு நிறைய நேரம் தேவைப் பட்டது. அவ்வளவு நேரத்தையும் செலவழித்த பின் இவ்வளவு நீளத்தை யாராவது வாசிப்பார்களா..? என்று மனதில் மெதுவான சந்தேகம் எழுந்தது.
ஆனாலும் சந்தேகத்தை தீர்க்கும் படி றஞ்சி, ரவி, புகாரி மூவரும் அதை வாசித்து தத்தமது கருத்துக்களைத் தோழியரில் பதிந்தார்கள். அது எனக்கு மிகுந்த திருப்தியையே தந்திருக்கிறது.
இவர்களோடு மதியும் இதை வாசித்து இதை மரத்தடியில் போட
இது பற்றியதான ஒரு கருத்தாடல் மதியின் மரத்தடிக் குழுமத்தில் தொடர்கிறது.
இதில் எனக்கு சந்தோசமே.
சல்மா என்ற அந்தப் பெண்ணின் வாழ்வு மற்றைய பெண்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.அது பற்றிய கருத்தாடல்கள் கூட நல்ல விடயங்களைத் தேர்ந்தெடுத்து முன்னேற உதவும்.
இதுவரையில் நான் சல்மாவின் கவிதைகளில் ஒரு சிலதைத்தான் வாசித்துள்ளேன். அதனால் சல்மாவின் கவிதைகளையொட்டிய எனது கருத்துக்களையோ, அது பற்றிய ரவியியினதோ அல்லது மற்றவர்களினதோ கருத்துக்களுக்கான பதிலையோ என்னால் இங்கு தர முடியவில்லை. ஆனாலும் எளிய சொற்களால் பேசுவதை மட்டும் கவிதையெனக் கொள்ளும் அவரது வரையறைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை.
ஒரு பெண் என்பதால் அவர் முன்னே கட்டியெழுப்பப் பட்டிருந்த தடைகளும், அதனால் அவர் எதிர் நோக்கிய பிரச்சனைகளும், அதையும் தாண்டி அவர் வெளியுலகுக்கு வந்த விதங்களும் பெண்களுக்கு - முடியும் - என்றதொரு தன்னம்பிகையை அளிப்பதாகவே இருக்கிறது.
அதே நேரம் அவரது அரசியல் வாழ்க்கைக்கு முன்னான காலகட்டங்களைப் பற்றியதான அவர் பேச்சில் ஒரு இயலாமை, மீற முடியாமை... என்று இன்னும் பல பெண் உலகத்துக்கான சலிப்புகள் தெரிகின்றன.
அரசியல் தற்போதைக்கு அவர் தன் மீதான தடைகளை உடைத்தெறிவதற்குத் தகுந்த பலமான ஆயுதமாகத்தான் இருக்கிறது. அதுவே அவர் தன்னை தொலைத்துக் கொள்வதற்கான அதளபாதாளமாக மாறாதிருக்க வேண்டும்.
மதியின் மரத்தடிக் குழுமத்தில் தொடர்கின்ற கருத்தாடலை வெட்டி இங்கே ஒட்டுகிறேன்.
From: "usha"
Date: Fri Jun 11, 2004 7:35 pm
இப்போது சின்னப் பையன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன
செய்வார்களோ என்ற நினைப்பு எனக்குள் ஓடுகிறது. நான் இலங்கைக்குப்
புறப்படும்போது "எந்த அம்மா இப்படி வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்கி
றார்கள்" என்ற கேள்வியை எழுப்பி, ஏதோ தேவையற்ற காரியங்களில்
ஈடுபடுவதைப்போல நினைத்துப் பேசுகிறான். சின்னப் பையன்களைக்கூட திசை தி
ருப்புவதாக நம் சமூகச் சூழல் இருக்கிறது. நாளை யாரோ ஒரு ஆண் நண்பருடன் பேசி
க்கொண்டிருக்கும்போது "நீ ஏன் அவருடன் பேசுகிறாய்" என்ற கேள்வியை அவன்
எழுப்புவதற்கான எல்லாச் சாத்தியங்களும் உள்ளது.
வீட்டுக்கு வீடு வாசப்படி. இதில் பெண் எந்த சமூகமாய் இருந்தால் என்ன? எந்த
நாடாய் இருந்தால் என்ன? இலக்கியம், எழுத்து என்று எழுதும் பெண்கள் வெற்றி பெறும் வரையில்
பிறர் பார்வையில் கேலியாய்தான் பார்க்கப்படுகிறாள். என் மகண் கண்ணிலும்,
இந்த எழுத்து, குழு, நண்பர்கள்( ஆண்) போன்றவை சிறிது சந்தேக கண் மற்றும் இது
எதற்கு என்றுதான் பார்க்கப்படுகிறது.
உஷா
------------------------------------------------------
From: sadayan
Date: Sat Jun 12, 2004 9:39 am
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2
கே: நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?
அன்பின் மதி...
நேர்காணலை தட்டச்சு செய்தீர்களா ? அல்லது வெட்டி ஒட்டினீர்களா ? காரணம்
முழு பேட்டியும் உலகத் தமிழ் வலைத் தளத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே
வெளியானது. தவிர 'இரண்டாம் ஜாமங்களின் கதை' யும் உலகத் தமிழ்
வலைத்தளத்தில் தொடராக வெளி வந்து, பின்னர் காலச்சுவடு அத் தொடரை
பொத்தகமாக வெளியிட இருப்பதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.
இது பொத்தகமாக வெளிவந்தால் நிச்சயம் சர்ச்சைக்குள்ளாகும்.ஆண்களே எழுதக்
கூச்சப்படும் சில வார்த்தைகளை தனது பொத்தகத்தில் தைரியமாக
கையாண்டுள்ளார்.(பெண் சாருநிவேதிதா) காலச்சுவடு தணிக்கை செய்து
வெளியிடப் போகிறதா தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்புடன்
சாபு
துபாய்
----------------------------------------------------------
From: swastik ads
Date: Sat Jun 12, 2004 10:45 am
Subject: Re: [Maraththadi] Re: An interview with Kavinjar Salma -3
வீட்டுக்கு வீடு வாசப்படி. இதில் பெண் எந்த சமூகமாய் இருந்தால் என்ன? எந்த
நாடாய் இருந்தால் என்ன? இலக்கியம், எழுத்து என்று எழுதும் பெண்கள் வெற்றி பெறும் வரையில்
பிறர் பார்வையில் கேலியாய்தான் பார்க்கப்படுகிறாள். என் மகண் கண்ணிலும்,
இந்த எழுத்து, குழு, நண்பர்கள்( ஆண்) போன்றவை சிறிது சந்தேக கண் மற்றும் இது
எதற்கு என்றுதான் பார்க்கப்படுகிறது.
உஷா
உஷா,
இதைப் படித்தவுடன் நிஜமாகவே உங்கள் மேல் அனுதாபம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. உங்கள் மேல்
அவர்களுக்கு உள்ள possessiveness-தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இயன்றால் அவர்களையும்
இதில் பங்கெடுக்க வைங்களேன்..
Suresh
----------------------------------------
From: Madhurabarathi
Date: Sat Jun 12, 2004 11:22 am
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2
கே: நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?
பெண்ணுரிமை மறுக்கப்படுவதற்குக் காரணம் இந்துமதம் அல்லது இசுலாம் என்று
இவ்வாறு சொல்வது இப்போது மிகவும் அறிவுஜீவித்தனமாகி விட்டது. ஆனால்
உண்மை என்னவென்றால் எங்கெல்லாம் ஆண் இருக்கின்றானோ, அவன் தன்னுடைய
மிகையான உடல்வலு, பொருளாதார வலு, அரசியல் வலு இவற்றை வைத்துப்
பெண்ணை அமுக்கிவிடுகிறான். அவன் கையில் மதநூல் இதற்கு ஒரு
கருவியாக்கப்படுகிறது. அந்த நோக்கத்துக்கேற்ப வேத விளக்கமான
சாத்திரங்கள் எழுதப்படுகின்றன. எனவேதான் பாரதி "பேய் அரசு செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று கூறினான்.
இந்த சல்மாவின் நேர்காணலில் கூட அவர் திருக்குர் ஆனைக் குறை
சொல்லவில்லை. அதில் பெண்களுக்குச் சாதகமாக இருப்பவற்றைப் பேசவிடாமல்
ஒரு ஆண் எழுத்தாளர் தடுத்தார் என்றுதான் சொல்லி இருக்கிறார்.
சகோதரி மதிக்கு ஒரு வேண்டுகோள். இங்கே நமது முஸ்லிம் சகோதரர்கள்
நிறைய இருக்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியானவற்றை இங்கே
இடவேண்டுவதில்லை. கட்டுரைகளின் சுட்டியை மட்டும் இட்டால் வேண்டுமென்பவர்கள்
அங்கே போய்ப் படித்துக் கொள்வார்களே.
இது எனது அன்பான வேண்டுகோள். தவறாக நினைக்கவேண்டாம். என் கருத்தில்
ஒப்புமை இல்லாதவர்கள் தமது பக்கத்தைச் சொல்லலாம். நம்முடைய மிகப்பெரிய
பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம் காப்பதுதான்.
அன்புடன்
மதுரபாரதி
----------------------------------
From: "K.V.Raja"
Date: Sat Jun 12, 2004 11:26 am
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2
சகோதரி மதிக்கு ஒரு வேண்டுகோள். இங்கே நமது முஸ்லிம் சகோதரர்கள்
நிறைய இருக்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியானவற்றை இங்கே
இடவேண்டுவதில்லை. கட்டுரைகளின் சுட்டியை மட்டும் இட்டால் வேண்டுமென்பவர்கள்
அங்கே போய்ப் படித்துக் கொள்வார்களே.
அன்புள்ள மதுரபாரதி அண்ணா,
நான் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனாலும் சொல்ல வந்தது வேறு அர்த்தத்தில்
புரிந்துகொள்ளப்பட்டு என்னை தவறாக நினைக்க வைத்துவிடுமோ என்றே மௌனமாக இருந்தேன்.
என் மனதில் இருந்த கருத்தை மிகத் தெளிவாக சொன்னதற்கு நன்றி.
என்றும் அன்புடன்,
கேவிஆர்
------------------------------
From: "Abul Kalam Azad"
Date: Sat Jun 12, 2004 12:42 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
நம்முடைய மிகப்பெரிய பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம்
காப்பதுதான்.
அன்புடன்
மதுரபாரதி
பாரதிண்ணா,
நேத்து கவிஞர் சல்மாவோட பேட்டிய மதி போட்டதும் மேலோட்டமா
படிச்சிட்டேன். பதில் எழுதணும்னு தோணுச்சு, நீங்க மேல சொன்ன
கருத்துக்கு ஒப்ப அப்படியே விட்டுவிட்டேன். நமது பலவீனம்..சல்தா
ஹை..இல்லை..:)
சல்மாவின் குற்றச்சாட்டு:
தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடுகிறார்கள்
நான் விளங்கிக்கொண்டதும் பதிலும்:
இப்பொழுதெல்லாம் நபிகள் நாயகத்தின் பொன்பொழிகளை அனுப்புபவ
ர்கள் கூடவே இரண்டு வரிகளை மறக்காமல் அனுப்புகிறார்கள்.
அதாவது,
"எந்தப் பிரச்சனைக்கும் ஒரே ஒரு ஹதீசின் அடிப்படையில் தீர்வு காணக்
கூடாது. மார்க்க அறிஞர்களைக் கலந்து ஆலோசித்து அதன் அடிப்படையில்
தான் தீர்வு காணவேண்டும்"
சல்மா அவர்கள் சொன்னதுபோல் ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு
யாரேனும் பெண்ணுரிமையைத் தடுத்தார்களென்றால் அது தவறு.
தனிப்பட்ட ஆணோ பெண்ணோ சொல்வதைவிட சல்மா என்ன விளங்கிக்
கொண்டார் என்பதை அவர் சொல்லியிருக்கலாம். நாம் பேசும் விஷயத்தில்
முதலில் நமது நிலைபாடு என்ன.
பெண்ணுரிமையை இஸ்லாம் மறுக்கிறது என்று சல்மா நம்புகிறாரா அல்லது
அல்லது இஸ்லாமியப் போர்வையில் சிலர் ஆணாதிக்கத் தனமாக நடந்துகொ
ள்கிறார்கள் என்று சொகிறாரா என்பது சரியாகப் பிடிபடவில்லை.
படித்துவிட்டு எழுதுகிறேன் அண்ணா.
மௌனமாக இருக்காதே என்ற உங்கள் அறிவுரையை ஏற்கிறேன் :)
அன்புடன்
ஆசாத்
பி.கு.: நண்பர்களே! சல்மா சொல்வதைப் போல் பயணம் என்பதும் பேட்டி
என்பதும் இஸ்லாமியப் பெண்களுக்கு விலக்கப்பட்டதல்ல. என் மனைவி தனியா
கத்தான் பயணம் செய்து வருடாவருடம் இங்கு வந்து போகிறார்.
ராஜா எழுதித் தந்ததாகச் சொன்னேனல்லவா அந்த குவிஸ் நிகழ்ச்சியில்
வளர்ந்த மாணவிகள் என் முன்னே அமர்ந்து நேருக்கு நேர் வினாடி வினாவில்
பதில் சொன்னது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் முன்னிலையில்தான். அது
வும் மேடையில், ஐநூறு பார்வையாளர்களின் முன்னிலையில். இது பதிவும்
செய்யப்பட்டு சிடிக்களாக நேற்று வெளியிடப்பட்டும் உள்ளது. (இஸ்லாமிய
மார்க்க அடிப்படைக்கு சிறு மாற்றமாக இருந்தாலும் சவூதியில் சிடி
வெளியிடுவது முடியாது என்பதை அனைவரும் அறிவீர்கள்)
-------------------------------------
From: "Arul"
Date: Sat Jun 12, 2004 1:16 pm
Subject: Re: [Maraththadi] An interview with Kavinjar Salma -2
பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம்
காப்பதுதான்.
அன்புடன்
மதுரபாரதி
அன்பின் மதுரபாரதி,
நாம் (தமிழர்கள்) ஒன்று மவுனம் காப்போம், இல்லை உணர்ச்சிவசப்பட்டு வசைப்பாடத்துவங்கிவிடுவோம், இதற்கு
இடைப்பட்ட நிலையான ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் பெரும்பாலும் ஏற்படாமல் போவதுதான் நம்
பலவீனம் என்று *நான்* நினைக்கிறேன்
அன்புடன்,
இர.அருள் குமரன்.
---------------------------
From: "mathygrps"
Date: Sat Jun 12, 2004 2:23 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
--- In Maraththadi@yahoogroups.com, sadayan
அன்பின் மதி...
நேர்காணலை தட்டச்சு செய்தீர்களா ? அல்லது வெட்டி ஒட்டினீர்களா ? காரணம்
முழு பேட்டியும் உலகத் தமிழ் வலைத் தளத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே
வெளியானது. தவிர 'இரண்டாம் ஜாமங்களின் கதை' யும் உலகத் தமிழ்
வலைத்தளத்தில் தொடராக வெளி வந்து, பின்னர் காலச்சுவடு அத் தொடரை
பொத்தகமாக வெளியிட இருப்பதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.
இது பொத்தகமாக வெளிவந்தால் நிச்சயம் சர்ச்சைக்குள்ளாகும்.ஆண்களே எழுதக்
கூச்சப்படும் சில வார்த்தைகளை தனது பொத்தகத்தில் தைரியமாக
கையாண்டுள்ளார்.(பெண் சாருநிவேதிதா) காலச்சுவடு தணிக்கை செய்து
வெளியிடப் போகிறதா தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.
sadayan
அன்புள்ள சாபு ஐயா,
வணக்கம்!
நான் இந்த நேர்காணலைப் படித்தது தோழியர் கூட்டு வலைப்பதிவில். சந்தி
ரவதனா அங்கே இட்டிருந்தார். அவருக்கும் ஒரு மடல் அனுப்பி இருக்கிறேன். செவ்வி
யைப் படித்ததும் காலச் சுவட்டில் வந்ததோ என்று நினைத்தேன். செவ்வியின் முடிவில்
நன்றி சொல்வதற்காகக் கேட்டிருந்தேன். அவரிடம் இருந்து பதில் வரத் தாமதமானதால் சந்தி
ரவதனாவிற்கும் தோழியர் கூட்டுப் பதிவிற்கும் நன்றி சொல்லி இங்கே இட்டேன். சாபு
ஐயா நன்றி 'உலகத் தமிழ்' பற்றிய விவரம் சொன்னதற்கு.
*எனக்கு* சல்மா பற்றித் தெரிந்ததெல்லாம் இணையத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்ததே (அதுவும் உலகத் தமிழ் படித்து ஒரு வருடத்தி
ற்கு மேலாகிறது. :( ). இங்கே மரத்தடியில் சல்மாவின் கவிதைகள் சில பகி
ர்ந்துகொள்ளப் பட்டிருக்கின்றன. அத்தோடு அவருடைய கவிதைகளைப் பற்றி இங்கே வி
வாதித்தும் இருக்கிறோம். அதனால்தான் இங்கே இடுவது நண்பர்களுக்கு உதவியாக
இருக்கும் என்று இட்டேன்.
*என்¨னைப்* பொருத்தவரைக்கும் சல்மா என்ற படைப்பாளி பற்றி எதுவும் தெரியாமல்
இருந்தது. இப்போது கொஞ்சமேனும் தெரிந்துகொண்டிருக்கிறேன்.
சல்மா பஞ்சாயத்துத் தலைவர் என்று தெரியும். ஆனால், அந்த நிகழ்வைச் சுற்றிய
சம்பவங்கள் எதுவும் அறியாமல் இருந்தேன். பல விஷயங்களைத் தெளிவு படுத்திக்
கொள்ளக் கூடியதாக இருந்தது. அவருடைய கவிதைகளை மீள வாசிக்கவேண்டும் என்று
மனது அலைபாய்கிறது.
(வேண்டுகோள்: பிகேஎஸ் மற்றும் சல்மாவின் கவிதைத் தொகுப்பு கைவசம் இருக்கும்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவருடைய சில கவிதைகளை இங்கு
இடுங்களேன். பிகேஎஸ் - உங்களிடம் இந்தத் தொகுப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில்
எழுதுகிறேன். மனது ஆலாய்ப்பறக்கிறது ஐயா. :( )
எனக்கு தைரியமான பெண்களை மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில்
பிறந்து ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய ஒருவர் இவ்வளவு தூரம் வளர்ந்திருப்பது
மனதிற்கு உத்வேகமாக, சந்தோஷமாக இருக்கிறது. இவரைப் போல முன்னேறிய
பெண்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.
நீங்கள் இலங்கை சென்றிருந்தபோது சல்மாவும் வந்திருந்ததாகக் கூறியது நினைவிருக்கி
றது. அவருடன் நீங்கள் பேசிப் பழகி இருப்பீர்கள். உங்கள் எண்ணங்களைப் பகி
ர்ந்துகொள்வீர்களா சாபு ஐயா?
அன்புடன்,
மதி
------------------------------------------
From: "mathygrps"
Date: Sat Jun 12, 2004 2:48 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
இது எனது அன்பான வேண்டுகோள். தவறாக நினைக்கவேண்டாம். என் கருத்தில்
ஒப்புமை இல்லாதவர்கள் தமது பக்கத்தைச் சொல்லலாம். நம்முடைய மிகப்பெரிய
பலவீனம் நாம் ஒப்பாதபோது மவுனம் காப்பதுதான்.
அன்புடன்
மதுரபாரதி
அன்புள்ள மதுரபாரதி ஐயா,
வணக்கம்!
ஐயா உங்களின் கருத்தில் இருந்து சற்றே மாறுபடுகிறேன்.
*என்னை*ப் பொருத்தவரைக்கும் 'பெண்ணியம்', 'பெண்ணியவாதிகள்'
என்றெல்லாம் தனியாகச் சுட்டப்பட்டு விவாதிக்கப்படும்போதும், நான் பெண் எனக்கு சி
றப்புத் தகுதி என்றும் இன்னபிற விஷயங்கள் பேசும்ப்பொது வாய்மூடி கவனிக்கிறேன்.
வளர்ந்த நாடுகளில் இப்படிக் கோஷம் போட்டுப் பேசுவது ஏன் என்று எனக்குப் புரிவதே
இல்லை. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் மற்றைய நாடுகளைப் போல அல்லாது
மக்கள் அவரவர் விருப்பப் படி நடந்துகொள்ளும் சுதந்திரம் இருக்கிறது.
அதே நேரத்தில் நான் வித்தியாசமானவள் என்று சொல்லி, ஆடை அணிகலன், பழக்க
வழக்கங்களை - பட்டுப் புடவை கட்டினால் கூடாது, நகைகள் அணிந்தால் கூடாது,
வாசனைத் திரவியங்கள் அணிந்தால் கூடாது, சமையலைப் பற்றிப் பேசினால் பி
ற்போக்குவாதி என்றெல்ல்லம் மேலோட்டமாகக் கருதுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.
(சம்பந்தா சம்பந்தமில்லாமல் முன்னுரை எழுதியாச்சு இனி விஷயத்துக்கு )
நீங்கள் சொன்னதுபோல இங்கே சல்மா மதத்தைப் பற்றி செவ்வி கொடுத்திருக்கவில்லை
என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய வாழ்க்கையை, அனுபவங்களை,
போராட்டங்களை எல்லாம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
மதரீதியாக சச்சரவு எழுப்புவது அவருடைய நோக்கம் இல்லை என்று நம்புகிறேன். சல்மா
தன்னுடைய வலிக்களை, நோவை, ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இப்படியும் நடக்கிறது என்று தெரிந்துகொள்ள அவருடைய செவ்வி உதவியாக இருக்கிறது.
நமது மக்கள் எப்போதுமே ஒன்று பேசாமல் இருப்பார்கள் அல்லது knee-jerk ரியாக்ஷன்
செய்வார்கள். நிறைய விஷயங்களில் அப்படித்தான். பல சமயங்களில் we take things
too personal. இதுபோல பாய்க்குக் கீழே தள்ளித் தள்ளி அது ஒரு குன்று போல
வளர்ந்துவிட்டது ஐயா.
நான் இந்தச் செவ்வியை இங்கே அனுப்பும்போது சல்மா என்ற படைப்பாளியைப் பற்றி
நண்பர்கள் அறிந்துகொள்வது நல்லது என்று அனுப்பினேன். இப்போது இன்னுமொரு
யோசனையும் எழுகிறது. இங்கே கற்றறிந்த, உணர்ச்சிவசப்படாத, நடுநிலமையான
(ஆணுக்கொரு வாதம் பெண்ணுக்கொரு வாதம் என்று சொல்லாத ஆசாத் பாய் இருக்கி
றார். சாபு ஐயா, ஆசீ·ப் இருக்கிறார்.
மதுரபாரதி ஐயா: இப்பேட்டியைப் படித்த பிறகு முன்பே பிடித்திருந்த கவிஞர் சல்மாவை
இன்னமும் அதிகமாகப் பிடித்திருக்கிறது.
விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு,
மதி
(பி.கு: இதனால் யாரேனும் மனம் நொந்தால் தயவு செய்து கூறுங்கள்.)
--------------------------------
From: "Abul Kalam Azad"
Date: Sat Jun 12, 2004 3:40 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
மதரீதியாக சச்சரவு எழுப்புவது அவருடைய நோக்கம் இல்லை என்று
நம்புகிறேன்.
இனிய மதி,
மதரீதியாக பிரச்சனைகளை எழுப்புவது அவரது நோக்கம் அல்ல. ஆனால்,
இந்த செவ்வியின் பல பகுதிகளில் பேசப்படுவது என்ன. தலாக் பேசப்
படவில்லையா?
முத்தலாக் என்ற வார்த்தையே தவறு என்று சில அறிஞர்களும் என்னைப்
போன்றவர்களும் சொல்வதை இங்கு நான் ஏற்கெனவே பகிர்ந்துள்ளேன்.
சல்மா அவர்களின் செவ்வியிலும் இந்த தலாக் பிரச்சனையைச் சொல்கிறார்.
அது சரியாக விளக்கப்படவில்லையென்றால் சர்ச்சைக்குறியதாகும்.
இங்கே கற்றறிந்த, உணர்ச்சிவசப்படாத, நடுநிலமையான
(ஆணுக்கொரு வாதம் பெண்ணுக்கொரு வாதம் என்று சொல்லாத *ஆசாத்
பாய்* இருக்கிறார். சாபு ஐயா, ஆசீ·ப் இருக்கிறார்.
அதெல்லாம் சரிங்க, ஆசாத் அண்ணன் உங்களுக்கு எப்ப ஆசாத் பாய் ஆனாரு :)
அன்புடன்
ஆசாத்
பி.கு.:
ரெண்டு நாள்..ரெண்டே நாள், சல்மா லாத்தா பேட்டில இருக்க மார்க்க சம்
மந்தப்பட்ட விஷயங்களுக்கு பதிலோட வரேன்.
----------------------
From: "mathygrps"
Date: Sat Jun 12, 2004 3:49 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
அன்புள்ள ஆசாத் *அண்ணனுக்கு*,
அதெல்லாம் சரிங்க, ஆசாத் அண்ணன் உங்களுக்கு எப்ப ஆசாத் பாய் ஆனாரு :)
முந்தியும் சில சமயம் பாய்னும் சில சமயம் அண்ணன்னும் விளித்திருக்கிறேனே?
(கேவியார் இதுக்கும் ஒன்லைனர் போட்டிராதீங்க. தாங்காது! :) )
மதரீதியாக சச்சரவு எழுப்புவது அவருடைய நோக்கம் இல்லை என்று
நம்புகிறேன்.
மதரீதியாக பிரச்சனைகளை எழுப்புவது அவரது நோக்கம் அல்ல. ஆனால்,
இந்த செவ்வியின் பல பகுதிகளில் பேசப்படுவது என்ன. தலாக் பேசப்
படவில்லையா?
எனக்குப் புரியலை. என்னால பிரிச்சுப் பிரிச்சுப் பார்க்க முடியலை. என்னைப்
பொருத்தவரைக்கும் சல்மா பற்றிய படைப்பாளியை அறிய இந்தச் செவ்வி உதவி இருக்கி
றது. அவ்வளவுதான். அன்னம் மாதிரி எனக்குத் தேவையான விஷயங்கள் நிறைய இந்தச்
செவ்வியில் இருக்கு. அதை எடுத்துக்கிட்டேன்.
நான் இங்கே இந்தச் செவ்வியைப் போட்டது கூடாது என்று நினைக்கிறீங்களா
ஆசாத் அண்ணே?
பி.கு.:
ரெண்டு நாள்..ரெண்டே நாள், சல்மா லாத்தா பேட்டில இருக்க மார்க்க சம்
மந்தப்பட்ட விஷயங்களுக்கு பதிலோட வரேன்.வாங்க வாங்க. காத்துக்கிட்டு இருக்கேன்.
அன்புடன்,
மதி
----------------------------------------------------------
From: "Abul Kalam Azad"
Date: Sat Jun 12, 2004 4:01 pm
Subject: Re: An interview with Kavinjar Salma -2
நான் இங்கே இந்தச் செவ்வியைப் போட்டது கூடாது என்று நினைக்கிறீங்களா
ஆசாத் அண்ணே?
இனிய மதி
என்னைப் பொறுத்தவரையில் அந்த செவ்வியை நீங்கள் இங்கு போட்டது சரி தவறு
என்பதைவிட அவர்கள் சொல்லியிருக்கும் சில கருத்துகளுக்கு விளக்கம் சொல்ல
வாய்ப்பு கிடைத்ததே என்பதால் மகிழ்கிறேன்.
விளக்கமாக பிறகு எழுதுகிறேனே...
அன்புடன்
அண்ணன்
ஆசாத்
------------------------------------------
தொடர்ச்சி
Monday, June 14, 2004
அக்கரைப் பச்சைகள்

என் சின்னவன் மடிக்குள் கிடந்து முட்டி முட்டிப் பாலைக் குடிக்கும் போதுதான் அவள் வந்தாள். எப்போதும் அவள் இப்படித்தான் பல்கலைக்கழகத்திலிருந்து லீவில் வரும் போதெல்லாம் என் வீட்டை எட்டிப் பாராது தன் வீட்டுக்குப் போக மாட்டாள்.
சொந்தம் என்பதையும் விட ஒன்றாகப் படித்து ஒன்றாக இலந்தைப் பழம் பொறுக்கி ஒன்றாக மாங்கொட்டை போட்டு, ஒன்றாக கிளித்தட்டு விளையாடி........ என்று அரிவரியிலிருந்து ஒன்றாகவே என்னோடு உயர்தரம் வரை பயணித்தவள். எப்போதும் ஒன்றியிருக்கும் எமக்குள் பரீட்சைப் புள்ளிகளில் மட்டும் போட்டி வரும். ஒரு தரம் government test இல் கணிதத்துக்கு பாடசாலையே வியக்கும் படியாக அவளுக்கும் எனக்கும் ஒரே புள்ளிகள்.
இப்படியெல்லாம் படித்து விட்டு நான் ஒரு அவசரக் குடுக்கை. அவசரப் பட்டு கல்யாணம் செய்து மூன்று பிள்ளைகளையும் பெற்று குடும்ப சாகரத்தில் விழுந்து விட்டேன். கண்டறியாத காதல் எனக்கு.
அவள் trouser ம் போட்டுக் கொண்டு வந்து "ஹாய்" என்ற படி என் வீட்டு விறாந்தை நுனியில் அமர்ந்தாள். சின்ன வயசிலிருந்தே அவளும் நானும் அமர்ந்திருந்து கதைக்கும் இடம் அதுதான்.
பிச்சிப்பூ வாசத்தை நுகர்ந்த படி கப்போடு சாய்ந்து கொண்டு படிக்கும் போது கதையளந்ததுக்கும் இப்போதுக்கும் கனக்க வித்தியாசம். சுவாரஸ்யமான கதைகளில் முன்னர் போல மூழ்க முடியாமல் பிள்ளைகளின் பக்கம் என் கவனம் சிதறிக் கொண்டே இருந்தது.
அவள் பல்கலைக்கழகப் புதினங்களை அளந்து கொண்டேயிருந்தாள்.
எனக்கு என் மேலேயே கோபமாய் வந்தது. நானும் போயிருக்கலாம்தானே. எத்தனை தரமாய் எல்லோரும் சொன்னார்கள். பெரிய ரோமியோ யூலியட் காதல் என்பது போல ஒரே பிடியாய் நின்று......... இப்ப இவள் ஒரு சுதந்திரப் பறவை. நான் பிள்ளையளோடை மாரடிக்கிறன்.
அம்மா ஆடிப்பிறப்புக்கு கொழுக்கட்டை அவிக்க என்று நேற்றுத்தான் பயறு வறுத்து, உடைத்து, கொழித்தவ. கொழித்து வந்த பயத்தம் மூக்கை எப்பவும் போல ஹொர்லிக்ஸ் போத்தலுக்குள்ளை போட்டு வைத்தவ. அதில் ஒரு பிடி எடுத்து சர்க்கரையும் தேங்காய்ப்பூவும் போட்டுப் பிசைந்து இரண்டு dish களில் போட்டுக் கொண்டு வந்து தந்தா. சுகிக்கு அது நல்லாகப் பிடிக்கும் என்று அம்மாவுக்குத் தெரியும். சுகி அதை ரசித்துச் சாப்பிடத் தொடங்கினாள்.
நான் ஒரு கரண்டியை வாயில் போட்டு விட்டுப் பக்கத்தில் வைத்தேன்.
மூத்தவன் வந்து "அம்மா..! ஆ... ஆ..." என்று வாயைத் திறந்தான். ஒரு கரண்டியை அவனுக்கு ஊட்டி விட்டேன். இரண்டாமவன் வந்து "தம்பியைத் தொட்டிலிலை போடுங்கோ. நான் மடியிலை படுக்கப் போறன்." என்று மழலை பொழிந்தான்.
பல்கலைக்கழகப் புதினங்களை சுகி நிறுத்தி நிறுத்திச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். சின்னவகுப்பில் எங்களோடு படித்த தேவநாயகத்துக்கும் வானதிக்கும் காதலாம். எனக்கு நம்ப இயலாமல் இருந்தது. எங்களோடு படிக்கிற பொழுது தேவநாயகம் நெற்றியில் வடியத்தக்கதாக தலையிலை எண்ணெய் தப்பிக் கொண்டு, கன்ன உச்சியும் பிறிச்சுக் கொண்டு..........
"அவனைக் காதலிக்கிறாளோ வானதி..?"
வானதி எங்களுக்கு அடுத்த batch.
"உனக்கு இளப்பமா இருக்கே..? அவன் இப்ப எஞ்சினியர் தெரியுமே..! இப்ப அவனைப் பாத்தாயென்றால் நீயே லொள்ளு விடுவாய்."
எனக்கு அவளின் கதையைக் கேட்கக் கேட்க ஆச்சரியமாகவே இருந்தது. காதல் என்ற சொல்லைச் சொல்வதே பாவம் என்பது போல இருந்தவள் பல்கலைக் கழகம் போகத் தொடங்கிய பின் இப்பிடித்தான் லொள்ளு.. அது இது என்று புதுப் புதுச் சொற்களாய் உதிர்க்கிறாள். கூச்சமென்பதே இல்லாமல் பட் பட்டென்று மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியில் கொட்டுகிறாள். பொறாமையோடு அவளைப் பார்த்தேன். இத்தனையையும் இழந்து விட்டேனே என்ற ஆதங்கத்தில் எனக்குள் வெம்பினேன்.
அந்த நேரம் பார்த்து அவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு.
"உனக்கென்ன...? நீ கலியாணம் கட்டிப் போட்டு குழந்தைகள் குட்டிகள் எண்டு எவ்வளவு சந்தோசமாயிருக்கிறாய். எனக்கு எரிச்சல்தான் வருது. இன்னும் படிப்பு.. பரீட்சை எண்டு புத்தகங்களையும் காவிக் கொண்டு........."
மனசுக்குள் சில்லென்ற ஒரு உணர்வு.
மூத்தவன் மீண்டும் வந்து என் முதுகுப் பக்கமாக வளைந்து என்னைக் கட்டிப் பிடித்தான். அந்த ஸ்பரிசம் வழமையையும் விட அதீத சுகமாய்.... நான் அவனை அப்படியே இழுத்து இறுக அணைத்துக் கொண்டேன்.
(1982 ம் ஆண்டுக் காலப் பகுதியோடான நிகழ்வின் புனைவு)
சந்திரவதனா
யேர்மனி
27.5.2004
Friday, June 11, 2004
Thursday, June 10, 2004
Just a Little Red Dot

தோழியரின் வலைப்பதிவில் சந்திரலேகா தந்த பொட்டு பற்றிய கட்டுரை ஒன்றின் தமிழாக்கத்தின் மூலம் அமெரிக்காவில் முன்னர் பொட்டு வைப்பவர்களுக்கு எதிரான இனவெறி இயக்கம் ஒன்று இருந்ததை அறிய முடிந்தது.
இந்த இனவெறி பற்றிய எண்ணங்களை மாற்றும் நோக்குடன் Just a Little Red Dot என்ற 35நிமிட வீடியோப் படம் ஒன்று கனடாவின் Toranto மாநிலத்தில் உள்ள Tom' O'Shanter Junior என்ற அரச பாடசாலையின் ஆசிரியையான இந்தியப் பெண் மித்ரா சென் என்பவரால் எடுக்கப் பட்டுள்ளது.
Just a Little Red Dot Screening
The story of a Little Red Dot
Wednesday, June 09, 2004
வலைவலம் - 9.6.2004
யாருக்காவது பொழுது போகவில்லையா? அல்லது ரிலாக்ஸ் தேவையா?
John Bosco சில விளையாட்டுக்கள் வைத்திருக்கிறார்.
Carom எனக்கும் பிடிக்கும்.
பொன்மொழிகளும் தாராளமாக உண்டு
அஜீவன் புதிய குடில் அமைத்துள்ளார்.
இவரது குடிலில் இவர் எடுத்த குறும்படங்கள் பற்றிய பார்வைகளும்
மற்றையவர்களது குறும்படங்கள் மீதான இவரது பார்வைகளும்
சினிமா உலகோடான இவரது அனுபவங்களும் பதியப் பட்டுள்ளன.
கவிஞர் சல்மா
ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக
கவனம் பெற்ற முக்கியக் கவிஞரான சல்மாவுடன் ஒரு நேர்காணல்.
நேர்காண்கிறார் பெ.அய்யனார்.
கவனம் பெற்ற முக்கியக் கவிஞரான சல்மாவுடன் ஒரு நேர்காணல்.
நேர்காண்கிறார் பெ.அய்யனார்.
Sunday, June 06, 2004
நிதர்சினி
பாரிஸ் நகரில் 12.2.1999 அன்று 12 வயது நிரம்பிய தமிழ்ச்சிறுமி நிதர்சினி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு, படுகொலை செய்யப் பட்டாள். நெஞ்சை உலுக்கிய அந்தக் கொலையைச் செய்தவர்கள் தமிழர்கள்தான். இன்று நினைத்தாலும் மனசு அதிர்கிறது.
வீட்டுக்கு நண்பர்கள் போல வந்து போகும் இரு தமிழர்கள்தான் நிதர்சினியின் அம்மா அப்பா இல்லாத ஒரு பொழுதில் வீட்டினுள் புகுந்து இந்தக் கொடுமையைச் செய்தார்கள். புலம் பெயருமளவுக்கு எம் வாழ்வில் அவலங்கள் நேர்ந்திருக்கும் காலத்தில் இப்படியொரு தகாத காரியத்தை எமது தமிழரே எப்படிச் செய்யத் துணிந்தார்களோ...?
கடந்த 24, 25 ந்திகதிகளில் இவர்களது மேன்முறையீட்டு மனுவை பிரான்சின் வேர்சைல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து, கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞரும், மூளாயைச் சேர்ந்த 37 வயது இளைஞருமாகிய இக் கொலையைச் செய்த இருவருக்கும் பிரான்ஸ் சட்டவிதியில் உள்ள அதிஉயர்ந்த பட்ச தண்டனைக் கோவையான பெர்பியூ சட்டத்தின் கீழ் 22 வருடச் சிறைத்தண்டனை அளிக்க உறுதி செய்துள்ளது..
Saturday, June 05, 2004
TROJA
கடந்த வாரம் ரொஜா திரைப்படம் பார்த்தேன். சின்ன வயதில் படித்த சரித்திரக் கதைதான் மிகுந்த பிரமாண்டத்துடன் எடுக்கப் பட்டிருந்தது. அது பற்றிய விமர்சனத்தை எழுத வேண்டுமென்றதொரு உந்துதல் இன்னும் எனக்குள் உள்ளது.
ஆனாலும் நேரம் ஒத்துழைக்காததால் பிறிதொரு சமயத்தில் அது பற்றி எழுதலாமென நினைக்கிறேன்.
படத்தை Wolfgang Petersen இயக்கியிருந்தார். Brad Pitt, Eric Bana, Orlando Bloom, Diane Kruger, Brian Cox, Sean Bean, Peter O`Toole, Rose Byrne போன்றோர் நடித்திருந்தார்கள்.
Immer schon haben Menschen Kriege geführt. Manche wollten Macht, manche Ruhm oder Ehre – andere angeblich nur die Liebe. Im alten Griechenland hat die Leidenschaft eines Liebespaares einen Krieg ausgelöst, der eine ganze Zivilisation in den Untergang riss. Und das geschah so: Der Prinz von Troja (Orlando Bloom) raubt König Menelaos von Sparta (Brendan Gleeson) dessen Frau Helena (Diane Kruger). Aus Wut und Beleidigung schwört Menelaos blutige Rache.
Er muss Troja unterwerfen, um die Ägäis unter seine Kontrolle zu bekommen und so die Vorherrschaft seines bereits riesigen Reiches zu sichern. In der von Mauern bewehrten Stadt Troja regiert König Priamos (Peter O’Toole). Der titanische Prinz Hektor (Eric Bana) sorgt dort für die Verteidigung. Die Festung hat bisher allen feindlichen Angriffen widerstanden. Ob Troja siegt oder fällt, hängt nur von einem einzigen Mann ab: Achilles (Brad Pitt) – er gilt als der größte Krieger seiner Zeit.
Achilles ist jedoch arrogant, rebellisch und schier unüberwindlich – er nimmt für niemanden Partei, ihn interessiert allein sein eigener Ruhm. Weil er als Held unbedingt unsterblich werden will, entschließt er sich, für Agamemnon gegen die Tore Trojas zu stürmen – doch letztlich ist es die Liebe, die sein Schicksal besiegeln wird. Im Krieg um Ehre und Macht treffen zwei Welten aufeinander. Tausende werden dem Ruhm geopfert. Und aus Liebe wird ein ganzes Volk vernichtet ...
fotos-Warner
ஆனாலும் நேரம் ஒத்துழைக்காததால் பிறிதொரு சமயத்தில் அது பற்றி எழுதலாமென நினைக்கிறேன்.
படத்தை Wolfgang Petersen இயக்கியிருந்தார். Brad Pitt, Eric Bana, Orlando Bloom, Diane Kruger, Brian Cox, Sean Bean, Peter O`Toole, Rose Byrne போன்றோர் நடித்திருந்தார்கள்.



fotos-Warner
Friday, June 04, 2004
வலைவலம் - 04-06-04
ஈழநாதனின் கிறுக்கல்களில் பதியப்பட்ட ஈன்ற பொழுதில்.... கவிதையை வாசித்த போது என்னையறியாமலே கண்கள் பனித்து விட்டது.
மனம் எங்கோ சென்று விட்டது. இந்த சோகம் ஈழத்தில் எத்தனையோ பேருக்கு ஏற்பட்டது. எங்கள் வீடும் அதற்கு விதிவிலக்கல்ல.
1987-1988-1989 காலப் பகுதிகளில் தம்பி மொறிஸை இந்திய இராணுவம் தேடிக் கொண்டிருந்தது.
தம்பியைப் பிடிக்க முடியாத நிலையில்...
எரிச்சல் வரும் போதெல்லாம் இந்திய இராணுவம் கும்பலாய் எங்கள் வீட்டுக்கு வந்து
எனது பெற்றோரை சகோதரரை என்று கொடுமைப் படுத்திக் கொண்டே இருந்தது.
தாங்க முடியாத ஒரு கட்டத்தில் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் புலம் பெயர்ந்து விட்டார்கள்.
அப்போது எனது அப்பா யாழ் புகையிரதநிலையத்தில் கடமையில் இருந்ததால் அவருக்கென கொடுக்கப் பட்ட யாழ் புகையிரதநிலைய தண்டவாளங்களோடு ஒட்டியிருந்த குவார்ட்டர்ஸ்சிலேயே இவர்களும் தங்கி விட்டார்கள்.
ஆனால் ஸ்ரான்லி ரோட்டில் இருந்த இந்த வீட்டின் பின்புறமாக ரெயில்வே குவார்டர்ஸ்சோடு சேர்ந்தே இந்திய இராணுவம் தமது முகாமை அமைத்திருந்தது. இடையில் எட்டிப் பார்க்கக் கூடிய அளவில் ஒரு வேலிதான். எந்த நேரமும் அவர்கள் எமது வீட்டுக்குள் நுழையக் கூடிய வகையில் பின் படலை திறந்தே இருக்க வேண்டும். இது அவர்கள் எனது குடும்பத்துக்கு இட்ட கட்டளை.
அப்பா அவர்களுக்கு பச்சைப் பொய் சொல்லி வைத்திருந்தார். தனக்கு ஒரேயொரு ஆண்பிள்ளைதான் என்றும். அவரும் சவுதியில் என்றும். அவர்களுக்கு புகையிரத நிலைய தலைமை அதிபரான அப்பாவில் நல்ல நம்பிக்கையும் மதிப்பும். அதனால் அப்பாவின் அவசரகால அவசியப் பொய்யை நம்பி விட்டார்கள்.
உள்ளுக்குள் பயத்தைச் சுமந்து கொண்டு வெளிக்கு அவர்களோடு நட்பாகப் பழகிய எமது குடும்பத்துக்கும் அந்த நாள் வந்தது.
தம்பி மொறிஸ் 1.5.1989 அன்று வீரமரணம் எய்தி விட்டான். செய்தியை உறவினர் வல்லைவெளியினூடாகக் கொண்டு வந்திருந்தனர்.
அந்தப் பொழுதில் ஊர்கூட்டி அழவோ, மார்தட்டிப் புலம்பவோ, மனம் ஆறும் படி கதறவோ முடியாது சோகத்தை நெஞ்சுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு எனது அம்மாவும் அப்பாவும் சகோதரிகளும் பட்ட வேதனைகள் கொஞ்சமல்ல. இதை எனது சகோதரி சந்திரா ரவீந்திரன் "முறியாதபனை" என்ற தலைப்பில் ஒரு கதைபோல எழுதினார். பத்மனாபஐயரின் யுகம்மாறும் தொகுப்பில் இடம் பெற்றது.
இத் துயரச் சம்பவத்தின் போது நான் அவர்கள் அருகில் இருக்க முடியாத படி யேர்மனியில் இருந்தேன். இப்போது போல தொலைபேசவோ, உடனுக்குடன் கடிதங்களை அனுப்பவோ, மின்னஞ்சல் எழுதவோ முடியாத வதையான காலமது.
ஈழநாதனின் இன்றைய ஈன்ற பொழுதில்.... கவிதை என்னை மீண்டும் ஒரு தரம் உலுக்கி விட்டிருக்கிறது.
வலைவலம் - 04-06-04
நான்கைந்து நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து விட்டு
என்ன எழுதுவது என்று தெரியவில்லை. யாராவது சொல்லுங்களேன். என்று அப்பாவியாய் கேட்டிருந்தார் பார்வை - சுரேன் நடேசன்.
இன்று போய்ப் பார்த்தால் பலவிதமான விடயங்களை எம்மோடு பகிர்ந்துள்ளார்.
இயல்பிலேயே மற்றவர்களின் ஆக்கங்களை எல்லாம் அலுக்காது சலிக்காது வாசித்து, அதை மற்றவரோடும் பகிர்ந்து கொள்ளும் தன்மை கொண்டவர் சுரேன்.
இவர் நிட்சயமாக எமக்கெட்டாத விடயங்களையெல்லாம் இங்கு பதிந்து எம்மைத் தன் வலைப்பதிவின்பால் ஈர்ப்பார் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.
Thursday, June 03, 2004
கண்ணாடி
இப்படியும் மனிதர்கள் ஏமாற்ற முனைவார்களா?
செல்வராஜா கண்கள் சொல்லும் கதை சொல்கிறார். நானும் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட கதை.
1991 இல் Car லைசென்ஸ் எடுக்கும் போது கண்களைச் சோதித்துப் பார்த்து கண்ணாடி போட வேண்டுமென்று சொன்னார்கள். அத்தோடு விட்டு விடாமல் எனது லைசென்ஸ் இல் கண்ணாடியோடுதான் Car ஓட்ட வேண்டுமென்ற முத்திரையும் குத்தி விட்டார்கள்.
சின்ன வயதில் சாதுவாக இருந்த ஆசை பெரிய வயதில் நிறைவேறிய போதுதான் கண்ணாடி அணிவது எத்துணை அசௌகரியமானது என்பது விளங்கியது. ஒரு சின்னத்தூசி கண்ணாடியில் இருந்தாலே போதும். ஒரு பெரிய தலையிடிக்கு அது காரணமாகிவிடும். எப்படித்தான் துடைத்துத் துடைத்துப் பாவித்தாலும் ஏதாவது வந்து விடும். எதுவோ மறைப்பது போலச் சினம் கொடுக்கும்.
இத்தனைக்கும் மேலால் எனக்கு கண்ணாடி போடுவதற்கும் போடாமல் இருப்பதற்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரியவுமில்லை. அதனால் கொஞ்சக் காலத்தில் வேண்டாமப்பா இந்தத் தலையிடி என்று நினைத்துக் கண்ணாடியைக் கழற்றியும் வைத்து விட்டேன்.
எனது லைசென்ஸில் கண்ணாடியின் அவசியம் வலியுறுத்தப் பட்டிருப்பதால் ஏதாவது சோதனைகளின் போது மாட்டி, கண்ணாடி அணியாமல் Car ஓடியதற்கான தண்டனையைப் பெறாதிருப்பதற்காக எனது கண்ணாடி எப்போதும் எனது காரினுள்ளேயே இருக்கும். 1991 கார்த்திகை மாதத்துக்குப் பின் அதை நான் எப்போதுமே அணிந்ததில்லை.
இப்படியிருக்க கடந்த மாதம் நான் வேலை பார்க்கும் வங்கியில் முழுமையான மருத்துவச் சோதனை செய்வதற்காக எம்மை அழைத்திருந்தார்கள். விரும்பியவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் போய்ச் செய்யலாம். முழுக்க முழுக்க இலவசம். ஏன் விடுவான்..! என்ற எண்ணம் தோன்ற நானும் சென்றேன். ஒவ்வொரு கொம்பனியிலிருந்தும் வந்து கண் தெரிகிறதா..!, காது கேட்கிறதா..! என்பதிலிருந்து இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம்... என்று சகலதையும் சோதித்து இறுதியில் முதுகு, தோள்மூட்டு என்று நல்லதொரு Massage ம் செய்து விட்டார்கள். வீடு திரும்பும் போது எனக்கு வலு சந்தோசமாக இருந்தது.
கண்ணைச் சோதிக்கும் போது என்னைச் சோதித்தவர்
"என்ன நீ கண்ணாடி போடாமல் இருக்கிறாயா? உனது கண் எவ்வளவு பார்வைக் குறைபாட்டுடன் இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? இந்த நிலையில் நீ கார் ஓட்டவே கூடாது......... "
என்று ஒரு பிரசங்கமே வைத்தார்.
இறுதியாக எனது கண்பார்வையின் குறைபாட்டு அளவுகளை எழுதி ஒரு துண்டு தந்தார். எனது கடைக்கு வந்தாயானால் 20வீதம் கழிவுடன் கண்ணாடி தருவேன் என்றும் சொல்லி விட்டார்.
நான் மனசுக்குள் எனது வங்கிக்கு நன்றி சொன்னேன். இப்படியொரு இலவச வசதியை அவர்கள் செய்து தராது விட்டிருந்தால் நான் இப்போது கூட எனது பார்வைக் குறைபாட்டைக் கவனித்திருக்க மாட்டேன் என நினைத்துக் கொண்டேன்.
ஒரு வாரம் கழித்து குறிப்பிட்ட கடை எங்கிருக்கும் என்று தேடியபோது அது எனது வீட்டில் இருந்து மிகுந்த தூரத்தில் இருப்பதை அறிய முடிந்தது. பெற்றோலைச் செலவழித்து அங்கு போவதை விடுத்து எனது நகரில் எனக்கு அருகாமையில் இருக்கும் கண்ணாடிக் கடைகளை நோட்டம் விட்டேன். "மருத்துவரிடம் சென்று 10யூரோவைச் செலவழிக்காதீர்கள். எங்களிடம் வாருங்கள். நாங்கள் இலவசமாக உங்கள் கண்களைப் பரிசோதிக்கிறோம்"
என்ற வாசகங்கள் சில கடைகளில் பொறிக்கப் பட்டிருந்தன.
இந்த வருடத்திலிருந்து யேர்மனியில் அமுலாக்கப் பட்டிருக்கும் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு காலாண்டுக்கும் மருத்துவரிடம் செல்லும் போது 10யூரோக்கள் செலுத்த வேண்டும். அந்த 10யூரோவை மிச்சம் பிடிப்போம் என்ற எண்ணத்துடன் ஒரு கண்ணாடிக் கடைக்குள் புகுந்து வங்கியில் கிடைத்த துண்டையும் கொடுத்து என்னைப் பரிசோதிக்கச் சொன்னேன். அங்கு ஒரு பெண் என்னைப் பரிசோதித்து "கண்ணாடி இல்லாமல் எப்படி நடக்கிறாய்...?" என்பது போன்ற பாணியில் என்னோடு பேசினாள்.
வேறு வழியில்லை என்ற நிலையில் நான் கோயில் மாடு போலத் தலையாட்ட அவர்கள் எனக்கான கண்ணாடியைத் தெரிவு செய்து எனக்குப் பிடித்த ஐயும் எடுத்துக் காட்டினார்கள். நான் எனது தகுதிக்கு ஏற்ற விலையில் என் முகத்துக்கும் ஓரளவு பொருந்தக் கூடிய வடிவத்தில் Frame ஐத் தெரிவு செய்திருந்தேன். எல்லாம் முடியத்தான் தெரிந்தது இந்த வருடத்திலிருந்து Frame க்கு மட்டுமல்ல கண்ணாடிக்கான பணத்தையும் நானேதான் கொடுக்க வேண்டுமென்பது. இதுவரை காலமும் எமது மருத்துவக் காப்புறுதி இச் செலவை ஏற்றுக் கொண்டிருந்தது.
ம்... எனக்கு அவ்வளவு பணம் கொட்டி கண்ணாடியைப் பெற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. உடனேயே "எனது கண்ணாடிக்கான வேலைகளைத் தொடராதீர்கள். நான் வீட்டுக்குப் போய் தொலைபேசியில் எனது முடிவைச் சொல்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டேன்.
மனசுக்குள் குழப்பம். இவ்வளவு பணத்தை செலவழிக்கத்தான் வேணுமா? அப்படிச் செலவழிப்பதாயின் 10யூரோ செலவழித்து டொக்டரிடம் காட்டி மிகச் சரியான கண்ணாடியைப் பெற்றுக் கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றியது. டொக்டரிடம் நாள் குறித்து விட்டுச் சென்றேன். ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பரவாயில்லை. அங்கிருந்த Magazins ஐ வாசித்துக் கொண்டிருந்தேன்.
ஒருவாறு Doctor என்னை அழைத்து மிகவும் சிரத்தையோடு கண்களைப் பரிசோதித்தார். இறுதியில் ஒரு சிரிப்போடு
"யார் உன்னைக் கண்ணாடி அணியச் சொன்னார்கள்"
என்று வினவினார். யாரென்று சொன்னேன்.
அவர் மீண்டும் சிரித்து விட்டு
"உனது கண்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவே இருக்கின்றன. உனக்கு கண்ணாடியே தேவையில்லை."
என்றார்.
நல்லவேளை தப்பித்துக் கொண்டேன். என்ற உணர்வோடு Doctorக்கு நன்றி சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்.
Wednesday, June 02, 2004
மனநோயாளி

நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி.....!
உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.
திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்.....
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு....... நான்
அவை
வெடித்துச் சிதறி....
- மனநோயாளி - என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா...?
நடிப்புடனா...?
சந்திரவதனா-யேர்மனி
24.3.2002
(கணவனால் கைவிடப்பட்ட நண்பிக்காக)
Tuesday, June 01, 2004
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
▼
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ▼ June 2004 ( 23 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )