Tuesday, March 18, 2014

யாருக்கும் பெருமைப்படத் தோன்றவில்லையா?

எங்களை நாங்களே தூற்றிக் கொள்வதில் எமக்கு நிகர் நாமே என்ற நிலையில்தான் தமிழர் நாம் இன்னும் இருக்கிறோம். ஒரு ஜேர்மனியப் பெண் தமிழை அதுவும் எமது பேச்சுத்தமிழைக் கதைக்கும் போது ஆச்சரியமாகவும், மகிழ்வாகவும்தான் இருக்கிறது. அதற்காக எம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டுமா?

12வயதில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த எங்கள் குழந்தைகள் அந்தந்த நாட்டு மொழிகளுடன் எந்தளவு தூரம் போராடியிருப்பார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு புலம்பெயர்ந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஓரளவேனும் அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க்... போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பெற்றோருக்கு அந்நாட்டு மொழியில் இருந்து ஒரு சொல்லுக் கூடத் தெரியாமலே இருந்தது. வீட்டில் அவர்கள் தனித்தமிழே கதைத்தார்கள். அவர்கள் குழந்தைகள் எல்லோருமே வெளியில் அந்நாட்டு மொழியைப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்தில் மிகவும் கஸ்டப்பட்டார்கள். பேசுவது மட்டுமல்ல மொழியையும் படித்து அதனூடு கல்வியையும் கற்க வேண்டிய ஒரு கடினமான சூழல் அவர்களுக்கு இருந்தது.

ஆனாலும் சாதித்தார்கள். வீட்டில் தனித்தமிழ். மிஞ்சினால் ஆங்கிலக் கலப்புடனான சில சொற்கள். வெளியில் டொச், டெனிஸ், இத்தாலி, பிரெஞ்... இந்த நிலையிலும் அந்தந்த நாட்டுப் பிள்ளைகளை விட நல்ல மார்க்குகள் அந்தந்த நாட்டு மொழிகளுக்கே எங்கள் பிள்ளைகள் பெற்று இன்று நல்ல பதவிகளில் கூட இருக்கிறார்கள். அனேகமான புலம்பெயர்ந்த தமிழ்பிள்ளைகள் எல்லோருமே பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள். இதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதின் பின் புலம்பெயர்ந்த எங்கள் பிள்ளைகளால் நாம் வாழும் நாட்டின் மொழியை மிகச்சரளமாகப் பேசமுடியும், கூடவே ஆங்கிலமும் நன்கு தெரியும். அதை விட இன்னும் ஏதாவது ஒரு மொழி - உதாரணமாக ஜேர்மனியில் வாழ்பவருக்கு பிரெஞ் அல்லது ஸ்பானிஷ் தெரியும். இவ்வளவோடு தமிழைச் சரளமாகப் பேசவும் தெரியும்.

அதே நேரம் இங்கு மிகக்குழந்தைகளாக வந்த பிள்ளைகளுக்கோ அன்றி இங்கு பிறந்ந பிள்ளைகளுக்கோ வேறு பிரச்சனைகள் உள்ளன. வீட்டில் தமிழ். வெளியில் அந்த நாட்டுமொழி. அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்றில்லை. எப்படித்தான் வீட்டில் தமிழ் கதைத்தாலும் வெளியில் முழுக்க முழுக்க வேற்றுமொழி. கல்வி வேற்றுமொழியில்.

தமிழா அந்நாட்டு மொழியா சிறந்தது என்பதில் அவர்களுக்குத் தடுமாற்றம். அவர்கள் தமது நண்பர்களுடன் தமிழில் பேசமுடியாது. அவர்களது உச்சரிப்பில் தமிழ் கலந்திருந்தால் பாடசாலையில் அவர்களுக்குச் சில பின்னடைவுகள் வரும். நாள் முழுக்க அந்நாட்டு மொழியுடன் ஊடாடி விட்டு வீட்டுக்கு வந்ததும் தமிழுக்கு அவர்கள் மாறுகிறார்கள். சில பிள்ளைகளால் அது முடிவதில்லை. எப்படித்தான் தமிழ் முக்கியம் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தாலும் அந்நாட்டு மொழி அக்குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானதாக இருக்கிறது. அவர்கள் கதைக்க, விளையாட, படிக்க, வேலை செய்ய.. என்று, அம்மொழி இல்லாமல் அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் இல்லை.

ஆனால் அவர்களும் அந்த ஜேர்மனியப் பெண் சொல்வது போல தேவை வரும் போது கதைப்பார்கள். அவர்களுக்குத் தமிழே விளங்காது என்றில்லை. எங்காவது விதிவிலக்காக யாராவது இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்தத் தமிழரையுமே கேலி செய்ய வேண்டியதில்லை.

நான் எப்போதுமே எங்கள் பிள்ளைகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது பிள்ளைகள் தமிழையும் பேசிக்கொண்டு வேற்றுநாட்டு மொழியொன்றில் படித்து, நல்ல முறையில் சித்தியடைந்து, நல்ல நல்ல பதவிகளில் அந்நாட்டவகளையும் விட மேலானநிலைகளில் கூட இருக்கிறார்கள்.

அந்த ஜேர்மனியப் பெண்ணை நான் பாராட்டுகிறேன். எமது நாட்டு மொழியைப் பேசுகிறார் என்பதால் மகிழ்கிறேன். அதையும் விட எங்கள் பிள்ளைகளை நினைத்து மிகமிகப் பெருமைப் படுகிறேன்.

ஏன் நாங்களே எத்தனை வயதுகளின் பின் புலம் பெயர்ந்தோம். தமிழோடு அடி நுனி கூடத் தெரியாத ஒரு மொழியைப் பேசுகிறோம். எழுதுகிறோம். அந்நாட்டு மக்களோடு வாழ்கிறோம். யாருக்கும் பெருமைப் படத் தோன்றவில்லையா?

சந்திரவதனா
18.3.2014


White Lady Speaks Jaffna Tamil - யாழ்ப்பாணத் தமிழ் பேசு

46 comments :

பாலேஸ்வரன் பாலசுப்பிரமணியம் said...

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி

18.03.2014

ManjzulaDevi ParthipaRasan said...

எல்லோரும் தேவைப்படும் பொழுது நிட்சயமாக எதையும் கற்றுக் கொள்வார்கள்...

Sathyan S said...

இங்க்லீஷ் காரர்களோ பிரெஞ்சு காரர்களோ அரேபியர் களோ தங்கள் மொழியை வேறு யாராவது பேசுகிறார்கள் என்று பெருமைப் படுகிறார்களோ ?ஒரு வேளை ஒபாமா தான் தமிழ் பேசினாலும் நமக்கு ஒன்றும் .................. (:(

Bha Hameed said...

நமது அடையாளம் என்ன? மொழி ஒன்றுமட்டுமே. தாய்மொழி என்பது நமது முகம். எவருக்கும் முதலில் தம் தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும். அதே வேளை, அவர்களுக்கு பன்மொழிப் புலமையும் உண்டென்றால் மட்டுமே பெருமை. I am a Tamil - But - I dont know Tamil என்று சொல்வதில் பெருமை உண்டா? (பல தலைமுறைகள் கடந்தும்- புலம்பெயர்ந்து வாழும் சீனர்களால், பஞ்சாபியர்களால்,பாகிஸ்தானியர்களால் தம் மொழி அடையாளத்தைப் பேண முடிகிறதென்றால்......நம்மால் ஏன் முடிவதில்லை?????)

Suntha Bavananthan said...

So beautifully described. You are the best writer Vathana Acca

Kuruvikal Kuruvi said...

In sri lanka tamils refused to study sinhala and asked separate tamil state to resolve language issues as well and had bloody 35 yrs civil war which killed thousands of innocent tamils.due to this many of other tamils got chance to migrate for better life in western countries.now same tamils say learning other languages is a marvelous skill and essential for better life.it is purely self contradictory stand and aslo same people blamed tamils who learnt sinhala as traitors. Tamils in overseas are so typical people who wish to switch sides just for own benefits and selfishness. It is not a proud full attitude at all. Learning many modern languages is an average human brain skill.it is purely a biological matter . don't show this as radical matter.thank u.

Rajhan Murugavel said...

நாங்கள் வேற்றுமொழி பேசுவதற்கும் எமது பிள்ளைகள் வேற்றுமொழி பேசுவதற்கும் குறிப்பிட்ட ஜேர்மன் நங்கை தமிழ் பேசுவதற்கும் அடிப்படையில் வித்தியாசம் உண்டு. நாங்கள் ஐரோப்பிய நாட்டில் வாழவேண்டுமாயின் அந்தந்த நாட்டு மொழிகளை பேசித்தானாக வேண்டும். எமது பிள்ளைகள் எம்மைப்போல உடலை வருத்தி வேலை செய்யக்கூடாது எனில், அவர்கள் பலதைத் துறந்து படித்துத்தானாக வேண்டும்.
இந்த மொழி படிக்கும் ஆற்றல் ஊரில் சிங்களம் படிப்பதில் ஏன் தோன்றவில்லை? வருமானம் இல்லை. அங்கே கொழும்பில் சோத்துக் கடைக்காரனும், வாழைப்பழக் கடைக்காரனும்தான் சிங்களம் பேசினார்கள். வருமானத்துக்காகத்தான்.
நாங்கள் வருமானம் வரும் என்றால் என்னவும் செய்வம். ஆனால் அந்த நங்கை அப்படி அல்ல.. அதுதான் அவரை போற்றுதற்குரிய காரணம்!

Giritharan Navaratnam said...

//ஏன் நாங்களே எத்தனை வயதுகளின் பின் புலம் பெயர்ந்தோம். தமிழோடு அடி நுனி கூடத் தெரியாத ஒரு மொழியைப் பேசுகிறோம். எழுதுகிறோம். அந்நாட்டு மக்களோடு வாழ்கிறோம். யாருக்கும் பெருமைப் படத் தோன்றவில்லையா?//

சந்திரவதனா செல்வகுமாரன் கூறுவது போல் பல்வேறு நாடுகளுக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாட்டு மொழிகளில் மிகுந்த பரிச்சயமும், புலமையும் பெற்று இலக்கியப் படைப்புகளையெல்லாம் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் இவ்விதம் பெருமைப்பட்டிருப்பதாக நினைவில்லை. ஆனால் ஒரு ஜேர்மன் பெண் தமிழ் பேசியதும் மிகுந்த பெருமைப்பட்டுக்கொள்கின்றோம். இதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் எப்பொழுதுமே பழம் பெருமை பேசுவதில் மகிழ்ச்சி அடைபவர்கள். அந்தப் பெண் தமிழைப் பேசுவது அவரது சொந்த விருப்பம். அதில் மகிழ்ச்சி அடைவதற்கோ, பெருமைப்படுவதற்கோ எந்தவித மேலதிகக் காரணங்களுமில்லை. ஆனால், மேனாட்டுப் பேராசிரியர்கள் சிலர் தமிழை, தமிழ் இலக்கியங்களையெல்லாம் கற்று ஆய்வுகள் செய்கின்றார்களே! நூல்களை வெளியிடுகின்றார்களே! அதற்காகப் பெருமைப்படலாம் அவர்களது பன்மொழித்திறனுக்காக; தமிழைப் படித்ததற்காக அல்ல. இவ்விதமான பன்மொழிப் புலமைக்கு ஈழத்துச் சுவாமி ஞானப்பிரகாசரைக் குறிப்பிடலாம். அவருக்குப் பல மொழிகளில் பரிச்சயமும், புலமையுமுண்டு.

Arun S Ravi said...

முற்றுலிலும் உண்மை ...... இந்த வீடியோவை பார்த்துவிட்டு நம்மை நாமே தாழ்தி அடிமுட்டாள்தனமா பெரிவாரியான கருத்துகளை பரிமாறப்படிருந்தது.

Kamalarany Sethar said...

I am agree with you Chandravathanaa.You are perfectly correct.

Muhaari Ragam said...

,//Rajhan Murugavel அங்கே கொழும்பில் சோத்துக் கடைக்காரனும், வாழைப்பழக் கடைக்காரனும்தான் சிங்களம் பேசினார்கள்.//

உங்களை அறிவாளியாக கணித்திருந்தேன். கொஞ்சமாவது நாட்டு நடப்பாவது தெரியவேண்டாம் - கொழும்பில் அரசஉத்தியோகத்தில் இருந்த தமிழர் நல்லாச் சிங்களம் கதைத்தார்கள். சிங்களத்தில் எழுதினார்கள்.

Chandravathanaa said...

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பாலேஸ்வரன், மஞ்சுளா, சத்தியன், சுந்தா, குருவி, ராஜன், கிரிதரன், கமலராணிஅக்கா, முகாரி அனைவருக்கும் மிகுந்த நன்றி. பெருவிரலை நிமிர்த்தி உங்கள் வருகையையும், வரவேற்பையும் உணர்த்தியவர்க்கும் நன்றி.

மஞ்சுளா சொல்வது போல தேவை வரும் போது புலம்பெயர் குழந்தைகள் தமிழ் கதைப்பார்கள். ஓரிரு விதிவிலக்கானவர்கள் இதற்குள் சேர்த்தியில்லை. எனக்குத் தெரிய எத்தனையோ குழந்தைகள் நான்கு வயது வரை வீட்டில் தமிழே பேசினார்கள். கிண்டர்கார்ட்னுக்குப் போகத் தொடங்கியதும் வீட்டில் தமிழ் பேசுவதை அடியோடு நிறுத்தினார்கள். அதற்காக அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்றில்லை. பெற்றோர்கள் தமிழில் கதைத்தாலும் அந்நாட்டு மொழியிலேயே பதில் சொன்னார்கள். மீண்டும் 12-13 வயதுகள் வர தாமே தமிழைக் கதைக்கத் தொடங்கி விட்டார்கள்.

என்றோ வந்து எம்மை ஆட்சி செய்த ஒல்லாந்தரும், போர்த்துக்கீசரும், பிரித்தானியரும் விட்டுப் போன சொற்களில் பலதை காலம்காலமாக நாம் எம்மோடு கொண்டு வருகிறோம். யாராவது மேசையை சுத்த தமிழில் சொல்கிறீர்களா? எம் குழந்தைகளைக் குற்றம் பிடிப்பதில் மட்டும் கண்ணாக நிற்கிறீர்கள்.

சத்தியன் சொல்வது போல எந்த நாட்டவரும் தமது மொழியை நாம் பேசுகிறோம் என்பதற்காக எங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் இல்லை. எங்களை ஒப்பிட்டு தங்கள் குழந்தைகளைத் தாழ்த்துவதும் இல்லை.

ஆனால் தமிழ் குழந்தைகள் எப்படி இவ்வளவவு கெட்டித்தனமாக இருக்கிறார்கள் என வியப்பார்கள். சிலர் பொறாமையும் படுவார்கள்.

கிரிதரன் உங்கள் விபரமான கருத்துக்கு நன்றி. நல்ல எடுத்துக்காட்டு.

கிரிதரன் கூறியது போல அந்தப் பெண் தமிழ் கதைப்பது அவரது விருப்பம். அத்தோடு அவர் ஒரு தமிழனை மணந்துள்ளார். சேர்ந்து வாழும் போது ஒரு மொழியைக் கற்பது சுலபம். அவருக்கு ஆர்வமும் இருந்துள்ளது. கற்றுள்ளார். ஆனால் அவரை வைத்து நாமே தமிழரைக் கேலி பண்ணுவதுதான் கேலிக்குரிய விடயம்.

சுத்த யாழ்ப்பாணத்தமிழில் பேசுகிறார்.. பேசுகிறார்.. என அந்தத் தொலைக்காட்சி அறிவிப்பாளார் ஒரு வித துள்ளலுடனும், தமிழர்களைக் கேலியுடனும் விழித்துக் கதைக்கிறார். அப்பெண் கதைப்பது சுத்த தமிழா? நாமே ஒருவரும் சுத்த தமிழ் கதைப்பதில்லை. எழுதும் அளவுக்குக் கூட எமது பேச்சில் சுத்தம் இருப்பதில்லை. அவர் பேச்சுத்தமிழைத்தான் பேசுகிறார். அது சுத்ததமிழ் அல்ல.

அது போக அவருக்கே பல உச்சரிப்புகள் இன்னும் சரியாக அமையவில்லை. அவர் எப்படி ஒரு தமிழ்ப்பாடசாலை ஆசிரியராக தமிழைப் படிப்பிக்க முடியும்.

ராஜன் உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. முதலாவது சோத்துக்கடைக்காரன் என்ற உங்கள் எழுத்திலேயே ஒரு வித ஏளனம் கலந்திருக்கிறது. அவர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்லர்.

அவர்கள் மட்டுமல்ல. எவருமே தேவைக்காகத்தான் எதையும் செய்கிறார்கள். இல்லாவிட்டால் தமக்கு இன்பம் தரும் பொழுது போக்கிற்காகச் செய்கிறார்கள். முகாரி குறிப்பிட்டது போல எனக்குத் தெரிய எத்தனையோ பேர் புலம்பெயர்வு என்ற ஒன்று வர முன்னரே இலங்கையில் பிரெஞ் மொழியைக் கற்றார்கள். அவர்களுக்கு அதிலே ஆர்வம் இருந்தது.

எமது ஊரில் ஆத்தியடியில் சண்முகநாதன் மாஸ்டர் இருந்தார். அவர் சிங்களம் படிப்பித்தார். அவரிடம் ஆத்தியடியைச் சேர்ந்த பலர் சிங்களம் படித்தார்கள். எனது அண்ணன் பத்து வயதிலேயே சிங்களத்தை அவரிடம் கற்று மிகச்சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்திரந்தார். எனது அப்பா அரச ஊழியர். சிங்களம் கட்டாயம் என்பதால்தான் படித்து சில பரீட்சைகள் எழுதினார். ஆனால் மிகச் சரளமாகக் கதைக்கவும் முடிந்தது அவரால். அப்படி எனக்குத் தெரிந்த எத்தனையோ பேர் இருந்தார்கள்.

Ajeevan Veerakrthi said...

Rajhan சொல்வதே சரி. எல்லாத் தமிழரும் கொழும்பில் சிங்களம் பேசவில்லை. ஓரிரு வார்த்தைகள் பேசுவார்கள். பெரிதாக எழுத - வாசிக்க தெரியாது. அதிகமாக ஆங்கிலத்தையே பாவித்தார்கள். கடைகள் - உணவகத்தில் இருந்தவர்கள் தனது வியாபாரத்துக்காக தனக்கு போதுமான அளவு சிங்களத்தில் பரிச்சயமாக இருந்தார்கள். அரசாங்க உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக தமிழர்கள் படித்தார்கள். அது ஒரு சான்றிதழுக்கான படிப்பே தவிர ; சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் எனும் உணர்வில் அல்ல.

ஐயோரப்பாவில் புலம் பெயர்ந்து ( ஆங்கலம் இல்லாத நாடுகளில்) வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாட்டு மொழிகளை பேசுகிறார்கள் - கற்கிறார்கள் ; அது தமது தேவைக்கே அன்றி அந்த மொழி புலமைக்காக அல்ல. உதாரணமாக ஒரு குடியுரிமைக்கு மொழிச் சான்றிதழ் தேவையென்றால் படிக்கிறார்கள். அத்தோடு சரி. ( இங்கு கற்கும் குழந்தைகள் அல்ல)

ஆரம்ப கால மொழிபெயர்ப்பாளர்களே அரை குறைகள்தான். இதுபோலத்தான் கொழும்பில் சிங்களம் பேசிய - பேசும் அநேக தமிழர்கள். எமது அரசியல்வாதிகள் மொழியை வைத்து அரசியல் நடத்தியதன் - நடத்துவதன் பலன் அது.

ஐரோப்பியர்கள் எம்மைப் போல் ஒன்றைக் கற்க அல்லது தெரிந்து கொள்ள விரும்பினால் அதை ஆத்மார்த்தமாக செய்வார்கள். நீங்கள் குறிப்பிடும் பெண் தமிழரோடு வாழ்ந்திருக்கிறார். தமிழரை மணமுடித்திருக்கிறார். காதலுக்கு மொழி முக்கியம். தனது கணவனை விரும்புவது போல அவர் மொழியை விரும்புவதும் ; அதில் பேசுவதும் மகிழ்ச்சியே! இது ஒன்றும் பேரதிசயம் ஒன்றுமல்ல. எம் குழந்தைகளைப் பார்த்து இந்த நாட்டவரும் அப்படித்தான் வியக்கின்றனர். நல்ல விடயம். மகிழ்வோம்.

Ajeevan Veerakrthi said...

எவருக்கும் தேவை இல்லையென்றால் எதுவுமே இல்லாமலே ஆகிவிடும். ஆங்கிலம் பேசும் நாடுகளில் புலம்பெயர்ந்த அனைவரும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். அது எமக்கு பழக்கப்பட்ட ஒரு மொழி. ஏனைய மொழிகளை பேசும் ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் வீட்டில் தமிழ் பேசுகிறார்கள். எனவே குழந்தைகள் தமிழில் புலமை இல்லாவிடினும் பேசுவார்கள். புரிந்து கொள்கிறார்கள். ஆனால் வீட்டில் சகோதரனோடும் - சகோதரியோடும் தமது கற்றல் மொழி ( அதுவே அவர்களது தாய் மொழியாகிவிடுகிறது) யை பேசுகிறார்கள். இது அனைத்து வீடுகளிலும் காண முடிகிறது.

Chandravathanaa said...

அஜீவன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

அந்தப் பெண் தமிழைப் பேசக் கற்றுள்ளார். எழுதவும் கற்றாரோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரது குழந்தைகள் அவர்களது தாய்மொழியான ஜேர்மன் மொழியை இன்னும் சரியாகக் கற்றுக் கொள்ளவில்லை. தேவை வரும் போது அவர்கள் கதைப்பார்கள், கற்பார்கள் என்று அப்பெண்மணி சொன்னார். அதே போலத்தான் எமது குழந்தைகளும் தேவை வரும் போது கதைப்பார்கள். கற்பார்கள்.

ஆங்கிலம் பேசும் நாடுகளில் கூட ஒரு வயதுக்குப் பின்னர் அந்தக் குழந்தைகள் தாமாகவே தமிழில் ஆர்வம் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.

Chandravathanaa said...

ஒரு சீனன் தமிழ் பேசுகிறான். தமிழனே தலையைக் குனிந்து கொள். உனக்குத் தமிழ் தெரியாது என்றும், ஒரு ஜேர்மனியப் பெண் தமிழ் பேசுகிறாள். தமிழனே வெட்கிக்கொள். உனக்குத் தமிழ் தெரியாது என்றும் பேசுவோரைப் பார்க்கும் போதுதான் எனக்கு வெட்கமாக உள்ளது.

Ajeevan Veerakrthi said...

சந்திரவதனா நன்றி!

அவர் தமிழ் கற்பிப்பதாக சொல்வதால் அவருக்கு தமிழ் எழுத - படிக்கத் தெரியும் என்றே கருதுகிறேன்.

தேவையில்லாத எதற்கும் இங்கு வாழும் குழந்தைகள் காலத்தை விரயம் செய்ய மாட்டார்கள்.

உதாரணத்துக்கு நான் சிங்கள மொழியில் கல்வி கற்றவன். இலங்கையில் அப்பா - அம்மாவோடு தமிழில் பேசினேன். எழுத - படிக்கத் தெரியாது. அப்பா சிங்களத்தை வெறுத்ததனால் ; அவரால் (தபால் அதிபர்) பதவி உயர்வுகள் கிடைக்கவில்லை. அப்பா கடைசி வரை சிங்களம் படிக்கவே இல்லை. அவர் அப்படி பிடிவாதமாக இருந்தார். அதனால் அதிக இட மாற்றங்களினால் குடும்பம் அல்லல்பட்டது. சிங்களப் பகுதிகளுக்கு மாற்றலானதனால் எனக்கு சிங்கள பாடசாலைகளில் படிக்க வேண்டி வந்தது. அதை அம்மா ஊக்குவித்தார். அப்பா மாதிரி உனக்கு வர வேண்டாம் என்று..... இப்போதும் தமிழை விட சிங்களமே நன்றாக வரும்.

தமிழ் உத்தியோத்தர்களுக்கு சிங்களம் படிப்பிக்கும் வாய்ப்பு எனக்கு சிறு வயதிலேயே இருந்தது. எனவே அவர்களது பிரச்சனை எனக்குத் தெரியும் . தமிழில் 'க' என்ற ஒரு எழுத்து மட்டுமே உள்ளது . ஆனால் சிங்களத்தில் ග ga , ක ka , හ ha என்ற எழுத்துகளை தமிழர்கள் 'க' என்றே உச்சரிப்பார்கள். அதை மாற்றுவது கடினம். சிங்களம் பேசும் தமிழரை உடனடியாக அடையாளம் காண முடியும். இது போன்ற ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு.
கக வெட்டுணா எனச் சொல்லும் போது ஏற்படும் பிரச்சனை ஒன்றை பாருங்கள்.

gaக வெட்டுணா - மரம் விழுந்தது.
kaக வெட்டுணா - மஞ்சல் விழுந்தது.

ග ga , ක ka , හ ha இது தமிழருக்கு வரவே வராது. இதை நான் படிப்பிக்கும் போது கண்டுள்ளேன். ஆனால் சிங்களம் தெரியாதோருக்கு அவர் நல்லா சிங்களம் பேசுவார் என்றே நினைப்பார்கள். அதை நாம் உணர்வதில்லை. ஏற்றுக் கொள்வதுமில்லை.

Ajeevan Veerakrthi said...

நாங்கள் ஊரில் பளியில் ஒரு பாடமாக ஆங்கிலம் படித்துள்ளோம். ஓலெவலில் க.பொ.த (சா.த) பரீட்சையில் அதி விசேட சித்தியடைந்துள்ளோம். ஆனால் வாசிப்போம் . சிலவேளை ஒரு கடிதம் எழுதுவோம். பேச மாட்டோம். அல்லது ஒரு மிகக் குறைந்த வார்த்தைகளை மட்டும் பாவிக்கும் தன்மையை பெற்றிருப்போம். இதை சொல்லும் போது நம்மால் நமது நிலையை உணர முடியும்.
அது போல சில தமிழர்கள் சிங்களம் பேசலாம் - வாசிக்கலாம் - எழுதலாம். ஆனால் அவர்களது பேச்சு நடை (ஒயில்) அவர்களை காட்டிக் கொடுக்கும். இதே பிரச்சனையை German பேசும் எம்மவரிடமும் காண முடிகிறது. மொழியை பேசுவதென்பது ஒன்று. அவர்களைப் போலவே பேசுவதென்பது ஒன்று. அதனால்தான் நமது குழந்தைகள் நமது German பேச்சை ஏளனம் செய்கிறார்கள். இது அநேக வீடுகளில் காணக் கிடைப்பது. ஆனால் German மக்கள் நமது German மொழியை புரிந்து கொள்கிறார்கள். அதாவது வேற்று நாட்டவன் ஒருவனது German என அவர்களால் அங்கீகரிக்க முடிகிறது.

நான் சிங்கப்பூருக்கு போன போது நான் பேசிய கொச்சைத் தமிழை ; அவர்கள் சிங்களத் தமிழ் என்று சொல்லிச் சிரித்தார்கள். அங்கு தமிழ் கற்கும் தேவை ஏற்பட்டது. சிங்கப்பூரில்தான் நான் தமிழை கற்றேன். அங்கு தேவைப்படாமல் இருந்திருந்தால் நான் தமிழை கற்றே இருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அங்கு கற்ற எனது தமிழ் ; இந்திய தமிழாகவே இருந்தது. அந்த நடையை ; எம்மவரோடு இணைந்த பின் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. எம்மவர் என்னை ஒரு இந்தியனாக பார்க்கத் தொடங்கிளார்கள். இன்றும் என் தமிழில் சில பிரச்சனை தெரியலாம். நீங்கள் என்னை அறிவீர்கள். எனவே நான் எப்படி பேசுகிறேன் என்பது உங்கள் முடிவு.

இதுபோல அந்த German பெண் ; தனது வீட்டில் பரிச்சயமான யாழ்பாண தமிழை பேசுகிறார்.
அடுத்து அவர் இங்கிலாந்தில் வாழ்வதாக நினைக்கிறேன். எனவே அக் குழந்தைகளுக்கு German மொழி பாவனையில் இல்லை. அந்தக் குழந்தைகள் Germanயில் வாழ்ந்திருந்தால் German மொழியை பேசியிருக்கும்.

இவை ஒன்றும் குற்றமல்ல. தமிழனாக இருந்தால் தமிழ் பேசித்தான் ஆக வேண்டும் என நாம் குற்றப் பத்திரிகை ஒன்றை முன் வைப்பது சரியாக இல்லை என நினைக்கிறேன்.

நாம் விடுமுறை காலங்களில் ஊருக்கு போய் வந்து கொண்டிருந்தால் அந்தத் தேவை குழந்தைகளுக்கு வரும். ஐரோப்பா வாழ் துருக்கி - யுகோசுலோவியா - இத்தாலி - போர்த்துகல் ஆகியோரது குழந்தைகள் அவர்களது மொழியை பேசுவது ஏன் தெரியுமா? அவர்கள் தமது விடுமுறைக்கு அவர்களது நாட்டுக்கு போய் வருவதேயாகும். அதனால் அந்த மொழியின் தேவை அப்டேட் ஆகிறது.

Ajeevan Veerakrthi said...

சந்திரவதனா நன்றி!

அவர் தமிழ் கற்பிப்பதாக சொல்வதால் அவருக்கு தமிழ் எழுத - படிக்கத் தெரியும் என்றே கருதுகிறேன்.

தேவையில்லாத எதற்கும் இங்கு வாழும் குழந்தைகள் காலத்தை விரயம் செய்ய மாட்டார்கள்.

உதாரணத்துக்கு நான் சிங்கள மொழியில் கல்வி கற்றவன். இலங்கையில் அப்பா - அம்மாவோடு தமிழில் பேசினேன். எழுத - படிக்கத் தெரியாது. அப்பா சிங்களத்தை வெறுத்ததனால் ; அவரால் (தபால் அதிபர்) பதவி உயர்வுகள் கிடைக்கவில்லை. அப்பா கடைசி வரை சிங்களம் படிக்கவே இல்லை. அவர் அப்படி பிடிவாதமாக இருந்தார். அதனால் அதிக இட மாற்றங்களினால் குடும்பம் அல்லல்பட்டது. சிங்களப் பகுதிகளுக்கு மாற்றலானதனால் எனக்கு சிங்கள பாடசாலைகளில் படிக்க வேண்டி வந்தது. அதை அம்மா ஊக்குவித்தார். அப்பா மாதிரி உனக்கு வர வேண்டாம் என்று..... இப்போதும் தமிழை விட சிங்களமே நன்றாக வரும்.

தமிழ் உத்தியோத்தர்களுக்கு சிங்களம் படிப்பிக்கும் வாய்ப்பு எனக்கு சிறு வயதிலேயே இருந்தது. எனவே அவர்களது பிரச்சனை எனக்குத் தெரியும் . தமிழில் 'க' என்ற ஒரு எழுத்து மட்டுமே உள்ளது . ஆனால் சிங்களத்தில் ග ga , ක ka , හ ha என்ற எழுத்துகளை தமிழர்கள் 'க' என்றே உச்சரிப்பார்கள். அதை மாற்றுவது கடினம். சிங்களம் பேசும் தமிழரை உடனடியாக அடையாளம் காண முடியும். இது போன்ற ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு.
கக வெட்டுணா எனச் சொல்லும் போது ஏற்படும் பிரச்சனை ஒன்றை பாருங்கள்.

gaக வெட்டுணா - மரம் விழுந்தது.
kaக வெட்டுணா - மஞ்சல் விழுந்தது.

ග ga , ක ka , හ ha இது தமிழருக்கு வரவே வராது. இதை நான் படிப்பிக்கும் போது கண்டுள்ளேன். ஆனால் சிங்களம் தெரியாதோருக்கு அவர் நல்லா சிங்களம் பேசுவார் என்றே நினைப்பார்கள். அதை நாம் உணர்வதில்லை. ஏற்றுக் கொள்வதுமில்லை.

நாங்கள் ஊரில் பளியில் ஒரு பாடமாக ஆங்கிலம் படித்துள்ளோம். ஓலெவலில் க.பொ.த (சா.த) பரீட்சையில் அதி விசேட சித்தியடைந்துள்ளோம். ஆனால் வாசிப்போம் . சிலவேளை ஒரு கடிதம் எழுதுவோம். பேச மாட்டோம். அல்லது ஒரு மிகக் குறைந்த வார்த்தைகளை மட்டும் பாவிக்கும் தன்மையை பெற்றிருப்போம். இதை சொல்லும் போது நம்மால் நமது நிலையை உணர முடியும்.
அது போல சில தமிழர்கள் சிங்களம் பேசலாம் - வாசிக்கலாம் - எழுதலாம். ஆனால் அவர்களது பேச்சு நடை (ஒயில்) அவர்களை காட்டிக் கொடுக்கும். இதே பிரச்சனையை German பேசும் எம்மவரிடமும் காண முடிகிறது. மொழியை பேசுவதென்பது ஒன்று. அவர்களைப் போலவே பேசுவதென்பது ஒன்று. அதனால்தான் நமது குழந்தைகள் நமது German பேச்சை ஏளனம் செய்கிறார்கள். இது அநேக வீடுகளில் காணக் கிடைப்பது. ஆனால் German மக்கள் நமது German மொழியை புரிந்து கொள்கிறார்கள். அதாவது வேற்று நாட்டவன் ஒருவனது German என அவர்களால் அங்கீகரிக்க முடிகிறது.

நான் சிங்கப்பூருக்கு போன போது நான் பேசிய கொச்சைத் தமிழை ; அவர்கள் சிங்களத் தமிழ் என்று சொல்லிச் சிரித்தார்கள். அங்கு தமிழ் கற்கும் தேவை ஏற்பட்டது. சிங்கப்பூரில்தான் நான் தமிழை கற்றேன். அங்கு தேவைப்படாமல் இருந்திருந்தால் நான் தமிழை கற்றே இருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அங்கு கற்ற எனது தமிழ் ; இந்திய தமிழாகவே இருந்தது. அந்த நடையை ; எம்மவரோடு இணைந்த பின் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. எம்மவர் என்னை ஒரு இந்தியனாக பார்க்கத் தொடங்கிளார்கள். இன்றும் என் தமிழில் சில பிரச்சனை தெரியலாம். நீங்கள் என்னை அறிவீர்கள். எனவே நான் எப்படி பேசுகிறேன் என்பது உங்கள் முடிவு.

இதுபோல அந்த German பெண் ; தனது வீட்டில் பரிச்சயமான யாழ்பாண தமிழை பேசுகிறார்.
அடுத்து அவர் இங்கிலாந்தில் வாழ்வதாக நினைக்கிறேன். எனவே அக் குழந்தைகளுக்கு German மொழி பாவனையில் இல்லை. அந்தக் குழந்தைகள் Germanயில் வாழ்ந்திருந்தால் German மொழியை பேசியிருக்கும்.

இவை ஒன்றும் குற்றமல்ல. தமிழனாக இருந்தால் தமிழ் பேசித்தான் ஆக வேண்டும் என நாம் குற்றப் பத்திரிகை ஒன்றை முன் வைப்பது சரியாக இல்லை என நினைக்கிறேன்.

நாம் விடுமுறை காலங்களில் ஊருக்கு போய் வந்து கொண்டிருந்தால் அந்தத் தேவை குழந்தைகளுக்கு வரும். ஐரோப்பா வாழ் துருக்கி - யுகோசுலோவியா - இத்தாலி - போர்த்துகல் ஆகியோரது குழந்தைகள் அவர்களது மொழியை பேசுவது ஏன் தெரியுமா? அவர்கள் தமது விடுமுறைக்கு அவர்களது நாட்டுக்கு போய் வருவதேயாகும். அதனால் அந்த மொழியின் தேவை அப்டேட் ஆகிறது.

Rajhan Murugavel said...

Muhaari Ragam //Rajhan Murugavel அங்கே கொழும்பில் சோத்துக் கடைக்காரனும், வாழைப்பழக் கடைக்காரனும்தான் சிங்களம் பேசினார்கள்.// உங்களை அறிவாளியாக கணித்திருந்தேன். கொஞ்சமாவது நாட்டு நடப்பாவது தெரியவேண்டாம் - கொழும்பில் அரசஉத்தியோகத்தில் இருந்த தமிழர் நல்லாச் சிங்களம் கதைத்தார்கள். சிங்களத்தில் எழுதினார்கள். @ஓம்.. அரச உத்தியோகத்தில் இருப்பவனும் பதவி உயர்விற்காக சிங்களத்தைக் கற்றான். ஆக.. அங்கும் வருமானம்தான் அதற்குக் காரணம். அரசியல்வாதித் தமிழனும் அன்று வாகன ஸ்ரீ எழுத்தை வடக்கில் தமிழிலும், ஏனைய பகுதிகளில் சிங்களத்திலும் எழுதி படங்காட்டினான். அதன் காரணமும் வருமானம்தான்.

Rajhan Murugavel said...

சந்திரவதனா.. நான் நக்கலுக்கு எழுதவில்லை. அதுதான் உண்மை. அடுத்த வாழைப்பழக் கடையை ஏன் விட்டுவிட்டீர்கள்.. 80களில் கொழும்பில் உள்ள 99 வீத வாழைப் பழக் கடைகளும் எனது ஊரான உறவினரான சுழிபுரத்தான்கள்தான்.. சுழிபுரத்தில் சிங்கள மொழியறிவு உள்ள விகிதாசாரத்தில் அவங்கள்தான் அதிகம்.. இதுதான் அப்போதைய உண்மை.

Rajhan Murugavel said...

அந்த ஜேர்மனிய பெண் தமிழரை திருமணம் செய்தது மொழி அறிமுகத்தின் பின் என நினைக்கிறேன். காரணம் அவர் Germany, Bochum என்னும் இடத்தில் வசிக்கும்பொழுதே 12 வயதில் இருந்து அங்கு வசித்த தமிழர்களுடன் பழகி, அவர்கள் மூலம் தமிழை அறிய விருப்புற்றிருக்கிறார்.

Sivalingam Deiva said...

Arun S Ravi said : முற்றுலிலும் உண்மை ...... இந்த வீடியோவை பார்த்துவிட்டு நம்மை நாமே தாழ்தி அடிமுட்டாள்தனமா பெரிவாரியான கருத்துகள் பரிமாறப்படிருந்தது.

U r correct anna

Anthony Fernando said...

பிறமொழிகளில் சிறிதளவேனும் ஆழ்ந்த அறிவோ ஆற்றலோ அற்ற சில தமிழ் மட்டுமறிந்த தமிழ்காக்கும் அட்டைக்காவலர்கள் ஆங்காங்கே தமிழ் வளர்ப்பதாகத் தங்களை வளர்த்து மீழ்வதுபற்றி நெடுங்கால எழுத்தனுபவமிக்க சகோதரி ச்ந்திரவதனா அவர்களுக்கு மிக நன்கு தெரிந்திருக்கும். உண்மை நிலையை உணராமலும் உணர மறுத்தும்கூட சில மேதைகள் தம் மனத்தாழ்வுக்கு ஏற்ற ஆதாரமாக இத்தகைய விதங்களில் நடந்து கொள்வதும் தெரிந்திருக்கும். முன்னேற முடியாதவன் முன்னுள்ளவனை த் தடுக்கிவிட முனைவது சரியாகப்படவில்லை. மொழியைப் படிக்கவும் பழக்கப்படுத்திக் கொள்ளவும் அவரவர்க்குள்ள கடமைகளை அவரவரே சரியாக உணர்வார்கள் அதை ஊக்குவிப்பதற்கு மட்டமடிப்பது மருந்தாகாது என்பதை உங்கள் மடல் வெளிப்படுத்தியிருப்பது நல்ல விடயம ஆகும். எழிலன்

Chandravathanaa said...

உங்கள் கருத்துகளுக்கு மிகவும் நன்றி அருண், சிவலிங்கம், Anthony!

Chandravathanaa said...

Ajeevan Veerakrthi
நீங்கள் குறிப்பிடும் உச்சரிப்புப் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட வயதின் பின் ஒரு மொழியைக் கற்க முயல்பவர்களுக்கே இருக்கும். சிறுவயதிலேயேயே வேற்றுமொழி ஒன்றைக் கற்கத் தொடங்குவோர்க்கு அப்பிரச்சனை இல்லை. அப்படி இருந்தால் அது அவர்களுக்கு உள்ள பேசுவதிலான வேறேதாவது குறைபாடுகள் காரணமாகவே இருக்கும். வெளிநாடுகளில் பாடசாலைக்குச் சென்ற ஒரு குழந்தை அந்நாட்டு மொழியைப் பேசுவதற்கும், அந்நாட்டு மொழியை நன்கு தெரிந்த அக்குழந்தையின் பெற்றோர் பேசுவதற்கும் இடையில் கண்டிப்பாக மிகுந்த வேறுபாடு இருக்கும்.
எனது அப்பாவின் சிங்களப் பேச்சுக்கும், பத்துவயதிலேயே சிங்களத்தைக் கற்றுக் கொண்ட எனது அண்ணனின் சிங்களப் பேச்சுக்கும் இடையில் கண்டிப்பாக வித்தியாசம் இருந்திருக்கும். எனது அண்ணன் கதைக்கும் போது அவரைச் சிங்களவன் என்றே நினைத்தவர்களும் உண்டு. அதே போல எமது குழந்தைகள் வேற்றுமொழியைப் பேசும் போது அவர்களிடம் எந்த வித உச்சரிப்புப் பிரச்சனையும் இருப்பதில்லை.
நீங்கள் குறிப்பிட்ட
//gaக வெட்டுணா - மரம் விழுந்தது.
kaக வெட்டுணா - மஞ்சல் விழுந்தது.//

போல ஜேர்மனிய மொழியிலும் இருக்கிறது.

Ga
Ha
Ka

இவைகளுக்கிடையேயான உச்சரிப்பு வேறுபாடுகள் எமது தமிழ் லகர, ளகர, ழகரம் போன்றவை. இதையெல்லாம் எங்கள் தமிழ்க்குழந்தைகள் சரியாகத்தான் பேசுகிறார்கள். ஏன் பெரியவர்களில் கூடப் பலர் சரியாக உச்சரிக்கிறார்கள். இந்த Gaவையும், ha வையும் தமிழில் சரியாக எழுதவே முடியாது. இன்னும் பல சிக்கல்கள் ஜேர்மனிய மொழிக்கு உண்டு. ஆனாலும் ஜேர்மனியில் படித்த தமிழ் பிள்ளைகள் பேசுவதை மட்டும் கேட்போர் அவர்களை ஜேர்மனியர் என்றேதான் நினைப்பார்கள்.
மற்றும் சரளமாகப் பேசுவது என்பதன் அர்த்தம் உங்களுக்குச் சரியாகப் புரியவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு மொழியை ஒருவர் தங்குதடையின்றிப் பேசமுடிந்தால், அதாவது தான் நினைப்பதை, மற்றவர்கள் கேட்பதற்கான பதிலை, உரையாடலை.. தடங்கிலின்றி, இலகணப்பிழையின்றி.. சொல்லவோ, தொடரவோ முடிந்தால் அதுதான் சரளமாகப் பேசுதல்.
நீங்கள் குறிப்பிடும் உச்சரிப்புப் பிரச்சனை அது வேறு. இலங்கையிலேயே யாழ்ப்பாணத்தமிழ், மட்டக்களப்புத்தமிழ், கொழும்புத்தமிழ்... என்று எத்தனையோ விதமான பாணிகளும், சொற்களும், உச்சரிப்புகளும் உள்ளன. இங்கு ஜேர்மனியில் கூட நான் வாழும் இடத்தில் பேசப்படுவது Schwäbisch. இது போலப் பலவிதம் உள்ளன. இவற்றில் Bayern டொச் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. அதை விட Hochdeutsch . இதைத்தான் இங்குள்ள பாடசாலை ஆசியர்கள் பேசுவார்கள். எழுத்தும் Hochdeutsch இல்தான் இருக்க வேண்டும். அதனால் Schwäbisch பேசும் ஒரு ஜேர்மனியரைப் பார்த்து அவரால் டொச்சை சரளமாகப் பேசத்தெரியாது என்று சொல்ல முடியாது.

Chandravathanaa said...

Ajeevan Veerakrthi //இதுபோல அந்த German பெண் ; தனது வீட்டில் பரிச்சயமான யாழ்பாண தமிழை பேசுகிறார். அடுத்து அவர் இங்கிலாந்தில் வாழ்வதாக நினைக்கிறேன். எனவே அக் குழந்தைகளுக்கு German மொழி பாவனையில் இல்லை. அந்தக் குழந்தைகள் Germanயில் வாழ்ந்திருந்தால் German மொழியை பேசியிருக்கும்.
இவை ஒன்றும் குற்றமல்ல.//


அந்தப் பெண்ணில் யாரும் குறை பிடிக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு ஒரு மொழியைக் கிரகிக்கும் தன்மையும், அதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்திருக்கிறது. ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் கெட்டித்தனமாக இருப்பார்கள். அப்பெண் மொழியைக் கிரகித்துக் கொள்வதில் கெட்டிக்காரி.

பிரச்சனை அதுவல்ல. அந்தப் பெண்ணைக் காட்டி ` புலம்பெயர்ந்த தமிழர்களெல்லாம் நாக்கைப்பிடுங்கிக் கொண்டு சாகலாம்´ என்பது போல எழுதியும், சொல்லியும் கொண்டிருக்கிறார்களே அதுதான் பிரச்சனை.

Sinnakuddy Sinna said...

இதில் இந்த பெண்மணி பேசுவது பிரத்தியேகமாகவும் ஆச்சரியமாகவும் இருப்பது என்னவென்றால் ஒரு மொழியின் வட்டார வழக்கை தனது தாய் மொழியின் தாக்கமில்லாமால் சிறப்பாக்காக்கியது... சிங்கப்பூர் சீனர் மலேசியர்கள் பிற மொழி தமிழ் ஆராய்ச்சியாளர்கள் பேசும் யூரூயுப்க்களை பார்த்தால் தெரியும் ...அவர்களின் மொழித்தாக்கம் அல்லது இலக்கண தாக்கம் காணலாம்....யாழ்ப்பாணியள் மாதிரி பேசுற் ஒரு அடையாளமாக வானொலி நடிகர் அப்புக்குட்டி ராஜகோபால் சொல்லுவினம் ...(அவர் கொஞ்சம் மிகைபடுத்தி இருந்தாலும்) இதை பார்த்தால் வெட்கப்படுவர் . இவ்வளவு அழகாக பேசுறா என்று . ஆனால் பட்ட கமல் கூட தமிழ் நாட்டின் பல வட்டார வழக்கு பேசி கலக்கியவர்...ஃ தெனாலி திரைபடத்தில் யாழ்ப்பாணியளின்ரை தமிழை கதைச்சு சொதப்பினது அறிந்த்தே.. ஒரு மொழியின் வட்டரா வழக்கை தனது மொழி கலப்பில்லாமால் கதைப்பது இலகுவானது அல்ல ...அந்த வகையிலை பாரட்டுக்குரியது. அந்த வட்டாரா வழக்கு பிரதேசத்தில் இருப்போரே அந்த வட்டார வழக்கில் பேசுவதில்லை . நாகரிகம் கருதி வட்டார மொழியின் சுருதியே இப்ப மாறிவிட்டது பெரும் பாலனவர்ளிடம்

Chandravathanaa said...

சின்னக்குட்டி உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.

அந்தப் பெண் பிரத்தியேகமாகத்தான் தெரிகிறார். ஆச்சரியத்தையும் தந்தார்.

இப்படித் தமிழில் பேசக்கூடிய ஒரு ஜேர்மனியப் பெண்ணை நான் இங்கு ஸ்ருட்கார்ட்டில் ஒரு விழாவில் ஒரு தடவை சந்தித்தேன். நான் யாரையோ தேடியபோது அவர் “உதுக்குளாலை போறான் பாருங்கோ „ என்று மேடையின் பின்பக்கத்தைக் காட்டினார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அவருடன் மேலும் கதைத்த போது அவர் ஒரு இலங்கைத் தமிழனை மணம் முடிந்திருப்பது தெரியவந்து. இந்தப் பெண்ணளவுக்கு அவர் தொடர்ந்து தமிழில்பேசுவாரா என்பது எனக்குத் தெரியாது. நான் அவருடன் சிறிது நேரம்தான் உரையாடினேன்.

மற்றும் எமது இந்த உரையாடல் அந்தப் பெண்ணைத் தாழ்த்திக் விடக் கூடாது என்ற சிறுவருத்தம் எனக்குண்டு. அவர் மீது எந்தத் தப்பும் இல்லை. அவரிடம் ஒரு வேற்றுமொழியின் வட்டாரவழக்கை கிரகித்து, பேசும் கெட்டித்தனம் உண்டு. அதை நான்பாராட்டுகிறேன்.
நான் இதை இங்கு எழுத வேண்டி வந்ததற்கு காரணம் அந்தப் பெண்ணை வைத்து எம்மை நாமே கேலி செய்து கொள்ளும் தன்மை கொண்ட பதிவுகளே!

// Giritharan Navaratnam பல்வேறு நாடுகளுக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாட்டு மொழிகளில் மிகுந்த பரிச்சயமும், புலமையும் பெற்று இலக்கியப் படைப்புகளையெல்லாம் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் இவ்விதம் பெருமைப்பட்டிருப்பதாக நினைவில்லை. ஆனால் ஒரு ஜேர்மன் பெண் தமிழ் பேசியதும் மிகுந்த பெருமைப்பட்டுக்கொள்கின்றோம். இதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் எப்பொழுதுமே பழம் பெருமை பேசுவதில் மகிழ்ச்சி அடைபவர்கள். அந்தப் பெண் தமிழைப் பேசுவது அவரது சொந்த விருப்பம். அதில் மகிழ்ச்சி அடைவதற்கோ, பெருமைப்படுவதற்கோ எந்தவித மேலதிகக் காரணங்களுமில்லை. ஆனால், மேனாட்டுப் பேராசிரியர்கள் சிலர் தமிழை, தமிழ் இலக்கியங்களையெல்லாம் கற்று ஆய்வுகள் செய்கின்றார்களே! நூல்களை வெளியிடுகின்றார்களே! அதற்காகப் பெருமைப்படலாம் அவர்களது பன்மொழித்திறனுக்காக; தமிழைப் படித்ததற்காக அல்ல. இவ்விதமான பன்மொழிப் புலமைக்கு ஈழத்துச் சுவாமி ஞானப்பிரகாசரைக் குறிப்பிடலாம். அவருக்குப் பல மொழிகளில் பரிச்சயமும், புலமையுமுண்டு.//

Chandravathanaa said...

கமல் யாழ்ப்பாணத் தமிழைப் பேச நினைத்திருந்தால் யாழ்ப்பாணத்தில் சில மாதங்களாவது இருந்து அம்மக்களுடன் ஊடாடி இருக்க வேண்டும். அல்லது வெளிநாடொன்றிலாவது பல யாழ்ப்பாணத்தமிழர்களுடன் கலந்து இருந்து கதைத்துப் பழகியிருக்க வேண்டும்.

தியாகராசா பார்த்திபராசன் said...

ம்....................................

Chandravathanaa said...

Ajeevan Veerakrthi ஏறக்குறைய பத்துவருடங்களின் முன் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தது, நாம் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டது, பேசியது.. எல்லாமே நன்கு ஞாபகத்தில் உள்ளன. ஆனால் உங்கள் பேச்சுத்தமிழில் வித்தியாசம் இருந்தது பற்றிய ஞாபகம் துப்பரவாக இல்லை. அந்த நேரத்தில் வித்தியாசம் தெரிந்திருந்தால் கூட அதை நான் பெரியவிடயமாகக் கருதியிருக்க மாட்டேன். கொழும்புத் தமிழோ அன்றி மட்டக்களப்புத் தமிழோ.. ஏதோ ஒன்று என்று நினைத்திருப்பேன்.

Sinnakuddy Sinna said...

சந்திரவதனா..உங்கள் கருத்தை ஏற்று கொள்ளுகிறேன் ..கமல் ..கே,எஸ் பாலசந்திரன் கொடுத்த அந்த ஆடியோ கசட்டை மட்டுமே நம்பியிருந்த்து .மற்றும்.இந்த விடயத்தில் தன்னை பற்றிய அதீத தன்னம்பிக்கையும் காரணமாயிருக்கலாம்

Ajeevan Veerakrthi said...

உலகெங்கும் வாழும் மனிதர்கள் தாம் வாழும் சமூகத்தோடு இணைந்து வாழும் போது அந்த பேச்சு வழக்கு இயல்பாக வந்து விடும். ஏனோ தானோ என வாழ்வோருக்கு வரவே வராது. புலம் பெயர்ந்து வாழும் பெற்றோரது குழந்தைகளிடம் இதைக் காணலாம். இந்தியாவில் வாழும் இலங்கையரது தமிழ் குழந்தைகளுக்கு இந்தியாவில் வாழும் பிரதேச தமிழ்தான் வருகிறது. புலம்பெயர் தேசங்களில் வாழும் பல இலங்கை தமிழரது குழந்தைகள் சினிமா மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து பேசுவதால் தமிழக தமிழை பேசுவதை பரவலாக அவதானிக்கலாம். புலம் பெயர் மட்டுமல்ல ஈழத்து குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் தமிழக தமிழை பாவிக்கிறார்கள். அல்லது தமிழக தமிழர்களை குரல் கொடுக்க வைக்கிறார்கள். தமிழகத் தமிழர்கள் மலையாளிகள் தமிழ் பேசினால் இலங்கை தமிழ் என்ற மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கு என்ன நடந்தது என சின்னா சொல்லியுள்ளார். ஆனால் இலங்கையில் அதிக வரவேற்பைப் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற தொலைக் காட்சி நாடகத்தில் இலங்கை வாழ் பல மக்களது தரப்பட்ட பேச்சு வழக்குகள் பலரையும் கவர்ந்தது. அதுவே பின்னர் கோமாளிகள் எனும் பெயரில் திரைப்படமானது. 1980 - 1985 களில் இலங்கை தமிழரை இந்தியர்கள் மலையாளிகளாக நினைக்க எம்மவர் பேச்சு காரணமாக இருந்தது.

Kakiyan Thambasiddian said...

புருசனுக்கு ஜேர்மனிய மொழி பேச வராது என்பதற்காக அந்தப் பெண்மணி தானாவது தமிழை பேசப் பழகிக் கொள்வோம் என்று ஒருவேளை முடிவெடுத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் பாராட்டப்பட வேண்டிய சங்கதிதான்.
ஆனால் பிரச்சினை தொலைக்காட்சி அறிவிப்பாளரிடம்தான். அவருக்கு ஒரு நிகழ்ச்சியை எப்படி உருவாக்குவது, எப்படி பேட்டி எடுப்பது, அதை எந்த வடிவத்தில் மக்களிடம் கொண்டு செல்வது என்பதில் போதிய அறிவும்,அனுபவமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கோட்டும்,சூட்டும் மாட்டினால் மட்டும் போதாது....

Chandravathanaa said...

Sinnakuddy Sinna உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆனால் தெனாலி யைப் பார்த்து விட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

Chandravathanaa said...

Ajeevan Veerakrthi உங்கள் கருத்துகளுக்கு நன்றி. ஒரு சமூகத்துடன் சேர்ந்து வாழும் போது அவர்களது பேச்சு வழக்கு எம்மையறியாமலே எமக்கு இயல்பாக வந்து விடும் என்ற கருத்துடன் எனக்கும் உடன்பாடுண்டு. அதுவும் சிறுவயது முதலே ஒரு சமூகத்துடன் இணைந்து வாழும் போது அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.

Ajeevan Veerakrthi said...

இலங்கை வானோலி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் தெனாலி தமிழ் போன்ற தமிழில்தான் இலங்கை தமிழர் நிகழ்ச்சிகளை கொண்டு வந்தனர். அண்ணை றைட் அவ் வகையைச் சேர்ந்தது.

Chandravathanaa said...

Ajeevan Veerakrthi தெனாலி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்த தந்த படங்களிலொன்று.

ஏனோ தெரியவில்லை. எம்மவர்கள் இப்படி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் ஏன் எழுதும் போது கூட இந்தியத்தமிழைப் பாவிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

Chandravathanaa said...

Kakiyan Thambasiddian நீங்கள் அந்த வீடியோவைச் சரியாகப் பார்க்கவில்லைப் போலுள்ளது. அந்தப் பெண் தனது 12வது வயதிலேயே தமிழைக் கற்கத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார்.

Ajeevan Veerakrthi said...

தமிழில் பேசுவதில் மகிழ வேண்டுமே தவிர இப்படித்தான் பேச வேண்டும் என சொல்வது தவறு என்றே நினைக்கத் தோன்றுகிறது. பொதுவாக உலகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால் அதை ஆங்கிலேயர் நகைப்பதில்லை. உலக மக்கள் பேசும் ஆங்கிலத்தில் அவரவர் மொழியின் தாக்கம் ( சாயல்) அங்கே இருக்கும். சிலர் மட்டும் ஆங்கிலேயர் போல பேசுவர். இதை பாருஙகள் அல்லது ரசியுங்கள் :

Subathiran Thambi said...

பொதுவாக உலகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால் அதை ஆங்கிலேயர் நகைப்பதில்லை

Kakiyan Thambasiddian said...

சந்திரா அக்கா, நீங்க கொண்டு வந்த விசயம் திசைமாறி நிக்குது. எஸ்கேப்..

Muhaari Ragam said...

திசைமாற்றுவதே சிலரது வேலை. வேண்டுமென்று மாத்துவோர் ஒரு பக்கம். சிந்திக்காமலே எதையாவது எழுதுவோர் இன்னொரு பக்கம்.

Anusha Thiyagarajah said...

Chandravathanaa Selvakumaran said
யாருக்கும் பெருமைப்படத் தோன்றவில்லையா?

எங்களை நாங்களே தூற்றிக் கொள்வதில் எமக்கு நிகர் நாமே என்ற நிலையில்தான் தமிழர் நாம் இன்னும் இருக்கிறோம். ஒரு ஜேர்மனியப் பெ...See More


correct, well said

Ratnasingham Annesley said...

நாங்கள் 22 வயது வரை இலங்கையில் ஒழுங்கான படிப்பு இல்லாமல் ஜேர்மனி வந்து ஜெர்மன் மொழியை படித்து பின்பு ஒரு துறையில் டிப்ளோமா படித்து முடித்தோம்,எமது பிள்ளைகள் இன்று சட்ட வல்லுனர்களாக ஜெர்மனியில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதில் தமிழ் கதைக்கும் ஜேர்மனிய பெண் என்ன படித்தவர்,இவரை எனக்கு பலகாலமாக தெரியும்.
அவருடைய தனிப்பட்ட விமர்சனம் எனக்கு தேவை இல்லை - நான் சொல்ல வருவது அவரவர் அந்ததந்த நாட்டு மொழியை சரியாக கற்க்க வேண்டும்.இல்லாவிட்டால் கல்வியில் நல்ல நிலைமைக்கு வரமுடியாது.
என்னுடைய பிள்ளைகள் ஜெர்மன் மொழிதேர்வில் 1 + எடுத்தார்கள். இது எம்மை புகழவில்லை இப்படி பல தமிழ் பிள்ளைகள் உள்ளனர்.
இதை பற்றி கதைத்தால் துரோகிகள் என்பார்கள். புத்தி உள்ளவன் சிந்திக்க கடவான்.
இலங்கையில் சிங்களம் படிக்கச் வேண்டாம் என்று சாதாரண மக்களை கூடிக்கொண்டு ஊர்வலம் போன தமிழ் தலைவர்கள் தமது பிள்ளைகளை சிங்களம் படிக்கவைத்து அதனுடன் கொழும்பில் ஆங்கிலமும் படிக்கவைத்து வெளிநாட்டு தூதுவர்களாக வேலைக்கு அனுப்பிய தமிழ் தலைவர்களையும் எனக்கு தெரியும்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite