Friday, August 25, 2006

பிற்சா (Pizza)

அது 1986ம் ஆண்டு மே மாதம் 12ந் திகதி. நானும் எனது பிள்ளைகளும் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்து மூன்றாவது நாள். 10ந் திகதி ப்ராங்போர்ட் (Frankfurt) இல் வந்திறங்கிய உடனேயே அதிசயப் பூச்சிகளைப் பார்ப்பது போல எம்மைப் பார்த்து, ஸ்ரேற்மென்ற் (Statement) எடுத்து, புகைப்படம் எடுத்து சில மணிகளின் பின் விமான நிலையத்தின் ஒரு அறையில் விட்டார்கள். அந்த அறையில் எட்டு இரண்டடுக்குக் கட்டில்கள் இருந்தன. அனேகமான கட்டில்களில் போர்த்திய படி வேற்று நாட்டவர்கள் படுத்திருந்தார்கள்.

எனக்கும் மூன்று பிள்ளைகளுக்குமாக ஒரு கட்டில் தரப்பட்டு அரைமணியில் சாப்பாடு வந்தது. சாப்பாடு எதுவும் எனக்கோ பிள்ளைகளுக்கோ பிடிக்கவில்லை. ஆளுக்கொரு அப்பிளை மட்டும் எடுத்துச் சாப்பிட்டு விட்டு இருந்தோம்.

அடுத்தநாள் விமான நிலையத்துக்கு அருகிலேயே உள்ள அகதிகள் முகாமொன்றில் கொண்டு போய் விட்டார்கள். அங்கும் பிடித்தமான சாப்பாடெதுவும் கிடைக்கவில்லை. தஞ்சம் கோரி வந்த எங்களுக்கு மீண்டும் ஒற்றை அப்பிள்தான் தஞ்சம். ஊரில் சுண்டக் காய்ச்சிய பாலையே குடிக்கப் பஞ்சிப்படும் என் பிள்ளைகள் அவர்கள் தந்த பச்சைப் பாலைத் தொடக் கூட மறுத்து விட்டார்கள்.

இதற்கிடையில் நான் தொலைபேசியில் என் கணவருக்கு நாம் வந்து சேர்ந்து விட்டதைத் தெரிவிக்க, அவர் ஸ்வெபிஸ்ஹால் நகரிலிருந்து களவாக இரண்டாம் நாள் இரவு எம்மிடம் வந்து சேர்ந்தார்.

ஸ்வெபிஸ்ஹால் நகரிலிருந்து அவர் வேறெங்கும் செல்ல அனுமதியில்லை. பிடிபட்டால், உடனடியாகப் புகைவண்டியில் ஏற்றி ஸ்வெபிஸ்ஹால் நகருக்கே திருப்பி அனுப்பி விடுவார்கள். அதுமட்டுமல்ல தண்டனையாக 400DM கட்டவும் சொல்வார்கள். 350 DM சமூகநல உதவிப் பணத்துடன் வாழும் எனது கணவரின் அப்போதைய நிலை அது.

அடுத்தநாள் காலை, - மூன்றாம் நாள் - எங்களுக்கு அகதி அந்தஸ்து கோரியுள்ளார் என்பதற்கான தற்காலிக அகதி அடையாள அட்டை தந்து, இன்னொரு அகதி முகாமுக்கு அனுப்புவதற்காக பஸ்சில் ஏற்றினார்கள். கூடவே இன்னும் சில தமிழ்ப்பெண்கள். எனது கணவரும் அவரைப் போலவே களவாக வந்த இன்னொரு கணவரும் செய்வதறியாது நிற்க, எங்களை ஸ்வல்பாஹ்(Schwalbach) அகதி முகாமுக்கு அனுப்பி விட்டார்கள். பஸ்சில் சில மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

அந்த முகாமில் ஓரளவு தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் என்னைப் போல மூன்று பிள்ளைகளுடன் வந்தவர்கள் யாரும் அங்கில்லை. களைத்துப் போன எனதும், பிள்ளைகளதும் முகங்கள் அவர்களுக்கு எங்கள் மீது இரக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கிட்ட வந்து அன்பாகவும் உதவும் நோக்குடனும் கதைத்தார்கள். எம்மைச் சாப்பிட வரும் படி அழைத்துச் சென்று ஒரு பெரிய ஹோலில் விட்டார்கள். அது கன்ரீனுடன் சேர்ந்த ஹோல். ஹோல் நிறைய பலவித மொழி பேசும் பல விதமான மக்கள் கசா முசா என்று கதைத்தபடி இருந்தார்கள்.

நானும் பிள்ளைகளும் இன்றைக்காவது சாப்பிடுவோம் என்ற நம்பிக்கையோடு இருக்க, அந்தத் தமிழர்களே எமக்கான சாப்பாட்டை எடுத்து வந்து தந்து விட்டுப் போனார்கள். ஆவலுடன் சாப்பாட்டுக்காகக் காத்திருந்த எனது மூத்தவனின் முகம் சாப்பாட்டைக் கண்டதும் ஏமாற்றத்தில் துவண்டு போனது. வந்த சாப்பாடு நாம் வாழ்க்கையில் முதல் முதலாகச் சந்திக்கும் பிற்சா(Pizza). சிப்பி சோகியெல்லாம் அதன் மேல் போட்டிருந்தார்கள்.

"இதையெப்பிடிச் சாப்பிடுறது..? " கோபம், ஏமாற்றம், அழுகை எல்லாம் கலந்த கேள்வி அது.

ஏற்கெனவே, எனது கணவர் எப்படி இங்கே வந்து சேரப் போகின்றார்? என்ற யோசனையும், கவலையும் எனக்குள். அதை மிஞ்சிய வயிற்றுப் புகைச்சல். என் மகனும் இப்படிக் கேட்க எனக்கு உடனேயே எங்கள் மேல் தாங்க முடியாத பச்சாத்தாபம் ஏற்பட்டது. `திரும்பிப் போய் விடுவோம்´ என்ற அங்கலாய்ப்பு வந்தது. போய் `அம்மாவின் கையால் அம்மாவின் சமையலைச் சாப்பிடோணும்´ என்ற அவா வந்தது. எல்லாமாய் அழுகையே வந்தது. `மூன்று நாள் யேர்மனிய வாழ்க்கை போதும்´ என நினைத்துக் கொண்டேன்.

அந்த நேரம் எனது மகன் என்ன செய்தான் தெரியுமா..? அவர்கள் மெனக்கெட்டு பக்குவமாக தயாரித்த பிற்சாவின் மேலே இருந்த எல்லாவற்றையும் ஒரேயடியாகக் கோப்பைக்குள் வழித்துக் கொட்டி விட்டு கீழேயுள்ள ரொட்டித்துண்டைச் சாப்பிடத் தொடங்கினான்.

`அட இவனுக்கு எப்படி இப்படியொரு மூளை வந்தது!´ வியந்தேன். மற்றைய மூன்று பிற்சாக்களிலும் இருந்த எல்லாவற்றையும் என் கண்ணீரோடு சேர்த்து வழித்துக் கொட்டி விட்டு ஒன்றுமில்லாத வெறும் ரொட்டியை மற்றப் பிள்ளைகளுக்கும் கொடுத்து சாப்பிடத் தொடங்கினேன்.

இப்போதும் நானும் பிள்ளைகளும் சேர்ந்து சாப்பிடுகையில் இந்த சம்பவத்தை நினைத்துச் சிரித்துக் கொள்வோம்.

சந்திரவதனா
யேர்மனி

11 comments :

G.Ragavan said...

சந்திரவதனா....சத்தியமாக இனிமேல் பீட்சா சாப்பிடுகையில் உங்கள் நினைவு கண்டிப்பாக வரும். எங்காவது டூர் போகையில் அங்கு சாப்பாடு வெளங்காது போனாலே முணுமுணுக்கின்ற எங்களுக்கு உங்கள் அனுபவன் மனதில் பாரமாக இறங்கியது. சாப்பாட்டை தெய்வமாகப் பாவிக்க வேண்டும் என்ற உண்மையைச் சொன்னது.

சின்னக்குட்டி said...

சந்திரவதனா.. இப்படி சொல்லும் போது தான்... எனக்கு ஞாபகம் வருகிறது...1985 இல் ஆரம்பத்தில் மேற்கு பெர்லின் வந்த போது ராத்ஸ்பெண்டோ என்ற இடத்தில் பெரிய முகாமில் விட்டு விட்டார்கள்

1000க்கணக்கில் பல நாட்டு அகதிகள்.. அது ஒரு இடை தங்கல் முகாம்... மதிய நேர சாப்பாட்டுக்கு பெரிய ஒரு கியூவிலை தட்டோடை போய்த்தான் சாப்பாடு எடுக்கோணும்...உந்த பன்றியிலை செய்த பூஸ்ற்கள் அது இது என்று சொல்லி ஜெர்மன் ஆக்கள் சாப்பிடுற நல்ல தரமான சாப்பாடு...ஆனால் எங்களுக்கு உதை எல்லாத்தை விரும்பாமால் வேறு நாட்டவருக்கு கொடுத்திட்டு... புறாவுக்கு போடுற அரிசியிலை செய்த சோத்தை அங்கை தருகிற சோஸோ டை குழைச்சு அடிச்சது தான் ஞாபகம் வருது

Thamil said...

இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த உணவே பிற்சாவாகத்தான் இருக்குமென நினைக்கிறேன், நினைத்தவுடன், பசித்தவுடன் வரும் உணவு அதுதானே:-)

ஜயராமன் said...

தங்கள் பதிவில் மனது இறுகியது.

தங்கள் நிகழ்வு மிகவும் பிரகாசமாக இருக்க வேண்டுகிறேன். தங்கள் குழந்தைகள் இப்போது பிட்ஸா பழகுகிறார்களா?

நன்றி

வடுவூர் குமார் said...

புலம் பெயர்வது அதுவும் குழந்தைகளுடன்!!
நம் புரிந்துணர்வு அவர்களிடம் எதிர்பார்ப்பது கஷ்டம் ஆனால் நம்மைவிட அவர்கள் தங்களை வெகுவிரைவில் சுற்றுப்புறத்துக்கு தகுந்த மாதிரி பழக்கப்படுத்திகொள்வார்கள்.
நான் உங்கள் பதிவுக்கு புதுசு அல்ல,நீங்கள் எழுதிய பல பதிவுகளை பலருக்கு தெரியப்படுத்தியிருக்கேன்.கிட்டத்தட்ட 1 வருட காலங்களுக்கு முன்பு.

Anu said...

chandravadhana
how very true what u said is
inga veetla samaichhi sappidumbode adikkadi
amma samaiyal nyabagam varum..anyways adn always
east or west india is best.

Chandravathanaa said...

றாகவன்
கருத்துக்கு நன்றி.
புலம்பெயர்வு சாப்பாட்டை மட்டுமல்ல இன்னும் பலதை உணர்த்தின.

சின்னக்குட்டி
வரவுக்கும் உங்கள் நினைவைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.
நீங்கள் ஜேர்மனியிலா இருக்கிறீர்கள்?

தமிழ்
கருத்துக்கு நன்றி.
இப்போதையும் விட ஒரு குறிப்பிட்ட வயதில் வீட்டில் என்ன சமைத்தாலும்
அதை விட்டுவிட்டு பிற்சா சாப்பிடுவதற்கு எனது பிள்ளைகள் விரும்பினார்கள்.

ஜயராமன்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
எனது பிள்ளைகள் சில வருடங்களிலேயே ஜேர்மனியின் எல்லா உணவுகளையும் சாப்பிடப் பழகி விட்டார்கள்:
ஒரு பருவத்தில் எனது கடைசி மகனுக்காக ஜேர்மனியச் சாப்பாடுகளையும் சமைக்க வேண்டிய நிலை இருந்தது.

Chandravathanaa said...

குமார்
எனது எழுத்துக்களை மற்றவர்களுக்கும் தெரியப் படுத்தியதற்கு மிகவும் நன்றி.

நீங்கள் சொன்னது போல குழந்தைகள் வெகுவிரைவில் சுற்றுப்புறத்துக்கு தகுந்த மாதிரி தம்மைப் பழக்கப் படுத்திக் கொள்வார்கள்

அனிதா
நன்றி.
ஜேர்மனிக்கு வந்தபின், அம்மாவின் சமையலுக்காகவே நாட்டுக்குத் திரும்பி விடுவோமா என்று பலதடவைகள் அவாப் பட்டிருக்கிறேன்.

சின்னக்குட்டி said...

//நீங்கள் ஜேர்மனியிலா இருக்கிறீர்கள்?//

வணக்கம் சந்திரவதனா.... நான் அகதியாக வந்த பாதை தான் மேற்கு பெர்லின்....ஒரு வருடம் தான் வசித்திருப்பன்... இப்ப ஏதோ குடியுருமை என்று தந்திருக்கிறான்கள் ..லண்டனிலை வசிக்கிறன்..

நன்றிகள்

Anonymous said...

உங்கள் பதிவுகளின் நிஜ வாழ்கை கதைகள் மனதைக் கவரும் வகையில் அழகாக எழுதுகிறீர்கள். எப்போதும் என்னை கற்பனை செய்ய வைக்கிறது உங்கள் வரிகள் - அந்த நாளுக்கும், அந்த இடத்திற்கும் மனதால் செல்லும் அளவு அழகான விவரிப்புகள்!

Chandravathanaa said...

சின்னக்குட்டி
உங்களை லண்டனில் என்றுதான் நினைத்திருந்தேன்.
இங்கு பேர்லின் என்றதும் யோசித்தேன்.
பதிலுக்கு நன்றி.

மதுரா
உங்கள் வரவுக்கும் இதமான கருத்துக்கும் நன்றி.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite