Thursday, February 15, 2007

அம்மாவுக்குத் தெரிந்தது


எனக்கு அழுதிடலாம் போல இருந்தது. நான் தேடித்தேடி தரவிறக்கம் செய்து வைத்த பாட்டுக்கள் எல்லாமே அழிந்து போய் விட்டன. எனது வகுப்பிலும் சரி, எனது நண்பர்களிடையேயும் சரி என்னிடந்தான் நிறையப் பாடல்கள் இருந்தன. இந்தப் பாடல்களுக்காகவே எனது நண்பர்கள் எனது வீட்டுக்கு ஒலிப்பேழையுடன் வந்து பாடல்களை எரித்து எடுத்துக் கொண்டு போவார்கள். எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் தெரியுமா? அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லாத நேரங்களில் நானே இந்தப் பாடல்களை எவ்வளவு சத்தமாகப் போட்டுக் கேட்பேன். இப்போது எல்லாமே போய் விட்டன. ஏதோ ஒரு கண்டறியாத வைரஸ். எப்படி அது எமது கணினிக்குள் வந்து சேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஒரே கவலையாக இருந்தது. இனி இவ்வளவு பாடல்களையும் திருப்பி தரவிறக்கம் செய்வது என்பது இலேசான காரியமே!

என்னை விட அண்ணா இன்னும் கவலையாக இருந்தான். அவனது பாடசாலை விடயமெல்லாம் இந்தக் கணினிக்குள்தான். பரீட்சையும் வருகிற நேரம் பார்த்து வைரஸ் எங்கள் கணினியை ஆக்கிரமித்து விட்டது. என்ன செய்யிறது என்று தெரியாமல் முழுசிக் கொண்டு இருந்தான். இரண்டு மூன்று கிழமைகளாக இராப்பகலாக இருந்து ஒரு ரிப்போர்ட் எழுதினவன். அதுக்காக வாசிகசாலை, இணையம் என்று எத்தனை இரவு பகல்களைச் செலவழித்து, தேடல்கள் செய்திருப்பான். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. அதற்குப் பாடசாலையில் நல்ல புள்ளிகள் கிடைக்கும் என்று நம்பியிருந்தவன் இப்போது எதைப் பாடசாலையில் காட்டுவது என்ற யோசனையில் குழம்பிப் போய் இருக்கிறான்.

"அன்ரிவைரஸ் புரொக்கிராமை ஏன் தரவிறக்கம் செய்து வைக்கவில்லை" என்று அப்பா அண்ணாவை இரண்டு மூன்று தரமாகப் பேசி விட்டார். அதை அப்பாவே செய்திருக்கலாம். ஆனால் அண்ணாவால் அப்பாவைத் திருப்பிப் பேச முடியாதுதானே!

அப்பாவுக்கும் பயங்கரக் கவலைதான். அவரது கலைமன்றக் கணக்குகள், வீட்டுக்கணக்குகள் எல்லாவற்றையும் எக்செல்லில் எழுதி வைத்திருந்தவர். மன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள்.. என்று பல விடயங்கள் தொலைந்து போய் விட்டதில் அப்பா மிகவும் ரென்சனாகி இப்போது சோர்ந்து போயிருக்கிறார்.

இந்தப் பிரச்சனைகளில் பொழுதுபட்டு விட்டதும் மூளையில் உறைக்காமல், மின்விளக்கைப் போட வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் நாங்கள் இருக்க, அம்மா வேலை முடித்து வந்து கதவைத் திறந்தா. அம்மாவுக்கு லைற் போடாமல் இருந்தால் பிடிக்காது. எப்போதும் வெளிச்சமாகப் "பளிச்" என்று இருக்க வேண்டும். இருண்ட வீட்டுக்குள் நுழையும் போது, அம்மாவின் முகத்தில் இருந்த சந்தோசத்தில் பாதி குறைந்து விட்டது போலத் தெரிந்தது.

எங்கள் கோலங்களைப் பார்த்ததும் அம்மா தனது அதிருப்தியைக் காட்டிக் கொள்ளாமல் "என்ன எல்லாரும் கப்பல் கவிண்டு போனது போல கவலையிலை இருக்கிறீங்கள்?" என்றா. நாங்கள் ஒருதரும் ஒரு பதிலையும் சரியாகச் சொல்லவில்லை. அப்பா சொல்வார் என்று பார்த்தேன். அவரும் சொல்லவில்லை. அவர் பார்வையில் ஒரு வித அலட்சியம். "இப்ப அதை உனக்குச் சொல்லி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது" என்பது மாதிரியான அலட்சியப் பார்வை அது.

அப்பாவின் அலட்சியப் பார்வையை அம்மா உணர்ந்து கொள்ளாமலில்லை. ஆனாலும் வழமை போலவே மனசைக் கிள்ளிய அந்தக் கணநேர உறுத்தலை இன்னுமொரு படி அதிகமான அலட்சியத்துடன் தூக்கி எறிந்து விட்டு "பிரச்சனையைச் சொல்லுங்கோ. என்னாலை உதவேலுமோ எண்டு பார்க்கிறன்" என்றா. உடனேயே அப்பா "இது கொம்பியூட்டர் பிரச்சனை. உனக்கெங்கை இதுகளைப் பற்றித் தெரியப் போகுது? நாங்களே என்ன செய்யிறதெண்டு தெரியாமல் முளிச்சுக் கொண்டிருக்கிறம். நீ பிறகு கொமான்ட் பண்ண வந்திட்டாய். கெதீலை ரீயைப் போடு. உனக்குத் தேவையில்லாத ஆராய்ச்சியளை விட்டிட்டு.." தனது எரிச்சல்களையெல்லாம் கொட்டுவதற்கு ஒரு ஆள் கிடைத்து விட்ட திருப்தியில் அப்பா அவசரமாகக் கொட்டினார்.

எனக்கு அம்மாவைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. அம்மாவுக்குக் கணினியில் ஒன்றும் தெரியாது என்றில்லை. நாங்கள் இல்லாத நேரங்களில் அவ ஏதோ கணினியில் செய்து கொண்டுதான் இருப்பா. வாசிப்பா. எழுதுவா. ஆனாலும் நானோ, அண்ணாவோ, அப்பாவோ யார் வந்தாலும், எழும்பி வேறு வேலையைப் பார்க்கத் தொடங்கி விடுவா. தப்பித்தவறி அவ கணினிக்கு முன்னால் கதிரையில் தொடர்ந்து இருந்தா என்றாலும், அப்பா போய் கதிரைக்குப் பின்னால் நின்றதும் அவ எதை வாசித்துக் கொண்டிருந்தால் என்ன, எதை எழுதிக் கொண்டிருந்தால் என்ன, அரைகுறையில் அப்படியே விட்டிட்டு எழும்பி விடுவா. அது ஏதோ எழுதாத சட்டம் போலத்தான். அப்பா வந்தால் அம்மா கணினியை அவருக்காக விட்டு விட வேணும். அந்த நேரத்தில் அம்மாவின் முகத்தில் வருவது கோபமா, கவலையா, இயலாமையா என்பது எனக்கு இன்று வரைக்கும் பிடிபடவில்லை.

இப்போதும் அப்படித்தான். அப்பாவின் கதையில் அம்மாவின் முகத்தில் வந்தது என்ன என்பதை என்னால் இனம் பிரித்துக் காண முடியவில்லை. ஆனாலும் அம்மா சட்டென்று வாடி விட்ட முகத்துடன் அறைக்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு வந்தா.

அம்மா வீட்டில் இருக்கும் போது வேலையால் அப்பா வந்தாலும் சரி, பாடசாலையால் நாங்கள் வந்தாலும் சரி எங்களின் களைப்பையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு "களைப்போ? சாப்பாடு வேணுமோ? தேத்தண்ணி போடட்டோ?" என்ற கேள்விகளுடன் எங்களை அணுகுவா. இதே அம்மா வேலைக்குப் போய் வந்தால் "களைப்போ, அலுப்போ, தேத்தண்ணி போடட்டோ?" என்றெல்லாம் எங்களுக்குக் கேட்கத் தோன்றாது. மாறாக, களைத்து வரும் அம்மாவே அவசரமாக உடை மாற்றி வந்து நாங்கள் குடித்தோமா? நாங்கள் சாப்பிட்டோமா? என்று பார்க்க வேண்டி இருக்கும். இன்னும் கெதியாக வந்து எங்கள் தேவைகளைக் கவனி என்று சொல்வது போலவே அப்பாவின் எதிர்பார்ப்புகளும், செய்கைகளும் இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. எனக்கும் அம்மா வந்து தேத்தண்ணி போட்டுத் தந்தா என்றால் நல்ல சந்தோசமாகத்தான் இருக்கும்.

அம்மாவோடு சில கரைச்சல்களும் இருக்கின்றன. எப்ப பார்த்தாலும் "வீடு ஏன் குப்பையாக் கிடக்குது. நான் வேலைக்குப் போகேக்கை எல்லாம் அடுக்கி வைச்சிட்டுத்தானே போனனான்.." என்று பேசிக் கொண்டு இருப்பா. நான் என்ன செய்யிறது? எப்பிடியும் அது குப்பையாகுது.

இன்றும் அப்படித்தான். திறந்து வாசித்த பேப்பர் சரியாக அடுக்கி மூடி வைக்கப் படாமல் அரையும் குறையுமாக அங்காலும் இங்காலுமாக எட்டிப் பார்த்த படி கதிரையில் கிடக்குது. வானொலிக்குப் பக்கத்தில் ஒலிப்பேழை ஒன்றின் கவர் "ஆ" வென்று திறந்த படி இருக்குது. இன்னோரு ஒலிப்பேழை கவருக்குள் வைக்கப் படாமல் வானொலிக்கு மேல். ஒரு ரீசேர்ட் கதிரைப் பிடியில்.. குடித்த கோப்பைகள் ஒன்றுக்குப் பத்தாய் டிஸ்வோசருக்குள் வைக்கக் கூட பொறுமையின்றிய அவசரத்துடன் குசினி மேசையிலும், தண்ணித் தொட்டிக்குள்ளும்... என்று குசினி அலங்கோலமாய்...

இவைகளையெல்லாம் அடுக்கி வைக்கிறது பெரிய வேலை இல்லைத்தானே. ஏன்தான் அம்மா இதுக்கெல்லாம் கோபப் படுகிறாவோ எனக்குத் தெரியாது. அப்பா கூட பல தடவைகள் "இதுகள் என்ன பெரிய வேலையே? ஊரிலை சாம்பல் போட்டு மினுக்கின உங்களுக்கு டிஸ்வோசர் இருக்கிறது போதாதே?" என்று அம்மாவைப் பேசி இருக்கிறார். அந்த நேரங்களில் மீண்டும் அம்மாவின் முகம் இனம் பிரிக்க முடியாத உணர்வுக் கோலங்களில் வாடிப் போகும். அப்படி அம்மாவின் முகம் வாடிப் போகிறதைப் பார்த்தால் எனக்கும் கவலையாத்தான் இருக்கும். அதுக்காண்டி எப்பவும் அம்மா "அடுக்கி வை. ஒழுங்கா வை" என்று கரைச்சல் படுத்திறதும் எனக்குப் பிடிக்கிறதில்லை.

அது மட்டுமே! "படிச்சனியோ? என்ன இண்டைக்கு ஸ்கூலிலை நடந்தது?" என்று எரிச்சல் படுத்திக் கொண்டே இருப்பா.

ஆனால் இன்று அம்மா மூச்சும் விடவில்லை. நாங்களே ஏதோ பிரச்சனையில் ஆழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவளாய் தேநீரைத் தயாரித்து எங்களுக்குத் தந்து விட்டு எங்கள் உணவுகளை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தா. இடையிடையே நாங்கள் மூவரும் விதைத்து வைத்தவைகளை அடுக்கினா.

அப்பா மீண்டும் தனது எரிச்சலை வைரஸின் மேல் கொட்டத் தொடங்கினார். "எந்த வேலை வெட்டி இல்லாதவன்ரை வேலையோ. ஏன்தான் இப்பிடி வைரசுகளை தயாரிச்சு கொம்பியூட்டருகளை நாசமாக்கிறாங்களோ, தெரியேல்லை" என்றார். வினாடிகள் கழித்து "சிலருக்கு மூளை கூடித்தான் இந்த வில்லங்கம் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாங்கள்." என்றார்.

அதற்கு அண்ணா "அப்பிடிச் சொல்லேலாது. இந்த அன்ரிவைரஸ் புரோக்கிராம்களைத் தயாரிக்கிற நிறுவனங்களே இப்படி வைரஸ்களையும் எங்கள் கணினிகளில் பரவச் செய்யலாம்தானே. இது நல்ல வியாபார தந்திரந்தானே" என்றான். அவனது பிஸ்னஸ் மூளை அப்படிக் கணித்தது.

இந்தக் கதைகள் சமையலறையில் நின்ற அம்மாவின் காதுகளிலும் விழ அம்மா அவசரமாக வெளியில் வந்து "என்ன வைரஸ் பிரச்சனையே?" என்றா. இப்போது நான் "ஓமம்மா எல்லாம் போய் விட்டது. ஏதோ ஒரு வைரசாலை கொம்பியூட்டரிலை இருந்த எல்லாமே அழிந்து விட்டன" என்றேன். எனக்கு அழுகையே வந்து விட்டது.

அம்மாவின் முகத்தில் சட்டென்று ஒரு "பளிச்." மெதுவாகச் சிரித்தா. அப்பாவுக்குக் கடுப்பாகி விட்டது. "அதென்ன ஒரு சிரிப்பு உனக்கு? எல்லாம் போட்டுது என்று நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறம். நீ என்னடா எண்டால் சந்தோசமாச் சிரிக்கிறாய்" என்றார்.

"இதுக்குத்தான் ஒழுங்கு வேணும் எண்டு சொல்லுறது. உங்கடை ஆவணங்களை அப்ப அப்ப நீங்கள் பக்அப் செய்து வைச்சிருக்கலாம்தானே. நான் சொன்னால் கேட்க மாட்டிங்கள்..." என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் போன அம்மா அலுமாரியைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து மேசையில் வைத்தா.

பெட்டிக்குள்... என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. முழுக்க ஒலிப்பேழைகள். கணினிக்குள் இருந்த எமது ஆவணங்கள் ஒவ்வொன்றையும் கிழமைக்குக் கிழமை தவறாது எரித்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் ஒழுங்காக திகதி வாரியாகப் பிரித்து...

சந்திரவதனா
ஜேர்மனி
15.8.2006

பிரசுரம் - பூவரசு (ஆடி-ஆவணி2006)

8 comments :

இளைஞன் said...

கதையின் ஆரம்பத்திலயே ஓரளவு விளங்கிட்டு... அம்மா எல்லாம் ஒழுங்கா ஆவணப்படுத்தி வைச்சிருக்கிறா என்று.

நீண்ட நாட்களுக்கு பின்.. உங்கள் சிறுகதை வாசித்தேன். மகிழ்ச்சி...

நட்புடன்
இளைஞன்

U.P.Tharsan said...

அருமையான அம்மா! :-)) இதுதான் என்விருப்பமும் கூட . வீட்டிலிருக்கும் 60 வயது தாத்தாவுக்கு கூட கணனி கற்றுக்கொடுக்கவேண்டும். ஏனேனில் அவர்கள் எங்களை விட ஆக்கபூர்வமாக சிந்திப்பதால் கணனி அறிவும் பெற்றால் நன்று. புதியதை புதுவிதமாக அனுகுவார்கள்.

Anonymous said...

மிகவும் நேர்த்தியாகக் கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

Chandravathanaa said...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி இளைஞன்.

கதையின் ஆரம்பத்திலயே ஓரளவு விளங்கிட்டு... அம்மா எல்லாம் ஒழுங்கா ஆவணப்படுத்தி வைச்சிருக்கிறா என்று.

இந்தக் கருத்தை கதையை வாசித்த இன்னும் சிலர் என்னிடம சொன்னார்கள்.

Chandravathanaa said...

தர்சன், நண்பன்

உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Anonymous said...

பிள்ளைகள், தாய், தந்தை ஆகிய பாத்திரங்களை கதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. வீட்டில் நடப்பதை தெளிவாக விவரித்து இருக்கின்றீர்கள். பெண்ணின் திறமையையும், அவளது முன் யோசனையையும் குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு நல்ல செய்தி. தாயின் பாத்திரத்தை நீங்கள் அறிமுகப்படுத்தும் போதே பக் அப் அவள் செய்திருப்பாள் என்பதை நான் ஊகித்துக் கொண்டேன். பெரும்பான்மையான வாசகர்கள் அதை முதலிலேயே புரிந்து கொண்டால், சுவை சிறிது குறைந்து விடும். அழகான நடை. தெளிவான கருத்து.

நட்புடன்
நட்சத்திரன்

வெற்றி said...

சந்திரவதனா அக்கா,
நல்ல பதிவு.
உங்கட நுள்ளுப்பிராண்டிப் பதிவைப் படிக்க பல தடவைகள் முயன்றும் முடியவில்லை. அப் பதிவுக்குச் சென்றதும் திரையில் ஒன்றும் தெரியுதில்லை. எழுத்துக்கள் உடனடியாக மறைந்து விடுகிறது.

சில நிமிடங்களுக்கு முன் உங்களின் சீலன் பற்றிய பதிவையும் படித்தேன். பல தகவல்களை அறிந்து கொண்டேன். அங்கேயும் பின்னூட்ட வசதிகள் இல்லையென்று நினைக்கிறேன்.

ஆட்சேபனை இல்லையெனின் தயவு செய்து உங்கள் நுள்ளுப்பிராண்டிப் பதிவை ஒரு மறுபதிவாகப் போட முடியுமா?

மிக்க நன்றி.

Chandravathanaa said...

நன்றி வெற்றி.

இந்தப் பிழையை வேறு சிலரும் சுட்டிக் காட்டினார்கள். என்ன பிழையென்றுதான் சரியாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.

அந்த நுள்ளுப்பிராண்டி பதிவு விளையாட்டுப் பாடல்கள் சம்பந்தமாக யாருக்காவது தெரியுமா என நான் கேட்டதே. இருந்தாலும் உங்களுக்காக அதை மீண்டும் ஒரு முறை பதிகிறேன்.

எனது மற்றைய பதிவுகளும், அதாவது மனஓசையில் பதியப் பட்டவை வாசிக்கக் கூடியதாக இருக்கின்றனவா இல்லையா என்பதைத் தெரியப் படுத்தினீர்களானால் உதவியாக இருக்கும்

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite