Saturday, April 05, 2008

மாமி போய் விட்டாள்

எழுது எழுது என்று மனம் உந்தினாலும் எதுவோ தடுக்கிறது. எதை எழுத நினைத்தாலும் சில சொற்களுக்கு மேல் முடியவில்லை. ஏதோ ஒரு வெறுமை.

பிறப்பவர் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதி என்றாலும் எந்தப் பொழுதிலும் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனங்களால் முடிவதில்லை. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா! முடியவில்லை. எந்த மின்னஞ்சலுக்கும் பதில் எழுதவோ, எந்தத் தொலைபேசி அழைப்பையும் சந்தோசத்தோடு அணுகவோ முடியவில்லை.

எனது தம்பிமார் மாவீரர் ஆன போதோ, எனது அப்பா மரணித்த போதோ, என் அண்ணன் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் சென்று விட்ட போதோ ஆற்றொணாத் துயரில் அழுது புலம்பியது போல் இன்று நான் அழுது புலம்பவில்லை. துயரம்தான். மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லைத்தான். தாங்க முடிகிறது. ஆனாலும் மனதில் சூழ்ந்துள்ள வெறுமையில் இருந்து வெளியேற முடியவில்லை. மரணத்தை வெல்ல முடியாது என்ற உண்மை நன்கு தெரிந்திருந்தாலும் வென்றிருக்க முடியாதோ என்று மனசு நப்பாசை கொள்கிறது. கண்கள் அடிக்கடி பனிக்கிறது. சமயங்களில் கன்னங்களிலும் வழிகிறது.

தூரத்து மரணம் எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு துயரச் செய்தி மட்டுமே. அது ஒரு துன்பியல் நாடகம் போல அவரவர் மனங்களுக்கு ஏற்ப அவரவர்களைத் தாக்கி கண்ணீர் சிந்தவோ, மனம் வருந்தவோ வைக்கும். சில மரணங்கள் மனங்களைப் பிழிந்தும் எடுக்கும். இதை எல்லோரும் அறிந்தும் உணர்ந்தும் இருப்பார்கள். ஆனால் மிக மிக நெருங்கிய உறவின் மரணம், அதாவது மிக மிகப் பிரியமான அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, குழந்தை… என்று எவராவது ஒருவரின் மரணமும், அது தரும் சோகமும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. அனுபவித்து மட்டுமே உணரக் கூடியது.

அப்படியானதொரு ஆற்றொணாத் துயரில் என் பிரியமானவன் அமிழ்ந்து தவிக்கிறான். அவனுக்கு அழக் கூடத் தெரியவில்லை. எப்படி அவனை ஆற்றுவது என்று தெரியிவில்லை. தேற்றுவதற்கும் என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவன் துயரமே என்னிடம் பெருந்துயராய் படர்ந்து என்னைப் படுத்துகிறது.

மாமி (என் கணவரின் தாயார்) 3.4.2008 அன்று மரணித்து விட்டாள். நாற்பது வயதிலேயே கணவனை இழந்து விட்டாலும், மனதைரியத்தோடு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவள். தற்போது வயது 89. ஆனாலும் படுக்கையில் வீழ்ந்து விடாமல் கடைசி வரை சமையலில் இருந்து பல வேலைகளிலும் வீட்டில் பங்கேற்று வாழ்ந்து கொண்டிருந்தவள். இறப்பதற்கு முதல்நாள் கூட தொலைபேசியில் எம்மோடு பேசி விட்டு, போய் விட்டாள். ஆயிரக் கணக்கான மைல்களை அவசரமாய் ஓடிக் கடக்க முடியவில்லை. நியூசிலாந்தில் உயிரற்று அவள் உடல் இருக்கிறது என்ற உண்மையை ஏற்க மறுக்கிறது மனம். மாமியார் கொடுமைகளைப் பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். வாசித்திருக்கிறேன். ஆனால் என்றைக்குமே நான் அனுபவித்ததில்லை. நல்லவள். எம்மை விட்டுப் போய் விட்டாள்.

இதற்கு மேல் எழுத முடியவில்லை.

4.4.2008

13 comments:

Anonymous said...

எம் நேசமானவர் இழப்பைவிட நேசமானவர் ஆற்றொணா துயரில்லுள்ள போது, எமக்குள் உண்டாகும் வெறுமை மடடுமல்ல எம்மை கவ்விக்கொள்ளும் வலியும் பெரியது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நாமும் துயரை பகிர்ந்துகொள்கிறோம்.

-ரூபன், யாழினி, நாமா, பிரபா

ஜோதிபாரதி said...

உங்கள் பதிவு என்னைக் கலங்க வைத்தது. தம்பிமார்கள் நாட்டுக்காக உயிர் விட்டு மாவீரர் ஆன செய்தியும்தான்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

சுல்தான் said...

//பிறப்பவர் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதி என்றாலும் எந்தப் பொழுதிலும் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனங்களால் முடிவதில்லை.//
மற்றவருக்காக சொல்லுவது சுலபம்தான். ஆனாலும் சொல்ல வேண்டும். மனதிலெங்கும் பாரம் அழுத்தியபோதும் அதைக் கண்ணீரால் வெளியிடத்தெரியாத சில நாட்கள் நினைவுக்கு வருகிறது. அமைதியாய் ஆண்டவனின் கட்டளையை ஏற்போம். இத்தகைய வலிகளுக்கேல்லாம் காலமே நல்ல மருந்து.

சுந்தரவடிவேல் said...

ஆறுதல்கள்!

கானா பிரபா said...

உங்கள் நேசத்துக்குரிய மாமியார் பிரிவுத் துயரில் நானும் பங்கெடுக்கின்றேன். அவரின் நல்ல ஆளுமைகளை உள்வாங்கி நடப்பது தான் அவருக்குச் செய்யும் முறையான கெளரவ அஞ்சலியாக இருக்கும்.

ரசிகன் said...

உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிறோம் அக்கா.:)

தென்றல் said...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிராத்தனைகளும்....

அன்புடன்

ஆயில்யன். said...

//அது ஒரு துன்பியல் நாடகம் போல அவரவர் மனங்களுக்கு ஏற்ப அவரவர்களைத் தாக்கி கண்ணீர் சிந்தவோ, மனம் வருந்தவோ வைக்கும். சில மரணங்கள் மனங்களைப் பிழிந்தும் எடுக்கும்//

உண்மைதான்!

மற்றவர்களின் துன்பங்களில் பங்கேற்கும்போது, நம்மில் கடந்து சென்ற துன்ப நிகழ்வுகளின் நினைவலைகளால் மனம் கண்ணீர் வடிக்கும்.!

Anonymous said...

I could read lots of sadness in your heart. I am sorry. Please take care.

Ramya

கண்மணி said...

வதனா!இத்தகையதொரு பிரிவு எப்படியிருக்குமென்பதை
நானும் நம்மில் பலரும் அனுபவித்தேயிருக்கிறோம்.அடுத்தவருக்கெனில் சுலபமாய் ஆறுதல் சொல்லும் மனம் நமக்கென் வரும்போது ஆறுதல் அடைவதில்லை
மீண்டு வாருங்கள் விரைவில் என்பதைத் தவிர என்ன சொல்ல.

தமிழன்... said...

தங்களுடைய துயரத்தில் பங்கு கொள்கிறேன், தவிர்க்க முடியாத சிலவை நிகழத்தான் செய்கிறது விருப்பம் இல்லாவிட்டாலும்... எனக்கும் வேறெதுவும் சொல்லத்தெரியவில்ல....

துளசி கோபால் said...

வருந்துகின்றேன்.

இங்கே நியூஸியில்? எந்த ஊரில்?

அவரது ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றேன்.

இதே நாளில்தான் பல ஆண்டுகளுக்கு முன் என் தாயை இழந்தேன் வதனா.

காரூரன் said...

உங்கள் குடும்பத்தினருடன் இந்த கஷ்டமான பொழுதுகளில், மன ஆறுதலையையும், மாமியாரின் ஆத்ம சாந்திக்காகவும் வேண்டுகின்றேன்