Wednesday, December 28, 2005
ஊருக்கு உபதேசம்
தொலைக்காட்சித் தொடர்களிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிளிலோ அதிக ஈடுபாடு கொள்ள முடியாத நான், பாலுமகேந்திராவின் `கதைநேரம்` போனால் விட்டுவிடாமல் பார்ப்பேன். ஒரு பிரச்சனையை எடுத்து அதை கச்சிதமாகச் சொல்லி விடும் திறமை பாலுமகேந்திராவுக்குத்தான் என வியப்பேன்.
உண்மையிலேயே கதைநேரத்தில் வரும் ஒவ்வொரு பிரச்சனையுமே சாதாரணகுடும்பங்களில் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகள். அதைப் பார்ப்பவர்கள் தாமாகவே தமது தவறுகளை உணர்ந்து கொள்ளும் விதமாகவும், பெண்களுக்கு... ஆண்களுக்கு... என்று உள்ள பிரச்சனைகளை சுற்றியுள்ளவர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதமாகவும்.. மிகவும் நன்றாக தயாரித்து வழங்கப் படுகின்றன.
அதில் நடிக்கும் மௌனிகா உட்பட எல்லோருமே மிக இயல்பாக நடிப்பார்கள்.
இன்று எதேச்சையாக பழைய குமுதம் ஒன்றைப் புரட்டிய போது... - ஒரு பழைய செய்திதான் - என் கண்ணில் பட்டது.
இந்தளவு உபதேசிக்கும் விதமான கதைகளைப் படமாக்கித் தரும் பாலுமகேந்திராவும் அந்தப் பெண் மௌனிகாவும் திருமணம் செய்து கொண்டு விட்டார்களாம். எனக்குச் சப்பென்றாகி விட்டது. என்ன மனிதர்கள் இவர்கள் என்று ஏமாற்றமாகவும் போய்விட்டது. இந்தளவுக்கு ஊரைத் திருத்தும் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஒரு பெண்ணால் எப்படித்தான் இப்படி நடந்து கொள்ள முடிந்ததோ..? இந்தளவு பிரச்சனைகளை உணர்ந்து கதைகளைத் தரும் பாலுமகேந்திராவால் எப்படித்தான் இப்படி நடந்து கொள்ள முடிந்ததோ...?
Saturday, December 17, 2005
நேபாளத்தில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம்
நேபாளத்தில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நேபாளத்தில் பெண்களின் உரிமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
பூர்வீக சொத்தை விற்பதிலும், மற்றவருக்கு வழங்குவதிலும் பெண்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று நேற்று வியாழக்கிழமை நேபாள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
திருமணமாகியவுடன் பெண்கள் தமது பூர்வீக சொத்தை தந்தை வழி சொந்தங்களுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கூறும் சட்டத்தையும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை ஒழிப்பதில் இந்த நீதிமன்ற உத்தரவு பெரும் தாக்கம் செலுத்தும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்
BBC 16.12.2005
Thursday, December 15, 2005
அந்தக் காலத்து யாழ்ப்பாணம்
அந்தக் காலத்து யாழ்ப்பாணம் 2005 தைமாதம் அவுஸ்திரேலியா Mellbournஇல் வெளியிட்டு வைக்கப் பட்டது
- மூனா -

"புத்தக வெளியீட்டு விழாவொன்றுக்குப் போறன். நீயும் வரப்போறியோ?" அண்ணன் கேட்டார்.
"என்ன புத்தகம்?"
"அந்தக் காலத்து யாழ்ப்பாணம்" புத்தகத்தின் தலைப்பே புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை இழுத்தது.
புத்தக வெளியீட்டு விழாவிற்கே நான் வந்திருந்தேன். ஆனால் பார்வைக்கு அது பொங்கல் விழாவாக இருந்தது. அதுவும் முதியவர்கள் இணைந்து வழங்கிய பொங்கல் விழா. இருக்கைகளில் ஆறஅமர இருந்தவர்கள், அங்குமிங்கும் ஓடித் திரிந்தவர்கள், வந்தவர்களுக்கு பொங்கல், வடை, பாயசம் வழங்கியவர்கள் என்று எல்லோருமே முதியவர்கள். கண்ணுக்குப் பட்ட இடமெல்லாம் முதிய அலைகளே. மேடையில் நிகழ்ச்சிகளை மட்டும் இளையவர்களே தந்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த பெரிசுகளில் சிலரது பேரப்பிள்ளைகளாக இருக்க வேண்டும்.
புத்தக வெளியீடு என்று அண்ணன் சொன்னார் இது பொங்கல் விழாவாக இருக்கிறதே. ஓருவேளை நிகழ்ச்சியை மாற்றி விட்டார்களா? இல்லை நாங்கள்தான் மண்டபம் மாறி வந்து விட்டோமா? சந்தேகத்துடன் அண்ணனைப் பார்த்தேன். பார்வையிலேயே என் சந்தேகத்தைப் புரிந்து கொண்டார்.
"இது முதியோர் நடத்தும் விழாதான். புத்தகம் எழுதியவருக்கு வயது 83. பொங்கல் விழா முடிய புத்தகம் வெளியிடுவினம்." அண்ணனிடம் இருந்து வந்த பதில் சந்தேகத்தைத் தீர்த்தது. முதியோர்கள் நடாத்தும் ஒரு விழாவில் ஒரு முதியவர் தனது அந்தக் காலத்து நினைவுகளை அசைபோட்டு அரங்கேற்றுவது முற்றிலும் பொருத்தம்தான்.
பொங்கல் விழா முடிந்தவுடன் புத்தக வெளியீட்டுக்கான ஆயத்தங்கள் நடந்தன. மேசைகள், நாற்காலிகள் எல்லாம் மேடைக்கு அருகே போடப்பட்டன. முதியோர்கள் மேடையேறி இறங்க சிரமப் படுவார்கள் என்ற எண்ணத்திலா அல்லது வந்திருந்தவர்களுடன் நெருக்கமாக நின்று புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற காரணத்திலா தெரியவில்லை. நானும் அண்ணனை கேள்வி கேட்டு சிரமப் படுத்த விரும்பவில்லை.
புத்தக வெளியீட்டு விழாவிற்கு சட்டத்தரணி சிறிஸ்கந்தராஜா தலைமை வகித்தார். தனக்கும் தன் மாமன் மகளுக்கும் ஏன் திருமணம் நடைபெறாமல் போயிற்று என்று தனது அந்தக்காலத்து நினைவுகளில் அதிகம் மூழ்கியதால், வெளியிடப்படும் புத்தகத்தைப் பற்றி அதிகம் கதைத்ததாகத் தெரியவில்லை. திடீரென அவர் தனது அந்தக்கால நினைவை விட்டு நிகழ்காலத்திற்கு வந்து புத்தகத்தில் உள்ளதைத் தொட்டுச் சென்றதுடன் சரி.
தமிழில் நன்றாகப் பேச வராது என்பதால் ஆங்கிலத்திலும் ஆய்வு நடந்தது. இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆங்கிலம் பேசும் இளைய தமிழ்ச் சமுதாயமும் அன்றைய எமது வாழ்க்கையை தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என சிலர் கேட்டுக் கொண்டனர். இன்னும் ஒருபடி மேலே போய் இதை இலங்கையில் பாட நூல் ஆக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப் பட்டது.
எழுத்தாளர் முருகபூபதி சிறப்புரை வழங்கினார். முதற் கூட்டத்தில் அவரிடம் கேட்ட ஒரு அரசியற் கேள்விக்கு புத்தக வெளியீட்டு விழாவில் வைத்து பதில் தந்தார். கேள்வி கேட்டவர் தற்சமயம் இந்த மண்டபத்தில் இல்லை ஆனாலும் நான் பதில் அளிக்க வேண்டியவனாக இருக்கிறேன் என்று அவர் கூறியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அப்படியாயின் யாருக்கு அந்தப் பதில்? யாராவது கேட்டுவிட்டு அந்த அன்பரிடம் போய் சொல்வார்கள் என்ற எண்ணத்திலா?
அப்படி இப்படி என்று அந்தக் காலத்து யாழ்ப்பாணம் என்ற அந்த நூலின் ஆய்வு முடிந்து அதன் எழுத்தாளர் சிசு. நாகேந்திரன் தனது உரையில் எல்லோருக்கும் நன்றி சொல்லி, அந்த நூலின் விற்பனை கடற்கோள் அனர்த்தத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான புனரமைப்புக்கு வழங்கப்படும் என அறிவித்த போது அந்த 83 வயது இளைஞனின் பெரிய மனது தெரிந்தது. அந்த இனிய நினைவோடு புத்தகத்தைப் புரட்டிய போது அந்தக்கால யாழ்ப்பாணம் அப்படியே கண்ணில் தெரிந்தது.

சிசு. நாகேந்திரன் அவர்கள் எடுத்த எடுப்பிலேயே குடும்ப உறவுகள் பற்றியே எழுத ஆரம்பிக்கின்றார். குடும்பத்தில் ஆணின் பலம் அன்று எப்படி இருந்தது என்பதை அழுத்திச் சொல்கிறார். இன்று இல்லையென்கிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மாமியார் எப்படி மருமகளிடம் இருந்து குடும்பப் பொறுப்பைக் கைப்பற்றி பேரப் பிள்ளைகளையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வருகிறார் என்ற சூட்சுமத்தையும் சொல்லாமல் சொல்கிறார். ஒரு பட்டியலைப் போட்டு அந்தக் காலத்து சத்துணவு வகைகளை பற்றிச் சொல்லி மனதுக்கு வலுவேற்றுகிறார். உடைகள் என்று வரும்போது, கோவணத்தை எப்படிக் கட்டுவது என்பதை விலாவாரியாகச் சொல்கிறார். நல்லவேளை படம் போட்டு விளக்கத் தலைப்படவில்லை.
அந்தக் காலத்துப் பெண்கள் தலைமயிரை அழுத்தமாக வாரி ஒற்றைப் பின்னல் அல்லது இரட்டைப் பின்னல் போட்டுக் கொள்வார்கள். தலைமயிரை விரித்து விட்டபடி ஒருவரும் திரியமாட்டார்கள். அப்படித் திரிபவர்கள் அநேகமாகப் பைத்தியக்காரிகளாக இருப்பார்கள் என்கிறார். யாரைச் சாடுகிறார்? இன்றைய நாகரீகத்தையா? அல்லது பெண்களையா? ஆசிரியர் துணிச்சல் பேர்வழிதான்.
நான்கு பேர் ஒரு துவிச்சக்கர வண்டியில் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அந்தக் காலத்துக் குறைவான போக்குவரத்து வசதிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது. கதிர்காம யாத்திரிகர்களின் துணிச்சலான யாத்திரைகள், அவர்களை வழியனுப்பும் உறவினர்கள், திரும்பி வருவாரா எனக் காத்திருக்கும் பெண்கள் என பல காட்சிகளை மனதில் பதியவைக்கிறார்.
வெற்றிலையைப் போட்டுவிட்டு எந்த இடமென்று பாராமல் எல்லா இடமும் துப்புபவர்களைக் கண்டு அருவருத்தும், கையில் மீதமான சுண்ணாம்பை கண்ட இடமெல்லாம் பூசுபவர்களை கண்டித்தும் சொல்கிறார். குளியல் பொருட்களைப் பற்றிச் சொல்லும் போது சீகைக்காய், சவர்க்காரங்களுடன் நிறுத்தியிருக்கலாம். இன்றைய குளியலறைப் பொருட்களைப் பற்றிச் பட்டியலிட்டு என்னத்தைச் சொல்ல வருகிறார் என்பதை புரியமுடியவில்லை.
"எடிபிள்ளை! இங்கை வந்து பார்! உன்ரை மோன் என்ன வடிவாய் முத்தத்திலை சித்திரம் வரைஞ்சு வைச்சிருக்கிறான் எண்டு பார்" என்று அந்தக் காலப் பாட்டிமார் பேசிய வார்த்தைகளை மனதில் பதிந்து வைத்து இப்பொழுது எங்களுக்கு எழுதிக் காட்டியிருக்கின்றார்.
வெள்ளைக்காரன் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எங்களவர்கள் பெரிய படிப்புக்கள் படிக்காமல் இருக்க என்னென்ன செய்தான் என்பதைச் சொல்கிறார். 40ரூபா மாதச் சம்பளத்தில் ஒரு குடும்பத் தலைவி 15ரூபா மிச்சம் பிடித்து தனது மகளுக்கு சீதனம் சேர்த்த கெட்டித்தனத்தை மெதுவாகச் சொல்கிறார். தனது தங்கையின் திருமணம் முடியுமட்டும் மணம் செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்த ஆணின் பரிதாப வாழ்க்கை இனி வேண்டாம் என்று கேட்டிருக்கின்றார். குடிமக்கள், சாதிகள், கடன்கழிப்பு ஆகியனவற்றைச் சொல்லி அந்தக்கால மேட்டுக்குடிகளின் வாழ்க்கையை மனநிலையைச் சொல்லிவைக்கிறார். அதேநேரம் மேட்டுக்குடிகளும் சூத்திரர்தான் என்பதையும் சொல்லியிருக்கின்றார்.
சதிர்க் கச்சேரிதான் சின்னமேளமென்று அழைக்கப்பட்டது என்கிறார். நிகழ்ச்சிக்கு நடனமாட இந்தியாவில் இருந்துதான் பெண்கள் வந்தார்கள் என்று குறிப்பிடுகின்றார். வந்தவர்களில் பலர் இங்கேயே தங்கிவிட்டார்கள் என்றும் அதற்கு சாட்சியாக புகழ்பெற்ற நாடக நடிகை கன்னிகா பரமேஸ்வரியைச் சுட்டிக் காட்டுகிறார்.
ஆட்டைக் கொழுக்க வைத்தால் நல்ல விலைக்கு விற்கலாம் என்ற நினைப்பே தவிர அது தெய்வத்திற்கு நேர்ந்து விட்ட ஆடு என்ற படியால் அல்ல என்று சொல்லி பலி கொடுப்பதைப் பற்றி ஒருபிடி பிடித்திருக்கின்றார். அதே போல் வலது பக்கத்தால் சுவாசம் போய் வந்தால் வெற்றி. இடது பக்கத்தால் சுவாசம் போய் வந்தால் தோல்வி என்ற மூக்குச் சாத்திரத்தின் இரகசியத்தைப் போட்டு உடைத்திருக்கின்றார். மந்திரவாதிகளின் தந்திரங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை.

காதுக்கின்னாத கடும் சொற்களுக்கு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறர். அதற்காக 63 திட்டுக்களையும் எழுதி வைத்திருக்கின்றார். காதுக்கினிய சொற்களை அந்தக் காலத்தில் பேசவில்லையா என்ன? "என்ரை குஞ்செல்லே! அடுத்தமுறை எழுதக்கை காதுக்கினிய சொற்களையும் எழுதிவையுங்கோ அப்பு."
தமிழரிடம் அந்தக் காலத்தில் போட்டியும் பொறாமையும் இருந்தது என்கிறார். இதில் என்ன புதுமை? எந்தக் காலத்தில் அது தமிழனிடம் இல்லாமலிருந்தது? மொட்டைக் கடுதாசி போடுவது மட்டுமல்ல காட்டிக் கொடுப்புக்களும் இன்றும் தொடரத்தானே செய்கிறது. சில இடங்களில் அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் ஒப்பீடு செய்து பார்க்கின்றார். அந்த ஒப்பீட்டிற்கு பெண்களேயே அதிகமாக இழுத்திருக்கின்றார். அதன்மூலம் ஓ.. இவரும் அந்தக் காலத்து ஆள்தானே என்று நினைக்க வைக்கிறார்.
சிசு. நாகேந்திரனது எழுத்துக்களில் நகைச்சுவை உணர்வு அதிகம் தெரிகிறது. அது இவரது எழுத்து நடைக்கு மெருகூட்டுகிறது. கலைவளன் சிசு. நாகேந்திரனது அந்தக் கால யாழ்ப்பாணம் நல்லதொரு பதிவாக வந்திருக்கிறது. இவரிடம் இன்னும் பல விசயங்கள் இருப்பதும் புரிகிறது. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும்.
செல்வகுமாரன்(மூனா)
Wednesday, December 14, 2005
தாம்பத்திய உறவும் நோயெதிர்ப்பு சக்தியும்
நமக்குள் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். சமீபத்தில் இது விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழகத்தின் பிரபல செக்ஸாலஜிஸ்டான டாக்டர் நாராயண ரெட்டி என்ன சொல்கிறார் பாருங்கள்...
Tuesday, December 13, 2005
தேடப் படுகிறார்
பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட, வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி பயின்ற சைலானி சிவசுப்பிரமணியம் என்பவரை எனக்குத் தெரிந்த ஒருவர் தேடுகிறார். குறிப்பிடப் படும் இப் பெண் 1962இல் பிறந்தவர்.
விபரம் தெரிந்தால் அறியத் தாருங்கள்.
நன்றி.
Thursday, December 08, 2005
அப்ப... பிரச்சனை...? (பெண்மனசு - 5)
இண்டைக்கு எப்பிடியாவது இந்தப் பிரச்சனையைப் பற்றி இவரோடை கதைச்சிடோணும். நேற்றே கதைச்சிருப்பன். ஆனால் நான் வேலையாலை வந்த நேரம் அவர் ஆரோடையோ தொலைபேசியிலை கதைச்சுக் கொண்டிருந்தார்.
கதைச்சு முடிஞ்சு வரட்டும் கதைப்பம் எண்டு நினைச்சுக் கொண்டு நான் என்ரை வேலையளைச் செய்து கொண்டிருந்தன்.
கதைச்சு முடிச்சிடோணும் எண்ட நினைப்பு மனசுக்கை இருந்ததாலையோ என்னவோ என்ரை வேலையள் சரியா ஓட மறுத்துக் கொண்டு நின்றன. தேநீரைப் போட்டுக் குடுத்திட்டு ஏதோ ஒரு ஒட்டாத் தன்மையோடை கணினிக்குள் புகுந்து, குசினுக்குள் அடுக்கி....
ம்...கும். அவர் இன்னும் கதைச்சு முடியேல்லை. நீட்டிலை கதைச்சுக் கொண்டே இருந்தார். சரியாக் காது குடுத்துப் பார்த்தன். ஒவ்வொரு விசயத்தையும் இரண்டு மூண்டு தரமா அளந்து கொண்டிருந்தார். இதெல்லாம் தேவையோ எண்டு நினைக்கிற விசயங்களையும் கதைச்சுக் கொண்டிருந்தார். பெண்களைக் கண்களா மதிக்கிறா மாதிரியும் இடையிடையிலை கதைச்சு, எதிர் முனையிலை இருக்கிறவனிட்டை தன்னைப் பற்றிய இமேஜ்யை உயர்த்த முயற்சித்தார்.
அவற்றை கதை என்ரை காதிலை விழுறதையும் என்னாலை தவிர்க்க முடியேல்லை. நேரமும் பத்து மணியாகீட்டுது. பத்துமணி எண்டத்தான் நான் வேலையாலை வந்து இரண்டு மணித்தியாலங்கள் கரைஞ்சிட்டுது எண்டதும் உறைச்சுது.
சா... யன்னலுக்கு வெளியிலை ஒரே கும்மிருட்டு. வேலையிடத்திலை என்ரை தோழியர் "கோப்பி குடிக்கப் போவம் வா" எண்டு கேட்டவை. நான் "எனக்கு இண்டைக்குப் பஞ்சியா இருக்கெண்டு" பொய் சொல்லிப் போட்டு வந்திட்டன். லேற்றாப் போனால் இந்த மனுசன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எண்டு சொன்னால் அதுகள் "ஏன் உன்ரை மனுசன் உன்னை வீட்டிலை தனிய விட்டிட்டு எத்தினை தரம் எங்கையோ எல்லாம் சுத்திப் போட்டு வந்தவன்" எண்டு சொல்லிப் பேசுங்கள்.
பேசாமல் அதுகளோடை போய் நாலு கதை கதைச்சு மனம் விட்டுச் சிரிச்சிட்டு வந்திருக்கலாம்.
இன்னும் மனுசன் தொலைபேசியிலை அளக்குது. மூன்று மணித்தியாலமா நானும் உம்மாண்டி மாதிரி முட்டு வீட்டுக்குள்ளை தட்டுப் பட்டுக் கொண்டு திரியிறன். இந்தப் பிரச்சனையை இண்டைக்கும் கதைச்சு முடிக்கேலாது போல கிடக்கு.
சரி சரி ஒரு மாதிரி மனுசன் தொலைபேசியை வைச்சிட்டுது. ஆனால் நேரந்தான் பதினொரு மணியாச்சு. இப்பப் போய் இந்தப் பிரச்சனையைக் கதைக்கேலாது. அவ்வளவு அவசரமா கதைச்சு முடிக்கிற விசயமுமில்லை இது. அதோடை இப்ப போய் நான் ஏதாவது கதைக்க மனுசன் படுக்கிற நேரம் பிரச்சனையான கதையளைக் கதைக்காதை எண்டு சினக்க.. வேண்டாம். நாளைக்குக் கதைப்பம் எண்டு விட்டிட்டன்.
அதுதான் இண்டைக்காவது எப்பிடியாவது கதைச்சிடோணும் எண்ட நினைப்போடே பிள்ளையாரே...! கடவுளே...! இண்டைக்கு ஒருத்தரும் ரெலிபோன் பண்ணியிருக்கக் கூடாது எண்டு நினைச்சுக் கொண்டு கதவைத் திறந்தன். நல்ல காலம் ஒரு கதைச் சத்தமும் கேட்கேல்லை.
அந்தப் பெரிய சந்தோசம் ஒரு சின்ன செக்கனுக்குள்ளை ஓடிட்டுது. தொலைக்காட்சியிலை காற்பந்தாட்டம் நடக்குது. மெதுவா எட்டிப் பார்த்தன். மனுசனுக்கு என்ரை பக்கம் திரும்பக் கூட மனமில்லை. கண்களை தொலைக்காட்சிக்குள்ளை தொலைச்சுப் போட்டு சோபாக்குள்ளை சுருண்டு கிடக்குது.
சரி வழக்கம் போலை தேநீரைப் போட்டுக் குடுத்திட்டு தொலைக்காட்சியைப் பார்த்தன். விளையாட்டுத் தொடங்கி ஆகப் பத்து நிமிசங்கள்தான். சா... விளையாட்டு முறைப்படி முடியிறதெண்டாலே 80நிமிசங்கள் இன்னும் வேணும். இதுக்குள்ளை எத்தினை அளாப்பல். குழப்பல். இதுக்குள்ளை இடைவேளை. இதுகளோடை தேநீரையே கை நீட்டி வாங்க மறந்து தொலைக்காட்சியோடை இருக்கிற மனுசன். இண்டைக்கும் கதைக்கிறதெங்கை!
வெளியிலை பார்த்தன். கும்மிருட்டு. என்ரை அறை லைற்றை போட்ட படி விட்டிட்டு அப்பிடியே படுத்தன். ஆ... என்ன சுகம். கதகதப்பான போர்வை. அறை நிறைய வெளிச்சம். இதமான தலையணை. கண்களைத் திறந்த படி ஏகாந்தம்.
அப்ப... பிரச்சனை...? அது என்ன எண்டுதானே கேக்கிறிங்கள். அது தன்ரை பாட்டிலை இருக்குது.
பெண்மனசு
8.12.2005
பெண்மனசு - 1
பெண்மனசு - 2
பெண்மனசு - 3
பெண்மனசு - 4
Wednesday, December 07, 2005
ஒரு பேப்பர் - 35
ஒரு பேப்பர் - 35ஐ வாசித்து விட்டு, பிடித்தவை பிடிக்காதவை பற்றி எழுத நினைத்தேன். வழமை போலவே எழுதுவோம் எழுதுவோம் என்ற நினைப்போடு நாட்கள் ஒடி விட்டன.
மாவீரர்களை நினைவு கூர்ந்து, எமது விடியலுக்காய் தம்மை அணைத்துக் கொண்ட தியாக தீபங்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகப்புப் படத்தோடு கடந்தவாரம் பேப்பர் வந்தது.
உள்ளே மாவீரர் சிறப்புப் பக்கங்களோடு... பிக்கல், பிடுங்கல், வாதம், எதிர்வாதம், எள்ளல், ஜொள்ளல், அறுவை, சினிமா... என்று பலவித ரசனைக்குட்பட்ட விடயங்களும் அடங்கியுள்ளன.
இன்னும் வாசிக்காதவர்களுக்காக
இப்போதுதான் பார்த்தேன். 36வது பேப்பரும் வந்து விட்டது போலுள்ளது.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம். more
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யும் பெண்கள்

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்ய வந்திருக்கும் வெளி நாட்டுப் பெண்களுக்கு மிகவும் அடிப்படையான உரிமைகளைக் கூட உறுதி செய்ய சிங்கப்பூர் அரசு தவறுவதாக அமெரிக்காவிலிருந்து இயங்கும் , மனித உரிமைகள் கண்காணிப்பு, ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச், என்ற அமைப்பு கூறுகிறது.
வெளிநாட்டுப்பெண்கள் , தாக்கப்படுவது, நிர்ப்பந்தமாக தடுத்து வைக்கப்படுவது, அடிக்கடி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது, கொலை செய்யப்படுவது போன்றவை நடப்பதாக இந்த அமைப்பு ஒரு அறிக்கையில் கூறுகிறது.
இந்த துஷ்பிரயோகங்கள், சிங்கப்பூரின் சட்டதிட்டங்களின் படி, வீட்டு வேலை செய்யும் பெண்கள் தொழில் சட்டத்திலிருந்து விலக்கி வைக்கப் படுவதாலேயே நடக்கிறது என்று இந்த அறிக்கை கூறியது.
இந்த மாதிரி குற்றங்கள் இழைப்பவர்களுக்கு சிங்கப்பூர் அரசு கடுமையான தண்டனை அளிக்கிறது. ஆனால் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மற்ற ஊழியர்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் தரப்படவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
quelle - BBC
Thursday, December 01, 2005
சேலைக்கும் பெண்விடுதலைக்கும் முடிச்சு
நிலாவின் இப்பதிவைப் என்னைப் புடவையில் பார்த்ததும் ‘என்னக்கா இன்னும் பட்டிக்காடாவே இருக்கீங்க’ என்று கேலி பேசுகிறார்கள் என் கிராமத்துப் பெண்கள்! பார்த்ததும் என் மனதைச் சுரண்டும் ஒரு விடயம் ஞாபகத்தில் வந்தது.
ஏதாவது நிகழ்ச்சிகளுக்குச் சேலையுடன் போனால் "என்னக்கா பெண்ணியம் பேசிக் கொண்டு சேலை உடுத்துகிறீர்கள்" என்கிறார்கள். சேலைக்கும் பெண்விடுதலைக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.
எப்போதும் சேலைதான் உடுத்த வேண்டுமென யாராவது கட்டாயப் படுத்தினால் அது என் சுயத்தின் மேலான சீண்டல். கொட்டும் பனியில் சேலை உடுத்த வேண்டுமெனக் கட்டாயப் படுத்தினால் அது பண்பாடு என்கின்ற பெயரில் என் மேல் போர்த்தப் படும் அதிகாரம்.
எனக்குப் பிடித்த உடைகளில் ஒன்றான சேலையை, என் சுய விருப்பத்தோடு, நான் உடுத்தும் போது கேள்வி கேட்டால்...?
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
▼
2005
(
172
)
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )