
இப்படியும் இன்னும் சில பல சஞ்சிகைகள் வெளியீடுகள் மூலமும் அறிமுகமான எழுத்துக்களில் டொமினிக் ஜீவா, வ.அ.இராசரத்தினம், முருகபூபதி, செ.யோகநாதன், செங்கை ஆழியான்.. போன்ற இன்னும் பல உடனடியாக நினைவுகளுக்குள் சிக்காத ஈழத்து எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள்.
இவர்களின் கதைகளின் நடுவே பாடசாலையில் மர்மக்கதைகளை வாசிப்பதிலும் நான் பின் நிற்கவில்லை. மர்மக்கதைகளை வாசிப்பதில் அந்தளவான பிரயோசனம் இல்லையென எனது அம்மா ஓரிரு தடவைகள் சொல்லியிருந்தாலும் வாசிக்கக் கூடாது என்ற கண்டிப்பான தடையெதுவும் விதிக்கவில்லை. பாடசாலையில் மர்மக்கதை வாசிக்கக் கூடாது என்பது கண்டிப்பான கட்டளையாக இருந்தது. ஆனாலும் எனது வகுப்பு மாணவிகளில் ஒரு சிலர் மர்மக்கதைப் பிரியர்கள். அவர்களிடமிருந்து எனக்கும் தாராளமாகக் கிடைத்ததால் அவைகளையும் தாராளமாக வாசித்து முடித்தேன்.
மிகச்சிறியதாக இருந்த எனது பாடசாலை வாசிகசாலையும் நான் பத்தாம்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது புதிதாகப் பெருப்பித்துக் கட்டப் பட்டு அரிய புத்தகங்களைத் தனக்குள் சேர்த்துக் கொண்டது. அதன்பின் நெற்போல், கிளித்தட்டு.. என்று விளையாட்டு மைதானத்தையே சுற்றிச் சுற்றி வந்த நானும், எனது நண்பிகளும் எமது பெரும்பான்மையான நேரத்தை வாசிகசாலைக்குள் முடக்கிக் கொண்டோம். இலக்கியப்புத்தகங்களும் அவைகள் பற்றியதான நண்பிகளுடனான அலசல்களும்... அது ஒரு ஆனந்தமான பொழுது.
ஒரு முறை வாசிகசாலைக்கு வந்த, எங்கள் ஊரிலிருந்து வெளியாகும் ஒரு கையெழுத்துப் பிரதியில் எனது ஆக்கத்துக்கு எனது பெயரிலேயே அதாவது என்னை எனது சகமாணவிகள் கூப்பிடும் "சந்தி" என்ற பெயரிலேயே ஓவியம் வரையப் பட்டிருந்தது. இது பாடசாலையில் பெரியவகுப்பு மாணவிகளிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியம் எனக்கும் ஓரளவு வரும் என்றாலும் பத்திரிகையில் வருமளவுக்கு நான் வரைந்ததில்லை. "யாரடி அது...? யாரப்பா அது...?" என்று கேள்விக்கணைகள் வேறு. அது மூனாதான் என்பது அப்போது ஒரு சிலருக்கு மட்டுந்தான் தெரியும்.
எனது கணவரும் ஒரு வாசிப்புப் பிரியர் என்பதை, திருமணத்தின் பின்தான் முழுமையாக அறிந்து கொண்டேன். முதன்முதலாக எனது புகுந்த வீட்டுக்குப் போனபோது, ஏதோ ஒரு தேவைக்காக அவர்களின் ஒரு அறைக்குள் நுழைந்த போது... அங்கும் புத்தகக் குவியல். முதற்புத்தகமாக என் கண்களுக்குள் தட்டுப் பட்டது சாண்டில்யனின் ராஜமுத்திரை. எனது அம்மா போலவே அவர்களும் கதைகளைச் சேர்த்து புத்தகங்களாகக் கட்டி வைத்திருந்தார்கள். அது எனக்கு மிக இனிமையான ஆச்சரியமாகவே இருந்தது.
எனது கணவரின் குடும்பம் கொப்பிகள் கட்டும் தொழிற்சாலை ஒன்றை வைத்திருந்தார்கள். Binding என்பது அவர்களுக்கு அத்துபடி. அதனால் எல்லாப் புத்தகங்களையும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டி வைத்திருந்தார்கள். எங்கள் திருமணம் நடந்து சில மாதங்களில் "Kamala and Brothers" என்றொரு புத்தகக் கடையையும் குடும்பமாக ஆரம்பித்தார்கள். இது தொடரும் காலங்களிலும் சுடச்சுட வரும் புத்தகங்களையெல்லாம் வாசித்துத் தள்ளுவதற்கு ஏதுவாக இருந்தது.
அந்தக் கால கட்டத்தில்தான் சுஜாதாவின் முதற் கதையான அனிதா இளம் மனைவி என்ற கதையை வாசித்தேன். அந்த நேரத்தில் சுஜாதாவின் எழுத்து நடை, கதை எழுதும் உத்தி... எல்லாமே என்னை மிகவும் கவர்ந்திருந்தன. என்னை மட்டுமல்ல, என் கணவரையும்தான். இருவரும் சுஜாதாவின் கதைகளை ஒன்று விடாமல் வாசித்தோம். சுஜாதாவின் கதை எது புத்தகமாக வந்தாலும் எனது கணவர் அதைத் தப்ப விடுவதில்லை. வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார். பல இரவுகளில் கட்டிலின் ஒரு நுனியில் எனது கணவரும், மறுநுனியில் நானுமாக இருந்து நித்திரையை மறந்து சுஜாதாவின் கதைகளை நேரம் போவதே தெரியாமல் ஒரே மூச்சில் வாசித்து முடித்திருக்கிறோம். நான் நினைக்கிறேன், 1990க்கு முன் வெளியான சுஜாதாவின் அத்தனை கதைகளையும் நான் வாசித்திருக்கிறேன் என்று.
(தொடரும்)
புத்தங்களோடு... - 1
புத்தங்களோடு... - 2
5 comments :
Very nice .
greetngs
ajeevan
www.ajeevan.com
அஜீவன், சக்தி
உங்கள் இருவரது வரவுக்கும் பதிவுக்கும் மிகவும் நன்றி.
அன்புனிறை சந்திரா,
உங்களின் வாசிப்பனுபவம் மிகச்சிறுவயதில் துவங்கியிருக்கிறது என்றறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எத்தனை எத்தனை புத்தகங்கள் ! அப்பப்பா! சரியான நகபரை சரியான நேரத்தில் கூப்பிட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒன்று விடாமல் படித்துக்கொண்டுதான் வருகிறேன். குறித்துக்கொண்டும் இருக்கிறேன்.
பல நேரங்களில் நான் இதைக்குறிப்பிடுவதுண்டு. அதாவது, சிறுவயதில் வாசிப்புச் சூழல் இருப்பது மிகப்பெரிய கொடுப்பினை. வாசித்ததுண்டு என்றாலும் ஊக்குவிக்கும் சூழல்எனக்கு அமைந்ததில்லை. அதற்கு ஏராளமான காரணங்கள்.
இங்கு (சிங்கப்புர்) வந்து (1990ல்) தான் என் வாசிப்புப் பசி (நூலகங்களின் மூலம்) அடங்கியது எனலாம்.
இப்போதெல்லாம் புத்தகங்கள் இல்லாமல் இருப்பது என் உடலின் உறுப்பு ஒன்றை இழந்தாற்போல இருக்கிறது.
உங்களின் பதிவுகள் மிகப்பயனுள்ளவை. மிக்கநன்றி.
என்றென்றும் அன்புடப்ன், ஜெயந்தி சங்கர்
ஜெயந்தி
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் எழுத்துக்களையும் எழுதும் ஆர்வத்தையும் பார்த்து
சிறுவயதிலிருந்தே நிறைய வாசித்திருப்பீர்கள் என நினைத்தேன்.
Post a Comment