குழைக்காட்டான் வலைப்பதிவாளர்களுக்கு உடல் நலன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டயற் சம்பந்தமாக பேராசிரியை எலிசபெத்தும், பேராசிரியர் வீலரும் சொல்லிய விடயங்களை இளங்காற்றுக்காக எழுதினேன். இந்த வழியையும் ஒருதரம் பின்பற்றித்தான் பாருங்களேன். முழுமையாக உதவாவிட்டாலும் கொஞ்சமாவது உதவலாம். கூடவே ஷண்முகி சொல்வது போல போதுமான அளவு உடற்பயிற்சியும் செய்யுங்கள்.
உண்ணும் உணவில் கலோரிகள் அதிகம் இருப்பினும் அதைப்பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. நீங்கள் விரும்பியதை உங்கள் எண்ணம் போல உண்ணலாம். உங்கள் உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்க வழியுண்டு. இப்படி அடித்துக் கூறுகிறார்கள், அமெரிக்க விஞ்ஞானிகளான பேராசிரியை எலிசபெத்தும், பேராசிரியர் வீலரும்.
வயிறு நிறைவது போல் தோன்றுவது, உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்ததல்ல, அது மனதைப் பொறுத்தது. உணவை ரசித்துச் சுவைக்காமல், கோப்பையில் உள்ளதை அடித்துப் பதைத்துக் காலி செய்வதையே எமது வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இங்கே கோப்பை காலியானவுடன் அங்கே வயிறு நிரம்பி சாப்பிட்டு முடிந்து விட்டது என்ற பிரமை எற்படும். இத்தன்மையே பலருக்கு உடல் பருமனாவதற்குக் காரணமாயிருக்கிறது.
ஆனால் உணவை ரசித்து உண்ணும் போது, சிறிதளவு உணவை உட்கொண்ட உடனேயே, வயிறு நிரம்பிவிட்டது என்ற சிக்னலை மனது தந்து விடுகிறது. உணவை எப்படி உண்ணவேண்டும் என்ற பயிற்சிகளை இந்த இரண்டு விஞ்ஞானிகளும் அறிவித்திருக்கிறார்கள். அந்தப் பயிற்சிகளுக்குத் தேவையான நேரம், வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே.
(1) உண்பதற்கு ஆயத்தமாகுதல்.
உணவை உட்கொள்ளுமுன் இரண்டு நிமிடங்களை உங்களுக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள். முதலாவது நிமிடத்தில் உங்கள் மனதை ஒருநிலைப் படுத்துங்கள். இரண்டாவது நிமிடத்தில் அமைதியாக இருந்த படியே காற்றை ஒரு சீராக ஐந்து அல்லது ஆறு தடவைகள் உள்ளிழுத்து, வெளிவிடுங்கள். இப்பொழுது உங்கள் கவனம் உங்கள் முன்னால் உள்ள உணவின் மீது செல்கிறது. சமையலுக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட நேரத்தை நினைத்துப் பாருங்கள். மேசை விரிப்பிற்குச் செலவிட்ட நேரத்தைக் கவனத்தில் எடுங்கள்.
இந்த நிலையே உணவை உணர்ந்து ரசித்து உண்ணும் தன்மையை உங்களுக்குத் தருகிறது. இங்கேதான் தொடர்ந்து உண்ணவேண்டும் என்ற மனதின் உந்துதல் இல்லாமல் போகின்றது.
(2) சுவை நரம்புகளுக்கான ஓய்வு நேரம்.
உணவுத்தட்டில் இருந்த உணவின் பாதியை உண்டவுடன், உண்ணுவதை நிறுத்தி விடுங்கள். இப்பொழுது முன்னர் போலவே சீராக ஐந்து அல்லது ஆறு தடவைகள் காற்றை உள்ளிழுத்து வெளி விடுங்கள். இந்தக் கட்டத்தில், நீங்கள் எவ்வளவு உணவை உட்கொண்டிருக்கிறீர்கள் என்ற விடயம் உங்கள் மூளைக்கு அறிவிக்கப்படுகிறது. அதே நேரம் உணவின் ருசியை ரசிக்காமல் உண்ணும் உங்களது செயல் இல்லாமல் போகின்றது. இச்சிறிய இடைவெளியின் பின் உணவை உட்கொள்ளத் தொடங்குங்கள். இப்பொழுது உணவின் சுவை, ஆரம்பத்தில் இருந்தது போன்றே உங்களுக்கு இருக்கும். இது உங்கள் வயிறு நிரம்பி விட்டது போன்ற எண்ணத்தையும் கொண்டு வரும்.
(3) வயிறு நிறைந்து விட்டது என்று மூளைக்கு அறிவிக்கும் தன்மை.
உணவை உட்கொண்டு பத்து நிமிடங்களின் பின் மனதை ஒரு நிலைப் படுத்தி ஆறுதல் எடுக்க வேண்டிய நேரம். வயிறு நிறைந்து விட்டது என்ற உணர்வு கூடுதலாக ஏற்படும் நேரமும் இதுவே. எனவே மீண்டும் ஒரு தடவை மனதை ஒரு நிலைப்படுத்தி ஐந்து அல்லது ஆறு தடவைகள் மீண்டும் காற்றினை உள்வாங்கி, வெளிவிடுங்கள். இந்த நிலையில் நீங்கள் உட்கொண்ட உணவு உங்கள் உடலுக்கு என்ன பயன் தருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். உங்களது இந்த எண்ணம் உங்கள் மூளையில் பதிவாகிவிடும்.
இப்படி உங்களை ஒருநிலைப் படுத்தி மேற்சொன்ன முறையில் உணவினை உட்கொண்டால் உடல் பருமனாவதற்கு வாய்ப்பேயில்லை, என்று சொல்லும் இவ் விஞ்ஞானிகள் சுலபமான சில வழிகளையும் தருகிறார்கள்.
1 - உண்பதற்குச் சிறிய கோப்பைகளைப் பாவியுங்கள்.
2 - கொஞ்ச உணவுடன் சாப்பாட்டுத்தட்டு நிரம்பி விடுவதால் அதிகமாகச்
சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
3 - மேசையை அழகுபடுத்தி, மெழுகுதிரியை எரியவிட்டுச் சாப்பிடுங்கள். அந்த
ரம்மியமான சூழ்நிலை குறைவாகச் சாப்பிடும் எண்ணங்களைத்
தோற்றுவிக்கும்.
4 - உங்கள் வீட்டை வெளிச்சமாக வைத்திருங்கள்.
ஏனெனில் இருண்ட நேரங்களில்தான் சொக்கிலேற் போன்ற இனிப்பு வகைகளை உண்ணுவதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும்.
3 comments :
நல்ல பதிவு, முயரற்சி செய்து பாக்கலாம்!!
அக்கா பதிவில் சொல்லும் விடயங்கள் அனைவரும்கடைப்பிடிக்க கூடிய்வை, ஆனால் அவசர உலகத்தில் யார் எதைத்தான் ஒழுங்காக செய்கிறார்கள்.
நோநோ, குழைக்காட்டான், பிழை
உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
Post a Comment