Thursday, April 13, 2006

எட்டுக்கோடு


எட்டுக்கோடு கெந்தி விளையாடும் சுவாரஸ்யமான விளையாட்டு. இதையும் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். சிறுமியரில் இருந்து உயர்தரவகுப்புப் பெண்கள் வரையிலான பாடசாலைப் பெண்களின் பிரதான விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. வீடுகளிலும் இதை ஆர்வமுடன் விளையாடுவார்கள்.

பெரும்பாலும் இதை வெளி முற்றங்களிலும், இடமிருக்கும் பட்சத்தில் உள் இடங்களிலும் விளையாடுவார்கள். வீடுகளில் மட்டும் அண்ணன், தம்பிமாரும் இவ் விளையாட்டில் சேர்ந்து கொள்வார்கள்.

இதை விளையாடுவதற்கு ஒரு சிறிய ஓட்டுத் துண்டும், அண்ணளவாக 300செ.மீற் நீளமும், 150செ.மீற் அகலமும் கொண்ட தரையும் கோடு போட ஒரு வெண்கட்டி அல்லது ஒரு ஓட்டுத் துண்டு அல்லது ஒரு தடியும் போதும். நீள் சதுரத்தை நீளப்பாடாகக் கீறி நீளப்பாடாக நடுவேயும், அகலப்பாடாக நான்காகவும் பிரித்துக் கோடு போட்டு விட்டால் விளையாடுவதற்கான தளம் ரெடி.

கால்களில் குத்தி விடாமல் இருக்க ஓட்டுத்துண்டை சரியான முறையில் தேய்த்து வைத்திருக்க வேண்டும். ஏறக்குறைய 3செ.மீற் நீள, அகலம் கொண்ட இந்த ஓட்டுத்துண்டை எமது பாடசாலைகளிலும் வீடுகளிலும் சிப்பி என்றே சொல்வோம்.

எட்டுச் சதுரங்கள் கொண்ட இப்பெட்டியில் இடது பக்கம் நான்கு பெட்டிகளும், வலது பக்கம் நான்கு பெட்டிகளும் இருக்கும். விளையாட்டை இடது பக்கம் இருந்தே தொடங்க வேண்டும். இடது பக்கமாகப் போகும் போது ஐந்தாவது பெட்டி அதாவது வலது பக்கத்தின் மேற்பெட்டி வீடு. இங்கு காலாறி ஓய்வெடுக்கலாம்.

இனி எப்படி விளையாடுவது எனப் பார்ப்போம்.

சிப்பியை இடது பக்க முதற் பெட்டியில் போட வேண்டும். போடும் போது சிப்பி கண்டிப்பாகப் பெட்டிக்குள் விழ வேண்டும். கோடுகளில் வீழ்ந்து விடக் கூடாது.

ஒற்றைக்காலால் கெந்தி, அந்தச் சிப்பியை மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெட்டிகளுக்குள் கெந்தி ஐந்தாவது பெட்டிக்குள் இரண்டு கால்களையும் வைத்து நின்று விட்டு மீண்டும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் கெந்தி வெளியில் போக வேண்டும்.

இதே முறையில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போட்டு இதே ஒழுங்கில் சென்று மிதித்து, எடுத்துக் கொண்டு வெளியில் போக வேண்டும். ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போடும் போது இடது பக்க மூலையில் நின்றே போட வேண்டும்.

எட்டுப் பெட்டிகளும் விளையாடி முடிந்தால் அடுத்த கட்டம்.

இப்போது சிப்பியை முதற் போலவே போட்டு, ஒற்றைக்காலால் கெந்தி மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்து, தூக்கி வைத்திருக்கும் கால் பாதத்தில் விரல்களின் மேல் வைத்துக் கொண்டு கெந்த வேண்டும். கெந்தும் போது சிப்பி கீழே வீழ்ந்து விடக் கூடாது. எட்டாவது பெட்டிக்கு வந்ததும் சிப்பியை பெட்டிக்கு வெளியில் போட்டு விட்டு கெந்தி அதை மிதிக்க வேண்டும்.

அடுத்த கட்டம்.

சிப்பியை தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பெட்டிகளில் நடக்க வேண்டும். ஒற்றைக்கால் முதற்பெட்டியிலும் மற்றையகால் இரண்டாவது பெட்டியிலும்.. என்று வைத்து நடக்க வேண்டும். முகம் மெதுவாக மேலே தூக்கப் பட்டிருக்க வேண்டும். நடக்கும் போது "சரியோ? சரியோ?" என்று கேட்க வேண்டும். கால் விரல்கள் கோடுகளில் பட்டு விடக் கூடாது. பட்டுவிட்டால் "பிழை" என்பார்கள். 5வது பெட்டியில் இரண்டு கால்களையும் வைத்து நின்று கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் ஆறாவது ஏழாவது பெட்டிகளைக் கடந்து எட்டாவது பெட்டிக்கு வந்ததும் தலையில் உள்ள சிப்பியை கண்களை மூடிய படி நின்று வெளியில் வீழ்த்தி விட்டு கண்களைத் திறக்க வேண்டும். பின் கெந்தி மிதிக்க வேண்டும்.

அடுத்த கட்டம்.

சரியாகச் சிப்பியில் மிதித்து விட்டால், சிப்பியை கையில் எடுத்து எட்டுக்கோட்டுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டு, சிப்பியை தலைக்கு மேலால் எட்டுக்கோட்டுக்குள் எறிய வேண்டும். சிப்பி கோடுகளிலோ, வெளியிலோ, ஐந்தாவது பெட்டிக்குள்ளோ விழக் கூடாது.

மூன்று சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரப்படும். சிப்பி எந்தப் பெட்டிக்குள் விழுகிறதோ அந்தப் பெட்டி உங்களுக்குச் சொந்தம். அது உங்கள் பழம். நீங்கள் அதற்குள் காலாறிப் போகலாம். மற்றவர்கள் அதைக் கடந்துதான் போகலாம். அவர்கள் அதற்குள் கால் வைக்க முடியாது.

அடுத்த பழத்துக்கு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும்.

இரண்டு பேருக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் பழம் வந்து விட்டால் மற்றவர்கள் எப்படியாவது பாய்ந்து இரண்டு பெட்டிகளையும் கடக்க வேண்டும். யார் கூடிய பழங்கள் எடுக்கிறாரோ அவர் வென்றவர் ஆகிறார்.

இதே போல ஆறுகோடு என்ற விளையாட்டும் உண்டு. ஆறு கோடில் ஓட்டுத் துண்டைக் கையில் எடுக்காமல் கெந்தியபடி, ஒவ்வொரு பெட்டியாகக் காலால் தட்டி மிதித்துக் கொண்டு போக வேண்டும்.

என்னால் நினைவு படுத்த முடிந்தவைகளையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இந்த விளையாட்டுப் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் அவைகளைத் தந்தீர்களானால் உதவியாக இருக்கும்.

3 comments :

வசந்தன்(Vasanthan) said...

நீங்கள் 'கெந்தும் கால்' என்று எதைச் சொல்கிறீர்கள்?
தூக்கி வைத்திருக்கும் காலில்தானே ஓட்டுத்துண்டை வைத்துக் கடக்க வேண்டும்?

மேலும் இடமிருந்து வலமாகச் செல்லும்போது மூன்றாம் பெட்டிக்கு அடுத்து நேராக ஐந்தாம் பெட்டிதானே?
கண்மூடிச் செல்லும்போதும் மூன்றாம் பெட்டிக்கு அடுத்து ஐந்தாம் பெட்டிதானே?
(மேற்சொன்னபடி நாலாம் பெட்டியை மிதிப்பதில்லையென்பது உறுதியாகச் சொல்லவில்லை. ஞாபகம் அப்படித்தான் இருக்கிறது)
ஆனாலும் நாலாம் பெட்டியின் பயன்பாடு என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கக்கூடும்.

இடஞ்சுழியாக ஆடவேண்டிய சந்தர்ப்பம் எப்போதும் வருவதில்லையா?

//கால்களில் குற்றி விடாமல் //
"குற்றி" என்பதை "குத்தி" என்ற கருத்தில் பாவித்திருக்கிறீர்களோ?

Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

வசந்தன்

தகவல்களுக்கு மிகவும் நன்றி.

நான் கெந்தும் கால் எனக் குறிப்பிட்டது தூக்கி வைத்திருக்கும் காலைத்தான். தற்போது மாற்றிச் சரியாக எழுதி விட்டேன்.

குத்தி என்பதையும் மாற்றி விட்டேன்.

மேலும் இடமிருந்து வலமாகச் செல்லும்போது மூன்றாம் பெட்டிக்கு அடுத்து நேராக ஐந்தாம் பெட்டிதானே?
கண்மூடிச் செல்லும்போதும் மூன்றாம் பெட்டிக்கு அடுத்து ஐந்தாம் பெட்டிதானே?
(மேற்சொன்னபடி நாலாம் பெட்டியை மிதிப்பதில்லையென்பது உறுதியாகச் சொல்லவில்லை. ஞாபகம் அப்படித்தான் இருக்கிறது)
ஆனாலும் நாலாம் பெட்டியின் பயன்பாடு என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கக்கூடும்.

இடஞ்சுழியாக ஆடவேண்டிய சந்தர்ப்பம் எப்போதும் வருவதில்லையா?


இது எனக்கு ஞாபகத்தில் இல்லை.
யாராவது தெரிந்தவர்கள் செல்கிறார்களா எனப் பார்ப்போம்.
சிலவேளைகளில் இன்னொரு விளையாட்டின் ஒரு முறையாகக் கூட இருக்கலாம்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite