எவ்வளவு சுலபமாக நாம் சிலதை மறந்து விடுகிறோம். இணையமோ, முகநூலோ
இல்லையென்றால் இன்றையநாள் தமிழினியின் நினைவுநாள் என்பதை நான்
நினைத்திருக்க மாட்டேன்.
நாங்கள் சாதாரணமனிதர்கள்தான். எங்களால்
மட்டுமே ஒருவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும், நினைத்த
மாத்திரத்தில் தூக்கியெறிந்து விடவும் முடியும்.
தமிழினி என்ற ஆளுமையை நான் அண்ணாந்து பார்த்தது ஒரு காலம். சிறையிலிருந்து
வெளியில் வந்த பின் அவளது புகைப்படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து
அவள் கண்கள் என்ன சொல்ல விளைகின்றன என விடை தேடியது இன்னொரு காலம்.
முகநூலில் அவளது ஆக்கங்களைப் படித்து, விமர்ச்சித்து நட்பாக இருந்தது
சொற்பகாலம். மிகமிகச் சொற்பகாலம். அவள் இறந்த பின்தான் அவளைப் பற்றியிருந்த நோய் பற்றி அறிந்து அதிர்ந்தேன். `ஒரு கூர்வாளின் நிழலில்´ வாசிக்கத் தொடங்கி, சில பக்கங்களுடன் எனது கண்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக (https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10153911735227869) நின்று போயிருந்தது. அதனால் அது பற்றிய சர்ச்சைகள் எதற்கும் நான் இதுவரை பதிலளிக்கவில்லை.
இன்னும் தமிழினி பற்றி பல்வேறு கசப்பான கருத்துக்கள். அதன் மீதான
உண்மைகள், பொய்கள்... போன்றவற்றிலான ஆராய்ச்சிகளும், கேள்விகளும் மனதை ஒரு
புறம் குடைந்தாலும், அவள் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் எனக்குள்
தோன்றும் வேதனை இன்றும் என்னை ஆக்கிரமித்திருக்கிறது.
மீண்டும் `ஒரு கூர்வாளின் நிழலை´க் கையில் எடுத்துள்ளேன். வாசித்த பின்னர்தான் அது பற்றிப் பேசமுடியும்.
உருளைக்கிழங்கு
களவெடுத்ததற்காக இரு மனிதர்களை பெற்றோலோ அன்றி வேறேதோ ஊற்றி உயிரோடு
கொளுத்தினார்கள் சிலர். அதை வேடிக்கையாகவும், வினையாகவும் பார்த்துக் கொண்டு
நின்றார்கள் இன்னும் சிலர். பார்த்துக் கொண்டு நின்ற அத்தனை பேரும் ஒன்றிணைந்து
தடுத்திருந்தால் அந்த உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
உருளைக்கிழங்கைத் திருடிய
திருடர்கள்தானே! எப்படிக் கொடூரமாய்ச் செத்தால் எமக்கென்ன என்பது போலவோ அன்றி
நல்லாகச் சாகட்டுமே என்பது போலவோ கல்லுளிமங்கர்களாக
இருந்து விட்டார்கள்.
திருடர்கள் ஏன்
உருவாகிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை. அதுவும் வயிற்றுக்காகத்
திருடுபவர்கள்...?
ஒரு மனிதனின் அடிப்படைத்
தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அரசும், இரக்கமற்ற சமூகமும் இருக்கும் வரை
திருடர்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். திருடனைத் திருந்தவே விடாத சட்டம்
இருக்கும் வரை திருடர்கள் பெருகிக் கொண்டே இருப்பார்கள்.
சின்ன வயதில் சிந்தாமணி, கல்கண்டு, கல்கி, குமுதம், ஆனந்தவிகடன்…
போன்றவைகளில் தொடர்களை வாசித்து விட்டு அடுத்த தொடருக்காக பெருந்தவிப்புடன்
ஒரு கிழமை காத்திருப்போம். அந்த ஒரு கிழமைக்குள் அண்ணன், நான், தம்பி
பார்த்திபன் மூவரும் அத்தொடர்களைப் பற்றி நிறையவே அலசி ஆராய்வோம். அடுத்து
என்ன வரும் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு கதை புனைந்து கதைத்துக் கொள்வோம். சில
கதைகள் பற்றி அம்மாவுடனும் கதைப்போம். அம்மாவும் எல்லாவற்றையும் கரைத்துக்
குடித்திருப்பா.
இப்போது சோலிகள் பல. அப்போதிருந்த அந்தளவு எதிர்பார்ப்பும், புத்தகங்கள்
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், யார் முதலில் வாசிப்பது என்பதிலான பிக்கல்,
பிடுங்கல்களும் இல்லை. வாசித்த பலதையே மறந்து போகுமளவுக்கு வயதும் ஏறிக்
கொண்டிருக்கிறது.
இருந்தாலும், அவ்வப்போது உமையாழ் எதிர்பார்த்துக்
காத்திருந்த நபர் வந்தாரா? றியாத் விமானநிலையத்திலிருந்து உமையாளை
அழைத்துச் சென்றாரா? என்ற கேள்விகள் மனதில் எழுத்தான் செய்கிறது.
ஒரு நியதி போல நாம் ஒரு சிலரை அடிக்கடி எதேச்சையாகச் சந்தித்துக் கொள்வோம். அப்படித்தான் இவளையும்.
அனேகமான ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் நானும், கணவருமாக சுப்பர்மார்க்கெட்டுக்குப் போவோம். அங்கிருக்கும் 12 கவுண்டர்களில் ஏதாவதொன்றில் அவள் இருப்பாள். அதில் இல்லாத பொழுதுகளில் சுப்பர்மார்க்கெட் தகவல்நடுவத்திலோ, பேக்கரியிலோ, இன்னும் எங்காவது ஓரிடத்திலோ தென்படுவாள். ஒரு சிரிப்புடனோ, கையசைப்புடனோ அல்லது ஒரு ´ஹலோ` வுடனோ கடந்து கொள்வோம்.
இன்று அவள் நாங்கள் போன கவுண்டரிலேயே இருந்தாள். முகத்துக்கு நன்றாக அரிதாரம் பூசி, புருவங்களை வில்லாக வளைத்துக் கீறி, உதட்டுக்குச் செக்கச்செவேலெனச் சாயம் பூசி... பளிச்சென்று சிரித்தாள். கார்ட்டை இயந்திரத்தினுள் போட்டு வேண்டிய பொருட்களுக்கான கணக்கைச் சரிசெய்த கையோடு, கார்ட்டை இழுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு பின் நிற்கும் வரிசையைக் கூடப் பொருட்படுத்தாது நாலு வார்த்தை பேசிச் சிரித்தாள்.
இவளைப் பற்றி இற்றைக்குப் பத்து வருடங்களின் முன் நான் எழுதிய ஒரு பதிவு
வாயில் ஏன் புகை? உயிரோடு உனக்கென்ன பகை?
நேற்றைய பயணம் இலட்சியப் பாதையில் இன்றைய சயனம் அலட்சியப் போக்கிலா
வாயில் கக்கும் நெருப்பு சூழலை மட்டுமா கெடுக்கும் ஈரலையும் பொசுக்கும் ஈன்றவர் இதயம் துடிக்கும்
காற்றின் போக்கில் தூசுகள்தான் போகும் ஆற்றின் வேகத்தில் துரும்புகள்தான் அலையும்
வழிகாட்டி இங்கே விழி மூடலாமா? படகோட்டி இங்கே தடம் மாறலாமா?
வீட்டுக்கு மூத்தவனே விடியலுக்காய் பூத்தவனே விட்டிலாய் மாறாதே மாயையில் மாளாதே! தீபா செல்வகுமாரன் 11.12.1997 நிலவுமொழி செந்தாமரையை (https://www.facebook.com/photo.php?fbid=1143642165673791&set=a.169553609749323.27936.100000840568456&type=3&theater)
சிகரெட்டுடன் பார்த்ததும் எனக்குள் தோன்றியது கவலை மட்டுமே! என்னைச்
சுற்றியுள்ள யார் புகைத்தாலும் நான் கவலைப்படுவேன். அவர்கள் எனக்குப்
பிடித்தமானவர்களாய் இருந்தால் இன்னும் அதிகமாகக் கவலைப்படுவேன். ஏன் இப்படி
இந்தப் புகையில் தங்களைத் தாங்களே கருக்கிக் கொள்கிறார்கள் என நினைத்துக்
கொள்வேன். எனக்கு ஏனோ நிலவையும் பிடிக்கும். அதனால்தான் கவலையும் வந்தது. எனது மகள் தீபா 1997 இல் எழுதிய இந்தக் கவிதையும் நினைவில் வந்தது. சந்திரவதனா 14.10.2016
கடந்த வெள்ளியன்றும் வழமையான வெள்ளிக்கிழமைகளில் போலவே எனது மகன் துமிலன்
மதிய உணவுக்கு என்னிடம் வந்திருந்தான். கிழமையில் ஒரு நாளாவது கண்டிப்பாக
என்னைச் சந்திக்க வேண்டுமென்பதற்காக அவனாகவே விருப்போடு ஏற்படுத்திக் கொண்ட
ஏற்பாடு அது.
அவன் வந்து கொஞ்ச நேரத்தில் அழைப்புமணி அழைத்தது.
அந்த நேரம் நான் உள்ளியும், வதக்கிய வெங்காயமும், பொரித்த கத்தரிக்காயும்…
என்று பல்வித நறுமணங்கள் கமகமக்க நின்றேன். அதனால் மகனிடம் „என்னெண்டு
ஒருக்கால் போய்ப் பார். அனேகமாக பார்சலாக இருக்கும். எனக்கொரு பார்சல்
வரவேண்டும்“ என்றேன்.
படிகளில் இறங்கிக் கீழே போனவன் மேலே வரவில்லை.
ஏதோ சர்ச்சைப் படுபவர்கள் போல வந்தவனும், எனது மகனும் கதைக்கும் சத்தம்
கேட்டது. வெளியில் போய் மேலிருந்தே படிகளுக்கும், விறாந்தைக்கும் இடையில்
இருந்த இடுக்குகளினூடு பார்த்தேன். பொதி கொண்டு வருபவன்தான் மேலே
நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான். சொற்கள்
தெளிவாக என் காதுகளில் விழவில்லை. வெளிச்சத்தங்கள் அதிகமாயிருந்தன.
பெரும்பாலான சமயங்களில் பொதி கொண்டு வருபவர்கள் என் மகனை
அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இப்போது சில வாரங்களாக வருபவன்
புதியவன். இளையவன். என் பிள்ளைகளின் வயதை ஒத்தவன்.
ஒருவேளை இவனும் என் மகனை அறிந்தவனோ அல்லது இருவரும் நண்பர்களோ என நான் எனக்குள் யோசித்துக் கொண்டேன்.
ஒருவாறு மகன் மேலே வந்ததும் „என்ன பிரச்சனை?“ என்றேன். „நீங்கள்தான் பிரச்சனை“ என்றான் „நானா? என்ன பிரச்சனை?“
„வழக்கமாக ஒரு பெண் வந்து பார்சலை வேண்டுவாளே! அவளுக்கு நீ யார் கணவனா?“
என்று கேட்டான். நான் „இல்லை மகன்“ என்றேன். „இருக்காது, அவள் உன்ரை
மனைவியாக இருக்கலாம். இல்லாவிட்டால் சகோதரியாக இருக்கலாம். அம்மா..! அதை
நான் நம்பமாட்டேன்“ என்று கொண்டு நின்றான்“ என்றான்.
அன்று மாலையே
இதையொத்த இன்னொரு சம்பவம் நடந்தது. இரவு வீடு வந்ததும் கண்ணாடியில் என்
முகத்தைப் பார்த்தேன். நிட்சயமாக 34வயதுள்ளவள் போல இளமையாக நானில்லை.
முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது. எனது மகனுக்கு இப்போதுதான் 34. எனக்கு
மார்கழியில் 57 ஆகிறது.
சந்திரவதனா 13.10.2016
இன்று ஏடுதொடக்கல் பற்றிய பல பதிவுகளைப் பார்க்கும் போது நான் எனது
கடைசி மகன் துமிலனுக்கு நானே ஏடு தொடக்கிய நாள் ஞாபகத்தில் வந்தது. கூடவே
இந்தப் பதிவும் ஞாபகம் வந்தது.
ஊரில், சோறு தீத்துவதும், ஏடு
தொடக்குவதும்… கோயிலில்தான் செய்யப்படும். கோயில் ஐயர்தான் முதலில் சோறு
தீத்துவார். அவரேதான் ஏடு தொடக்குவதும். எனது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும்
முறைப்படி கோயிலிலேயே இவை தொடங்கப் பட்டன. மூன்றாவது மகனுக்கு
´எனக்கில்லாத அக்கறை ஐயருக்கு இருக்கா´ என்ற கேள்வி என் மனதில் எழ நானே பென்சில் பிடித்து அவனை எழுத வைத்தேன்.
அதனால் ஒரு குறையும் வரவில்லை. இன்று அவன் ஒரு எழுத்தாளர், நிருபர், பத்திரிகை ஆசிரியர்.
யேர்மனிக்கு வந்த காலங்களில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளிவந்தாலும் என் கைக்கு அவை கிடைப்பதில்லை. அந்தச் சமயங்களில் எனக்கு வாசிப்புத்தாகத்துக்கு தீனியாக யேர்மனியப் பத்திரிகைகளே கிடைத்தன. விளங்குதோ, விளங்கவில்லையோ வாசித்துத் தள்ளுவேன்.
சிலசமயங்களில் அகராதியைத் தலைகீழாகப் புரட்டியும், வாசித்த விடயத்தின் பொருள் விளங்காது, தலையைப் பிய்த்துக் கொள்வேன். நிலத்திலே ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலே எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்போது கூட எனது யேர்மனிய நண்பிகள் அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.
இப்போது என்னிடம் ஓரளவு புத்தகங்கள் கைவசம் உள்ளன. நூற்றுக்கணக்கான மின்னூல்களைத் தரவிறக்கி வைத்திருக்கிறேன். போதாததற்கு நல்ல வாசக நண்பர்கள் பல படைப்புகளை இணைப்புகள் தந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவைகளுள் புத்தகமாக உள்ள எதை வாசிக்கலாம் என்று யோசித்த பொழுது மைக்கேல் எழுதிய
/////செல்வண்ணருக்குள் இப்படியொரு கதைசொல்லி இருப்பதை நான் நினைத்துப் பார்த்தயேயில்லை. எழுது, எழுதடா என்று என்னை ஊக்கமளித்த மனுஷனிடம் உள்ளடங்கியொரு, எழுதுமேசை(தை) இருப்பதை நான் அறியவேயில்லை..! /////
என்ற வாக்கியமும், குறிப்பிட்ட அந்தப் பதிவும் ஞாபகத்தில் வந்தன.
எழுதித்தீராப் பக்கங்கள் செல்வம் அருளானந்தத்தின் நினைவுக் குறிப்புகளுடன் மார்ச் 2016 இல் நூலுருப் பெற்றுள்ளது. இதில் உள்ள நினைவுகள் அவர் தாய்வீடு சஞ்சிகைக்காக ஏற்கெனவே தொடராக எழுதியவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை போல 26 உள்ளன. பெல்ஜியத்தினூடு பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து அங்கிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்து வாழும் காலத்தின் பதிவுகள், எங்கள் பலரது புலம்பெயர் வாழ்வின் படிமங்களாக விரிகின்றன. எள்ளலும், நொள்ளலுமாய் அதை அவர் சொல்லும் விதம் அருமை. ஒன்றொன்றாய் அடுக்கி, அடுக்கி மிக நேர்த்தியாகப் பல விடயங்களை கோர்த்து விடுகிறார்.
முதல்கதையை வாசித்து விட்டு நிறுத்தி, பின்னர் தொடரலாம் என நினைத்துத்தான் வாசிக்கத் தொடங்கினேன்.. ஆனால் அருள்நாதர் வானத்தைக் காட்டி 'கொண்டலிலை மழை கறுக்குது' என்றார், என்ற வாக்கியம் என்னை நிறுத்த விடவில்லை. இரண்டாவது விஜேந்தம்மான் - வீடு வேய்வது பற்றியது. எங்களூர் விடயம். சுவாரஸ்யத்தையும், இப்படியான முறைகளும் உள்ளதா என்ற வியப்பையும் தந்தன. அடுத்து தட்சூண். தட்சூணின் மொழிபெயர்ப்பு, நான் ஜெர்மனிக்கு வந்த போது எனது கணவரின் நண்பர்கள் - அவர்கள் ஒன்றரை-இரண்டு வருடப் *பழையகாய்கள் - ஜெர்மனியமொழி தெரிந்தவர்கள் போல சவடால் விட்டதைத்தான் ஞாபகப் படுத்தியது. தட்சூணின்இழப்போ இன்னும் பல துயர்களை ஞாபகப் படுத்தியது.
அதற்கு மேல் வாசிக்க முடியாமல் சில அத்தியாவசிய வேலைகள்.
அப்போது மனம் வேண்டியது: எந்த அவசரங்களும் இல்லாது இப்படியே இருந்து ஆசை தீர வாசித்துத் தீர்த்துவிட பொழுதுகள் வசப்பட வேண்டும்.
(*பழையகாய்கள், கார்ட்காய்கள்... போன்றவை, ஆரம்பகாலப் புலம்பெயர்ந்தோர் உருவாக்கிய பதங்கள். இச்சொற்களுக்கென ஒரு தனி அகராதியே தயாரிக்கலாம்)
போர் கொடியது. அது அன்பாலும், மென்உணர்வுகளாலும் பின்னப்பட்ட மனித
உறவுகளைச் சின்னாபின்னமாக்கி, அவர்களையும், அவர்தம் மனங்களையும் சிதைத்து
விடுகிறது. வாழ்க்கையை வாழ முடியாத வாழ்க்கையாக்கி, புயற்காற்றில் அடிபட்ட
துரும்பாய் அலைக்கழித்து விடுகிறது. கூடிக் குலாவி வாழ வேண்டியவர்களைத்
திக்குத் திக்காய் வீசி எறிந்து விடுகிறது.
அப்படியொரு, போர்
என்னும் கொடிய புயற்காற்றில் அலைக்கழிக்கப்பட்டு, ஆற்றொணாத் துயரில்
ஆழ்ந்து, மனதால் வீழ்ந்து போன ஒரு ஒரு உருசியப் போர்வீரனின் உருக்கமான கதை
'அவன் விதி'.
இக்கதை மிகையில் ஷோலகவ் (Michail Alexandrowitsch
Scholochow) எழுதிய The Fate of a Man (1957) இன் தமிழ் மொழிபெயர்ப்பு.
´மீனவன்` மொழி பெயர்த்துள்ளார்.
அவன் அந்திரேய். உருசியப்
போர்வீரன். அன்பான கணவனாக, குழந்தைகளை ஆதரிக்கும் தந்தையாக...
குடும்பத்தோடு, தன் வீட்டில் வாழ வேண்டியவன். ஆனால் ஒரு போராளியாகிறான்.
விதி அவனைப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்கிறது.
மனைவி,
குழந்தைகள் குடும்பம் என்று மெதுமெதுவாக வாழ்க்கையை ஆரம்பித்து, அதையே
ஆராதித்து வாழ்ந்து கொண்டிருந்த சாதாரண குடிமகன் அவன். உருசிய வறுமையில்
அடிபட்டு, உறவுகளை இழந்து, உள்நாட்டுப் போரில் பங்கு பற்றி...
இளம்பராயத்தைக் கடந்தவன். மனைவி, குழந்தைகள் மேல் அன்பும், பாசமும்
மிக்கவன். வாகனமோட்டி. போர் அவனைப் போர்க்ளத்துக்கு அழைக்கிறது. மறுக்க
முடியாத நிலையில் குடும்பத்தை விட்டு ஜெர்மனியப் படையுடன் போராடச்
செல்கிறான். அன்றைய நாள், புகையிரதநிலையத்தில் அவன் குடும்பத்தை விட்டுப்
பிரியும் நாள் மனதைக் கலங்கடிக்கும்.
நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த
பதினேழு ஆண்டுகளில் இதுபோல ஒரு போதுமே கண்டதில்லை. இரவு முழுவதும் அவள்
பெருக்கிய கண்ணீரால் என் சட்டையும் மார்பும் நனைந்து போய் விட்டன.
காலையிலும் அதே கதைதான். இரயில் நிலையத்திற்குப் போ னோம். அவள் இருந்த
இருப்பைக் கண்டு எனக்குண்டான வருத்தத்தில் அவளை நேருக்கு நேர் பார்க்கவே
என்னால் முடியவில்லை. அழுது அழுது அவள் உதடுகள் கூட வீங்கியிருந்தன.
அவளுடைய தலைமயிர் கொண்டக்கு வெளியே பரட்டையாய்த் துருத்திக் கொண்டிருந்தது.
அவளது கண்கள் மங்கியிருந்தன. மருள் கொண்டவள் போல விழித்துக்
கொண்டிருந்தாள். அதிகாரிகள் எங்களை வண்டியில் ஏறும்படி கட்டளையிட்டார்கள்.
ஆனால் அவள் என்னை ஏற விட்டால்தானே? பாய்ந்து வந்து என் மார்போடு ஒண்டிக்
கொண்டு என் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுக் கட்டிக் கொண்டாள். அவள்
உடம்பெல்லாம் பதறிற்று. மரத்தை வெட்டினால் நடுங்குமே, அது போல...
குழந்தைகள் அவளிடம் பேசித் தேற்ற முயன்றார்கள். நானும் ஏதோ ஆறுதல்
சொன்னேன். ஆனால் ஒன்றும் பயனில்லை. அங்கு இருந்த மற்றப் பெண்களெல்லாம் தம்
கணவன்மாரிடமும், பிள்ளைகளிடமும் வளவளவென்று பேசினார்கள். ஆனால் என்னவளோ
என்னைப்பற்றித் தொங்கிக் கொண்டிருந்தாள். கிளையிலே இலை தொங்குமே, அது போல.
கடைசி வரையில் ஒரே நடுக்கமாக நடுங்கினாள். ஒரு சொல் கூட அவளால் பேச
முடியவில்லை. மனத்தைக் கல்லாக்கிக் கொள் இரீனா, என் கண்ணே! நான்
புறப்படுவதற்கு முன்னால் ஏதாவது சொல்லேன் எனக்கு' என்றேன். ஒவ்வோரு
சொல்லுக்கும் இடையில் தேம்பிக் கொண்டே அவள் சொன்னது இதுதான்: அந்திரேய்...
(அவன்விதி, பக்-15)
அந்திரேய் ஒரு விசுவாசமான
போர்வீரன். வாகனமோட்டியாக உருசியப் படையில் பணி புரிகிறான். ஜெர்மனியப்
படையுடனான போரில் போர்க்கைதியாகிறான். ஒரு போர்க்கைதியாக அவன் பட்ட
இன்னல்கள் சொல்லி மாளாதவை.
´மிகையில் ஷோலகவ்` அதைச் சொல்லும்
விதம் அபாரம். ஒரு போர்வீரனாக, கணவனாக, தந்தையாக என்று ஒவ்வொரு நிலையிலுமான
ஒரு மனிதனின் உணர்வுகளை, அன்பை, காதலை, துயரை, ஏமாற்றத்தை, கடமையுணர்வை...
என்று மிகமிக யதார்த்தமாகவும், உருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும்
சொல்லிக் கொண்டு போகிறார். அவர் தான் அந்திரேயோ என்று எண்ணும் படியான
அநுபவபூர்வமான, உயிரோட்டமான, நிதர்சனமான எழுத்து நடை.
மிகப்பெரிய
எழுத்தாளன் ´மிகையில் ஷோலகவ்`. இப்படியொரு எழுத்தாளனின் ஒரு படைப்பையேனும்,
அதுவும் தமிழில் வாசிக்கக் கிடைத்தது பெரும் வரம் என்பேன்.
வெறும்
64 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்நாவல் ஒரு போர்வீரனின் நாட்டுப்பற்றை,
விசுவாசத்தை, நேர்மையை, திறமையை, இயலாமையை, சோகம் நிறைந்த மிகக் கடினமான
வாழ்க்கையை… மிகவும் உருக்கமாகச் சொல்கிறது.
வாசித்துக் கொண்டு
போகும் போது பல இடங்களில் மனம் கலங்கிக் கசிந்து விடுகிறது. சில இடங்களில்
கடந்து போக முடியாமல் மீண்டும் மீண்டுமாய் வாசிக்க வைக்கிறது.
உதாரணமாக: சில
நேரம் இரவில் என்னால் உறங்க முடியாது. இருட்டை உறுத்துப் பார்த்த வண்ணம்
'வாழ்வே ஏன் இப்படிச் செய்தாய்? என்னை ஏன் இப்படி வாட்டி வதைத்தாய்?
என்னுடைய திராணியை ஏன் பறித்துக் கொண்டாய்? என்று எண்ணமிடுவேன். என்
கேள்விகளுக்கு விடையொன்றும் கிடைப்பதில்லை. இருட்டானாலும் சரி. சூரியன்
பளிச்சென்று ஒளி விடும் போதானாலும் சரி... இனி ஒரு போதும் விடை கிடைக்காது.
(அவன்விதி, பக்-9)
இறுதியில் சிறுவன் வான்யா
வைக் கண்டு பிடிக்கும் பகுதிகள் மிகுந்த நெகிழ்ச்சியானவை. இந்நாவலை ஒரு
சிறுகதை என்று ஜெர்மனிய மொழியில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இது ஒரு
பெருங்கதை. வாழ்வை வாழ முடியாமல் செய்யும் போர் என்ற கொடியபுயலில்
உருக்குலையும் ஒரு மனிதனது வாழ்வின் கதை. இக்கதை உருசிய மொழியில் ஒரு
பிரபல்யமான படமாகவும் எடுக்கப் பட்டுள்ளது. இப்படியான பிறமொழிப் படைப்புகளை
மொழிபெயர்ப்பது அரும்பணி. மொழிபெயர்த்த மீனவன் போற்றப்பட வேண்டியவர்.