Thursday, March 31, 2005
ஒரு பேப்பர்(19)
வார இறுதியில் எனக்குக் கிடைத்த பத்திரிகை ஒரு பேப்பர்(19).
இளவரசர் சார்ள்ஸ்க்கு மட்டக்களப்பு முருகன் கோவிலில் ஒரு சிறுமி பொட்டு வைக்கும் காட்சியுடன் முதற் பக்கம். உள்ளே வழமையான சமாச்சாரங்கள்தான். சின்னதான... பெரிதான.. என்று சினிமாவிலிருந்து அரசியல் வரை பல செய்திகள்.
சயந்தனின், சுவாரஸ்யமான முறையில் எழுதப் பட்ட, நிதர்சனமான, ஆமியும் அரிசியும் 14ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. 70களின் முற்பகுதியில் சிறீமாவின் ஆட்சிக்காலத்திலும் கிட்டத்தட்ட இப்படியான ஒரு நிலை இருந்தது. பாணுக்கு வரிசையில் நிற்பதுவும், பாண் கிடைக்காமல் திரும்பி வருவதும் என்று... அதைப் பற்றி ஆறுதலாக வடிவாக எழுத வேண்டும். அந்த நேரத்தில் முருங்கையிலைச் சுண்டலும், மரவள்ளி அவியலும்தான் பலருக்குத் தஞ்சம். மரவள்ளிக்கிழங்குக்கு இஞ்சிச் சம்பல் செய்து சாப்பிட்டு இறந்தவர்களும் உண்டு.
மொறீசியஸ் பற்றிய ஒரு விபரமான கட்டுரை திரு அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
அடுத்து வன்கூவர் கனடாவிலிருந்து ரிஷியின் உங்களால் முடிந்தால் எங்களால் முடியும் - இந்திய அமெரிக்க இராணுவப் பயிற்சிகள் சம்பந்தமான கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் ரிஷியைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். உடனே ஏதோ அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி என நினைத்து விடாதீர்கள். அது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ரிஷி வழங்கும் பல விடயங்களை ஐபிசி வானொலியில் மிகவும் ரசித்துக் கேட்டிருக்கிறேன். எந்த ஒரு விடயமானாலும் சுவாரஸ்யம் கலந்து தனக்கென்று ஒரு பாணி வைத்து வழங்குவாரே, மிகவும் அபாரமாக இருக்கும். எந்த அரசியலையும் ஒரு சிறுகதை போல.. ஒரு நகைச்சுவை போல அவர் தரும் பாணிக்கு ஈடு அவரேதான். அத்தனை அருமையாக வழங்குவார்.
வசந்தனின் அப்பா துவக்குச் செய்வார் அனுபவப் பதிவும் இடம் பெற்றுள்ளது.
அறுவைப் பக்கத்தில் அதிகமான சமயங்களில் அல்வாசிட்டி விஜய்தான் இடம் பிடிப்பார். இம்முறை சுபமுகா இடம் பிடித்துள்ளார். எப்படி இருக்கு இந்தமாசம். கண்டிப்பாக அதை வாசித்து உங்கள் மாதபலன்களுக்கு ஏற்ப வாழ்வைத் தொடருங்கள். எல்லாளன் காண்டக்காரரிடமே தனது பிறந்ததிகதி பெருவிரல் அடையாளம் கொடுத்து வாசிக்க விட்டிருக்கிறார். சொன்ன படியே எல்லாம் பொருந்தியிருக்கிறதாம்.
வாசகர் பக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது. வாசகர்கள் துணிந்து தமது கருத்தைச் சொல்கிறார்கள். படத்துக்குத் தமிழில் பெயர் வை, பாடலைத் தமிழில் எழுது, என்றெல்லாம் எழுதி விட்டு ஒரு பேப்பர் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே என்று Eastham பரணிதரன் கோபப் பட்டிருக்கிறார்.
இதேநேரம் சேயோனும் எண் சாத்திரப்படி பெயர் வைப்பதிலிருந்து வெள்ளைக்காரனுக்கு விளங்கும் படியாக இருக்க வேண்டும் என்று பெயர் வைக்கிறார்கள் என்பது வரை தமிழ்ப்பெயர் வைக்காதவர்களைச் சாடியிருக்கிறார்.
வாசகர் பக்கத்தில் வந்த இன்னொரு விடயம் அதை அப்படியே தருகிறேன்.
மாட்டினார் ஐயா
ஐரோப்பிய தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியினைப் பார்த்தேன். அது சட்ட ஆலோசனை பற்றியது. ஆந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு சட்ட ஆலோசகர் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்.
அந்த வேளை ஒரு நபர் அவருடன் தான் வக்கீல் ஒருவரால் ஏமாற்றப் பட்டதாகவும், பணமும் வீணாக்கப் பட்டதாகவும் கூறி அவரை சட்டத்தின் முன் எப்படிப் பிடிப்பதென்று கேள்வி கேட்டார்.
அதற்கு வக்கீல் சட்ட ஒழுங்குகள் பற்றியும் எப்படியான வழிவகைகள் இருக்கிறது என்றும் விளக்கினார். அதற்கு அந்த நபர் வித்தியாசமான ஒரு கேள்வியைக் கேட்டார். அது என்னவெனில் தான் கொடுத்த பணத்தை எல்லாம் அந்த வக்கீல் என்ன செய்திருப்பார் என்பதே. அதற்கு அந்த வக்கீல் இந்தக் கேள்வியை உங்கள் வழக்கினை எடுத்த அந்த வக்கீலிடம்தான் கேட்க வேண்டும் என்றார். இதற்கு அந்த நபர் இப்படிச் சொன்னார். அதான் ஐயா கேட்கிறன். அந்தக் காசையெல்லாம் என்ன செய்தனியள். வக்கீலின் முகத்தில் ஈயாடவில்லை. மறுநொடி தொலைக்காட்சியில் விளம்பரம்.
சர்வேஸ்வரன்
Ilford.
ஐரோப்பியத் தொலைக்காட்சி ஒன்றில் சட்ட ஆலோசனை நிகழ்ச்சி நடைபெறுவதை நானும் ஓரிரு தடவைகள் கவனித்தேன். அது எனக்கோ யேர்மன் வாழ் தமிழருக்கோ பிரயோசனமில்லாத ஒரு நிகழ்ச்சி. முழுக்க முழுக்க லண்டன் பிரச்சனைகளை மையப் படுத்தியது. அதிலும் நேயர்களின் கேள்விகளுக்கு அரைகுறையான பதிலே வழங்கப் பட்டு அவர்களைத் தம்மோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளுமாறு சொல்லப்படும். இது அந்த வழக்கறிஞர்களுக்கான விளம்பரம் போலவே எனக்குத் தோன்றும். அதனால் மேற்கொண்டு நான் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை. என்னைப் போல் மௌனம் காக்காமல், ஒரு பேப்பர் வாசகர் பேசத் துணிந்தது நல்ல விடயமே.
இன்னும் அழகுக் குறிப்பு, நூல்வெளியீடு, பாராட்டுவிழா... என்று பல விடயங்கள் பத்திரிகையினுள். ஏற்கெனவே ஈஸ்ரர் விடுமுறையோடு நாட்களைக் கடத்தி விட்டு தாமதமாக வந்திருக்கிறேன். இனி அவைகளைப் பற்றி விலாவாரியாக எழுதுவது, ஆறிய கஞ்சிக்குச் சமனானது என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்.
ஒரு பேப்பர் தயாகம் வரை செல்கிறது என அறிகிறேன்.
சந்திரவதனா
31.3.2005
Tuesday, March 22, 2005
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு. அது போலத்தான் அவரவர்க்கு அவரவர் மொழி தேன் வந்து பாய்வது போல இருக்கும்.
சில வருடங்களுக்கு முன் - அப்போது நான் ஒரு சுப்பர்மார்க்கெட்டிலும் பகுதி நேர வேலை செய்து கொண்டிருந்தேன். - திடீரென தமிழ்க்குரல். எனக்குள் உண்மையிலேயே மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்ச்சி கலந்த இன்பம். தலைக்குள் சந்தோசக் கிறுகிறுப்பு. அப்படியே எனது வேலையை விட்டு விட்டு குரல் வந்த திசையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரு தமிழர்கள் படிகளால் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். திகைப்பும் சந்தோசமும். காரணம் அவர்கள் பேசியது எனது மொழி. பத்து வருடங்களாக யேர்மனியர்களுடன் மட்டுமே ஊடாடிக் கொண்டிருந்த எனது காதுக்கு திடீரென்று எனது மொழி கேட்ட போது அது இன்பத் தேனாகத்தான் இருந்தது.
இதையே நான் வேலையிடத்தில் இருந்து எனது வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசி விட்டு வைத்தால்.. எனது சகவேலையாட்கள் கட முடா.. கட முடா.. என்று சொல்லிச் சிரிப்பார்கள். அவர்களுக்கு எனது மொழி தேனாகப் பாயாது. கட முடா என்றுதான் கேட்கும். இதே போலத்தான் ஒவ்வொருவருக்கும்.
Friday, March 18, 2005
நகைச்சுவை உணர்வே முதன்மையானது
இவ்வாரம் என்னை வந்தடைந்த பத்திரிகை வடலி. மார்ச் மாத ஓலை வந்துள்ளது. எப்போதும் போலவே நல்ல கட்டுரைகள் நிறைந்துள்ளன. இம்முறை ஒரு சிறுகதையும் இடம் பிடித்துள்ளது.
வலைப்பூக்களில் எங்களுக்கு அறிமுகமான ஷண்முகியின் உணர்வுகள் நிஜங்களாக சிறுகதை இடம் பெற்றுள்ளது. வேற்று மொழியைப் படித்து நல்ல புள்ளிகளையும் பெற்றுக் கொள்ளும் எமது குழந்தைகள் தாய்மொழியான தமிழைக் கற்காமல் இருப்பது புலத்தில் நடந்துள்ளது. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அது எத்தகையதொரு அடையாளமிழப்பு என்பதை விளக்கிய சிறுகதை அது.
உணவுக்குச்சாயம் உடலுக்குக் கெடுதியா என்ற சி.மாசிலாமணி தந்த தகவல் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மெழுகு, பெற்றோல், நிலப்பொலிஸ் போன்றவற்றிற்கு நிறமூட்டப் பயன் படுதப்படும் சுடான்1 என்ற சிவப்புச்சாயம் எமது தூளிலும் கலந்திருந்தது 2003இல் கண்டு பிடிக்கப் பட்டு அத்தூளுக்கு தடை விதிக்கப் பட்டதாம். இது எனக்கு புதிய செய்திதான். ஆனால் சில வாரங்களுக்கு முன் நான் வாங்கிய ஒரு தூள் ஓரு வித்தியாசமான சிவப்பாக இருந்தது. ஏற்கெனவே அது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இப்போது இந்தத் தகவல் சந்தேகத்துக்கு சற்று வலுச் சேர்த்துள்ளது.
அதீத எதிர்பார்ப்பு ஆபத்தைத் தரலாம் என்ற தலைப்பில் பிள்ளைகள் இப்படித்தான்... இந்தத்துறையில்தான்... வரவேண்டும் என நாம் எதிர்பார்க்காமல் எந்தத் துறை அவர்களுக்குப் பொருத்தம் என அறிந்து, அந்தப் பாதைக்கு நாம் வழிவகுத்துக் கொடுக்க வேண்டுமென்ற நல்லதொரு கருத்துத் தொனிக்கும் கட்டுரையை நகுலா சிவநாதன் தந்துள்ளார்.
விலங்குகள் கூறும் கவிதைகள் பகுதியில் வழமை போலவே அழகாக இம்முறை மயில் சொன்னது கவிதையை செல்லத்தம்பி சிறீஸ்கந்தராசா அவர்கள் தந்துள்ளார். ஆனால் இம்முறையோடு அந்தக் கவிதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் தரப் போகிறாராம்.
இதைவிட இன்னும் வைத்தியகலாநிதி ஆ.விசாகரத்தினம் அவர்களின் அறிவும் உணர்வும் ஆய்வு, டொக்கர் என்.எஸ்.மூர்த்தி அவர்களின் நலமுடன் வாழ்வோம் போன்ற பல விடயங்கள் பத்திரிகைக்குள் அடங்கியுள்ளன.
பிறந்தநாளுக்கு மெழுகுதிரியைக் கொழுத்தி அணைத்து விட்டுக் கொண்டாடுவது முறையா..? இனி அப்படிச் செய்யாமல் அகல்விளக்கேற்றிக் கொண்டாடுங்கள் என்கிறார் நுணாவிலூர் கா.விசயரத்தினம். கூடவே கேக் வேண்டாம். எமது பண்பாட்டிற்குரிய மாப்பண்டங்களில் ஒன்றைச் செய்து வருவோருக்கு வெட்டிக் கொடுங்கள் என்கிறார்.
மனிதரிடமுள்ள நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டு உணர்வுகளில் நகைச்சுவை உணர்வே முதன்மையானது என்கிறார் நகைச்சுவை உணர்வு எப்படி ஏற்படுகிறது என்ற தான் படித்துச் சுவைத்த சிறு கட்டுரையின் மூலம் சுதா.
அமரர் 4.3.2002இல் அமரரான வண்ணார்பண்ணை நாக.பத்மநாதன் அவர்கள் நினைவு கூரப் பட்டுள்ளார்.
இன்னும் பல....
Thursday, March 17, 2005
நேற்று (16.3.2005)
நேற்றைய நாராயணனின் கெட்டவார்த்தைகளின் அரசியல் என்னைப் பல விடயங்களை அசை போட வைத்தது.
எனக்குத் தெரிந்த வரையில் எனது சின்ன வயதில் என்னைச் சுற்றியுள்ள ஆண்களில் சிலர்தான் தூஷணம் பேசினார்கள். பெண்கள் பேசி நான் பார்த்ததுமில்லை. கேட்டதுமில்லை. ஒரு நாள் பாடாசாலைக்குச் செல்லும் போது சந்தி வேல்முருகர் வீட்டு வேலைக்காரன் தபாற்கந்தோர் மகேந்திரம் வீட்டு வேலைக்காரனைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிப் பேசினான். அது நான் என்றைக்குமே கேட்காத சொல். அன்று பாடசாலை முடிந்த பின்னும் நான் அந்தச் சொல்லை மறக்கவில்லை. வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக அம்மாவிடம் அந்தச் சொல்லைச் சொல்லி அது என்ன என்று கேட்டேன். அம்மா உடனேயே "சீ.. ஆரது சொன்னது. அது தூஷணம். அதை இனிச் சொல்லாதே." என்றா. நான் நினைக்கிறேன். அதுதான் நான் முதன்முதலாக என் வாயில் உச்சரித்த தூஷண வார்த்தையாக இருக்கும். அது கூட அது என்ன என்றே தெரியாமல் நான் உச்சரித்தது. மற்றும் படி இளைஞர்கள் கூட்டமாக நின்று பேசும் போதும், வயது வந்தவர்கள் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு போகும் போதும் சர்வசாதாரணமாக தூஷண வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படியான சொற்கள் என் காதுகளில் வீழ்ந்தாலும் அவைகள் பேசக் கூடாத சொற்கள் என்பது என் ஆழ்மனதில் பதிந்திருந்ததாலோ என்னவோ நான் அதைப் பேசியதே இல்லை. எங்கள் வீட்டுக்குள் எனது ஆண் சகோதரர்கள் கூடப் பேசியதில்லை. ஒரு வேளை அவர்கள் தங்கள் நண்பர்களோடு வெளியில் பேசியிருக்கலாம்.
வெளிநாட்டுக்கு வந்த பின்னர் பல தமிழ் ஆண்கள் ஒன்று கூடும் போது, நடுத்தெருவிலும், வீடுகளுக்குள் யாரும் இல்லையென்ற தைரியத்திலும் சத்தமெடுத்து தூஷண வார்த்தைகளைக் கொட்டுவதைப் பார்த்து என்ன மனிதர்கள் இவர்கள்..! என அருவருத்திருக்கிறேன். உண்மையில் இப்படியெல்லாம் பேசுவதால் என்ன இன்பம் இவர்களுக்குக் கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. சிலருக்கு யாரையாவது திட்டுவது என்றால் உடனே வாயில் வருவது இப்படியான வார்த்தைகள்தான்.
ஆனால் இந்த வார்த்தைகளில் பலதும் பெண்களின் அங்கங்களைக் குறிப்பதாகவோ அல்லது பெண்களைத் தாக்குவதாகவோ அமைந்தது என்பதை தற்போது சிலகாலங்களின் முன்னர்தான் உணர்ந்து கொண்டேன். அதன்பின் இப்படி யாராவது பேசும்போது எனக்கு கோபம்தான் வரும். நறுக்கென்று அவர்களை ஏதாவது கேட்டு விடுவேன்.
யேர்மனியில் ஆண்கள் பெண்கள் என்று பாகுபாடின்றி தூஷணம் பேசுவார்கள். எனது மகன் கூட யேர்மனிக்கு வந்த முதல் வருடம் பாடசாலையிலிருந்து வந்து ஒரு வார்த்தை சொன்னான். அதன் அர்த்தம் அவனுக்கோ, எனக்கோ தெரியாது. எனது கணவர்தான் அது "சொல்லத் தேவையில்லாத சொல்" என்பதை அவனுக்கு விளக்கினார். அன்று நான் எனது பிள்ளைகளுக்கு "கனி இருக்க காய்கள் தேவையில்லை..." என்பதை நாசூக்காக விளங்கப் படுத்தினேன். அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் எங்கள் வீட்டுக்குள் இப்படியான எந்த வார்த்தையையும் பாவித்ததில்லை. வெளியில் நண்பர்களுடன் பாவிப்பார்கள் என்றே நம்புகிறேன்.
வேலையிடத்தில் எனது சகதோழிகள் தாராளமாக இப்படியான வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள். மறந்தும் நான் அவைகளில் ஒரு வார்த்தையையும் சொல்வதில்லை. ஆனால் அவர்கள் சொல்லும் போது அர்த்தங்களை மட்டும் கேட்டு வைப்பேன்.
நேற்று வேலையிலிருந்து திரும்பி பேரூந்து நிலையத்துக்கு வந்த போது ஒரு அவலம் கலந்த அலறல். பார்த்தேன். ஒரு வயதான ஆண் நிலத்தில் தவண்டு கொண்டிருந்தார். `பெனர்´ என்று குறிப்பிட்டு அழைக்கப்படும் கூரையில்லாமல் தெருவோரங்களில் வாழும் கும்பல்களில் அங்கம் வகிக்கும் ஒருவர் அவர். நன்றாகக் குடித்து விட்டு.. வீழ்ந்திருக்கிறார். இன்னொரு பெண் இவர்களோடு வாழ்ந்தாலும் வீடும் உள்ளவர். அந்தப் பெண் அவரைத் தூக்கி நிறுத்தி.. ஒருவாறு உதவிக் கொண்டிருந்தார். சற்றுத்தள்ளி இன்னொருவர் பச்சை பச்சையாக வார்த்தைகளை வீசிக் கொண்டிருந்தார். நிறைவெறி.
பேருந்துக்காகக் காத்து நின்ற அனைவரும் ஒரு படத்தைப் பார்ப்பது போன்ற சுவாரஸ்யத்தோடு அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். அப்போதுதான் ஒரு சிறுமி (தன்யா) வந்தாள். 12 அல்லது 13 வயதிருக்கலாம். நிறைவெறியில் வார்த்தைகளை வீசிக் கொண்டிருந்தவரிடம் "வாயை மூடு.. என்று தொடங்கி.." மிகச்சாதாரணமாக சரளமாக தூஷணவார்த்தைகளை அள்ளிக் கொட்டினாள். ஒருதரம் அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போய் விட்டார்கள். குசுகுசுப்பாக தன்யாவைத் திட்டினார்கள். ஆணொருவன் காது கொண்டு கேட்க முடியாத அளவுக்கு தூஷண வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கும் போது வாய் பிளந்து பார்த்தவர்கள் எல்லோருமே பெண் பேசிய போது சலசலத்தார்கள். எனது சகதோழியரும்தான்.
தன்யா அந்த இன்னொரு பெண்ணின் மகள் என்பது பலருக்கும் தெரியாது. எனக்குத் தெரியும். நான் தினமும் கண்டு கொண்டிருக்க அந்த பேரூந்து நிலையத்தின் முன்னுள்ள உள்ள Barஇலேயே வளர்ந்தவள். அவள் தனது வீட்டிலிருந்த நேரத்தை விட இந்த Barஇல் இருந்த நேரம்தான் அதிகமாக இருக்கும். அவளது தந்தையும் தாயும் இந்தப் பெனர் கும்பலில் இருப்பவர்கள். அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்து விட்டாள். அவள் சிறுகுழந்தையாக இருக்கும் போதிருந்தே அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு வேதனை எழும்.
இப்படியான சூழலில் வாழும் ஒரு குழந்தையின் வாழ்வு எப்படித் தொடரும் என்பது என்னுள் எப்போதுமே கேள்விக் குறியாக இருக்கிறது. தன்யா இப்போது பாடசாலைக்குச் செல்கிறாள். முடிந்ததும் அப்படியே அந்த Barக்கு வந்து விடுகிறாள். அந்த சிகரெட் புகைக்குள்ளும் குடிபோதைக்குள் உழல்பவர்களுக்கு மத்தியிலும் வளர்கிறாள். சாமம் 12மணிக்கோ அன்றி 1மணிக்கோ அவளது தாய் வீடு திரும்பும் போதுதான் இவளும் திரும்புவாள்.
நேற்றைய நாராயணனின் கெட்டவார்த்தைகளின் அரசியல் என்னைப் பல விடயங்களை அசை போட வைத்தது. இந்த நிலையில் தன்யாவையும் கண்டது மனதை இன்னும் பாதித்தது.
இரவு படுக்கையிலும் தன்யாவே மனதுள் முகம் காட்டிக் கொண்டிருந்தாள்.
Monday, March 14, 2005
குழந்தைகள் சம்பாதிக்கலாமா?
உதயா குழம்பியிருக்கிறார். இதில் குழம்புவதற்கு அவசியம் இல்லையென்றே நான் கருதுகிறேன்.
குழந்தைகளிடம் இதைச் செய் என்றோ, அல்லது இதைச் செய்யாதே என்றோ ஒரேயடியாகத் தடுத்து விடக் கூடாது. ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு விதமான தன்மை இருக்கும். ஒரு குழந்தை பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும். இன்னொன்று இன்னொரு விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும். அதனால் முதலில் நாங்கள் பார்க்க வேண்டியது அந்தக் குழந்தையின் இயல்பான தன்மையைத்தான். இந்தத் தன்மையுள்ள இந்தக் குழந்தை இந்த வழியில் போனால் என்ன நடக்கும் என்பதைக் கருத்தில் எடுத்தே நாம் அவர்களை வழிக்குக் கொண்டு வரப் பார்க்க வேண்டும்.
13வயதில் உழைக்கத் தொடங்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கையின் குறிக்கோளே பணமாக மாறலாம்.(அதனால் கல்வி தடைப் படலாம்)
13வயதில் உழைக்கத் தொடங்கும் இன்னொரு குழந்தை அப் பணத்தை எப்படிச் செலவழிப்பது எனக் கற்றுக் கொள்ளலாம்.(அதனால் வாழ்க்கையில் திட்டமிட்டுச் செலவு செய்யக் கற்றுக் கொள்ளலாம்.) 13வயதில் உழைக்கத் தொடங்கும் இன்னுமொரு குழந்தையோ சேமிக்கக் கற்றுக் கொள்ளலாம். இப்படியே 13வயதில் உழைக்கத் தொடங்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக அதைப் பயன்படுத்தி... பலாபலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்களின் எதிர்காலம் ஒவ்வொரு விதமாக அமையலாம். ஆதலால் எடுத்தவாக்கில் 13வயதுக் குழந்தையைப் பணம் சம்பாதிக்க விடுவது தப்பு என்று சொல்லி விடவோ, அல்லது அந்த முயற்சியைத் தடுத்து விடவோ கூடாது.
மாறாக குழந்தைக்கு எங்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். படிப்பும் அதனோடு கூடிய எதிர்காலமும் முக்கியம் என்பதை மெதுமெதுவாகப் புரிய வைக்க வேண்டும். அப்படியெல்லாம் புரிய வைத்தும் குழந்தைக்கு பணத்தில்தான் நாட்டம் அதிகம் என்னும் பட்சத்தில்தான் நாங்கள் குழந்தையை ஒரு குறிப்பிட்ட அளவு சம்பாதிப்பதோடு நிறுத்த வேண்டும்.
ஒரு உதாரணம்
எனது மகன் திலீபன் 12வயதாக இருக்கும் போது எங்களது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஜேர்மனிய இளைஞன் ஒருவன் பேப்பர் போடும் வேலை செய்து கொண்டிருந்தான். அந்த இளைஞனுக்கு 14வயது என்பதால் அவன் சட்டப் படியான அனுமதியோடு பதிவு செய்து அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தான். எப்படியோ திலீபனுக்கும் அந்த இளைஞனுக்கும் நட்பு ஏற்பட்டதில் திலீபன் சனிக்கிழமை காலைகளில் அந்த இளைஞனுக்கு பேப்பர் போடுவதற்கு உதவி செய்தான். அந்த இளைஞன் மாதம் முடிய தனக்குக் கிடைக்கும் 200மார்க்கில் 50 மார்க்கை திலீபனுக்குக் கொடுத்தான்.
இதையிட்டு நான் எந்தக் குழப்பமும் அடையவில்லை. உதவியாகச் செய்த போதும் பணம் கொடுத்தானே எனச் சந்தோசப் பட்டேன். எனது மகனுக்கு அப்படிப் பணம் கிடைத்தது மிகுந்த உற்சாகமாக இருந்தது. தொடர்ந்தும் 14வயது வரை உதவி செய்து மாதாமாதம் 50மார்க்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தவன் 14 வயதானதும் அந்த இளைஞனின் உதவியோடு தானே தனக்கென ஒரு பகுதியை எடுத்து இன்னும் கூடிய பணத்தைச் சம்பாதிக்கத் தொடங்கினான். 19வயது வரை எந்தப் பிரச்சனையுமின்றி அவ்வேலையைத் தொடர்ந்தான்.
இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால்
இப்படி 12வயதிலேயே சம்பாதிக்கத் தொடங்கியது எனது மகனின் வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முதல் மாதம் 50மார்க் கிடைத்ததுமே அவன் எனக்குச் சொன்னது "அம்மா எனது பள்ளிக்கூட கொப்பி, புத்தகச் செலவுகளை நானே பார்க்கிறேன். காணாவிட்டால் கேட்கிறேன்." என்பதுதான். அது மட்டுமல்லாமல் அதிலே 10மார்க்குகளைக் கடிதத்துள் வைத்து ஊருக்கும் அனுப்பினான். மிகுதிப்பணத்தில் தனக்குத் தேவையானவைகளை வாங்கினான். கூடிய பங்கு அவைகள் புத்தகங்களாக இருந்தன. பாடல் கசட்டுகளும் இருந்தன. அதமமான செலவு என்று எதுவுமே செய்ததில்லை. பணம்தான் வாழ்க்கை என்று இன்றுவரை ஆனதுமில்லை. அந்த வேலை அவனது கல்விக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்கவில்லை. பெருமைப்படுமளவுக்கு வகுப்பில் முதல்மாணவனாகவே எப்போதும் இருந்து, எமது நகரப் பாடசாலைகளில் முதல் மாணவனாகவே தேர்ச்சி பெற்று, தற்போது நல்ல வேலையிலும் இருக்கிறான். அதே நேரத்தில் பணத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்யவும் கற்றுக் கொண்டிருக்கிறான்.
Friday, March 11, 2005
கனவான இனிமைகள்
சுமதியின் ராஜகுமாரனும் நானும் கதையை வாசித்த போது பின்னூட்டம் கொடுக்க மனம் உந்தியது. பதிவிற்கான post a commentஐ அழுத்தினேன். அது செயற்பட மறுத்தது. சரி வாசித்தேன் என்றதோடு விட்டுப் போகமுடியாமல் நான் முன்னர் எழுதிய சிறுகதை ஒன்று நினைவில் வந்தது. இது ஏற்கெனவே திண்ணையிலும் வந்ததுதான். ஆனாலும் மீண்டும் ஒரு முறை இங்கு பதிகிறேன். ஏனெனில் சுமதியின் கதைக்கும் இக்கதைக்கும் அடிப்படையில் ஒரு வித ஒற்றுமை இருக்கிறது.
இன்றைய சுமதியின் கனவு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. வழமையான கனவுகள் போல கட்டிலில் இருந்து தொப்பென்று விழுவதாயோ திடுக்கிட்டு விழித்து அழுவதாயோ இருக்கவில்லை.
நேற்றிரவு படுக்கையிலேயே சுமதிக்கும் அவள் கணவனுக்கும் காரசாரமான சண்டை வந்து விட்டது. சண்டை என்னவோ வழமையாக வரும்ä ஊருக்குப் பணம் அனுப்பும் விடயத்தில்தான் ஆரம்பித்தது.
சுமதியின் அம்மாவிடமிருந்து நேற்றுக் கடிதம் வந்திருந்தது. அதில் "பொம்பிளைப் பிள்ளையைக் கேட்கக் கூடாதுதான். ஆனாலும் என்ன செய்யிறது பிள்ளை! என்னாலை ஒண்டையும் சமாளிக்கேலாமல் கிடக்கு. சாப்பாட்டுக்கே கஷ்டமாயிருக்கு. ஏதாவது உதவி செய் பிள்ளை... என்று எழுதியிருந்தது.
சுமதி இதைப்பற்றி முதலே கணவன் மாதவனோடு கதைக்கத்தான் விரும்பினாள். ஆனால் மாதவனோ, இவள் இது பற்றிக் கதைத்து விடுவாளே! என்ற பயத்தில் தான் ஏதோ முக்கியமான வேலையில் இருப்பதுபோல கொம்பியூட்டரின் முன் இருந்து ஏதோ தேடுவது போலவும், ரெலிபோனில் முக்கிய விடயங்கள் பேசுவது போலவும் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தான். இவள் காத்திருந்து சலித்து படுக்கைக்குப் போய் அரைமணித்தியாலங்களின் பின்பே அவன் படுக்க வந்தான்.
அம்மாவின் கடிதம்äசாப்பாட்டுக்கே காசில்லையென்று, பணம் கேட்டு வந்த நிலையில், எந்த மகளால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியும். சுமதி நிம்மதியின்மையோடு படுக்கையில் புரண்ட படியே "இஞ்சை...! அம்மான்ரை Letter பார்த்தனிங்கள்தானே. தம்பியவங்கள் என்ன கஷ்டப் படுறாங்களோ தெரியேல்லை. என்ரை இந்த மாசச் சம்பளத்திலை கொஞ்சக் காசு அனுப்பட்டே?" மாதவனிடம் கேட்டாள்.
மாதவனிடமிருந்து மௌனம்தான் பதிலாய் வந்தது.
"என்ன...! சொல்லுங்கோவன்.........! அனுப்பட்டே.......?"
சுமதி கெஞ்சலாய்க் கேட்டாள்.
"உன்னோடை பெரிய தொல்லை. மனிசன் ராப்பகலா வேலை செய்திட்டு வந்து நிம்மதியாக் கொஞ்ச நேரம் படுப்பம் எண்டால் விடமாட்டாய்...! லைற்றை நிப்பாட்டிப் போட்டுப் படு." கத்தினான் மாதவன்.
சுமதிக்கும் கோபம் வந்து திருப்பிக் கதைக்க, வாய்ச்சண்டை வலுத்தது.
"..............! "
"..............!"
"..............!"
இறுதியில் "நீயும் உன்ரை குடும்பமும் கறையான்கள் போலை எப்பவும் என்னைக் காசு காசெண்டே அரிச்செடுப்பீங்கள்." மாதவன் இரவென்றும் பாராமல் கத்தினான்.
"என்ரை குடும்பத்துக்கு நீங்களென்ன அனுப்பிக் கிளிச்சுப் போட்டீங்கள். நான் வந்து பத்து வருஷமாப் போச்சு. இப்ப மட்டிலை ஒரு ஆயிரம் மார்க் கூட நீங்கள் என்னை அனுப்ப விடேல்லை. நானும் வேலை செய்யிறன்தானே. என்ரை காசை வீட்டுச் செலவுக்கு எடுத்துக் கொண்டு உங்கடை காசை உங்கடை அண்ணன்மார் கனடாவிலையும், அமெரிக்காவிலையும் வீடு வேண்டுறதுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறீங்கள்." சுமதியும் ஆக்ரோஷமாகச் சீறினாள்.
மாதவனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வர "என்ரை குடும்பத்துக்குக் காசு அனுப்புறதைப் பற்றி, நீ என்னடி கதைக்கிறாய்? நான் ஆம்பிளை அனுப்புவன். அதைப் பற்றி நீ என்னடி கதைக்கிறது?" கத்திய படியே எழுந்து, சுமதியின் தலையை கீழே அமத்தி முதுகிலே ஓங்கி ஒரு குத்து விட்டான்.
சுமதி வலி தாளாமல் "அம்மா...........!" என்று அலறினாள். மீண்டும் மாதவன் கையை ஓங்க தன்னைக் காத்துக் கொள்ள எண்ணிய சுமதி, அவன் கைகளை அமத்திப் பிடித்துத் தள்ளினாள்.
"என்னடி எனக்கு நுள்ளிறியோடி.....? உனக்கு அவ்வளவு திமிரோ......?" மாறி மாறி அவள் நெஞ்சில், கைகளில், முதுகில் என்று தன் பலத்தையெல்லாம் சேர்த்து மாதவன் குத்தினான்.
சுமதியால் வலியைத் தாங்க முடியவில்லை. "மிருகம்" என்று மனதுக்குள் திட்டியவாறு அப்படியே படுத்து விட்டாள். மாதவன் விடாமல் திட்டிக் கொண்டே அருகில் படுத்திருந்தான். சுமதி எதுவுமே பேசவில்லை. மௌனமாய் படுத்திருந்தாள் மனதுக்குள் பேசியபடி. கண்ணீர் கரைந்தோடி தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது. மனசை நிறைத்திருந்த சோகம் பெருமூச்சாய் வெளியேறிக் கொண்டிருந்தது.
...................................................
சுமதி படுத்திருந்தாள். மாதவனின் திட்டல்கள் எதுவும் அவள் காதுகளில் விழவில்லை.
அப்போது அவள் முன்னே ஒரு அழகிய ஆண்மகன் குளித்து விட்டு ஈரத்தைத் துடைத்த படி, பின்புறமாக நின்றான். திரண்ட புஜங்களுடன், மாநிறமான ஒரு ஆண் மகன் ஈரஞ் சொட்ட நின்ற போது, சுமதிக்கு அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து அந்த ஆண்மகன் சுமதியின் பக்கம் முகத்தைத் திருப்பினான். அழகிய முகம். அவன் புன்னகை சுமதியைக் கொள்ளை கொண்டது.
"என் இலட்சிய புருஷன் இவன்தான்." சுமதியின் முகம் நினைப்பிலே களிப்புற்றது. சுமதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடையில் இன்னொருவன் வந்து நின்றான். அந்த இன்னொருவனைப் பார்க்கச் சுமதிக்குப் பிடிக்கவில்லை.
தன் மனங்கவர்ந்த முதலாமவனை அவள் தேடினாள். முதலாமவனின் கண்கள் அந்த இன்னொருவனையும் தாண்டி இவளுள் எதையோ தேடின. தேடியவன் மெதுவாக இவளருகில் வந்தமர்ந்தான். அந்த நேரம் பார்த்து யாரோ இடையே வந்து விட அவன் போய் விட்டான்.
அடுத்தநாள் அவன் நினைவுகளுள் மூழ்கியபடியே சுமதி லயித்திருந்தாள். அவன் வந்தான். எனக்காக..., என்னைத் தேடி..., எனக்குப் பிரியமான ஒருவன் வந்திருக்கிறான். என்ற நினைவில் சுமதி மிகவும் சந்தோஷப் பட்டாள்.
அதற்கடுத்த நாளும் அவன் நினைவுகளைச் சுமந்த படி, வருவானா..! என்ற எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வியோடு அவள் வீட்டிலிருந்து வெளியேறி வீதியிலிறங்கி நடக்கத் தொடங்கினாள்.
அது இரு பக்கமும் மரங்களடர்ந்த ஒரு அமைதியான, அழகான பாதை. அந்த ரம்மியமான சூழலில், காதலுணர்வுகள் மனதை நிறைக்க, அதில் அவன் நினைவுகளை மிதக்க விட்டபடி சுமதி நடந்து கொண்டிருந்தாள். தூரத்தில் அவன் வந்து கொண்டிருப்பது தெரிந்ததும், இனம் புரியாத இன்பத்தில் மிதந்தாள்.
எனக்காக வருகிறான். எனக்கே எனக்காக வருகிறான். தேநீரோ, சாப்பாடோ கேட்க அவன் வரவில்லை. என்னில் காதல் கொண்டு, என்னைத் தேடி வருகிறான். என்னைப் பார்க்க ஆசை கொண்டு வருகிறான். என்னோடு கதைத்துக் கொண்டு இருக்க வருகிறான். என்னைச் சமையலறைக்குள் அனுப்பி விட்டு, தான் ஒய்யாரமாக இருந்து தொலைக்காட்சி பார்க்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. என்னைச் சாமான்கள் வாங்கக் கடைக்கு அனுப்பி விட்டு, நான் தோள் வலிக்கச் சாமான்களைத் தூக்கிக் கொண்டு வரும்போது, தொலைபேசியில் நண்பருடன் அரட்டை அடிப்பது மட்டுமல்லாமல், "நான் என்ரை மனிசிக்கு முழுச்சுதந்திரமும் குடுத்திருக்கிறன்." என்று சொல்லுகிற வக்கிரத்தனம் அவனுக்கு இல்லை.
அவனிடம் எந்த சுயநலமும் இல்லை. எனக்கே எனக்காக என்னைப் பார்க்க என்னைத் தேடி வருகிறான். என்னைப் பக்கத்தில் வேலைக்காரி போல வைத்து விட்டு, ஊர்ப் பெண்களுடன் அரட்டை அடித்துத் திரியும் கயமைத்தனம் இவனிடம் இல்லை.
ஆயிரம் நினைவுகள் சுமதியை ஆக்கிரமிக்க ஆவலுடன் அவன் வருவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அன்று போல் அவன் அரை குறை ஆடையுடன் இன்று இல்லை. தூய உடை அணிந்திருந்தான். அவன் நெருங்க நெருங்க சுமதி அவனை முழுமையாகப் பார்த்தாள்.
புன்னகையால் அவள் மனதை ஜொலிக்க வைத்த அவன் தலையில், மெலிதாக நரையோடியிருந்தது. சுமதி அவன் வரவில் மகிழ்ந்தாள். வானத்தில் பறந்தாள். ஏதோ தோன்றியவளாய் பக்கத்திலிருந்த பாதையில் திரும்பினாள். அவன் இரண்டு அடி தள்ளி அவள் பின்னே தொடர்ந்தான்.
அது ஒரு பூங்கா. ஆங்கு ஒரு சிறு குடில். அவன் அதனுள் நுழைந்து அங்கிருந்த வாங்கிலில் அமர்ந்து சுமதியைக் கண்களால் அழைத்தான்.
சுமதி அவன் பார்வைக்குக் கட்டுண்டவள் போல், போய் அவனருகில் அமர்ந்து கொண்டாள். அவன் சுமதியின் வலதுகை விரல்களை பூக்களைத் தொடுவது போல், மிகவும் மெதுவாகத் தொட்டுத் தூக்கி, தன் மறுகையில் வைத்தான். அவன் தொடுகையில் உடற் பசியைத் தீர்க்கும் அவசரமெதுவும் இல்லை. அன்பு மட்டுமே தெரிந்தது.
சுமதியின் வானத்தில் நட்சத்திரங்கள் தெரியத்தொடங்கின. அவள் மிகமிகச் சந்தோஷமாயிருந்தாள். வாழ்க்கையின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது.
திடீரென்று அவளை யாரோ தோளில் பிடித்து உலுப்பியது போல இருந்தது. திடுக்கிட்ட சுமதி விழிகளைத் திறந்து பார்த்தாள்.
அங்கே பூங்காவும் இல்லை. புஷ்பங்களும் இல்லை. கனவுக்காதலனும் இல்லை. மாதவன் தான் விழிகளைப் புரட்டியபடி, கோபமாக, "அலாம் அடிக்கிறது கூடக் கேட்காமல் அப்பிடியென்ன நித்திரை உனக்கு வேண்டிக் கிடக்கு. எழும்படி. முதல்லை பொம்பிளையா லட்சணமா இருக்கப் பழகு...!"
"கெதியா தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு வா. நான் வேலைக்குப் போகோணும்." கத்தினான்.
ஏதோ "பொம்பிளையளுக்குச் சுதந்திரம் கிடைச்சிட்டு" என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கினம். சுமதிக்குச் சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தமே புரியவில்லை.
அம்மாவின் கடிதம் மேசையில் மடித்த படி இருந்தது. மனசு கனக்க அவள் மௌனமாய் தேத்தண்ணியைப் போடத் தொடங்கினாள்.
உடலெல்லாம் வலித்தது.
அன்றைய கனவு மட்டும் மனதின் ஓரத்தில் அமர்ந்திருந்து, வாழ்க்கையின் இனிமை எங்கோ தொலைந்து விட்டது என்பதை அவளுக்கு உணர்த்தியது.
சந்திரவதனா - யேர்மனி
பிரசுரம் - ஈழமுரசு பாரிஸ்(மார்ச்8-14 - 2001)
பிரசுரம் - ஈழமுரசு அவுஸ்திரேலியா
Thursday, March 10, 2005
வாரபலன்
குமரேஸ் பழைய பஞ்சாங்கம் பற்றி எழுதியுள்ளார். அதைப் பார்த்ததும் கடந்த வாரம் நடந்த ஒரு விடயம் நினைவில் வந்தது.
எனது மகன் கடமையாற்றும் பத்திரிகையில் வாரபலன் வரும். கடந்த வாரம் அந்தப் பகுதிக்குரியவர் வரவில்லை என்பதால் தான்தான் அதை எழுதினேன் என எனது மகன் சொன்னான். "எப்படி எழுதினாய்?" என்று கேட்டேன். "இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னான ஒரு பத்திரிகையை எடுத்து அதில் உள்ளவற்றில் சில பலன்களை அங்கு இங்கு என்று மாற்றி விட்டுப் போட்டேன்" என்றான். அப்படித்தான் வழமையாக எழுதுபவரும் செய்வாராம்.
எனக்கு ஒரே சிரிப்பாய்ப் போய் விட்டது. ஏனெனில் வேலையிடத்தில் எனது சக வேலையாட்கள் அந்தப் பலன்களை விழுந்து விழுந்து வாசிப்பது மட்டுமல்லாமல், சிலசமயங்களில் அதில் சொன்னதற்கமையவும் ஏதாவது செய்வார்கள்.
இந்த வாரமும் அவர்கள் வாசித்த போது நான் சிரித்தேனே தவிர உண்மையைச் சொல்லவில்லை. இரகசியம் காக்கப் படவேண்டிய கட்டாயம் எனக்கு.
தெரிதல், ஒருபேப்பர்
தெரிதல் பற்றி ஈழநாதன் எழுதிய போது அதைப் பெற்றுக் கொள்ள எனக்கும் விருப்பம் என்று குறிப்பிட்டேன். பத்மனாபஐயருக்கு இது விடயமாக மின்னஞ்சல் செய்வதாகவும் சொன்னேன். ஆனால் நான் எழுத முன்னமே தெரிதல்கள் என்னை வந்தடைந்தன. இது பத்மனாபஐயரின் பாராட்டத்தக்க செயற்பாடுகளில் ஒன்று.
அடுத்து இவ்வாரம் வந்த பத்திரிகைகள்
முதலில் ஒருபேப்பர் 15, 16, 17. இரண்டு நாட்கள் கழித்து ஒரு பேப்பர் 18. எல்லாவற்றையும் வாசித்து விட்டு ஒரு சிறு குறிப்பாவது தர முயற்சிக்கிறேன்.
ஒரு பேப்பர் என்ற பெயர் எல்லோரையும் தொந்தரவு செய்வதால், அப்பேப்பருக்கு இன்னொரு பேப்பர் அல்லது கண்டறியாத பேப்பர் எனப் பெயர் வைக்கலாமென ஆசிரியர் குழு 17வது பேப்பரில் யோசித்துள்ளது. இனி 18வது பேப்பரைச் சரியாக வாசித்தால்தான் பெயர் வைத்தார்களோ அல்லது வைதார்களோ என்று தெரிய வரும்.
எப்படித் தமிழில் எழுதுவது?
உதவுங்கள்!
எப்படித் தமிழில் எழுதுவது என்று ஒரு பெண் என்னிடம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நான் அப்பெண்ணுக்கு தமிழ் எழுத்துக்களை எங்கிருந்து தரவிறக்கலாம், எப்படி சுரதாவின் செயலியில் விரும்பிய வடிவங்களுக்கு மாற்றலாம் என்பதையெல்லாம் தெரியப் படுத்தினேன். அதற்கான அவரது பதில் அஞ்சலைப் பார்த்த போதுதான் அவருக்கு தமிழில் தட்டுவதே எப்படி என்பது தெரியாமலிருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. சரி அதற்காக ஒரு விளக்கப் படத்தை அனுப்பலாமென்ற கூகிளில் தேடினேன். சரியான எதுவுமே கிடைக்கவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதற்கான முகவரியைத் தந்துதவுங்கள்.
Wednesday, March 09, 2005
வேஷங்கள்!

"எப்படி அவனால் முடிந்தது...! எப்படித் துணிந்து சொன்னான்...!" காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள். தொடர்ந்து வாசிக்க
Tuesday, March 08, 2005
வழக்கம் போல்...
10.10.2001 இல் எழுதப்பட்டது
எப்போதும் போலவே
இன்றைய எனது காலையும்
அவசரமாய்த்தான் விடிந்தது.
இப்போதெல்லாம்
இனிய கனவுகள் என்பது
எல்லோருக்கும் போல்
எனக்கும்
இரவுகளில் வருவதில்லை
வானிலே பறக்கும் விமானங்கள்
நேரிலே மோதுவதாய்
ஏதேதோ கனவுகள்
தீப் பிழம்புக் குவியலுக்குள்
நான் நின்று தவிப்பதாய்
திடுக்கிட்ட விழிப்புகள்
ஆனாலும்
விடியல்கள் வழமை போலத்தான்....
இன்று என்ன சமையல்
என்பதில் தொடங்கி
கூட்டல் கழுவல்
துடைத்தல் பெருக்கல்
எல்லாம் முடித்து....
வேலைக்கு ஓட வேண்டுமென்பதில்
மனசு பரபரத்தது.
இத்தனைக்கும் நடுவே...
"அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற நினைப்பை
கொழுத்தி எறிந்தவள் மாலதி..."
பெண் பெருமை பாடியது வானொலி.
எனக்குள்
மின்னலாய் கோடிட்டது மகிழ்ச்சி
நானே
களத்தில் நிற்பது போன்ற திருப்தியுடன்
மாலதியின் நினைப்பை மனத்தில் இருத்தி
பத்திரிகையில் வந்த கவிதை படித்து
ஒரு மிடுக்கோடு நிமிர.......
"என்னப்பா இண்டைக்குச் சாப்பாடு...?
பேப்பரும் கையுமா
நீ இருந்தால்...!
எனக்குப் பசிக்குது....!"
கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்
அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல....
சந்திரவதனா
யேர்மனி.
10.10.2001
Tuesday, March 01, 2005
இது ஒரு அழகிய பனிக்காலம்




நாங்கள் மணலில் விளையாடினோம்.
இவர்கள் பனியில் விளையாடுகிறார்கள்.
Photos - Thumilan
அவள்

என் பங்காக
அவள்
நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. தொடர்ந்து வாசிக்க
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
▼
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )