Thursday, October 07, 2004

குட்டி திரைப்படம் எனது பார்வையில்


குட்டி படம் எப்போதோ வெளியாகி விட்டது. இப்போதுதான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது. பொழுதை வீணடிக்காமல் நல்லதொரு படத்தைப் பார்த்தேன் என்ற திருப்தி. குட்டியாக வந்த பேபி ஸ்வேதாவின் நடிப்பு அபாரம். அந்த இயல்பான நடிப்பிலும், அந்தப் பாத்திரத்திலும் மனம் ஒன்றியதாலோ என்னவோ அடிக்கடி மனம் கசிந்து கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியாமலே இருந்தது.

நீட்டி முழக்காமல் சொல்ல வந்தததை ஒரு குறும்படம் போல இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்ட அருமையான படம். சாதாரணமாகவே சிவசங்கரியின் கதைகள் சமூகப் பிரக்ஞை நிறைந்தனவாகவும், வாசித்து முடிந்ததும் மறந்து போய் விட முடியாத படி மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவும் இருக்கும். இந்தக் கதையும் சோடை போகவில்லை. படத்தைப் பார்த்த பின் மனசு கனத்தது.

குட்டி படம் வறுமையான குடும்பத்தில் பிறந்த பெண்குழந்தையான கண்ணம்மா, சமூகத்தின் சீர்கேடுகளுக்குள் சிக்கிப் போவதை மிகவும் அருமையாகப் படம் பிடித்திருக்கிறது. வழமையான படங்கள் போல ஆபாசமோ, அளவுக்கதிகமான அடி தடிகளோ இல்லாமல் படத்தைத் தந்திருக்கிறார்கள் ரமேஷ் அருணச்சாச்சலமும், ஜானகி விஸ்வநாதனும்.
வறுமையின் நிமித்தமோ, அன்றி வேறு காரணங்களுக்காகவோ குழந்தைகளை வேறு யாரிடமாவது அனுப்பிப் படிக்க வைக்கும், அல்லது வேலை பார்க்க வைக்கும் செயல் எத்துணை கொடுமையானது என்பதை படம் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. சின்னக் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதே ஒரு கொடுமையான செயல் என்றால் அந்தப் பிள்ளைகளை வேலைக்காக இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைப்பது இன்னும் எத்துணை கொடியது..?

பெற்றோரின் கண் முன்னே அவர்களது அன்பிலும் அணைப்பிலும் வளர வேண்டிய குழந்தைகள், வெளியில் அனுப்பப் படும் போது, எந்தளவுக்கு உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் வதை படுகிறார்கள் என்பதை மனதைப் பிசைய வைக்கும் விதமாகக் காட்டுகிறது படம்.

கண்ணம்மா ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த செல்லப்பெண். சட்டி பானைகள் செய்து பிழைக்கும் குயவர் குடும்பம். தந்தை நாசருக்கு அவள் மேல் கொள்ளை பாசம். தொலை தூரத்தில் இருக்கும் பாடசாலைக்கு அவளை சைக்கிளில் அழைத்துச் சென்று நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய மனுசியாக்க வேண்டுமென்பது அவரது கனவு. சைக்கிள் வேண்டவே பணமில்லாத நிலையில் அவள் படிக்காமலே வளர்கிறாள். தந்தையின் பாசத்தில் குலத்தொழிலைக் கூடப் பழகாமல், எந்தக் கஸ்டங்களையும் உணராமல் சிட்டுக்குருவி போல அந்தச் சிறிய கிரமாத்தில் சுற்றித் திரிகிறாள்.

திடீரென ஒரு நாள் - சட்டி பானைகளை விற்று வர என்று சந்தைக்குப் போன நாசர், லொறி ஒன்று மோதி இறந்து விடுகிறார். குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொள்கிறது. தந்தையின் அன்பை மட்டுமல்லாது, சோற்றைக் கூட இழந்து விடுகிறாள் கண்ணம்மா. வேலை வெட்டியின்றித் திரிந்தவள் தாயுடன் வேலை செய்யத் தொடங்குகிறாள். ஆனாலும் வறுமையின் கொடுமை பற்றி அறியாது வளர்ந்தவள்தானே. சோற்றுக்குக் கூட தாயிடம் சண்டை போடுகிறாள். கூழ் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்.

என்ன செய்வதென்று தெரியாது தாய் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தான் வேலை பார்க்கும் அலுவலகத்து முதலாளி வீட்டிலே குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் தேவை என்று சொல்லி இவளைக் கேட்கிறாள். தாய் தயங்கித் தடுமாறிய போது அது வசதியான குடும்பம் நல்ல உணவும், உடையும் கிடைக்குமென்று சொல்லிச் சம்மதிக்க வைக்கிறாள்.

கண்ணம்மா வீட்டு வேலை செய்ய என்று பட்டணத்துக்குச் செல்கிறாள். இவளை வீட்டு வேலைக்கு எடுத்தவர்களான ரமேஷ் அரவிந்தும், கௌசல்யாவும் நல்லவர்கள். ரமேஸ் அரவிந் ஒரு முதலாளி. மனைவி கௌசல்யா ஒரு ஆசிரியர். இவளைச் சொந்தப் பிள்ளை போலவே அன்போடு பார்க்கிறார்கள்.

ஆனால் ரமேஸ் அரவிந்தின் தாய் எம்.என்.ராஜம். பொல்லாதவர். படத்தில் வில்லி அவர்தான். அவரும் இவர்களின் மூத்த மகனும் இவளை ஒரு வேலைக்காரி போலவே நடத்துகிறார்கள். பழைய சோற்றைக் கொடுப்பதுவும், அதைச் செய் இதைச் செய் என்று பாடாய்ப் படுத்துவதும் மனித நேயத்துக்கு மிகவும் அப்பாற்பட்ட விடயங்கள். சொன்னது போல இல்லாமல் பிள்ளையைப் பராமரிக்கும் வேலைக்கு மேலால் இன்னும் பல வேலைகளைக் கொடுக்கிறார்கள்.உணர்வுகளை மிதிக்கிறார்கள். கண்ணம்மாவைக் குட்டி ஆக்கியதே எம்.என்.ராஜம்தான்.

எம்.என்.ராஜத்தின் கொடுமைக்குள் சிக்கியிருக்கும் கண்ணம்மா அங்கு பட்டணத்தில் இன்னும் சில வீட்டு வேலை செய்யும் பெண்களைச் சந்திக்கிறாள். அவளது எதிர் வீட்டு வேலைக்காரப் பெண் இவள் போலக் குழந்தையல்ல. பருவப் பெண். அவள் அந்த வீட்டு ஆணால் பலாத்காரப் படுத்தப் படுவதைக் காணும் போதும், அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டாள் என்பதை அறியும் போதும், இவளிடம் தெரியும் மிரட்சி, முகபாவங்கள் ஒவ்வொன்றுமே மிக இயல்பு.

இந்த இடத்தில் வீட்டு வேலைகளுக்கு என்று செல்லும் குழந்தைகளின் வாழ்வு மட்டுமல்ல பெண்களின் வாழ்வின் அவலமும் வெளிச்சத்துக்கு வருகிறது.

பெற்றோர்களின் கண்களில் இருந்தும், கவனத்தில் இருந்தும் தள்ளிப் போகும் சிறுமிகளின் வாழ்வு எந்தளவுக்குச் சீரழிந்து போகும் என்பதை நறுக்கென்று நான்கு வார்த்தையில் சொல்லி விட்ட நல்ல படம்.

கண்ணம்மாவின் தாயாக வந்தவர் ஈஸ்வரி ராவ். நாசரும், ஈஸ்வரிராவும் கிராமத்துக்கேயுரிய இயல்பான பண்பட்ட நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். இலவசமாகவும் உயிரோட்டத்தோடும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் விவேக்குக்கு வழமைக்கு மாறாக சற்றுச் சீரியஸான பாத்திரம்.சீரியசோடு சேர்ந்த நகைச்சுவைகள் அவ்வப்போது வந்து விழுந்தாலும் கண்ணம்மா உதவி என்று கேட்குமளவுக்கு நல்லவனான பாத்திரம். விவேக்கினது உதவியுடன்தான் கண்ணம்மா தப்பியோட முனைகிறாள்.

அவள் புகையிரதத்தில் ஏறியதும் தப்பி விட்டாள் என்று மனசு அவளோடு சேர்ந்து குதாகலிக்கும் போதுதான் அவள் இன்னுமொரு சமூகச் சீரழிவாளனால் சிவப்பு விளக்குப் பகுதிக்குகாக விற்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுவது புரிகிறது. எதுவுமே புரியாது அம்மாவைக் கட்டியணைக்கும் கனவுகளோடு தனது கிராமத்தை நோக்கிய நினைவுகளோடு கண்ணம்மா புகையிரதத்தினுள் பயணிக்கிறாள். அத்தோடு படம் முடிகிறது. மனசு கனக்கிறது.

சந்திரவதனா
யேர்மனி
7.10.2004

Sunday, October 03, 2004

பொறுமையைச் சோதிக்கும் சில பொழுதுகள்


சில சமயங்களில் பொறுமையைச் சோதிக்கும் விதமாக ஏதும் நடந்து விடும்.கடந்த திங்களன்று வீதியில் நடக்கும் போது சாதாரணமாகக் கால் தடுக்கியது. நல்ல வேளை விழவில்லை என்று நினைத்துக் கொண்டே நடந்தாலும் மெலிதான ஒரு நோ நெருடிக் கொண்டே இருந்தது. அது பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாமல் வேலைக்குப் போவதிலிருந்து சகல வேலைகளையும் வழமை போலவே செய்து முடித்தேன். இரவு படுக்கும் போதுதான் மீண்டும் அந்த நோ மூளையை உறுத்த நோவுக்கான களிம்பு ஒன்றை எடுத்துப் பூசி.. கட்டிலில் களிம்பு பிரண்டு விடாமல் இருக்க, ஒரு காலுறையையும் போட்டுக் கொண்டு படுத்தேன்.

இப்படியே நோ பற்றி நினைவு வரும் வேளைகளில் நான் வீட்டில் நின்றால் களிம்பு பூசுவது வியாழன் வரை தொடர்ந்தது. வியாழன் வேலைக்குப் போகும் போது நோ சற்று அதிகமாகி விட்டது. கால் பாதத்தில் மொழியோடு சேர்ந்த இடத்தில் மெதுவாக வீக்கத் தொடங்கி இருந்தது. இப்போதுதான் மருத்துவரைப் பற்றிய நினைவு வர Orthopedyயிடம் விரைந்தேன்.

ம்.. இந்த வியாழக்கிழமை புரட்டாதி மாதத்தின் இறுதிநாள். அதாவது இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டின் இறுதிநாள். அதனால் எனது குடும்ப வைத்தியரின் பத்திரம் இல்லாமல் என்னைப் பார்க்க மாட்டார்களாம். அப்படிப் பார்ப்பதானால் உடனேயே நான் இவ்வாண்டு ஆரம்பத்தில் யேர்மனியில் நடைமுறைப் படுத்தப் பட்ட ஒவ்வொரு காலாண்டுக்குமான 10யூரோக்களை இன்னொரு முறை இங்கும் கொடுக்க வேண்டுமாம். (ஏற்கெனவே எனது குடும்ப வைத்தியரிடம் கொடுத்து விட்டேன். பற்றுச்சீட்டும் கைவசம் இருந்தது.) ஆனால் காலாண்டு இறுதி நாள் என்பதால் அவர்கள் அந்தக் கணக்கை முடிப்பதில் சிக்கல் இருக்கிறதாம்.

சும்மா தெண்டமாகப் 10யூரோவைக் கொடுக்க எனக்கு இஸ்டமில்லை. "நான் போய் எனது மருத்துவரிடம் பத்திரத்தை வாங்கிக் கொண்டு வருகிறேன்." என்று சொல்லி வெளியில் வந்தேன். ஆனால் கால் நோவை விட இப்போது மனதுக்குள் எரிச்சல் புகுந்து கொண்டது. நோவுடன் வருகிறேன். நொண்டி நொண்டி நடக்கிறேன். மருத்துவத்துக்கேயுரிய பண்போடு பார்த்து விட்டு, பின்னர் நான் அந்தத் பத்திரத்தைக் கொண்டு வந்து கொடுப்பதற்குச் சம்மதித்திருக்கலாம்தானே. ம்.. மருத்துவர் சில வேளை சம்மதித்திருப்பார். முன்னுக்கு றிசப்சனில் நந்தி மாதிரி இருந்த பெண்தான் சட்டத்தையும், நடைமுறையையும் மிகவும் மதிப்பவளாய் என்னை மருத்துவரிடம் அனுப்ப மறுத்து விட்டாள். என் மனதில் எழுந்த எரிச்சல் இன்னும் அதிகமாக டொக்டரும் மண்ணாங்கட்டியும் என நினைத்துக் கொண்டு வேலைக்குப் போய் விட்டேன்.

வேலையில் என் சகதோழியருக்கு, என் மனதின் அழகு முகத்தில் தெரிய.. விடயத்தைக் கேட்டு காலைப் பார்த்து விட்டு உடனே "மருத்துவரிடம் போ" என அனுப்பி விட்டார்கள். சரி.. எனது குடும்ப வைத்தியரிடம் மீண்டும் நொண்டினேன்.

குடும்ப வைத்தியர் - அவர் எனக்கு கிட்டத்தட்ட 18 வருடங்களாக மருத்துவராக இருக்கிறார். ஏறக்குறைய ஒரு குடும்ப நண்பன் போல. அவர் கூட Orthopedy நடந்து கொண்ட விதத்தில் கோபம் கொண்டு அங்கு தொலைபேசினார். அவர்கள் இன்று தாம் வேறு வேலை செய்ய இருப்பதால் இதற்கு மேல் யாரையும் பார்ப்பதில்லை என்று சொல்லி விட்டார்கள். ஒவ்வொரு Orthopedyயாக அழைத்துப் பார்த்த போதும் ஒருவரும் சரிவரவில்லை. எல்லோரும் விடுமுறை. கணக்கு முடிப்பு.. என்று இழுத்தார்கள். ஒரே வழி அரச மருத்துவமனைதான். நான் அங்கு அலைய விரும்பவில்லை.

சரியென எனது குடும்ப வைத்தியர் தானே பார்த்து Bandage போட்டு விட்டார். "கணுக்கால் சவ்வு ஈய்ந்திருக்கலாம். அல்லது எலும்பொன்று வெடித்திருக்கலாம். கண்டிப்பாக Orthopedyயிடம் போக வேண்டும்." என்றார்.

"சும்மா மெதுவாகத்தானே தடுக்கினேன். எப்படி இப்படியானது..? "
சந்தேகத்தைக் கேட்டே விட்டேன். "சில சமயங்களில் இதை விடக் கடுமையாகக் கூட நடக்கலாம்." என்றார்.

இனி என்ன செய்வது..!
"இன்று வேலைக்குப் போக வேண்டாம். நாளை Orthopedyயிடம் போ." என்றார். ஆனால் இன்று அவர் Orthopedyக்கான பத்திரத்தைத் தந்தாலும் அது நாளை செல்லுபடியாகாது. நாளை இறுதிக் காலாண்டின் முதல்நாள். நாளை மீண்டும் குடும்ப வைத்தியரிடம் சென்று அந்தத் பத்திரத்தை வாங்கிக் கொண்டு Orthopedyயிடம் போகவேண்டும். மீண்டும் வேலையிடம் வரை நொண்டி.. மெடிக்கல் பத்திரத்தைக் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன். இரவு படுக்கையில் காலை அசைக்க முடியாதிருந்த போது 10யூரோவைக் கொடுத்துக் காட்டியிருக்கலாமோ என்றிருந்தது.

அடுத்தநாள் அதிகாலையே எனது குடும்ப வைத்தியரிடம் சென்றேன். 10யூரோவையும் வைத்துக் கொண்டு காத்து நின்றேன். அதிசயமாக ஒரு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. றிசப்சனில் என்ன செய்கிறார்கள் என்று கோபமாய் வந்தது. எப்படியோ ஒன்றரை மணித்தியாலங்கள் கழிய எனது முறை வந்தது. எனது மருத்துவக் காப்புறுதி கார்ட்டை கணினிக்குக் கொடுத்து என்னை அவர்கள் கணினியில் பதிந்து முடியவே அதீதமான நேரங்கள் சென்றன. எனக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை. இரு பெண்களாக கணினியோடும் எனது தரவுகளோடும் முட்டி மோதி ஒருவாறு பதிந்து முடித்து மருத்துவரின் கையெழுத்துடன் Orthopedyக்கான பத்திரத்தைத் தந்தார்கள்.

சரி, மீண்டும் Orthopedyயிடம் நொண்டல். அங்கும் நீண்ட வரிசை. ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நின்றேன். எனது முறை வந்தது. அதே பினைவு. எனது தரவுகளைக் கணினிக்குள் கொடுக்க றிசப்சனில் இருந்த இரு பெண்களும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

எனது பொறுமை ஒரு எல்லைக்கே வந்து விட்டது. "இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படிக் கணினியுடன் விளையாடப் போகிறீர்கள்?" என்று கேட்க வாயெடுத்தேன். அந்த நேரம் பார்த்து Orthopedy வெளியில் வந்தார். அவர் ஒரு நொடிப் பொழுதில் என் உணர்வுக் கொந்தளிப்பை அளந்தெடுத்து விட்டார். என்னைப் ஒரு புன்முறவலுடன் நோக்கி.. கண்களாலேயே ஒருவித மன்னிப்புக் கேட்கும் பாவனையுடன் சைகை காட்டினார். அவர் காட்டிய பக்கம் திரும்பி மேசையைப் பார்த்தேன்.

மேசையில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது

இன்று எமது கணினிக்குப் புதிய புரோக்கிராம் கொடுத்துள்ளோம். அதனால் உங்களை நாங்கள் பதிந்து முடிக்க அதீத நேரம் எடுக்கலாம். அது உங்கள் பொறுமையைச் சோதித்துப் பார்ப்பது போன்றதொரு பிரமையை உங்களுக்குக் கண்டிப்பாக ஏற்படுத்தும். கொதித்து விடாதீர்கள். பொறுமை காருங்கள். இது இன்று உங்களை முதல் தரமாகப் பதியும் போது மட்டுந்தான். நாங்கள் இதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்போது எனது கோபம் சட்டென்று தணிந்து விட்டது. இதற்காகவா இவ்வளவு போராடுகிறார்கள் என்று அந்தப் பெண்கள் மீது சிறிய பரிதாபமும் ஏற்பட்டது.

ஆனாலும் நேற்று என்னைத் திருப்பி அனுப்பிய எரிச்சல் மனதுள் இருந்ததால் என்னைப் பரிசோதிக்கும் போது மருத்துவரிடம் "நீங்கள் நடந்து கொண்டது சரியா..?" எனக் கேட்டேன். "சில வேளைகளில் சில விடயங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நேற்று என்னிடம் வேலை பார்க்கும் பெண்கள் உன்னை விட வலியில் இருந்தார்கள். அவர்கள் மூளையை இந்தக் கணினி கசக்கி விட்டது." என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்த படி "மூன்று கிழமைக்குக் காலை அசைக்காதே." என்றார். ஒரு மருத்துவத்தாதி வந்து பத்துப் போடத் தொடங்கினாள்.

Wednesday, September 29, 2004

இன்றைய எனது நிலை


வீட்டிலே நாளாந்தம் செய்யும் கூட்டல், கழுவல், துடைத்தல், அடுக்கல்... இவைகளோடு வெளி வேலைகளுக்கான ஒட்டம்.. இத்தனையும் மாற்றமின்றி ஓர் ஒழுங்கில் நடந்து கொண்டிருக்கும் போது, மேலதிகமாக ஓரிரு வேலைகள் சேர்ந்து விட்டாலோ, அன்றி முக்கியமான விருந்தினர் யாராவது வீட்டுக்கு வரப் போகிறார்கள் என்றாலோ, மனதில் ஒருவித பதட்டம் ஏற்படும். வேலைகள் குவிந்து கிடந்தாலும் எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியாத அந்தரத்தில் ஒரு வேலையுமே நடவாது இருக்கும்.

இது போலத்தான் - சிந்தனைகள் ஒரு சீரில் சென்று கொண்டிருக்கும் போது நிறைய எழுதுபவர்கள் கூட, சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் சிதறும் போது திண்டாடிப் போகிறார்கள். இந்த சமயங்களில் நிறைய எழுத வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். சிந்தனை ஓட்டத்தில் ஓராயிரம் சம்பவங்களும், அதனோடு சேர்ந்த கற்பனைகளும், அதையொட்டிய புனைவுகளும்... என்று பிரவாகித்து எழும். ஆனாலும் அவைகளை எழுத்தாக்க எண்ணும் போதுதான் அவைகள் எதுவுமே தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத பிரவாகங்கள் என்பது புரியும்.

சில சமயங்களில் ஏதேதோ கற்பனைகள் ஓடும். போயிருந்து எழுதுவதற்கான உந்துதல் மட்டும் சற்றேனும் இல்லாது மனம் சோம்பேறியாய் கற்பனைக்குள் மட்டும் குந்தியிருக்கும்.

அதனால், என்னை நினைந்து வந்தவர்களுக்காக...
ஒரு இனிய பாடலுக்கான சுட்டி.

Wednesday, September 22, 2004

இந்த வார வலைப்பூ ஆசிரியர் பணியில் இதுவரை

September 22, 2004


சிலந்தியின் ஆசை


ரமணியும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் ஆரம்பகாலப் பதிவாளர்களில் ஒருவர். இவர் இன்னும் சில பெயர்களில் பதிவுகளை வைத்திருக்கிறார்.

இவர் அப்போதே அம்மாவுக்கு ஏற்ற இணையம் வேண்டும் என அவாப்பட்டுக் கொண்டார். இவரது ஆசை முற்றுமுழுதாக நிறைவேறியதோ இல்லையோ இந்த ஒரு வருடத்துக்குள் தமிழ் வலையுலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

வெறுமனே வார மாத சஞ்சிகைகளின் வாசகர்களாக இருந்தவர்களும், உள்ளக் கிடக்கைகளை நாளேட்டில் எழுதி வைத்தவர்களும்.. என்று கணிசமான தொகையினர் தமிழில் வலைப்பதிய ஆரம்பித்து விட்டார்கள். எத்தனையோ இலைமறைகாயாக இருந்த எழுத்தார்வலர்கள், வெளியுலகத்துக்கு வரத் தொடங்கி விட்டார்கள். தமது திறமை தமக்கே தெரியாமல் இருந்த பலர் தம்மாலும் முடியும் என்ற தைரியத்தோடு எழுதத் தொடங்கி விட்டார்கள். தமிழை மெதுமெதுவாக மறக்கத் தொடங்கியவர்கள் மீண்டும் தமிழோடு ஐக்கியமாகி விட்டார்கள். பாவனையிலிருந்து விலகியிருந்த எத்தனையோ தமிழ்ச்சொற்கள் மீண்டும் பாவனைக்குள்ளாகத் தொடங்கி விட்டன.

பல் வேறு தரத்தினரும், பல் வேறு துறைகளில் ஆர்வமுள்ளவர்களும் வலைப்பதியத் தொடங்கியதில் வலைப்பூக்களைத் தரிசிக்கும் ஒவ்வொருவருமே தத்தமது ஆர்வத்துக்கு ஏற்புடையதான விடயங்களைத் தேடி எடுத்து வாசித்து, ஏதோ ஒரு வகையில் பயனாளிகளாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் காசியின் முயற்சியில் உருவான தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம், வலையுலகுக்கும் வலைப்பூ ஆர்வலர்களுக்கும் கிடைத்த பெரியதொரு வரப்பிரசாதம்.

இந்தளவு வளர்ந்த வலைப்பதிவுகளை இன்னும் வளர்க்கவும், பிரபல்யப் படுத்தி இன்னும் பலர் வலைப்பதிவுகளோடு இணைந்து கொள்ளவும் இது பற்றியதான கட்டுரைகளை எழுத வேண்டுமென காசிக்கு ஒரு கடிதம் வரைந்துள்ளார் ரமணி. வாசித்துப் பாருங்கள். காசி மட்டுமென்றில்லாமல் மற்றவர்களும் உங்கள் உங்கள் இடங்களில் உள்ள நல்ல பத்திரிகைகளுக்கு இது சம்பந்தமான கட்டுரைகளை எழுதிக் கொடுக்கலாம்.

சந்திரவதனா

September 21, 2004


புதியவர்



எதிர் வரும் இளைய தலைமுறையிடம் தமிழினைச் சேர்ப்பிக்கும் ஊடகமாய் இணையம் இருக்கும் தறுவாயில், இணைய மொழியாக்கம் மிகத் தேவையான ஒன்றுதான்! என்கிறார் புதியவர் யூனா

chandravathanaa

ஆரம்பகால வலைப்பதிவாளர்கள்



ஆரம்பகால வலைப்பதிவாளர்கள் பலர் காணாமற் போய் விட்டார்கள். ஆனாலும் எளிதில் அவர்களை மறந்து விட முடியாது. வலைப்பதிவுகளின் மேல் இன்றைய தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் வலைப்பதிவு செய்து வளர்த்து விட்டவர்கள் அவர்கள்.

ஆரம்ப கால வலைப்பதிவாளர்களில் சுபாவின் பதிவுகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ஆரம்பகாலம் போல அடிக்கடி பதியாவிட்டாலும் இப்போதும் இடையிடையே வந்து ஏதாவது எழுதிக் கொண்டுதானிருக்கிறார். இவர் யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்ததால் ஆரம்பத்தில் யேர்மனி பற்றிய விடயங்களை Germany in Focus என்ற தலைப்பில் எழுதிக் கொண்டிருந்தார். இவர் இன்னும் பல வலைப்பதிவுகளை வைத்திருந்தாலும் இது பலரைக் கவர்ந்த பதிவுகளில் ஒன்று. மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு கட்டத்தில் Malaysia in Focus என்ற தலைப்பில் சுபா இல்லம் ஒன்றை அமைத்து மலேசியா பற்றிய பல விடயங்களையும் எழுதத் தொடங்கினார். ஆனாலும் முந்தைய வேகம் ஏனோ இப்போது இல்லை. இவரது மலேசியா சம்பந்தமான இறுதிப் பதிவில் தாயின் மரணம் குறித்து வருந்தியுள்ளார். தாயில்லாத தாய்நாட்டுக்குப் போகும் போதான அவர் மனதின் ஆதங்கம் புரிகிறது. மனதின் சோகம்தான் எழுத்தை முடக்கியதோ என்பதுதான் தெரியவில்லை.

இவர் கடந்த வருடம் ஐப்பசி மாதத்தில் வலைப்பூ ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ஹரன் பிரசன்னா இவரும் ஆரம்பகால வலைப்பதிவாளர்களில் ஒருவர். நிழல்கள் என்ற பதிவில் நினைவுகளை உணர்வுகளோடு கலந்து கதையாய், கவிதையாய்... என்று பதிந்துள்ளார்.

தற்போது கம்பராமாயணம், பாஞ்சாலி சபதம்.. என்று மரபிலக்கியங்களையும் பதியத் தொடங்கியுள்ளார்.

இங்கு தவறாக எழுதி விட்டேன்.
மரபிலக்கியத்தை எழுதுபவர் Hari Krishnan

நா.கண்ணன் இவரும் ஆரம்பகாலப்பதிவாளர்களில் ஒருவர். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்துள்ளார். கவிதை, கட்டுரை, கொரியக் கட்டுரைகள் என்று பல தரப்பட்ட விடயங்களைப் பதிந்து கொண்டு வந்தாலும், 44அங்கங்களைத் தாண்டி விட்ட இவரது வைகைக்கரைக்காற்றே பலரைக் கவர்ந்த தொடர்களில் ஒன்று.

நவநீத கிருஷ்ணன் இவரது முதற்பதிவு 2002 இல் பதியப் பட்டுள்ளது. சற்று ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால் சளைக்காமல் இன்னும் பல் தரப்பட்ட விடயங்களைப் பதிந்து கொண்டிருக்கிறார். இவரது இறுதிப்பதிவு ப்புரோக்கிராமர்கள் பற்றியது.

செல்வராஜ் நன்றாக எழுதிக் கொண்டிருந்தார். இப்போது இவர் பதிவில் எதையும் வாசிக்க முடியவில்லை.

ஆரம்பகாலப் பதிவாளர்களில்
காலோரம் அலை புரண்டு கெஞ்சும்
எனினும்
வானோரத் தாரகைக்கே ஏங்கும் நெஞ்சம்

என்ற மாலனும் ஒருவர். திசைகளோடு திசை மாறி மாறி விட்டார்.

சந்திரவதனா

சாப்பாடே போச்சு



கணவன் : எப்பிடி ஒரு செல்லப்பிள்ளை போல இருந்தனான் நான்.

உன்னைக் கட்டி என்ரை வாழ்க்கை இப்பிடியாப் போச்சு....

மனைவி : ம்...

என்ரை வாழ்க்கையும் அப்பிடித்தான்.

கணவன் : என்னப்பா கண்டடிறியாத சமையல் சமைச்சு வைச்சிருக்கிறாய்?

தாயோடு சுவை போச்சு எண்டு இதுக்குத்தான் சொல்லுறது.



மனைவி : உங்களுக்காவது நான் சமைச்சு வைச்சிருக்கிறன்.

எனக்கு....!

சந்திரவதனா

வலைவலம் - 21.9.2004



அறிவியல் என்பது எந்தளவு தூரத்துக்கு வாழ்வோடு அவசியப் பட்டது என்றாலும், அதைத் தேவை கருதியே வாசிக்கிறோம். மற்றும் படி இந்த மனசு தேடுவதென்னவோ சுவையும், சுவாரஸ்யமும் நகைச்சுவையும் நிறைந்த விடயங்களையே! இருந்தாலும் சில சமயங்களில் அறிவியலில் கூட சுவையான தகவல்கள் கிடைக்கின்றன.

முதுமையைத் தள்ளிப் போட்டு விட்டு வாழ்நாளை நீடிக்கலாம் என்றால் யார்தான் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் விடுவார்கள். தற்கொலையின் வீதம் எந்தளவாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனதும் அதி உச்சப் பயம் மரணத்தை ஒட்டியதுதானே. அந்த மரணத்தையே தள்ளிப் போடவும் மருந்து கண்டு பிடித்திருக்கிறார்களாம். யாருக்குத்தான் அதை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் போகும்.

சிவப்பு வைனிலும், திராட்சைப்பழங்களிலும் காணப்படும் resveratrol என்ற வேதிப்பொருள்தான் இந்த முதுமையை விரட்டும் பதார்த்தம் என Brown, Harvard, Connecticut மூவருமாகச் சேர்ந்து பரிசோதனை செய்து கண்டு பிடித்துள்ளார்கள். முதுமையை விரட்ட நாம் கடைப் பிடிக்க வேண்டிய இன்னும் சில விடயங்கள் இருக்கின்றன. சுந்தரவடிவேலுவின் அறிவியல் பகுதியில் வாசித்துப் பாருங்கள்.

விரலில் வலியேற்படும் விதமாக நறுக்கென்று குத்தி, குருதியை எடுத்துப் பரிசோதனை செய்து, சர்க்கரையளவைக் கண்டு பிடிக்கும் முறையை விடுத்து, ஒரு தகட்டின் மூலம் வலியே இல்லாமல் சர்க்கரையளவைக் கண்டு பிடிக்கும் முறை வரப் போகிறதாம். அதையும் சுந்தரவடிவேலுவின் அறிவியல்தான் கூறுகிறது.

மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவு மதுரபாரதியினது. தமிழும் தமிழ் சார்ந்த புலமும் குறித்துப் பேசும் இவரது பதிவில் எமது முன்னோர்களோடு சம்பந்தமான எமக்குத் தெரியாத, நாம் அறியாத பல விடயங்கள் உள்ளன. அன்றைய பாடல்களையும் அதனுள் வரும் பொருட்களையும் சுட்டி சங்ககாலத்துக்கே எம்மை அழைத்துச் செல்கிறார்.

இவரது கடைசிப் பதிவு உங்களையும் ஈர்க்கலாம். சவரம் செய்து முகங்கழுவி அல்லது குளித்துத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள ஒரு ஆணுக்கு அதிக நேரம் தேவையாக இருந்த போதும், அலங்காரம் என்பது என்னவோ பெண்களுக்குத்தான் சொந்தமானது என்பதாகத்தான் எல்லோருமே பேசிக் கொள்கிறோம். ஆனால் ஆண்களும் அலங்காரம் செய்திருக்கிறார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னான ஆணழகனின் அலங்காரம் பற்றிய அழகிய பதிவு இது.

இவரது இந்தப் பதிவில் இன்னொரு விடயத்தைக் காணக் கூடியதாக உள்ளது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் நீண்ட கூந்தல்தான். அவர்களும் தலையில் பூச்சூடியுள்ளார்கள். மலர் மாலைகளை அணிந்துள்ளார்கள்.

எனக்குத் தெரிந்த வரையில் தலைக்குப் பூ வைப்பதற்கான முக்கிய காரணம் - பூக்களுக்கு நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை இருக்கிறது. தலைநீராடிய பின் அதாவது முழுகிய பின் தலைமயிரைக் காய வைப்பதற்கான மின்சார உபகரணம் அப்போது இருக்கவில்லை. அதனால் பூக்களைத் தலையில் வைத்தே தலையைக் காய வைத்தார்கள். ஆனால் பிற்காலத்தில் எப்படியோ ஆண்களின் நீண்ட கூந்தல் குறுகி விட்டது. அதனால் அவர்களுக்கு பெரியளவாக பூக்கள் தேவைப்படவில்லை. காலப்போக்கில் பூக்களென்னவோ பெண்களுக்கே சொந்தமானது என்பது போல ஆகி விட்டது. இவரது இந்தப் பதிவே மலர் என்பது மகளிருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதற்குச் சான்றாகிறது.

அடுத்து சத்யராஜ்குமாரின் துகள்கள் சுவாரஸ்யமான பதிவுகளில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்பதற்கமைய அளவாகத்தான் இவர் எழுதுவார். ஆனால் எழுதியவைகள் எல்லாமே வாசித்தோம், மறந்தோம் என்றில்லாமல் வாசித்தோம் என்று என்றைக்குமே ஞாபகம் வைத்திருக்கக் கூடிய மனதை ஏதாவதொரு வகையில் நெருடக் கூடிய பதிவுகள். அவர் எடுத்துக் கொள்ளும் கருக்களும், அதைக் கதையாகப் புனையும் தன்மையும், கதையைக் நகர்த்தும் விதமும் மிகவும் அருமை.

சந்திரவதனா

21.9.2004



September 20, 2004



ஒரு பெக் அடிச்சால்....



கணவன்: இஞ்சரப்பா எனக்குச் சரியாக் குளிருது. ஒரு பெக் அடிச்சால் நல்லா இருக்கும் போலை இருக்கு.

மனைவி: ஓமப்பா. எனக்கும் சரியாக் குளிருது.

கணவன்: என்ன...!!!!!

மனைவி: எனக்கும் குளிருது. நானும் ஒரு பெக் அடிக்கட்டே?

கணவன்: ஏய்...! பொம்பிளையள் இதுகள் குடிக்கிறேல்லை.

மனைவி: ஏன் பொம்பிளையளுக்குக் குளிராதோ...?

கணவன்: ...! ....! ...!

சந்திரவதனா

20 ஆம் நூற்றாண்டின் தமிழக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடுவதற்கு முயற்சி



20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தரமான ஈழத்துக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிட முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பூபாலசிங்கம் புத்தக சாலை அதிபர் பூ.ஸ்ரீதரசிங் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்க் கவிதை வரலாற்றில் ஈழத்துக் கவிதைகள் 20ஆம் நூற்றாண்டிலேயே கவனிப்புக்குரியனவாகும், முக்கியத்துவமுடையனவாகவும் அமைகின்றன. எனவே, 20ஆம் நூற்றாண்டு ஈழத்துக்கவிதைகளை ஒரே பார்வை யில் நோக்கக்கூடியதான தொகுப்பு முயற்சியொன்று மிகவும் அவசியமானதாகும். ஏற்கனவே, ஆ.சதாசிவம் அவர்கள் சுதந்திரகாலத்திற்கு முற்பட்ட ஈழத்துக் கவிதைகளை 'ஈழத்துத் தமிழ்க் களஞ்சியம்' என்னும் தலைப்பில் தொகுத்தளித்துள்ளார். அத்தொகுப்பிற்குப் பின்பும் 'மரணத்துள் வாழ்வோம்', 'வேற்றாகி நின்றவெளி', 'ஈழத்துக் கவிதைக்கனிகள்' முதலிய தொகுப்பு நூல்கள் சில வெளிவந்துள்ளன.

எனினும், இத்தொகுப்புநூல்களிலும் அடக்கப்படாத தரமான கவிதைகள் பல காணப் படுகின்றன என்பது இன்று உணரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, கட்சி, குழு பேதமின்றி நடுவுநிலையோடு தரமான ஈழத்துக் கவிதைகளைத் தொகுக்கவிருப்பதாகவும் அத்தொகுதிக்கு பயன்செய்யத்தக்க தமது நூல்களை யும் இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் போட்டோப் பிரதிகளையும் கவிஞர்கள் அனுப்பி உதவவேண்மென்றும் பூ. ஸ்ரீதரசிங் தெரிவித் துள்ளார்.

தமது கவிதை நூல்களில் மேலதிகப் பிரதிகள் இல்லாதோர், அவற்றுள் வெளி வந்த மிகத் தரமான சில படைப்புகளைப் போட்டோப் பிரதியெடுத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி உதவலாம். அமரர்களாகிவிட்ட கவிஞர்களுடைய படைப்புகளை அவர்களுடைய குடும்பத்தினரோ, நண்பர்களோ அனுப்பி உதவும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கவிதைகளை அனுப்புவோர் கூடவே கவிதை வெளிவந்த நூலின் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு, வெளியீட்டாளர் விவரம், கவிதை வெளி வந்துள்ள பக்கவிவரம் போன்றவற்றை நிச்சயமாக இணைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள் ளப்படுகின்றனர். புனைபெயர்களில் கவிதைகளை பிரசுரிக்க விரும்புவோர், தமது சொந்தப் பெயர், விவரத்தையும் இணைத்து அனுப்பவும். சகல கவிஞர்களும் தங்களது சுருக்கமான சுய விவரக்கோவைகளை இணைத்து அனுப்பவும்.

கவிதைகள் யாவும் தரமான நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். ஈழத்துக் கவிதைகள் பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பிறநாடுகளில் போதிய அறிமுகம் இன்னும் ஏற்படாமையால் வெளியிடப்படவுள்ள தொகுப்பை தமிழ்நாட்டில் பிரசுரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி தொகுப்பு செட்டியார் தெருவில் மிகவிரைவில் திறந்து வைக்கப்படவுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையின் புதிய காட்சியறையினது திறப்புவிழாவின்போது வெளியிடப் படவுள்ளது.

Nantri - Uthayan

இந்த அறிவித்தலை கவிஞர்கள் அறிந்து கொள்வதற்காக இங்கு பதிந்துள்ளேன். எந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கவிதைகளை அனுப்ப வேண்டுமென்பது குறிப்பிடப்படவில்லை. விரைவில் அறிந்து எழுதுகிறேன்.

நட்புடன்சந்திரவதனா

அட ஒரு வருசம் ஓடி விட்டதா?



இந்த ஒரு வருடத்துக்குள்தான் வலைப்பதிவுகளில் எத்தனை மாற்றம்!

முதல் முதல் கடந்த வருடம் ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று மாலன் அவர்கள் Blog ஐ அறிமுகப் படுத்திய போது - இது எப்படிச் சாத்தியமாகும் என்று ஆச்சரியப் பட்டேன்.

மாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.

சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. Blog ஐ தயாரிப்பதற்கான சில வழி முறைகளைச் சொல்லித் தந்த சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.

இந்த வலைப்பூ என்பது என்னை வெகுவாகக் கவர்ந்ததற்கு முக்கிய காரணம். யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரம்தான். எதை விரும்பினாலும் அதை நான் அங்கே பதிக்க முடியும். அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது.

அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலை பதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் வலைப்பதிவுகளின் தொகுப்பு உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது. ஆனால் இன்றோ எமக்குத் தெரியும் படியாக நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தமிழில் உள்ளன. அத்தனையையும் ஒரே நாளில் வாசிக்க முடியாத அளவுக்கு அவைகளில் எழுதிக் குவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

அன்று வலை பதியத் தொடங்கிய அத்தனை பேரும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பலபேர் இடை நடுவில் ஏதேதோ காரணங்களினால் தமது பதிவுகளைத் தூங்க விட்டு விட்டார்கள். அதே நேரத்தில் இன்றும் பலர் ஆரோக்கியமான சுவாரஸ்யமான பதிவுகளைப் புதிது புதிதாகப் பதிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தொடங்கிய காலத்துக்கும், இன்றைய காலத்துக்கும் இடைப்பட்டதான காலப் பகுதியில் யார் யார் எங்கெங்கே புதிய விடயங்களைப் பதிந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பூவாகப் போய்ப் பார்த்துத்தான் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிக்கல் இருந்தது.

அந்தச் சிக்கலை நிவர்த்தி செய்யும் விதமாக காசி தயாரித்த தமிழ்மணம் மிகவும் பயனுள்ள தமிழ்வலைப்பூக்களுக்கெல்லாம் தலைப்பூவாக விளங்குகின்ற ஒரு பதிவு.

இந்த நேரத்தில் காசியை மனந்திறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தத் தமிழ்மணம் செய்வது வலைப்பூ ஆர்வலர்களுக்கான ஒரு அரிய பணி. பதிந்த எந்த வலைப்பூவையும் சுலபமாகக் கண்டு பிடிக்கவும், புதிய பதிவுகளை உடனுக்குடன் சிரமமின்றி கண்டு கொண்டு வாசிக்கவும் மிகவும் உதவுகிறது தமிழ்மணம். காசிக்கு மீண்டும் தமிழ்வலைப்பதிவாளர்கள் அத்தனை பேர் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, இனி முடியுமான அளவுக்கு வலைப்பூக்கள் பக்கம் சென்று வருகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா



நன்றி



ஆரம்ப காலத்தில்தான் யாரும் இல்லாத போது என்னை அழைத்தீர்கள்.
இன்று எத்தனை வலைப்பதிவுகள். அத்தனைகளிலும் எத்தனை பெரிய பெரிய வலைப்பதிவாளர்கள். இத்தனை பேர் இருக்க என்னை மீண்டும் அழைப்பீர்கள் என நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சும்மா நானுண்டு, என் பேரப்பிள்ளைகள் உண்டு என்று விளையாடிக் கொண்டிருந்த என்னை மைக்கை தந்து மேடையில் ஏற்றி விட்டது போல இருக்கிறது. என் பாட்டுக்கு எதையாவது சொல்லலாம். இத்தனை பேர் என் முன்னால் நிற்கிறீர்கள் என்ற போது, பேசுவதற்கு நிறைய இருந்தாலும் பேச நா எழவில்லை.

இருந்தாலும் என்னையும் ஒருவராக மதித்து நிறைந்த ஆலாபனைகளோடு வரவேற்ற மதிக்கும், என்னை வரவழைக்க வக்காலத்து வாங்கிய காசிக்கும், நான் வருமுன்னரே நிறைகுடம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்களோடு காத்து நின்று பன்னீர் தெளித்த ஜெயந்தி, ஈழநாதனுக்கும் கூட வந்து சேர்ந்து நின்று வாழ்த்திய மூர்த்தி, சாகரனுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நட்புடன்

சந்திரவதனா


September 19, 2004


ஞாயிற்றுக் கிழமை



"இஞ்சை ..........உங்கடை உந்தத் தலைக்கு Joghurtம் (யோக்கற்ம்) முட்டையும் கலந்து பூசி ஊற விட்டிட்டு, பிறகு தோய்ஞ்சிங்களெண்டால் சொடுகு போயிடுமாம்."

"ஆரப்பா உனக்குச் சொன்னது? பிறகும் ஏதும் புத்தகத்திலை வாசிச்சிட்டியே?"

"ம்.........வேறை எங்கையிருந்து எனக்குத் தெரியிறது! புத்தகத்தையும் பேப்பரையும் ரேடியோவையும் விட்டால் எனக்கு வேறை என்ன இருக்கு இங்கை!!!"

"ம்........எனக்கு மட்டும் இங்கை கனக்க இருக்காக்கும்."

"ஏன் உங்களுக்கென்ன ஏதும் அது இது எண்டு சாட்டிக்கொண்டு ஊர் சுத்தப் போடுவிங்கள."

"உன்னை ஆரும் போவேண்டாமெண்டு சொன்னதே?"

"போவேண்டாம் எண்டு நேரடியாச் சொல்லாமல் நான் போகாத விதமா நீங்கள் நடக்கிறது எனக்கு விளங்காதெண்டு நினைக்கிறீங்களாக்கும். வேலை முடிஞ்சு வரக்கை தற்செயலா பஸ்ஸை விட்டிட்டனெண்டால் போதும். எங்கை துலைஞ்சு போனனி எண்டு எரிச்சலாக் கேப்பிங்களே! Shopping(சொப்பிங்) போயிட்டு வர, கொஞ்சம் லேற்றாப் போனால் போதும். முகத்திலை எள்ளும் கொள்ளும் வெடிக்க நிப்பிங்கள். இதெல்லாம் எனக்கு விளங்கிறேல்லை எண்டு நினைச்சிங்களோ? நீங்கள் ஊர் சுத்திப்போட்டு வர நான் வீட்டிலை இருந்து வீட்டு வேலையளைப் பாத்துக் கொண்டு நீங்கள் சொல்லிப் போட்டுப் போற வேலையளையும் செய்து கொண்டு இருக்கோணும். வந்து அதுக்கும் நொட்டையும் சொட்டையும் வேறை. எத்தினை காலத்துக்கெண்டு மனுசர் இப்பிடி வாழேலும். நான் வேலைக்குப் போகாமலே எனக்குச் சம்பளம் வருமெண்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷப் படுவியள் எண்டு எனக்குத் தெரியாதாக்கும்."

"சரியப்பா...கொஞ்சம் விட்டனெண்டால் நீ உன்ரை பல்லவியைத் தொடங்கீடுவாய்."

"இருந்து பாருங்கோவன். நானும் ஒரு நாளைக்கு............"

"இஞ்சை பார் நான் ஒண்டும் பார்க்கேல்லை..........நீ உந்தத் தேவையில்லாத கதையளை விட்டிட்டு போய்ச் சமையலைப் பார்."

"ஏன் இப்பக் கதையை மாத்திறியள்?"

"இஞ்சை பார்........ மனுசருக்குப் பசிக்குது. கதையை விட்டிட்டுப் போய் சமை."

"ஏன்.........நான் சமைக்கோணும். சாப்பிடுறது எல்லாரும்தானே...... சமைக்கிறது மட்டும் எனக்கெண்டு எங்கை எழுதி வைச்சிருக்கு?"

"ஐயோ.....ஏனப்பா கதைச்சே மனுசரைக் கொல்லுறாய்.?"

"பின்னை என்ன? நீங்கள் இருந்து TV(தொலைக்காட்சி) பார்த்துக் கொண்டிருக்க நான் போய்ச் சமைக்கோணுமோ?

"ஞாயிற்றுக் கிழமையிலையாவது மனுசரைச் சும்மா இருக்க விடன்."

"ஏன் எனக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை இல்லையோ?"

"நான் ஆம்பிளையடி!"

"ஆம்பிளையெண்டால்...............!"

சந்திரவதனா

இனிய வணக்கம்



இனிய வணக்கம்

ஆர்வமுடன் என்னை வரவேற்ற நட்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.

இன்று கணினியைப் போட்டதும்தான் தெரிந்தது நான்தான் இவ்வார வலைப்பூ ஆசிரியரென்பது. அதிர்ச்சிதான்.

ஈழநாதனை முந்திக் கொண்ட ஜெயந்தியும், ஓடி வந்தும் வரிசையில் முதல் இடம் கிடைக்காது வருந்திய ஈழநாதனும் என்னை வரவேற்றும் இருந்தார்கள்.

என்னடா இது? ஒரு வார்த்தை பேசாமல் நான்தான் இவ்வார ஆசிரியை என்று மதி தீர்மானித்து விட்டாவோ! என் மீது அவ்வளவு அபார நம்பிக்கையோ! என்று எனக்குள்ளே யோசனை! பின்னர்தான் தெரிந்தது மதி ஏற்கெனவே அனுப்பிய மின்னஞ்சல் எப்படியோ தவறிவிட்டது என்பது. பரவாயில்லை.

முடிந்தவரைக்கும் எதையாவது எழுதுகிறேன். எந்த வித ஆயத்தமும் இல்லாமல் வந்து நான் தரப்போவதை இந்த ஒரு வாரமும் நீங்கள் வாசிக்க வேண்டுமென்ற நியதி போலும்.

முடிந்தால் வாசியுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

'வலைப்பூ'வின் முதலாம் ஆசிரியர்: வலைப்பூவின் அம்மம்மா



இவ்வாரம் வலைப்பூவின் சிறப்பாசிரியராக வருபவர் சந்திரவதனா. தமிழ் வலைப்பதிவாளர்களில் எண்ணிக்கையில் அதிக வலைப்பதிவு வைத்திருக்கும் சந்திரவதனா, ஊக்குவிக்கும் நற்பண்பு நிறைந்தவர். நான் அழைத்த மாத்திரத்தில் உற்சாகத்தோடு வலைப்பூவின் முதலாவது ஆசிரியராக வந்தபடியால் நான் இதைச் சொல்லவில்லை. இங்கே இருக்கும் பலரது வலைப்பதிவுகளில் இவரது கருத்துகளும் ஊக்குவிப்பும் இடம்பெற்றிருக்கின்றன. இவரது வலைப்பதிவைப் பார்த்து, 'நாமும் தொடங்கினாலென்ன?' என்றபடி தொடங்கிய வலைப்பதிவர்களும் இருக்கிறார்கள்.

மொத்தம் பதினாறு வலைப்பதிவுகளை நிர்வகிக்கும் சந்திரவதனா 'தோழியர்' வலைப்பதிவிலும் பங்குபெறுகிறார். அவருடைய பதினாறு வலைப்பதிவுகளில் இரண்டு அவருடைய மகன்களுடையது - துமிலன், திலீபன். ஒன்று அவருடைய அண்ணா - மறைந்த கவிஞர் தீட்சண்யனுடையது. மனவோசை, குழந்தைகள், மகளிர், மருத்துவம், பாடல்கள், படித்தவை, பெண்கள், Sammlung, செய்திகள், வி.ஐ.பி பெண்கள் ஆகிய பன்முகப் பதிவுகளோடு சிறுகதைகள் என்ற வலைப்பதிவில் தம் சிறுகதைகள் சிலவற்றையும் தன்னைக் கவர்ந்த பிறரின் எழுத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார். தன் கூடப்பிறந்த சகோதரர்கள் மூவரை நாட்டுக்கு அர்ப்பணித்த இவர், நாட்டுக்கு தங்கள் இன்னுயிரை நீத்த மாவீரர்களுக்காக ஒரு வலைப்பதிவும், புனர்வாழ்வுக்கென இன்னொரு வலைப்பதிவும் வைத்திருப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.

மேலே சொன்ன பதினாறு வலைப்பதிவுகள் தவிர, மனவோசை என்று ஒரு இணையத்தளமும் வைத்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், புகைப்படம் என்று மிளிரும் அந்த இணையத்தளத்தில் சந்திரவதனாவின் கட்டுரைகள் பகுதிதான் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமானது. நினைவுகள் பகுதியில் இந்தக் கட்டுரைதான், உங்கள் தளத்தில் பலரும் வாசிக்கும் கட்டுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன் சந்திரவதனா.(சரிதானே?) (அந்த டுபாய்புட்டெண்டா என்னெண்டும் சொல்லிப்போடுங்கோ சந்திரவதனா... ;)

வாங்கோ அம்மம்மா! இந்த ஒரு வருசத்தில என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கு. என்னமாதிரியெல்லாம் வலைப்பதிவு இலகுவாயிருக்கு. இன்னும் என்னெல்லாம் செய்யலாம் எண்டு நீங்க நினைக்கிறது. இளைய தலைமுறையை வலைப்பதிவுக்குக் கூட்டியண்டு வாறது(முதல் ஆக்கள் - தீபா, திலீபன், துமி. சரியே?) எண்டெல்லாம் சொல்லுங்க.

-மதி கந்தசாமி



ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கிறது!



இந்த வாரம் கொஞ்சம் விசேடமான வாரம். கடந்த வருடம் ஜூலை மாதம் 'வலைப்பூ' என்ற இந்த வலைப்பதிவைத் தொடங்கியிருந்தாலும், அதில் கவனம் செலுத்தத் தொடங்கியது இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகே. அப்போதிருந்த வலைப்பதிவர்களில் தொடர்ந்து வலைபதிந்துகொண்டிருந்த மூவரிடம் 'வலைப்பூ'வை அறிமுகப்படுத்தி என்னுடைய யோசனையைச் சொன்னேன். உடனேயே ஒப்புக் கொண்டு முழு ஒத்துழைப்பு அளித்த அந்த மும்மூர்த்திகளை, வலைப்பூ சீராக இயங்கத் தொடங்கி ஒரு வருடம் நிறையும் இத்தருணத்தில் வாரமொருவராக அழைக்க இருக்கிறேன்.

அவர்களுக்கும், சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அழைப்பையேற்று இங்கே எழுதிய 49 ஆசிரியர்களுக்கும், எல்லாரையும் விட முக்கியமாக இங்கே எழுதும் பதிவுகளைப் படித்த, படித்து கருத்துகள் எழுதிய உங்களனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

-மதி கந்தசாமி

Monday, September 20, 2004

இவ்வாரம் வலைப்பூவில் பணி

ஆரம்ப காலத்தில்தான் யாரும் இல்லாத போது என்னை அழைத்தார்கள்.
இன்று எத்தனை வலைப்பதிவுகள். அத்தனைகளிலும் எத்தனை பெரிய பெரிய வலைப்பதிவாளர்கள். இத்தனை பேர் இருக்க, இத்தனை பெரிய ஆலாபனைகளுடன் என்னை மீண்டும் அழைப்பார்கள் என நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சும்மா நானுண்டு, என் பேரப்பிள்ளைகள் உண்டு என்று விளையாடிக் கொண்டிருந்த என்னை மைக்கை தந்து மேடையில் ஏற்றி விட்டது போல இருக்கிறது. என் பாட்டுக்கு எதையாவது சொல்லலாம். இத்தனை பேர் என் முன்னால் நிற்கிறீர்கள். பேசுவதற்கு நிறைய இருந்தாலும் பேச நா எழவில்லை.

இருந்தாலும் அங்கு வாருங்கள். நீங்கள் தரும் உற்சாகம் ஒரு வேளை என்னை நிறையப் பேச வைக்கலாம்.

Sunday, September 19, 2004

மனுசி குறும்படம் எனது பார்வையில்

குடும்பம் என்றால் என்ன? மனைவி பணிவிடை செய்ய, கணவன் ராஜாங்கம் நடத்த ஏதோ ஒரு கட்டாய நிகழ்வுகளினூடான வாழ்வின் நகர்வுதான் குடும்பமா?

குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள். என்றெல்லாம் ஏட்டிலும் எழுதி, பாட்டிலும் பாடி விட்டால் போதுமா?
நடைமுறையில் என்னவோ இந்தளவு மதிப்பு பெண்ணுக்குக் கொடுக்கப் படுவதில்லையே! பெண் இல்லாமல் ஒரு ஆணால் தனித்து வாழ முடியாது என்பது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும், பெண்ணை விடத் தான் உசத்தி என்று எண்ணும் எண்ணம் இன்னும் ஆண்களை விட்டு அகலவேயில்லை. அதே நேரம் பல பெண்களின் மனதில் இருந்தும், தாங்கள் பெண்கள், அதனால் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணமும் விட்டுப் போகவில்லை. மிகுதி - இங்கே

Saturday, September 11, 2004

இதெல்லாம் எதற்காக...?




அரசியல் விளையாட்டுக்களில் மீண்டும் பலியானவை அப்பாவி உயிர்களே!
மூன்று வருடங்களின் முன் உலகையே திடுக்கிட வைத்த தாக்குதலில் பலியாகிப் போனது
3000 க்கு மேற்பட்ட வெறும் அப்பாவி மக்கள்தான்.

எமது நாட்டில் நடக்காததா..? அமெரிக்காவுக்கு இது வேணும்..? என்பது போன்றதான குரல்கள்
போர் அனர்த்தங்களால் பாதிக்கப் பட்ட நாடுகளில் இருந்து ஆற்றாமையோடு எழுந்திருந்தாலும்
இந்த நிகழ்வினால் மனசாரப் பலர் வருந்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இன்று தொலைக்காட்சியில் அந்த அனர்த்தத்தில்
தாய் தந்தையரை இழந்த குழந்தைகளையும்
உறவுகளை இழந்தோரின் கண்ணீரையும் பார்க்கும் போது
இதெல்லாம் எதற்காக என்று மனம் கலங்குகிறது.

Thursday, September 09, 2004

குழந்தை


சிந்து வந்து போனபின் வீட்டுக்குள்ளேயான சின்னச் சின்ன அசைவுகளும், சிறிய சலனங்களும் அவளாய் என்னை ஏங்க வைக்கின்றன. தெருவிலே ஒரு குழந்தை செல்லமாய் இராகம் பாடிய போது, அது சிந்துவின் சத்தம் போல இருக்கிறது என்கிறார் என் கணவர். அவள் என்னோடு நின்ற ஏழு நாள் பொழுதுகளையும் நினைத்து நினைத்துக் களிக்கிறேன் நான். பத்துமாதக் குழந்தையிடம் உள்ள சிந்திக்கும் ஆற்றல்கள் என்னை வியப்படைய வைத்தன. எனது குழந்தைகளை நான் பார்த்ததை விட, எனது குழந்தைகளின் குழந்தைகளை இன்னும் நுணுப்பமாகப் பார்க்கிறேனோ தெரியவில்லை.

அன்று கடந்த சனி, அவர்கள் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் சிந்துவுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் எனது கணவர் தனது கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அன்றைய பத்திரிகையை வாசிக்கத் தொடங்கினார். சிந்துவின் கவனம் பந்திலிருந்து எனது கணவரின் கண்ணாடியின் பக்கம் திரும்பியது. அதைத் தரும் படி கணவரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். எனது கணவரும் வேறு வேறு விளையாட்டுக்களைக் காட்டி அவளைத் திசை திருப்ப முனைந்தார். அவளோ கண்ணாடியின் மீதே கண்ணாக இருந்தாள். கணவரும் கொடுப்பதாக இல்லை. சற்று நேர முயற்சியில் கண்ணாடி கிடைக்காது என்பதிலான அதிருப்தி அவள் முகத்தில் தெரிந்தது. பந்தைச் சடாரென்று நிலத்தில் போட்டு விட்டு தத்தித் தத்தி நடந்து சென்று மாடிப் படிகளில் தவண்டு ஏறினாள்.

வீழ்ந்து விடுவாளே என்ற பயத்துடன் நானும் பின்னால் ஏறினேன். நேரே காந்திச் சிலை இருக்குமிடத்துக்குச் சென்று காந்தியின் கண்ணாடியை இழுத்து எடுத்தாள். அவளுக்கு படிகளில் ஏறத் தெரியும். இறங்கத் தெரியாது. நான் அவளை தூக்கி வந்து படிகளின் கீழ் விட்டேன். அவள் மீண்டும் தத்தித் தத்திச் சென்று கதிரையில் ஏறி என் கணவரின் அருகில் அமர்ந்து கொண்டாள். கண்ணாடியை சரியான முறையில் போடத் தெரியாது. அதனை எப்படியோ வாயடியில் சொருகிக் கொண்டு தானும் பத்திரிகையை வாசிக்க முயற்சித்தாள்.

இந்த விடயம் எனக்கு மிகுந்த ஆச்சரியமான சந்தோசத்தையே கொடுத்தது. சிறிய காந்தி சிலையின் கண்ணாடியையும், எனது கணவர் அணியும் கண்ணாடியையும் ஒப்பிடும் அளவுக்கு, அவ்வளவு தூரம் ஒரு பத்துமாதக் குழந்தையிடம் கிரகிக்கும் தன்மையும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்குமா என்பது என்னிடம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

சரி இதை ஏன் எழுத நினைத்தேன் என்றால்:
சத்தியராஜ்குமாரின் துகள்களில் பாலூட்டிகள்
என்றொரு கதை வாசித்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. எனது பேத்தி சிந்துவைப் பிரிவதே எனக்கு மிகுந்த கடினமான விடயமாக இருக்கும் போது, தான் சுமந்து பெற்ற மகவைப் பிரிய எந்தத் தாய் துணிவாள்.

பாலூட்டி கதையின் நாயகர்கள் பணமே குறியாகக் கொண்டு இப்படி ஒரு காரியத்தை எப்படிச் செய்வார்கள்..? இது மிக அதீதமான கற்பனையே என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் அது ஒரு உண்மைச் சம்பவத்தின் புனைவு என்று அறிந்த போது இன்னும் கூட அந்தத் தாய்க்காகவும், அந்தக் குழந்தைக்காகவும் என் மனது அசௌகரியப் படுகிறது.

ஒரு குழந்தையின் ஒவ்வொரு கணத்திலான அசைவுகளும், சத்தங்களும்.. அதனோடு சேர்ந்த படியான வளர்ச்சியும் சொல்லியோ, எழுதியோ புரிய வைக்க முடியாத சந்தோசம் கலந்த பொக்கிஷங்கள். அதைப் பார்க்க முடியாது பணம் சேர்த்து என்ன பயன்?

ஒரு குழந்தைக்குத் தாயின் அணைப்புக் கண்டிப்பாக வேண்டும். அந்தத் தொடுகை குழந்தையை உளரீதியாக எவ்வளவோ உவகைப் படுத்தும். விதிவசத்தால்.. போர்களால்.. எத்தனையோ குழந்தைகள் இந்தப் பாக்கியத்தை இழந்தார்கள் என்றால் தாயும் தந்தையும் உயிரோடு இருக்கும் போது இப்படியொரு கொடுமை அவசியமா?

இது தாய்க்கும் கூடாது.
குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும், வளர்ச்சியிலும் ஒரு தாய் குழந்தையே அவளது உலகமாகி உளரீதியாக எவ்வளவு இனிமையடைவாள். இந்த இனிமைகளையெல்லாம் காலுக்குள் போட்டு மிதித்து விட்டு, எதற்காகப் பணம்?

கோடையில் ஒரு பனிக்கட்டி மழை



Photo - Thumilan

யேர்மனியின் Schwaebish Hallநகரை ஒட்டிய Sulzdorf இல்
சரியான வெயில் எறிக்கும் ஒரு கோடை நேரத்தில்(12.8.2004)
திடீரென மேகம் கறுக்க, வானம் திறக்க புறா முட்டைகளின்
அளவில் கொட்டின, இந்தப் பனிக் கட்டிகள். .

கோடையில் ஒரு பனிக்கட்டி மழை யேர்மனியில்
வசந்தத்தில் ஒரு பனிக்கட்டி மழை சிட்னியில்

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite