Sunday, April 09, 2006

கல்லுச் சுண்டுதல்

தமிழர்கள் பாரம்பரியமாக விளையாடும் விளையாட்டுக்களில் கல்லுச்சுண்டும் விளையாட்டும் ஒன்று. இவ்விளையாட்டை வயது பேதமின்றி, ஆண் பெண் பேதமின்றி சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோருமாக ஒன்று கூடி இருந்து விளையாடுவார்கள்.

இவ்விளையாட்டுக்கு, கல்லைச் சுண்டினால் தடங்கி நின்று விடாமலோ, மேலே பறக்காமலோ, சுண்டிய வேகத்துக்கு ஏற்ப போகக் கூடிய எந்தத் தளமும் ஏதுவானது. இதை இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை பேரும் கூடி இருந்து விளையாடலாம். இதற்கு சிறிய கற்கள் (அல்லது புளியங்கொட்டைகள்) உகந்தவை. இரண்டிலிருந்து இரட்டை இலக்க எண்கள் கொண்ட எத்தனை கற்களையும் உபயோகிக்கலாம். அவை கைகளுக்குள் கொள்ளக் கூடிய அளவுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

வீடுகளிலும், பாடசாலைகளிலும் இவ்விளையாட்டை வழுக்கலான அல்லது சொரசொரப்பான சீமேந்துத் தரைகளில் விளையாடுவார்கள்.

விளையாடும் முறை மிகவும் சுலபமானதே.

முதலில், கொஞ்சக் கற்களாயின் ஒற்றை உள்ளங்கைக்குள்ளும், ஒற்றைக் கைக்குள் அடங்காதவையாயின் இரண்டு கைகளைச் சேர்த்து இரட்டை உள்ளங்கைகளுக்குள்ளும் வைத்து நிலத்தில் மெதுவாக வீசிப் போட வேண்டும். கற்கள் ஒன்றொடொன்று ஒட்டி இராமல் தள்ளித் தள்ளி இருந்தால் வெல்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.

அடுத்து, தரையில் போடப் பட்ட கற்களில் இரண்டு கற்களுக்கு நடுவே சின்ன விரலாலோ அன்றி சுட்டு விரலாலோ கோடு கீற வேண்டும். அப்படிச் செய்யும் போது கற்களில் விரல் பட்டு விடக் கூடாது.

சரியாக, கற்களில் விரல்கள் படாமால் கீறி விட்டால், கீறிய அந்தக் கையிலுள்ள ஒரு விரலால், அந்த இரண்டு கற்களில் ஒன்றைச் சுண்டி மற்றதில் பட வைக்க வேண்டும்.

சரியாகக் கோடு கீறி, குறி வைத்த கல்லையே சுண்டிய கல்லால் தொட்டு விட்டால் சுண்டியவர் அந்த இரண்டு கற்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.

இதே போல் தொடர்ந்தும் ஒவ்வொரு இரண்டு கற்களாகச் சுண்டிச் சுண்டி அதில் ஒன்றை எடுத்துச் சேர்க்க வேண்டும்.

முக்கிய நிபந்தனைகள்
கோடு கீறும் போது விரல்களோ கையின் வேறெந்தெப் பகுதியுமோ கற்களில் பட்டு விடக் கூடாது.
கோடு கீறிய விரல் உள்ள கையின் ஏதாவது ஒரு விரலால் மட்டுமே சுண்டலாம்.
சுண்டும் கல் குறி வைத்த கல்லில் கண்டிப்பகப் பட வேண்டும்.
சுண்டும் கல்லோ, குறி வைக்கப் பட்ட கல்லோ மற்றைய கற்களில் பட்டு விடக் கூடாது.
இருந்த இடத்தை விட்டு அரக்கக் கூடாது. (சற்றே பின்பக்கத்தைத் தூக்கி உன்னலாம்.)

ஒருவர் ஆட்டமிழந்தால் அவர் முழுமையாக வெளியில் போக வேண்டியதில்லை. தான் எடுத்ததை வைத்துக் கொண்டு, மற்றவர்கள் ஆட்டம் இழக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் காத்திருக்க வேண்டும். அதிர்ஸ்டம் இருந்தால் கடைசி இரண்டு கற்களாவது இவரிடம் வந்து சேரலாம்.

ஒரு வட்டம் முடிய ஒவ்வொருவரும் எத்தனை கற்கள் எடுத்திருக்கிறார்களோ அத்தனை புள்ளிகள் அவர்களுக்கு. எத்தனை வட்டங்கள் விளையாடுவது என்பதை முதலிலேயே தீர்மானித்து வைத்திருந்து அத்தனை வட்டங்களையும் விளையாடி முடித்ததும் மொத்தமாக யார் அதிக புள்ளி எடுத்தாரோ அவர் வென்றவர் ஆகிறார்.

இந்த விளையாட்டில் பெரியவர்களை விட சிறியவர்கள் வெல்வதற்கான சாத்தியம் அதிகம். ஏனெனில் சிறியவர்களது விரல் மெலிதாக இருக்கும். சிறிய இடைவெளியுடன் உள்ள கற்களுக்கு நடுவில் கூட கீறிச் சுண்டி விடுவார்கள்.

சந்திரவதனா
9.4.2006

நான் ஏற்கெனவே எழுதிய இந்தப் பதிவில் வசந்தனும், ஷ்ரேயாவும் தந்த தகவல்களையும் சேர்த்து மீளப் பதிந்துள்ளேன்.

8 comments :

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

இதை நாங்கள் புளியங்கொட்டை வைத்து விளையாடியிருக்கிறோம். கல்லில் விளையாடியதில்லை.

Chandravathanaa said...

ஷ்ரேயா!
நாங்களும் சில சமயங்களில் புளியங்கொட்டையில் விளையாடுவோம். புளியங்கொட்டை சுழன்று கொண்டு சற்று வேகமாகச் செல்லும். கல் ஓரளவுக்கு எங்கள் கொன்றோலுக்குள் நிற்கும்.

வசந்தன்(Vasanthan) said...

//சரியாகக் கோடு கீறி, குறி வைத்த கல்லையே சுண்டிய கல்லால் தொட்டு விட்டால் சுண்டியவர் அந்த இரண்டு கற்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
//

நாங்கள் விளையாடும்போது எடுப்பது ஏதாவது ஒரு கல்லைத்தான். சுண்டப்பட்ட கல்லோ இலக்கு வைக்கப்பட்ட கல்லோ வேறு கற்களுடன் மோதினாலும் ஆட்டமிழப்பு.
புளியஙகொட்டையில் மட்டுமன்றி, சிப்பிசோயில் கூட விளையாடுவோம். புளியங்கொட்டையை விட அது இன்னும் கடினம்.
அடுத்த முக்கிய நிபந்தனை, இருந்த இடத்தை விட்டு அரக்கக்கூடாது. (முன்னுக்கு வளையலாம், சற்றே பின்பக்கத்தைத் தூக்கி உன்னலாம்)

Chandravathanaa said...

நன்றி வசந்தன்.

நீங்கள் சொல்வது சரிதான். ஒரு கல்லைத்தான் எடுக்க வேண்டும். மற்றும் நீங்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளும் முக்கியமானவை.
தகவல்களை எனது பதிவில் சேர்க்கிறேன்.

சிப்பி, சோகியில் நாம் ஒரு போதும் விளையாடியதில்லை.
ஒவ்வொரு நகரங்கள், கிராமங்களிலும் ஒவ்வொரு விதமாக விளையாடி இருக்கிறார்கள்.

G.Ragavan said...

இதை எங்கள் ஊர்ப்பக்கம் சொட்டாங்கல்லு என்பார்கள். பெண்கள் கூடி விளையாடுவது. எனது தங்கைகள் விளையாடுவார்கள். நானும் விளையாட முயன்று ஒரு கல்லைக் கூட ஒழுங்காகப் பிடித்ததில்லை. ஆனால் அவர்களுக்குத் தோதான கல் பிறக்கித் தந்திருக்கிறேன்.

வசந்தன்(Vasanthan) said...

//அவர்களுக்குத் தோதான கல் பிறக்கித் தந்திருக்கிறேன்.
//

இராகவன்,
நீங்களும் பேச்சு வழக்கில் 'பிறக்கி'த் தானா? சுவாரசியமாக இருக்கிறது.

Chandravathanaa said...

ராகவன்
சொட்டாங்கல்லு என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
அது கொக்கான் வெட்டுதலைத்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நேற்றுத்தான் உங்கள் மூலமும், விக்கி பீடியா மூலமும் அறிந்தேன்.

Chandravathanaa said...

வசந்தன்

நான் நினைத்தேன் ராகவன் எழுத்துப் பிழை விட்டிருக்கிறார் என்று.
அது பேச்சுத் தமிழ் என்பது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite