இந்த விளையாட்டுப் பாடல்கள் யாருக்காவது தெரியுமா?
1 காற்றடிக்குது மழை அடிக்குது..
2 நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி..
3 அருப்புத் தட்டி இருப்புத் தட்டி...
முழுப் பாடலும் தேவைப் படுகிறது
Tuesday, February 27, 2007
Wednesday, February 21, 2007
ரோஜாவும் அவனும்

அதைப் பிரித்தெடுத்து ஒவ்வொரு கவுண்டரிலும் வைத்து வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொன்றாக, சிரித்த முகத்துடன் கொடுத்தனுப்புவார்கள்.
இப்படி ரோஜாக்களைக் கொண்டு வருபவர்களில் ஒருவன், நான் வேலை தொடங்கிய முதல் வருடம் அங்கு வரும் போது, நான் எனது உள்நுழைவதற்கான கார்ட்டை மெசினில் அடித்துக் கொண்டிருந்தேன். அவனைக் கண்டதும் "காலை வணக்கம்" சொல்லி வைத்தேன். பதில் வணக்கம் சொல்லி என்னைத் தாண்டிச் சென்றவன் என்ன நினைத்தானோ, தான் வைத்திருந்த கட்டுப் பூக்களில் இருந்து ஒரு ரோஜாவை இழுத்த படி என்னிடம் திரும்பி வந்து, ஒரு புன்னகையுடன் தந்து விட்டுச் சென்றான். நானும் சாதாரணமான சந்தோசத்துடன் நன்றி சொல்லி வாங்கி, ரோஜாவை எமக்கான அறையில் பத்திரமாக வைத்து விட்டு வேலைகளைத் தொடர்ந்தேன்.
ஆனால் அதன் பின்னர், சுப்பர் மார்க்கெட்டில் என்னோடு வேலை செய்யும் பல பெண்கள் யாரவன், யாரவன் என்று கேட்ட போதுதான் அந்த ரோஜாவுக்கு கொஞ்சம் மவுசு இருக்கிறதென்பது புரிந்தது. வீட்டுக்குப் போகும் போது ரோஜாவும் கையுமாகச் சென்ற என்னை வழியிலும், பஸ்சிலும் சிலர் அர்த்தத்தோடு பார்த்தார்கள். ஆனால் என் மனசில் அதற்கு எந்த அர்த்தமும் இருக்கவில்லை. யாரோ முன்பின் தெரியாத ஒருவன் நட்போடு தந்தான். அழகிய ரோஜா. வீட்டில் கொண்டு போய் பூச்சாடியில் வைத்த போது இன்னும் அழகாய் இருந்தது. அவ்வளவுதான்.
சில நாட்களில் அது பற்றி மறந்து விட்டேன். அடுத்த காதலர்தினம் வந்த காலை கூட நான் அது பற்றி நினைக்கவில்லை. சுப்பர்மார்க்கெட்டில், அன்று வந்திருந்த கிறீம், சம்பூ, வாசனைத்திரவியங்கள்.. போன்றவற்றை கணக்கெடுத்துப் பதிந்து கொண்டிருந்தேன். திடீரென யாரோ "ஹலோ" சொல்ல, திரும்பினால் அவனேதான். கடந்த வருடம் ரோஜா தந்தவன். ஒரு ரோஜாவை என்னிடம் நீட்டினான். நன்றி சொல்லி வாங்கிக் கொண்டேன். புன்னகையை வீசி விட்டுப் போய் விட்டான்.
என்னைத் தேடி வந்து தந்து விட்டுப் போனான் என்ற நினைப்பு சின்ன சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சந்தோசமாகவும் இருந்தது.
அடுத்தடுத்த வருடங்களில் வந்த ஒவ்வொரு காதலர்தினத்தன்றும், சுப்பர்மார்க்கெட்டில் நான் எந்த மூலையில் நின்றாலும் தேடி வந்து புன்னகையோடு, ஒரு ரோஜாவைத் தந்து செல்ல அவன் மறந்ததில்லை. ஒரு ஹலோ, ஒரு GUTEN MOEGEN(good morning) இவை தவிர வேறெதையும் அவன் என்னுடன் பேசியதுமில்லை. காதலர் தினம் தவிர்ந்த வேறெந்த நாளிலும் நான் அவனைச் சந்தித்ததுமில்லை.
என்னை விட, பல வருடங்கள் இளையவானகத்தான் இருப்பான். ஜேர்மனியன். அது தவிர வேறொன்றும் அவனைப் பற்றி எனக்குத் தெரியாது.
2000ம் ஆண்டோடு நான் சுப்பர்மார்க்கெட் வேலையை விட்டு விட்டேன். ஆனாலும் அவன் நினைவு அவ்வப்போது வந்து போகும். காதலர் தினத்தன்று கண்டிப்பாக வரும். என் கணவரோடும், நண்பிகளோடும் அவனது அந்த செய்கை பற்றி கதைத்துக் கொள்வேன். இன்று டிசேயின் பதிவைப் பார்த்தபோதும் நினைவு வந்தது. எழுதலாம் என்றும் தோன்றியது.
Sunday, February 18, 2007
இயல் விருது பெறுகிறார் திரு. ஏ.சி.தாசீசியஸ்

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், கனடா ரொறொன்ரோ பல்கலைகழக தென்னாசியவியல் ஆய்வு மையமும் இணைந்தே இந்த விருதுக்குரியவர்ளை தெரிவு செய்கிறார்கள.தமிழ்மொழி கலை இலக்கியம் சார்ந்து பணியாற்றுபவர்களின் வாழ்நாள் சாதனையை கெளரவிக்கும் வகையிலேயே இவ்விருது 2001ம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகின்றது.
இவ்வகையில் முறையே தமிழின் முக்கிய படைப்பாளியான சுந்தர ராமசாமி (2001), பல வேற்றுமொழி படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்த ஈழத்தை சோந்த கே.கணேஷ்(2002), தமிழ் இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன்(2003) ஈழத்து நூல்களை தமிழ்ப்பரப்புக்கு அறிமுகம் செய்த பதிப்பாசிரியரான இ.பத்மநாபஐயர்(2004) அமெரிக்க பல்கலைககழக தமிழ்ப் பேராசிரியரான ஜோர்ஜ் ஹார்ட் (2005) ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தன.
இதன் தொடர்சியாக நாடகரும் ஊடகருமான ஏ.சி.தார்சீசியஸ் தெரிவாகி இருக்கிறார்.விருது வழங்கும் விழா எதிர்வரும் யூன் மாதம் ரொறொன்ரோ பல்கலைக் கழக வளாகத்தில் வழமைபோல் நடைபெற உள்ளது.
இயல் விருதுக்கு ஏ.சி.தார்சீசியஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கான தமிழ் இலக்கிய தோட்டத்தின் அறிவிப்பில்,'மேற்கத்தைய நாடக நுட்பங்களையும் தமிழ் மரபுக் கலைகளையும் இணைத்துப் புதிய போக்கை உண்டாக்கியவர் திரு தாசீசியஸ். அது பலரின் வரவேற்பைப் பெற்றதுடன், நவீன நாடகத்தில் பலரை ஈடுபடவும் வைத்தது. ஆரம்பத்தில் ஆங்கில நாடகத்தின் மேற்கத்தைய நுட்பங்களைப் பயின்ற அவர், தமிழ் நாடகங்களுக்குத் திரும்பி, ஈழத்தில் கிராமம் கிராமமாக அலைந்து அங்கு உள்ளோடி இருந்த மரபுகளையும் உள்வாங்கி புதிய நாடக மரபை உருவாக்கினார்.
அவருடைய பிச்சை வேண்டாம், பொறுத்தது போதும், கோடை, புதியதொரு வீடு, எந்தையும் தாயும், ஸ்ரீசலாமி போன்ற நாடகங்கள் வெகுவாகப் பாராட்டப் பெற்றவை. லண்டனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பிபிசி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். அப்போதும் தொடர்ந்து நாடகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அவருடைய ஸ்ரீசலாமி நாடகம் ஆங்கில, ஜேர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிக் கருத்தும் ஒரு சேர அமைந்த ஒன்று. அது சுவிஸ் நாட்டில் 36 தடவை அரங்கேறி உள்ளது. ஐரோப்பா, கனடா, தமிழ் நாடு ஆகிய நாடுகளில் நாடகப் பயிற்சி அளித்துள்ளார்.
ஸ்விற்சலாந்து அரசு தனது 700 வது ஆண்டு விழாவைக் கொண்டாட நினைத்தபோது அதன் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் அவரைத் தெரிவு செய்தது' என விதந்துரைத்துள்ளது.
இவ்விருது கிடைத்தமை குறித்து திரு ஏ.சி. தார்சீசியஸிடம் கேட்ட போது ' நான் எதிர்பாராதது. தமிழ் இலக்கிய முன்னோடிகளுக்கும் ஆளுமைகளுக்கும் வழங்கப்பட்டு வந்த இந்த விருதுக்கு நானும் தெரிவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. தாயகங்களுக்கு வெளியே இப்படியான இயல்பீடம் அமைத்து கெளரவிக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. புலப்பெயர்வால் வேர்களை இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் என் போன்றவனுக்கு இது உற்சாகத்தை தருகின்றது.' எனத் தெரிவித்தார்.
தாசீசியஸ் அவர்கள் இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி வானொலியை நிறுவியவர் என்பதும், பிரான்சில் இருந்து ஒளிபரப்பாகும் ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றியவர் என்பதும், தமிழ் நாடகத்திற்கான கட்டியம் என்னும் ஆய்விதழ் ஒன்றை திரு அன்ரன் பொன்ராசா, திரு.வீ.அரசு ஆகியோருடன் இணைந்து வெளியிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்
Thursday, February 15, 2007
அம்மாவுக்குத் தெரிந்தது

என்னை விட அண்ணா இன்னும் கவலையாக இருந்தான். அவனது பாடசாலை விடயமெல்லாம் இந்தக் கணினிக்குள்தான். பரீட்சையும் வருகிற நேரம் பார்த்து வைரஸ் எங்கள் கணினியை ஆக்கிரமித்து விட்டது. என்ன செய்யிறது என்று தெரியாமல் முழுசிக் கொண்டு இருந்தான். இரண்டு மூன்று கிழமைகளாக இராப்பகலாக இருந்து ஒரு ரிப்போர்ட் எழுதினவன். அதுக்காக வாசிகசாலை, இணையம் என்று எத்தனை இரவு பகல்களைச் செலவழித்து, தேடல்கள் செய்திருப்பான். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. அதற்குப் பாடசாலையில் நல்ல புள்ளிகள் கிடைக்கும் என்று நம்பியிருந்தவன் இப்போது எதைப் பாடசாலையில் காட்டுவது என்ற யோசனையில் குழம்பிப் போய் இருக்கிறான்.
"அன்ரிவைரஸ் புரொக்கிராமை ஏன் தரவிறக்கம் செய்து வைக்கவில்லை" என்று அப்பா அண்ணாவை இரண்டு மூன்று தரமாகப் பேசி விட்டார். அதை அப்பாவே செய்திருக்கலாம். ஆனால் அண்ணாவால் அப்பாவைத் திருப்பிப் பேச முடியாதுதானே!
அப்பாவுக்கும் பயங்கரக் கவலைதான். அவரது கலைமன்றக் கணக்குகள், வீட்டுக்கணக்குகள் எல்லாவற்றையும் எக்செல்லில் எழுதி வைத்திருந்தவர். மன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள்.. என்று பல விடயங்கள் தொலைந்து போய் விட்டதில் அப்பா மிகவும் ரென்சனாகி இப்போது சோர்ந்து போயிருக்கிறார்.
இந்தப் பிரச்சனைகளில் பொழுதுபட்டு விட்டதும் மூளையில் உறைக்காமல், மின்விளக்கைப் போட வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் நாங்கள் இருக்க, அம்மா வேலை முடித்து வந்து கதவைத் திறந்தா. அம்மாவுக்கு லைற் போடாமல் இருந்தால் பிடிக்காது. எப்போதும் வெளிச்சமாகப் "பளிச்" என்று இருக்க வேண்டும். இருண்ட வீட்டுக்குள் நுழையும் போது, அம்மாவின் முகத்தில் இருந்த சந்தோசத்தில் பாதி குறைந்து விட்டது போலத் தெரிந்தது.
எங்கள் கோலங்களைப் பார்த்ததும் அம்மா தனது அதிருப்தியைக் காட்டிக் கொள்ளாமல் "என்ன எல்லாரும் கப்பல் கவிண்டு போனது போல கவலையிலை இருக்கிறீங்கள்?" என்றா. நாங்கள் ஒருதரும் ஒரு பதிலையும் சரியாகச் சொல்லவில்லை. அப்பா சொல்வார் என்று பார்த்தேன். அவரும் சொல்லவில்லை. அவர் பார்வையில் ஒரு வித அலட்சியம். "இப்ப அதை உனக்குச் சொல்லி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது" என்பது மாதிரியான அலட்சியப் பார்வை அது.
அப்பாவின் அலட்சியப் பார்வையை அம்மா உணர்ந்து கொள்ளாமலில்லை. ஆனாலும் வழமை போலவே மனசைக் கிள்ளிய அந்தக் கணநேர உறுத்தலை இன்னுமொரு படி அதிகமான அலட்சியத்துடன் தூக்கி எறிந்து விட்டு "பிரச்சனையைச் சொல்லுங்கோ. என்னாலை உதவேலுமோ எண்டு பார்க்கிறன்" என்றா. உடனேயே அப்பா "இது கொம்பியூட்டர் பிரச்சனை. உனக்கெங்கை இதுகளைப் பற்றித் தெரியப் போகுது? நாங்களே என்ன செய்யிறதெண்டு தெரியாமல் முளிச்சுக் கொண்டிருக்கிறம். நீ பிறகு கொமான்ட் பண்ண வந்திட்டாய். கெதீலை ரீயைப் போடு. உனக்குத் தேவையில்லாத ஆராய்ச்சியளை விட்டிட்டு.." தனது எரிச்சல்களையெல்லாம் கொட்டுவதற்கு ஒரு ஆள் கிடைத்து விட்ட திருப்தியில் அப்பா அவசரமாகக் கொட்டினார்.
எனக்கு அம்மாவைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. அம்மாவுக்குக் கணினியில் ஒன்றும் தெரியாது என்றில்லை. நாங்கள் இல்லாத நேரங்களில் அவ ஏதோ கணினியில் செய்து கொண்டுதான் இருப்பா. வாசிப்பா. எழுதுவா. ஆனாலும் நானோ, அண்ணாவோ, அப்பாவோ யார் வந்தாலும், எழும்பி வேறு வேலையைப் பார்க்கத் தொடங்கி விடுவா. தப்பித்தவறி அவ கணினிக்கு முன்னால் கதிரையில் தொடர்ந்து இருந்தா என்றாலும், அப்பா போய் கதிரைக்குப் பின்னால் நின்றதும் அவ எதை வாசித்துக் கொண்டிருந்தால் என்ன, எதை எழுதிக் கொண்டிருந்தால் என்ன, அரைகுறையில் அப்படியே விட்டிட்டு எழும்பி விடுவா. அது ஏதோ எழுதாத சட்டம் போலத்தான். அப்பா வந்தால் அம்மா கணினியை அவருக்காக விட்டு விட வேணும். அந்த நேரத்தில் அம்மாவின் முகத்தில் வருவது கோபமா, கவலையா, இயலாமையா என்பது எனக்கு இன்று வரைக்கும் பிடிபடவில்லை.
இப்போதும் அப்படித்தான். அப்பாவின் கதையில் அம்மாவின் முகத்தில் வந்தது என்ன என்பதை என்னால் இனம் பிரித்துக் காண முடியவில்லை. ஆனாலும் அம்மா சட்டென்று வாடி விட்ட முகத்துடன் அறைக்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு வந்தா.
அம்மா வீட்டில் இருக்கும் போது வேலையால் அப்பா வந்தாலும் சரி, பாடசாலையால் நாங்கள் வந்தாலும் சரி எங்களின் களைப்பையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு "களைப்போ? சாப்பாடு வேணுமோ? தேத்தண்ணி போடட்டோ?" என்ற கேள்விகளுடன் எங்களை அணுகுவா. இதே அம்மா வேலைக்குப் போய் வந்தால் "களைப்போ, அலுப்போ, தேத்தண்ணி போடட்டோ?" என்றெல்லாம் எங்களுக்குக் கேட்கத் தோன்றாது. மாறாக, களைத்து வரும் அம்மாவே அவசரமாக உடை மாற்றி வந்து நாங்கள் குடித்தோமா? நாங்கள் சாப்பிட்டோமா? என்று பார்க்க வேண்டி இருக்கும். இன்னும் கெதியாக வந்து எங்கள் தேவைகளைக் கவனி என்று சொல்வது போலவே அப்பாவின் எதிர்பார்ப்புகளும், செய்கைகளும் இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. எனக்கும் அம்மா வந்து தேத்தண்ணி போட்டுத் தந்தா என்றால் நல்ல சந்தோசமாகத்தான் இருக்கும்.
அம்மாவோடு சில கரைச்சல்களும் இருக்கின்றன. எப்ப பார்த்தாலும் "வீடு ஏன் குப்பையாக் கிடக்குது. நான் வேலைக்குப் போகேக்கை எல்லாம் அடுக்கி வைச்சிட்டுத்தானே போனனான்.." என்று பேசிக் கொண்டு இருப்பா. நான் என்ன செய்யிறது? எப்பிடியும் அது குப்பையாகுது.
இன்றும் அப்படித்தான். திறந்து வாசித்த பேப்பர் சரியாக அடுக்கி மூடி வைக்கப் படாமல் அரையும் குறையுமாக அங்காலும் இங்காலுமாக எட்டிப் பார்த்த படி கதிரையில் கிடக்குது. வானொலிக்குப் பக்கத்தில் ஒலிப்பேழை ஒன்றின் கவர் "ஆ" வென்று திறந்த படி இருக்குது. இன்னோரு ஒலிப்பேழை கவருக்குள் வைக்கப் படாமல் வானொலிக்கு மேல். ஒரு ரீசேர்ட் கதிரைப் பிடியில்.. குடித்த கோப்பைகள் ஒன்றுக்குப் பத்தாய் டிஸ்வோசருக்குள் வைக்கக் கூட பொறுமையின்றிய அவசரத்துடன் குசினி மேசையிலும், தண்ணித் தொட்டிக்குள்ளும்... என்று குசினி அலங்கோலமாய்...
இவைகளையெல்லாம் அடுக்கி வைக்கிறது பெரிய வேலை இல்லைத்தானே. ஏன்தான் அம்மா இதுக்கெல்லாம் கோபப் படுகிறாவோ எனக்குத் தெரியாது. அப்பா கூட பல தடவைகள் "இதுகள் என்ன பெரிய வேலையே? ஊரிலை சாம்பல் போட்டு மினுக்கின உங்களுக்கு டிஸ்வோசர் இருக்கிறது போதாதே?" என்று அம்மாவைப் பேசி இருக்கிறார். அந்த நேரங்களில் மீண்டும் அம்மாவின் முகம் இனம் பிரிக்க முடியாத உணர்வுக் கோலங்களில் வாடிப் போகும். அப்படி அம்மாவின் முகம் வாடிப் போகிறதைப் பார்த்தால் எனக்கும் கவலையாத்தான் இருக்கும். அதுக்காண்டி எப்பவும் அம்மா "அடுக்கி வை. ஒழுங்கா வை" என்று கரைச்சல் படுத்திறதும் எனக்குப் பிடிக்கிறதில்லை.
அது மட்டுமே! "படிச்சனியோ? என்ன இண்டைக்கு ஸ்கூலிலை நடந்தது?" என்று எரிச்சல் படுத்திக் கொண்டே இருப்பா.
ஆனால் இன்று அம்மா மூச்சும் விடவில்லை. நாங்களே ஏதோ பிரச்சனையில் ஆழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவளாய் தேநீரைத் தயாரித்து எங்களுக்குத் தந்து விட்டு எங்கள் உணவுகளை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தா. இடையிடையே நாங்கள் மூவரும் விதைத்து வைத்தவைகளை அடுக்கினா.
அப்பா மீண்டும் தனது எரிச்சலை வைரஸின் மேல் கொட்டத் தொடங்கினார். "எந்த வேலை வெட்டி இல்லாதவன்ரை வேலையோ. ஏன்தான் இப்பிடி வைரசுகளை தயாரிச்சு கொம்பியூட்டருகளை நாசமாக்கிறாங்களோ, தெரியேல்லை" என்றார். வினாடிகள் கழித்து "சிலருக்கு மூளை கூடித்தான் இந்த வில்லங்கம் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாங்கள்." என்றார்.
அதற்கு அண்ணா "அப்பிடிச் சொல்லேலாது. இந்த அன்ரிவைரஸ் புரோக்கிராம்களைத் தயாரிக்கிற நிறுவனங்களே இப்படி வைரஸ்களையும் எங்கள் கணினிகளில் பரவச் செய்யலாம்தானே. இது நல்ல வியாபார தந்திரந்தானே" என்றான். அவனது பிஸ்னஸ் மூளை அப்படிக் கணித்தது.
இந்தக் கதைகள் சமையலறையில் நின்ற அம்மாவின் காதுகளிலும் விழ அம்மா அவசரமாக வெளியில் வந்து "என்ன வைரஸ் பிரச்சனையே?" என்றா. இப்போது நான் "ஓமம்மா எல்லாம் போய் விட்டது. ஏதோ ஒரு வைரசாலை கொம்பியூட்டரிலை இருந்த எல்லாமே அழிந்து விட்டன" என்றேன். எனக்கு அழுகையே வந்து விட்டது.
அம்மாவின் முகத்தில் சட்டென்று ஒரு "பளிச்." மெதுவாகச் சிரித்தா. அப்பாவுக்குக் கடுப்பாகி விட்டது. "அதென்ன ஒரு சிரிப்பு உனக்கு? எல்லாம் போட்டுது என்று நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறம். நீ என்னடா எண்டால் சந்தோசமாச் சிரிக்கிறாய்" என்றார்.
"இதுக்குத்தான் ஒழுங்கு வேணும் எண்டு சொல்லுறது. உங்கடை ஆவணங்களை அப்ப அப்ப நீங்கள் பக்அப் செய்து வைச்சிருக்கலாம்தானே. நான் சொன்னால் கேட்க மாட்டிங்கள்..." என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் போன அம்மா அலுமாரியைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து மேசையில் வைத்தா.
பெட்டிக்குள்... என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. முழுக்க ஒலிப்பேழைகள். கணினிக்குள் இருந்த எமது ஆவணங்கள் ஒவ்வொன்றையும் கிழமைக்குக் கிழமை தவறாது எரித்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் ஒழுங்காக திகதி வாரியாகப் பிரித்து...
சந்திரவதனா
ஜேர்மனி
15.8.2006
பிரசுரம் - பூவரசு (ஆடி-ஆவணி2006)
Labels:
Short story
,
Sirukathai
,
சிறுகதை
Wednesday, February 14, 2007
சாகரன்
மரணம் எம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு மரணமும் எம்மிலிருந்து ஒருவரைப் பிரித்துக் கொண்டும், பறித்துக் கொண்டும் செல்லும் போது எம்மால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. மரணித்தவருக்கும் எங்களுக்கும் இடையிலான அன்புப் பிணைப்பின் அளவுக்கு ஏற்ப நாங்களும் கலங்குகிறோம். துடிக்கிறோம், துவள்கிறோம்.
சாகரனின் மரணம் பற்றிய செய்தியும் என்னை ஒரு கணம் அதிர வைத்தது. மனதில் கவலையைப் படர வைத்தது. சாகரன் வலையுலக நண்பர்களில் சாதாரண ஒருவர் என்று சொல்லி விட முடியாத படி அன்போடு பழகியவர். எதிர்பாராத நேரங்களில் தானாக முன்வந்து உதவியவர்களில் ஒருவர். அவரைப் பற்றிய தனிப்பட்ட எந்த விடயங்களும் எனக்குத் தெரியாதாகினும் வலையுலகில் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். எப்போதாவது எனது வலைப்பதிவில் ஏதாவதொரு தவறைக் கண்டு விட்டாலும் உடனடியாக எனக்குத் தனிப்பட்ட மடல் அனுப்பி அதைச் சரி செய்யுமாறு வேண்டிக் கொள்பவர்.
முகம் பார்க்காமலே, நட்பாக மனதில் இடம் பிடித்தவர்களில் சாகரனும் ஒருவர். அவருக்கு 29வயதுதான் என்பது கூட அவர் இவ்வுலகை விட்டுப் போன பின்னர்தான் எனக்குத் தெரிகிறது.
இப்போது அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலியைத் தவிர வேறெதையும் கொடுக்க முடியவில்லை. அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக் கூடிய வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை. காலந்தான் அவர்களை ஆற்ற வேண்டும்.
Monday, February 05, 2007
மீண்டும்...
விடுமுறையில் இருந்து திரும்பி ஓரு வாரத்துக்கு மேல் ஓடி விட்டது.
அவுஸ்திரேலியா, ´மெல்பேர்ண்´ இன் காலநிலைக்கு மிக நேரெதிரான காலநிலையை எதிர்கொண்டு, ஜேர்மனிய வாழ்க்கையை மீண்டும் தொடங்கியாகி விட்டது.
காலையில் பனி படிந்த காரைச் சுரண்டி... விரல் விறைத்து.. என்று சாதாரணத்துக்குத் திரும்பி...
ஆனாலும் மனசு இன்னும் அந்த றிலாக்ஸ் வாழ்க்கையிலேயே நிற்கிறது.
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
▼
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )