Wednesday, September 29, 2004
இன்றைய எனது நிலை
வீட்டிலே நாளாந்தம் செய்யும் கூட்டல், கழுவல், துடைத்தல், அடுக்கல்... இவைகளோடு வெளி வேலைகளுக்கான ஒட்டம்.. இத்தனையும் மாற்றமின்றி ஓர் ஒழுங்கில் நடந்து கொண்டிருக்கும் போது, மேலதிகமாக ஓரிரு வேலைகள் சேர்ந்து விட்டாலோ, அன்றி முக்கியமான விருந்தினர் யாராவது வீட்டுக்கு வரப் போகிறார்கள் என்றாலோ, மனதில் ஒருவித பதட்டம் ஏற்படும். வேலைகள் குவிந்து கிடந்தாலும் எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியாத அந்தரத்தில் ஒரு வேலையுமே நடவாது இருக்கும்.
இது போலத்தான் - சிந்தனைகள் ஒரு சீரில் சென்று கொண்டிருக்கும் போது நிறைய எழுதுபவர்கள் கூட, சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் சிதறும் போது திண்டாடிப் போகிறார்கள். இந்த சமயங்களில் நிறைய எழுத வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். சிந்தனை ஓட்டத்தில் ஓராயிரம் சம்பவங்களும், அதனோடு சேர்ந்த கற்பனைகளும், அதையொட்டிய புனைவுகளும்... என்று பிரவாகித்து எழும். ஆனாலும் அவைகளை எழுத்தாக்க எண்ணும் போதுதான் அவைகள் எதுவுமே தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத பிரவாகங்கள் என்பது புரியும்.
சில சமயங்களில் ஏதேதோ கற்பனைகள் ஓடும். போயிருந்து எழுதுவதற்கான உந்துதல் மட்டும் சற்றேனும் இல்லாது மனம் சோம்பேறியாய் கற்பனைக்குள் மட்டும் குந்தியிருக்கும்.
அதனால், என்னை நினைந்து வந்தவர்களுக்காக...
ஒரு இனிய பாடலுக்கான சுட்டி.
Wednesday, September 22, 2004
இந்த வார வலைப்பூ ஆசிரியர் பணியில் இதுவரை
September 22, 2004
சிலந்தியின் ஆசை
ரமணியும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் ஆரம்பகாலப் பதிவாளர்களில் ஒருவர். இவர் இன்னும் சில பெயர்களில் பதிவுகளை வைத்திருக்கிறார்.
இவர் அப்போதே அம்மாவுக்கு ஏற்ற இணையம் வேண்டும் என அவாப்பட்டுக் கொண்டார். இவரது ஆசை முற்றுமுழுதாக நிறைவேறியதோ இல்லையோ இந்த ஒரு வருடத்துக்குள் தமிழ் வலையுலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
வெறுமனே வார மாத சஞ்சிகைகளின் வாசகர்களாக இருந்தவர்களும், உள்ளக் கிடக்கைகளை நாளேட்டில் எழுதி வைத்தவர்களும்.. என்று கணிசமான தொகையினர் தமிழில் வலைப்பதிய ஆரம்பித்து விட்டார்கள். எத்தனையோ இலைமறைகாயாக இருந்த எழுத்தார்வலர்கள், வெளியுலகத்துக்கு வரத் தொடங்கி விட்டார்கள். தமது திறமை தமக்கே தெரியாமல் இருந்த பலர் தம்மாலும் முடியும் என்ற தைரியத்தோடு எழுதத் தொடங்கி விட்டார்கள். தமிழை மெதுமெதுவாக மறக்கத் தொடங்கியவர்கள் மீண்டும் தமிழோடு ஐக்கியமாகி விட்டார்கள். பாவனையிலிருந்து விலகியிருந்த எத்தனையோ தமிழ்ச்சொற்கள் மீண்டும் பாவனைக்குள்ளாகத் தொடங்கி விட்டன.
பல் வேறு தரத்தினரும், பல் வேறு துறைகளில் ஆர்வமுள்ளவர்களும் வலைப்பதியத் தொடங்கியதில் வலைப்பூக்களைத் தரிசிக்கும் ஒவ்வொருவருமே தத்தமது ஆர்வத்துக்கு ஏற்புடையதான விடயங்களைத் தேடி எடுத்து வாசித்து, ஏதோ ஒரு வகையில் பயனாளிகளாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் காசியின் முயற்சியில் உருவான தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம், வலையுலகுக்கும் வலைப்பூ ஆர்வலர்களுக்கும் கிடைத்த பெரியதொரு வரப்பிரசாதம்.
இந்தளவு வளர்ந்த வலைப்பதிவுகளை இன்னும் வளர்க்கவும், பிரபல்யப் படுத்தி இன்னும் பலர் வலைப்பதிவுகளோடு இணைந்து கொள்ளவும் இது பற்றியதான கட்டுரைகளை எழுத வேண்டுமென காசிக்கு ஒரு கடிதம் வரைந்துள்ளார் ரமணி. வாசித்துப் பாருங்கள். காசி மட்டுமென்றில்லாமல் மற்றவர்களும் உங்கள் உங்கள் இடங்களில் உள்ள நல்ல பத்திரிகைகளுக்கு இது சம்பந்தமான கட்டுரைகளை எழுதிக் கொடுக்கலாம்.
சந்திரவதனா
September 21, 2004
புதியவர்
எதிர் வரும் இளைய தலைமுறையிடம் தமிழினைச் சேர்ப்பிக்கும் ஊடகமாய் இணையம் இருக்கும் தறுவாயில், இணைய மொழியாக்கம் மிகத் தேவையான ஒன்றுதான்! என்கிறார் புதியவர் யூனா
chandravathanaa
ஆரம்பகால வலைப்பதிவாளர்கள்
ஆரம்பகால வலைப்பதிவாளர்கள் பலர் காணாமற் போய் விட்டார்கள். ஆனாலும் எளிதில் அவர்களை மறந்து விட முடியாது. வலைப்பதிவுகளின் மேல் இன்றைய தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் வலைப்பதிவு செய்து வளர்த்து விட்டவர்கள் அவர்கள்.
ஆரம்ப கால வலைப்பதிவாளர்களில் சுபாவின் பதிவுகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ஆரம்பகாலம் போல அடிக்கடி பதியாவிட்டாலும் இப்போதும் இடையிடையே வந்து ஏதாவது எழுதிக் கொண்டுதானிருக்கிறார். இவர் யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்ததால் ஆரம்பத்தில் யேர்மனி பற்றிய விடயங்களை Germany in Focus என்ற தலைப்பில் எழுதிக் கொண்டிருந்தார். இவர் இன்னும் பல வலைப்பதிவுகளை வைத்திருந்தாலும் இது பலரைக் கவர்ந்த பதிவுகளில் ஒன்று. மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு கட்டத்தில் Malaysia in Focus என்ற தலைப்பில் சுபா இல்லம் ஒன்றை அமைத்து மலேசியா பற்றிய பல விடயங்களையும் எழுதத் தொடங்கினார். ஆனாலும் முந்தைய வேகம் ஏனோ இப்போது இல்லை. இவரது மலேசியா சம்பந்தமான இறுதிப் பதிவில் தாயின் மரணம் குறித்து வருந்தியுள்ளார். தாயில்லாத தாய்நாட்டுக்குப் போகும் போதான அவர் மனதின் ஆதங்கம் புரிகிறது. மனதின் சோகம்தான் எழுத்தை முடக்கியதோ என்பதுதான் தெரியவில்லை.
இவர் கடந்த வருடம் ஐப்பசி மாதத்தில் வலைப்பூ ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ஹரன் பிரசன்னா இவரும் ஆரம்பகால வலைப்பதிவாளர்களில் ஒருவர். நிழல்கள் என்ற பதிவில் நினைவுகளை உணர்வுகளோடு கலந்து கதையாய், கவிதையாய்... என்று பதிந்துள்ளார்.
தற்போது கம்பராமாயணம், பாஞ்சாலி சபதம்.. என்று மரபிலக்கியங்களையும் பதியத் தொடங்கியுள்ளார்.
இங்கு தவறாக எழுதி விட்டேன்.
மரபிலக்கியத்தை எழுதுபவர் Hari Krishnan
நா.கண்ணன் இவரும் ஆரம்பகாலப்பதிவாளர்களில் ஒருவர். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்துள்ளார். கவிதை, கட்டுரை, கொரியக் கட்டுரைகள் என்று பல தரப்பட்ட விடயங்களைப் பதிந்து கொண்டு வந்தாலும், 44அங்கங்களைத் தாண்டி விட்ட இவரது வைகைக்கரைக்காற்றே பலரைக் கவர்ந்த தொடர்களில் ஒன்று.
நவநீத கிருஷ்ணன் இவரது முதற்பதிவு 2002 இல் பதியப் பட்டுள்ளது. சற்று ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால் சளைக்காமல் இன்னும் பல் தரப்பட்ட விடயங்களைப் பதிந்து கொண்டிருக்கிறார். இவரது இறுதிப்பதிவு ப்புரோக்கிராமர்கள் பற்றியது.
செல்வராஜ் நன்றாக எழுதிக் கொண்டிருந்தார். இப்போது இவர் பதிவில் எதையும் வாசிக்க முடியவில்லை.
ஆரம்பகாலப் பதிவாளர்களில்
காலோரம் அலை புரண்டு கெஞ்சும்
எனினும்
வானோரத் தாரகைக்கே ஏங்கும் நெஞ்சம்
என்ற மாலனும் ஒருவர். திசைகளோடு திசை மாறி மாறி விட்டார்.
சந்திரவதனா
சாப்பாடே போச்சு
கணவன் : எப்பிடி ஒரு செல்லப்பிள்ளை போல இருந்தனான் நான்.
உன்னைக் கட்டி என்ரை வாழ்க்கை இப்பிடியாப் போச்சு....
மனைவி : ம்...
என்ரை வாழ்க்கையும் அப்பிடித்தான்.
கணவன் : என்னப்பா கண்டடிறியாத சமையல் சமைச்சு வைச்சிருக்கிறாய்?
தாயோடு சுவை போச்சு எண்டு இதுக்குத்தான் சொல்லுறது.
மனைவி : உங்களுக்காவது நான் சமைச்சு வைச்சிருக்கிறன்.
எனக்கு....!
சந்திரவதனா
வலைவலம் - 21.9.2004
அறிவியல் என்பது எந்தளவு தூரத்துக்கு வாழ்வோடு அவசியப் பட்டது என்றாலும், அதைத் தேவை கருதியே வாசிக்கிறோம். மற்றும் படி இந்த மனசு தேடுவதென்னவோ சுவையும், சுவாரஸ்யமும் நகைச்சுவையும் நிறைந்த விடயங்களையே! இருந்தாலும் சில சமயங்களில் அறிவியலில் கூட சுவையான தகவல்கள் கிடைக்கின்றன.
முதுமையைத் தள்ளிப் போட்டு விட்டு வாழ்நாளை நீடிக்கலாம் என்றால் யார்தான் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் விடுவார்கள். தற்கொலையின் வீதம் எந்தளவாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனதும் அதி உச்சப் பயம் மரணத்தை ஒட்டியதுதானே. அந்த மரணத்தையே தள்ளிப் போடவும் மருந்து கண்டு பிடித்திருக்கிறார்களாம். யாருக்குத்தான் அதை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் போகும்.
சிவப்பு வைனிலும், திராட்சைப்பழங்களிலும் காணப்படும் resveratrol என்ற வேதிப்பொருள்தான் இந்த முதுமையை விரட்டும் பதார்த்தம் என Brown, Harvard, Connecticut மூவருமாகச் சேர்ந்து பரிசோதனை செய்து கண்டு பிடித்துள்ளார்கள். முதுமையை விரட்ட நாம் கடைப் பிடிக்க வேண்டிய இன்னும் சில விடயங்கள் இருக்கின்றன. சுந்தரவடிவேலுவின் அறிவியல் பகுதியில் வாசித்துப் பாருங்கள்.
விரலில் வலியேற்படும் விதமாக நறுக்கென்று குத்தி, குருதியை எடுத்துப் பரிசோதனை செய்து, சர்க்கரையளவைக் கண்டு பிடிக்கும் முறையை விடுத்து, ஒரு தகட்டின் மூலம் வலியே இல்லாமல் சர்க்கரையளவைக் கண்டு பிடிக்கும் முறை வரப் போகிறதாம். அதையும் சுந்தரவடிவேலுவின் அறிவியல்தான் கூறுகிறது.
மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவு மதுரபாரதியினது. தமிழும் தமிழ் சார்ந்த புலமும் குறித்துப் பேசும் இவரது பதிவில் எமது முன்னோர்களோடு சம்பந்தமான எமக்குத் தெரியாத, நாம் அறியாத பல விடயங்கள் உள்ளன. அன்றைய பாடல்களையும் அதனுள் வரும் பொருட்களையும் சுட்டி சங்ககாலத்துக்கே எம்மை அழைத்துச் செல்கிறார்.
இவரது கடைசிப் பதிவு உங்களையும் ஈர்க்கலாம். சவரம் செய்து முகங்கழுவி அல்லது குளித்துத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள ஒரு ஆணுக்கு அதிக நேரம் தேவையாக இருந்த போதும், அலங்காரம் என்பது என்னவோ பெண்களுக்குத்தான் சொந்தமானது என்பதாகத்தான் எல்லோருமே பேசிக் கொள்கிறோம். ஆனால் ஆண்களும் அலங்காரம் செய்திருக்கிறார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னான ஆணழகனின் அலங்காரம் பற்றிய அழகிய பதிவு இது.
இவரது இந்தப் பதிவில் இன்னொரு விடயத்தைக் காணக் கூடியதாக உள்ளது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் நீண்ட கூந்தல்தான். அவர்களும் தலையில் பூச்சூடியுள்ளார்கள். மலர் மாலைகளை அணிந்துள்ளார்கள்.
எனக்குத் தெரிந்த வரையில் தலைக்குப் பூ வைப்பதற்கான முக்கிய காரணம் - பூக்களுக்கு நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை இருக்கிறது. தலைநீராடிய பின் அதாவது முழுகிய பின் தலைமயிரைக் காய வைப்பதற்கான மின்சார உபகரணம் அப்போது இருக்கவில்லை. அதனால் பூக்களைத் தலையில் வைத்தே தலையைக் காய வைத்தார்கள். ஆனால் பிற்காலத்தில் எப்படியோ ஆண்களின் நீண்ட கூந்தல் குறுகி விட்டது. அதனால் அவர்களுக்கு பெரியளவாக பூக்கள் தேவைப்படவில்லை. காலப்போக்கில் பூக்களென்னவோ பெண்களுக்கே சொந்தமானது என்பது போல ஆகி விட்டது. இவரது இந்தப் பதிவே மலர் என்பது மகளிருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதற்குச் சான்றாகிறது.
அடுத்து சத்யராஜ்குமாரின் துகள்கள் சுவாரஸ்யமான பதிவுகளில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்பதற்கமைய அளவாகத்தான் இவர் எழுதுவார். ஆனால் எழுதியவைகள் எல்லாமே வாசித்தோம், மறந்தோம் என்றில்லாமல் வாசித்தோம் என்று என்றைக்குமே ஞாபகம் வைத்திருக்கக் கூடிய மனதை ஏதாவதொரு வகையில் நெருடக் கூடிய பதிவுகள். அவர் எடுத்துக் கொள்ளும் கருக்களும், அதைக் கதையாகப் புனையும் தன்மையும், கதையைக் நகர்த்தும் விதமும் மிகவும் அருமை.
சந்திரவதனா
21.9.2004
September 20, 2004
ஒரு பெக் அடிச்சால்....
கணவன்: இஞ்சரப்பா எனக்குச் சரியாக் குளிருது. ஒரு பெக் அடிச்சால் நல்லா இருக்கும் போலை இருக்கு.
மனைவி: ஓமப்பா. எனக்கும் சரியாக் குளிருது.
கணவன்: என்ன...!!!!!
மனைவி: எனக்கும் குளிருது. நானும் ஒரு பெக் அடிக்கட்டே?
கணவன்: ஏய்...! பொம்பிளையள் இதுகள் குடிக்கிறேல்லை.
மனைவி: ஏன் பொம்பிளையளுக்குக் குளிராதோ...?
கணவன்: ...! ....! ...!
சந்திரவதனா
20 ஆம் நூற்றாண்டின் தமிழக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடுவதற்கு முயற்சி
20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தரமான ஈழத்துக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிட முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பூபாலசிங்கம் புத்தக சாலை அதிபர் பூ.ஸ்ரீதரசிங் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்க் கவிதை வரலாற்றில் ஈழத்துக் கவிதைகள் 20ஆம் நூற்றாண்டிலேயே கவனிப்புக்குரியனவாகும், முக்கியத்துவமுடையனவாகவும் அமைகின்றன. எனவே, 20ஆம் நூற்றாண்டு ஈழத்துக்கவிதைகளை ஒரே பார்வை யில் நோக்கக்கூடியதான தொகுப்பு முயற்சியொன்று மிகவும் அவசியமானதாகும். ஏற்கனவே, ஆ.சதாசிவம் அவர்கள் சுதந்திரகாலத்திற்கு முற்பட்ட ஈழத்துக் கவிதைகளை 'ஈழத்துத் தமிழ்க் களஞ்சியம்' என்னும் தலைப்பில் தொகுத்தளித்துள்ளார். அத்தொகுப்பிற்குப் பின்பும் 'மரணத்துள் வாழ்வோம்', 'வேற்றாகி நின்றவெளி', 'ஈழத்துக் கவிதைக்கனிகள்' முதலிய தொகுப்பு நூல்கள் சில வெளிவந்துள்ளன.
எனினும், இத்தொகுப்புநூல்களிலும் அடக்கப்படாத தரமான கவிதைகள் பல காணப் படுகின்றன என்பது இன்று உணரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, கட்சி, குழு பேதமின்றி நடுவுநிலையோடு தரமான ஈழத்துக் கவிதைகளைத் தொகுக்கவிருப்பதாகவும் அத்தொகுதிக்கு பயன்செய்யத்தக்க தமது நூல்களை யும் இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் போட்டோப் பிரதிகளையும் கவிஞர்கள் அனுப்பி உதவவேண்மென்றும் பூ. ஸ்ரீதரசிங் தெரிவித் துள்ளார்.
தமது கவிதை நூல்களில் மேலதிகப் பிரதிகள் இல்லாதோர், அவற்றுள் வெளி வந்த மிகத் தரமான சில படைப்புகளைப் போட்டோப் பிரதியெடுத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி உதவலாம். அமரர்களாகிவிட்ட கவிஞர்களுடைய படைப்புகளை அவர்களுடைய குடும்பத்தினரோ, நண்பர்களோ அனுப்பி உதவும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கவிதைகளை அனுப்புவோர் கூடவே கவிதை வெளிவந்த நூலின் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு, வெளியீட்டாளர் விவரம், கவிதை வெளி வந்துள்ள பக்கவிவரம் போன்றவற்றை நிச்சயமாக இணைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள் ளப்படுகின்றனர். புனைபெயர்களில் கவிதைகளை பிரசுரிக்க விரும்புவோர், தமது சொந்தப் பெயர், விவரத்தையும் இணைத்து அனுப்பவும். சகல கவிஞர்களும் தங்களது சுருக்கமான சுய விவரக்கோவைகளை இணைத்து அனுப்பவும்.
கவிதைகள் யாவும் தரமான நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். ஈழத்துக் கவிதைகள் பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பிறநாடுகளில் போதிய அறிமுகம் இன்னும் ஏற்படாமையால் வெளியிடப்படவுள்ள தொகுப்பை தமிழ்நாட்டில் பிரசுரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தொகுப்பு செட்டியார் தெருவில் மிகவிரைவில் திறந்து வைக்கப்படவுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையின் புதிய காட்சியறையினது திறப்புவிழாவின்போது வெளியிடப் படவுள்ளது.
Nantri - Uthayan
இந்த அறிவித்தலை கவிஞர்கள் அறிந்து கொள்வதற்காக இங்கு பதிந்துள்ளேன். எந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கவிதைகளை அனுப்ப வேண்டுமென்பது குறிப்பிடப்படவில்லை. விரைவில் அறிந்து எழுதுகிறேன்.
நட்புடன்சந்திரவதனா
அட ஒரு வருசம் ஓடி விட்டதா?
இந்த ஒரு வருடத்துக்குள்தான் வலைப்பதிவுகளில் எத்தனை மாற்றம்!
முதல் முதல் கடந்த வருடம் ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று மாலன் அவர்கள் Blog ஐ அறிமுகப் படுத்திய போது - இது எப்படிச் சாத்தியமாகும் என்று ஆச்சரியப் பட்டேன்.
மாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.
சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. Blog ஐ தயாரிப்பதற்கான சில வழி முறைகளைச் சொல்லித் தந்த சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.
இந்த வலைப்பூ என்பது என்னை வெகுவாகக் கவர்ந்ததற்கு முக்கிய காரணம். யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரம்தான். எதை விரும்பினாலும் அதை நான் அங்கே பதிக்க முடியும். அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது.
அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலை பதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் வலைப்பதிவுகளின் தொகுப்பு உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது. ஆனால் இன்றோ எமக்குத் தெரியும் படியாக நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தமிழில் உள்ளன. அத்தனையையும் ஒரே நாளில் வாசிக்க முடியாத அளவுக்கு அவைகளில் எழுதிக் குவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
அன்று வலை பதியத் தொடங்கிய அத்தனை பேரும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பலபேர் இடை நடுவில் ஏதேதோ காரணங்களினால் தமது பதிவுகளைத் தூங்க விட்டு விட்டார்கள். அதே நேரத்தில் இன்றும் பலர் ஆரோக்கியமான சுவாரஸ்யமான பதிவுகளைப் புதிது புதிதாகப் பதிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தொடங்கிய காலத்துக்கும், இன்றைய காலத்துக்கும் இடைப்பட்டதான காலப் பகுதியில் யார் யார் எங்கெங்கே புதிய விடயங்களைப் பதிந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பூவாகப் போய்ப் பார்த்துத்தான் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிக்கல் இருந்தது.
அந்தச் சிக்கலை நிவர்த்தி செய்யும் விதமாக காசி தயாரித்த தமிழ்மணம் மிகவும் பயனுள்ள தமிழ்வலைப்பூக்களுக்கெல்லாம் தலைப்பூவாக விளங்குகின்ற ஒரு பதிவு.
இந்த நேரத்தில் காசியை மனந்திறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தத் தமிழ்மணம் செய்வது வலைப்பூ ஆர்வலர்களுக்கான ஒரு அரிய பணி. பதிந்த எந்த வலைப்பூவையும் சுலபமாகக் கண்டு பிடிக்கவும், புதிய பதிவுகளை உடனுக்குடன் சிரமமின்றி கண்டு கொண்டு வாசிக்கவும் மிகவும் உதவுகிறது தமிழ்மணம். காசிக்கு மீண்டும் தமிழ்வலைப்பதிவாளர்கள் அத்தனை பேர் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, இனி முடியுமான அளவுக்கு வலைப்பூக்கள் பக்கம் சென்று வருகிறேன்.
நட்புடன்
சந்திரவதனா
நன்றி
ஆரம்ப காலத்தில்தான் யாரும் இல்லாத போது என்னை அழைத்தீர்கள்.
இன்று எத்தனை வலைப்பதிவுகள். அத்தனைகளிலும் எத்தனை பெரிய பெரிய வலைப்பதிவாளர்கள். இத்தனை பேர் இருக்க என்னை மீண்டும் அழைப்பீர்கள் என நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.
சும்மா நானுண்டு, என் பேரப்பிள்ளைகள் உண்டு என்று விளையாடிக் கொண்டிருந்த என்னை மைக்கை தந்து மேடையில் ஏற்றி விட்டது போல இருக்கிறது. என் பாட்டுக்கு எதையாவது சொல்லலாம். இத்தனை பேர் என் முன்னால் நிற்கிறீர்கள் என்ற போது, பேசுவதற்கு நிறைய இருந்தாலும் பேச நா எழவில்லை.
இருந்தாலும் என்னையும் ஒருவராக மதித்து நிறைந்த ஆலாபனைகளோடு வரவேற்ற மதிக்கும், என்னை வரவழைக்க வக்காலத்து வாங்கிய காசிக்கும், நான் வருமுன்னரே நிறைகுடம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்களோடு காத்து நின்று பன்னீர் தெளித்த ஜெயந்தி, ஈழநாதனுக்கும் கூட வந்து சேர்ந்து நின்று வாழ்த்திய மூர்த்தி, சாகரனுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நட்புடன்
சந்திரவதனா
September 19, 2004
ஞாயிற்றுக் கிழமை
"இஞ்சை ..........உங்கடை உந்தத் தலைக்கு Joghurtம் (யோக்கற்ம்) முட்டையும் கலந்து பூசி ஊற விட்டிட்டு, பிறகு தோய்ஞ்சிங்களெண்டால் சொடுகு போயிடுமாம்."
"ஆரப்பா உனக்குச் சொன்னது? பிறகும் ஏதும் புத்தகத்திலை வாசிச்சிட்டியே?"
"ம்.........வேறை எங்கையிருந்து எனக்குத் தெரியிறது! புத்தகத்தையும் பேப்பரையும் ரேடியோவையும் விட்டால் எனக்கு வேறை என்ன இருக்கு இங்கை!!!"
"ம்........எனக்கு மட்டும் இங்கை கனக்க இருக்காக்கும்."
"ஏன் உங்களுக்கென்ன ஏதும் அது இது எண்டு சாட்டிக்கொண்டு ஊர் சுத்தப் போடுவிங்கள."
"உன்னை ஆரும் போவேண்டாமெண்டு சொன்னதே?"
"போவேண்டாம் எண்டு நேரடியாச் சொல்லாமல் நான் போகாத விதமா நீங்கள் நடக்கிறது எனக்கு விளங்காதெண்டு நினைக்கிறீங்களாக்கும். வேலை முடிஞ்சு வரக்கை தற்செயலா பஸ்ஸை விட்டிட்டனெண்டால் போதும். எங்கை துலைஞ்சு போனனி எண்டு எரிச்சலாக் கேப்பிங்களே! Shopping(சொப்பிங்) போயிட்டு வர, கொஞ்சம் லேற்றாப் போனால் போதும். முகத்திலை எள்ளும் கொள்ளும் வெடிக்க நிப்பிங்கள். இதெல்லாம் எனக்கு விளங்கிறேல்லை எண்டு நினைச்சிங்களோ? நீங்கள் ஊர் சுத்திப்போட்டு வர நான் வீட்டிலை இருந்து வீட்டு வேலையளைப் பாத்துக் கொண்டு நீங்கள் சொல்லிப் போட்டுப் போற வேலையளையும் செய்து கொண்டு இருக்கோணும். வந்து அதுக்கும் நொட்டையும் சொட்டையும் வேறை. எத்தினை காலத்துக்கெண்டு மனுசர் இப்பிடி வாழேலும். நான் வேலைக்குப் போகாமலே எனக்குச் சம்பளம் வருமெண்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷப் படுவியள் எண்டு எனக்குத் தெரியாதாக்கும்."
"சரியப்பா...கொஞ்சம் விட்டனெண்டால் நீ உன்ரை பல்லவியைத் தொடங்கீடுவாய்."
"இருந்து பாருங்கோவன். நானும் ஒரு நாளைக்கு............"
"இஞ்சை பார் நான் ஒண்டும் பார்க்கேல்லை..........நீ உந்தத் தேவையில்லாத கதையளை விட்டிட்டு போய்ச் சமையலைப் பார்."
"ஏன் இப்பக் கதையை மாத்திறியள்?"
"இஞ்சை பார்........ மனுசருக்குப் பசிக்குது. கதையை விட்டிட்டுப் போய் சமை."
"ஏன்.........நான் சமைக்கோணும். சாப்பிடுறது எல்லாரும்தானே...... சமைக்கிறது மட்டும் எனக்கெண்டு எங்கை எழுதி வைச்சிருக்கு?"
"ஐயோ.....ஏனப்பா கதைச்சே மனுசரைக் கொல்லுறாய்.?"
"பின்னை என்ன? நீங்கள் இருந்து TV(தொலைக்காட்சி) பார்த்துக் கொண்டிருக்க நான் போய்ச் சமைக்கோணுமோ?
"ஞாயிற்றுக் கிழமையிலையாவது மனுசரைச் சும்மா இருக்க விடன்."
"ஏன் எனக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை இல்லையோ?"
"நான் ஆம்பிளையடி!"
"ஆம்பிளையெண்டால்...............!"
சந்திரவதனா
இனிய வணக்கம்
இனிய வணக்கம்
ஆர்வமுடன் என்னை வரவேற்ற நட்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.
இன்று கணினியைப் போட்டதும்தான் தெரிந்தது நான்தான் இவ்வார வலைப்பூ ஆசிரியரென்பது. அதிர்ச்சிதான்.
ஈழநாதனை முந்திக் கொண்ட ஜெயந்தியும், ஓடி வந்தும் வரிசையில் முதல் இடம் கிடைக்காது வருந்திய ஈழநாதனும் என்னை வரவேற்றும் இருந்தார்கள்.
என்னடா இது? ஒரு வார்த்தை பேசாமல் நான்தான் இவ்வார ஆசிரியை என்று மதி தீர்மானித்து விட்டாவோ! என் மீது அவ்வளவு அபார நம்பிக்கையோ! என்று எனக்குள்ளே யோசனை! பின்னர்தான் தெரிந்தது மதி ஏற்கெனவே அனுப்பிய மின்னஞ்சல் எப்படியோ தவறிவிட்டது என்பது. பரவாயில்லை.
முடிந்தவரைக்கும் எதையாவது எழுதுகிறேன். எந்த வித ஆயத்தமும் இல்லாமல் வந்து நான் தரப்போவதை இந்த ஒரு வாரமும் நீங்கள் வாசிக்க வேண்டுமென்ற நியதி போலும்.
முடிந்தால் வாசியுங்கள்.
நட்புடன்
சந்திரவதனா
'வலைப்பூ'வின் முதலாம் ஆசிரியர்: வலைப்பூவின் அம்மம்மா 
இவ்வாரம் வலைப்பூவின் சிறப்பாசிரியராக வருபவர் சந்திரவதனா. தமிழ் வலைப்பதிவாளர்களில் எண்ணிக்கையில் அதிக வலைப்பதிவு வைத்திருக்கும் சந்திரவதனா, ஊக்குவிக்கும் நற்பண்பு நிறைந்தவர். நான் அழைத்த மாத்திரத்தில் உற்சாகத்தோடு வலைப்பூவின் முதலாவது ஆசிரியராக வந்தபடியால் நான் இதைச் சொல்லவில்லை. இங்கே இருக்கும் பலரது வலைப்பதிவுகளில் இவரது கருத்துகளும் ஊக்குவிப்பும் இடம்பெற்றிருக்கின்றன. இவரது வலைப்பதிவைப் பார்த்து, 'நாமும் தொடங்கினாலென்ன?' என்றபடி தொடங்கிய வலைப்பதிவர்களும் இருக்கிறார்கள்.
மொத்தம் பதினாறு வலைப்பதிவுகளை நிர்வகிக்கும் சந்திரவதனா 'தோழியர்' வலைப்பதிவிலும் பங்குபெறுகிறார். அவருடைய பதினாறு வலைப்பதிவுகளில் இரண்டு அவருடைய மகன்களுடையது - துமிலன், திலீபன். ஒன்று அவருடைய அண்ணா - மறைந்த கவிஞர் தீட்சண்யனுடையது. மனவோசை, குழந்தைகள், மகளிர், மருத்துவம், பாடல்கள், படித்தவை, பெண்கள், Sammlung, செய்திகள், வி.ஐ.பி பெண்கள் ஆகிய பன்முகப் பதிவுகளோடு சிறுகதைகள் என்ற வலைப்பதிவில் தம் சிறுகதைகள் சிலவற்றையும் தன்னைக் கவர்ந்த பிறரின் எழுத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார். தன் கூடப்பிறந்த சகோதரர்கள் மூவரை நாட்டுக்கு அர்ப்பணித்த இவர், நாட்டுக்கு தங்கள் இன்னுயிரை நீத்த மாவீரர்களுக்காக ஒரு வலைப்பதிவும், புனர்வாழ்வுக்கென இன்னொரு வலைப்பதிவும் வைத்திருப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.
மேலே சொன்ன பதினாறு வலைப்பதிவுகள் தவிர, மனவோசை என்று ஒரு இணையத்தளமும் வைத்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், புகைப்படம் என்று மிளிரும் அந்த இணையத்தளத்தில் சந்திரவதனாவின் கட்டுரைகள் பகுதிதான் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமானது. நினைவுகள் பகுதியில் இந்தக் கட்டுரைதான், உங்கள் தளத்தில் பலரும் வாசிக்கும் கட்டுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன் சந்திரவதனா.(சரிதானே?) (அந்த டுபாய்புட்டெண்டா என்னெண்டும் சொல்லிப்போடுங்கோ சந்திரவதனா... ;)
வாங்கோ அம்மம்மா! இந்த ஒரு வருசத்தில என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கு. என்னமாதிரியெல்லாம் வலைப்பதிவு இலகுவாயிருக்கு. இன்னும் என்னெல்லாம் செய்யலாம் எண்டு நீங்க நினைக்கிறது. இளைய தலைமுறையை வலைப்பதிவுக்குக் கூட்டியண்டு வாறது(முதல் ஆக்கள் - தீபா, திலீபன், துமி. சரியே?) எண்டெல்லாம் சொல்லுங்க.
-மதி கந்தசாமி
ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கிறது!
இந்த வாரம் கொஞ்சம் விசேடமான வாரம். கடந்த வருடம் ஜூலை மாதம் 'வலைப்பூ' என்ற இந்த வலைப்பதிவைத் தொடங்கியிருந்தாலும், அதில் கவனம் செலுத்தத் தொடங்கியது இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகே. அப்போதிருந்த வலைப்பதிவர்களில் தொடர்ந்து வலைபதிந்துகொண்டிருந்த மூவரிடம் 'வலைப்பூ'வை அறிமுகப்படுத்தி என்னுடைய யோசனையைச் சொன்னேன். உடனேயே ஒப்புக் கொண்டு முழு ஒத்துழைப்பு அளித்த அந்த மும்மூர்த்திகளை, வலைப்பூ சீராக இயங்கத் தொடங்கி ஒரு வருடம் நிறையும் இத்தருணத்தில் வாரமொருவராக அழைக்க இருக்கிறேன்.
அவர்களுக்கும், சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அழைப்பையேற்று இங்கே எழுதிய 49 ஆசிரியர்களுக்கும், எல்லாரையும் விட முக்கியமாக இங்கே எழுதும் பதிவுகளைப் படித்த, படித்து கருத்துகள் எழுதிய உங்களனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
-மதி கந்தசாமி
Monday, September 20, 2004
இவ்வாரம் வலைப்பூவில் பணி
ஆரம்ப காலத்தில்தான் யாரும் இல்லாத போது என்னை அழைத்தார்கள்.
இன்று எத்தனை வலைப்பதிவுகள். அத்தனைகளிலும் எத்தனை பெரிய பெரிய வலைப்பதிவாளர்கள். இத்தனை பேர் இருக்க, இத்தனை பெரிய ஆலாபனைகளுடன் என்னை மீண்டும் அழைப்பார்கள் என நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.
சும்மா நானுண்டு, என் பேரப்பிள்ளைகள் உண்டு என்று விளையாடிக் கொண்டிருந்த என்னை மைக்கை தந்து மேடையில் ஏற்றி விட்டது போல இருக்கிறது. என் பாட்டுக்கு எதையாவது சொல்லலாம். இத்தனை பேர் என் முன்னால் நிற்கிறீர்கள். பேசுவதற்கு நிறைய இருந்தாலும் பேச நா எழவில்லை.
இருந்தாலும் அங்கு வாருங்கள். நீங்கள் தரும் உற்சாகம் ஒரு வேளை என்னை நிறையப் பேச வைக்கலாம்.
இன்று எத்தனை வலைப்பதிவுகள். அத்தனைகளிலும் எத்தனை பெரிய பெரிய வலைப்பதிவாளர்கள். இத்தனை பேர் இருக்க, இத்தனை பெரிய ஆலாபனைகளுடன் என்னை மீண்டும் அழைப்பார்கள் என நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.
சும்மா நானுண்டு, என் பேரப்பிள்ளைகள் உண்டு என்று விளையாடிக் கொண்டிருந்த என்னை மைக்கை தந்து மேடையில் ஏற்றி விட்டது போல இருக்கிறது. என் பாட்டுக்கு எதையாவது சொல்லலாம். இத்தனை பேர் என் முன்னால் நிற்கிறீர்கள். பேசுவதற்கு நிறைய இருந்தாலும் பேச நா எழவில்லை.
இருந்தாலும் அங்கு வாருங்கள். நீங்கள் தரும் உற்சாகம் ஒரு வேளை என்னை நிறையப் பேச வைக்கலாம்.
Sunday, September 19, 2004
மனுசி குறும்படம் எனது பார்வையில்
குடும்பம் என்றால் என்ன? மனைவி பணிவிடை செய்ய, கணவன் ராஜாங்கம் நடத்த ஏதோ ஒரு கட்டாய நிகழ்வுகளினூடான வாழ்வின் நகர்வுதான் குடும்பமா?
குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள். என்றெல்லாம் ஏட்டிலும் எழுதி, பாட்டிலும் பாடி விட்டால் போதுமா?
நடைமுறையில் என்னவோ இந்தளவு மதிப்பு பெண்ணுக்குக் கொடுக்கப் படுவதில்லையே! பெண் இல்லாமல் ஒரு ஆணால் தனித்து வாழ முடியாது என்பது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும், பெண்ணை விடத் தான் உசத்தி என்று எண்ணும் எண்ணம் இன்னும் ஆண்களை விட்டு அகலவேயில்லை. அதே நேரம் பல பெண்களின் மனதில் இருந்தும், தாங்கள் பெண்கள், அதனால் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணமும் விட்டுப் போகவில்லை. மிகுதி - இங்கே
குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள். என்றெல்லாம் ஏட்டிலும் எழுதி, பாட்டிலும் பாடி விட்டால் போதுமா?
நடைமுறையில் என்னவோ இந்தளவு மதிப்பு பெண்ணுக்குக் கொடுக்கப் படுவதில்லையே! பெண் இல்லாமல் ஒரு ஆணால் தனித்து வாழ முடியாது என்பது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும், பெண்ணை விடத் தான் உசத்தி என்று எண்ணும் எண்ணம் இன்னும் ஆண்களை விட்டு அகலவேயில்லை. அதே நேரம் பல பெண்களின் மனதில் இருந்தும், தாங்கள் பெண்கள், அதனால் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணமும் விட்டுப் போகவில்லை. மிகுதி - இங்கே
Sunday, September 12, 2004
Saturday, September 11, 2004
இதெல்லாம் எதற்காக...?

அரசியல் விளையாட்டுக்களில் மீண்டும் பலியானவை அப்பாவி உயிர்களே!
மூன்று வருடங்களின் முன் உலகையே திடுக்கிட வைத்த தாக்குதலில் பலியாகிப் போனது
3000 க்கு மேற்பட்ட வெறும் அப்பாவி மக்கள்தான்.
எமது நாட்டில் நடக்காததா..? அமெரிக்காவுக்கு இது வேணும்..? என்பது போன்றதான குரல்கள்
போர் அனர்த்தங்களால் பாதிக்கப் பட்ட நாடுகளில் இருந்து ஆற்றாமையோடு எழுந்திருந்தாலும்
இந்த நிகழ்வினால் மனசாரப் பலர் வருந்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இன்று தொலைக்காட்சியில் அந்த அனர்த்தத்தில்
தாய் தந்தையரை இழந்த குழந்தைகளையும்
உறவுகளை இழந்தோரின் கண்ணீரையும் பார்க்கும் போது
இதெல்லாம் எதற்காக என்று மனம் கலங்குகிறது.
Thursday, September 09, 2004
குழந்தை

அன்று கடந்த சனி, அவர்கள் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் சிந்துவுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் எனது கணவர் தனது கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அன்றைய பத்திரிகையை வாசிக்கத் தொடங்கினார். சிந்துவின் கவனம் பந்திலிருந்து எனது கணவரின் கண்ணாடியின் பக்கம் திரும்பியது. அதைத் தரும் படி கணவரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். எனது கணவரும் வேறு வேறு விளையாட்டுக்களைக் காட்டி அவளைத் திசை திருப்ப முனைந்தார். அவளோ கண்ணாடியின் மீதே கண்ணாக இருந்தாள். கணவரும் கொடுப்பதாக இல்லை. சற்று நேர முயற்சியில் கண்ணாடி கிடைக்காது என்பதிலான அதிருப்தி அவள் முகத்தில் தெரிந்தது. பந்தைச் சடாரென்று நிலத்தில் போட்டு விட்டு தத்தித் தத்தி நடந்து சென்று மாடிப் படிகளில் தவண்டு ஏறினாள்.
வீழ்ந்து விடுவாளே என்ற பயத்துடன் நானும் பின்னால் ஏறினேன். நேரே காந்திச் சிலை இருக்குமிடத்துக்குச் சென்று காந்தியின் கண்ணாடியை இழுத்து எடுத்தாள். அவளுக்கு படிகளில் ஏறத் தெரியும். இறங்கத் தெரியாது. நான் அவளை தூக்கி வந்து படிகளின் கீழ் விட்டேன். அவள் மீண்டும் தத்தித் தத்திச் சென்று கதிரையில் ஏறி என் கணவரின் அருகில் அமர்ந்து கொண்டாள். கண்ணாடியை சரியான முறையில் போடத் தெரியாது. அதனை எப்படியோ வாயடியில் சொருகிக் கொண்டு தானும் பத்திரிகையை வாசிக்க முயற்சித்தாள்.
இந்த விடயம் எனக்கு மிகுந்த ஆச்சரியமான சந்தோசத்தையே கொடுத்தது. சிறிய காந்தி சிலையின் கண்ணாடியையும், எனது கணவர் அணியும் கண்ணாடியையும் ஒப்பிடும் அளவுக்கு, அவ்வளவு தூரம் ஒரு பத்துமாதக் குழந்தையிடம் கிரகிக்கும் தன்மையும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்குமா என்பது என்னிடம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
சரி இதை ஏன் எழுத நினைத்தேன் என்றால்:
சத்தியராஜ்குமாரின் துகள்களில் பாலூட்டிகள் என்றொரு கதை வாசித்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. எனது பேத்தி சிந்துவைப் பிரிவதே எனக்கு மிகுந்த கடினமான விடயமாக இருக்கும் போது, தான் சுமந்து பெற்ற மகவைப் பிரிய எந்தத் தாய் துணிவாள்.
பாலூட்டி கதையின் நாயகர்கள் பணமே குறியாகக் கொண்டு இப்படி ஒரு காரியத்தை எப்படிச் செய்வார்கள்..? இது மிக அதீதமான கற்பனையே என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் அது ஒரு உண்மைச் சம்பவத்தின் புனைவு என்று அறிந்த போது இன்னும் கூட அந்தத் தாய்க்காகவும், அந்தக் குழந்தைக்காகவும் என் மனது அசௌகரியப் படுகிறது.
ஒரு குழந்தையின் ஒவ்வொரு கணத்திலான அசைவுகளும், சத்தங்களும்.. அதனோடு சேர்ந்த படியான வளர்ச்சியும் சொல்லியோ, எழுதியோ புரிய வைக்க முடியாத சந்தோசம் கலந்த பொக்கிஷங்கள். அதைப் பார்க்க முடியாது பணம் சேர்த்து என்ன பயன்?
ஒரு குழந்தைக்குத் தாயின் அணைப்புக் கண்டிப்பாக வேண்டும். அந்தத் தொடுகை குழந்தையை உளரீதியாக எவ்வளவோ உவகைப் படுத்தும். விதிவசத்தால்.. போர்களால்.. எத்தனையோ குழந்தைகள் இந்தப் பாக்கியத்தை இழந்தார்கள் என்றால் தாயும் தந்தையும் உயிரோடு இருக்கும் போது இப்படியொரு கொடுமை அவசியமா?
இது தாய்க்கும் கூடாது.
குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும், வளர்ச்சியிலும் ஒரு தாய் குழந்தையே அவளது உலகமாகி உளரீதியாக எவ்வளவு இனிமையடைவாள். இந்த இனிமைகளையெல்லாம் காலுக்குள் போட்டு மிதித்து விட்டு, எதற்காகப் பணம்?
கோடையில் ஒரு பனிக்கட்டி மழை

Photo - Thumilan
யேர்மனியின் Schwaebish Hallநகரை ஒட்டிய Sulzdorf இல்
சரியான வெயில் எறிக்கும் ஒரு கோடை நேரத்தில்(12.8.2004)
திடீரென மேகம் கறுக்க, வானம் திறக்க புறா முட்டைகளின்
அளவில் கொட்டின, இந்தப் பனிக் கட்டிகள். .
கோடையில் ஒரு பனிக்கட்டி மழை யேர்மனியில்
வசந்தத்தில் ஒரு பனிக்கட்டி மழை சிட்னியில்
Wednesday, September 08, 2004
ஒரு பேப்பர்
ஒரு பேப்பர் தெரியுமா உங்களுக்கு...?
"வேறு நல்ல பெயரே உங்களுக்குக் கிடைக்கவில்லையா..?" என்று
ஒரு பேப்பர் வெளியீட்டார்களைப் பார்த்துப் பலர் முணுமுணுக்கிறார்கள்.
"அதென்ன தமிங்கிலிஸ் வேண்டிக் கிடக்கு. தமிழ் பத்திரிகை என்றால்
தமிழிலேயே இருக்கட்டுமே. பிறகேன் அதிலை இங்கிலீஸ்...!" என்று
சினக்கிறார்கள் சிலர். (சினக்கிறது சும்மா ஒரு சாட்டுக்குத்தான். அவையளின்ரை பிள்ளையள் இந்த இங்கிலீஸ் பகுதியை மட்டுந்தான் வாசிக்கிறவையாம். இதாவது கிடைக்குதே என்று உள்ளாரச் சந்தோசம்தான்.)
இருந்தாலும் கதை, கட்டுரை, கவிதை, அரசியல், சிறுவர் பகுதி, Teens........ என்று
ஜனரஞ்சகத்துடன் 6 பத்திரிகைகள் இணையத்தில் வெளிவந்து விட்டன.
இலண்டன் வாசிகளுக்கு முற்றிலும் இலவசமாக பத்திரிகையாகவே ஒரு பேப்பர் கிடைக்கிறதாம்.
இதே போல பல வருடங்களாக வடலி என்ற அழகிய பெயரில் நல்ல பயனுள்ள பல கட்டுரைகளைத் தாங்கி ஒரு பத்திரிகை இலண்டனில் இலவசமாகவே வந்து கொண்டிருக்கிறது. அதை இணையத்தில் எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
"வேறு நல்ல பெயரே உங்களுக்குக் கிடைக்கவில்லையா..?" என்று
ஒரு பேப்பர் வெளியீட்டார்களைப் பார்த்துப் பலர் முணுமுணுக்கிறார்கள்.
"அதென்ன தமிங்கிலிஸ் வேண்டிக் கிடக்கு. தமிழ் பத்திரிகை என்றால்
தமிழிலேயே இருக்கட்டுமே. பிறகேன் அதிலை இங்கிலீஸ்...!" என்று
சினக்கிறார்கள் சிலர். (சினக்கிறது சும்மா ஒரு சாட்டுக்குத்தான். அவையளின்ரை பிள்ளையள் இந்த இங்கிலீஸ் பகுதியை மட்டுந்தான் வாசிக்கிறவையாம். இதாவது கிடைக்குதே என்று உள்ளாரச் சந்தோசம்தான்.)
இருந்தாலும் கதை, கட்டுரை, கவிதை, அரசியல், சிறுவர் பகுதி, Teens........ என்று
ஜனரஞ்சகத்துடன் 6 பத்திரிகைகள் இணையத்தில் வெளிவந்து விட்டன.
இலண்டன் வாசிகளுக்கு முற்றிலும் இலவசமாக பத்திரிகையாகவே ஒரு பேப்பர் கிடைக்கிறதாம்.
இதே போல பல வருடங்களாக வடலி என்ற அழகிய பெயரில் நல்ல பயனுள்ள பல கட்டுரைகளைத் தாங்கி ஒரு பத்திரிகை இலண்டனில் இலவசமாகவே வந்து கொண்டிருக்கிறது. அதை இணையத்தில் எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
பெயரிலி
சூரியப்பெயரிலி.
இரவுப்பெயரிலி.
பின்மதியப்பெயரிலி.
வேலையில பெயரிலி
வேலையத்த பெயரிலி.
பேயுமுறங்க Bit நன்னும் பிற்சாமப்பெயரிலி.
இவைகளைப் பார்க்க, சின்ன வயசிலை இலந்தைக்காய், புளியங்காய் காணியளுக்கை போனாப்போலை கூட வருகிற பள்ளிப் பிள்ளைகள்
நடுச்சாம முனி, மத்தியானப்பேய்.. கொள்ளிவால்பிசாசு.. என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்தின மாதிரி ஒரு பிரமை என்னைப் போலவே உங்களுக்கும் தோன்றலாம். பயப்படாதைங்கோ.
இது வலைப்பதிவுகளின் நன்மை, தீமை, வளர்ச்சி, தொடர்ச்சி... என்று ஒரு கரை காணும் நோக்குடன் அலசி ஆராய்ந்து எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் இவ்வார வலைப்பூ ஆசிரியர் ரமணிதரனின் அந்தந்த நேரப் பெயர்கள்.
இரவுப்பெயரிலி.
பின்மதியப்பெயரிலி.
வேலையில பெயரிலி
வேலையத்த பெயரிலி.
பேயுமுறங்க Bit நன்னும் பிற்சாமப்பெயரிலி.
இவைகளைப் பார்க்க, சின்ன வயசிலை இலந்தைக்காய், புளியங்காய் காணியளுக்கை போனாப்போலை கூட வருகிற பள்ளிப் பிள்ளைகள்
நடுச்சாம முனி, மத்தியானப்பேய்.. கொள்ளிவால்பிசாசு.. என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்தின மாதிரி ஒரு பிரமை என்னைப் போலவே உங்களுக்கும் தோன்றலாம். பயப்படாதைங்கோ.
இது வலைப்பதிவுகளின் நன்மை, தீமை, வளர்ச்சி, தொடர்ச்சி... என்று ஒரு கரை காணும் நோக்குடன் அலசி ஆராய்ந்து எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் இவ்வார வலைப்பூ ஆசிரியர் ரமணிதரனின் அந்தந்த நேரப் பெயர்கள்.
Tuesday, September 07, 2004
மனமுள்
சுமதி ரூபனின் மனமுள் குறும்படம் எனது பார்வையில்

படத்தைக் கணினித்திரையில் மிகவும் சிறியதாகத்தான் பார்க்க முடிந்தது. அதனாலோ என்னவோ எடுத்த உடனேயே என் கவனம் தொழில் நுட்பங்கள் பற்றிய பக்கங்களில் செல்லாது, கதையின் கருவோடு சென்றிருந்தது. ஒருவேளை சுமதி ரூபனின் யதார்த்தமான, சமூகப் பிரக்ஞை நிறைந்த படைப்புக்களின் மேல் நான் வைத்திருக்கும் அபிமானமும், மதிப்பும் கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
நாசூக்கோடும், நயப்போடும் கதை சொல்லும் சுமதி ரூபனின் திறமை, படத்தின் கதை வசனங்களில் அழகாகக் கை கூடியுள்ளது. தந்தையர் இருவரும் பேசும் போதும் சரி, குழந்தைகள் இருவரும் தாம் வாழும் நாட்டின் மொழியில் இயல்பாகப் பேசும் போதும் சரி, பேச்சுக்கள் நயப்புடன் அமைந்து பார்வையாளரை கதைக்குள் ஈர்த்து விடுகின்றன.
கருவை எடுக்கும் போது அதில் எனக்குச் சற்று ஏமாற்றம் என்றே கூறலாம்.
"நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது. இப்ப.. சரியான தமிழ்ச்சனம்."என்ற வார்த்தைகளைக் கொட்டி.. அந்த ஆணின் தன்மையைக் காட்ட சுமதி முனைந்திருக்கலாம். ஆனால் கூடி வாழ்ந்ததால் கேடு வந்து பாழாய்ப்போன பல புலம் பெயர் மூலைகள் கனடா, பாரிஸ், லண்டன்... போன்ற இடங்களில் இன்னும் இருக்கின்றன.
புலம் பெயர்ந்த பின் தனிமை என்ற ஒன்றைக் கண்டு வெகுண்டு... எங்காவது ஒரு தமிழ் முகத்தைக் கண்டாலே மகிழ்ந்து... தமிழ்க் குரலுக்காக ஏங்கி.... தமிழ் எழுத்துக்களையே காணாது வாடி.... இன்று தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுமளவுக்கு பல தமிழர்கள் வந்து விட்டார்கள். அனேகமான பல தமிழர்கள் கூடி வாழ்வது நல்லது என்பது போல வெளியில் கதைத்தாலும், உள்ளார தமிழர்கள் இல்லாத இடம் தேடித்தான் வாழ்கிறார்கள். யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
தாயகத்தில் நாங்களும் எங்களோடு வாழ்ந்தவர்களும்... தமிழர்கள் என்பதையும் கடந்து அடியடியாக வந்த உறவுகள். எம்மோடு ஒத்து... அதாவது ஓரளவுக்காவது எமது நடைமுறைக்கு.. எமது பழக்கவழக்கங்களுக்கு.. என்று ஒத்து வாழப் பழக்கப் பட்டவர்கள். ஒரு கூட்டாக எம்மோடு வாழ்ந்தவர்கள். அது மட்டுமன்றி அடி, நுனி என்று அவர்தம் பரம்பரைப் பழக்க வழக்கங்கள் கூட எமக்குத் தெரிந்திருக்கும். இந்தக் குடும்பத்துடன் இந்தளவுக்குத்தான் சகவாசம் வைக்க வேண்டும் என்னும் கணக்குப் போட்டு வைக்கும் அளவுக்கு ஓரளவுக்கேனும் ஒவ்வொரு குடும்பத்தையும் அறிந்து வைத்திருப்போம்.
ஆனால் புலம் பெயர் மண்ணில் அப்படியான நிலைமைகள் இல்லை.
சந்திப்பவர்களில் எத்தனையோ பேர் தேவை கருதிப் பழகிவிட்டு, சமயம் வரும் போது உதைத்து விடுபவர்களாகவும், நட்பென்று சொல்லிக் கரம் நீட்டி விட்டு தருணம் பார்த்து முறித்தெறிய முனைபவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது சுயரூபமோ, குணாதிசயமோ எடுத்த எடுப்பிலேயே யாருக்கும் தெரிந்து விடுவதில்லை. சிலரின் அநாகரீகமான பழக்க வழக்கங்களுடன் கூட ஒன்ற முடிவதில்லை.
தனிமை, அந்நியச் சூழ்நிலை... என்ற ஒரு அந்தர நிலையில் தமிழர் என்று கண்ட உடனே மகிழ்ச்சியில் திளைத்து... அவர்கள் பற்றி எதுவுமே தெரியாமலே, நண்பர்களாக மதித்து வீடுகளுக்குள் அனுமதித்து விட்டு... காலப்போக்கிலோ அன்றி ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ... அவர்களின் சில செயற்பாடுகளால் நண்டைத் தூக்கி மடியில் வைத்தவர்களாய் திண்டாடிப் போகிறோம்.
இது இன்று நேற்றல்ல. பலகாலமாக புலத்தில் தொடர்கிறது. இது போன்றதான சில சம்பவங்கள்.. நடைமுறைகள்.. போன்றவற்றின் பிரதிபலிப்புத்தான்
"தமிழர்களோ...! அங்கே வேண்டாம்." "நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது. இப்ப.. சரியான தமிழ்ச்சனம்." போன்றதான குரல்கள்.
அதனால் நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது. இப்ப.. சரியான தமிழ்ச்சனம். என்ற இந்தப் பிரச்சனையைச் சொல்லி அந்த ஆணின் குணஇயல்பைக் காட்ட முனைந்தது அவ்வளவு சரியானதாக எனக்குப் படவில்லை.
அந்த ஆண் தன்னைத் திறம்பட்டவராகக் காட்ட நினைத்து அப்படிச் சொல்லும் போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. படத்தின் முடிவில் அவரின் மனசுள் இருந்த அசூசையான தன்மையைப் பார்த்த போது தனக்குள்ளே இவ்வளவு அழுக்கை வைத்திருக்கும் இவருக்கு அதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்ற எண்ணமும் எழுகின்றது. ஆனாலும் சுமதி சொல்ல வந்த விடயத்தையும் அந்த நபரின் குணஇயல்பையும் இன்னும் சற்று வித்தியாசமான முறையில் சொல்ல முயன்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
இந்த எனது பார்வை ஏற்கெனவே தமிழ் பில்ம் கிளப்பில் பதிவாகியுள்ளது.
இன்னும் பலர் மனமுள் பற்றிய தமது பார்வைகளையும் இங்கு தமிழ் பில்ம் கிளப்பில் பதிந்துள்ளார்கள்.
Sunday, September 05, 2004
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
▼
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ▼ September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )